Friday, April 21, 2017

மதவெறி ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப்படுத்துவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அழைப்பு

மதவெறி ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப்படுத்துவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அழைப்பு
புதுதில்லி, ஏப்.21-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு 2017 ஏப்ரல் 18, 19 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
தீவிரமடையும் ஆர்எஸ்எஸ்பாஜக வெறியாட்டங்கள்
சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்குப்பின்னர், குறிப்பாக உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் வெற்றி பெற்றதற்குப்பின்னர், ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் பல்வேறு வடிவங்களில் மதவெறியைக் கூர்மைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளன. நரேந்திர மோடி பிரதமரானதற்குப்பின்னர் கடந்த மூன்றாண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் தன் விஷக் கரங்களை வேகமாக விரித்து வருகிறது.உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியையும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதையும் தொடர்ந்து ஒரு புதுவிதமான வகுப்புவாதத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பூர்வமற்ற இறைச்சிக் கூடங்களை மூடுகிறோம் என்ற பெயரில் இறைச்சி வர்த்தகத்தின் மீது தாக்குதல் தொடுத்திருப்பதானது, மாநிலத்தில் 24 லட்சம் மக்களுக்கும் மேலானவர்களின் வாழ்வாதாரங்களை மிகவும் மோசமாகப் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இறைச்சி ஏற்றுமதியில் இதுவரை உத்தரப்பிரதேசம்தான் அதிக அளவில் பங்களிப்பினைச் செய்து வந்தது. பசுப் பாதுகாப்புக்குழு என்ற பெயரில் பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டர்களின் நடவடிக்கைகள் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்கள் தொடுத்து அவர்களின் உயிர்களைப் பறிப்பது தொடர்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் அருகே பேஹ்ரோர் என்னுமிடத்தில் பெஹ்லுகான் என்பவர் கொல்லப்பட்டது சமீபத்திய எடுத்துக்காட்டாகும். அதேபோன்று உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சரான பின்னர், ரோமியோ எதிர்ப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இளைஞர்களையும் இளைஞிகளையும் அறநெறிக் கொள்கை (அடிசயட யீடிடiஉiபே) என்ற பெயரில் துன்புறுத்தும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
பொருளாதாரச் சுமைகளை மேலும் ஏற்றுதல்
பாஜக அரசாங்கமானது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கிறது என்பதையும், அது தற்போது பொதுத்துறை நிறுவனங்களை மிகப் பெரிய அளவில் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் மத்தியக்குழு சுட்டிக்காட்டுகிறது. இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகமாக்கிடும். சமீப காலத்தில் சுமார் 1.5 கோடி வேலைகளுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது.விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள அவலநிலை விவசாயிகள் மத்தியில் சொல்லொண்ணா அளவிற்குத் துன்பதுயரங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பருவமழை பொய்த்திருப்பதானது தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.வேளாண் நெருக்கடி, கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மேலும் மிகவும் மோசமான விதத்தில் துன்பதுயரங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் விவசாயப்பொருள்களுக்கு ஆகும் செலவினத்தில் ஒன்றரை மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திடும் என்று உறுதி அளித்தது. ஆனால் இப்போது அதற்கு எதிராக நிலை எடுத்திருக்கிறது. இதனைச் செய்திடாமல், வெறுமனே கடன்களை ரத்து செய்வதால் மட்டும், விவசாயிகளுக்கு ஓரளவிற்கு நிவாரணம் அளிக்கலாமே தவிர, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து விவசாயிகளை நிரந்தரமாகக் காப்பாற்றுவதற்கு இது ஒரு தீர்வாக இருக்க முடியாது.தென்னிந்தியாவில் பருவமழை பொய்த்திருப்பதானது கடும் விவசாய நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பலநூறு விவசாயிகள் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தில்லியில் நாடாளுமன்றத்தின் முன்பு மிகப்பெரிய அளவில் விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டபோதிலும், மத்திய - மாநில அரசுகள் இதுவரை எவ்விதமான நிவாரணமும் அளித்திட முன்வரவில்லை.
