Thursday, January 31, 2008

பாஜக-வின் பகட்டாரவாரம்

பாஜக-வின் பகட்டாரவாரம்
டில்லியில் நடைபெற்ற பாஜக-வின் சமீபத்திய தேசிய கவுன்சில் கூட்டத்தில், அனைத்துவிதமான இந்துத்துவா கொள்கைகளும் அரங்கேறி ஆடியிருக்கின்றன. ராஜ்நாத் சிங் தன்னுடைய தலைமையுரையில், வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டியது குறித்தும், முஸ்லீம்கள் முகஸ்துதி செய்யப்படுகிறார்கள் என்றும் பயங்கரவாதத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் பேசியிருக்கிறார். குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டு, ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடுகளை விட, முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல் பட்டிருப்பதால், அது மீண்டும் ஆட்சிக்கு வர இருக்கிறது’ என்று ஜோதிடம் கூறியிருக்கிறார். ஆனால், முன்னெப்போதுமில்லாத அளவிற்கு பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்த பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஆறு ஆண்டு கால ஆட்சியின் இருள்படர்ந்த பதிவுகளை மக்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. வாஜ்பாய் அரசாங்கத்தின் நாசகர விவசாயக் கொள்கைகள்தான் விவசாய வளர்ச்சியை மந்தப்படுத்தி, அதனைத் தொடர்ந்து விவசாய நெருக்கடி உருவாக இட்டுச் சென்றுள்ளது. விவசாயம் குறித்து பாஜக நிறைவேற்றியுள்ள தீர்மானமே, ‘எப்படி பாஜக தலைமையிலிருந்த அரசாங்கம் விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது’ என்பதை நினைவுபடுத்தும் ஒரு நினைவூட்டாகவே அமைந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொருளாதார நடவடிக்கைகளை நினைவுகூரும்போது, மிகவும் நகைப்புக்கிடமான ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரத்iயே மக்களுக்கு நினைவுபடுத்திட அது இட்டுச் செல்கிறது. ‘பொடா’ சட்டம் இல்லாததால்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியிருப்பதும் ஏற்கக்கூடியதாக இல்லை. ‘பொடா’ சட்டம் அமலில் இருந்த போதுதான் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானது என்பனைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மதவெறி என்னும் கடிவாளத்தைக் கண்களின் இருபுறமும் கட்டிக்கொண்டிருக்கும் பாஜக-வினரால் முஸ்லீம் மதச் சிறுபான்மையினர் மீது ஏவப்பட்ட அட்டூழியங்களைப் பார்த்திட முடியாது. இது ஒன்றும் ‘வாக்கு வங்கி’ அரசியலோ அல்லது ‘சிறுபான்மையினரை முகஸ்துதி’ செய்வதோ அல்ல. நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மை இனமாக இருக்கக்கூடிய முஸ்லீம் இனத்திற்கு, நாட்டின் ஒரு பகுதியில் நியாயமான நீதி வழங்கப்பட வில்லை என்னும் பிரச்சனையாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, சிறுபான்மையினருக்கும், வறிய பிரிவினருக்கும் சமூக நீதி அளித்திடுவோம் என்று கூறியுள்ள உறுதிமொழியை உளமார நிறைவேற்றிட முன்வர வேண்டும்.நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற நிலைபாட்டை மூடிமறைத்திடும் ஒரு செய்கையாகவே பாஜகவின் கட்சிக் கமிட்டிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு தோன்றுகிறது. அதிலும் கூட கட்சியின் மத்திய நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்றக் குழு இரண்டிற்கும் மிகவும் கவனத்துடன் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள்.சமீபத்தில் நடைபெற்ற கூட்டமானது, கட்சியின் ‘பிரதமர் வேட்பாளராக’ எல்.கே. அத்வானி முன்னிறுத்தப்பட்டதை அடுத்து நடைபெற்ற முதல் தேசியக் கவுன்சில் கூட்டமாகும். நாட்டின் எதிர்காலப் பிரதமராக அத்வானி தெரிவு செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக, அரசியல் வானில் அத்வானிக்கு ‘‘சிறப்பான இடம்’’ உண்டு என்று சித்தரித்திருக்கிறார். ஆனால் உண்மை நிலையோ வேறாகும். அத்வானி மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாபர் மசூதி தகர்வு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக மதவெறி நஞ்சைக் கக்கும் பேர்வழி என்பது உலகம் முழுதும் நன்கு தெரிந்த உண்மை. எனவே அத்வானி, இந்துத்வா சித்தாந்தத்தை ஏற்காத மாநிலக் கட்சிகள் அடங்கிய ஒரு விரிவடைந்த கூட்டணிக்குத் தலைவராக விளங்குவதற்கு ஏற்ற நபர் அல்ல. இப்போதிருப்பதைவிட மேலும் பல கட்சிகள் தங்களை ஆதரித்தாலன்றி தங்களால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை பாஜக நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. ஆனால் அத்வானியையை பிரதமராகத் தெரிவு செய்திருப்பது, கூட்டணியை விரிவாக்கும் முயற்சிகளுக்குத் தடையாகவே அமைந்துள்ளது. பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் வெறித்தனமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்திய அரசியலில் ‘‘கிரெம்ளின்வாதம்’’ (Kremlinisation) இருப்பதாக அளந்திருக்கிறார். இஸ்ரேல் மீது பிரேமையும், அமெரிக்கா மீது எஜமான விசுவாசமும் உள்ள ஒரு நபரால்தான் இவ்வாறு குருட்டுத்தனமாக இடதுசாரிகள் மீது வசைச்சொற்களை வாரி இறைக்க முடியும். இந்தியாவின் அமைச்சர்களிலேயே அத்வானி ஒருவர்தான் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் அமெரிக்காவில் லாங்லி என்னும் இடத்தில் உள்ள அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ. -இன் தலைமையிடத்திற்கு விஜயம் செய்த ஒரே ஒரு நபராவார். இடதுசாரிக்கு எதிரான பாஜகவின் கோபம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 2004இல் ஆட்சியில் அமர்ந்த அன்றிலிருந்து இன்று வரைக்கும், பாஜகவைப் போலல்லாமல் இடதுசாரிக் கட்சிகள்தான் மக்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து எழுப்பி வந்திருக்கிறது, நவீன தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வந்திருக்கிறது, நாட்டின் இறையாண்மையையும், நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையையும் பாதுகாத்து வந்திருக்கிறது. பாஜகவின் மதவெறி அரசியலை இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து தோலுரித்து வருவதானது அவர்களுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற முடியாத வகையில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்திருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக சொல்வதற்கு எந்தவித முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்ற மாநில அரசாங்கங்கள் அனைத்தையும் குஜராத்தை முன்மாதிரியாக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், நாட்டின் மற்ற பகுதிகள் குஜராத் அல்ல. இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்காரில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் அதனை பாஜக அறிந்துகொள்வது நிச்சயம். அம்மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கங்கள் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில், பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களை கூச்சநாச்சமின்றித் தூக்கிப் பிடிப்பதில், படுமோசமான லஞ்சஊழல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றில் புதிய வரலாறே படைத்திருக்கின்றன. உண்மையில் அவர்கள் கூற்றுக்கு முற்றிலும் முரணான விதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் கடந்த நான்காண்டுகளில் கடுமையான சரிவினைச் சந்தித்துள்ளது. ஐமுகூ அப்படி ஒன்றும் சரிந்திடவில்லை. இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடக்கதிலிருந்தே ஓர் அங்கமாக இருந்ததில்லை. அதன் பங்களிப்பு என்பது, மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்துவது என்பதும், மக்களின் - நாட்டின் உண்மையான பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வருவது என்பதும்தான். பாஜக என்னதான் வாய் கிழியக் கத்தினாலும் யதார்த்த உண்மைகளிலிருந்து விரைவில் அது பாடம் கற்றுக் கொள்ளும்.
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழில்: ச. வீரமணி

2007க்கான மேன் புக்கர் சர்வதேச விருது பெற்ற: சினுவா அச்சிபி -சிவ.வீர.வியட்நாம்

“சமூக மறுமலர்ச்சியும் மக்களுக்கு கல்வி புகட்டுவதும் ஒரு எழுத்தாளர் கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை. இதிலிருந்து ஒரு எழுத்தாளர் தப்பித்தால் அவரை மன்னிக்க முடியாது.”
- (சினுவா அச்சிபி)

நைஜுரிய நாவலாசிரியர் சினுவா அச்சிபிக்கு 2007க்கான மேன் புக்கர் சர்வதேச விருது கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பல சிறப்பான இலக்கியங்களைப் படைத்த ஆசிரியருக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. 76 வயதான சினுவா அச்சிபி நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், மற்றும் கவிதைகள் உட்பட 20 புத்தகங்களை எழுதியுள்ளார். 1958ல் வெளிவந்த “திங்ஸ் ஃபால் அபார்ட்” (Things Fall Apart) நாவல், ஆப்பிரிக்க இலக்கியம் என்றால் என்னவென்பதை உலக மக்களிடையே பறைசாற்றிய நூலாகும். ஆப்பிரிக்க சமூகத்தில் காலனியாதிக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள், ஆப்பிரிக்காவையும் ஆப்பிரிக்க மக்களையும் மேற்கத்திய நாடுகள் எப்படி சித்தரிக்கின்றன, ஆப்பிரிக்க அரசியல், கலாச்சாரம், வாழ்க்கைமுறை, தனித்துவம் - இவற்றை மையப்படுத்தியே இவர் தனது நூல்களைப் படைத்துள்ளார்.சினுவா அச்சிபியைப் பொறுத்தவரை எழுத்திற்கும் சமூகமாற்றத்திற்கும் ஒரு உயிரோட்டமான தொடர்பு உள்ளது என்றும், எனவே சமூக மாற்றம் என்னும் மகத்தான பணியில் தன்னுடைய பங்கு என்னவென்பதை ஒவ்வொரு எழுத்தாளனும் முடிவு செய்யவேண்டும் என்றும் கருதினார். கலை எப்பொழுதுமே மனித குலத்திற்கு சேவை புரியவேண்டும் என்று கூறும் சினுவா அச்சிபி, கலை கலைக்காகவே என்ற சிந்தனையை புறக்கணித்தவர். எந்தவொரு கதையும் அர்த்தமுடையதாகவும் ஒரு குறிக்கோள் உடையதாகவும் மக்களுக்கு பணிபுரிவதாகவும் இருக்கவேண்டும் என்பார்.

“சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும் வரை சமூகப்பணியை 15 ஆண்டுகளோ அல்லது 50 ஆண்டுகளோ தள்ளிப்போடலாம் என்று யாரும் காத்திருக்கமுடியாது, காத்திருக்கக்கூடாது. தற்கால சூழ்நிலை ஒவ்வொருவரையும் எங்கு எப்படி இட்டுச் செல்லும் என யாராலும் சொல்லமுடியாது. செய்ய வேண்டியதை நம்மால் முடிந்தவரை இந்த சமூகத்திற்கு உடனடியாகச் செய்துவிடவேண்டும்” என்கிறார் சினுவா அச்சிபி.

சினுவா அச்சிபியின் எழுத்துக்கள் ஆப்பிரிக்காவையும் அதன் கலாச்சாரத்தையும் சிறப்பித்தாலும் காலனியாதிக்கத்திற்கு முந்தைய வாழ்க்கைநிலை குறித்து அவர் அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும் கடந்த கால ஆப்பிரிக்க சமுதாயத்துடன் தற்போதைய நவீன சமுதாயத்தையும் மிக அற்புதமாக இணைத்திருக்கிறார்.

‘‘உலகில் உள்ள அனைத்தும் மாறக்கூடியதே. இப்பொழுது இருக்கும் உலகம் இன்னும் பத்தாண்டுகள் கழித்து நிறையவே மாறியிருக்கும்.” என்று கூறும் சினுவா அச்சிபி, ஆயினும் ‘‘அதற்காக பாரம்பரியத்தை தூக்கியெறிய முடியாது. காலத்திற்கேற்ப நம்மை நாம் மாற்றம் செய்து கொண்டாலும் பாரம்பரிய பெருமையையும் கட்டிகாக்கவேண்டும்.’’ என்கிறார்.

மேற்கத்திய இலக்கியங்களில் அரசியல் பேசும் இலக்கியங்களை நல்ல இலக்கியம் என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால், சினுவா அச்சிபி, அரசியலுக்கும் இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று கருதினார். நைஜுரியாவின் பிரச்சனை (The Trouble with Nigeria) என்ற தனது புத்தகத்தில் தன்னுடைய அரசியல் கருத்துகளை அவர் விளக்கியுள்ளார், “மக்களாட்சி என்பது சிறந்த தத்துவம். ஆனால் மக்கள் வறுமையால் வாடும்போது தங்களை நன்றாக ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பசியின் காரணமாக, ஒரு சில டாலர்களுக்காக தங்கள் வாக்குரிமையையே அவர்கள் விற்றுவிடுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் இதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் நாட்டின் பணத்தை கொள்ளையடித்து தேர்தல் வரும் நேரங்களில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். இந்நிலை ஒரு நாட்டிற்கு மட்டும் சொந்தமில்லை, எங்கெல்லாம் வறுமை தாண்டவமாடுகிறதோ அந்த நாடுகளில் உள்ள தேர்தல்களில் இப்படி நடப்பது சர்வ சாதாரணம். மக்களாட்சியின் உண்மையான பலனை அனுபவிக்கவேண்டுமென்றால் வறுமை ஒழிய வேண்டும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆப்பிரிக்க இலக்கியம் என்றாலே ஜோசப் கான்ராட் எழுதிய “இருட்டின் இதயம்” (Heart of Darkness) என்ற புத்தகமும் ஜாய்ஸ் கேரி எழுதிய “மிஸ்டர் ஜான்சன்” என்ற புத்தகமும் உலக வாசகர்களுக்குத் தெரியும். ஜோசப் கான்ராட் எழுதிய “இருட்டின் இதயம்” ஆப்பிரிக்காவைப் பற்றி கூறுகையில், “ஆப்பிரிக்கர்கள் வாழும் பகுதியைப் பார்த்தால் ஏதோ புதிய கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இங்குள்ள மனிதர்கள் கறுப்பாக, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த காட்டு மிராண்டிகளை ஒத்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக உள்ளனர். இவர்களை வழிக்கு கொண்டு வருவதற்குள் ஐரோப்பிய பிரதிநிதிகள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இதில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்களும் நம்மை போன்ற மனிதர்கள்தான். ஆனால் நாம் இவர்களிடமிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறோம். எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது,” என்கிறார். இப்படிப்பட்ட புத்தகங்களின் கதைக்கரு - ஆப்பிரிக்க மக்களை அடிமைப்படுத்துவதில் ஐரோப்பியர்கள் காட்டிய சாதனை, அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் எவ்வாறெல்லாம் முட்டாள்தனமான கட்டளைகளுக்கு கூட அடிபடிணிந்தார்கள், தங்களுடைய ஐரோப்பிய முதலாளிகளைக் கண்டு எப்படியெல்லாம் பிரமித்தார்கள், ஐரோப்பிய முதலாளிகளின் கைகளால் சுடப்பட்டு சாவதைக்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பவைகளைச் சுற்றித்தான் இருக்கும்.சினுவா அச்சிபியும் இப்படிபட்ட கதைகளைத்தான் ஆப்பிரிக்க இலக்கியம் என்று தனது சிறுவயதில் படித்தார். ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கைமுறையை எந்தஅளவிற்கு ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர், ஆப்பிரிக்க மக்களின் பிரச்சனையை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய இலக்கியங்களும் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கைமுறையை கேலிச்சித்திரமாக்குகின்றன என்பதை எண்ணி மனம் நொந்தார். மேற்கத்திய இலக்கியங்கள் தங்கள் வாழ்க்கைமுறையை மிகவும் கேவலப்படுத்திவிட்டன என்று வருத்தப்பட்டார். இந்த வருத்தம்தான் அவரை தன்னுடைய 28ம் வயதிலேயே திங்ஸ் ஃபால் அபார்ட் என்ற காவியத்தை எழுத வைத்தது. திங்ஸ் ஃபால் அபார்ட் இதுவரை ஒரு கோடிப் பிரதிகள் உலக அளவில் விற்பனையாகியிருக்கின்றன, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிரிக்க ஆசிரியர்களில் சினுவா அச்சிபி நூல்கள்தான் உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை கொண்டவைகளாகும். “மூன்றாம் உலக நாடுகள்” குறித்த - தேசியவாதம், பின்காலனியாதிக்கம், இனஅடையாளங்கள், பெண்ணுரிமை சார்ந்த பிரச்சனைகள், உலகமய சூழலில் சுதந்திரம் - போன்ற பல்வேறு கருத்துகளை இந்த புத்தகம் முன்னிறுத்தியது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவையனைத்தையும் பற்றி வகுப்பெடுக்காமல் இந்த புத்தகத்தின் கதையமைப்பே இந்த பிரச்சனைகளை வாசகர்களுக்கு உணர்த்தியதுதான் . பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆசிரியர் க்வாமே அந்தோணி அப்பையா, “இந்த பூமியில் ஆங்கில பேசக்கூடிய அல்லது ஆங்கிலம் பேசாத நாடுகளில், இலக்கிய வாசகர்கள் யாரிடமாவது அவருக்கு பிடித்த ஆப்பிரிக்க நாவல் எதுவென்று கேட்டால் பெரும்பாலும் அவர்கள் சினுவா அச்சிபி எழுதிய திங்ஸ் ஃபால் அபார்ட் நாவலைத்தான் சொல்கிறார்கள். இந்த நாவலைத் தவிர்த்து ஆப்பிரிக்க இலக்கியத்தை யாரும் கற்பனை செய்யமுடியாது. ஆப்பிரிக்க இலக்கியத்தை எப்படி படைக்கவேண்டும் என்று மற்ற எழுத்தார்களுக்கான சூத்திரம் திங்ஸ் ஃபால் அபார்ட். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆப்பிரிக்க இலக்கியம் என இந்நாவல் பெயர்பெற்றிருக்கிறது.’’ என்று கூறுகிறார். அப்படி என்னதான் எழுதினார் சினுவா அச்சிபி இந்த நாவலில்.

இந்த நாவலின் கதாநாயகன் பெயர் ஒகாங்கோவ். இக்போ என்னும் ஆப்பிரிக்க சமூகத்தின் தலைசிறந்த தலைவன். ஆப்பிரிக்க சமூகத்தின் தலைவன் என்றால் உடல்வலிமையும் மனஉறுதியும் பெற்றிருக்கவேண்டும். ஆப்பிரிக்க சமூகத்தின் செல்வந்தன் என்றால் நிறைய கருணைக் கிழங்கு பயிரிட வேண்டும். ஒகாங்கோவ் இவையெல்லா அம்சமும் பெற்றிருந்தான். இவனுடைய மனைவிகளிடம் எந்த சண்டை சச்சரவும் வைத்துக்கொள்ளமாட்டான். ஆனால் தன்னுடைய இனத்தவன் ஒருவனை துரதிர்ஷ்டவசமாக கொல்ல வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டது. இந்தக் குற்றத்திற்காக அவனை அந்த கிராமத்தைவிட்டு ஏழு ஆண்டுகள் தள்ளிவைத்தனர். தன்னுடைய இக்போ சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிந்து ஒகாங்கோவ் ஊரைவிட்டு சென்று ஏழு ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான். இந்த ஏழு ஆண்டுகளுக்குள் அவனுடைய கிராமத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவனுடைய கிராமத்தில் வெள்ளையர்கள் குடியேறி கல்வியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அந்தக் கிராமத்தின் வாழ்கைமுறையையே மாற்றியிருந்தனர்.வெள்ளையர்கள் தங்களை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற உணர்வே கூட இல்லாமல், இக்போ சமூக மக்கள் அவர்களுக்காக விசுவாசமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். தன்னுடைய இனக்கடவுள்களையும் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் விட்டுவிட்டு வேறு ஏதோ ஒரு கடவுளை புதிய சடங்குகளை பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். ஒகாங்கோவ் தான் இருந்த தலைமை பதவியை தனது மகனோ அல்லது ஏதாவது உறவினனோ வகித்திருப்பான் என்று நினைத்துக்கொண்டு வந்தான். ஆனால் அவனுடைய ஊரின் தலைவர் என்று சொல்லிகொண்டு ஒரு வெள்ளைக்காரர் இவனை அதிகாரம் செய்தார். அவர் தன்னை மாவட்ட ஆணையர் என்று சொல்லிகொண்டார், மாவட்ட ஆணையர் என்றால் என்னவென்றே ஒகாங்கோவ்விற்குத் தெரியாது. இந்த சூழ்நிலைகளால் ஒகாங்கோவ் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானான். பாரம்பரியத்தில் ஊறிப்போன ஒகாங்கோவ்விற்குத்தான் இந்த நிலைமை. ஆனால், அந்த ஊரில் இருந்த மற்றவர்களோ, மாற்றம் வந்ததையே உணராமல், வெள்ளைக்கார அதிகாரிகளின் விசுவாசமான ஊழியர்களாக மாறி அவர்களின் அடி உதை அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒகாங்கோவ் மனம் நொந்து இறந்துவிடுகிறான். 1890ம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை மனதில் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காலனியாதிக்கம் என்பது போரின் மூலம்தான் வரவேண்டும் என்றில்லை. வேறு எப்படியெல்லாம் ஒரு சமூகத்தில் அது நுழையலாம் என்பதை சினுவா அச்சிபி இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார். அடிமைப்படுத்துவதென்பது ஒருவரை வேலைக்காரராக வேலைவாங்குவது மட்டுமல்ல, அவருடைய சிந்தனை, நம்பிக்கை, கலாச்சாரம் இவையனைத்தையும் மாற்றியமைப்பதுமாகும். இந்த நாவலின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால் இந்தக் கருத்தை அச்சிபி எவ்வாறு தனது கதையமைப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான். பொதுவாக காலனியாதிக்கம் பற்றிய இலக்கியங்களோ சமூக மாற்றம் பற்றிய இலக்கியங்களோ அதிதீவிர வாசிப்பைத்தான் தரும். ஆனால் இந்த புத்தகம், சிறுவர்கள் படித்தால் கூட விறுவிறுப்பாக இருக்கும். இந்த புத்தகத்தில் முக்கால் பங்கு, காலனியாதிக்கத்திற்கு முந்தைய நைஜுரிய மக்களின் புராதன வாழ்க்கையைப் பற்றியதாகும். அவர்களிடம் நம்பிக்கைகள், வேடிக்கைகள், விளையாட்டுகள், சண்டை சச்சரவுகள் இருந்தாலும் சமூக ஒற்றுமைக்காக அவற்றையெல்லாம் மறந்து விட்டு ஒன்றாக உழைக்கின்ற மனப்பான்மை. இவற்றையெல்லாம் எளிமையாக சிறுகுழந்தைகளுக்குக் கூட புரியக்கூடிய விதத்தில் சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கை, காலனியாதிக்கத்தால் எப்படி மாறிப்போனது, எப்படி காலனியாதிக்கம் இந்த சமூகத்தில் நுழைந்தது, அவர்களை எப்படி அடிமைப்படுத்தியது என்பதையெல்லாம் மிக இயல்பாக கடைசி 50 பக்கங்களில்தான் சொல்லியிருப்பார். 200 பக்கங்கள் வரை ஏதோ சிறுவர் கதையை படித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்த வாசகர்களின் மனமானது, கடைசி 50 பக்கங்களில் திடீரென கனத்து ஒகாங்கோவ்வின் மரணத்திற்காகவும் அந்த ஆப்பிரிக்க மக்கள் தொலைத்த வாழ்கைக்காகவும் கண்ணீர் வடிக்கச் செய்துவிடுவார்.மேற்கத்தியர்கள் இனப்பிரச்சனை கொண்ட சமூகம் என்று ஆப்பிரிக்காவை குற்றம் சாட்டுவர். ஆனால் சினுவா அச்சிபி சொல்கிறார், “ஆப்பிரிக்க சமூகத்தில் இனப்பிரச்சனை இருப்பது உண்மைதான். இவற்றை உடைக்க வேண்டியது இன்றியமையாததுதான். ஒவ்வொரு இனத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாறு இவற்றில் வேறுபாடுகள் உண்டுதான். ஆனால் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேறுபட்ட இனங்கள் திடீரென்று ஆப்பிரிக்காவிற்குள் குதிக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் இதே இடத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பல்வேறு இனங்களுக்கான தொடர்பு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆனால் அவர்கள் யாரும் அந்நியர்கள் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்கள் இனப்பிரச்னையின்றிதான் வாழ்ந்திருக்கிறார்கள். இனப்பிரச்னை என்பது சமீபத்திய நிகழ்வு. எங்கெல்லாம் இனப்பிரச்னை தோன்றுகிறதோ ஆராய்ந்து பார்த்தால் அவ்விடத்தில் ஏதாவது சுயநல சக்தி தன்னுடைய சுயநலத்திற்காக இனப்பிரச்னையை தூண்டிவிட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேற்றுமையில் ஒற்றுமைகண்டு வாழ்ந்து வந்த மக்கள் திடீரென்று கடந்த 40-50 ஆண்டுகளில் இனப்பிரச்னைக்கு ஆளாகிறார்கள் என்றால் அது கண்டிப்பாக சுயநலசக்திகளால்தான். உதாராணமாக என்னுடைய நாடான நைஜுரியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தை கூறலாம். எப்பொழுது பிரிட்டிஷார் எங்கள் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனரோ அப்பொழுது அவர்கள் எங்களுக்குள் இனப்பிரச்னையை தூண்டிவிட்டு சென்றனர். ஏனென்றால் அப்படியிருந்தால்தான் நாங்கள் எங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் அடித்துகொள்வோம். நாங்கள் எங்களுக்குள் பகைமையை வளர்த்துகொண்டால் அவர்கள் மீதான பகையை மறந்துவிடுவோம் என்பது அவர்களின் கணிப்பு. பெரும்பாலான நாடுகளில் அந்நிய சக்திகள் இப்படி செய்தன, செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியும்.”

ஆங்கிலேயருக்கு எதிராக தன் கருத்தை இவ்வாறு வெளிப்படுத்தும் சினுவா அசிபி அவர்களுடைய மொழியான ஆங்கிலத்திலேயே தனது படைப்புகளை வெளியிட்டார். ஆனால் அவருடைய சக ஆப்பிரிக்க ஆசிரியர்கள் பலர் அவ்வாறு செய்யவில்லை. இதுகுறித்து அச்சிபி பேசுகையில், “என்னுடைய எழுத்து ஆப்பிரிக்காவின் குரல். ஆப்பிரிக்காவின் அனுபவத்தை உலக மக்களுக்கு அறிவிக்கும் குரல். இந்த குரல் உலக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு புரிந்த மொழியில் சென்றடைய வேண்டும். ஆங்கிலம் உலகெங்கும் பரவியிருக்கும் மொழி. உண்மையான ஆப்பிரிக்க இலக்கியம் என்றால் என்னவென்பதை உலக மக்களுக்கு தெரிவிக்கவும் எங்களைத் தவறாக சித்தரித்த ஐரோப்பிய எழுத்தாளர்களுக்குப் பாடம் புகட்டவும் ஆங்கில மொழி தேவைப்படுகிறது,” என்கிறார்.

அச்சிபி கூறியபடி ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்று அவர் எடுத்த முடிவு சரியானதே. இல்லையென்றால் அவருடைய கருத்து உலக வாசகர்களை சென்றடைந்திருக்காது. அச்சிபியின் ஆங்கிலத்தில் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால் ஆப்பிரிக்க கதையின் தேவைக்கேற்றபடி ஆங்கிலத்தை மாற்றியமைத்து பிரயோகித்திருப்பார். அச்சிபியின் ஆங்கிலம் ஆப்பிரிக்க பழமொழிகள், பாடல்கள், சடங்குகள் எல்லாம் கலந்த கலவை. அவருடைய இலக்கியங்களைப் படிக்கும்போது அவர் படைத்த கதாபாத்திரங்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பேசியிருக்க மாட்டார்கள், ஆப்பிரிக்க மொழியில்தான் பேசியிருப்பார்கள், சர்வதேச வாசகரின் புரிந்துகொள்ளுதலுக்காக ஆங்கிலம் ஒரு ஊடகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.

உதாரணமாக சமீபத்தில் தமிழில் வெளியான ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற திரைப்படங்களில் மகாத்மா காந்தி தமிழில் பேசுவார். படம் பார்க்கும் எல்லோருக்கும் கண்டிப்பாக காந்தி தமிழில் பேசியிருக்க மாட்டார், சாமானிய மக்களின் புரிந்துகொள்ளுதலுக்காக அவ்வாறு காட்சியமைக்கப் பட்டிருக்கிறது என்று தெரியும். அங்ஙனம்தான் அச்சிபியும் ஆங்கிலத்தை ஒரு ஊடகமாக பயன்படுத்தியிருப்பார். அச்சிபியை ஆப்பிரிக்க இலக்கியம் படைப்பதற்கு தூண்டிய ஆப்பிரிக்க பழமொழி -“வேடனுக்கும் சிங்கத்திற்கும் நடக்கும் சண்டையில், சிங்கத்திற்கென தனியான வரலாற்றாசிரியன் இல்லையென்றால் , வரலாறு வேடனைத்தான் பாராட்டும்.” இதன் பொருள் பற்றி அச்சிபி விளக்குகையில் “சிங்கம் தானாக அடிபணிந்திருக்காது, தோற்றுப்போக ஆசைப்படாது, கொல்லப்பட இடம் கொடுத்திருக்காது. வேடனின் சூழ்ச்சி வலையில் அறியாமையால் மாட்டிக்கொண்டாலும் இறுதி வரை வேடனுடன் போராடும். சிங்கத்தினுடைய வீரம், தன்னைக் காப்பாற்றிகொள்ள வேடனுடன் அது மேற்கொண்ட போராட்டம், போராட்டத்தில் தோற்று இறக்கும் சூழ்நிலை வந்தால் அதனுடைய வேதனை, வலி, இவற்றையெல்லாம் சிங்கத்தின் நிலையிலிருந்து சிந்திக்கவேண்டும். வேடன் சிங்கத்தை கொன்றுவிட்டதாலேயே அவன் சிங்கத்தைவிட வலிமையானவன் என்று அர்த்தம் இல்லை. வலையும் துப்பாக்கியும் இல்லாவிட்டால் யார் வலிமையானவர் என்பது தெரிந்திருக்கும். வரலாற்றாசிரியர்கள் எல்லாம் வேடனின் ஆளாக இருப்பதால்தான் அவன் பெருமை பெறுகிறான். காலனியாதிக்க நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகள் வேடர்கள் இடத்திலும் அந்நாட்டின் சொந்தமக்கள் சிங்கத்தின் இடத்திலும் உள்ளனர். வரலாறும் மேற்கத்திய இலக்கியங்களும் அவர்களுடைய வெற்றிப்பதாகைகளை பற்றி பேசுகிறது. ஆகவே ஆப்பிரிக்க இலக்கியம் அந்நாட்டின் சொந்தமக்களின் வலிகளையும் வேதனைகளையும் பேசவேண்டும். அதற்கு சான்றாக அம்மக்கள் பட்ட தழும்புகள் உள்ளன. அவைகளே என் போன்ற இலக்கிய வாதிகளை சொந்த மண்ணை பற்றி எழுதத் தூண்டியவை “ என்று கூறுகிறார். தன்னுடைய நாட்டிற்காகவும் தன்னுடைய மக்களுக்காகவும் குரல்கொடுத்து உலக வாசகர்களின் கவனத்தை ஆப்பிரிக்க இலக்கியத்தை நோக்கி ஈர்த்த சினுவா அச்சிபி உலகம் போற்றப்பட வேண்டிய இலக்கியகர்த்தா என்பதை மேற்கத்திய இலக்கிய ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதற்கு சான்று லண்டனிலிருந்த இவருக்கு வழங்கப்பட்ட இந்த 2007ம் ஆண்டுக்கான மேன் புக்கர் விருது. சினுவா அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியம் குறித்த பார்வையை சாமானிய வாசகர்களுக்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க இலக்கியம் குறித்த மேற்கத்திய இலக்கிய ஆசிரியர்களின் தவறான கருத்தையும் மாற்றியிருக்கிறார் என்பதற்கு இவ்விருது ஒரு சாட்சி. இவ்விருது ஆப்பிரிக்க இலக்கியத்திற்கும் ஆப்பிரிக்க மக்களுக்கும் சினுவா அச்சிபி செய்த சேவைக்கான அங்கீகாரம். மேலும் பல வாசகர்கள் சினுவா அச்சிபியின் புத்தகங்களை படிக்க இவ்விருது தூண்டும் என்பதில் ஐயமில்லை.
..

Sunday, January 27, 2008

தமிழ் வளர்ச்சிக்கு பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கு - து. ராசா

தமிழ் வளர்ச்சிக்கு பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்ச்சியில் ராசா உரை

புதுடில்லி, ஜன. 28-
தமிழ் வளர்ச்சிக்கு பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான து. ராசா கூறினார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், புதுடில்லி, ஆசியாட் வில்லேஜ், சிரி ஃபோர்ட் கலையரங்கத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சியை முன்னிட்டு மக்கள் இசைக் கலைஞர் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி இசை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேதுதுரை முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான து. ராசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘பல ஆண்டு காலமாக டில்லியில் வாழ்ந்து, அரசியல் பணியாற்றி வருபவன் நான். டில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு பல முறை வந்திருக்கிறேன். ஆனால் தில்லித் தமிழ்ச் சங்கத்தினுடைய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. நிகழ்ச்சியினுடைய தொடக்கத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்தார் அறிவித்ததைப் போல் பொங்கல் விழா நிறைவு பெறுகிற நிகழ்ச்சி இது.எனவே உங்கள் அனைவருக்கும் முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களையும், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். டில்லித் தமிழ்ச் சங்கம், ஒரு விசாலமான தளத்தில் தொலைநோக்கோடு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.

டில்லித் தலைநகரத்தில் வாழ்கிற தமிழ் மக்கள் அனைத்துப் பகுதியினரையும் அரவணைத்து, தில்லித் தமிழ்ச் சங்கம் பாடுபடுமானால் தில்லியின் சமூக வாழ்க்கையில், கலாச்சார வாழ்க்கையில் தமிழ் மக்கள் சிறப்பான பங்கைச் செலுத்த முடியும். தில்லிக் கலாச்சாரம் பன்முகக் கலாச்சாரம். இந்தியத் தேசத்தின் தலை நகரம் டில்லி. இந்தியாவின் கலாச்சாரமும் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாராத்தினுடைய ஒரு பிரதிபலிப்பாகத்தான் டில்லிக் கலாச்சாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு கலாச்சார வேர்கள் மிகவும் பழைமையானவை. இந்தியாவில் யாரும் ஒரேயொரு கலாச்சாரத்தைத் திணித்துவிட முடியாது. பன்முகக் கலாச்சாரத்தை அனைவரும் அங்கீகரித்தேயாக வேண்டும். தமிழ்நாட்டின் கலை, தமிழ்நாட்டின் இலக்கியம், இந்த அடிப்படைக் கலாச்சார வேர்களைக் கொண்டவையாகும். நம்முடைய கலாச்சாரம், தமிழ்க் கலாச்சாரம் என்று சொல்கிறபோது, தமிழ் மக்களின் கலைகள், இசை, இலக்கியம் - இவை அனைத்தும் தமிழ் மக்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டவை. இதை உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் இந்த உழைப்பை ஆதாரமாகக் கொண்டு பிறந்தவைதான். தமிழ்நாட்டில் எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் உழைப்பின் அழகைக் காட்டுவதாகத்தான் அமைந்திருக்கிறது. ‘‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது, அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது’’ என்பதை தமிழ்நாட்டின் உழைப்புக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு, தமிழ்க் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பொதுவுடைமைவாதிகள் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை டில்லி வாழ் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ப. ஜீவானந்தம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவரது நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகளை வெளிக்கொணர்வதற்காக பேராசிரியர் நா, வானமாமலை ‘‘ஆராய்ச்சி’’ என்கிற ஓர் இதழையே நடத்தி வந்தார். அந்த இதழின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள நாட்டுப்புறக் கலைகளைத் தேடிப் பிடித்து அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கினார்கள். அவர் அப்படிச் செய்யவில்லை என்றால், புஷ்பவனம் குப்புசாமியை நாம் கண்டிருக்க முடியாது. பேரா. நா. வானமாமலைதான் நாட்டுப்புறக் கலைகளுக்கு அங்கீகாரத்தை வழங்கியவர். அதேபோன்று புதுவைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் கே.ஏ. குணசேகரன் நாட்டுப்புற இசையை இயக்கமாகக் கொண்டு சென்று வருகிறார்.இளையராசா, கங்கை அமரனை உங்கள் எல்லோருக்கும் தெரியும். சின்னராசா இளையராசாவாக மலர்வதற்கு முன்னால், அவருக்கு ஒரு வாழ்க்கை இருந்தது, இளையராசா, கங்கை அமரனுக்கு எல்லாம் மூத்த சகோதரர் பாவலர் வரதராசன் நாட்டுப்புற இசையை ஆதாரப்படுத்தி தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் இசை முழக்கம் செய்தவர். பொதுவுடைமை இயக்கம்தான் அவருக்கு மேடை கொடுத்தது, சின்னராசா, இளையராசாவாக மாறியதற்குக் காரணம் நாட்டுப்புற இசைதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.நாட்டுப்புற இசைக்கு ஓர் அங்கீகாரத்தை பொதுவுடைமை இயக்கம்தான் கொண்டு வந்தது.

அதேபோன்று ஒருவர் தன் பெயரை கார்க்கி என்று மாற்றிக் கொண்டு வில்லுப்பாட்டுக் கலையை தமிழ்நாடு முழுதும் கொண்டு சென்றிருக்கிறார். இதுவெல்லாம் டில்லித் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இதுவெல்லாம் நம்முடைய காலத்தில் நடைபெற்றிருக்கிறது.அதேபோன்று ‘சின்ன சின்ன மூக்குத்தியாம், சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்’ எழுதிய அருணாசலம், தொ.மு.சி, ரகுநாதன் என்கிற திருச்சிற்றம்பலக் கவிராயர், ஆகியோரை அடுத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைத் தெரியாமல் தமிழ்நாட்டில் எவரும் இருக்க முடியாது. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் கேட்போர் அனைவரின் நெஞ்சையும் உலுக்குகிற பாடல்களாகும். இவர்கள் எல்லாம் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.

இவ்வாறு தமிழின் வளர்ச்சிக்கு, தமிழ்க் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பொதுவுடைமைவாதிகள் அளப்பரிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். பொங்கல் விழா என்பது உழைப்பைப் போற்றுகிற விழா. உழைப்பைப் போற்றுகிற மக்கள் தமிழ் மக்கள். டில்லி தமிழ் மக்கள் உழைப்பின் மூலமாகத்தான் இந்த ஏற்றத்தைப் பெற்றிருக்கிறார்களே தவிர, வேறு வழியில் இல்லை என்று நான் நம்புகிறேன். உழைப்பை ஆதாரமாக வளர்க்கிற, உழைப்பை ஆதாரமாகக் கொண்டு வெற்றி பெறுகிற இனம் தமிழினம். அதன் ஒரு பகுதியாக டில்லி தமிழ்ச் சங்கம் நடத்துகிற இவ்விழா வெற்றிபெற வாழ்த்தி விடைபெறுகிறேன்.’’

இவ்வாறு து. ராசா கூறினார். இதனை அடுத்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் ரமாமணி சுந்தர் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி குழுவினரின் மக்கள் இசை விருந்து நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கே.வி.கே. பெருமாள் தொகுத்தளித்தார்.

(தொகுப்பு: ச. வீரமணி)

Friday, January 25, 2008

இளம் அரசியல் ஊழியர்களுக்கு - பகத்சிங்

இளம் அரசியல் ஊழியர்களுக்கு

பகத்சிங்

(1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே ஒருவிதமான சமரசம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காற்று வாக்கில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த ஆவணத்தின் மூலம், பகத்சிங், எந்த சமயத்தில் சமரசத்தை அனுமதிக்கலாம், எப்போது அனுமதிக்கக் கூடாது என்று விளக்கினார். அவர் மேலும், காங்கிரஸ் இயக்கத்தை நடத்திய விதம், அப்படிப்பட்டதோர் சமரசத்தில் முடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதினார். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிடும்படியும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்திடும்படியும் அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.)

பெறுநர்
இளம் அரசியல் ஊழியர்கள்.

அன்புத் தோழர்களே,

நமது இயக்கம், தற்சமயம் மிக முக்கியமானதொரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு கால கடும் போராட்டத்திற்குப் பின்னர், வட்ட மேசை மாநாட்டின் மூலம் அரசியலமைப்புச் சட்டத் சீர்திருத்தங்கள் தொடர்பாக சில தெளிவான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்கள் இயக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இதற்கு ஆதரவாக முடிவெடுக்கிறார்களா அல்லது எதிராக முடிவெடுக்கிறார்களா என்பது நமக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஏதோ ஒரு வழியில் சமரசத்தில் தான்முடியும். கட்டாயம் ஏதாவது ஒரு சமயத்தில் சமரசம் செய்து கொள்ளப்படலாம்.சமரசம் என்பது பொதுவாக நாம் நினைப்பது போல் பழிப்பிற்கும் பரிதாபத்திற்கும் உரியது அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால், அரசியல் போர்த்தந்திர நடவடிக்கைகளில் சமரசம் என்பது தவிர்க்க முடியாத காரணியாகும். எந்தத் தேசத்திலும் அடக்கு முறையாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இயக்கங்கள் ஆரம்பத்தில் தோல்வியுறும், மத்திய காலங்களில் சமரசங்களின் மூலம் சிறிதளவு சீர்திருத்தங்களைப் பெறும். இறுதிக் கட்டத்திலேயே - நாட்டின் அனைத்து சக்திகளையும் வாய்ப்பு வளங்களையும் முழுமையாக ஒருங்கிணைத்து - அரசாங்க எந்திரத்தைத் தகர்த்தெறிவதில் வெற்றி அடையக்கூடிய கடைசி அடியை அதனால் கொடுக்க முடியும். அப்போதும் கூட அது தோல்வியடையலாம். அதன் காரணமாக, ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகலாம். இதனை ரஷ்ய உதாரணத்தின் மூலம் சிறப்பாக விளக்க முடியும்.ரஷ்யாவில் 1905ம் ஆண்டில் புரட்சி இயக்கம் வெடித்தது. எல்லாத் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர். வெளிநாட்டில் தலைமறைவாய் இருந்த லெனின் நாடு திரும்பினார். அவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மக்கள் அவரிடம் வந்து, பன்னிரண்டு நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இருந்த அவர்களது மாளிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கூறினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் லெனின் அப்போது அவர்களிடம், ‘திரும்பிச் செல்லுங்கள், 1200 நிலப்பிரபுக்களைக் கொல்லுங்கள், அவர்களது அரண்மனைகளையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கொளுத்துங்கள்’ என்றார்.அவரது மதிப்பீட்டில், ஒரு வேளை புரட்சி தோல்வியடைந்தாலும் அது ஏதோனுமொரு விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாகும்.ரஷ்ய பாராளுமன்றமான டூமா அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் ரஷ்ய பாராளுமன்றமான டூமாவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து நின்றார். 1907ல் இது நடந்தது. ஆனால் 1906ல் அவர் முதல் டூமாவில் பங்கெடுப்பதை எதிர்த்தார். காரணம், அப்போது அப்போது அதன் உரிமைகள் வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தன. சூழ்நிலைகள் மாறியிருந்ததுதான் அதற்குக் காரணம். அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. லெனின் டூமாவைப் பயன்படுத்தி. சமூகப் பிரச்சனைகளை விவாதிக்கும் மேடையாக மாற்றத் திட்டமிட்டிருந்தார். மீண்டும் 1917 புரட்சியின்போது, மறுபடியும், 1917 புரட்சிக்குப் பின்னர், பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் (சமாதான) உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு போல்ஷ்விக்குகள் நிர்பந்திக்கப்பட்டபோது, லெனினைத் தவிர மற்ற அனைவருமே அதனை எதிர்த்தனர். ஆனால் லெனின், “ ‘சமாதானம்’, ‘சமாதானம்’, மீண்டும் ‘சமாதானம்’ வேண்டும். என்ன விலைகொடுத்தேனும் சமாதானம் - ரஷ்யாவின் பல மாகாணங்களை ஜெர்மன் யுத்தப் பிரபுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தாலும், சமாதானம் வேண்டும்’’ என்றார். அப்போது சில போல்ஷ்விக் எதிர்ப்பாளர்கள் இந்த உடன்படிக்கைக்காக லெனினைத் தூற்றியபோது, லெனின், “ஜெர்மனியின் கடுந்தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் போல்ஷ்விக்குகள் இல்லை. எனவே, அவர்கள் போல்ஷ்விக் அரசாங்கம் முற்றாக அழித்தொழிக்கப் படுவதற்குப் பதிலாக, உடன்படிக்கையை தேர்ந்தெடுத்தனர்’’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், சமரசம் என்பது, போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் இடையிடையே பிரயோகிக்கப்படவேண்டிய இன்றியமையாத ஆயுதமேயாகும். ஆனால், எதற்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோமோ அதன் லட்சியம் குறித்தும், அதில் நாம் எய்தியுள்ள சாதனைகளின் அளவு குறித்தும் சரியாகக் கணித்திட வேண்டும். இதனை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயக்கம் பற்றிய எண்ணமே. எதனை அடைவதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோமோ அந்த இலக்கைக் குறித்த தெளிவான கொள்கையை நாம் எப்போதும் அழியாமற் காத்து வரவேண்டும். அதுவே, நமது இயக்கத்தின் வெற்றி, தோல்வியை சரிபார்ப்பதற்கு நமக்கு உதவும். நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நம்மால் எளிதாக வகுக்க முடியும். திலகருடைய கொள்கை- அவரது குறிக்கோள் நீங்கலான அவரது கொள்கை, அதாவது அவரது போர்த் தந்திரம் சிறப்பானது. உன்னுடைய எதிரியிடமிருந்து பதினாறு அணாக்களைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறாய். ஒரேயரு அணா மட்டுமே உனக்குக் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொள், மீதமுள்ள அவர்களுக்காகப் போராடு. மிதவாதிகளின் இலக்கில் நாம் என்ன பார்க்கிறோம். அவர்கள் ஒரு அணாவை அடைவதில் இருந்து துவங்குகின்றனர். அதையும் கூட அவர்களால் பெற முடிவதில்லை. புரட்சியாளர்கள் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டியது, அவர்கள் முழுமையான புரட்சி ஒன்றுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை. முழுமையான ஆட்சியதிகாரம் அவர்கள் கைகளில் இருக்க வேண்டும். சமசரங்கள் அவர்களுக்கு பேரச்சம் தரத்தக்கவை. ஏனென்றால், சமரசத்திற்குப் பின்னர் பழமைவாதிகள் புரட்சிகர சக்திகளை சீர்குலைக்க முயல்கின்றனர். ஆனால், திறமையும் துணிவும் மிக்க புரட்சிகரத் தலைவர்களால் அத்தகைய படுகுழிகளில் இருந்து இயக்கத்தை காப்பாற்ற முடியும். அத்தகயை வேளைகளில் உண்மையான பிரச்சனைகளில் - சிறப்பாக குறிக்கோளில் எவ்வகையான குழப்பமும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரிட்டீஷ் தொழிலாளர் தலைவர்கள் உண்மையான போராட்டத்திற்கு துரோகமிழைத்து விட்டு கபடவேடமிடும் ஏகாதிபத்தியவாதிகளாக சீரழிந்து விட்டனர். எனது எண்ணத்தில், இந்த நாளுக்கான ஏகாதிபத்திய தொழிலாளர் தலைவர்களை விட கடும் பிறபோக்காளர்கள் நமக்கு மேலானவர்களே.செயல்தந்திரம் மற்றும் போர்த் தந்திரம் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒருவர் லெனினது வாழ்நாள் படைப்புகளைப் படிக்க வேண்டும். சமரசம் என்பது பற்றிய அவரது திட்டவட்டமான கருத்தை “இடதுசாரி கம்யூனிசம்’’ எனும் நூலில் காணலாம். தற்போதைய இயக்கம், அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஏதோ ஒருவகை சமரசத்தில் அல்லது முழுமையான தோல்வியில் தான் முடிவடையும் என்று நான் சொல்கிறேன்.எனது எண்ணத்தில், இந்த முறை போராட்டக் களத்தினுள் உண்மையான புரட்சிகர சக்திகள் கொண்டுவரப்படவில்லை என்பதாலேயே இதை நான் சொல்கிறேன். இது, மத்தியதர வர்க்க வணிகர்களையும் ஒரு சில முதலாளிகளையும் சார்ந்திருக்கும் போராட்டமாகவே இருக்கிறது. இந்த இரண்டு வர்க்கங்களுமே, அதிலும் குறிப்பாக முதலாளி வர்க்கம் எந்தவொரு போராட்டத்திலும் தனது சொத்துக்களுக்கோ உடைமைகளுக்கோ ஆபத்து நேர்வதற்கு ஒருபோதும் துணிய மாட்டார்கள். உண்மையான புரட்சிகர இராணுவத்தினர் கிராமங்களிலும் தொழிற் சாலைகளிலுமே உள்ளனர். விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள். ஆனால், நமது முதலாளித்துவ தலைவர்களுக்கோ, அவர்களை சமாளிப் பதற்குரிய துணிச்சல் கிடையாது. அவர்களால் அது முடியும் செய்யாது. உறங்கிக் கொண்டிருக்கும் அந்த சிங்கத்தை அதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து தட்டியெழுப்பிவிட்டால், நமது தலைவர்கள் அடையக் கருதிய இலக்கை அடைந்த பின்னரும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.அஹமதாபாத் தொழிலாளர்களுடன் தனக்கு ஏற¢பட்ட முதல் அனுபவத்திற்குப் பின்னர் மகாத்மா காந்தி அறிவித்து விட்டார். “நாம் தொழிலாளர்களை (விடுதலை போராட்டத்தினுள்) திருப்பி விடக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவது அபாயகரமானது’’ (தி டைம்ஸ், மே,1921). அப்போதிருந்து இதுவரையிலும் தொழிலாளர்களை அணுவதற்கு அவர்கள் ஒருபோதும் துணியவில்லை. எஞ்சியிருப்பது விவசாயிகள். அந்நிய நாட்டின் மேலாதிக்கத்தை மட்டுமல்லாது, நிலபிரபுக்களின் நுகத்தடியையும் உதறித் தள்ளுவதற்காய் எழுந்த மாபெரும் விவசாய வர்க்க எழுச்சியைக் கண்டபோது இத்தலைவர்கள் அடைந்த பீதியை 1922ம் ஆண்டு பரதோலி தீர்மானம் தெள்ளத் தெளிவாகவே காட்டுகிறது. அங்குதான், நமது தலைவர்கள், விவசாயிகளிடம் சரணடைவதை விட பிரிட்டீஷாரிடம் சரணடைவதைத் தேர்வு செய்தனர்.பண்டிட் ஜவஹர்லால் நேருவை விட்டு விடுங்கள். விவசாயிகளையோ தொழிலாளர்களையோ அணிதிரட்டுவதற்கு ஏதேனும் முயற்சி செய்த தலைவர்கள் யாரையாவது காட்ட முடியுமா உங்களால்? இல்லை. அவர்கள், வரும் அபாயத்தை துணிந்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்க மாட்டார்கள். அங்குதான் அவர்களின் குறைபாடே உள்ளது. அதனால் தான் நான் சொல்கிறேன். அவர்கள் ஒருபோதும் முழுமையானதொரு புரட்சியை மனதிற் கொண்டிருக்கவில்லை. பொருளாதார, நிர்வாக நெருக்கடிகளின் மூலம் இந்திய முதலாளிகளுக்கு மேலும் சில சீர்திருத்தங்களை, மேலும் சில சலுகைகளை பெற்றுவிட முடியும் என்றே அவர்கள் நம்புகின்றனர். அதனால் தான் ஏதேனும் ஒருவகை சமரசத்திற்குப் பின்னரோ அல்லது அதுவும் இல்லாமலேயோ இந்தப் போராட்டத்தின் அழிவு ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒன்று என்கிறேன்.“புரட்சி நீடூழி வாழ்க’’ என்று அனைத்து நேர்மையுடனும் முழக்கமிடும் இளம் தொண்டர்களோ (விடுதலை) இயக்கத்தை தாங்களே முன்னெடுத்துச் செல்லுமளவிற்கு நன்கு ஒருங்கிணைக்கப்பட்டவர்களாகவும் இல்லை, போதுமான பலத்துடனும் இல்லை. நிகழ்வுகளை நோக்குமிடத்து நமது மாபெரும் தலைவர்களுக்கும் கூட ஏதாவது ஒரு பொறுப்பை தங்களது தோள் மேல் ஏற்றுக் கொள்ளும் துணிவு இல்லை. ஒருவேளை பண்டிட் மோதிலால் நேரு இதற்கு விலக்காக இருக்கலாம். அதனாலேயே நமது தலைவர்கள் காந்தியின் முன்பு நிபந்தனையின்றி சரணடைகின்றனர். தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலுங்கூட அவர்கள் ஒருபோதும் காந்தியை முனைப்போடு எதிர்ப்பதில்லை. மகாத்மாவிற்காகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.இச்சூழ்நிலைகளில், முழுமனதோடு ஒரு புரட்சியை மனதிற் கொண்டிருக்கும் நேர்மையான இளம் தொண்டர்களுக்கு கடும் சோத¬க் காலம் வந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறேன். குழப்பமடையாமலும் சோர்வடையாமலும் இருங்கள். மகாத்மா காந்தியின் இரண்டு போராட்டங்களின் மூலம் பெற்ற அனுபவத்திற்குப் பிறகு, நம்முடைய தற்போதைய நிலைமை பற்றியும் எதிர்கால செயல்திட்டம் பற்றியும் ஒரு தெளிவான கொள்கையை உருவாக்குவதில் முன்னிலும் மேலானதொரு நிலையில் நாம் இருக்கிறோம்.இப்போது, நிகழ்வுகளை எளிமையான முறையில் எடுத்துச் சொல்ல என்னை அனுமதியுங்கள். “புரட்சி நீடூழி வாழ்க’’ என்று நீங்கள் முழக்கமிடுகிறீர்கள். அதன் உண்மையான அர்த்தத்தையே மனதிற் கொண்டுள்ளீர்கள் என்று நான் ஊகித்துக் கொள்கிறேன். சட்டமன்ற வெடிகுண்டு வழக்கில் எங்களது பதிலறிக்கையில் கூறியதைப்போல அவ்வார்த்தைக்கான நமது வரையறையின்படி, புரட்சி என்பது, தற்போது நடப்பிலுள்ள சமுதாய ஒழுங்கமைப்பை முற்றாக தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் சோசலிச சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதையே குறிக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே நமது உடனடியாக குறிக்கோள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக உள்ளது. ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்குமான ஆயுதமாகவே இந்த அரசும் அரசு இயந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கிறது. நாம் அதனை பறிப்பதற்கும், நமது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு அதாவது ஓர் புதிய அடிப்படையில் - மார்க்சிய அடிப்படையில் சமுதாயத்தை மீட்டமைப்பதற்கு பயன்படும் வகையில் அதனை கையாள்வதற்கும் விரும்புகிறோம். இந்த நோக்கத்திற்காகவே, அரசாங்க இயந்திரத்தை கைப்பற்றுவதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆரம்பம் முதல் முடிவு வரையிலும் நாம் மக்களை பயிற்றுவிக்கவும், நமது சமுதாய வேலைத் திட்டத்திற்கு சாதகமானதொரு சூழலை உருவாக்கவும் வேண்டும். போராட்டங்களின் வாயிலாகவே அவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிக்கவும் பயிற்றுவிக்கவும் முடியும்.இந்த விஷயங்கள், நமக்கு தெளிவாகிவிட்டன. அதாவது நமது உடனடி மற்றும் இறுதி இலக்கு தெளிவாக முன்வைக்ப்பட்டு விட்டது. இப்பொழுது தற்போதுள்ள சூழ்நிலையை நாம் ஆராயத் துவங்குவோம். எந்தவொரு சூழ்நிலையை பகுத்தாராயும் பொழுதும் நாம் மெய்யாகவே நேர்மையானவர்களாகவும் முற்றிலும் காரிய நோக்குமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.இந்திய அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்கேற்பது குறித்தும் அதன் பொறுப்புக்களை இந்தியர்கள் பகிர்ந்து கொள்வது குறித்தும் பெருங் கூக்குரல் எழுப்பப்பட்டது. அதன் காரணத்தால் ஆலோசனை கலக்கும் உரிமைகள் மட்டுமே கொண்ட வைஸ்ராயின் ஆலோசனைக்குழு ஒன்றுஏற்பட வழிவகுத்த மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியர்களின் உதவி அதிகமாய் தேவைப்பட்ட உலகப் போரினிடையே தன்னாட்சி குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. நடப்பிலுள்ள சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரம்பிற்குட்பட்ட சட்டமியற்றும்அதிகாரங்கள் சட்டமன்றத்திற்கு அளிக்கப்பட்டன. ஆனால் அந்த அதிகாரங்களும் வைஸ்ராயின் விருப்பத்திற்கு உட்பட்டவையே. தற்போது மூன்றாவது சட்டம்.தற்போதும் சீர்திருத்தங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெகு சீக்கிரதத்தில அவை அறிமுகப்படத்தப்பட்டுவிடும். நமது இளைஞர்கள் அவற்றை எவ்வாறு மதிப்பிட வேண்டும்? இதுவே கேள்வி. எந்த அளவுகோளின்படி காங்கிரஸ் தலைவர்கள் அவற்றை மதிப்பிடப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் புரட்சியாளர்களாகிய நமக்கு பின்வரும் அளவுகோல்கள் உள்ளன :1. இந்தியர்களின் தோள்களுக்கு மாற்றியளிக்கப்படும் பொறுப்பின் அளவு2. அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அரசாங்க நிறுவனங்களின் வடிவம் மற்றும் அதில் பங்கெடுப்பதற்கு மக்களுக்கு வழங்கப்படும் உரிமையின் எல்லை3. வருங்கால வாய்ப்புகளும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளும்.இவற்றிற்கு மேலும் சிறிது விளக்கம் தேவைப்படலாம். முதலில், நிர்வாகத்துறையின் மீது நமது பிரதிநிதிகளுக்கு இருக்கும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைககொண்டு நமது பிரதிநிதிகளுக்கு இருக்கும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டு நமது மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பின் அளவை நாம் எளிதாக மதிப்பிட்டு விடலாம். இப்போது வரைக்கும் சட்டமன்றத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக நிர்வாகத் துறையினர் ஒருபோதும் ஆக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அனைத்து முயற்சிகளையும் பயனற்றதாகவும் ரத்து அதிகாரம் வைஸ்ராய்க்கு இருக்கிறது. இந்த அசாதாரணமான அதிகாரத்தை, தேசியப் பிரதிநிதிகளின் மதிப்புமிக்க தீர்மானங்களை வெட்கமின்றி காலில் போட்டு மிதிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு வைஸ்ராயை உள்ளாக்கிய சுயராஜ்யக் கட்சியினரின் முயற்சிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் அதிக விவாதம் தேவை இல்லை - இது ஏற்கனவே மிகவும் நன்கறியப்பட்ட ஒன்றுதான்.இப்போது நாம் முதலிடத்தில் நிர்வாக அமைப்பு முறையைப் பார்க்க வேண்டும். நிர்வாகத்துறை மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதாய் இருக்குமா அல்லது முன்னைப் போலவே மேலிருந்து திணிக்கப்படுவதாய் இருக்குமா? மேலும், அது மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டதாக இருக்குமா அல்லது கடந்த காலங்களில் நடப்பதைப் போல அதனை முழுமையாக அவமதிக்கப் போகிறதா?இரண்டாவது இனத்தைப் பொறுத்தவரை, வாக்குரிமையின் அளவெல்லையின் மூலம் தாம் அதனை மதிப்பிடலாம். ஒருவரை வாக்களிக்கத் தகுதியானவராக்குவதற்கு இருக்கும் சொத்துத் தகுதிகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வயது வந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வாக்குரிமை பெற்றிருக்க வேண்டும். தற்சமயம் எவ்வளவு தூரத்திற்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் எளிதாகக் காணலாம்.வடிவம் சம்பந்தப்பட்டவரை, நாம் இரண்டு அவைகளைக் கொண்ட அரசாங்கத்தை வைத்துள்ளோம். எனது கருத்துப்படி மேலவை என்பது முதலாளித்துவ போலித்தனம் அல்லது சூழ்ச்சியே. ஒரேயரு அவையைக் கொண்ட அரசாங்கமே நாம் எதிர்பார்க்கக் கூடிய சிறந்த ஒன்றாக இருக்கும் என்று நான் சொல்கிறேன்.மகாண சுயாட்சி பற்றி இங்கே நான் ஒன்றைக் குறிப்பிடலாம். ஆனால் நான் கேள்விப்பட்டவற்றிலிருந்து, சட்டமன்றத்திற்கும் மேலான, உயர்ந்த அசாதாரண அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர், ஒரு கொடுங்கோலர் என்பதையே காட்டுகிறது என்று மட்டுமே என்னால் கூறமுடியும். நாம் இதனை மாகாண சுயாட்சி என்று அழைப்பதை விட மாகாண கொடுங்கோலாட்சி என்று அழைப்பதே சிறந்தது. அரசு நிறுவனங்களை ஜனநாயக மயப்படுத்துவதில் இது ஒரு விசித்திரமான வகை.மூன்றாவது இனம் முற்றிலும் தெளிவானது. பிரிட்டிஷாரின் கஜானா காலியாகும் வரைக்கும் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இன்னொரு பகுதி சீர்திருத்தங்கள் வழங்கப்படும் என்ற மாண்டேகுவின் வாக்குறுதியை குலைப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசியல் வாதிகள் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.வருங்காலம் குறித்து அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று நாம் பார்க்கலாம்.சாதனைகளைக் கண்டுபூரித்துப் போவதற்காக நாம் இந்த விஷயங்களை ஆராயவில்லை. மாறாக, மக்களை அறியாமையிலிருந்து விடுவிப்பதற்காகவும் அடுத்த கட்ட போராட்டத்திற்கு அவர்களை தயார்படுத்துவதற்காகவும் நமது சூழ்நிலை பற்றிய தெளிவான கொள்கையை வகுப்பதற்கே இந்த விஷயங்களை ஆராய்கிறேன் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். நமக்கு சமரசம் என்பது ஓரடி முன்னேற்றத்தையும் சிறிது ஓய்வையும் குறிக்குமேயழிய, அது ஒருபோதும் சரணாகதியைக் குறிக்காது. அவ்வளவு தான் : வேறொன்றுமில்லை.
தற்போதைய சூழ்நிலையை விவாதித்துவிட்டோம். இனி நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நாம் கைக்கொள்ள வேண்டிய செயல்வழியையும் விவாதிக்கத் துவங்குவோம்.நான் ஏற்கனவே கூறியதுபோல் எந்தவொரு புரட்சிகரக் கட்சிக்கும் ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் மிகவும் இன்றியமையாததாகும். இதற்கு, புரட்சி என்றால் அது செயல்பாட்டையே குறிக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அது, ஒருங்கிணைக்கப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட வேலையின் மூலம் திட்டமிட்டு கொண்டு வரப்படக் கூடிய ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றது. அது, திடீரென்ற- ஒருங்கிணைப்பற்ற அல்லது தன்னியல்பான மாற்றத்திற்கு அல்லது சீர்குலைவிற்கு எதிரானது. ஒரு செயல் திட்டத்தை வகுப்பதற்கு ஒருவர் கண்டிப்பாக.1. இலக்கு2. எந்த இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும், அதாவது தற்சமயம் நிலவும் சூழ்நிலை.3. செயல்வழி, அதாவது வழி வகையும் வழி முறையும்.-ஆகியவற்றைப் பற்றி ஆராய வேண்டும். இந்த மூன்று காரணிகளைப் பற்றிய தெளிவானதொரு கோட்பாட்டை ஒருவர் கொண்டிருக்காவிடில் செயல்திட்டம் பற்றி எதையுமே அவரால் விதிக்க முடியாது.தற்போதை சூழ்நிலையை ஓரளவிற்கு நாம் விவாதித்து விட்டோம். இலக்கு பற்றியும் லேசாகத் தொட்டுள்ளோம். நாம் ஒரு சோசலிசப் புரட்சியை வேண்டுகிறோம். இதுவே நாம் வேண்டுவது. அரசியல் புரட்சி என்பது பிரிட்டிஷாரின் கைகளில் இருந்து இந்தியர்களின் கைகளுக்கு அரசை மாற்றுவதை (இன்னும் கொச்சையாகச் சொன்னால் அதிகாரத்தை மாற்றுவதை) (பொதுப்படையாக) குறிக்கவில்லை. மாறாக, இறுதி இலக்கைப் பொறுத்த நம்முடன் உடன்பாடுடைய இந்தியர்களின் கைகளுக்கு அல்லது இன்னமும் துல்லியமாக புரட்சிகரக் கட்சிக்கு மக்களின் பேராதரவின் மூலம் அதிகாரம் மாற்றப்படுவதையே குறிக்கின்றது. அதற்குப் பிறகு (பிரட்சிகரக் கட்சிக்கு அதிகாரம் மாற்றப்பட்ட பிறகு) தயங்காமல் மனப்பூர்வமாக தொடர்ந்து செயல்படுவது என்பது, சமுதாயம் முழுவதையும் சோசலிசத்தின் அடிப்படையில் புனர் நிர்மாணம் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகவே இருக்கும். இந்த புரட்சியை நீங்கள் குறிக்கவில்லை என்றால், தயவு செய்து “புரட்சி நீடூழிவாழ்க’’ என்று முழங்குவதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் புரட்சி எனும் வார்த்தை எங்களுக்கு மிகவும் புனிதமானது. இவ்வாறு விளையாட்டுத் தனமாக பிரயோகம் செய்யப்படுவதற்கு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு - அது உகந்ததல்ல.அவ்வாறின்றி தேசியப் புரட்சிக்காகவே நீங்கள் இருப்பதாகவும் உங்களது போராட்டத்தின் இலக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்ற வகையானதொரு இந்தியக் குடியரசை அமைப்பதே என்றும் நீங்கள் சொல்வீர்களேயானால், அந்தப் புரட்சியை சாதிப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடியது என்று எந்த சக்திகளை நம்பியிருக்கிறீர்கள் என்பதை தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள் என்று நான் கேட்கிறேன். எந்தவொரு புரட்சியை சாதிக்க வேண்டுமானாலும் - அது தேசியப் புரட்சியோ சோசலிசப் புரட்சியோ எதுவானாலும்- நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுதியான சக்திகள் விவசாயிகளும் தொழிலாளர்களும் மட்டுமே. அந்த சக்திகளைத் திரட்டும் துணிவு காங்கிரஸ் தலைவர்களுக்குக் கிடையாது. இந்த இயக்கத்தில் அதை நீங்கள் பார்த்தீர்கள். இந்த சக்திகள் உடனில்லாவிட்டால் அவர்கள் முழுமையான நிராதரவானவர்கள் என்பது மற்ற எவரையும் விட அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பூரண சுயராஜ்யம் என்று- அது உண்மையில் ஒரு புரட்சியையே குறிக்கிறது- அவர்கள் தீர்மானம் நிறைவேற்றும் போது அவர்கள் அதையே மனதிற் கொண்டிருக்கிவல்லை. இளைஞர்களின் நெருக்கடியின் காரணமாகவே அத்தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதன் பின்னர் அவர்களது மனதிற்குள்ளிருந்த ஆசையாகிய டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதற்கு ஓர் அச்சுறுத்தலாக அத்தீர்மானத்தைப் பயன்படுத்த விரும்பினர். கடைசிமூன்று காங்கிரஸ் மாநாடுகளின் தீர்மானங்களை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் இதனை நீங்கள் எளிதாக முடிவு செய்யலாம். சென்னை, கல்கத்தா, மற்றும் லாகூர் மாநாடுகளையே நான் குறிப்பிடுகிறேன். கல்கத்தா மாநாட்டில், பன்னிரெண்டு மாதங்களுக்குள் டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தங்களது இலக்காக பூரண சுயராஜ்யத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அத்தகையதொரு வரத்திற்காக முழுமையான பயபக்தியுடன் 1929 டிசம்பர் 31ம் நாள் நள்ளிரவு வரை காத்திருந்தார்கள்.அதன் பின் தங்களது நேர்மையை முன்னிட்டு சுயராஜ்யத் தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். இல்லாவிட்டால் அவர்கள் அதனை எண்ணியிருக்கவே மாட்டார்கள். ஆனால் அப்போதும் கூட (சமரத்திற்கான) கதவுகள் திறந்திருப்பதை மகாத்மாஜி ஒளிவுமறைவாக வைத்திருக்கவில்லை. அதுவே அவர்களது உண்மையான மனப்பாங்கு. தங்களது இயக்கம் ஏதோவொரு சமரசத்தில் தான் போய் முடியும் என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்குத் தெரியும். நாங்கள் வெறுப்பது இந்த அரைமனதான தன்மையையே அன்றி, போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் செய்யப்படும் சமரசத்தை அல்ல.எப்படியிருந்தாலும், ஒரு புரட்சிக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகளைப் பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்முனைப்புள்ள ஆதரவை திரட்டுவதற்காக அவர்களை நாங்கள் அணுகுவோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உணர்ச்சிகரமான பசப்பு வார்த்தைகள் எதற்கும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அப்பழுக்கற்ற நேர்மையோடு அவர்கள் உங்களைக் கேட்பார்கள். எதற்காக அவர்களது தியாகங்களை கோருகின்றீர்களோ அப்புரட்சியின் மூலம் அவர்கள் அடையப் போகும் பலன் என்ன? இந்திய அரசாங்கத்தின் ஆட்சித் தலைவராக ரீடிங் பிரபு இருந்தாலும் சர்.புருஷோதம் தாஸ் தாகூர் தாஸ் இருந்தாலும் அவர்களிடத்தில் என்ன மாற்றத்தை இது ஏற்படுத்தும்? ஒருவேளை இர்வின் பிரபுவின் இடத்தில் சர்.தேஜ் பகதூர் சாப்ரூ வைக்கப் படுவாராயின் ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அதில் என்ன வேறுபாடு இருக்கும்? அவரது தேசிய உணர்வுக்கு வேண்டுகோள் விடுப்பது பயனற்றது. உங்களது காரியத்திற்காக அவரை நீங்கள் பயன்படுத்த முடியாது. அந்தப் புரட்சியானது அவருக்கானதாகவும் அவருடைய நன்மைக்கானதாகவும் இருக்கப் போகின்றது என்பதில் நீங்கள் முழுமனதோடு குறிக் கொண்டிருக்க வேண்டும், அதனை அவருக்கு உணர்த்தவும் வேண்டும், தொழிலாளர்களுக்கான தொழிலாளர் களின் புரட்சி.உங்களது இலக்குகள் பற்றிய இந்த தெளிவான கொள்கையை நீங்கள் உருவாக்கிக் கொண்டதையடுத்து, உடனடியாக அத்தகையதொரு நடவடிக்கைக்காக உங்களது சக்திகளை முழுமனதோடு ஒன்று திரட்டத் தொடங்கலாம். இப்பொழுது இரண்டு வெவ்வேறு கட்டங்களை நீங்கள் கடந்தாக வேண்டியுள்து. முதலாவது முன்னேற்பாடு, இரண்டாவது நேரடி நடவடிக்கை.தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு நேர்மையான புரட்சிகரத் தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையினையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சி வயப்படுதலை ஒதுக்கித் தள்ளுங்கள். நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய-பொருளாதார சூழ்நிலைகளின் மூலமாகவே கொண்டுவரப்படும். இந்த சூழ்நிலைகளால் கொடுக்கப்படும் எந்தவகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவதும் மிகவும் கடினமான தொரு பணி. அப்பணி, புரட்சிகர தொண்டர்களிடமிருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் ஒரு வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்பஸ்தராகவோ இருந்தால் தயவு செய்து நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற்பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறையப்பேர் இருக்கின்றனர். அவர்கள் பயனற்றவர்கள். நமக்குத் தேவையானவர்கள்- லெனினுக்கு பிடித்தமான வார்த்தையில் சொல்வதானால்- புரட்சியே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேர புரட்சியாளர்களே (Professional revolutionaries). புரட்சியைத்தவிர வேறெந்த இலட்சியமோ வாழ்நாட் பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கு முக்கியமாக உங்களுக்குத் தேவைப்படுவது ஒரு கட்சி. அக்கட்சியானது மேலே விவாதிக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த தொண்டர்களை (அதாவது முழுநேர புரட்சியாளர்களை) கொண்டதாக இருக்க வேண்டும். அத்தொண்டர்கள், தெளிவான சிந்தனைகளும் கூரிய அறிவும் முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கட்சி, உருக்குப் போன்ற கட்டுப்பாட்டை உடையதாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. சரியாகச் சொன்னால் இதற்குந் நேர் எதிரானதாக இருக்க வேண்டும். என்றாலும் வலிய முன்வந்து சிறைக்குச் செல்லுகின்ற கொள்கை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்ட எண்ணற்ற தொண்டர்கள் இதனால்வென்றெடுக்கப் படுவார்கள். அவர்கள் அதே ஆர்வத்துடன் வேலைதிட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தத் தொண்டர்களின் கூட்டமே, மெய்யான வாய்ப்பை பயன்படுத்துவதற்கான தகுதியை உடைய சிறப்பாக தலைவர்களை உருவாக்கப்போகிறது என எதிர்பார்க்கலாம்.கட்சிக்குத் தேவைப்படுகின்ற தொண்டர்களை இளைஞர் இயக்கத்தின் மூலமாக மட்டுமே கொண்டு வர முடியும். ஆகவே இளைஞர் இயக்கத்தையே நமது செயல் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம். இளைஞர் இயக்கமானது படிப்பு வட்டங்களுக்கும் அரசியல் வகுப்புகளுக்கும், துண்டு பிரசுரங்கள், சிற்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே அரசியல் தொண்டர்களை புதிதாகச் சேர்ப்பதற்கும் அவர்களின் பயிற்சிக்குமான களமாகும்.தங்களது கருத்துக்களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் குறிக்கோளுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக தம்மையே உணருபவர்களாகவும் இருக்கும் இளைஞர்களை (இளைஞர் இயக்கத்திலிருந்து) கட்சிக்குக் கொண்டு செல்லலாம். கட்சித் தொண்டர்கள் எப்போதும் இளைஞர் இயக்கத்தின் செயல்பாட்டையும் சேர்த்து வழிநடத்துபவர்களாகவும் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வெகுஜன பிரச்சாரப் பணியில் இருந்து கட்சியின் வேலை துவக்கப்பட வேண்டும். இது மிகவும் இன்றியமையாதது. கெதார் கட்சியின் முயற்சிகள்(1914-15) தோல்வியடைந்ததற்கான அடிப்படைக் காரணங்களுள் ஒன்று, பொதுமக்கள் பற்றிய அவர்களின் அறியாமையும், அக்கறையின்மையும் சில நேரங்களில் தீவிரமான எதிர்நிலையுமே ஆகும். அது தவிர, விவசாயிகள் மற்றும் தொழிலளார்களின் தீவிரமான அனுதாபத்தைப் பெறுவதற்கும் அவர்களை அணி திரட்டுவதற்கும் இது அவசியமானதாகும். கட்சியின் பெயர் அல்லது இன்னுங் சரியாகச் சொல்வதானால்...2 ஓர் கம்யூனிஸ்ட் கட்சி.இந்த அரசியல் தொண்டர்களின் கட்சியானது தளர்வற்ற கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்கு உட்பட்டு மற்றெல்லா இயக்கங்களையும் நடத்திச் செல்ல வேண்டும். அது, விவசாயிகளின் கட்சிகளையும் தொழிலாளர் கட்சிகளையும் அமைக்க வேண்டும். தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டும். காங்கிரஸையும் அதன் சகோதர அமைப்புகளையும் கைப்பற்றுவதற்கும் கூட துணிந்து முயற்சிக்க வேண்டும். அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு தேசிய அரசியல் பற்றிய விழிப்புணர்வை மட்டுமல்லாது வர்க்க அரசியல் பற்றிய விழிப்புணர்வையும் ( அதற்கு சற்றும் குறையாத அளவில்) சேர்த்து உருவாக்குவதற்கு கட்சியானது. ஒரு மாபெரும் பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும். சோசலிசக் கொள்கை பற்றிய அறிவை பொதுமக்களிடத்தில் பரப்பும் வகையில் அனைத்து பிரச்சனைகள் சம்பந்தமான புத்தகங்களும் கொண்டு வரப்பட வேண்டும். அவை எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்புதகங்களை எளிமையாகவும் தெளிந்த நடையிலும் எழுதப்பட வேண்டும்.தொழிலாளர் இயக்கத்தில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் சுதந்திரம் இல்லாமலேயே விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பொருளாதார விடுதலை பற்றிய அர்த்தமற்ற கருத்துக்களை பரப்பிக் கொண்டுள்ளனர். இவர்கள் மக்களின் உணர்ச்சிகளை கிளறிவிட்டுக் குளிர்காய்பவர்கள் அல்லது குழப்பவாதிகள். அத்தகைய கருத்துக்கள் கற்பனை செய்ய முடியாததும் பகுத்தறிவுக்குப் புறம்பானதுமாகும். மக்களின் பொருளாதார விடுதலையை நாமும் மனதிற் கொண்டுள்ளோம். அந்நோக்கத்திக்காகவே அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் இவ்வர்கங்களின் சிறிதளவு பொருளாதார கோரிக்கைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இப்போராட்டங்கள் தான் அரசியல் அதிகாரத்தை வெல்வதை நோக்கிய இறுதிப் போராட்டத்திற்காக அவர்களைப் பயிற்றுவிப்பதற்குரிய சிறந்த வழிமுறையாகும்.இவை நீங்கலாக, இராணுவத் துறை ஒன்று கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும். சில நேரங்களில் இதன் தேவையானது மிக அவசியமாக உணரப்படும். ஆனால் அந்நேரத்தில் அத்தகையதொரு அமைப்பை ஆற்றலுடன் செயல்படுவதற்குப் போதுமான வழிவகைகளுடன் உடனடியாக உங்களால் துவக்கவும் முறைப்படுத்தவும் முடியாது.ஒருவேளை கவனமான விளக்கம் தேவைப்படக்கூடிய தலைப்பாகும் இது. இத்தலைப்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற மிக நீண்டதொரு செயற்திட்டம் பற்றிய திட்டவட்டமான கொள்கைகளைக் கொண்ட புரட்சியாளன் நான், தண்டனைக் கைதிகளின் அறையில் ஏதோவொரு வகை பிற்போக்கிற்கு ஆளானதாக- அது உண்மையல்ல என்றாலும். “ஆயுதம் தாங்கியிருக்கும்’’ என் தோழர்கள், ராம் பிரசாத் பிஸ்மில்லை போல் என்னை குற்றம் சாட்டியிருக்கலாம். வெளியில் இருக்கும் போது வழக்கமாக நான் கொண்டிருந்ததைப் போன்றே, ஒருவேளை இன்னும் சொல்லப்போனால், சந்தேகத்திடமின்றி அதனினும் மேம்பட்ட நிலையி- அதே கொள்கைகள், அதே உறுதியான பற்று, அதே விருப்பம் மற்றும் அதே உணர்வை நான் இப்போதும் கொண்டுள்ளேன். இதனால் எனது வார்த்தைகளை வாசிக்கும் போது கவனமுடன் இருக்குமாறு எனது வாசகர்களை எச்சரிக்கிறேன். அவர்கள் எனது எழுத்துகளுக்குப் புறம்பாக எதையும் ஊகித்தறிய முயற்சி செய்யக்கூடாது. எனது சக்தி அனைத்தையும் ஒன்றுகூட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. அந்த முறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகள் அசோசியேசனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதனை எளிதாக தீர்மானிக்கலாம். எங்களது செயல்பாடுகள் அனைத்தும் மாபெரும்(விடுதலை) இயக்கத்துடன், அதன் இராணுவப் படைப்பிரிவாக எங்களை நாங்களே ஒன்றிணைத்துக் கொள்ளும் இலக்கை நோக்கியதாகவே இருந்தன. எவரேனும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளட்டும். வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் பயனற்றவை என்று நான் சொல்லவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால் இதற்கு நேர்மாறாகவே நான் சொல்கிறேன். ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், வெறுமனே வெடிகுண்டுகளை மட்டும் வீசியெறிவதால் பயன் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சில நேரங்களில் அது கேடுவிளைவிப்பதாகவும் இருந்து விடுகிறத.கட்சியின் இராணுவத் துறையானது, எந்தவொரு அவசர காலத் தேவைக்கும் கிடைக்கக்கூடிய வகையில் அனைத்து போர்த் தளவாடங்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது கட்சியின் அரசியல் வேலைக்கு பின்பலமாக இருக்கவேண்டும். அது தன்னிச்சையாக செயல்பட இயலாது, செயல்படவும் கூடாது.மேலே சுட்டிக் காட்டப்பட்டதன் திசை வழியில் கட்சி, அதன் செயல்பாட்டைத் தொடர வேண்டும். பத்திரிகைகள் மூலமாகவும் மாநாடுகள் மூலமாகவும் தங்களது தொண்டர்களை எல்லா விவாதப் பொருள்பற்றியும் பயிற்றுவித்துக் கொண்டும் தப்பெண்ணங்களை அகற்றிக் கொண்டும் அவர்கள் செல்ல வேண்டும். இத்திசைவழியில் நீங்கள் செயல்பாட்டைத் துவக்கினால் மிகவும் பொறுமை காக்க வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் தேவைப்படலாம். ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாதர வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும்வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமான மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.

புரட்சி நீடூழி வாழ்க!

-பகத்சிங்

2 பிப்ரவரி 1931.

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க மும்பையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், முஸ்லீம் மதவெறிக்கு எதிராக மிகவும் கொடூரமாக நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்கள் தொடர்பான ஒரு சில வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில் ஒரு வழக்குதான் பில்கிஸ் பானோ என்பவர் கூட்டாக வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதும், அவர்தம் குடும்பத்தார் அவர் கண்முன்னாலேயே படுகொலை செய்யப்பட்ட வழக்குமாகும். அந்த வழக்கில்தான் தற்சமயம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பன்னிரண்டு பேர்களில் பதினோரு பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், இம்மாபாதகக் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்புரைத்திருக்கிறது. குஜராத்தில் 2002இல் நடைபெற்ற மனிதாபிமானமற்ற மாபாதக அட்டூழியங்கள் பலவற்றில் ஒன்றுதான், கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, மாபாதகர்களால் கூட்டாக வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதும், அவர் குழந்தை அவர் கண்முன்னாலேயே தரையில் நசுக்கிக் கொல்லப்பட்டதுமாகும். அவர் குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர்கள், (இவர்களில் 6 பேர் பெண்கள், நான்கு பேர் குழந்தைகள்) கலவரத்திற்குட்பட்ட கிராமத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, படுகொலை செய்யப்பட்டார்கள். அசாத்திய மனவலிமையும், உறுதியும் காட்டிய பில்கிஸ் பானோ, கயவர்களுடன் இணைந்து நின்று, குஜராத் மாநில காவல்துறையானது சாட்சிகளைக் களைத்திடவும், அச்சறுத்தவும் உடந்தையாக இருந்து செயல்படுகிறது என்றும் நீதித்துறை முன் முறையிட்டார்.இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அவரது வழக்கை குஜராத்திலிருந்து மகாராஷ்ட்ரத்திற்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கில் பில்கிஸ் பானோவுக்கு எதிராக குஜராத் போலீசால் விடுக்கப்பட்ட அனைத்து அச்சுறுத்தல்களையும் துணிவுடன் எதிர்கொண்டு, விடாப்பிடியாக நின்று, வழக்கை நடத்திய பில்கிஸ் பானோ அனைத்துப் பாராட்டுக்களுக்கும், ஆதரவுக்கும் உரியவராவார்.இவ்வழக்கில் சம்பவம் நடந்து மிகவும் கொடுமையான முறையிலும் கடும் மனவேதனையுடனும் ஆறு ஆண்டுகள் கழிந்துபின்பு தீர்ப்பு வந்திருந்தாலும், கடைசியாக நீதி எப்படியோ வழங்கப்பட்டுவிட்டது. இந்தப் பின்னணியில், பல விஷயங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப் படுகொலை சம்பந்தமாக பலநூறு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து வருகின்றன. நம் நாட்டில் நீதி வழங்கும் முறையில் ஏற்படும் காலதாமதம், குறிப்பாக இதுபோன்ற மதக்கலவரங்கள் தொடர்பான வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து அனைவரும் அறிந்ததே. எனவே இனியாவது காலதாமதம் ஏதுமின்றி இவ்வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு, அட்டூழியம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதுதான் நவீன நாகரிக சமுதாயத்தின் உண்மையான அடிப்படை நெறிமுறையாகும். மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது அப்போதுதான் நம்பிக்கை ஏற்படும். நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்தால், அது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்கு இருந்து வரும் நம்பிக்கையையும் குறைத்திட வழிவகுத்திடும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இந்த வழக்கின் தீர்ப்பானது, முஸ்லீம் மக்களுக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளில், அம்மாநிலத்திலேயே நீதி கிடைத்திடாது என்பதை, மீண்டும் ஒருமுறை மெய்ப்பித் திருக்கிறது. குஜராத் மாநில அரசாங்கம் ஏற்கனவே, சாட்சியம் இல்லையென்று கூறி 1600க்கும் மேற்பட்ட வழக்குகளை மூடிவிட்டது. 2004இல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாகத்தான், இந்த வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்றம், மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்காக அனுப்பிய ஆறு குறிப்பிட்ட வழக்குகளில், பில்கிஸ் பானோ வழக்கும் ஒன்று. மற்றொன்று, பெஸ்ட் பேக்கரி படுகொலை வழக்காகும். நரோடா படாயா வழக்கு போன்ற மற்ற படுகொலை வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது எப்போது என்று இன்னும் தெரியாமல், வழக்குகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஈசான் ஜாஃப்ரியினுடைய மனைவியும் அவர் தம் குடும்பத்தாரும் நீதி கோரி, நீதிமன்றத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கின்றனர். ஈசான் ஜாஃப்ரி அவர்களின் உடல், மதவெறியர்களால் கண்டதுண்டமாக வெட்டித் தீயில் போட்டுக் கொளுத்தப்பட்டதை, வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்க. இந்த வழக்குகளில் தீர்ப்பு கிடைப்பது இருக்கட்டும், இன்னும் ஏராளமான வழக்குகளில் விசாரணையே தொடங்கப்படவில்லை. நீதிமன்றங்களில் விசாரணை எதுவும் தொடங்கப்படாமலேயே நிலுவையில் உள்ள வழக்குகள்தான் அதிகம். அதே சமயத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிணை மறுக்கப்பட்டு, இன்னமும் காவலடைப்பில் உழன்று வரும் அவலம் தொடர்கிறது. இவர்கள் மீது ‘பொடா’ சட்டமும் பாய்ந்திருக்கிறது. இவர்கள் மீது ‘பொடா’ சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டிய தேவையில்லை என்று ‘பொடா’ சட்டம் குறித்த மத்திய மறு ஆய்வுக்குழு ஆய்வு செய்து, தீர்ப்பு வழங்கியபின்பும், இவர்கள் மீது சுமத்தப்பட்ட ‘பொடா’ பிரிவுகளின்கீழான குற்றங்கள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, எதிரிகளைப் பிணையில் விடுவது தொடர்பாக நீதிமன்றங்கள் இன்னமும் தீர்மானிக்க இயலாமல் இருந்து கொண்டிருக்கின்றன. இறுதியாக, 2007 பிப்ரவரியில்தான், உச்சநீதிமன்றமானது இவ்வழக்குகளில் பிணை விண்ணப்பங்கள் தாக்கல் செய்திடலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆயினும், இன்றைய தேதி வரையில், இவற்றின் மீது எவ்வித பிணை ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.இவை விரைவுபடுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ள அதே சமயத்தில், நீதித்துறைக்கு முன் உள்ள உண்மையான சவால் என்னவெனில் - உண்மையில் இந்திய ஜனநாயக அமைப்பு முறைக்கு முன் உள்ள சவால் என்னவெனில் - நீதித்துறையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் நீதி வழங்கும் முறை (justice delivery system) குறித்ததாகும். குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை சம்பந்தமாக இன்னும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து நீதித்துறை செயல்படும் விதத்திலேயே இது முழுமையாக அடங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க, மத்திய குற்றப் புலனாய்வுத்துறை இவ்வழக்குகளில் புலனாய்வை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குஜராத் மாநில அரசாங்கமும், குஜராத் காவல்துறையும் இந்திய ஜனநாயகத்தையே எள்ளிநகையாடக்கூடிய வகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பான வழக்கில் நடந்து வருகின்றன. குஜராத் காவல்துறை படுகொலையில் ஈடுபட்ட கயவர்களுக்கு உடந்தையாக இருந்து வருவது பலமுறை மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், பாஜக-வானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ‘நாங்கள் குஜராத்’தாக மாற்றப் போகிறோம் என்கிற பழைய பல்லவியை மீண்டும் பாடத் தொடங்கியிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் எதிர்கால பிரதமரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதனைக் கூறி வருகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் டில்லியிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன், குஜராத் மதவெறிப் படுகொலைகளை மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டு, தாங்கள்தான் ‘இந்து தர்மத்தை’ உயர்த்திப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் மதவெறித் தேரை நாடு முழுதும் மீண்டும் ஒருமுறை இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. தங்களுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக வரவிருக்கும் காலங்களில் மதவெறித் தீயை விசிறிவிட முனையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மதவெறியர்களின் நோக்கத்தை, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சவாலை, நீதித்துறையின் விரைவான செயல்பாடுகளுடன் இணைந்து நின்று முறியடித்திட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்-
தமிழில்: ச. வீரமணி

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக
குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க மும்பையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், முஸ்லீம் மதவெறிக்கு எதிராக மிகவும் கொடூரமாக நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்கள் தொடர்பான ஒரு சில வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில் ஒரு வழக்குதான் பில்கிஸ் பானோ என்பவர் கூட்டாக வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதும், அவர்தம் குடும்பத்தார் அவர் கண்முன்னாலேயே படுகொலை செய்யப்பட்ட வழக்குமாகும். அந்த வழக்கில்தான் தற்சமயம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பன்னிரண்டு பேர்களில் பதினோரு பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், இம்மாபாதகக் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்புரைத்திருக்கிறது. குஜராத்தில் 2002இல் நடைபெற்ற மனிதாபிமானமற்ற மாபாதக அட்டூழியங்கள் பலவற்றில் ஒன்றுதான், கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, மாபாதகர்களால் கூட்டாக வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதும், அவர் குழந்தை அவர் கண்முன்னாலேயே தரையில் நசுக்கிக் கொல்லப்பட்டதுமாகும். அவர் குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர்கள், (இவர்களில் 6 பேர் பெண்கள், நான்கு பேர் குழந்தைகள்) கலவரத்திற்குட்பட்ட கிராமத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, படுகொலை செய்யப்பட்டார்கள். அசாத்திய மனவலிமையும், உறுதியும் காட்டிய பில்கிஸ் பானோ, கயவர்களுடன் இணைந்து நின்று, குஜராத் மாநில காவல்துறையானது சாட்சிகளைக் களைத்திடவும், அச்சறுத்தவும் உடந்தையாக இருந்து செயல்படுகிறது என்றும் நீதித்துறை முன் முறையிட்டார்.இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அவரது வழக்கை குஜராத்திலிருந்து மகாராஷ்ட்ரத்திற்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கில் பில்கிஸ் பானோவுக்கு எதிராக குஜராத் போலீசால் விடுக்கப்பட்ட அனைத்து அச்சுறுத்தல்களையும் துணிவுடன் எதிர்கொண்டு, விடாப்பிடியாக நின்று, வழக்கை நடத்திய பில்கிஸ் பானோ அனைத்துப் பாராட்டுக்களுக்கும், ஆதரவுக்கும் உரியவராவார்.இவ்வழக்கில் சம்பவம் நடந்து மிகவும் கொடுமையான முறையிலும் கடும் மனவேதனையுடனும் ஆறு ஆண்டுகள் கழிந்துபின்பு தீர்ப்பு வந்திருந்தாலும், கடைசியாக நீதி எப்படியோ வழங்கப்பட்டுவிட்டது. இந்தப் பின்னணியில், பல விஷயங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப் படுகொலை சம்பந்தமாக பலநூறு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து வருகின்றன. நம் நாட்டில் நீதி வழங்கும் முறையில் ஏற்படும் காலதாமதம், குறிப்பாக இதுபோன்ற மதக்கலவரங்கள் தொடர்பான வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து அனைவரும் அறிந்ததே. எனவே இனியாவது காலதாமதம் ஏதுமின்றி இவ்வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு, அட்டூழியம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதுதான் நவீன நாகரிக சமுதாயத்தின் உண்மையான அடிப்படை நெறிமுறையாகும். மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது அப்போதுதான் நம்பிக்கை ஏற்படும். நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்தால், அது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்கு இருந்து வரும் நம்பிக்கையையும் குறைத்திட வழிவகுத்திடும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இந்த வழக்கின் தீர்ப்பானது, முஸ்லீம் மக்களுக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளில், அம்மாநிலத்திலேயே நீதி கிடைத்திடாது என்பதை, மீண்டும் ஒருமுறை மெய்ப்பித் திருக்கிறது. குஜராத் மாநில அரசாங்கம் ஏற்கனவே, சாட்சியம் இல்லையென்று கூறி 1600க்கும் மேற்பட்ட வழக்குகளை மூடிவிட்டது. 2004இல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாகத்தான், இந்த வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்றம், மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்காக அனுப்பிய ஆறு குறிப்பிட்ட வழக்குகளில், பில்கிஸ் பானோ வழக்கும் ஒன்று. மற்றொன்று, பெஸ்ட் பேக்கரி படுகொலை வழக்காகும். நரோடா படாயா வழக்கு போன்ற மற்ற படுகொலை வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது எப்போது என்று இன்னும் தெரியாமல், வழக்குகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஈசான் ஜாஃப்ரியினுடைய மனைவியும் அவர் தம் குடும்பத்தாரும் நீதி கோரி, நீதிமன்றத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கின்றனர். ஈசான் ஜாஃப்ரி அவர்களின் உடல், மதவெறியர்களால் கண்டதுண்டமாக வெட்டித் தீயில் போட்டுக் கொளுத்தப்பட்டதை, வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்க. இந்த வழக்குகளில் தீர்ப்பு கிடைப்பது இருக்கட்டும், இன்னும் ஏராளமான வழக்குகளில் விசாரணையே தொடங்கப்படவில்லை. நீதிமன்றங்களில் விசாரணை எதுவும் தொடங்கப்படாமலேயே நிலுவையில் உள்ள வழக்குகள்தான் அதிகம். அதே சமயத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிணை மறுக்கப்பட்டு, இன்னமும் காவலடைப்பில் உழன்று வரும் அவலம் தொடர்கிறது. இவர்கள் மீது ‘பொடா’ சட்டமும் பாய்ந்திருக்கிறது. இவர்கள் மீது ‘பொடா’ சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டிய தேவையில்லை என்று ‘பொடா’ சட்டம் குறித்த மத்திய மறு ஆய்வுக்குழு ஆய்வு செய்து, தீர்ப்பு வழங்கியபின்பும், இவர்கள் மீது சுமத்தப்பட்ட ‘பொடா’ பிரிவுகளின்கீழான குற்றங்கள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, எதிரிகளைப் பிணையில் விடுவது தொடர்பாக நீதிமன்றங்கள் இன்னமும் தீர்மானிக்க இயலாமல் இருந்து கொண்டிருக்கின்றன. இறுதியாக, 2007 பிப்ரவரியில்தான், உச்சநீதிமன்றமானது இவ்வழக்குகளில் பிணை விண்ணப்பங்கள் தாக்கல் செய்திடலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆயினும், இன்றைய தேதி வரையில், இவற்றின் மீது எவ்வித பிணை ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.இவை விரைவுபடுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ள அதே சமயத்தில், நீதித்துறைக்கு முன் உள்ள உண்மையான சவால் என்னவெனில் - உண்மையில் இந்திய ஜனநாயக அமைப்பு முறைக்கு முன் உள்ள சவால் என்னவெனில் - நீதித்துறையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் நீதி வழங்கும் முறை (தரளவiஉந னநடiஎநசல ளலளவநஅ) குறித்ததாகும். குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை சம்பந்தமாக இன்னும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து நீதித்துறை செயல்படும் விதத்திலேயே இது முழுமையாக அடங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க, மத்திய குற்றப் புலனாய்வுத்துறை இவ்வழக்குகளில் புலனாய்வை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குஜராத் மாநில அரசாங்கமும், குஜராத் காவல்துறையும் இந்திய ஜனநாயகத்தையே எள்ளிநகையாடக்கூடிய வகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பான வழக்கில் நடந்து வருகின்றன. குஜராத் காவல்துறை படுகொலையில் ஈடுபட்ட கயவர்களுக்கு உடந்தையாக இருந்து வருவது பலமுறை மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், பாஜக-வானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ‘நாங்கள் குஜராத்’தாக மாற்றப் போகிறோம் என்கிற பழைய பல்லவியை மீண்டும் பாடத் தொடங்கியிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் எதிர்கால பிரதமரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதனைக் கூறி வருகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் டில்லியிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன், குஜராத் மதவெறிப் படுகொலைகளை மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டு, தாங்கள்தான் ‘இந்து தர்மத்தை’ உயர்த்திப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் மதவெறித் தேரை நாடு முழுதும் மீண்டும் ஒருமுறை இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. தங்களுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக வரவிருக்கும் காலங்களில் மதவெறித் தீயை விசிறிவிட முனையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மதவெறியர்களின் நோக்கத்தை, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சவாலை, நீதித்துறையின் விரைவான செயல்பாடுகளுடன் இணைந்து நின்று முறியடித்திட வேண்டும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்-
தமிழில்: ச. வீரமணி

Sunday, January 20, 2008

மாக்சிம் கார்க்கி: கதிரவனைக் கைகள் மறைத்திடுமோ?-வீ.சிவகாமியின் செல்வி

மாக்சிம் கார்க்கி: கதிரவனைக் கைகள் மறைத்திடுமோ?
-வீ.சிவகாமியின் செல்வி

மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல, உண்மை. இந்தியாவில் முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ், பிரேம்சந்த், கிருஷ்ண சந்தர் போன்றவர்களும், அமெரிக்காவில் ஹெமிங்வே, ஸ்டீன்பேக் போன்றோரும் கார்க்கியினால் உத்வேகம் அடைந்தவர்களாவார்கள். இன்னும் பலர் அவர் பாணியைக் கடைப்பிடித்தாலும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. கார்க்கியைப் பொறுத்தவரை எழுத்தாளர்களும் உழைப்பாளர்கள்தான், ஆனால் மக்களைப் பதப்படுத்தும் பணியைச் செய்யும் உழைப்பாளர்கள் (creative labour) எழுத்தாளர்கள் போரை வெறுக்க வேண்டும், சமாதானத்தை விரும்ப வேண்டும், ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கு எதிராகத் தங்கள் படைப்புக்களைப் படைக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்கு உன்னத இடத்தை அளித்திருப்பதை அவரது எழுத்துக்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இலக்கியம் என்றால், அது மனிதன் தன்னைப் பற்றிப் புரிந்து கொள்ள, தன்மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, உண்மையைத் தேடும் முயற்சியை வளர்த்துக் கொள்வதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஒருவனிடம் இருக்கும் இழிகுணங்களைப் போராடிப் போக்கிக் கொள்வதற்கும், நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதற்கும் உதவிட வேண்டும். கார்க்கியின் படைப்புக்களை ஒருவர் பரிசீலிக்கும்போது மனிதனது உள்மன அகவளர்ச்சிக்கு உற்ற துணையாயிருந்ததை உணர்ந்து கொள்ள முடியும்.

கார்க்கி, தன்னுடைய காலத்தில் நடைபெற்ற புரட்சிகரப் போராட்டங்களின் அனுபவங்களுக்கு உருவம் கொடுத்து. உன்னத மனிதர்களை உருவாக்கினார். சாமானியமான ஒருவன் கார்க்கியின் படைப்புக்களைப் படிக்கத் தொடங்கினான் என்றால், மிக விரைவில் உருக்கு போன்ற லட்சிய மனிதனாக அவன் உருவாவான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

கார்க்கி ஒரு மாபெரும் கலைஞன். சோசலிசம், மனிதசமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்திட அல்லும் பகலும் அயராது போராடிய கலைஞன்.இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? கார்க்கியின் வார்த்தைகளில் சொல்வதென்றால். இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள உறவு பரஸ்பரம் உதவி செய்துகொள்ளக் கூடியவைகளாகும். (The relations between literature and society are reciprocal). இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மட்டுமல்ல. அது சமூக விளைவுகளின் காரணியுமாகும். (Literature is not only the effect of social causes; it is also the cause of social effect.)

கார்க்கிக்குக் முன்பும் பலர், உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்பவர்கள் உலகில் தோன்றியுள்ள அனைத்து இலக்கியங்களிலும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்தான். ஆனால் மற்றவர்கள் எல்லாம் உழைப்பாளியை சமூகத்தினால் ஒடுக்கப்பட்டவனாக, இழிவாக நடத்தப்படுபவனாகத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் கார்க்கியும் கார்க்கிக்குப் பிறகு கார்க்கியின் அடிச்சுவட்டில் எழுதியவர்களும்தான் உழைக்கும் வர்க்கத்தை வரலாற்றை உருவாக்குபவர்களாக, சமூக அநீதிக்கு எதிராக வீரத்துடன் போரிடுபவர்களாகப் படைத்திட்டார்கள். மனிதகுலத்தின் மீதான பிரியம் என்பது கார்க்கியைப் பொறுத்தவரை, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களைப் பார்த்து, பரிதாபம் கொண்டு, கண்ணீர் சிந்துவதோடு நின்றுவிடவில்லை. அதேபோன்று வசதி படைத்தோர், இல்லாதோர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்கிற முறையிலும் இல்லை. கார்க்கியின் கருத்துப்படி உண்மையான மனிதாபிமானம் என்பது, துன்பத்தில் வாடும் மக்களைப் பார்த்து கண்ணீர் சிந்துவதல்ல, மாறாக அவர்களின் துன்பத்தைத் துடைத்திட, தங்கள் ரத்தத்தையும் சிந்தத் தயாராயிருப்பதேயாகும். இத்தகைய மனிதாபிமானத்தை அவர் ‘சோசலிச யதார்த்தவாதம்’ என்று அழைத்தார். சோசலிச யதார்த்தவாதம் என்பது மார்க்சிசத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான சோவியத் படைப்புக்கள் சோசலிய யதார்த்தவாதக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டன. கார்க்கி, 1934இல் சோசலிச யதார்த்தவாதத்திற்கு என்று ஒரு பள்ளியை நிறுவினார். இப்பள்ளியை அவர் உருவாக்குவதற்கும் முன்பே இந்தக் கலைநுட்பத்தை அவர், தன்னுடைய தாய் நாவலில் பயன்படுத்தினார்.கார்க்கியின் சம கால எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ், விளாடிமீர் கொரலன்கோ போன்றோரும் சமூகத்தைப் பற்றி எழுதியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் கார்க்கிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. தாஸ்தாவ்ஸ்கி என்ற எழுத்தாளர், புரட்சிகரப் போராட்டமானது மக்கள் மத்தியில் துவேஷ உணர்ச்சியை வளர்த்து, அவர்களை காட்டு மிராண்டிகளாக மாற்றிவிடுமோ என அஞ்சினார். மாறாக கார்க்கி, புரட்சிகரப் போராட்டமானது விலங்கு நிலையில் உள்ள மனிதனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, உயர்வடையச் செய்கிறது என்றார். கார்க்கியின் படைப்புக்களில் மிக முக்கியமான தாய் நாவல் இருநூறு தடவைகளுக்கும் மேல் மறுபதிப்பு அச்சாகியிருக்கிறது, உலகின் பல மொழிகளிலும் சுமார் 70 லட்சம் பிரதிகள் வெளியாகியிருக்கின்றன. நாவல் ஒரு குறிக்கோளுடன் எழுதப்பட்டிருப்பது என்பதும், சோவியத் புரட்சியின் வளர்ச்சியைப் படிப்படியாக நாவல் சித்தரிக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். வாளின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பதை மெய்ப்பித்தவர் கார்க்கி.

சோவியத் யூனியன் உருவான பிறகு, சோவியத் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதுபோல் உலக இலக்கியங்களும் தங்கள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் விரும்பினார்கள். எனவே தங்கள் படைப்புக்களை வெளிநாட்டு மொழிகளில் ஏராளமாக மொழியாக்கம் செய்தார்கள், அதேபோன்று வெளிநாட்டு இலக்கியங்களைத் தங்கள் நாட்டின் மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். கார்க்கியின் பெயரில் இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு இன்ஸ்டிட்யூட்டும் நிறுவப்பட்டது. ரஷ்ய மக்களின் ரத்தத்துடனும் சதையுடனும் கார்க்கியின் பெயர் இரண்டறக் கலந்து விட்டது. அவர் பிறந்த இடமான நிஷ்னி நோவோகிராத் என்னுமிடத்தை கார்க்கி என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்கள். கார்க்கியின் நூல்களை ஆய்வு செய்வதற்காக சோவியத் அரசாங்கம் ஒரு ஆராய்ச்சி பல்கலைக்கழகமே நிறுவியிருந்தது. அவர்கள் பல நூல்கள் அச்சிட்டு உலகம் முழுதும் இலவசமாகவே அனுப்பி வந்தார்கள். அவர்கள் நோக்கம் அவற்றின் மூலம் பணம் பண்ணுவது அல்ல. மாறாக சோசலிச சிந்தனைகளைப் பரப்புவதுதான். ஆனால், சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின், எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது. சோவியத் யூனியனில் செயல்பட்டு வந்த அனைத்து இலக்கியப் பள்ளிகளும், பல்கலைக் கழகங்களும் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

கட்டுரையாளர் தன் ஆய்வுக்கட்டுரைக்காக, இணைய தளம் மூலம் முயற்சித்தபோது, அவை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கார்க்கியின் பெயரிடப்பட்ட நகரம் கூட இப்போது பழைய பெயரான நிஷ்னி நோவோகிராட் என்று மாற்றப்பட்டிருக்கிறது.இணைய தளங்களின் விஷமப் பிரச்சாரம்இணைய தளத்தில் கார்க்கி குறித்தும், கார்க்கியின் படைப்புக்கள் குறித்தும் ஏராளமான விவரங்கள் கிடக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அவரைப்பற்றி விஷமப்பிரச்சாரம் செய்பவைகளாகவே இருக்கின்றன. இணைய தளத்தில் காணப்படும் கார்க்கி தொடர்பான அவதூறுகளில் முக்கியமான ஒன்றை நாம் தெரிந்து கொள்வது நல்லது.

புரட்சி குறித்து கார்க்கிக்கு திருப்தி ஏற்படாமல் இருந்ததாம், எனவே அவர் ஸ்டாலினால் கொல்லப்பட்டு விட்டாராம். இணைய தளங்கள் ஏராளமாக நமக்குத் தரும் தகவல்கள் இவை. ஆனால், இவை அனைத்தும் கடைந்தெடுத்த பொய் மூட்டைகள் என்பதை கட்டுரையாளர் பல நூல்களை ஆய்வு செய்தபோது கண்டறிந்தார்.கார்க்கி 1934இல் சோசலிச யதார்த்தவாதத்திற்கான பள்ளியைத் தொடங்கினார் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். சோசலிச நாடுகளின் நலன் குறித்து அவர் ஆர்வம் காட்டாதிருந்தாரானால், 1917 புரட்சி குறித்து அவர் அதிருப்தியடைந்திருந்தாரானால், அவர் இந்தப் பள்ளியைத் தொடங்கியிருக்கவே மாட்டார். புரட்சி நடைபெற்ற காலத்தில், கார்க்கி தன் படைப்புகளின் மூலமாக ஏராளமாக சம்பாதித்தார். தன் சம்பாத்தியம் அனைத்தையும் அவர் புரட்சியில் ஈடுபட்டிருந்த போல்ஷ்விக்குகளுக்குக் கொடுத்து வந்தார். புரட்சி வெற்றி பெற்ற பிறகு, போல்ஷ்விக் தலைவர்கள் கார்க்கி மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார்கள். உடல் நலிவுற்றிருந்த கார்க்கியைத் தங்கள் கண்ணின் மணிபோல் காத்தார்கள். தோழர்கள் லெனினும் ஸ்டாலினும் கார்க்கியிடம் அபரிமிதமான அன்பு செலுத்தினார்கள். அவர்கள் கார்க்கியை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இவற்றை மெய்ப்பிக்கக் கூடிய வகையில் ஏராளமான புகைப்படங்களும் எழுத்துச்சான்றுகளும் உள்ளன. ஆனாலும் ஏகாதிபத்திய உலகம், கார்க்கியை ஸ்டாலின் கொன்றுவிட்டார் என்று இணையம் மூலம் இன்றைக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

அதேபோல் இன்னொரு சங்கடமான விஷயம், இன்றைய எழுத்தாளர்களில் பலர் கார்க்கியின் எழுத்துக்களிலிருந்து கற்றுக்கொண்டவர்கள். ஆனால் இவர்கள் இதனை இப்போது ஒப்புக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல், தானே சொந்தமாக உருவானதுபோல் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘ஞாயிற்றை கை மறைப்பாரில்’ என்று ஒரு சங்ககாலச் செய்யுள் கூறுகிறது. கதிரவனை ஒரு கையால் மறைத்திட முடியுமா என்பது அதன் பொருள். அதேபோல் இத்தகைய இழிவான பிரச்சாரங்கள் மூலமோ, கார்க்கியை இருட்டடிப்பு செய்வதன் மூலமோ உலக இலக்கியத்தில் அவருக்குள்ள பங்களிப்பினை எவராலும் மறைத்திட முடியாது. ஒரு நல்ல எழுத்தாளரும் அவரது எழுத்துக்களும் அவர்கள் காலத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை, உன்னதமான இலக்கியங்கள் என்றால் அது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும். படிக்கப் படிக்கத் தெவிட்டாது இன்பம் கொடுக்கும். ‘தாய் நாவலில் சோசலிச யதார்த்தவாதம்’ என்னும் என் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக தாய் நாவலைப் பலமுறை படித்தேன். ஒவ்வொருமுறை படிக்கும்போதும் அதன் இன்பம் கூடியதேயொழிய, குறையவில்லை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது. கலை என்பது மக்களை ஒன்றுபடுத்தும் சாதனம் என்பதை ஒருவர் ஒப்புக்கொண்டுவிட்டாரானால், பின் அவர் கார்க்கியின் படைப்புக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது...
---

கடவுளின் இல்லம் -பிரேம்சந்த்: தமிழில்: ச. வீரமணி

மூன்று நாட்களாக சுகியா சோறோ, தண்ணீரோ எதையும் தொடவில்லை. கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவளுடைய மகன் அவளுக்கு முன்னால் பிரக்ஞையற்றுக் கிடந்தான். கடந்த மூன்று நாட்களாகவே அவன் தன் கண்களையே திறக்க வில்லை. சுகியா சிறிது நேரம் அவனைத் தூக்கி வைத்திருந்தாள். பின்னர் மீண்டும் படுக்கையில் கிடத்தினாள். திடீரென்று அவனுக்கு என்னவாயிற்று? யாராலும் சொல்ல முடியவில்லை. சுகியா ஏற்கனவே தன் இரு குழந்தைகளைப் பறி கொடுத்தவள். அவள் கணவன் அதற்கு முன்னாலேயே போய் விட்டான். வாழ்க்கையில் அவளுக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, இந்தக் குழந்தைதான். அவனை ஒரு நிமிடம் கூட அவள் பிரிந்திருக்க மாட்டாள். அவள் பிழைப்புக்காக புல் அறுக்கச் செல்லும் போதும், அவற்றை விற்கச் செல்லும்போதும் அவன் கூடவே இருப்பான்.

அவள், அவனுக்கு ஒரு பொம்மை அரிவாள் வாங்கிக் கொடுத்திருந்தாள். அவன், ‘‘என்கிட்டே ஒரு நிஜ அரிவா கொடு’ம்மா. நானும் உன்னோடு நிறைய புல் அறுப்பேன். அப்புறம் நீ ஒன்னும் வேலை செய்ய வேணாம். நானே மார்க்கெட்டுக்குப் போயி, வித்திட்டு வருவேன்’’ என்று சொல்வான்.
‘‘எனக்கு என்ன வாங்கிட்டு வருவே, மகனே’’ என்று அவள் கேட்பாள். ‘‘உங்களுக்கு சிவப்பு புடவை வாங்கிட்டு வருவேன்’’ என்று ஜைவான் கூறுவான். கள்ளங்கபடமற்ற அவனின் மழலைப் பேச்சும் மற்றும் அவனது நடவடிக்கைகளும் ஒன்றன்பின் ஒன்றாக, எதிரே உட்கார்ந்திருக்கும் அவள் கண்முன்னே வந்து கொண்டிருந்தன.

இரவு நீண்டு கொண்டே போனது. சுகியா வருத்தத்தில் மூழ்கிப் போனாள். எந்தக் கடவுள் கண் திறந்து என் கஷ்டங்களைப் பார்ப்பார்? என் குழந்தைக்காக எந்த அம்மனிடம் வேண்டுவது?

இதே சிந்தனைகளுடன் அவள் சற்றே கண்ணயர்ந்தாள். திடீரென்று அவள் கணவன் அவள் பக்கத்தில் வந்து நிற்பதைப் பார்த்தாள். அவன் தன் கையை குழந்தையின் நெற்றியில் வைத்துப் பார்த்துவிட்டு, சொன்னான்:

‘‘அழாதே சுகியா, நம் குழந்தைக்கு சீக்கிரம் சரியாகிவிடும். நாளைக்கு, தாகூர்ஜி காலடியில் கொண்டுபோய் குழந்தையைக் கிடத்தி, வேண்டிக்கொள். அவர்தான் நம்மைக் காப்பவர்.’’

உடனே சுகியா எழுந்துவிட்டாள். கனவில் வந்து கணவன் சொன்னது அவளை மலர்ச்சிபெறச் செய்து விட்டது. ‘‘அவர் இன்னும் என்னைப் பத்தியே நினைச்சிக்கிட்டிருக்காரு’’ என்று சுகியா முணுமுணுத்துக் கொண்டாள்.

இவ்வாறான சிந்தனைகள் அவளை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தின. அவள் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துச் சொன்னாள்:
‘‘ஓ, கடவுளே! இவனை மீண்டும் நல்லபடியா செஞ்சுடு. நான் உன்னை முழுசா கெஞ்சிக் கேட்டுக்கிறேன். பாழாய்ப் போன இந்த விதவை மீது இரக்கம் காட்டு.’’

கொஞ்ச நேரம் கழித்து, ஜைவான் தன் கண்களைத் திறந்து குடிக்கத் தண்ணீர் கேட்டான். தாய் அவனுக்குக் கொஞ்சம் கொடுத்தாள். தண்ணீரைக் குடித்தபின் ஜைவான் கேட்டான்

‘‘இன்னும் ராத்திரியாகத்தான் இருக்கா’ம்மா?’’

‘‘சீக்கிரம் விடிஞ்சிடும், மகனே’’ என்று கூறிய சுகியா, பின்னர், ‘‘உனக்கு இப்போ எப்படி இருக்கு?’’ எனக் கேட்டாள்.

‘‘பரவாயில்லை’ம்மா. நான் சீக்கிரம் நல்லாயிடுவேன்’’ என்று ஜைவான் கூறினான்.

‘‘கடவுள்தான் உன்ன நல்லாக்கி இருக்கார், மகனே’’ என்று கூறிய சுகியா,

‘‘உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா?’’ என்று கேட்டாள்.

‘‘எனக்கு கொஞ்சம் சர்க்கரை கொடு’ம்மா’’

‘‘சர்க்கரை வேணாம் மகனே, ஜுரத்தில் கிடந்திருக்கிற உனக்கு ஒத்துக்காது. கொஞ்சம் கஞ்சி வச்சுத் தர்ரேன்’’ என்று சுகியா சொன்னாள்.
‘கொஞ்சமாவது சர்க்கரை கொடு’’ ஜைவான் வற்புறுத்தினான்.

‘‘நான் உன்னக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், வேணாம் கண்ணா!’’
ஆயினும் ஜைவான் கேட்டதை அவளால் தட்ட முடியவில்லை. கூடையைத் திறந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்துக் கொடுத்தாள். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்து யாரோ கூப்பிட்ட குரல் கேட்டு அவள் வெளியே வந்தாள். ஜைவான் கூடையிலிருந்து மேலும் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டான்.

ஜைவானுக்கு அன்று பகல் முழுதும் நன்றாக இருந்தது.கொஞ்சம் சோறு கூட சாப்பிட்டான். வீட்டின் கதவருகில் உட்காரந்து அவன் நண்பர்கள் விளையாடுவதைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான். குழந்தைக்கு நன்றாகிவிட்டது என்றே சுகியா கருதினாள். கொஞ்சம் காசு புரட்டிக் கொண்டு தாகூர்ஜி கோவிலுக்குப் போய், வேண்டுதலை நிறைவேத்தணும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அப்போது மிகவும் குளிர் காலம். சீக்கிரமே இரவு வந்துவிட்டது. மாலையானதும் ஜைவானுக்கு மீண்டும் ஜுரம் வந்து விட்டது. சுகியாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உடனே சென்று கடவுளுக்கு வேண்டுதலை நிறைவேத்தாததால்தான் மகனுக்கு மீண்டும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோ என பயந்தாள். எனவே, உடனடியாக பூசைக்கு வேண்டிய சாமான்களை சேகரித்தாள். தன்னுடைய ஆண்டையினுடைய தோட்டத்திலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தாள். அவள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வளர்ந்திருந்த துளசியையும் கொஞ்சம் பறித்துக் கொண்டாள். தாகூர்ஜிக்கு பூசை செய்வதற்கு இன்னும் தேவைப்பட்டது, கொஞ்சம் இனிப்பு வாங்கணும், அதற்கு ஒரு அணா தேவைப்படும். அவள் அந்தக் கிராமம் முழுக்க சுற்றி வந்து யார் யாரிடமோ கடனாகக் கேட்டுப் பார்த்தாள். யாரும் அவளுக்குக் கடன் தரவில்லை. அவள் தன் வெள்ளி வளையல்களை அடகு வைத்து அதன் மூலம் கொஞ்சம் இனிப்பு வாங்கிக்கொண்டாள். எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு, குழந்தையையும் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போனாள்.

கோவில் மணி முழங்கிக் கொண்டிருந்தது. இதுதான் பூசை செய்யும் நேரமாகும். ஒரு சில பக்தர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். சுகியாவும் சென்று கோவிலின் முன் நின்றாள். கோவிலுக்கு வெளியே வந்த பூசாரி அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ எனக் கேட்டான்.

சுகியா, கோவில்படிகிளன் அருகே வந்து நின்றுகொண்டு, ‘‘சாமி, என் குழந்தைக்கு உடல் சரியாயிடுச்சுன்னா, அவனை தாகூர்ஜியின் காலடியில் கிடத்துவதாக, வேண்டிக்கிட்டேன். வேண்டுதலை நிறைவேத்துறதுக்காக வந்திருக்கேன், சாமி!’’ என்றாள்.

கோவிலில் இருந்த பக்தர்கள் எல்லாம் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். சுகியோ சக்கிலியப் பெண். இவள், இதுபோன்ற வேண்டுதலுடன் வருவாள் என்பதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடிய வில்லை. ஆயினும் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பூசாரி, ‘‘நீ, இந்த இடம் பூராவையும் தீட்டாக்கணும்னு பாக்கிறியா? போ, போ.’’ என்று விரட்டினார்
அங்கே நின்று கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர், ‘‘தாகூர்ஜியைப் புனிதப்படுத்த வந்திருக்கிறாள்’’ எனக் கிண்டலடித்தார்.

‘‘பூசைக்கு வேண்டிய எல்லாமும் கொண்டு வந்திருக்கேன், சாமி. எல்லாத்தையும் தாகூர்ஜி காலடியில் வச்சுட்டு, தொட்டுக் கும்பிட்டுட்டுப் போயிடறேன், சாமி’’ கெஞ்சினாள், சுகியா.

‘‘உனக்கு என்ன, பைத்தியமா?’’ பூசாரி அதட்டினார். ‘‘எப்படி நீ தாகூர்ஜியின் கால்களைத் தொட முடியும்?’’

சுகியா இப்போதுதான் முதன்முறையாக தாகூர்ஜியின் கோவிலுக்கு வந்திருந்தாள். அவளுக்கு ஆச்சரியம்.

‘‘ஏன், சாமி! தாகூர்ஜி உலகத்தக் காப்பதற்காக வந்தவர், இல்லையா? பாவம் செய்தவங்க, அவர்கிட்ட வந்து, முறையிட்டு, தங்கள் பாவத்தைப் போக்கி, தங்களைக் காப்பாத்த சொல்வதில்லையா? நான் தொடுவதால் அவர் எப்படி தீட்டாவார்?’’ என மிகவும் அப்பாவித்தனமாக அவள் கேட்டாள்.

‘‘நீ ஒரு சக்கிலியச்சிதானே?’’ பூசாரி கேட்டார்.

‘‘ஆம், ஆனால், இதே கடவுள்தான் எங்களையும் படைச்சார், இல்லீங்களா, சாமி’’
சுகியாவின் வாதம் எல்லாம் கொஞ்சமும் எடுபடவில்லை.

‘‘எங்களுக்கும் இவர்தான் கடவுள். ஒண்ணும் வித்தியாசம் இல்லை, தயவுசெய்து என் வேண்டுதலை நிறைவேத்த விடுங்க’’ சுகியா ரொம்பவும் கெஞ்சினாள்.

சற்று முன் கிண்டல் செய்த பக்தர் மிகவும் வெகுண்டு, ‘‘இந்த இடத்தை பூராவும் தீட்டாக்குவதற்கு முன்னாடி, இங்கேயிருந்து ஓடிப்போயிடு, பிசாசே! இந்த உலகத்துக்கு என்ன வந்துடுச்சு, சக்கிலியர்கள் கூட இந்தக் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்யணும்னு கேட்கிற நிலை வந்துடுச்சே’’ என்று கத்தினார்.

‘‘உலகம் சீக்கிரம் அழியப் போவுது. ஏழை தாகூர்ஜி, சக்கிலியர்களிடமிருந்து கூட பூசை புனஸ்காரங்களைப் பெறக்கூடிய நிலைக்கு வந்துட்டாரே’’ என்று மற்றொருவர் புலம்பினார்.

அது குளிர்கால மாலைப் பொழுது. குளிர்காலத்திற்கான உடைகள் அவளிடம் இல்லை. சுகியா நடுங்கிக் கொண்டே நின்றாள். மதத்தின் காவலர்கள் உலகின் எதிர்காலம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை, தாயின் உடம்பிலிருந்து கதகதப்பைப் பெறுவதற்காக அவளை நடுக்கத்துடன் மிகவும் கட்டியணைத்துக் கொண்டது.

சுகியா மிகவும் உறுதியுடன் அங்கேயே கீழே உட்கார்ந்து விட்டாள். எப்படியாவது கோவிலுக்குள் சென்று தாகூர்ஜியின் காலடியில் குழந்தையை வைக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் இருந்தாள்.

‘‘தாகூர்ஜி, யாருடைய தனிச்சொத்தும் கிடையாதே!’’ அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ‘‘எங்களைப் போன்ற கீழ் சாதிக்காரர்களுக்கும்
அவர்தானே கடவுள்! என்னைத் தடுப்பதற்கு இவர்கள் யார்?’’

இவ்வாறு அவள் நினைத்தாலும் அவர்கள் தன்னைப் பலாத்காரமாகத் தூக்கி வெளியே எறிந்து விடுவார்களோ என்ற பயமும் அவளுக்கு இருந்தது. எனவே, அவர்களுக்கு நேராக, கடுமையான காரியங்கள் எதையும் செய்வதை அவள் தவிர்த்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை. கோவிலுக்குச் சற்று தூரத்தே இருந்த மரத்தடிக்குச் சென்று மறைந்து நின்று கொண்டாள்.
கோவிலில் பிரார்த்தனைகள் முடிந்ததும், பக்தர்கள் பகவத்கீதையிலிருந்து சில ஸ்லோகங்களைப் பாடினார்கள். அவர்கள் ஸ்லோகங்களைப் பாடி முடிக்கும்போது மணி பத்தாகி விட்டது. அதுவரை சுகியா அங்கேயே மரத்தடியிலேயே காத்துக்கொண்டிருந்தாள்.

பின்னர் பக்தர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். பூசாரி மட்டுமே இருந்தார். சுகியா மீண்டும் வந்து, கோவிலின் வராந்தாவிற்கருகில் நின்றாள். பூசாரி, கடவுளை வேண்டிப் பரவசத்துடன் பாடிக்கொண்டே இருந்தார். காலடி சத்தம் கேட்பதைக் கேட்டு, தலையைத் திருப்பிப் பார்த்தபோது, சுகியா நிற்பதைக் கண்டார். மிகவும் எரிச்சலடைந்து, ‘‘இன்னும் நீ இங்கேயேவா இருக்கிறாய்?’’ என்றார்.

‘‘சாமி, நான் மிகவும் அதிர்ஷ்டங் கெட்டவள். என் வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே பிடிமானம், இந்தக் குழந்தைதான். மூணு நாளா இவன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறான்.’’ கூறிக் கொண்டிருக்கும்போதே கதறத் தொடங்கி விட்டாள். அவள் கதறல் பூசாரியினுடைய தூங்கிக் கொண்டிருந்த மனிதாபிமானத்தை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆயினும், அவளைக் கோவிலுக்குள் விட அவர் பயந்தார். ஒரு சக்கிலியச்சி, தாகூர்ஜியின் காலடிகளைத் தொடுவதால் ஏற்படும் தீட்டால் கிராமத்திற்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால்? என்ன நிகழும் என்று யாரறிவார்? எப்படியாவது அவளை அனுப்பி வைப்பதற்காக, அவர் கூறினார்:

‘‘வீட்டுக்குப் போய், பிரார்த்தனை செய். கடவுள் கிருபை இருந்தால், உன் மகன் விரைவில் குணமடைந்து விடுவான். நான் கொஞ்சம் துளசி தீர்த்தம் தர்றேன். அதை அவனுக்குக் கொடு.’’

சுகியா கெஞ்சினாள். ‘‘சாமி, நான் கடவுளின் காலைத் தொட்டுக் கும்பிட அனுமதிங்க சாமி! பூசைக்கான சாமான்கள் கடன் வாங்கி, வாங்கிட்டு வந்திருக்கேன். தாகூர்ஜியை வேண்டிக்கொள்ள சொல்லி, செத்துப்போன என் கணவர், கனவில் வந்து கேட்டுக்கிட்டாரு. என் கிட்டே இப்போது ஒரு ரூபா இருக்கு. இவை வச்சுக்கிட்டு, கடவுள் காலடியில விழ என்னை அனுமதிங்க, சாமி!’’

ஒரு ரூபா இருக்கிறது என்று சுகியா சொன்னதும், பூசாரிக்கும் கொஞ்சம் சபலம் வந்தாலும், யாருக்கேனும் தெரிந்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்ற பயமும் வரவே, அதனைப் பெற்றுக்கொள்ளாமல் அவரைத் தடுத்துவிட்டது. தன் சபலத்தை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவர் கூறினார்:

‘‘முட்டாள் மாதிரி பேசாதே, உனக்கு நம்பிக்கையில்லாவிட்டால், கடவுளின் கால்களில் விழுவதால் மட்டும் ஒன்றும் நடந்து விடாது. மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கிய தாயத்து ஒன்று என்னிடம் இருக்கு. அதனை நான் உனக்கு ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறேன். குழந்தையின் கழுத்தைச் சுற்றி அந்தத் தாயத்தைக் கட்டு. நாளைக்கு அவனுக்கு எல்லாம் சரியாகிவிடும்.’’

‘‘ஆனால், கடவுளின் கால்களைத் தொடுவதற்கு என்னை அனுமதிக்க மாட்டீங்களா?’’ அவள் மன்றாடினாள்.

‘‘இதற்கு முன் எவரும் செய்யாத காரியத்தை நீ செய்வதற்கு நான் எப்படி அனுமதிக்க முடியும்? அதன் விளைவாக கிராமத்திற்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னாவது? நீ இந்தத் தாயத்தை எடுத்துக் கொண்டு, போ. கடவுள் மனது வைத்தால் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் இன்றிரவே சரியாகிவிடும்’’ என்று பூசாரி சமாதானம் செய்தார்.

சுகியா தன்னுடைய வளையல்களை இரண்டு ரூபாய்க்கு அடகு வைத்திருந்தாள். ஒரு ரூபாய் ஏற்கனவே செலவாகிவிட்டது. மீதம் இருந்த ஒரு ரூபாயைத் தற்போது பூசாரியிடம் கொடுத்தாள்.

வீட்டிற்குச் சென்றதும் தாயத்தை, குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கட்டினாள். ஆனாலும், இரவு ஆக ஆக, அவனுடைய ஜுரம் அதிகமாகியது. அதிகாலை 3 மணியிருக்கும்போது அவனுடைய கைகளும் கால்களும் மிகவும் ஜில்லிட்டுப் போய்விட்டன. சுகியா மிகவும் பயந்தாள். தாகூர்ஜியின் காலடியின் அவனை வைத்து, சாமியிடம் வேண்டாததற்காகத் தன்னைத் தானே மிகவும் கடிந்துகொண்டாள். நேரம் ஆக ஆக, அவள் நிம்மதியின்மையும் அதிகமாகியது. இனி நேரத்தை வீணாக்கிப் பயன் இல்லை. கோவிலுக்கு மறுபடியும் செல்வதென அவள் தீர்மானித்தாள்.

‘‘தாகூர்ஜி அப்படி ஒன்றும் பூசாரியின் சொந்த சொத்து கிடையாதே, அவர் எப்படி என்னைப் பூசை செய் விடாது தடுக்க முடியும்?’’ இவ்வாறு சொல்லிக்கொண்டே, குழந்தையை ஒரு கம்பளியில் போட்டுக் கட்டிக்கொண்டு, மீண்டும் கோவிலுக்குப் புறப்பட்டாள்.

கடும் இருட்டு. குளிர் காற்று கோரமாக வீசிக் கொண்டிருந்தது. வயல் வெளிகள் வழியாகத்தான் கோவிலுக்குப் போக வேண்டும். சில சமயங்களில் நாய்கள் குரைத்தன. சில சமயங்களில் நரிகள் ஊளையிட்டன. மரங்கள் சலசலப்பது பேயிரைச்சல் போல் வந்தது. கிராமத்தின் இப்பகுதியில் பேய்கள் நடமாடுவதாக மக்கள் பேசிக்கொள்வதுண்டு. இதுபோன்ற இரவு நேரத்தில் ஆண்கள் கூட இந்தப் பக்கத்தில் வருவதற்குத் துணிய மாட்டார்கள். சாதாரண காலமாக இருந்திருந்தால், லட்சம் ரூபாய் கொடுத்திருந்தால் கூட, சுகியா இவ்வாறு இந்தப் பக்கம் வர ஒப்புக்கொண்டிருக்க மாட்டாள். ஆனால், இப்போது? ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய எந்த சத்தத்தையும் அவள் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தாகூர்ஜியின் பெயரை மட்டும் வாயில் உச்சரித்துக் கொண்டே, கோவிலை நோக்கி விடாப்பிடியாக சென்று கொண்டிருந்தாள்.

கோவிலுக்கு அவள் வந்து சேர்ந்தபோது, கோவில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. எங்கே தாகூர்ஜி தப்பித்து ஓடிவிடுவாரோ என்ற முறையில் கோவில் கதவுகள் மூடப்பட்டு, சங்கிலிகளால் இணைக்கப்பட்டு, ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த அறையில் பூசாரி தூங்கிக் கொண்டிருந்தார். சுகியா, குழந்தையைக் கீழே கிடத்தினாள். ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து, வெறித்தனமாகப் பூட்டை உடைப்பதற்காக அடிக்கத் தொடங்கினாள். விரைவில் சங்கிலி உடைந்து கழன்று கொண்டது. ஆனால் அந்த சத்தத்தில் பூசாரி எழுந்துவிட்டார்.

அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் நுழைய யத்தனித்த சமயத்தில், பூசாரி, ‘‘திருடன்’’, ‘‘திருடன்’’ என்று சொல்லிக் கொண்டே ஓடிவந்தார். பூசாரியின் சத்தத்தைக் கேட்டு நிறைய பேர் ஓடி வந்தனர். சுகியா கொஞ்சமும் அஞ்சவில்லை. மிகவும் அமைதியாக அவர்களைப் பார்த்து, ‘‘இங்கே திருடன் யாரும் இல்லை. தாகூர்ஜியைப் பூசிப்பதற்காக நான் இங்கே வந்திருக்கேன்’’ என்றாள்.

பூசாரி, ‘‘என்ன தப்பு செய்ய இருந்தாய்?’’ என்று கூறிக்கொண்டே அவள் தலைமுடியைப் பிய்த்து இழுத்துக் கொண்டே வெளியே வந்தார். ‘‘இந்தத் தீண்டத்தகாத சக்கிலியப் பெண், தாகூர்ஜியைத் தீட்டாக்கிவிட்டாளே’’ என்று கத்தினார்.

பூசாரியின் வார்த்தைகள் அநேகமாக அங்கே நின்றிருந்த அனைவரையுமே சுகியா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. கல் கடவுளுக்கு அவள் செய்த அவமதிப்புக்குப் பழி தீர்க்கும் வகையில் அனைவரும் அவள் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்தனர். திடீரென்று ஒரு சிலர் அவளைக் கீழே தள்ளினர். குழந்தை அவள் கையிலிருந்து கீழே விழுந்தது. குழந்தையை எடுக்க அவள் குனிந்தாள். ஆனால் அதற்குள் அதன் உயிர் பிரிந்து விட்டது.

‘‘ஐயோ, என் குழந்தையைக் கொன்னுட்டாங்களே,’’ சுகியா பெரும் வலியுடன் ஓவென்று கதறினாள். கூட்டத்திலிருந்த அனைவரும் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர்.

அவள் கூட்டத்தினரைப் பார்த்து, ‘‘இப்போது ஏன் வாயை மூடிக்கிட்டிருக்கீங்க. குழந்தை செத்துப்போச்சு. என்னையும் கொன்னுடுங்க. அப்போதான் உங்க தாகூர்ஜி சமாதானமாவார். நீங்களும் பாதுகாப்பா இருக்கலாம்.’’
யாரும் அசையவில்லை. அங்கே மயான அமைதி நிலவியது. சுகியா இறந்த குழந்தையை மீண்டும் பார்த்தாள். அனைவரின் நெஞ்சையும் பிழியக்கூடிய அளவிற்குக் கதறிக்கொண்டே கீழே அவளும் சாய்ந்து மூர்ச்சையாகிப் போனாள். பின்னர் அவள் எழுந்திரிக்கவே இல்லை.

தன் குழந்தையின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த ஒரு தாயின் க்தை இவ்வாறு முடிவுற்றுவிட்டது.
--

பிரேம்சந்த் - அறிமுகம்

அந்தக்காலத்தில் இந்திச் சிறுகதை இலக்கியம், இந்திரஜாலம், மாயமந்திரம், உல்லாசக் கேளிக்கை, விசித்திர வினோதங்கள் ஆகியவைகளுக்கிடையே ஊடாடிக் கொண்டிருந்தது, நடப்பு நிலவரத்தை எதிர்கொள்ள அஞ்சியது. கற்பனையும், மனக் கிளர்வூட்டும் விசித்திரங்களும் நிறைந்த அதிசய மாடமாளிகைகள் அப்போது அதிகம், அங்கு காதல் கொஞ்சல்களை விரும்பும், வைரங்கள் முத்துக்களிடையே வளரும் அரசகுமாரிகள் இருந்தார்கள். காதலிப்பது, பிரிவுத்துயரில் தத்தளிப்பது. விம்மியழுவது இவைகளைத் தவிர உலகில் வேறு எந்த வேலையையும் செய்யத் தெரியாதவர்கள். வில் - அம்பு ஏந்தி பயங்கரமான கானகத்தில் வேட்டையாடித் திரியும் அரசகுமாரன், அரசகுமாரி ஒருத்தியின் மையலில் கிறங்கி, நம்பமுடியாத - நிகழ இயலாத வீரதீரப் பிரதாபங்களைச் செய்து காட்டுவான்! மேலும், தலைவனின் தோழர்கள், தலைவியின் தோழியர் நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவம் கொள்வார்கள்; தலைவனும் தலைவியும் கூடிமகிழ வழிவகை செய்து தருவார்கள். இதற்காகத் தொலை தூரப் பயணத்தையும் அநாயாசமாக மேற்கொள்வார்கள். கூடவே தோழர் - தோழியர்களும் இடையில் காதல் வயப்பட்டுக் கூடுவதும் உண்டு. தலைவனுக்கு ஓர் எதிரி இருப்பான்; இரகசியச் சதி - சாகசங்கள்புரிபவன், பருத்த உடல், பலசாலி, கோரமான உருவம். அவன் கதாநாயகியைக் கவர்ந்து செல்ல என்னவெல்லாமோ செய்வான்; நம்பமுடியாத சதிச் செயல்கள், மடத்தனமான முயற்சிகள் எல்லாம் மேற்கொள்வான். படுகோரமாக அட்டகாசச் சிரிப்பை அடிக்கடி வெளிப்படுத்துவான். ஆக, புராணத்திலிருந்தோ, கதாசரித் சாகரத்திலிருந்தோ, அலிஃப் லைலாவிலிருந்தோ வந்தேறிய - உருமாறிய பாத்திரம்போல் இருக்கும். எந்தக் குறிக்கோளுமின்றிக் கனவுலகில் திரியும் பாத்திரங்கள், இந்தி வாசகர் குழாம் இத்தகைய அதிசயமான - நிகழமுடியாத சூழ்நிலைக்கு இட்டுச் செல்லப்படும்; அங்குத் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாது.

இந்தக் காலத்தில்தான் பிரேம்சந்த் சிறுகதை உலகில் பிரவேசித்தார். புதிய வைகறை தோன்றியது. இருள் மண்டிய யதார்த்த நிலையில் புத்தொளி உதித்தது. கற்பனைக் கண்களுக்கெதிரே கிராமங்களின் உண்மையான ஓவியங்கள் ஒளிர்ந்தன. கிணற்று ராட்டைகள் கிறீச்சிடுகின்றன, கரும்புக் கொல்லை பசுமை பூரித்து வளர்கிறது. ஒட்டுவைத்த புடவை உடுத்திய குடியானவப் பெண், தானியக் கூடையைச் சுமந்தவாறு கிராமப்பாதையில் செல்கிறாள். அவள் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தை, செடிகளில் கொத்திட்டிருக்கும் பட்டாணியைப் பார்த்து கை நீட்டுகிறது. கிராமத்து வட்டிக்கடை முதலாளி சொந்த வில் வண்டியில் பயணம் செய்கிறான். வெளி வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் ஷேக் ஜும்மன், தண்டீராம் இருவரும் ஊர் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முடிவுறாத பேச்சு, பசு கறக்கும் ஒலி, அரிசி குத்தும் ஓசை வீடுகளிலிருந்து வருகின்றன. சாகுபடி, நிலவரி, நிலுவை, கடன், அடமானம், விவசாயி, வட்டிக்கடைக்காரர், பண்ணையார், இவர் பரிவாரங்கள், சங்கடங்களைச் சகித்துக் கொண்டு, அவைகளிலிருந்து விடுதலை பெறக் கனவு கண்டுகொண்டு, பலவீனங்களும், நிர்ப்பந்தங்களும் தொடர நடமாடும் கிராம மக்கள், திடமான உறுதிப்பாடும், குலைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டு வாழ்க்கையுடன் போராடி வந்தார்கள்; ஆனால், உள்ளூர இடிந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.பிரேம்சந்தின் க்தைகள் அலைவரிசைபோல் வெளிவந்தன. அவைகளில் ஒரே கருப்பொருள் ஒலித்துக்கொண்டிருந்தது; ‘கிராமிய வாழ்க்கை குலைந்து வருகிறது. சமூகம் தடுமாறுகிறது. ஏழ்மை பிரளயம்போல் வந்து நம்மை கவளீகரம் செய்கிறது. இவ்வளவுக்கும் நடுவே குடியானவர்கள் தம் வழி வந்த நம்பிக்கைகளின்படி, உயிர்ப்பணயம் வைத்துச் சௌக்கியமாக, சிறப்பாக வாழ விழைகிறார்கள்.’ எல்லாக் கிராமிய வாழ்க்கைப் பிரதிபலிப்புகளும், சூழ்நிலைகளும் பிரேம்சந்தின் கதைகளில் இடம் பெற்றுவிட்டன.

