Thursday, July 6, 2017

3. முந்நூறு ஆண்டுகளில் சாதிக்காததை முப்பது ஆண்டுகளில்...




சீத்தாராம் யெச்சூரி


முந்நூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது. சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது. முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்திட முடியும்.
இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை. சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.
சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுதல்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர் எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது.
இது ஒரு பிழையான சிந்தனையாகும். அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுதல் காலம், அல்லது மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் - அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுதல் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுதல் காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த ஆட்சிப்பரப்பை மீண்டும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.
அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும். உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில் அடைந்த வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும். துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும். இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.
சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்
சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்று எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.
அரசின் வர்க்கக் குணம்
மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும். முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்கக் குணமாகும். எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது. தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது காங்கிரசில் சமர்ப்பித்தார்.
ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது. சோவியத் யூனியன், முதலாளித்துவ நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும், மிகவும் விரிவானமுறையில் 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். இதற்கு ‘சித்தாந்தம் குறித்த கேள்விகள்’ (“Questions of theory”) என்று தலைப்பிட்டிருந்தார். எனினும், இவ்வாறு வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது.
இதனை மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச் சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில் தீர்மானிக்கப்பட வேண்டியதாகும்.

No comments: