Saturday, January 28, 2017

5 மாநிலத் தேர்தல் : பாஜகவிற்கு எதிரான யுத்தக்களம்


People's Democracy தலையங்கம்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்குத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில், கோவாவிலும் பஞ்சாப்பிலும் பாஜகமற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அரசாங்கங்கள் அமைந்துள்ளன. உத்தரகாண்டிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கங்கள் அமைந்துள்ளன. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் சமாஜ்வாதி கட்சியின் அரசாங்கம் அமைந்திருக்கிறது. அதோடு இங்குதான் மிகவும் குறிப்பிடத்தக்க அளவிற்கான தேர்தல் யுத்தமும் நடைபெறவிருக்கிறது.பஞ்சாப் மக்களிடம், அகாலிதளம்-பாஜககூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான மனோநிலை (anti-incumbency mood)) நிலவுகிறது. மிகவும்கடுமையாகியுள்ள வேளாண் நெருக்கடி, அதிகரித்துள்ள வேலையில்லாத் திண்டாட்டம், புரையோடிப்போயுள்ள ஊழல் சீர்கேடுகள், போதைப்பொருளுக்கு அதீதமான சமூகத்தினர் ஆளாகியிருத்தல் ஆகியவை பாதல் குடும்பத்தினராட்சியின் முத்திரைச் சின்னங்களாகத் திகழ்கின்றன.
தில்லுமுல்லு - வலதுசாரி கூட்டணி
உத்தரகாண்டில், மத்திய அரசாங்கம் மோசடியாக முறையற்ற வகையில், ஹரிஷ் ராவாத் அரசாங்கத்தைக் கவிழ்த்ததை, நீதித்துறை தலையிட்டு ரத்து செய்தது. இதற்குப்பின்னர் அம்மாநிலத்தில் ஆட்சியைப்பிடித்திட பாஜக மேற்கொண்ட அனைத்துவிதமான தில்லுமுல்லு நடவடிக்கைகளையும் எதிர்த்து, தன்அரசாங்கத்தைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் காங்கிரஸ் இருக்கிறது.கோவாவில், பாஜக-மகாராஷ்ட்ராவாதி கோமந்தக் கட்சி கூட்டணி அரசாங்கம் வகுப்புவாத அரசியலில் இறங்கியிருந்தது. ஆயினும், தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், மகாராஷ்ட்ராவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. தற்போது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரின் தலைமையின்கீழ் மகாராஷ்ட்ராவாதி கோந்தக் கட்சி, சிவ சேனையுடன் கோவா சுரக்ஷா மஞ்ச் என்னும் ஒருமாற்று வலதுசாரி கூட்டணி அமைந்திருக்கிறது. பலவீனமானமுறையில் காங்கிரஸ் மற்றும்ஏஏபி கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்துள்ள முற்றுகை கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. மணிப்பூர் அரசியலில் இன அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கிளர்ச்சிக் குழுக்கள் மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலை மிகவும் ஆபத்திற்குரியதாக மாற்றியிருக்கின்றன. என்எஸ்சிஎன்(ஐஎம்) ஆதரவுடன்ஐக்கிய நாகா கவுன்சிலின் ஆவேசத்தால் புதிய மாவட்டங்கள் உருவானதைத் தொடர்ந்து அதன்மூலம் ஆதாயம் அடையலாம் என்ற நம்பிக்கையுடன் தற்போதைய முதல்வர் இபோபி சிங் இருக்கிறார்.
உண்மையான யுத்தம்
இந்த ஐந்து மாநிலங்களில் உண்மையான யுத்தம் என்பது உத்தரப்பிரதேசத்தில்தான். கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் 2007,2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் தனிக்கட்சி பெரும்பான்மையுடன்தான் .அங்கே ஆட்சிகள் அமைக்கப்பட்டன. அதாவது 2007ல் பகுஜன் சமாஜ் கட்சியின் அரசாங்கமும், 2012ல் சமாஜ்வாதிக் கட்சியின் அரசாங்கமும் அங்கே அமைந்தன. 2014மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில்73ஐக் கைப்பற்றின. இதன் மூலம் இக்கூட்டணிமொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் 329 இடங்களில் பெரும்பான்மையைப் பெற்றது. பாஜக மட்டும் தனியே 42.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. பீகாரில் மக்களவைத் தேர்தலின்போது பாஜக பெற்றதைவிட இது அதிகமாகும். இவ்வாறு பாஜக பெற்ற வெற்றியை தலைகீழாகத்திருப்புவது என்பது கடினமான பணியாக இருந்திடும்.சமாஜ்வாதிக் கட்சியில் ஒரு பக்கத்தில் அகிலேஷ் யாதவும் மறுபக்கத்தில் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவருடைய சகோதரர் சிவபால் யாதவும் நிச்சயமற்ற நிலைமையை மேலும்சிக்கலாக்கி இருக்கிறார்கள். ஆயினும், அகிலேஷ் யாதவ் கட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பகுதியினரை தன்பின்னே அணிசேர வைத்திருப்பதன்மூலம், தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவ் அணியினருக்கு ஒதுக்கிஇருக்கிறது. அதன்மூலம் அவர் வலுவான நிலையில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடனும், அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளத்துடனும் அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதால், பாஜகவிற்கு எதிராக இவர்களால் ஒரு சரியான போட்டியை அளித்திடமுடியும். ஆயினும், பீகாரில் உருவானதைப்போல இங்கே ஒரு மகாகூட்டணி உருவாகவில்லை. பீகாரின் பெரிய இரு கட்சிகளாக விளங்கிய ஆர்ஜேடியும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி வைத்துக்கொண்டன. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை.
மக்களின் துன்ப துயரங்கள்
பாஜக, தன் கட்சியின் சார்பில் முதலமைச்சராக எவரையும் முன்னிறுத்தவில்லை. பீகாரில் மேற்கொண்டதைப்போலவே அக்கட்சி இங்கும் 2014இல் மோடியையே பெரிதும் முன்னிறுத்தி, வகுப்புவாத அடிப்படையில் கணக்கிட்டு, வெற்றி பெற்றது. ஆயினும், கடந்த இரண்டரை ஆண்டு கால மோடியின் ஆட்சியானது வேலைவாய்ப்பு அளிப்பதிலோ, வளர்ச்சியிலோ பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இப்போதுஎந்த அளவிற்கு மோடியை முன்னிறுத்துவது அவர்களுக்குப் பயனளிக்க இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததும், அதனைத் தொடர்ந்து மக்கள் படும் சொல்லொண்ணா துன்ப துயரங்களும் இத்தேர்தலில் முக்கியப் பங்கினை வகிக்கும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்த ஐந்து மாநிலங்களிலும் ஒரு பெரிய சக்தியாக இல்லை. பஞ்சாப்,உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஒருசுயேச்சையான சக்தியாக போட்டியிடுகின்றன. மாற்றுக்கொள்கைகளை முன்னிறுத்துவதுடன், பாஜகவின்படுபிற்போக்குத்தனமானவகுப்புவாத குணத்தைதோலுரித்துக்காட்டவும் மோடி அரசாங்கம் மக்கள்மீதுகட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்கள் குறித்தும்தீவிரமாகபிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றன.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவைத்தோற்கடிக்க அனைத்துவிதமான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(ஜனவரி 18, 2017)
(தமிழில்: .வீரமணி)