Saturday, July 1, 2017

ஜூலைக்குள் ஊதிய மாற்றம் வராத நிலையில், மீண்டும் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


ஜூலைக்குள் ஊதிய மாற்றம் வராத நிலையில், மீண்டும் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 1-
ஜூலை மாதத்திற்குள் ஊதிய மாற்றம் வராத நிலையில் இடைக்கால நிவாரணம் அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் காலவரையற்றவேலை நிறுத்தம் நடத்தவேண்டியிருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு ஊழியர்களின் எட்டாவது ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் காலவரையை 30.06.2017ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் 12வது மாநில மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை உடனே செய்ய வேண்டும், அதுவரை அரசு ஊழியர்கள் இப்போது வாங்கும் ஊதியத்தில் 20 சதவீதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும், அவுட்சோர்சிங், தொகுப்பூதிய நியமனங்களை ரத்து செய்து தற்போது பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணாவிட்டால் 2017 ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர் கள் மேற்கொள்வார்கள் என அரசுக்கு எச்சரித்திருந்தோம். பிப்ரவரி மாதத்தில் அலுவலர் குழுவை அமைத்துவிட்டு போராட் டம் தொடங்கும் வரை வாளாவிருந்த அரசாங்கம், போராட்டம் தொடங்கிய இரண்டாவது நாளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசி, 2017 ஜூன் 30க்குள் ஊதிய மாற்றத்திற்கான அலுவலர் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு விடும் எனவும், ஜூலை 2017க்குள் ஊதிய மாற்றம் செய்யப்பட்டுவிடும் எனவும் உறுதிமொழி கொடுத்தது.
மூத்த அமைச்சர்கள் நடத்தியபேச்சுவார்த்தையின் போது புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று சில நாட்களே ஆன நிலையில், அரசு ஊழியர்கள் அரசுக்கு கொஞ்சமாவது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அக்கறையுள்ள அரசு இது என்றும், அதனால் போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போது இடைக்கால நிவாரணம் கோரியபோது அலுவலர் குழுவின் காலவரையரை மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் நிச்சயம் எழாது எனவும், 2017 ஜூன் 30ஆம் தேதிக்குள் அலுவலர் குழுவின் பரிந்துரை அறிக்கை பெறப்பட்டு, ஜூலை 2017க்குள் ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுவிடும் எனவும், அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அதனால் இடைக்கால நிவாரணம் பொருத்து கோரிக்கை தேவையில்லாதது எனவும் கூறினர். ஒருவேளை 2017 ஜூன் 30க்குள் அலுவலர் குழு ஊதிய மாற்ற பரிந்துரைகளை அளிக்காவிட்டால் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தனர். அமைச்சர்கள் அவ்வளவு ஆணித்தரமாக இடைக்கால நிவாரணம் என்ற பேச்சே எழாது என்று கூறியதன் அடிப்படையிலும், புதிய முதல்வர், புதிய அமைச்சர்கள், புதிய அரசாங்கம் என்பதால் அவர்களுக்கு இவை குறித்து முடிவெடுக்க கால அவசாசம் வழங்க வேண்டும் என்ற நியாயத்தின் நிலைபாட்டினாலும், தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்தப் போராட் டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அமைச்சர்களுடனான பேச்சு வார்த்தையின்போது, புதிய ஓய்வூதியத் திட்டம் சம்பந்தமாகவும், காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயிப்பது குறித்தும் பேசியபோது, அவர்கள் எல்லாவற்றுக்கும் 2017 ஜூலை வரை கால அவகாசம் கேட்டனர். சென்ற முறை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல் படுத்தப்பட்ட ஊதிய மாற்றத்தில் ஓராண்டு நிலுவைத் தொகை மறுக்கப்பட்டது என்பதையும் அது 1.1.2006 முதல் கருத்தியல் ரீதியாகவும். 1.1.2007 முதல் பணப்பலனுடனும் அமல்படுத்தப்பட்டது என்பதையும் ஏற்கெனவே அரசின் கவனத்திற்கு பலமுறை நாம் கொண்டு சென்று நிலுவைத் தொகையினை கேட்டோம். அப்போது அரசுத் தரப்பில், அடுத்த ஊதிய மாற்றத்தில் காலதாமதமோ, கருத்தியல் ரீதியான கணக்கீடுகளோ இல்லாமல் அலுவலர் குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும், பிந்தைய ஆண்டுகளில் தவணைத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டது.
13-02-2014 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் முன்வைத்த 2014-15ஆம் ஆண்டிற் கான பட்ஜெட் வரவு - செலவு திட்ட உரையில் வருவாய் கணக்கில் செலவுகள் தலைப்பின்கீழ் 1ஆம் பத்தியில் “ 2016-17ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கருதப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுக்கள் போலன்றி, இக் குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் எனவும் பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவைத் தொகை வழங்க வேண்டிய சூழ்நிலை எழாது எனவும் கருதப் பட்டுள்ளது.’’ என்று கூறப்பட்டுள் ளது. ஆனால், இப்போது வந்துள்ள அரசாணை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அப்போதைய நிதியமைச்சர் வழங்கிய உறுதிமொழிகளுக்கும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளுக்கும் முற்றிலும் முரணாக உள்ளது.
ஜூன் 30க்குள் அலுவலர் குழு பரிந்துரைகள் வழங்காத நிலையில், இனி ஜூலை 30க்குள் ஊதிய மாற்றம் வருவது சாத்தியமில்லை என்பது நிதர்சனம் எனில் அமைச் சர் பெருமக்கள் மூவரும் நமது பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி ஊதிய மாற்றம் ஜூலை 2017க்குள் ஏற்படுத்தப்படாத நிலையில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 20 சதவீத ஊதியத்தை 2017 ஜூலை 17ஆம் தேதிக் குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் சொல் கேட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகமெங்கும் தொடர வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments: