Saturday, December 31, 2011

மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிட வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்



‘‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’’ தன் வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

2011 முடிந்து 2012இல் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் நம் வாழ்வாதாரங்களைத் தீர்மானிக்கக்கூடிய மூன்று முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் 2011இல் நடைபெற்று அவை 2012ஆம் ஆண்டிற்கும் தொடரவிருக்கின்றன.

முதலாவதாக, உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்காக, அகில இந்திய அளவில் லோக்பால் சட்டமும், மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா சட்டமும் கொண்டு வருவதற்கானதொரு சட்டமுன்வடிவு மக்களவையில் மட்டும் கடைசியில் நிறைவேறி இருக்கிறது. ஊழலை ஒழிப்பற்காக இதுபோன்ற அமைப்புகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக ஒரு சட்ட முன்வடிவு முதன்முறையாக 1968 மே 9ஆம் நாள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும், தேர்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே நான்காவது மக்களவை கலைக்கப்பட்டுவிட்டது. அதன்மூலம் அச்சட்டமுன்வடிவும் காலாவதியாகிவிட்டது. அதேபோன்று, 1971 ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் ஐந்தாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்துக் காலாவதியானது. மறுபடியும் நாட்டிலிருந்த அவசரநிலைக்காலம் முடிவடைந்தபின், ஜனதா கட்சி அரசாங்கத்தின் காலத்தில், 1977 ஜூலை 28 அன்று கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவும், மற்றொரு தேர்வுக்குழு அதனைப் பரிசீலனை செய்து முடிப்பதற்கு முன்னமேயே ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டதால், காலாவதியாகிப்போனது. மீண்டும் ஒருமுறை, 1985 ஆகஸ்ட் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் கூட்டுத் தேர்வுக் குழுவினரின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போக முடியாததால் வெளிச்சத்திற்கே வர வில்லை. போஃபோர்ஸ் ஊழலை அடுத்து ராஜீவ்காந்தி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டபின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஒரு லோக்பால் சட்டமுன்வடிவு 1989 டிசம்பர் 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும்கூட 1991 மார்ச்சில் ஒன்பதாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. 1996இலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது, மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின்பேரில் 1996 செப்டம்பர் 13 அன்று ஒரு சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மீது விரிவான ஆய்வினை மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழு தன் அறிக்கையை 1997 மே மாதத்தில் சமர்ப்பித்தது. ஆயினும், மீண்டும் ஒருமுறை, இவற்றின் அடிப்படையில் ஒரு சட்டமுன்வடிவை இறுதிப்படுத்துவதற்கு முன்னமேயே பதினோராவது மக்களவை கலைக்கப்பட்டதால் இச்சட்டமுன்வடிவும் காலாவதியானது.

1996இல் 13 நாட்கள் மட்டும் ஆட்சி செய்துவிட்டு, ஆட்சியைவிட்டு அகன்றபின், பின்னர் மறுபடியும் இரண்டாவது தடவையாக 13 மாதங்கள் ஆட்சி செய்த வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் 1998 ஆகஸ்ட்டில் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியது. அதுவும் 1999இல் 12ஆவது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. பின்னர் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2001 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டமுன்வடிவை பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆயினும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்த போதிலும் பாஜக அதனைச் சட்டமாக்கிட எந்தவிதமான முயற்சியும் எடுத்திடவில்லை. இப்போது ஒன்பதாவது முறையாக லோக்பால் சட்டமுன்வடிவும் லோகாயுக்தா சட்டமுன்வடிவும் நாடாளுமன்றத்தின் முன் வந்திருக்கிறது. மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஒருவிதத்தில் இறுதியாக இதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வந்திருப்பதால், அங்கே பரிசீலனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நிறுவனங்கள் வலுவானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காக, நான்கு முக்கிய பிரச்சனைகள் மீது திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. இந்த அமைப்புகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் மிகவும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஊழலுக்கு இடங்கொடாது, குற்றமிழைத்தோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை வெளி சக்திகள் தலையிட்டு தடுக்க முடியாத வகையில், சுயேச்சையாக இயங்கக்கூடிய வகையில் வலுவானதொரு புலனாய்வு எந்திரம் அளிக்கப்பட வேண்டும், இச்சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கார்பரேட்டுகள் மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் அரசு சாரா அமைப்புகளையும் கொண்டுவரவேண்டும், மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிக்கப்படாது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்தத் திருத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அளிக்கப்பட்ட திருத்தங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநிலங்களவையில் இச்சட்டமுன்வடிவு நிறைவேறும் பட்சத்தில், இச்சட்டமுன்வடிவு மக்களவைக்கு அவற்றை ஏற்பதற்காக மீளவும் அனுப்பப்பட வேண்டும். அரசாங்கம், லோக்பால் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அமைப்புகள் மேலும் வலுவானதாக அமைந்திட ஏற்பட்டிருக்கக்கூடிய வித்தியாசங்களைச் சரிசெய்வதற்காகக் கூட்டு தேர்வுக் குழுவை (துடிiவே ளுநடநஉவ ஊடிஅஅவைவநந) அமைத்திடலாம், அல்லது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முன்வரலாம்.
எது எப்படி இருந்தபோதிலும், உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒழித்துக் கட்டுவதற்காக, சரியான அமைப்புகளை உருவாக்குவதற்காக, கடந்த நாற்பதாண்டு காலமாக மேற்கொண்டுவந்த நீண்ட நெடிய போராட்டம் கடைசியாக 2012இல் அமைவதற்கான வாய்ப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், இதுவும் தாமாகவே ஏற்பட்டுவிடாது. இதற்கான நிர்ப்பந்தத்தை மக்களின் மகத்தான போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து இடைவிடாது அளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார். தன் சிறை நிரப்பும் போராட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆயினும் அவர், நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதே. ஒரு ஜனநாயக நாட்டில்,அரசியல் இயக்கங்களின் உயிர்த்துடிப்புடன் மக்கள் எந்த அளவிற்கு அதிகமாக அரசியல் இயக்கங்களில் பங்குபெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்துத்தான் அந்நாட்டின் ஜனநாயகத்தின் முதிர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தோமானால் அண்ணா ஹசாரேயும் அவர்தம் குழுவினரும் அரசியல் இயக்கங்களில் பங்களிக்க முன்வந்திருப்பதும், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருப்பதும் அவர்களின் நிலைப்பாடு சரியா, இல்லையா என்பதை இனி மக்கள் தீர்மானித்துக்கொள்ள விட்டிருப்பதும் வரவேற்கத் தக்கதேயாகும்.