இடதுசாரிகளைக் குறிவைக்கும் மதவெறியர்கள்
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள்மீது குறி வைத்துத் தங்கள் தாக்குதல்களைத் தீவிரமாக்கி இருக்கின்றன. குறிப்பாக கேரளம், மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் இத்தகைய தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். (விரைவில் திரிபுராவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.) தங்கள் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் முட்டுக்கட்டையாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் தான் என்று அவர்கள் பார்க்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது
பாபர் மசூதியை இடித்ததில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, ஆகிய பாஜக தலைவர்கள் சதி செய்தார்கள் என்று சுமத்தப்பட்டிருந்த கிரிமினல் குற்றச்சாட்டை மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருப்பதை மத்தியக் குழு வரவேற்கிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆளுநராக இருந்திடும் கல்யாண் சிங்கும், மத்திய அமைச்சராக இருந்திடும் உமாபாரதியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
விசா வழங்க மறுக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விசா வழங்குவதை தடைசெய்திருப்பது குறித்து மத்தியக் குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இதே பிரச்சனை முன்பு ஒரு தடவை எழுப்பப்பட்டபோது, மத்திய அரசாங்கம் அங்கே ஏற்கெனவே வேலை பார்த்திடும் இந்தியர்களுக்கும், அமெரிக்கா செல்வதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் பாதுகாப்பையும் அளித்திடும் என்று கூறியிருந்தது. இதனை அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் செயல்பாடு
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கட்சியின் செயல்பாடு எப்படி இருந்தது என்று மத்தியக் குழு பரிசீலனை செய்தது. கட்சியின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.கட்சியையும், வெகுஜன ஸ்தாபனங்களையும், அதன் நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் மிகவும் உயிர்த்துடிப்போடு வலுப்படுத்துவதன்மூலம் மட்டுமே கட்சியானது தன்னுடைய அரசியல் தலையீட்டு வல்லமையை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்று மத்தியக்குழு மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது.
மத்தியக்குழுவின் அறைகூவல்கள்
சமீப காலத்தில் கட்சியின் பல்வேறு வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு எதிராகவும், ஆட்சியாளர்களால் மதவெறி கூர்மைப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் மகத்தான மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி இருக்கின்றன.வரும் மே மாதத்தின் பிற்பாதியில் மக்கள் மீது மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள சொல்லொண்ணா துன்பதுயரங்களுக்கு எதிராக வாரம் முழுவதும் தொடரக்கூடிய விதத்தில் அனைத்து மாநிலக்குழுக்களும் கிளர்ச்சி இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று மத்தியக் குழு தீர்மானித்திருக்கிறது. இயக்கத்தின்போது கீழ்க்கண்ட பிரச்சனைகள் மீது கவனம் செலுத்திட வேண்டும்:(அ) உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மறுதலிக்கக்கூடிய விதத்தில் பொது விநியோக முறை ஒதுக்கீடுகளைக் கடுமையாகக் குறைத்திருப்பது, பொது விநியோக முறையிலிருந்து சர்க்கரையும், மண்ணெண்ணெய்யும் கைகழுவப்பட்டிருக்கின்றன.(ஆ) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீடுகள் மிகவும் வெட்டிக் குறைக்கப்பட்டிருப்பது. அனைத்து மாநில அரசுகளுக்கும் நூறு நாட்களுக்கான கூலித் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திட வேண்டும்.(இ) பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது; ஏற்கெனவே இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் மோசமானதாக ஆக்கிடும். இப்போது ஓரளவுக்காவது வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின்மூலம் தலித்துகள்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற்றுவரும் வேலை வாய்ப்பையும் இல்லாது ஒழித்துவிடும். எனவே தனியார்மயம் ஒழிக்கப்பட வேண்டும். (ஈ) விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, அதற்கான செலவினங்களைப்போல் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும். அதே சமயத்தில் கடன் தள்ளுபடி ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கலாம். ஆனால் இது மட்டுமே இப்போதுள்ள விவசாய நெருக்கடிக்கும் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கும் நிரந்தரத் தீர்வாகாது.மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரங்களை மேற்கொண்டு, நாடு முழுவதும் மக்கள் திரள் போராட்டங்களை தொடங்கிட வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம் -
மதவெறிக்கு எதிரான சிறப்பு மாநாடுகள்
மத்தியக்குழு, தனித்தனியே இரு சிறப்பு மாநாடுகளை நடத்திடத் தீர்மானித்திருக்கிறது.முதலாவது, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்ததாகும். சமீபத்தில் மத்திய அரசாங்கமானது அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவை அரசியலில் தற்போது இருந்து வருகிற ஊழல்களை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்கானதாகும். இதனை அம்பலப்படுத்துவதே, அரசியலில் பண பலத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், ஒருபகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தலை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பு மாநாடுகளில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.இரண்டாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக வகுப்புவாத எதிர்ப்பு சிறப்பு மாநாடுகள் நடத்திடுவது என்றும் தீர்மானித்திருக்கிறது.
