Wednesday, January 9, 2019



முற்போக்கு சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு,
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது
தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானது
மாநிலங்களவையில் ஏ.நவநீதிகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு
புதுதில்லி, ஜன. 20-
முற்போக்கு சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானது என்றும் அஇஅதிமுக உறுப்பினர் ஏ. நவநீதிகிருஷ்ணன் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமையன்று பொருளாதாரரீதியாக பலவீனமானவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தின்மீது அஇஅதிமுக உறுப்பினர் ஏ. நவநீதிகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தச் சட்டமுன்வடிவின்மீது என்னுடைய கருத்துக்களைத் தொடங்குவதற்கு முன், சமூகநீதி காத்த வீராங்கனை என்று அழைக்கப்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன் அவரை வழிபட்டு, என் உரையைத் தொடங்குகிறேன்.
இப்போது, தமிழ்நாடு முழுவதற்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, தலித்துகளுக்காக, பழங்குடியினருக்காக அவர் அறிமுகப்படுத்தினார். மேலும் அது கடந்த முப்பதாண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
இப்போது, மாண்புமிகு அம்மா அவர்களால் ஒரு சட்ட வடிவில் கொண்டுவரப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக தமிழ்நாடு அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
சமூகரீதியாக முன்னேறிய சமுகத்தில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்திடும் இந்தச் சட்டமுன்வடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அதற்கான காரணங்களையும் நான் அளிக்கிறேன்.
முதலாவதாக, 10 சதவீத இடஒதுக்கீடு என்பது புதிய சிந்தனை ஒன்றும் அல்ல.  பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதும் இதுபோன்று கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை மாண்பமை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
உச்சநீதிமன்றம் அதன்மீது எடுத்த முடிவினை நான் இப்போது மேற்கோள் காட்டுகிறேன். பொருளாதார வரன்முறைகளை மட்டும் மற்றும் பிரத்யேகமாகக் கொண்டும் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைத் தீர்மானித்திட முடியாது. சமூக பிற்படுத்தப்பட்ட நிலையுடன் அதனையும் பரிசீலனைக்காக அல்லது அடிப்படையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுமட்டும் எவ்விதத்திலும் தனித்து வரன்முறையாக அமைந்திடாது.
ஆகவே, இன்றைய தேதியில், நம் அரசமைப்புச் சட்டத்தின் 141ஆவது பிரிவின்கீழ் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். எனவே இது நிலைக்கத்தக்கதல்ல.
இட ஒதுக்கீடு என்றால் என்ன? இட ஒதுக்கீடு என்பது, வரலாறு முழுவதும் பாகுபாடு காட்டப்பட்டு வந்தவர்களுக்காகவும் அவற்றின் தீய விளைவுகள் இப்போதும் தொடர்வதாலும் அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்கான ஒன்றாகும். இவ்வாறு இடஒதுக்கீடு என்பதன் பொருள் வரலாற்றில் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கானது அல்லது சமூகத்தினருக்கானது என்பதேயாகும்.
இப்போது, மத்திய அரசு, பொருளாதார வரன்முறையின் அடிப்படையில் ஏழைகளுக்காக 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆட்சியாளர்கள்தான் பொருளாதார வரன்முறையை நிச்சயித்திருக்கிறார்களே தவிர இது நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்படவில்லை. எனவே, இப்போது இட ஒதுக்கீடு என்பது ஒரு வகுப்பின் அடிப்படையிலோ அல்லது சமூகத்தின் அடிப்படையிலோ அல்ல, மாறாக அது தனிநபர்களுக்கானதாகும்.  ஒருவர் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லை என்றால் அவர் இட ஒதுக்கீட்டின்கீழ் வருகிறார். ஆனால், இட ஒதுக்கீட்டின் கருத்தாக்கம் என்பதே சமூகரீதியானவர்களுக்கு மட்டுமேயாகும். அது தனிநபர்களுக்கானது அல்ல.
இந்தச் சட்டமுன்வடிவில் முன்மொழியப்பட்டிருக்கிற 10 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் வருகிற சமூகத்தினர் அல்லது வகுப்பினர் வரலாற்றுரீதியாக பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் அல்லர். அவர்கள் எவ்விதமான தீய விளைவுகளையும் எதிர்கொண்டவர்களும் அல்லர். இப்போது அவர்களுக்கும் பொருளாதார வரன்முறை என்ற பெயரில் ஏழைகள் என்ற அடையாளத்தின்கீழ் இடஒதுக்கீடு அளிக்க முன்மொழியப்பட்டிருக்கிறது.
இந்தியா ஒரு ஏழை நாடுதான். நாம் உலகத்தின் ஆறாவது பெரிய பொருளாதார நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலு, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், நம் நாடு ஏழைகளின் நாடுதான். நம் மக்கள் தொகையில் 98 சதவீதத்தினர் ஏழைகள்தான். எனவே, பொருளாதார வரன்முறையை இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்த முடியாது.
மூன்றாவதாக, மாண்புமிகு அம்மா கொண்டுவந்த 69 சதவீத இடஒதுக்கீடு இப்போதும் அமலில் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசாங்கத்திற்கு என்னுடைய பணிவான வேண்டுகோள், இந்தச் சட்டமுன்வடிவு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று ஒரு திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஒரு வரி திருத்தம் போதுமானது. அதன்மூலம் தமிழக மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
இப்போது கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவைப் படித்ததிலிருந்து, இப்போது புதிதாகக் கொண்டுவரப்படும் 10 சதவீதம் என்பது, ஏற்கனவே இருக்கிற 50 சதவீதம் அல்லாது மேலும் கூடுதலான ஒன்று என்பதாகும். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கை எப்படி அமலாகிக்கொண்டிருக்கிறது என்று இப்போது விளக்குகிறேன். 69 சதவீத இட ஒதுக்கீடு அங்கே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அளிக்கப்படும். மீதம் உள்ள 31 சதவீதத்தில்தான் அனைத்து சமூகத்தினரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, எங்கள் மாநிலத்தில், தமிழ்நாடு பொதுத் தேர்வுகள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவன் என்ற முறையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துத் துறைகளின் தேர்வுகளிலும் முதலிடத்தை வகிப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் கடின உழைப்புதான்.
இப்போது அனைத்து சமூகத்தினருக்குமான இந்த 31 சதவீதம் என்பது மேலும் குறைந்திடும். எனவே, இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திடும். தயவுசெய்து, இதனைப் புரிந்துகொள்ளுங்கள்.
இப்போது, தமிழ்நாடு அனைத்து அம்சங்களிலும் அனைத்து வரன்முறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறது. அது சட்டம்-ஒழுங்கு சார்ந்த நிலையாக இருந்தாலும் சரி அல்லது வேறெந்த விதமாக இருந்தாலும் சரி. இந்தியா டுடே நிறுவனம் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு நான்கு விருதுகள் வழங்கியிருக்கின்றன. இதற்கான பெருமை மாண்புமி அம்மாவையே போய்ச் சேரும்.
தற்போது 31 சதவீத இட ஒதுக்கீடு என்பது அனைவருக்குமான ஒன்றாக இருக்கிறது. இதனைப் பொது ஒதுக்கீடு என்று அழைக்கிறோம். இது அனைத்து சமூகத்தினருக்கும் அவர்களின் சமூக அந்தஸ்து எந்தவிதத்திலிருந்தாலும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது நீங்கள் கொண்டுவருகிற இந்தச் சட்டமுன்வடிவானது இப்போது தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்ற உரிமைகளைப் பறித்துக் கொள்கிறது. எனவே, அம்மாவின் அரசாங்கம் இதனைக் கடுமையாக எதிர்க்கிறது. இன்றைய எதாரத்த நிலையின் அடிப்படையில் நின்று இதனை நான் கூறிக்கொண்டிருக்கிறேன்.
69 சதவீத இது ஒதுக்கீடு என்பதை எவ்விதமான அடிப்படையும் இல்லாமலோ அல்லது எவ்விதமான தரவுகளும் இல்லாமலோ ஏற்படுத்திடவில்லை. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க, தேவையான அனைத்துத் தரவுகளையும் அம்மா அவர்கள் சேகரித்து, தொகுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் முன் தாக்கல் செய்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அதனை அம்மா அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக ஆய்வு செய்து, 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும்படி ஓர் அரசாணையை வெளியிட்டார். அது தொடர்பான அரசமைப்புச்சட்ட நேர்மைத்தகவு குறித்து உச்சநீதிமன்றம் முன் இப்போதும் நிலுவையில் இருந்துவருகிறது.
எனவே, இப்போது என்னுடைய கோரிக்கை என்னவெனில், தமிழ்நாட்டில் அனைத்துத் தரவுகளையும் நன்கு ஆராய்ந்து அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசாங்கம், அம்மாவின் அரசாங்கம், வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.          
 இப்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவானது எந்தத் தரவின் அடிப்படையின்கீழ் கொண்டுவரப்படுகிறது? எந்தவிதமான தரவும் இல்லாமல், இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திட முடியாது. சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையே சாட்சியம்தான். எவ்விதமான ஆதாரமும் இல்லாமல், எவ்விதமான தரவும் இல்லாமல், எவ்விதமான ஆய்வும் இல்லாமல், திடீரென்று, இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு, கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதன் மூலமாக தமிழ்நாடு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே இதனை மீண்டும் மீண்டும் கடுமையாக நான் எதிர்க்கிறேன்.
இதுதொடர்பாக இன்னொரு முக்கியமான அம்சம். நம் நாடாளுமன்றத்திற்கு இவ்வாறு ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான சட்ட உரிமையை, தகுதியைப் பெற்றிருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன். இது மிகமிக முக்கியமாகும். நம்முடைய அரசமைப்புச் சட்டம், சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம், சமூக ரீதியாக முற்பட்ட சமூகத்தினருக்கு, அவர்கள் ஏழையாக இருந்தாலும்கூட, எவ்வித சலுகையையும் அளித்திடவில்லை.  எனவே இவ்வாறான ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதற்கு, நாடாளுமன்றத்திற்கு எவ்விதமான தகுதியோ சட்டஉரிமையோ கிடையாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை மேற்கோள்காட்டிட விரும்புகிறேன். ஐ.ஆர். கோல்ஹோ (எதிர்) தமிழ்நாடு அரசு (I.R. Coelho vs. State of Tamil Nadu),கேசவானந்தா பாரதி (2007-2) SCC 1 – பக்கம் 137இல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வாயம் அளித்திட்ட தீர்ப்பில் அரசமைப்புச்சட்டத்தின் 368ஆவது பிரிவின்கீழ், நாடாளுமன்றத்திற்கு அரசமைப்புச்சட்ட அதிகாரத்தைத் திருத்தும் அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள நாடாளுமன்றம், அரசியல் நிர்ணய சபை(Constituent Assembly)-யாக மாறிட முடியாது.  நம்முடைய நாடாளுமன்றம், அரசமைப்புச்சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒன்று. இதன் அடிப்படையில்தான் மினர்வா மில்கள் வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் 368ஆவதுபிரிவின்கீழான உட்பிரிவுகள் 4 மற்றும் 5 ஆகியவற்றை உச்சநீதிமன்றம் அடித்து ஒதுக்கித்தள்ளியது.
இவ்வாறு நம் நாடாளுமன்றத்திறகு அரசமைப்புச்சட்ட அதிகாரம் கிடையாது. இதனை நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் இதனை பிரகடனம் செய்திருக்கிறது.
அடுத்து, இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்தின் 16ஆவது பிரிவின்கீழ் வருகிறது. 16ஆவது பிரிவு, பொது வேலைவாய்ப்பில் வாய்ப்புகள் குறித்து குறிப்பிடுகிறது. 15ஆவது பிரிவு பாகுபாடு குறித்து குறிப்பிடுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும், நீதிபதிகள் அளித்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும் இந்த நாடாளுமன்றத்திற்கு இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவரக்கூடிய அரசமைப்பு அதிகாரம் வழங்கப்படவில்லை.  அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்க்கும் விதத்தில் நாடாளுமன்றம் எவ்விதமான சட்டத்தையும் இயற்றிட முடியாது.
இடஒதுக்கீடு என்பதும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. அது தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சாதியினருக்கு மட்டும்தான் அளித்திட முடியும். சமூகரீதியாக முன்னேறிய சமூகத்தினருக்கு அல்லது சாதியினருக்கு அளித்திட முடியாது. இது அடிப்படையான அம்சமாகும். இவ்வாறு இது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்தச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால் நிச்சயமாக இது உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபிக்கப்படும். நமக்கு இதனைக் கொண்டுவருவதற்கான அரசமைப்புச்சட்ட அதிகாரம் கிடையாது.
நான் ஏற்கனவே கூறியதுபோலு, 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது புதிய சிந்தனை அல்ல. இதனை நீதித்துறை ஏற்கனவே ஆய்வுசெய்து முடிவெடுத்திருக்கிறது. இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.  
நாடாளுமன்றம் உயர்ந்ததா? அரசமைப்புச்சட்டம் உயர்ந்ததா? நிச்சயமாக அரசமைப்புச்சட்டம்தான் நாடாளுமன்றத்தைவிட உயர்ந்தது. அரசமைப்புச்சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் நின்றுதான் நாடாளுமன்றம் செயல்படமுடியும். நாடாளுமன்றத்திற்கு, அரசமைப்புச்சட்ட அதிகாரம் கிடையாது. எனவே இந்தச்சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது.  
இப்போது என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அங்கே அமலில் இருக்கின்ற 69 சதவீத இடஒதுக்கீட்டை குலைத்திடக் கூடாது. அதற்கான சட்டரீதியாக உரிமையே, தார்மீக அடிப்படையலான உரிமையோ, அல்லது வேறெவ்விதமான அரசியல் உரிமையோ அதற்குக் கிடையாது. இது அமல்படுத்தப்பட்டால் தற்போது அங்கே 31 சதவீதி சமூகத்தினருக்கு இருந்துவரும் வாய்ப்புகள் நிச்சயமாகப் பாதிக்கப்படும்.
இச்சட்டமுன்வடிவானது, தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற ஒன்றாகும். இப்போது நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவை திருத்தியிருக்கிறீர்கள். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறீர்கள். இதனை நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இது சொல்லப்பட்டிருக்கிறது. 
மத்திய சமூகநீதிக்கான அமைச்சர் தாவார்சந்த் ஜெஹ்லாத்: 69 சதவீத இடஒதுக்கீடு எவ்விதம் வழங்கப்படுகிறது?
ஏ. நவநீதிகிருஷ்ணன்: 69 சதவீத இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் சேர்வதற்காக வழங்கப்படுகிறது.
இந்தச்சட்டமுன்வடிவு நிறைவேறினால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு என்பது 69 சதவீதத்துடன் மேலும் 10 சேர்க்கப்பட்டு 79 சதவீதம் என்றாகும். இது சாத்தியமல்ல. இவ்வாறு இந்தச் சட்டமுன்வடிவானது தமிழக மக்களின் நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே இதனை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு ஏ. நவநீதிகிருஷ்ணன் உரையாற்றிவிட்டு, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து திருமதி விஜிலா சத்யானந்த்தும் வெளிநடப்பு செய்தார்.
(ந.நி.)

Friday, January 4, 2019

பிரதமர் மோடி, வெளிப்படுத்தியதைவிட மறைத்ததே அதிகம் -சீத்தாராம் யெச்சூரி பிர



தமம் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் ஒரு ஜோடிக்கப்பட்ட நேர்காணலை வெளியிட்டிருப்பதன் மூலமாக தன் பசப்பு வார்த்தைகளை அரங்கேற்றத் தொடங்கிவிட்டார். 2018ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஓர் ஒளிமிகுந்த ஆண்டாக இருந்ததாக அவர் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதே போன்று இந்தியா ஒளிர்கி
றது என்று வாஜ்பாயி தம்பட்டம் அடித்தபின் 2004இல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன என்பதை அனைவரும் அறிவோம். பிரதமர் மோடியும் இவ்வாறு ‘சுவரில் எழுதியிருந்ததைப்’ படித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த நேர்காணலில், பிரதமர் தானோ அல்லது தங்களுடைய பாஜக கட்சியோ 2014இல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்தோ மற்றும் அதில் ஒன்றைக்கூட இதுவரையிலும் ஏன் நிறைவேற்ற வில்லை என்பது குறித்தோ எதுவும் குறிப்பிடவே இல்லை. இதுதான் பின்-உண்மை (post-truth) என்கிற பிரச்சார உத்தியாகும். இதுபோன்ற பிரச்சார உத்தியின்போது, மக்கள் மத்தியில் பொய்த்தகவல்களை அவர்கள் நம்பக்கூடிய விதத்தில், மிகப்பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்படும்.
விவசாயக் கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு ஒரு தடவை விவசாயக் கடன் தள்ளுபடி என்று கோருவதை, லொல்லிபாப்” (“lollipop”) என்று மிகவும் தடித்தனமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் பிரதமர் குறிப்பிட்டார். கடன் தள்ளுபடிக்கான இந்தக் கோரிக்கை கடன் சுமைகளால் நசுங்கிக் கொண்டிருக்கின்ற விவசாயிகள், நாடு முழுதும் மிகவும் விரிவான  அளவில் போராட்டங்களை நடத்தியதன் விளைவாகவே உருவாகியிருந்தது. விவசாய நெருக்கடி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது மிகவும் அபாயகரமான முறையில் அதிகரித்திருக்கிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான மரணங்களைத் தடுப்பதற்கு, ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்வதன் மூலம், நமக்கு அன்னமிடும் உழவர்களைப் பாதுகாத்திட ஓரளவிற்கு உதவிடும். நாடு முழுதும் மிகவும் விரிவான அளவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் மற்றுமொரு முக்கியமான கோரிக்கை எழுப்பப்பட்டது. அது என்னவெனில், 2014இல் பிரதமர் அளித்திட்ட வாக்குறுதியின்படி, விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை, உற்பத்திச்செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும்  என்பதாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இதனை இவர்கள் செய்திடவில்லை. விவசாய நெருக்கடி இந்த அளவிற்கு ஆழமாகியிருப்பதற்கு, ஆட்சியாளர்கள் கிராமப்புற மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்திருப்பதே நேரடியான காரணமாகும். இது, விவசாயம் அல்லாத பிரிவுகளில் உள்ள கிராமப்புற மக்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனை அவர்களுக்குக் கிடைத்துவந்த வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதிலிருந்து நன்கு அறிய முடியும்.
பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு என்னும் சுனாமி இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக நாசப்படுத்திய ஒட்டுமொத்த அனுபவத்திற்கு எதிராக, பிரதமர் அதனை மாபெரும் வெற்றி என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் அதிசயமானவிதத்தில், இவ்வாறு பணமதிப்பிழப்பு காரணமாகத்தான் கறுப்புப்பணம் முழுவதும் வங்கி அமைப்புமுறைக்கு வந்துவிட்டது என்றும் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதைவிட மாபெரும் பொய்ப்பித்தலாட்டம் வேறெதுவும் இருக்க முடியாது. பிரதமரின் பணமதிப்பிழப்பு உத்தரவின்மூலமாக, கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுவந்த முதலைகள் எல்லாம், அவர்களின் ‘கறுப்புப்பணம்’ முழுவதையும் ‘வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு வகை செய்து தந்திருக்கிறார். இவ்வாறு, சட்டத்தை மீறி கறுப்புப்பணத்தை வைத்திருந்தவர்களை, சட்டரீதியாக வைத்துக்கொள்வதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கிறார்.