ஆயினும், உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் முழுமையாக வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், இவர்களது பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் அநேகமாகக் காணப்பட வில்லை அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அது என்னவெனில், இன்று காணப்படும் மிகப்பெரிய அளவிலான ஊழல்கள் அனைத்தும் கடந்த இருபதாண்டுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் கீழேதான் நடந்துள்ளன. ஊழல் என்பது சான்றோர் பழிக்கும் வினையாகத்தான் நம் சமூகத்தில் காலங்காலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றையதினம் நம்மைச் சுற்றியும் காணப்படும் ஊழல் என்பது மிகவும் வித்தியாசமானவைகளாகும். பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள்தான் மக்கள் மத்தியில் அறநெறியற்ற குணங்களையும், இழிவழிகளிலும் திடீர்ப்
பணக்காரர்களாவதற்கான வாய்ப்பு வசதிகளையும் உருவாக்கித் தந்திருக்கின்றன. இன்றைய தினம் நாட்டில் உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலின் முக்கிய காரணிகளாக விளங்கும் கார்பரேட்டுகளையும், தனியார்களையும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் மட்டுமேயாகும். இவ்வாறாக ஊழலை ஒழிப்பதென்பது அறநெறி சார்ந்த ஒன்று மட்டுமல்ல, நம் மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிப்பதனை மறுத்திடக்கூடிய வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய வள ஆதாரங்களை மிகப்பெரிய அளவில் திருப்பிவிடக்கூடிய நடவடிக்கை களுக்கும் எதிரானதாகும்.

உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துடன் சரியானமுறையில் இணைத்திடாமல் வலுவானமுறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் உயர்மட்ட அளவில் ஊழல் புரிந்திட ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவர்கள் புரிந்திடும் ஊழல்களை ஒழிக்க முடியாது. இதனை நன்கு கணக்கில் எடுத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் மீதான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளது.

ஆயினும், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம், மன்மோகன் சிங் அரசாங்கமானது முன்னிலும் மோசமான முறையில் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதன் பொருள், ஒரு பக்கத்தில் உலகப் பொருளாதார மந்தம் ஆழமாகியுள்ள பின்னணியில் நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் வாழ்நிலைமை மேலும் மோசமாக வீழ்ச்சியுறும் அதே சமயத்தில், மறுபக்கத்தில் உயர்மட்ட அளவில் இயங்குபவர்களின் ஊழல் மூலமாகவும், அறநெறியற்ற நடவடிக்கைகளின் விளைவாகவும் நம் நாட்டின் செல்வாதாரங்கள் மேலும் கொள்ளையடிக்கப்படும். எனவேதான், புத்தாண்டில் நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்றிட, ஆட்சியாளர்களின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு எதிராக வலுவான போராட்டங்களுக்குத் தயாராகிட வேண்டும்.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய பின்னணியில் மக்களின் வாழ்க்கைச் சுமைகள் தொடர்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் அரித்திடுவதற்கு இட்டுச்செல்லுமாகையால், சிறந்ததோர் வாழ்க்கை மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, வரவிருக்கும் ஆண்டில் சிறந்ததோர் வாழ்க்கைக்காக நம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்காகவும், நாட்டு மக்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை அளிப்பதற்காகவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தயாராக வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறோம்.

நாட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிடவும், ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிடவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, December 25, 2011

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும்?--மார்கண்டே கட்ஜூ

குடியரசு தினத்தன்று பாரத ரத்னா விருதுகள் வழங்கும் பிரச்சனை இப்போது செய்திகளில் அதிகம் அடிபடத் தொடங்கி இருக்கிறது. உருது கவிஞர் மிர்சா காலிப், வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தபோது பலர் அதை எதிர்த்தனர். அவர்கள் உயிருடன் இல்லை என்பதும், உயிருடன் இல்லாதவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் அதற்குக் காரணம் கூறினார்கள்.

சரியான நபர்களாக இருந்தால் அவர்கள் இறந்திருந்தபோதிலும்கூட அவர்களுக்கு விருதுகள் வழங்குவதில் தவறேதுமில்லை என்பதே என் கருத்தாகும். பாரத ரத்னா விருதுகள் கடந்தகாலங்களில் அவ்வாறு சிலர் இறந்தபின்னரும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. இதற்கு இரு எடுத்துக்காட்டுகள்: சர்தார் பட்டேலும் டாக்டர் அம்பேத்காரும் ஆவார்கள்.
கவிஞர் மிர்சா காலிப் நம் காலத்தைச் சேர்ந்த கவிஞர். ராமரைப் போன்று புராண புருஷர் அல்ல. அதேபோன்று கௌதம புத்தர் போன்று பழங்காலத்தவருமல்ல. நிலப்பிரபுத்துவ பாரம்பர்ய பழக்க வழக்கங்களினூடே அவர் வளர்க்கப் பட்டிருந்தபோதிலும், நவீனகால நாகரிகத்தின் அனுகூலங்களை உற்றுநோக்கி உள்வாங்கியிருந்ததன் மூலம் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்தவர்.

அவர் எழுதிய ஒரு கவிதையின் வரிகள்:

‘‘இமான் முஜே ரோக் ஹே, ஜோ கெஞ்சே ஹே முஜே குஃபர்
கபா மேரே பீச்சே ஹே, கலேசா மேரே ஆகே’’

‘கலேசா’ என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் தேவாலயம். ஆனால் இங்கே அவர் நவீன நாகரிகத்தைக் குறிப்பிடுகிறார். அதேபோன்று, ‘கபா’ என்றால் மெக்காவின் புனித இடத்தைக் குறிக்கிறது. ஆனால் இங்கே அவர் நிலப்பிரபுத்துவத்தைக் குறிப்பிடுகிறார். எனவே இக்கவிதையின் உண்மையான பொருள்:

‘‘மத நம்பிக்கை என்னைப் பின்னே இழுக்கிறது, ஆனால் கடவுள் இருக்கிறாரா என்கிற ஐயம் என்னை முன்னே தள்ளுகிறது,
நிலப்பிரபுத்துவம் என் பின்னே இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னே இருக்கிறது’’
கலிப் இவ்வாறு நிலப்பிரபுத்துவத்தை நிராகரித்து, நவீனகால நாகரிகத்தை வரவேற்கிறார். எப்போது? 19ஆம் நூற்றாண்டின் மத்தியகால வாக்கில், இந்தியா நிலப்பிரபுத்துவத்தின் கீழ் முழுமையாக மூழ்கி இருந்த காலத்தில்.

உருது கவிதைகள் என்பவை இந்தியக் கலாச்சாரத்தின் பொக்கிஷத்திற்குள் ஒளிவீசும் ரத்தினக்கற்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. (இணையதளம் www.kgfindia.com-இல் காணப்படும் ‘உருது என்றால் என்ன’ என்கிற என் கட்டுரையைப் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.) மாபெரும் மொழியான உருதுக்கு மிகப்பெருமளவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 1947க்கு முன்னர், இந்தியாவில் உள்ள பெருவாரியான பகுதிகளில் படித்த வர்க்கத்தினரின் பொது மொழியாக உருது விளங்கியது. அவர்கள் இந்துக்களாகவோ, முஸ்லீம்களாகவோ, சீக்கியர்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ - எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆயினும், 1947க்குப் பின்னர் சில சுயநல சக்திகள் உருது ஓர் அந்நிய மொழி என்றும், அது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான மொழி என்றும் பொய்ப் பிரச்சாரத்தை உருவாக்கின.

மிர்சா காலிப் உருது மொழியின் உன்னதக் கவிஞர். நம் பல்வகைக் கலாச்சாரத்தின் சிறந்த பிரதிநிதி. அவர் ஒரு முஸ்லீமாக இருந்தபோதிலும், முழுமையான அளவில் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர். அவருக்கு இந்து நண்பர்கள் ஏராளமாக உண்டு. அவர் இறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் நம் கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாததொரு பகுதியாக உருது இன்றும் விளங்குவதால் அவர் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2011 ஏப்ரல் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜாஷன்-இ-பஹார் முஷைரா என்னும் சிறப்புக் கூட்டத்தில்தான் கலிப் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என்கிற என் வேண்டுகோளை நான் முதலில் முன்வைத்தேன். என் வேண்டுகோள் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட்டது. அவர்களில் இன்றைய மக்களவை சபாநாயகர் மீரா குமார், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆயினும், ஒரு முன்னணி இதழ் என்னுடைய வேண்டுகோளை ‘வெறிபிடித்த உணர்ச்சி’(‘ளநவேiஅநவேயடளைஅ படிநே நெசளநசம’) என்று விவரித்திருந்தது.
சரத் சந்திரர் சட்டோபாத்யாயா

அதேபோன்று சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். சரத் சந்திரர் தன் கதைகளில் சாதிய முறை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, மூடப் பழக்க வழக்கங்கள், (அவரது ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ரஹீன், தேவதாஸ், பிராமணனின் மகள், கிராமின் சமாஜ் கதைகளைப் பார்க்க) போன்று இன்றளவும் இந்தியாவைப் பீடித்துள்ள கொடிய சமூகக் கேடுகள் மீது மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்திருந்தார்.

கல்கத்தா டவுன் ஹாலில் 1933இல் சரத் சந்திரரைக் கௌரவிக்கும் வண்ணம் நடைபெற்றதொரு கூட்டத்தில் சரத் சந்திரர் கூறியதாவது:
‘‘நான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். இவ்வாறு நான் கடன்பட்டிருப்பது எனக்கு முன் இத்துறையில் தடம் பதித்துள்ள முன்னோர்களுக்கு மட்டும் அல்ல. இந்த உலகத்தைச் சிருஷ்டித்து, அதற்குப் பிரதிபலனாக எதுவுமே பெறாத, தங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லாத சாமானிய மக்களுக்கும், யாரும் கேட்பாரற்றுக் கண்ணீரும் கம்பலையுமாக இருந்து வரும் நலிவடைந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்படியும், தங்களுக்காக சமூகத்தில் குரல் கொடுக்கும்படியும் அவர்கள்தான் எனக்கு உத்வேகத்தை அளித்தார்கள். இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லொண்ணாக் கொடுமைகளை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஒவ்வோராண்டும் வசந்தம் வருவது என்னவோ உண்மைதான். ஆனால் அதன் அழகை, புதிதாகப் பூக்கும் மலர்களின் இனிய நறுமணத்தைச் சுவாசித்திட, குயில்களின் பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் பார்க்க முடியாத வண்ணம் என் பார்வை சிறைப்படுத்தப்பட்டிருந்தது.’’

நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக சராசரியாக ஒவ்வொரு நாளும் 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சுகாதாரக் கவனிப்பின்மை, வீட்டுவசதியின்மை, கல்வியின்மை போன்று பிரச்சனைகள் பல்வேறு ரூபங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் சரத் சந்திரரின் இந்த உரையானது எழுத்தாளர்கள் பலரை இன்றளவும் ஈர்த்துக்கொண்டுதான் உள்ளது.

சுப்பிரமணிய பாரதியார்
அதேபோன்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், முழுமையான தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய மாபெரும் தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

பெண்கள் விடுதலைக்கு ஆதரவாக பாரதி எழுதிய சக்திவாய்ந்த கவிதையை இங்கே தருகிறேன். நான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சமயத்தில் ‘ஹின்சா விரோதாக் சங் (எதிர்) மிர்சாபூர் மோட்டி குரேஷ் ஜமாத் மற்றும் பலர்’ வழக்கில் 2008 மார்ச் 14 அன்று அளித்திட்ட தீர்ப்பில் இதனை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன் றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்.

பாரதியின் மற்றொரு கவிதை:

கும்மியடி தமிழ் நாடு முழுதுங்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி.

ஏட்டையும் பெண்கள் தொழுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் கலிபையும், சரத் சந்திரரையும் சுப்பிரமணிய பாரதியையும் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாம் எந்த அளவிற்குமிகவும் கீழ்த்தரமான கலாச்சார மட்டத்தில் சிக்கிக்கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம் என்பதனையே இது காட்டுகிறது. நாம் நம் உண்மையான வீரர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்கிறோம், மாறாக மேலெழுந்தவாரியானவர்களை உயர்த்திப் பிடிக்கிறோம். இந்தியாவில் இன்றைய தலைமுறை அநேகமாக முற்றிலும் பண்பாடிழந்து விட்டது என்று கூறுவதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்கள் கவனம் எல்லாம் பணம், திரைப்பட நடிகர்கள்-நடிகைகள், கிரிக்கெட் மற்றும் மேலெழுந்தவாரியான விஷயங்கள் என்றாகிவிட்டன.
இன்றைய இந்தியா எந்தத் திசையில் செல்வதென்று தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு நல்ல திசைவழியைக்காட்டி நாட்டு மக்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்பவர்களே இப்போது நமக்குத் தேவை. அத்தகையோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இல்லை. கிரிக்கெட் விளையாடுபவர்கள், திரைப்பட நடிகர்கள் போன்று எவ்வித சமூகப் பிரக்ஞையுமற்றவர்களுக்கு கொடுப்பது என்பது விருதினையே கேலிக்குரியதாக ஆக்கிவிடும்.

(மார்கண்டே கட்ஜூ,
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும்,
இந்திய பிரஸ் கவுன்சில் இன்னாள் தலைவருமாவார்.)
நன்றி: தி இந்து நாளிதழ், 21.12.11
தமிழில்: ச.வீரமணி

Saturday, December 24, 2011

கடுமையான பொருளாதாரச் சூழ்நிலையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுக



யர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களைச் சமாளிப்பதற்காக லோக்பால் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் நிலவும் கடும் பொருளாதாரச் சூழ்நிலையும், வரவிருக்கும் காலங்களில் மேலும் கடுமையான முறையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கைகளும் நாட்டின் சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேலும் கொடூரமானத் தாக்குதலைத் தொடுக்க விருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கடுமையாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் ஐமுகூ-2 அரசாங்கத்தின் ‘‘ஆபத்பாந்தவரான’’ நிதி அமைச்சர், நாட்டின் கார்பரேட் முதலாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். 2011 அக்டோபர் மாதத்திற்கான தொழில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெ@ம் -5.1 விழுக்காட்டைப் (minus 5.1 percent) பதிவு செய்திருக்கிறது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஓர் அமெரிக்க டாலருக்கு 54 ரூபாய் என்று வரலாறு படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகுப்புற வீழ்ந்திருக்கிறது. இவ்வாறு ரூபாயின் மதிப்புக் குறைவதனால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் என்ற போதிலும், ஏற்றுமதியாகும் பொருள்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மதிப்பீடுகளும் கடுமையாகக் குறைந்திருக்கின்றன. மாநிலங்களவையில், 63 ஆயிரத்து 180 கோடி ரூபாய்கள் கூடுதலாக ஒதுக்குவதற்காக நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பதிலளித்த நிதி அமைச்சர், ‘‘வரவிருக்கும் நெருக்கடியை சமாளித்து மீளக்கூடிய வல்லமையை’’ இந்தியா பெற்றிருக்கிறது என்று கூறினார். இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு நிதித்துறையில் மேலும் தாராளமய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் அடிக்கோடிட்டிருக்கிறார். இதன் பொருள் என்ன தெரியுமா? இத்தகைய தாராளமய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவின் ஆதரவினைப் பெற்றிட வேண்டும் என்பதேயாகும். இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பாஜக தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் காலத்தின்போது கொண்டு வரப்பட்டவையே என்பதையும் அவர் அப்போது அவர்களுக்கு நினைவூட்டியிருக்கிறார்.

இத்தகைய தாராளமய நடவடிக்கைகளுக்கு பாஜகவிடமிருந்தும் உடனடியாக ஒத்துழைப்பு கிடைத்திடும் என்பது திண்ணம். ஆயுள் காப்பீட்டுக் கழகத் திருத்தச் சட்டமுன்வடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்த திருத்தத்தைத் தோற்கடித்து ஐமுகூ-2 அரசாங்கத்தை பாஜக காப்பாற்றியது. பாஜக மட்டும் அரசாங்கத்தைக் காப்பாற்ற முன்வராதிருந்திருக்குமானால் அந்தச் சட்டமுன்வடிவு தோற்றுப்போயிருக்கும். தற்போது ஓய்வூதிய நிதிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காகக் கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவின்போதும், வங்கிகளில் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரும்போதும், இவ்வாறு காங்கிரசும் பாஜகவும் ஒத்துப்போக ஒப்புக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய சீர்திருத்தங்கள் அனைத்தும் சர்வதேச முதலீட்டாளர்களையும், அந்நிய நிதி மூலதனத்தையும் ‘‘இந்தியாவிற்கு வருக, எங்கள் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்க’’ என்று நயந்து பேசி இச்சகம் செய்து வரவழைப்பதைக் குறியாகக் கொண்டதாகும். அந்நிய மூலதனம் இவ்வாறு நாட்டிற்குள் வருவதானது இந்தியாவின் நிதிநிலைமைகளை அழகுபடுத்திடும் என்றும், இந்திய முதலாளிகளுக்கும் ‘சென்செக்ஸ்’ என்னும் பங்குச்சந்தை புள்ளிகளுக்கும் நம்பிக்கையூட்டிடும் என்றும் நம்பப்படுகிறது. இதனை அடுத்து, ‘‘அனைத்தும் நன்றாகவே நடக்கிறது’’ என்று கூறுபவர்களையும் இது திருப்திப்படுத்திடும்.

ஆயினும் இவை அனைத்துமே சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றிட எதுவுமே செய்யப்போவதில்லை. மாறாக, சர்வதேச நிதி மூலதனம் மிகப்பெரியஅளவில் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வாய்ப்பு வசதிகளை உருவாக்கித் தருவது என்பதானது நம் நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களை மேலும் கொடூரமான முறையில் வறிய நிலைக்கே தள்ளிவிடும்.
மேலும், அந்நிய நிதிமூலதனம் இந்தியாவிற்குள் வருவது மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஆரோக்கியமானதாகத் தெரியலாம். ஆனால் நாட்டின் பொருளாதார அடிப்படைகளை மேலும் கடுமையாகப் பாதிக்கும். ‘சென்செக்ஸ்‘ என்னும் பங்குச்சந்தை புள்ளிகளுக்கு இது உற்சாகத்தைக் கொடுக்கலாம். இந்திய கார்பரேட் முதலாளிகளுக்கும் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகைகளை அனுமதித்திடலாம். ஆயினும் நாட்டின் பெரும்பான்மையான சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட இவை எதுவும் செய்யப் போவதில்லை.

அரசாங்கம் கூடுதல் செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவின் மூலம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரும் சமயத்தில், நிதி அமைச்சர் அவர்கள், இறக்குமதிக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பதற்கு எரிபொருள்கள் விலை உயர்வும், மக்களுக்கு அளித்திடும் மான்யங்கள் அதிகரித்திருப்பதுமே காரணங்கள் என்று கூறியிருக்கிறார். ஒவ்வோராண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக மான்யங்கள் அளிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றும் ஒப்பாரி வைத்திருக்கிறார். ஆனால், அதேசமயத்தில், நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர், இந்த ஆண்டில், இதுவரை மட்டுமே, பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளிலிருந்து மட்டும் அரசுக்கு 1.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறதே என்ற உண்மையைக் கூறியபோது, அவர் வாயே திறக்கவில்லை. அதாவது, மக்களுக்கு அளிக்கப்படும் மான்யங்களைவிட அதிக அளவில் அரசாங்கம் மக்களிடமிருந்து வரிகள் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறது. அரசின் வருவாயில் பெரும்பகுதி பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு வந்ததேயாகும். இவ்வாறு விலை உயர்வால் இத்தொகைகளை அரசுக்கு வாரி வழங்கியிருப்பது மக்களே. அதாவது, மக்கள்தான் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் அளவிற்கு மான்யங்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கமானது இத்தகைய ‘அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்’ மூலமாக, வருகின்ற கூடுதல் மூலதனம் இந்திய கார்பரேட் முதலாளிகள் கைகளில் சேர்ந்து அவர்கள் அடிக்கும் கொள்ளை லாபங்கள் நாட்டின் முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மொத்த உள்நாட்டுஉற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறது. இது தவறான ஊகமே. இதில் அரசு எங்கே தவறு செய்கிறதென்றால், இவ்வாறு முதலாளிகள் உற்பத்தி செய்திடும் பொருள்கள் விற்கப்பட வேண்டும் அல்லவா? அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ள நிலையில் அவற்றை வாங்கவே வழிதெரியாது விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ள நிலையில் இத்தகைய முதலாளிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை அவர்கள் எப்படி வாங்குவார்கள்?
இவ்வாறு மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும், உள்நாட்டுத் தேவை மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையிலும் முதலாளிகளுக்கு முதலீடுகளுக்காக மூலதனத்தை அளிப்பதன் மூலம் மட்டும் வளர்ச்சி வந்துவிடாது. நாட்டில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதனைச் செய்திட வேண்டுமானால் நாட்டில் பெரிய அளவில் பொது முதலீடுகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் இவ்வாறு பொது முதலீடுகளின் மூலம் நாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் மக்களுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்திடும். அவர்களின் சொந்த வீட்டுத் தேவைகளும் விரிவாக்கப்படும். இதையெல்லாம் அரசாங்கம் செய்வதற்குப் பதிலாக, தன்னுடைய நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் மும்முரமாக செயல்படுத்திடவும், அதன் மூலம் சர்வதேச மூலதனமும் இந்திய கார்பரேட் முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டிடவும் ஐமுகூ 2 அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

2008ஆம் ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஊக்கத் தொகைகள் (stimulus packages)மூலம் எவ்விதமான பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஏற்படவில்லை என்பதை சமீபத்திய பொருளாதார மந்த நிலைமை மெய்ப்பித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கம் வரவேண்டிய வரிபாக்கிகளைத் தள்ளுபடி செய்ததன் மூலம் இவ்வாறு கார்பரேட் முதலாளிகளுக்கு அளித்த ஊக்கத் தொகைகள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாய்களாகும். இதில், 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய்கள் கார்பரேட்டுகளுக்கும் அதிகபட்சம் வருமான வரி செலுத்துவோருக்கும் நேரடியாகவே அளித்திட்ட சலுகைகளாகும். விளைவு என்னாயிற்று? பொருளாதார நெருக்கடி வேகமாக மாறி இன்றைய தினம் நம்மைத் திகைக்க வைத்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியின்போதும் பெரிய அளவில் பயனடைந்தோர் ‘‘ஒளிரும் இந்தியா’’வைச் சேர்ந்தவர்களேயாவார்கள். கடந்த மூன்றாண்டுகளில், இந்தியாவில் உள்ள அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 26 இலிருந்து 52க்குச் சென்று பின்னர் அது 69 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த 69 பேர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் சேர்த்துப் பார்த்தோமானால் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குச் சமமாக இருக்கும். அதேசமயம் மறுபக்கத்தில் நாட்டு மக்களில் 80 கோடிக்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
அடுத்து, அரசுத்தரப்பில் அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்திருப்பதும் தவறான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. பணக்காரர்களுக்கு அளித்துள்ள அபரிமிதமான சலுகைகளுடன் ஒப்பிடுகையில், நிதிப் பற்றாக்குறையாகக் காட்டப்பட்டிருக்கும் 4 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் என்பது மிகவும் அற்பத்தொகையேயாகும். அரசுக்கு வரவேண்டிய சட்டப்படியான வரிகள் அனைத்தும் வசூலிக்கப்பட்டிருந்தால், நிதிப்பற்றாக்குறைக்கே வாய்ப்பில்லை. மேலும் நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி, பொது முதலீடுகள் மூலம் பெரிய அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமாக வளர்ந்து அதன் மூலம் நாட்டின் பெருவாரியான மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பாடு அடைந்திருக்கும்.

ஐமுகூ-2 அரசாங்கமானது ஒரு வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றி, உயர்மட்ட அளவில் நடைபெற்றுவரும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்திடவும், அதன்மூலம் அரசுக்குக் கூடுதலாகக் கிடைத்திடும் வள ஆதாரங்களை நாட்டு மக்களின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்திட அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய அதே சமயத்தில், அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் தாராளமயப்படுத்திட மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்திடக்கூடாது. இதனையும் மாற்றக்கூடிய வகையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது என்பதையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிடவேண்டும். இரு கட்சிகளுமே அந்நிய மூலதனம் மற்றும் இந்திய கார்பரேட் முதலாளிகளின் நலன்களைக் காத்திட வேலை செய்யக்கூடிய அளவிற்கு, நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட செயல்படவில்லை என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்திட வேண்டும். கூடுதலாக, பாஜக, தன்னுடைய நாசகர மதவெறி நிகழ்ச்சிநிரலையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, December 17, 2011

வலுவான லோக்பால் சட்டம் தேவை



ரசாங்கத்தின் உயர் மட்டத்திலும் மற்றும் பல்வேறு பொதுநிறுனங்களிலும் நிலவும் ஊழல்கள் ஒழிக்கப்படக்கூடிய வகையில் ஒரு வலுவான லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் படலாம் என்கிற முறையில் அபரிமிதமான ஆர்வத்துடன் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவக்கூடிய பின்னணியில்தான் அரசாங்கம் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த வரைவு சட்டமுன்வடிவின் மீது அளித்துள்ள பல்வேறு பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நாம் இப்பகுதியில் கடந்த காலங்களில் பலமுறை சொல்லி வந்ததைப்போல், கடந்த இருபதாண்டு காலமாகவே நாட்டில் லோக்பால் போன்றதொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்திருக்கிறது. போஃபோர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கியபின், அதன் விளைவாக அரசாங்கத்திலும் அரசியல் தலைமையில் மாற்றம் வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, உயர்மட்டங்கள் நடைபெறும் ஊழலை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரி வந்திருக்கிறது. 1989இல் விபி சிங் அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்த சமயத்தில், இத்தகையதோர் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது. அந்த சமயத்திலும், பின்னர் இரு தடவைகளிலும், 1996இல் தேவ கவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தயவில் ஆட்சியில் நீடித்த சமயத்திலும் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அது சட்டமாக நிறைவேறக்கூடிய சூழல் உருவாகவில்லை. மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கம் உருவாவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் இடதுசாரிகளின் தயவை நாடியிருந்த சமயத்தில், அதனுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும் என்கிற உறுதிமொழியைச் சேர்க்கப்பட்டது.

மேற்கண்டவாறு நாம் முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து சமயங்களிலும் வரைவு சட்டமுன்வடிவு பல்வேறு பிரச்சனைகளில் சச்சரவுகள் இருந்து வந்ததால் வெளிச்சத்திற்கே வரவில்லை. அதில் மிகவும் முக்கியமான விஷயம், இச்சட்டத்தின் வரையறைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது குறித்ததாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதுமே, அதிலும் குறிப்பாக போஃபோர்ஸ் ஊழலுக்குப் பின், பிரதமரும் லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறது.

இந்தத் தடவையும் அரசின் உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள பின்னணியில், மக்களின் கோபாவேசம் அதிகரித்துள்ளது.
ஐமுகூ-2 அரசாங்கமானது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலை விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த அடாவடித்தனத்தின் காரணமாக, 2010இல் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமையாக வீணடிக்கப்பட்ட கசப்பான உண்மையை அடுத்து, நாடாளுமன்றத்தின் மீதே மக்களுக்கிருந்து வந்த நம்பிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இவ்வாறு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபாவேசத்தை அறிந்தபின்னர் ஐமுகூ-2 அரசாங்கம் கடைசியில் முந்தைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வரைவு சட்டமுன்வடிவை மீளவும் தாக்கல செய்ய முன்வந்துள்ளது.

தற்போது, நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய விவாதங்களை முடித்துள்ள நிலையில், சட்டமுன்வடிவானது இறுதி வடிவத்திற்கு வந்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இதன் மீது அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, வரைவு சட்டமுன்வடிவை ஒரு வலுவான சட்டமுன்வடிவாக மாற்றிட, அச்சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும், திருத்தங்களையும் சமர்ப்பித்தார். அவ்வாறு அவர் சமர்ப்பித்த குறிப்புகளுடன், தற்போது நடைபெறும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்திலும், கீழ்க்கண்ட முன்மொழிவுகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டது.

(1) லோக்பால் சட்டத்தின் அதிகாரவரம்பெல்லைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது தொடர்பாக ஒரு பொதுவான கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. லோக்பாலின் வரையறைக்குள் பிரதமரும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக அரசு துல்லியமான பரிந்துரைகளுடன் வர வேண்டும். எக்காரணம் கொண்டும், சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் பிரதமர் அலுவலகத்தின் வணிகத் தொடர்புகள் எதுவும் இதன் வரையறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படக் கூடாது.

(2) ஊழலை வலுவாகக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் நீதித்துறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும் நியமனங்கள், மாற்றல்கள் தொடர்பாக ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் அவற்றை விசாரிக்கக்கூடிய அளவிற்கு ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

(3) நாட்டில் தேர்தல்கள் நடைபெறும்போது பணபலம் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழித்திட வகைசெய்யும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படாமல் நம் நாட்டில் இலஞ்ச ஊழலை வலுவாக ஒழித்திட முடியாது.

(4) அனைத்து மட்டங்களிலும் லஞ்ச ஊழலால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் தொடர்பாக வரும் குறைபாடுகளை விசாரிப்பதற்குத் தனியே குறைதீர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
(5) லோக்பால் சட்டத்தின் அதிகாரங்கள் ஊழலில் ஈடுபடும் அனைத்துத்தர அதிகாரிகளின்மீதும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அளவிற்கு விரிவாக்கப்பட வேண்டும். இதேபோன்று அனைத்து இனத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மாநில மட்டத்தில் லோகாயுக்தாக்கள் அமைக்கப்பட வேண்டும்.

(6) லோக் பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) மீது பிரத்யேக அதிகாரவரம்பெல்லையுடன் தனியே ஒரு புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஊழல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்கக்கூடிய அளவிற்குத் தனி புலனாய்வு அமைப்பாக இது அமைந்திட வேண்டும். மத்தியப் புலனாய்வுக் கழகமும் லோக்பால் வரம்பெல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித அதிகாரமுமற்ற, வலுவற்ற அமைப்பாக லோக்பால் மாற்றப்பட்டுவிடக் கூடாது.

(7) லோக்பால் கீழான தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் சுயேச்சையான தேர்வுக் குழுவின் மூலமே மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் இயக்குநரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

(8) இத்தகைய நியமனங்களுக்கான தேர்வுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் பெயர்களைத் தயார் செய்வதற்கான ஆய்வுக் குழு அமைக்கப்படுதல் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

(9) ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வீச்சுடன் நடத்திட, 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் வரையறை (னநகinவைiடிn) திருத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இன்றுள்ள சட்டத்தின்படி லஞ்சம் பெறுபவர் மட்டுமே குற்றத்துடன் பிணைக்கப்படுகிறார், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குப் புறம்பாக முறைகேடாக ஆதாயம் அடைபவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்படுவதில்லை. யாருடைய செயல்பாடுகளினாலும் முடிவுகளினாலும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறதோ அவர்கள் அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கொண்டுவரப் பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை ஆகியவை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் அதே சமயத்தில், அவர்கள் லஞ்சஊழலில் ஈடுபட்டால் இதனை அமல்படுத்திடக் கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத்தின் 105ஆவது விதி திருத்தப்படுவது உட்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில், இகழார்ந்த ஜேஎம்எம் லஞ்சை வழக்கில் நடைபெற்றதைப்போல லஞ்சம் கொடுத்தவர் தண்டிக்கப்படுவதையும், லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதையும் (exonerated) தடுத்திட முடியாது. இது தொடர்பாக மிகவும் அருவருக்கத்தக்க மற்றொரு உதாரணம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீது 2008இல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்ற அசிங்கமாகும்.

(11) ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவாக அமைந்திட வேண்டுமானால், ஒப்பந்தங்கள், உரிமங்கள் முதலானவற்றைப் பெற்றிட கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் லஞ்சலாவண்யங்களை விசாரிக்கக்கூடிய அளவிலும் லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசின் உதவிகளைப் பெறும் அனைத்து அமைப்புகளும் இச்சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

லோக்பால் சட்டம் தொடர்பான விதிகள் ஆட்சிகள் மாறும்போதெல்லாம் மாறக்கூடிய விதத்தில் அமைந்துவிடக் கூடாது. முறையான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள இந்த ஆலோசனைகள் அரசு உரிய முறையில் பரிசீலித்து உரிய திருத்தங்களுடன் மீண்டும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டிட வேண்டும்.
இவ்வாறு அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்மொழிவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சனை மீது ஓர் அவசரகதியில் அரசாங்கத்தை செயல்பட வைப்பதை உத்தரவாதப்படுத்திட நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலுவான வகையில் நிர்ப்பந்தம் அளித்திடக் கூடிய வகையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, December 13, 2011