காஷ்மீர்: சிறப்பு மாநாடு
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் நிலைமைகள் குறித்து மத்தியக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.ஸ்ரீநகரில் நடைபெற்ற இடைத்தேர்தல், காஷ்மீரில் மக்கள் எந்த அளவிற்கு மிகவும் ஆழமானமுறையில் தனிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்கள் மத்தியில் நிலவும் அமைதியின்மைக்குத் தீர்வுகாண, மோடி அரசாங்கம் முழுமையாக ராணுவத்தையும், அடக்குமுறையையுமே சார்ந்திருக்கிறது. அங்குள்ள அனைத்து அரசியல்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி மற்றும் மக்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவிவருவது காஷ்மீரை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளி இருக்கிறது. மக்களின் கிளர்ச்சிப் போராட்டங்கள் மீது கொடூரமான முறையில் ஒடுக்குமுறையை ஏவுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று மத்தியக்குழு வலியுறுத்துகிறது.அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.காஷ்மீர் பிரச்சனை குறித்து அக்கறை கொண்டுள்ள அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக இயக்கங்களை உள்ளடக்கி ஒரு சிறப்பு மாநாட்டை நடத்திடுவது என்றும் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு
மகளிர் இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை நிறைவேற்றுவோம் என்கிற வாக்குறுதிக்கு பாஜக அரசாங்கம் தொடர்ந்து துரோகம் செய்துவருவதற்கு எதிராக கிளர்ச்சி நடத்துவது என்றும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னால் இச்சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு நாள் கிளர்ச்சிப் போராட்டம் நடத்திட வேண்டும் என்றும் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. மாநிலங்களவை இச்சட்டமுன்வடிவை ஏற்கெனவே நிறைவேற்றி விட்டது. இப்போது, பாஜகவிற்கு மக்களவையில் தெளிவான முறையில் பெரும்பான்மை இருக்கக்கூடிய நிலையிலும், இச்சட்டமுன்வடிவை நிறைவேற்ற மறுத்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், பாஜக தன்னுடைய வாக்குறுதிக்கு துரோகம் செய்கிறது என்பது தெளிவான ஒன்று.
தமிழில்: ச.வீரமணி

Wednesday, April 19, 2017

ஆர்.கே.ராகவன் நேர்மையானவரா? : ச.வீரமணி

(R.K. Ragavan, RB Sreekumar and Naroda Patia massacre)

2002 குஜராத் இனப்படுகொலை சம்பவங்களில் பெரிய அளவில் நடைபெற்ற ஒன்பது படுகொலை வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை செய்து வந்தது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ஆர்.கே.ராகவன் அவர்களை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இப்போது திடீரென்று கடந்த ஏப்ரல் 13 அன்று உச்சநீதிமன்றம் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இவ்வழக்குகளை விசாரணை செய்திட உச்சநீதிமன்றம் சார்பில் அமர்த்தப்பட்டுள்ள வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றே அவர் விடுவிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கப்படுகிறார் என்பது குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்திடவில்லை.
 குஜராத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக நீதி பெற்றிடுவதற்காக நீதிமன்றத்தில் இன்றுவரை தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்கள் ஒருசிலர். அவர்களில் சமூகப் போராளி டீஸ்டா செதல்வாத், கலவரங்கள் நடைபெற்ற சமயத்தில் குஜராத்தில் உளவுப் பிரிவு கூடுதல் காவல்துறைத் தலைவராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள். .பி.ஸ்ரீகுமார், ‘‘திரைக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் குஜராத்’’ (GUJARAT – BEHIND THE CURTAIN) என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஓர் அத்தியாயம், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக்குழு எப்படியெல்லாம் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டது என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார். டீஸ்டா செதல்வாத்தின் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் குழுவும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விடுத்த வேண்டுகோள்களுக்கு இணங்கத்தான் உச்சநீதிமன்றம், டாக்டர் ஆர். கே. ராகவன் (சிபிஐ முன்னாள் இயக்குநர்) தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினை அமைத்தது. இது அன்றைய நிலையில், குஜராத் வெறியாட்டங்களில் தப்பிப் பிழைத்தவர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.
அன்றைக்கு குஜராத் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார், 2008 மே 9 அன்று, டாக்டர் ஆர்.கே. ராகவனை காந்தி நகரில் உள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்தில் சந்தித்து, முஸ்லிம் மக்கள் மீது மிகப் பெரிய அளவில் நடைபெற்ற ஒன்பது இனப்படுகொலைகள் தொடர்பாக ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அத்துடன் அவர் தன்னுடைய 4 பிரமாண வாக்குமூலங்களின் நகல்களையும் மேல் நடவடிக்கைக்காக அவரிடம் அளித்தார். நரோடா பாட்டியாவில் நடந்த படுகொலை தொடர்பான வழக்கின் புலனாய்வு சம்பந்தமாக ஸ்ரீகுமாரின் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அம்சங்கள் முக்கியமானவை.
"2002 பிப்ரவரி 28 அன்று காலை சுமார் 10.30 மணியளவில் நான், காந்தி நகரில், போலீஸ் பவனில் என்னுடைய அலுவலக அறையில் இருந்த சமயத்தில், அகமதாபாத் நகரில் நரோடா பாட்டியா என்னுமிடத்தின் அருகில், சைஜ்பூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எஸ்ஆர்பிஎப் எனப்படும் மாநில ஆயுதப்படைப் பிரிவின், கமாண்டர், குர்சித் அகமது, (குஜராத், 1977 பேட்ச், பீகாரைச் சேர்ந்தவர்) என்னிடம் பேசினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 500 முஸ்லிம்கள் தனது தலைமையகத்தின் நுழைவாயில் கதவைத் தட்டி, தங்களை ஆயுதம் ஏந்திய விஎச்பி-யைச் சேர்ந்த குண்டர்கள் துரத்திக் கொண்டு வருவதாகவும், தங்களுக்கு அடைக்கலம் அளிக்குமாறும் கேட்பதாக தெரிவித்தார். உடனடியாக வாயிற் கதவைத் திறந்துவிடுமாறும், கொட்டடியில் (BARRACKS-இல்) அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தங்க வைத்திடுமாறும் குர்சித் அகமதுவுக்கு ஆணை பிறப்பித்தேன். ஏனெனில் அங்கு இருந்த ஆயுதப்படைப்பிரிவினர் பந்தோபஸ்துக்காக வெளியே அனுப்பப்பட்டிருந்தனர். கொட்டடிக்குள் அடைக்கலம் நாடிவரும் அனைத்துக் குடிமக்களையும் அனுமதித்திட நான் கட்டளையிட்டிருந்தேன். என்னுடைய உத்தரவுகளைஉறுதி செய்து பேக்ஸ் மூலம் ஒரு செய்தியையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். கமாண்டர் குர்சித் அகமதுவுக்கு அடுத்த பொறுப்பில் இரண்டாம் நிலை கமாண்டராக குரேசி என்பவர் இருந்தார். இரண்டு அதிகாரிகளும் முஸ்லிம்களை கொட்டடிக்குள் தங்க நான் அனுமதித்ததற்காக மிகவும் ஆடிப்போயிருந்தார்கள். இதுகுறித்து எவரேனும் கேட்டால், கூடுதல் காவல்துறைத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டே நாங்கள் இவ்வாறு செய்தோம் என கூறுங்கள் என அவர்களிடம் கூறினேன். (அந்த சமயத்தில் நான் ஆயுதப்படைப்பிரிவுகளின் கூடுதல் காவல்துறைத் தலைவராகவும் இருந்தேன். என் நிர்வாக மேற்பார்வையின்கீழ்தான் 11 ஆயுதப் படைப் பிரிவுகள் பட்டாலியன்கள் வைக்கப்பட்டிருந்தன.) பின்னர், மாநில அரசாங்கம் இதனைப் பயன்படுத்திக்கொண்டு, தாங்கள் ஆயுதப்படைப்பிரிவு வளாகத்திற்குள் அடைக்கலம் கொடுத்ததன் மூலம் 500 முஸ்லிம்களைக் காப்பாற்றியதாக கூறிக்கொண்டது.
ஆனால் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின்பின்னே மிகவும் பரிதாபகரமான, துரதிர்ஷ்டவசமான, வருந்தத்தக்க சம்பவங்களும் உண்டு. அதன்பின்னர், அதாவது 2002 பிப்ரவரி 28 மாலை வாக்கில், ஆட்சியில் உள்ளவர்களில் உயர் மட்டத்தில் இருந்தும், உள்ளூர் தலைவர்களிடமிருந்தும் வந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, அதன்பின்னர் அடைக்கலம் நாடி வந்த முஸ்லிம்களை உள்ளே விடாமல், என்னிடம் எதுவும் தெரிவிக்காமலே, வாயில் கதவு சாத்தப்பட்டுவிட்டது என்று, ஆயுதப்படை அதிகாரிகளிடமிருந்து நான் தெரிந்துகொண்டேன். இதன் விளைவாக, ஆயுதப் படைத் தலைமையகத்தின் வாயிலிலேயே சுமார் 100-130 முஸ்லிம்கள் மிகவும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்கள் என்றும், பல பெண்கள் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்றும், இறந்தவர்களின் சடலங்கள் பக்கத்திலிருந்த கிணற்றில் வீசி எறியப்பட்டன என்றும் கொடூரமான தகவல்கள் வந்தன. உண்மையில், வாயில் கதவை அடைத்ததானது, இந்துத்துவா வெறியர்கள் முஸ்லிம்களை சுற்றி வளைத்து தாக்குவதற்கு மிகவும் எளிதாகப் போய்விட்டது.’’
இரத்தத்தை உறையவைக்கும் ஆர்.பி.ஸ்ரீகுமாரின் இந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்.கே.ராகவனின் சிறப்புப் புலனாய்வுக்குழு, ஸ்ரீகுமாருக்கு அழைப்பாணை அனுப்பவே இல்லை. குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், காவல்துறையினரும், மிகப்பெரிய அளவில் கொலைகள் நடைபெற்ற ஒன்பது வழக்குகளை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவும் இவ்வழக்குகளை விசாரித்திடும் லட்சணத்தைப் பார்த்து மிகவும் நம்பிக்கையிழந்து, விரக்தியுற்றிருந்தார்கள். குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஈராயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம் சுமார் 30 இலிருந்து 35 வழக்குகள் மட்டுமே மீண்டும் புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. 2009 ஏப்ரலில் உச்சநீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு, "2006 ஜூன் தேதியிட்ட ஜாகியா ஜாப்ரியின் (படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாப்ரியின் மனைவி) முறையீட்டில் கவனம் செலுத்தி, சட்டப்படி தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்" என்று கட்டளை பிறப்பித்திருந்தது. ஈஷான் ஜாப்ரி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2002 பிப்ரவரி 28 அன்று வெறியர்களால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜாகியா ஜாப்ரி, அன்றைய முதல்வர் மோடிக்கு எதிராகவும், இதர 62 பேர்களுக்கு எதிராகவும் முறையீடு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் ஆர்.பி.ஸ்ரீகுமார் அளித்த வாக்குமூலங்களை, சிறப்புப் புலனாய்வுக் குழு உறுப்பினர் .கே. மல்ஹோத்ரா பதிவு செய்தார். மூத்த அரசியல் தலைவர்களையும், மூத்த அதிகாரிகளையும் பாதிக்கும் விதத்தில் ஆர்.பி.ஸ்ரீகுமார் அளித்திட்ட தரவுகளைப் பதிவு செய்யும்போது மல்ஹோத்ரா சீற்றம் கொண்டார். ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டில் முதலமைச்சரிலிருந்து, காவல்துறைத் தலைவர் வரை குற்றஞ்சாட்டப் பட்டிருந்தபோதிலும், அவற்றை ஸ்ரீகுமார் கூறும்போது, அவர்மீது ஆத்திரம் கொண்டார்.மாநிலத்தில் 11 மாவட்டங்களில் முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அங்கே பணியாற்றிய மூத்த அதிகாரிகளுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ எவ்விதமான குற்றப் பொறுப்பும் கிடையாது என்கிற விதத்திலேயே சிறப்புப் புலனாய்வுக் குழு தன் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஆர்.பி.ஸ்ரீகுமார் உணர்ந்து கொண்டார்.
ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டை மிகவும் பாதுகாப்பாக புதைகுழியில் தள்ளிட ராகவன் தலைமையிலான புலனாய்வுக் குழு முயற்சித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கான தகவல்கள் நம்பகமான போலீஸ் வட்டாரங்களிலிருந்து ஸ்ரீகுமாருக்குதெரியவந்தது. ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களிடம் வெறுமனே வாக்குமூலங்களை மட்டும் பதிவு செய்துகொண்டுவிட்டு, அவர்கள் கூறியவற்றை அப்படியே வேதவாக்காக ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்துக்கொண்டுவிட்டது. அவர்கள் கூறியவற்றை ஆவணங்களை ஆய்வு செய்து சரிபார்த்திட எவ்விதத்திலும் முயன்றிடவில்லை. 2009இலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் போக்கு என்பது, வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களுக்கு எதிராக, மிகவும் மரத்துப்போன நிலையில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. கலவரங்களின்போது கொலை, கொள்ளை, வன்புணர்வு போன்ற குற்றங்களைச் செய்தவர்களைப் பாதுகாத்து, குற்றம் சாட்டப்பட்டிருந்த முதலமைச்சரையும் மற்றவர்களையும் அவற்றிலிருந்து முழுமையாக விடுவித்திட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே சென்று கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மிகவும் துரதிர்ஷ்டவசமான முறையில் அவர்களுக்கு எதிராக, குஜராத் மாநில அரசுக்கு ஆதரவாக, நேர்மையற்றமுறையில் எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி செயல்பட்டது. குஜராத்தின் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பற்றி சாட்சிகள் சாட்சியமளித்தபோது அவற்றை உடனுக்குடன் மாநில அரசாங்கத்திடம் இந்தப் புலனாய்வுக் குழுவினர் பகிர்ந்துகொள்கிறார்கள் என்கிற தகவல்களும் நம்பகமான காவல்துறை வட்டாரங்களிலிருந்து ஸ்ரீகுமாருக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. படுகொலைகளைப் பற்றிய மிகவும் நம்பத் தகுந்த ஆதாரங்களுடன், நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய தகவல்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அளித்தபோதிலும், அது அவற்றின்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுத்திடத் துணிந்திடவில்லை.ஸ்ரீகுமார் அளித்த பிரமாண வாக்குமூலங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் புலன்விசாரணையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவைகளாகும். முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட குற்றங்களுக்கு வசதி செய்து கொடுத்த மற்றும் உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளையும், மூத்த அரசு அதிகாரிகளையும் அம்பலப்படுத்தும் இத்தகு சாட்சியங்களை பரிசீலிப்பது ஆபத்தானது என்று நினைத்து சிறப்புப் புலனாய்வுக்குழு அவற்றைத் தவிர்ப்பதில் தான் குறியாக இருந்தது. சிறப்புப் புலனாய்வுக்குழு இவ்வாறு மிகவும் மோசமாக நடந்து கொண்டிருப்பதை நியாயப்படுத்திடுவதற்கு எந்தவிதமான முகாந்திரத்தையும் கூறிட முடியாது.
ஆர்.கே.ராகவன் நியமிக்கப்பட்டது எப்படி?