இவ்வாறு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, நம் நாட்டில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்த சாமானிய மக்களாகும். நாட்டில் விவசாயத்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் வேலையினை அளித்துவந்த முறைசாராத் தொழில்கள் அடியோடு அழிக்கப்பட்டன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கணிசமான அளவில் பங்களிப்பினைச் செய்து வந்தது முறைசாராத் தொழில்கள்தான். பணமதிப்பிழப்பு இதில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்துவிட்டது. ஏனெனில் இவர்கள் அனைவரும் ரொக்கப் பரிவர்த்தனைகளுடன்தான் தங்கள் இயல்புவாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி  அடைந்ததற்கும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே பிரதான காரணமாகும்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் நள்ளிரவு சிறப்புக் கூட்டத்தொடரை பிரதமர் நடத்தினார்.  இதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் புரட்சிகரமானதாக மாறும் என்றும், வரி வசூலிப்பதன் மூலமாக வருவாய் பெருகும் என்றும் கூறினார். வரி விதிப்பு வலை விரிவாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆனாலும் நிலைமை என்ன? மக்கள் தாக்கல் செய்திடும் அறிக்கைகள் (returns) அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் வரி வசூல் மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2019 ஏப்ரலுக்கும் டிசம்பருக்கும் இடையில், ஜிஎஸ்டி வசூல் என்பது சராசரியாக மாதத்திற்கு 96,800 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்திருக்கிறது. இது பட்ஜெட் குறியீடான மாதத்திற்கு 1,06,300 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதைவிடக் குறைவேயாகும். அடுத்த மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் சராசரியாக 1,34,900 கோடி ரூபாயாக இருந்திட வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் குறியீட்டை எட்டிட முடியும்.
பிரதமர் தன்னுடைய நேர்காணலில் ஜிஎஸ்டியையும் புகழ்ந்துதள்ளியிருக்கிறார். இது வரி வசூல் முறையை எளிதாக்கிவிட்டது என்றும், மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிவாரணம் அளித்திருக்கிறது என்றும் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமானதாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தத் தொடங்கியபின்னர், நாட்டின் நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில்பிரிவுகள் முடங்கிவிட்டன. நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பினை அளித்து வந்தவை இந்த நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகளாகும்.  கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டனர். மேலும் பிரதமர் நாட்டில் ஐநூறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர்கூறியிருக்கும் 500 பொருள்களில் 490 பொருள்களுக்கும் அதிகமானவற்றிற்கு எப்போதுமே வரி கிடையாது. எனவே இவ்வாறு இவர் பீற்றிக்கொண்டிருப்பதும் அபத்தமான ஒன்றேயாகும்.
வேலையில்லாத் திண்டாட்டம்
நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் கூறவில்லை. ஒவ்வோராண்டும் இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இந்தப் பிரதமர்தான் இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகளுக்கு இவ்வாறு பத்து கோடி  பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகள் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறாதது மட்டுமல்ல, பெரிய அளவில் ஆலைகள் மூடல், முறைசாராத் தொழில்கள் அழிக்கப்பட்டமை, நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகள் நாசம் செய்யப்பட்டமை – இவை அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மையை உருவாக்கி இருக்கின்றன. கடந்த இருபதாண்டுகளில் இப்போதிருக்கக்கூடிய அளவிற்கு வேலையின்மைக் கொடுமை முன்னெப்போதும் இருந்ததில்லை என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இவற்றின்காரணமாக வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான தொழிலாளர்நல பீரோவின் ஆண்டறிக்கைகளும் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டன. ஏனெனில் அவை நாட்டிலுள்ள மிகவும் மோசமான எதார்த்த நிலைமைகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் என்பதால் இவ்வாறு வெளியிடுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.
நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களின் எதிர்காலம், பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. இந்த இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்கால சிற்பிகள். இவர்களின் வீர்யத்தை இவ்வாறு அழித்திருப்பது என்பது நம் நாட்டின் எதிர்காலத்தையே ஆட்சியாளர்கள் நாசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே பொருளாகும்.
கூட்டுக் களவாணி முதலாளித்துவம்
பிரதமரின் நேர்காணலில், பாஜகவின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்டிருப்பது குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை.  2014க்கும் 2019க்கும் இடையே கார்ப்பரேட்டுகள் வங்கிகளிடம் வாங்கிய கடன் நான்கு மடங்காக அதிகரித்தது. கடன்களை வாங்கியபின் நாட்டைவிட்டே பறந்தோடிவிட்டார்கள். அவர்கள் தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுக்கின்றனர். அவற்றை அவர்களிடம் இருந்து திரும்பப் பெறுவோம் என்று பிரதமர் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். ஆனால், இன்றுவரையில், எவரும் நம் நாட்டிற்குத் திரும்பிடவில்லை. அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தும், அவர்கள் பெற்ற கடன்களை மீளவும் வங்கிகளில் திருப்பிச் செலுத்தவும் நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கமானது அவர்களின் கடன்களை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டு வந்திருக்கிறது. மேலும் கூடுதலாக, அவ்வாறு தாங்கள் கடன்களைப் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாது தள்ளாடிக்கொண்டிருக்கும் வங்கிகளை, ஏலம் விடுவதன் மூலமாக, அதிக அளவில் ஏலத்தொகையைக் கூறுபவர்களிடம் கொடுத்திடும் வகையில், அவர்களிடமே ஒப்படைப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. இது ‘முடிவெட்டும் கொள்கை’ (‘hair cut’ policy) என்று அழைக்கப்படுகிறது. இதனைப் பின்பற்றிட வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை அரசாங்கம் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு வங்கிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிட இருக்கும் கார்ப்பரேட்டுகள் யார்?  இதில் பிரதானமாகப் பயனடையப்போவது பிரதமரும் அவருடைய கூட்டுக்களவாணி முதலாளிகளும்தான்.
இவ்வாறு கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த வங்கிகளின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இவற்றுக்கு மறுமூலதனம் அளித்திட, பொதுப் பணம் மீண்டும் இதற்குள் புகுத்தப்படுகிறது. இவ்வாறு உட்புகுத்தப்படும் பணம் மீளவும் சூறையாடப்படும். முதலாவதாக, வங்கிகளில் கோடிக்கணக்கான இந்தியர்களால் சேமிப்பாக போடப்பட்டிருந்த பணம், கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்பட்டன. பின்னர் இதனைச் சரிசெய்கிறோம் என்ற பெயரில் இவ்வங்கிகளில் மீளவும் மக்களின் பொதுப்பணம் செலுத்தப்படுகிறது.