முதலாளித்துவத்திற்கு எதிரானதோர் அரசியல் மாற்றை உருவாக்கிடுவோம்-சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகள் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி சங்கநாதம்

ஏதென்ஸ், டிச. 12-
முதலாளித்துவத்திற்கு எதிரானதோர் அரசியல் மாற்றை உருவாக்கிட நாம் அனைவரும் களத்தில் இறங்குவோம் என்று சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு, கீரிஸ் நாட்டின் ஏதென்ஸ் தலைநகரில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டினை நடத்திடும் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அலெகா பப்பரிகா மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி மாநாட்டின் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தோழர்களுக்கும் முதற்கண் என் புரட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு உலகம் முழுதும் ஒருமுறை சுற்றியபின்னர் மீண்டும் ஏதென்ஸ் தலைநகரில் நடைபெறுவதும் அதில் பங்கேற்றிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.
உலகில், முதலாளித்துவ முறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அல்லாத மக்களும் கூட முதலாளித்துவ முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உலகம் முழுதும் போராடிக்கொண்டிருக்கக்கூடிய தருணத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு கிரீஸ் நாட்டிலும் அத்தகைய போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடும் கிரீஸ் நாட்டின் தோழர்களுக்கும் மக்களுக்கும் நம் வீரஞ்செறிந்த ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கிரிஸில் மக்களின் போராட்டங்கள் வீச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் நாம் இங்கே இம்மாநாட்டை நடத்திக்கொண்டிருப்பதன் மூலம் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
இம்மாநாட்டின் கருப்பொருள் மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்தது. முதலாவது, சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சிக்குப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்ட அனுபவம். சோவியத் யூனியனில் நடைபெற்ற எதிர்ப் புரட்சியானது, மார்க்சிச-லெனினிசத்தின் புரட்சிகர அறிவியலையோ அல்லது சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றுவதையோ எவ்விதத்திலும் மறுதலிக்கவில்லை.
சோசலிசத்தைக் கட்டுவதில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடுகள், ஏகாதிபத்தியம்/முதலாளித்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டல், சோசலிசம் குறித்து அதீதமான மதிப்பீடு மற்றும் மார்க்சிச-லெனினிசத்தின் அறிவியல்பூர்வமான மற்றும் புரட்சிகரக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றமை ஆகியவையே சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சி உருவானதற்குக் காரணங்களாகும்.
இம்மாநாட்டுக் கருப்பொருளின் இரண்டாவது அம்சம் குறித்துக் கூறுகையில், மேலே கூறியவாறு நடைபெற்ற நிகழ்ச்சிப் போக்குகள் ஏகாதிபத்தியமானது உலகம் முழுதும் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் தன்னுடைய மேலாதிக்கத்தை வலுப்படுத்திட மூர்க்கத்தனமாகத் தாக்குதலைத் தொடுத்திட வழிவகுத்தது. ஆயினும் கூட, முதலாளித்துவம் அபரிமிதமானமுறையில் வளர்ச்சி அடைந்திருந்தபோதிலும்கூட, அதனால் தன்னை ஒரு சுரண்டலற்ற அமைப்பாகவோ அல்லது நெருக்கடியற்ற அமைப்பாகவோ மெய்ப்பிக்க முடியவில்லை என்பது மீண்டும் வலுவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய முடிவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, உலகில் உள்ள பல கட்சிகள் இத்தகைய முடிவுகளுக்கு வந்திருந்தன. அவை இன்றையதினம் எவ்விதப் பிசிறுமின்றி சரியானவையே என்று மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எடுத்திடும் ஒவ்வொரு முயற்சியும்ம அதனை மேலும் ஓர் ஆழமான புதிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

உற்பத்தி உறவுகளை அழித்திடுவதையே தன் ஒவ்வொரு முயற்சியின் போதும் உலக முதலாளித்துவம் கைக்கொள்கிறது. இதன் காரணமாக அது மக்கள் மீதான சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்துகிறது. சமீபத்தில் உலகின் பல நாடுகளில் கார்பரேட்டுகள் தங்களுக்கு ஏற்பட்ட திவால் நிலையே அந்தந்த நாட்டு அரசுகளின் திவால் நிலையாக மாற்றியதிலிருந்து இக்கொடூரத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அதன் காரணமாக அந்த அரசுகள் மக்களுக்கு அளித்து வந்த பல்வேறு நலத் திட்டங்களை வெட்டிக்குறைத்தன. இவ்வாறு அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்தோங்கி வருகின்றன. இதனை லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நம்மால் பார்கக முடிகிறது. அமெரிக்காவில் நடைபெறும் ‘‘வால் ஸ்ட்ரீட் எதிர்ப்பு’ கிளர்ச்சிகள் முதலாளித்துவ முறையையே கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கின்றன. இன்றைய கடும் நெருக்கடிக்குக் காரணங்கள், முதலாளித்துவ முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளால் அல்ல, இம்முறையே தவறு என்று அவை உரக்கக் கூறத் தொடங்கியுள்ளன.
முதலாளித்துவத்தைத் தூக்கி எறியவும், சோசலிசத்தைக் கட்டிடவும் வலுவான முறையில் தொழிலாளர்வர்க்க சர்வதேசியத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியையும் கட்டவேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும். இதற்கு இங்கு குழுமியுள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளும் தங்கள் நாடுகளில் நடைபெறும் வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் அதே சமயத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்கிற அரசியல் மாற்றுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்திட வேண்டும்.

இத்தகைய போராட்டங்களை நாம் நம் நாடுகளில் உள்ள துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ற வகையில் நம் போராட்ட வடிவங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
இதற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் நான் ஓர் உதாரணத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இந்திய அரசு, சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட முடிவு செய்திருந்ததை. அதனை அது கொண்டுவர முடியாமல் அதற்கு நிர்ப்பந்தம் கொடுத்து அதனைத் திரும்பப் பெற வைத்த பின்னரே நான் இங்கே வந்திருக்கிறேன். இந்தத் துறையில் இந்தியாவில் சுமார் 5 கோடி மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் குடும்பத்தாரையும் சேர்த்தால் இது சுமார் 25 கோடி பேர்களாகும். எனவே, வால்மார்ட் இப்போதைக்கு இந்தியாவுக்குள் நுழைய முடியாது.