வாசகப் பெருமக்கள் வியப்புடன் ஒப்புக்கொண்டார்கள்: ‘யதார்த்தமான கதை யதார்த்த நிலையைச் சார்ந்திருக்கிறது.’பிரேம்சந்த் முதலில் பள்ளி ஆசிரியராக இருந்தவர். இதனால், இயல்பாகவே அவர் கொள்கைப் பிடிப்பு ஆதரிசப் பற்றிலும், ஒழுக்க நெறி போதனையிலும் ஈடுபட்டிருந்தது. அவர் மகாத்மா காந்தியிடமும் டால்ஸ்டாயிடமும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் இருவருடைய செல்வாக்கும் (கொள்கை - நம்பிக்கைகள்) பிரேம்சந்தின் கதைகளில் படர்ந்திருப்பதைக் காணலாம். பொதுவான இந்தியக் குடிமகனைப்போல, அவர் உள்ளத்திலும் இந்த நம்பிக்கை வேரூன்றியிருந்தது: ‘பாரதம் சுதந்திரம் பெற்றதுமே எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். கிராமப் பஞ்சாயத்தாரிடம் நியாயம் வழங்கும் உரிமை வந்ததுமே, கிராமத்தார் நீதியை நிலைநிறுத்திவிடுவார்கள். பஞ்சாயத்தில் தெய்வமே அவதரிக்கும்.’ ஆனால், காலப்போக்கு பிரேம்சந்தின் இந்த விசுவாசத்தை மாற்றியது. காந்தீயத்தில் அவர் கொண்டிருந்த பிடிமானம் தளர்ந்தது. நவீன முற்போக்குக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பாரானால், உலகம் புகழும் தலைசிறந்த முற்போக்கு எழுத்தாளராகத் திகழ்ந்திருப்பார். சோவியத் யூனியனில் இன்று கென்னாதி கலினோவ்ஸ்கி, நிகோலாய் வோரோனோவ், யூரி கஸகோவ் (1926-’27இல் பிறந்தவர்கள்) ஆகியோர் எழுதிவரும் கதைகளைப் போன்ற சிறந்த கதைகளைப் பிரேம்சந்த் அந்தக் காலத்திலேயே எழுதியிருக்கிறார். யூரி கஸகோவ் (1927இல் பிறந்தவர்) ஒரு வேட்டை நாய் பற்றி எழுதியிருக்கிறார். பிரேம் சந்த் எழுதியுள்ள ‘ஒரு நாயின் கதை’யுடன் அது ஒப்புமை கொண்டிருக்கிறது. பிரபல சோவியத் எழுத்தாளர்கள் வலேரி ஓஸிபோவ், அனதோலீ குஜனோத் ஸோவ் இருவரும் 1930இல் பிறந்தவர்கள். இவர்கள் இப்போது எழுதிவரும் கதைகளைப் போன்ற முற்போக்குக் கதைகளைப் பிரேம்சந்த் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்! இந்த அதிசய ஒற்றுமையைக் காணும்போது மிக வியப்பாகத்தான் இருக்கிறது. ஆங்கிலேயர்களிடம் அதிகார மமதை நிறைய இருந்தது. அவர்கள் இந்திய மொழி மூலமாகப் புகழ்பெறும் எழுத்தாளர்களை வரவேற்கவில்லை, அந்த அலட்சிய மனப்போக்கு இன்றும் இருக்கிறது. ஆனால், ருஷியா பிரேம்சந்தை வியத்தகு முறையில் ஏற்று ஆதரித்தது. ரவீந்திரர், பிரேம்சந்த், யஷ்பால், குவாஜா அஹமத் அப்பாஸ் - இவர்களின் கதைகள் மூலமாகத்தான் நாங்கள் எளிய இந்திய மக்களின் வாழ்க்கையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது என்று ருஷ்ய அறிஞர்கள் சொல்லுகிறார்கள். ஆனால், பிரேம்சந்த் இந்த நிலைக்கு வந்தபின், அதிகக் காலம் வாழவில்லை. ஐம்பத்தைந்து ஆண்டுகளும் சில மாதங்களும் வாழ்ந்து, 1936 அக்டோபர் 8 அன்று இயற்கை எய்தினார். இந்தி இலக்கிய உலகில், பிரேம்சந்திற்கு எவ்வளவு மதிப்பு அளிக்கப்பட வேண்டுமோ, அவ்வளவு அவர் வாழ்நாளில் அளிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒருபுறம், அவரை ‘நாவல் பேரரசர்’ என்று புகழ்கிறார்கள். ஆனால், மறுபுறம் அவருக்குச் சீட்டுக்கட்டு ‘ராஜா’விற்குள்ள மதிப்பைத்தான் அளிக்கிறார்கள். அவர் காலமான பிறகுதான், அவரது அருமை - பெருமைகளை அறிய மக்கள் ஆவல் கொண்டார்கள்; அவர் இல்லாத நிலையில், அவருக்கு மகோன்னதமான கௌரவ பீடத்தை அளித்தார்கள். அந்தக்காலத்தில் வங்காளியில் சரத்சந்திரரும், இந்தியில் பிரேம்சந்தும் மிகப் பிரபலமாக இருந்தார்கள். பிரேம்சந்த் தம் கதைகள் மூலமாக, தனி நபரையும் அக்காலத்து வரலாற்றையும் உயிர்ப்புடன் சித்தரித்து வந்தார். சரத்சந்திரர் அக்காலத்து வரலாற்றிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் ஜீவனுள்ள பாத்திரங்களை (தனி நபர்களை) எடுத்துக்கொண்டார். தம் கதைகளில் அவர், தனி நபர்களின் இன்ப துன்பங்களிலும் சிந்தனைப் போராட்டங்களிலுமே லயித்திருந்தார். சரத் சந்திரர் வங்காள இலக்கியத்திற்கு, திடுதிப்பென்று வந்தார்; புகழ் ஓங்கிப் பரவினார். சரத் சந்திரர் வங்க இலக்கியத்தில் புகுந்தது ஒரு நிகழ்ச்சி. வங்காளிகள் திடீரென ஒரு சமயத்தில் சரத் சந்திரரை எதிர்கொண்டார்கள்; அவரை ஏற்றுப் போற்றினார்கள். இதற்கு மாறாக, இந்தி உலகில், பிரேம்சந்தின் பிரவேசம் புது நிகழ்ச்சியாகத் தோன்றியதில்லை. அவர் மிகவும் உழைத்து, சாதனை புரிந்து இலக்கிய உலகில் தம்மை நிலைநாட்டிக் கொண்டார்.

இப்படியொரு தகவல்: பிரேம்சந்த் தமது முதல் சிறுகதைத் தொகுதி ‘ஸப்த ஸரோஜ்’ நூலுக்குச் சரத் சந்திரர் முன்னுரை எழுத வேண்டுமென்று விரும்பினார். இதற்காக அவர் கல்கத்தா சென்றார். சரத் சந்திரரைச் சந்தித்தார். கதைகளைக் கேட்டு மகிழ்ந்த சரத் சந்திரர் பிரேம்சந்தைப் பாராட்டினார்: ‘வங்காளியில் ரவீந்திரநாத் தாகூரைத் தவிர வேறு யாரும் இத்தகைய கதைகளை எழுத இயலாது. உங்கள் கதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதவல்ல தகுதி எனக்க இல்லை.’பிரேம்சந்த் 1880ஆம் ஆண்டு, ஜூலை 31இல் பிறந்தார். (2007-1880= 113) தந்தையின் பெயர் முன்ஷி அஜயெப்லால். அஞ்சலக அலுவலர். பெயருக்குப் ‘போஸ்ட் மாஸ்டர்’, குறைந்த சம்பளம். கொஞ்சம் நிலபுலன். எப்படியோ சிரமப்பட்டுக் குடும்பத்தை நடத்தி வந்தார். நிலத்தின் விளைச்சலைவிட, மாதாந்தர ஊதியம்தான் குடும்பத்தை வாழ வைக்க உறுதுணையாக இருந்தது. பிரேம்சந்தின் இயற்பெயர் தன்பத்ராய்; பரிவாக ‘நவாப்’ என்று கூப்பிடுவார்கள். எட்டு வயதில் அவர் தாயை இழந்தார். தாயன்புக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்கிற மனக்குறை அவருக்கு உண்டு. இதன் பிரதிபலிப்பை அவருடைய பல கதைகளில் காணலாம். இளம் பிராயத்தில் தாயை இழந்து அநாதரவாகத் தவிக்கும் பிள்ளைகளைப் பல கோணங்களில் சித்தரித்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ‘தூத் கா தாம்’ (பாலின் விலை) என்ற கதையைக் குறிப்பிடலாம்.இருந்தாலும், பிள்ளைப் பருவம் பிள்ளைப் பருவம்தான். அதன் தன்மையே அலாதி. இல்லாமை பாதிக்கும்; ஆனால், இயல்பு அதை வெல்லும். சிறுவயதில் பிரேம் சந்த் குறும்புக்காரப் பிள்ளையாகத்தான் இருந்தார். மாமரத்தில் வடு வைக்க வேண்டியதுதான், கல்லெறி வித்தையைக் காட்டக் கிளம்பி விடுவார். கரடி வித்தைக்காரன் தெருவில் வருவான், அவன் பின்னாலேயே திரிவார். கிட்டிப்புள் இவருக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு. அப்பாவி; விளையாட்டில் உணர்ச்சி வசப்பட்டு ஒரு பையனின் காதைக் கடித்துவிட்டார். கேட்டதற்கு, ‘காதுக்கு வைத்தியம் செய்கிறேன்’ என்றார். ஒரு சமயம் வீட்டிலிருந்து பணத்தைக் களவாடிக் கொண்டு, சந்தை விழாவுக்குச் சென்றுவிட்டார். வேடிக்கை பார்ப்பதில் மிக்க ஆர்வம். உருதுவும் பார்ஸியும் பயின்று வந்தார். கரும்பு, பட்டாணிக் கொல்லையில் புகுந்து வேட்டையாடுவதில் அலாதி ஆர்வம். வீட்டில் அன்புக்கு ஒரு பாட்டி இருந்தாள். சுவை மிக்க கதைகளைக் கூறி மகிழ்விப்பாள். தம் இளம் பிராயத்து நினைவுகளைப் பிரேம்சந்த் பல கதைகளில் சுவைபடச் சித்தரித்திருக்கிறார். எழுத்தாளன் தன்னையே பிரதிபலிக்கிறான்.

இவருடைய கதாபாத்திரங்கள் வான முகட்டிலிருந்து வந்த கற்பனைப் பாத்திரங்களில்லை. இவருடைய பாத்திரங்களைச் சிரமமில்லாமல் இனம் கண்டு கொள்ளலாம்; இவை நினைவில் நிலைத்திருக்கும். அவர் தம் உள்ளத்தில் சேமித்து வைத்தவைகளைத்தான் கதையுருவாக்கித் தந்தார். எந்த எந்த மக்களைப் பார்த்தாரோ, எந்தச் சூழ்நிலையை, நிகழ்ச்சிகளை, பின்புலனை, பகைப்புலனை உய்த்துணந்தாரோ அவைகளை நயம்பய யதார்த்தமாகப் பிரதிபலித்தார்.

பிரேம்சந்த் பதின்மூன்று வயதில் உருதுவில் இன்பச் சுவைக் கதைகளையும், தந்திர ஜாலக் கதைகளையும் நிறையப் படித்தார். அப்போதே அவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. 1898இல் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். சுதார் சிற்றூரிலிருந்த மிஷன் பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். பிறகு அரசாங்க அலுவலில் சேர்ந்தார். பஹராயிச் பள்ளியில் ஆசிரியரானார். அங்கிருந்து பிரதாப் கட்டிற்கு மாற்றலாகியது. அங்கு தம் முதல் நாவலை - 1901இல் - எழுதினார். அது உருதுமொழியில் எழுதப் பெற்றது. பெயர் ‘அஸ்ராரே மஆபித்’ (தேவஸ்தான இரகசியம்). இந்நாவல் பனாரசிலிருந்து வெளிவந்த ஒரு வாத இதழில் (1903இல்) தொடர்ச்சியாக வெளிவந்தது.ஆனால், பிரேம்சந்தின் இலக்கியத்தரம் உருவாகியது கான்பூர் நகரில்தான். சந்தர்ப்பம் அவரைக் கான்பூருக்கு அனுப்பிவைத்தது. அங்கு முன்ஷி தயாநாராயண் நிகம் உருது மொழியில் ‘ஜமானா’ (காலம்) எனும் மாத இதழை வெளியிட்டு வந்தார். இருவரும் நண்பர்களாயினர். இந்தச் சமயத்தில் பிரேம்சந்த் ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கண்டார். அவை அவரை வெகுவாகக் கவர்ந்தன. இலக்கியக் கோட்பாட்டைச் செம்மைப்படுத்திக் கொள்ள அத்தூண்டுதல் உதவியது. அக்கதைகளை உருதுவில் மொழிபெயர்த்து ‘ஜமானா’ பத்திரிகையில் வெளியிட்டார்.1907இல் பிரேம்சந்தின் முதல் சொந்தச் சிறுகதை (‘ஸம்ஸார் கா ஸப்ஸே அன்மோல் ரத்ந’ - உலகத்தின் மிக மதிப்புள்ள இரத்தினம்) ‘ஜமானா’ பத்திரிகையில் வெளிவந்தது.

அக்காலத்தில் வங்கப் பிரிவினையை எதிர்த்து இயக்கம் தீவிரமாக இருந்தது. அப்போதுதான் பிரேம்சந்தின் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. நாட்டுப் பற்றினை வலியுறுத்தும் ஐந்து கதைகள் கொண்ட தொகுப்பு. பெயர் ‘ஸோஜே வதன்’ (தாய் நாட்டின் துன்பம்). இது 1909இல் வெளிவந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் அரசாங்கத்தின் கோபத்திற்கு இலக்காகியது. வேலை போகவில்லை; ஆனால், புத்தகத்தின் எல்லாப் பிரதிகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. இதற்குப் பிறகு தம் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார் - ‘பிரேம்சந்த்’ என்று. இப்பெயரில் 1919இல் முதல் கதை ‘படே கர் கீ பேட்டி’ (பெரிய இடத்துப் பெண்) வெளிவந்தது. பிரேம்சந்த் அலுவலக மாற்றம் காரணமாக சுநார், மஹோபா, அலாஹாபாத், கான்பூர், பஸ்தீ, கோரக்பூர் முதலிய இடங்களில் தங்கியிருந்தார். ஊர்ப்பயணம் செய்வதில் இவருக்கு மிக ஆர்வம். எனக்கு எழுதிய கடிதமொன்றில் பிரேம்சந்த் குறிப்பிட்டிருக்கிறார்: ‘இரயில்வே கார்டாக வேலை பார்க்கத்தான் எனக்கு ஆசை அதிகம். அப்போது பல ஊர்களுக்குப் போகலாம்; பலதரப்பட்ட மக்களோடு கலந்து பழகலாம். புதிய புதிய பாத்திரங்களும், குணசித்திரங்களும் கிடைக்கும். ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் இவர் கோரக்பூர் நார்மல் ஸ்கூலில் பணிபுரிந்து வந்தார். அங்கு ஒரு நாள் மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்டார். அவர் உள்ளம் தீவிர ஈடுபாடு கொண்டது. தமது இருபதாண்டு வேலையை உதறிவிட்டு, பனாரஸ் வந்து சேர்ந்தார். இலக்கியப் பணியையே ஜீவாதாரமாகக் கொண்டார். இலக்கியப் பணியை நம்பி உயிர்வாழ்வது அக்காலத்திலும் விரும்பத் தகாததாகத்தான் இருந்தது. இருந்தாலும் பிரேம்சந்த் அயராமல் எழுதிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவருடைய சிறுகதைகளும் புதினங்களும் வெளியாகிக் கொண்டிருந்தன. பல நாடகங்களும் படைத்தார். ஊதியம் கிடைக்கவில்லை; ஆனால், புகழ் பெருகியது. அரசாங்கம் அவருக்கு ‘ராய் பஹாதுர்’ சிறப்புப் பட்டம் தரம முன்வந்தது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அடிமைப்படுத்திக் கோலோச்சும் அந்நியர் ஆட்சியினர் பட்டமளித்துக் கௌரவிப்பதை ஏற்க விரும்பவில்லை. பிரேம்சந்த் பனாரஸில் ஓர் அச்சகத்தை நிறுவினார். ‘ஹம்ஸ்’ (அன்னம்) எனும் இந்தி இலக்கியப் பத்திரிகையை 1930இல் தொடங்கினார். பிறகு 1932 முதல் ‘ஜாகரண்’ (விழிப்பு) எனும் வார இதழையும் தொடர்ந்தார். அச்சகம், பத்திரிகைகள் வாயிலாகப் பொருளிழப்புதான் ஏற்பட்டது. ஒருமுறை, ஓராண்டுக் காலத்திற்குத் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்தார். ஓரிரு படங்கள் உருவாயின. எனினும், அத்துறை ஒத்து வரவில்லை; திரும்பவும் பனாரஸ் வந்து சேர்ந்தார். புதிய இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து உதவி வந்தார். அவருடைய இரு பத்திரிகைகளும் இந்தி இலக்கியத்திற்குப் பல புதிய எழுத்தாளர்களை அளித்துள்ளன.எழுத்தாளர்களில் இரு வகை; ஒரு வகையினர் தரமானவர்கள், ஆனால் புகழேணியில் ஏறாதவர்கள். புகழ் மிகுந்தவர்கள் தரமானவர்களாக மதிக்கப் பெறுவதில்லை. ஆனால், இதற்கு பிரேம்சந்த் விதிவிலக்கு. தரமான இலக்கியச் சிற்பியாகத் திகழ்ந்ததோடு, புகழ் மிக்கவராகவும் விளங்கினார்.இயல்பாகவே அவர் எளியவர்; கள்ளமற்றவர், பகட்டோ, வெளிவேடமோ கிடையாது. உரையாடலில் எளிய குடியானவனின் உள்ளார்ந்த ஒட்டுறவு இருக்கும். மிகச் சிறந்த இலக்கிய மேதையுடன் உரையாடுகிறோம் என்கிற உணர்வையே ஏற்படுத்த மாட்டார். விவசாயம், உழவர் வாழ்வு, பசு பராமரிப்பு, கிராமியச் செய்தி இவைகளைச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பார். பசு வளர்த்து வந்தார். ஆனால், விவசாயத்தில் முழுமையாக ஈடுபட இயலவில்லை.

தினமும் தவறாது எழுதி வந்தார். ‘ஐடியா’ வரவில்லையே, ‘மூட்’ வரவில்லையே என்று கவலை கிடையாது. நேரம் கிடைத்தபோது எழுத உட்காருவார். தங்கு தடையில்லாமல் எழுதுவார். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து முன்னேறுவார். நடுவில் எவராவது வந்துவிட்டால், முகம் சுளிக்காமல் பேனாவைக் கீழே வைத்துவிட்டுப் பேசத் தொடங்கிவிடுவார். வந்தவர் விடைபெற்றபின், பழைய மாதிரியே லயித்து எழுதத் தொடங்குவார். நகைச்சுவை மிக்கவர். வாய்விட்டுச் சிரிப்பார். மென்முறுவல் இயல்பாக மிளிரும். இன்று பிரேம்சந்த் நம்மிடையே இல்லை. அவரது ஆசனம் சூனியமாகத்தான் இருக்கிறது. மேலும் பல காலத்திற்கு அந்த இடம் நிரப்பப்பட முடியாமலேயே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ராஞ்சி ராதாகிருஷ்ண
தமிழாக்கம்: சௌரி
(பிரேம்சந்த் சிறுகதைகள் - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புதுடில்லி வெளியிட்ட புத்தகத்திற்கு தொகுப்பாசிரியர் ராதாகிருஷ்ண எழுதிய அறிமுகம். இது 1976இல் வெளிவந்திருக்கிறது. புதுடில்லி , சாகித்திய அகடமி நூலகத்தில் கண்டெடுத்து, வெளிக்கொண்டு வந்திருப்பவர்: ச. வீரமணி)