ரபேல் ஊழல்
மிகவும் சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தத்திற்கு வக்காலத்து வாங்கும் விதத்தில், பிரதமர், இந்த ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றமே தெளிவாக்கிவிட்டது என்றும், எனவே இதில் ஊழல் என்ற பிரச்சனைக்கே இடமில்லை என்றும் கூறியிருக்கிறார்.  இது மிகவும் சுத்தமான ஒப்பந்தம் என்றும் இதில் இடைத்தரகர்கள் எவரும் கமிஷன் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதில் யார் பணம் பெற்றது என்று இப்போது வெளியே தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் பிரதமரும், அவருடைய அரசாங்கமும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து, தேர்தல் பத்திரங்களைஅறிமுகப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பத்திரங்களை எவர் வேண்டுமானாலும் வங்கியிலிருந்து வாங்கிக்கொள்ள முடியும், பின்னர் அவர்கள் ஓர் அரசியல் கட்சிக்கு அதனை அளித்திட முடியும், அந்த அரசியல் கட்சி அதனைக் காசாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு தங்களுக்கு இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் கொடுத்தது என்று அந்த அரசியல் கட்சிகள் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு பிரதமரும், பாஜக அரசாங்கமும் அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டனர். இந்த ரபேல் ஊழலில் மிகவும் ஆதாயம் அடைந்திருப்பது பாஜக என்பது வெளிப்படையாகவே நன்கு தெரிகிறது. எப்படியெனில், தேர்தல் பத்திரங்கள் வங்கிகள் மூலமாக இதுவரை மொத்தம் 222 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 210 கோடி ரூபாய்க்கும் அதிகமான பத்திரங்களை, அதாவது மொத்த பத்திரங்களில் 94.5 சதவீதத்தை, பாஜக-தான் பெற்றிருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பது உண்மையானால், பின் ஏன் பிரதமர் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு, ஒரு கூட்டு நாடாளுமன்றக்குழு அமைத்திட மறுக்கிறார்? கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பிரதமரும், பாஜகவும் வலுவாக எதிர்ப்பதிலிருந்தே, நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் கூறமுடியாதவிதத்தில் இதன் பின் ஏதோ ஒளிந்திருக்கிறது என்பது புலனாகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆறேழு மாதங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திட, தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தார் என்று பிரதமர் இப்போது கூறியிருக்கிறார்.   முன்னாள் ஆளுநர் வெளியேறிய பின்னர், இப்போது வந்திருக்கும் ஆளுநர் பிரதமரால் பொறுக்கி எடுக்கப்பட்ட நபர் என்பது உறுதியாகியிருக்கிறது.    ரகுராம் ராஜனும் பிரதமருக்கு வேண்டியவர்தான். எனினும், இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும்  நாட்டின் நிதி அமைப்புமுறையை முறைப்படுத்தும் ஒரு நிறுவனம் என்பதையும் அழித்து ஒழித்திட அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அவரை அப்பதவியில் நீடித்திருப்பதற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
பிரதமரும், அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கின்ற மத்திய ரிசர்வ் நிதி மீது குறியாக இருக்கின்றன. அதிலிருந்து பெரும் பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரி வருவாய்கள் வீழ்ச்சியடைந்திருக்கக்கூடிய நிலையில் இது அவசியம் என்று அரசாங்கம் கருதுகிறது. ஜிஎஸ்டிக்குப் பின்னர், ஆண்டு பட்ஜெட் நிதி பற்றாக்குறை குறியீடு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஏற்கனவே அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, வங்கிகளை மீளவும் முழுமையாகச் செயல்பட வைத்திட அவற்றிற்கு மறுமூலதனம் அளித்திட வேண்டியதும் அவசியமாகும். இதற்கும் அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. இவ்விரண்டு காரணங்களுக்காகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் நிதியை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வாறு செய்யப்பட்டால் அது இந்திய ரிசர்வ் வங்கியைக் கடுமையாகப் பாதித்திடும், நம் பொருளாதாரத்தின்  அடிப்படைகள் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். நம் நாட்டின் நிதிச் சந்தைகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். எல்லாம் சேர்ந்து, நாட்டில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் புதிய  அலையை உருவாக்கிடும்.
மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுதல்
அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, பிரதமர் மிகவும் ஆபத்தான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தபின்னர்தான் கோவில் கட்டுவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதா அல்லது சட்டம் கொண்டுவருவதா என்று அரசாங்கம் பரிசீலனை செய்திடும் என்று பிரதமர் கூறுகிறார். இது, நீதிமன்றத்தை நிர்ப்பந்திக்கும் செயலாகும். ஒருவேளை நீதிமன்றம் பாதகமான தீர்ப்பினை அளித்திட்டால், அத்தீர்ப்பினை தந்திரமாக முறியடித்திடும் விதத்தில் அரசாங்கம் சட்ட பூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ளும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று பிரதமர் கூறிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பிரதமரின் கூற்றின்படி, நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருந்தாலும் அங்கே கோவில் கட்டப்படும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இதன்பொருள், தேர்தலுக்கு முன் மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதேயாகும். அப்போதுதான் அவர்களால் தங்களுடைய இந்துத்துவா மதவெறி வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்திட முடியும். இந்தவிதத்தில் அரசாங்கத்தின் முயற்சிகள் அமைந்திடும்.
குண்டர் கும்பல்கள் கொலைபாதக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக பிரதமர் அளித்துள்ள கருத்துக்கள் இதனை மேலும் உறுதி செய்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை மேலோட்டமாக அவர் கண்டித்திடும் அதே சமயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்களுக்கு எதிராக காவல்துறையினரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எதுவும் கூறாமல் மவுனம் சாதித்திருக்கிறார். இம்மாநிலங்களில் பசுப் பாதுகாப்புக் குழு என்ற பெயரிலும், அறநெறி போலீசார் என்ற பெயரிலும் குண்டர்களடங்கிய தனியார் ராணுவங்கள் பாஜக அரசாங்கத்தின் ஆதரவுடன் நன்கு கொழுத்து வளர்ந்திருக்கின்றன. இத்தகைய குண்டர் கும்பல்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமரால் கூறப்படவில்லை. அதேபோன்று சமூகத்தில் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரிக்கக்கூடிய விதத்தில் குண்டர் கும்பல்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும் ஒரு வார்த்தை கூட  அவர் உதிர்த்திடவில்லை.
அதேபோன்று பெண்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும், சிறுகுழந்தைகள் கூட கூட்டு வன்புணர்வுக் கொடுமைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும், ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. மேலும், பாஜக அரசாங்கங்களால் தலித்துகள், முஸ்லீம்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த கயவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதைக்குறித்தும் ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. அதே சமயத்தில் இவற்றால் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தால் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார்கள்.
முத்தலாக் மற்றும் சபரிமலை
நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டமுன்வடிவு, முஸ்லீம் பெண்களுக்கு அரசமைப்புச்சட்டத்தின் மூலம் சமத்துவ உரிமையை அளிப்பதற்காக இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும், இது பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி அடிப்படையிலானது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், இதே பாலின சமத்துவப் பிரச்சனை சபரிமலை கோவிலுடன் தொடர்புபடுத்தி எழுப்பப்படுகையில், இவை கடவுள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறுகிறார். உண்மையில் பெண்களுக்கு சமத்துவ உரிமை அளிப்பது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமை என்ற முறையில் உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பையே நிராகரிக்கிறார். இவ்வாறு இவர் இரட்டை நாக்கில் பேசுவது என்பது இவர்களின் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலை மீளவும் தெளிவானமுறையில் உறுதிப்படுத்துகிறது. பாஜக தற்போது கேரளாவில் ஸ்தல மட்டத்தில் மக்களிடையே அமைதியின்மையையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட வெறித்தனமான முறையில் இறங்கியிருக்கிறது.