டாக்டர் ஆர்.கே.ராகவன், டாடா குழுமத்தின்கீழ் ஊதியம் பெறுவோரின் பட்டியலில் இருந்து வருபவர். இவர் எப்படி சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறித்தே கடும் விமர்சனங்கள் உண்டு. ஏனெனில், மோடி அரசாங்கம், டாடா குழுமத்தின் நானோ கார் திட்டத்தை 2008-09ஆம் ஆண்டில் தங்கள் மாநிலத்தில் நிறுவிட வேண்டி, அதனைத் தங்கள் மாநிலத்திற்குக் கொண்டுவருவதற்காக, சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறுவிதமான சலுகைகளை அளித்திருந்தது. எனவே, டாடா குழுமத்திடம் ஊதியம் பெற்றுவரும் டாக்டர் ஆர்.கே.ராகவன், நம்பகமானவரும் அல்ல, பொருத்தமானவரும் அல்ல. ஆயினும், சிறப்புப் புலனாய்வுக் குழுவில் அங்கம் வகித்த இரண்டு போலீஸ் அதிகாரிகள்போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கீதா ஜோரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சிவானந்த் ஜா ஆகியோர் புலனாய்வின்போது வேண்டுமென்றே ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்திருந்ததால், அவற்றை உச்சநீதிமன்றத்திடம் எடுத்துச்சென்றபோது, உச்சநீதிமன்றம் அவர்கள் இருவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டது. டாக்டர் ராகவன் இவர்கள் இருவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் மீண்டும் சேர்த்திட வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்திடம் மிகவும் பரிதாபமானமுறையில் கெஞ்சிக் கேட்டுப்பார்த்தார். இதற்காக இவர் லண்டனிலிருந்து உச்சநீதிமன்றப் பதிவாளருக்கு பேக்ஸ் மூலம் ஒரு நீண்ட கடிதம் அனுப்பி இருந்தார். குஜராத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் வேலை செய்வதற்காக ராகவனுக்கு மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் ஊதியமாக அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இதற்காக மாதத்தில் சராசரியாக வெறும் 4 முதல் 6 நாட்களே வேலை செய்தார். அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள் முழுக்க முழுக்க அவரது சொந்தக் காரணங்களுக்கானதாக இருந்தபோதிலும், அவர் லண்டனிலிருந்து காந்திநகர் வந்ததற்காக இரண்டு முறை பயணப்படியைப் பெற்றிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.குஜராத்தில் அதிகாரத்தின் உயர் பீடத்தில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரித்திடும் ஒரு நபருக்கு ஏன் இந்த அளவிற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்? இவ்வழக்கில் முக்கியமான சாட்சிகள் முன்வைத்த பல்வேறு யோசனைகளுக்கு டாக்டர் ராகவன் பதிலேதும் சொல்லவில்லை. அவர்களை விசாரிப்பதற்காக அவர்களுக்கு அழைப்பாணைகள் கூட அவர் அனுப்பிடவில்லை. மேலும் பெரிய அளவில் படுகொலைகள் நடைபெற்ற வழக்குகள் மற்றும் ஜாகியா ஜாப்ரியின் முறையீடு ஆகியவற்றில் கண்டுள்ள முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்களை சரியானவைகளா என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் என்ற முறையில் தனிப்பட்டமுறையில் அவர் சரிபார்க்கவே இல்லை.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான சக்திசிங் கோஹில், டாக்டர் ராகவனுக்கு, மோடி அரசாங்கத்தால் முறையற்ற விதத்தில் அளவுக்கதிகமாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், எனவேதான் அவர், தன்னுடைய புலனாய்வில், முதலமைச்சரைப் பாதுகாத்திடுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். அதேபோன்று மாநில அரசாங்கம்தான் டாக்டர் ராகவனின் பிரிட்டன் பயணத்தின் செலவுகளையும் ஏற்றுக்கொண்டது என்றும் கோஹில் குற்றம்சாட்டினார். (தி டைம்ஸ் ஆப் இந்தியா, அகமதாபாத் பதிப்பு, 2012 பிப்ரவரி 2ஆம் தேதியிட்டது) இவ்வாறு இவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ராகவன் மறுப்பு ஏதும் தெரிவித்திடவில்லை. 2008 மே மாதத்திலிருந்து ராகவனின் பயணச் செலவினங்களை தெரிவிப்பதற்கு, குஜராத் மாநில அரசும் மறுத்துவிட்டது. அது ரகசியம் என்பதால் கூறமுடியாது என்று சொல்லிவிட்டது. இப்படியான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் காணப்பட்ட குளறுபடிகள் மற்றும் பாரபட்சப்போக்குகளை விவரித்து ஏராளமான கட்டுரைகளை ஸ்ரீகுமார் எழுதியிருக்கிறார்.
இத்தகைய பின்னணிகள் எல்லாம் இருக்கும் சூழலில்தான், தற்போது உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆர்.கே.ராகவனை கைகழுவியுள்ளது