2019 தேர்தல்கள்
வரவிருக்கும் தேர்தல்களில் நாட்டு மக்கள் நல்ல முடிவு  மேற்கொள்வார்கள் என்று ஒரு தெளிவான அறிக்கையை பிரதமர் அளித்திருக்கிறார். உண்மைதான், மக்கள் எப்போதுமே எல்லாத் தேர்தல்களிலும் தெளிவான முடிவுகளைத்தான் எடுக்கிறார்கள். நாட்டிலுள்ள மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதும், இந்த அரசாங்கம் எந்தவிதத்திலாவது தூக்கியெறியப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டதும்,  அவ்வாறான அவர்களின் விருப்பம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பதும் இப்போது தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்கள் மத்தியிலிருந்து இவ்வாறான நிர்ப்பந்தம் வந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தையும், பாஜகவையும் வரவிருக்கும் தேர்தல்களில் படுதோல்வியடையச் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கின்றன. இதற்குப் பிரதான காரணம், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்துள்ள அதிருப்தியேயாகும்.  அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் பெரும்திரளாகப் பங்கேற்றதில் இதனை நன்கு காண முடிந்தது.
வரவிருக்கும் ஜனவரி 8 – 9 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நாட்டில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை மீளவும் ஒருமுறை எடுத்துக்காட்டிடும். அதே நாட்களன்று விவசாய சங்கங்களும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கிராம அளவிலான பாரத் பந்த்நடத்திடவும் அறைகூவல் விடுத்திருப்பதும், மோடி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பிடவும், மக்கள் நலன் காத்திடும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்களை ஆட்சியில் அமர்த்திடவும் மக்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன. நாட்டு மக்களுக்குத் தேவை ஒரு தலைவர் இல்லை, மாறாக அவர்கள் விரும்புவது தங்களைப் பாதுகாத்திடும் கொள்கைகளைத்தான்.
2019 தேர்தல்கள் பிரதமருக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் மற்றும் நாட்டு மக்களுக்கும் இடையேயான போட்டியாக அமைந்திடும்.
ஷேக்ஸ்பியர் ஒருதடவை சொல்லியதைப்போல, என்னதான் அராபிய வாசனைத் திரவியங்களைப் பூசினாலும், உங்களின் கைகளில் உள்ள ரத்தக்கறையைத் துடைத்தெறிந்திட முடியாது, பிரதமர் அவர்களே.
(தமிழில்: ச.வீரமணி)


Thursday, January 3, 2019

பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம்: விவசாய நெருக்கடி காலத்திலும் விவசாயிகளைக் கொள்ளையடிப்பதற்கான வழி


பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம்: விவசாய நெருக்கடி காலத்திலும்

விவசாயிகளைக் கொள்ளையடிப்பதற்கான வழி

-சுபோத் வர்மா

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து அறிவிப்பதற்கு (அல்லது பெயரை மாற்றி அறிவிப்பதற்கு) மத்தியில், மிகவும் நஞ்சு சார்ந்த திட்டங்களில் ஒன்றாக பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமைந்திருக்கிறது. இதன் நோக்கம், விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் அளிப்பதாகும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பேரிடர் போன்று தடுக்கமுடியாத காரணங்களால் பயிர் விளைச்சலில் தோல்வி ஏற்பட்டால், பின்னர் அப்பயிரை விளைவித்த விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்காக இழப்பீடு வழங்கப்படும் என்பதாகும். இது கொள்கையளவில் மிகவும் சிறந்த ஒன்றுதான். இந்தியாவில் விவசாயம் என்பது பெரிதும் பருவ மழையை நம்பியே இருப்பதால், இந்தியாவில் இவ்வாறு பயிர்கள் சேதம் அடைவது என்பது அடிக்கடி நடைபெறக்கூடிய ஒன்றாகும். எனவே, பயிர் விளைச்சலின்போது இத்தகைய இழப்புகள் ஏற்படும்போது, அரசாங்கம் அத்தகைய இழப்புகள் குறித்து கவனம் செலுத்திட வேண்டும்.

ஆனால், மோடி அரசாங்கம் செய்திருப்பது என்ன தெரியுமா? இவ்வாறு பயிர் விளைச்சலில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்போது, அதிலிருந்தும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருப்பதாகும். இதனை மோடி அரசாங்கம் தனக்கு மிகவும் பிடித்தமான மாடலாக விளங்கும் இன்சூரன்ஸ் என்கிற நன்கு நிறுவனமயமாகியுள்ள ஏற்பாட்டின் மூலமாக செய்திருக்கிறது. இந்த மாடலிலும், எப்படி சுகாதாரப் பாதுகாப்பு முறையை ஆயுஷ்மன் பாரத் என்கிற தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலமாக மேற்கொண்டதோ, அதேபோன்று இதனையும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு தன் சொந்தப் பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டுவிட்டது. இத்திட்டத்தை அரசாங்கம் தானே நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக இவற்றை செயல்படுத்திட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இவற்றில் அபரிமிதமான இலாபத்தை ஈட்டியிருக்கின்றன.
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம், எப்படிச் செயல்படுகிறது?—இதற்காக அரசாங்கங்கள் 34,859 கோடி ரூபாய்களை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கின்றன.
விவசாயிகள் இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு தொகையை பிரிமியமாக கொடுத்திட வேண்டும். இது, எதிர்பார்க்கப்படும் மொத்த பிரிமியத்தில் 1.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்குள் வழக்கமாக இருக்கிறது. மீதித்தொகையை மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் சமமாகக் கொடுக்கின்றன. இவ்வாறு வசூலிக்கப்படும் மொத்த பிரிமியத் தொகையும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கஜானாவிற்குச் சென்றுவிடுகின்றன. அறுவடைக்குப் பின்னர், ஒரு விவசாயி, தான் விளைவித்த பயிர், இயற்கைப் பேரிடர் காரணமாக நாசம் அடைந்தால், அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் தான் பெற்றிருக்கிற மொத்த பிரிமியத்திலிருந்து இழப்பீட்டை வழங்கிடும். இந்தத் திட்டம் 2016இல் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் மூன்று சம்பா பருவங்களும், இரண்டு குறுவை பருவங்களும் முடிந்து, இப்போது மூன்றாவது குறுவைப் பருவம் நடந்துகொண்டிருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எவ்வளவு பிரிமியம் பெற்றிருக்கின்றன என்பது குறித்தும், விவசாயிகளுக்கு அவை எவ்வளவு இழப்பீடுகள் வழங்கியிருக்கின்றன என்பது குறித்தும் இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தகவல்கள் 2017 சம்பா பருவம் வரைக்கும் இதுவரை வந்திருக்கின்றன.
கீழே தரப்பட்டிருக்கிற அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல, 2016 சம்பா, 2017-18 குறுவை மற்றும் 2017 சம்பா பருவங்களில் 18 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்துள்ள தொகை 42,114 கோடி ரூபாய்களாகும். இதில் விவசாயிகள் பங்களிப்பு 7,255 கோடி ரூபாய்கள் அல்லது 17 சதவீதமாகும். மீதமுள்ள 34,859 கோடி ரூபாய்கள் அல்லது சுமார் 83 சதவீதம், அரசாங்கத்தின் பங்காகும். அரசாங்கத்தின் பங்கு என்கிறபோது இதில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் இரு சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடாக இதுவரை 32,912 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன. இதன்பொருள் இவற்றுக்கு உபரியாகக் கிடைத்திருக்கும் தொகை என்பது 8,713 கோடி ரூபாய்களாகும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளை எப்படிக் கசக்கிப்பிழிகின்றன?

பருவம்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்துள்ள பிரிமியம் (ரூ.கோடியில்)
இழப்பீட்டுக்கான மொத்த தொகை
(ரூ.கோடியில்)
இழப்பீடு அளித்தது
(ரூ.கோடியில்)
விவசாயிகளி
டமிருந்து பெற்றதில்
உபரி
அரசாங்கத்திடமிருந்து பெற்றதில் உபரி
மொத்தம்
2016 சம்பா
2,919
13,399
16,318
10,494
10,483
5,824
2016-17 குறுவை

1,297
4,731
6,028
5,811
5,657
217
2017 சம்பா
3,039
16,729
19,768
17,096
16,772
2,672
மொத்தம்
7,255
34,859
42,114
33,401
32,912
8,713
(ஆதாரம்: மாநிலங்களவை நட்சத்திரக்குறியிட்ட கேள்வி எண் 121, 21.12.2018)
மேலேகண்ட அட்டவணையிலிருந்து, ஊழல் இமாலய அளவில் இருப்பதைக் காண முடியும். அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? விவசாயிகளுக்கு, பயிர் இழப்புகள் ஏற்படும்போது, அரசாங்கமே நேரடியாக அவர்களுக்கு இழப்பீடுகளை அளித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அவர்கள் தங்களுக்குப் பெரிய அளவில் கமிஷன் எடுத்துக்கொண்டு அல்லது அதில் ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொண்டு மீதியை விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். அரசாங்கம் அளித்துள்ள விவரங்களின்படி, இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுமார் 21 சதவீதத் தொகையை தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பணம் அவதிக்குள்ளாகியிருக்கிற விவசாயிகள் பிரிமியமாகக் கொடுத்த பணம் அல்லது அரசாங்கத்தின் பணமாகும். அரசாங்கத்தின் பணம் என்பதும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம்தான்.
இந்தத் திட்டம் தொடங்கியபின்னர் மத்திய அரசாங்கம் மட்டும் இதற்காக 33,489 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. (அட்டவணை 2ஐப் பார்க்க) இந்தத் தொகை பிரிமியம் மானியமாக மட்டும் போகவில்லை. மத்திய அரசின் பிரிமியம் மானியத்தின் பங்கு என்பது சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஏனெனில் மத்திய அரசாங்கம்  இத்திட்டத்தின்கீழ் அரசு செலுத்தவேண்டிய தொகையில் 50 சதவீதம் மட்டுமே பங்குத்தொகையாக அளித்திட வேண்டும். மீதிப் பாதித் தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அளித்திட வேண்டும். அப்படியானால் கூடுதலாக அளித்திருக்கிற 12 ஆயிரம் கோடி ரூபாய் ஏன்? இதில் ஒரு பகுதி 2016க் முன்பு இருந்துவரும் கடன் பொறுப்புகளைச் சரிசெய்வதற்காகவும் (liabilities clearance) மற்றும் ஒரு பகுதி நிர்வாக செலவினங்களுக்காகவும்  அளித்திருக்கிறது. 
அட்டவணை 2:
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திற்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு
(ரூபாய்கள் கோடியில்)
ஆண்டு
நிதி ஒதுக்கீடு
2016-17
11,054.6
2017-18
9,419.8
2018-19
13,014.2
மொத்தம்
33,488.6
(ஆதாரம்: மாநிலங்களவை நட்சத்திரக்குறியிடப்படாத கேள்வி எண் 1935, 3.8.2018)
ஒவ்வொரு விவசாயிக்கும் வந்திருக்கிற சராசரி இழப்பீடு – வெறும் 11,805 ரூபாய்தான்.
விவசாயிகளுக்கு இழப்பீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? இது மிகவும் சிக்கலான நடைமுறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது. மிகப்பெரிய அளவில் இதனை சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள்தான் தீர்மானிக்கின்றனவேயொழிய, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்ல. ஆகையால், இதற்கான செலவினங்களை மாநில அரசாங்கங்களே செய்கின்றன. ஆனால் இதில் வரும் லாபம்  அனைத்தும் முழுமையாக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு மட்டும்தான். இழப்பீடு எந்த  அளவிற்கு வழங்குவது என்பதற்கு, பயிர் சேதம் அடைந்த பரிசோதனைகள் (CCEs – Crop Cutting Experiments) குறித்து, நாடு முழுதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திலும், இதேபோன்று 15 முதல் 20 லட்சம் பயிர் சேதம் அடைந்த பரிசோதனைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆய்வின் போதும், ஒரு மாதிரி இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கேயுள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் முன்னிலையில் பயிர் வெட்டப்பட்டு, அளவிடப்படுகிறது. இதனை  அதற்கு முந்தைய ஏழு ஆண்டுகளின் சராசரியோடு ஒப்பிட்டு, விளைந்துள்ள இழப்பு குறித்து தீர்மானிக்கிறார்கள்.  இத்தகைய ஆய்வில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிக்கு மிகக் குறைந்த அளவிலேயே இழப்பீடு கிடைக்கிறது.
அகமதாபாத் ஐஐஎம் மேற்கொண்ட ஆய்வின்படி, பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும், சராசரியாக, வெறும் 11,805 ரூபாய் மட்டுமே 2016-17ஆம் ஆண்டில் இழப்பீடாகக் கிடைத்தது.
இழப்பீடு வழங்குவதிலும் தாமதம்
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தத் துவங்கியதிலிருந்தே, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஆகிறது  என்று ஏராளமான முறையீடுகள் வந்திருக்கின்றன. 3 முதல் 4 மாதங்கள் தாமதம் என்பது பொதுவாக இருக்கிறது. பயிர் இழப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. ஏனெனில், விவசாயப் பாதிப்புக்கு உள்ளான விவசாயி, உடனடியாக அடுத்த பருவத்திற்கான பயிர் விளைச்சலைச் செய்வதற்குத் தயாராகிவிடுவார். அதற்குப் பணம் தேவை. எனவே இவருக்கு பணத்தை அளிப்பதில் ஏற்படுத்தப்படும் தாமதம் என்பது, இவர்களை வேறு வழியின்றி கந்துவட்டிக்காரர்களின் பக்கத்தில் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாகத்தான் இழப்பீடு வழங்குவதில் எவ்விதத் தாமதமும் கூடாது என்று சொல்கிறோம். ஆயினும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட கடந்த இரண்டாண்டுகளில் கிடைத்துள்ள அனுபவம் என்பது, இந்தப் பிரச்சனை இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதேயாகும்.
ஏன் இவ்வாறு தாமதங்கள் ஏற்படுகின்றன?
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளிலிருந்து தாமதம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் தெரிய வந்தன. பயிர் சேதம் அடைந்த பரிசோதனை மையங்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முறையாக வருவதில்லை. பின்னர் விவசாயிகளின் உரிமை குறித்து ஆட்சேபணை தெரிவிக்கின்றனர். (இதில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் அடங்கும்.) மாநில அரசுகள் தங்கள் பங்காக செலுத்த வேண்டிய தொகையினை அனுப்புவதில் தாமதம் செய்கின்றன. வங்கிகள் மட்டத்திலும் தாமதங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் இவற்றின் நடைமுறைகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தலையிடுவதேயாகும்.  இதுவரை நாம் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் பொதுவாக அரசாங்கத்தின் சிவப்பு நாடா முறைதான் தாமதங்களுக்குக் காரணமாகும் என்பதாகும். ஆனால் இதில் இன்சூரன்ஸ் நிறுவனங்களே கூடுதல் காரணமாக அமைந்துள்ளன. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விவசாயிகளின் நலனில் எவ்வித அக்கறையும் கிடையாது. அவர்களது ஒரே குறிக்கோள் அதிக  அளவிற்கு இலாபம் ஈட்டுவது என்பது மட்டுமேயாகும். எனவே, எவ்வளவுக்கெவ்வளவு தாமதப் படுத்துகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கு இலாபம்தான். எனவே எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு அவைகள் முட்டுக்கட்டைகள் போடுகின்றன. இது இங்குமட்டுமல்ல, உலகம் முழுதும் செயல்பட்டு வருகின்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களின் குணமும் இதுதான்.
விவசாயிகள் விரக்தி
இவ்வாறு, மிகக் குறைந்த  அளவிலான இழப்பீடு, அவ்வாறு வழங்கும் இழப்பீட்டிற்கும் அதீதமாக காலதாமதம் செய்தல், இழப்பீடுகளை நிராகரித்தல் மற்றும் பிரிமியம் கட்டணங்களை உயர்த்திக்கொண்டே செல்லுதல் – ஆகியவற்றின் காரணமாக பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் மீது விவசாயிகள் கடும் விரக்திக்கு வந்து விட்டார்கள். இது தொடங்கப்பட்ட காலத்தில் (2016 சம்பா) முதல் பருவத்தில் நான்கு கோடிக்கும் மேலான விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்திருந்தார்கள். 2017 சம்பா பருவத்தில் இது 3 கோடியே 47 லட்சமாகக் குறைந்தது. இப்போது இந்த ஆண்டு சம்பா பருவத்தில் 3 கோடியே 33 லட்சமாகக் குறைந்திருக்கிறது. அதாவது 70 லட்சம் விவசாயிகள்  அல்லது 17 சதவீதத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களை இத்திட்டத்திலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள். (இது சம்பா பருவத்திற்கு மட்டுமானதாகும்.) (அட்டவணை 3ஐப் பார்க்க). குறுவை பருவத்திலும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. 2016-17இல் இருந்ததைவிட, 2017-18இல் 10 ஆயிரம் விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள்.      
அட்டவணை 3
(பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் விவசாயிகள் பதிவு)
(இலட்சத்தில்)
2016 சம்பா
402.6
2016-17 குறுவை
170.6
2017 சம்பா
347.8
2017-18 குறுவை
170.5
2018 சம்பா (உத்தேசமாக)
332.7


(ஆதாரம்: மக்களவை நட்சத்திரக்குறியிட்ட கேள்வி எண் 17, 11.12.2018)
இந்தத் திட்டத்தில் விவசாயிகள் எப்படித் தங்களைப் பதிவுசெய்துகொள்கிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஓர் அம்சமாகும். வங்கிகளிடமிருந்து கடன் பெறும் அனைத்து விவசாயிகளும், கட்டாயமாக இத்திட்டத்தின்கீழ் சேர்ந்தாக வேண்டும். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளிலிருந்து தெரிய வந்தது என்னவெனில், வங்கிகள் விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கிடும் சமயத்தில், இதில் சேர்வதற்கான சம்மதக் கடிதம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கிவிடுகிறார்கள் என்பதாகும். இதன்காரணமாகத்தான் இந்த அளவிற்கு விவசாயிகள் இதில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு வேறு வழியில்லை, கடன் பெறும் சமயத்தில் வங்கிகள் எங்கெங்கெல்லாம் கையெழுத்து போடச் சொல்கிறதோ அங்கெங்கெல்லாம் கையெழுத்துப் போட்டுவிடுவார்கள். மேலும் இப்போது வங்கிகளும் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றால் முன்பு கடன்கள் கொடுத்த அளவிற்கு இப்போது கடன்கள் கொடுக்க முடியவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் என்பது விவசாயிகள் பாடுபட்டு ஈட்டும் பணத்தை மட்டுமல்ல,  அரசாங்கத்தின் நிதியையும் (அதுவும் மக்களின் வரிப்பணம்தான்) மிக எளிதாக உறிஞ்சக்கூடிய ஒரு சதி என்பது இப்போது நன்கு தெரியத் தொடங்கிவிட்டது. அந்தப் பணத்தையெல்லாம் எதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தாரை வார்த்திட வேண்டும்? இதன்காரணமாகத்தான் விவசாயிகளுக்குப் போதுமான அளவிற்கு இழப்பீடு கிடைப்பதில்லை. பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பருவமழை பொய்த்துப்போவதன் காரணமாக மற்றும் பயிர் விளைச்சலின்போது அவை பூச்சிக் கொல்லிகளால் நாசம் அடையும் சமயங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்புகளை முழுமையாகத் தன்னுடையதாக எடுத்துக் கொள்ள வேண்டியது சமூகத்தின் கடமையாகும். ஆளும் அரசாங்கங்கள் இவற்றை நேரடியாகத் தங்கள் பொறுப்புகளாக எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திட முன்வர வேண்டும். மாறாக அவர்களுக்கு ஏற்படும் இழப்பிலும் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்திடக் கூடாது. விவசாயிகளின் துன்பத்திலும் இலாபம் ஈட்டக்கூடிய யோசனை என்பது மோடியின் சிந்தனையாக இருக்கக்கூடும். ஆனால், இது சமூகத்தின் அறநெறிக்கும்  சமூக நீதிக்கும் எதிரானதாகும். பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சமயங்களில்  அரசாங்கங்களே முன்வந்து அவர்களைக் கைதூக்கிவிடக்கூடிய விதத்தில், ஓர் இழப்பீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும். இதுவே மக்கள் நலன் காத்திடும்  அரசாங்கங்களுக்கு அழகாகும்.
(தமிழில்: ச. வீரமணி)