அரசுகள் பொது முதலீட்டை அதிகரிக்குமானால் அதன்மூலம் வேலைவாய்ப்புப் பெருகும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுத் தேவைகளும் அதிகரிக்கும். எனவே அரசுகள் முதலாளிகளுக்கு ‘‘ஊக்கத்தொகை’’ stimulus) அல்லது ‘‘நிவாரண உதவிகள்’’ (‘bail out’ packages) அளிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு உதவும் வகையில் பொது முதலீட்டை அதிகரிக்க வைத்திட வேண்டும்.
‘முதலாளித்துவ முறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அது மீள்வதற்கு வழிவகைகள் சொல்லாமல் ஏன் அம்முறையையே தூக்கி எறியவேண்டும் என்று சொல்கிறீர்கள்’ என்று நம்மைப்பார்த்து சிலர் கேட்கிறார்கள். ஏனெனில் நாம் சொல்லும் தீர்வுக்ளை முதலாளிகள் கேட்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் குறிக்கோள் கொள்ளை லாபம். நாம் கூறும் வழிமுறைகள் அதற்கு இடம் கொடுக்காது.

எனவேதான் சோசலிசம் என்கிற நம் அரசியல் மாற்றை வலுப்படுத்திடக்கூடிய வகையில் மக்களை அணிதிரட்டிட வேண்டும்.
வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள், நிச்சயமாக முதலாளித்துவ அமைப்பு முறையை ஒருநாள் தூக்கி எறியும்.
முதலாளித்துவத்திற்கு எதிரான புறச் சூழ்நிலைகள் வேகமாகவும் நமக்குச் சாதகமாகவும் வளர்ந்து வருகின்றன. ஆயினும் மாமேதை லெனின் எச்சரித்ததுபோல அதற்கேற்ற வகையில் நம் அகக் காரணிகளையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். மார்க்சிசம்-லெனினிசம் என்கிற புரட்சிகரத் தத்துவத்தினை ஏற்றுக்கொண்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

வரலாற்றுத் தொலைநோக்கில் நிச்சயம் சோசலிசம் தவிர்க்க முடியாதது. அது தாமதப்படலாம், ஆயினும் அது வருவதை எவரும் தடுத்திட முடியாது. எவ்வளவு விரைவாக அது வரும் என்பது நம்மையே சார்ந்திருக்கிறது. அதனை விரைவுபடுத்தும் பணியில் நம் பணிகளை நாம் முடுக்கி விடுவோம்.

‘‘சோசலிசத்திற்கு எதிர்காலம் உண்டா?’’ என்று இனியும் எவரும் கேட்கக் கூடாது. சோசலிசத்திற்கு மட்டுமே எதிர்காலம் உண்டு.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவு பிரகடனத்தின் மீது பிரதிநிதிகள் விவாதம் செய்தபின் அது ஏற்கப்பட்டது. பின்னர் மாநாடு டிசம்பர் 11 அன்று நிறைவடைந்தது.
--

Monday, December 12, 2011

தலித்துகள் பழங்குடியினருக்காக ஒதுக்கும் திட்டச்செலவினங்கள் வேறு திட்டங்களுக்கு மாற்றப்படக் கூடாது: கே. வரதராசன்





புதுதில்லி, டிச. 12-

தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்குப் பல்வேறு துறைகளில் ஒதுக்கப்படும் திட்டச் செலவினங்கள் அவர்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக வேறு துறைகளுக்கு மாற்றப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்திடக்கூடிய வகையில் உரிய மத்திய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுதில்லி, பி.டி.ஆர்.பவனில் திங்கள் அன்று காலை தலித்துகள்/பழங்குடியினர் துணைத் திட்டங்கள் அமலாக்கம் மீதான பட்டறை ஒன்று நடைபெற்றது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து பங்கேற்றார்கள். தமிழகத்திலிருந்து கே. சாமுவேல்ராஜ், வி.கே. சிவஞானம், ஜி. லதா, ஜி. ராமசாமி, டி.செந்தில்குமார், டி.நீதிராஜன், பி.பாரதி அண்ணா, எஸ். ஞானகுரு ஆகியோர் பங்கேற்றார்கள். பட்டறையில் தீர்மானத்தை முன்மொழிந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் தலித் உப குழுவின் கன்வீனருமான கே. வரதராசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘தலித்துகள்/பழங்குடியினர் துணைத் திட்டம் என்றால் என்ன என்பது குறித்தும் அதன் உள்ளடக்கம் என்ன என்பது குறித்தும் நம் முன்னணி ஊழியர்களில் பலருக்குத் தெரியாது. அவர்களுக்கு விளக்குவதற்காகவே இந்தப் பட்டறை இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நம் அணிகளின் மத்தியில் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தப் பட்டறை இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தலித்துகள்/பழங்குடியினர் பெயரால் ஏராளமான திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அவர்களுக்காகச் செய்யப்படுவது என்பது மிக மிகஅரிதாகவே இருப்பதை அறிய முடியும். ஜீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதாவது தாளில் சர்க்கரை என்று எழுதி அதை நக்கினால் இனிக்குமா என்பது இதன் பொருள். இப்படி பல திட்டங்கள் அரசால் தலித்துகளுக்காகவும் பழங்குடியினருக்காகவும் அறிவிக்கப்பட்டாலும் அவற்றுக்கு உரிய திட்டச் செலவினங்கள் ஒதுக்கப்படுவதில்லை. அப்படியே எப்போதாவது ஒதுக்கினாலும் அவற்றை தலித்துகளுக்கோ/பழங்குடியினருக்கோ பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடும் போக்கையும் அரசாங்கங்கள் கடைப்பிடிக்கின்றன. உதாரணமாக தலித்/பழங்குடியினர் திட்டங்களுக்கு ஒதுக்கிய பணத்தை தில்லி மாநில அரசு காமன்வெல்த் மோசடிகளுக்கு - இல்லையில்லை காமன்வெல்த் விளையாட்டுக்களுக்கு - திருப்பிவிட்டதைப் பார்த்தோம்.
எனவேதான் இந்தப் பட்டறையில் ஒரு பத்து தீர்மானங்களை முன்வைத்திருக்கிறோம். நாட்டில் உள்ள தலித்துகள்/பழங்குடியினர் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப பட்ஜெட்டில் தலித்துகள்/பழங்குடியினருக்கு துணைத் திட்டங்களின் மூலம் தொகைகள் ஒதுக்கப்பட வேண்டுமும். அவை எக்காரணம் கொண்டும் வேறு திட்டச் செலவினங்களுக்கு மாற்றப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஒரு மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும். நாட்டின் வருடாந்திர மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள் அனைத்திலும் தலித்துகள்/பழங்குடியினருக்கான துணைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் விதிகள் மாற்றப்பட வேண்டும்.

அடுத்து, நம் தோழர்கள் நம் கோரிக்கைகளை உள்ளூர் பிரச்சனைகளோடு இணைத்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக தலித்துகள்/பழங்குடியினர் வீட்டுமனைப் பட்டாக்களுக்கான இயக்கம் ஆரம்பத்தில் நாம் நடத்தியபோது 200 பேர் 300 பேர் என்றுதான் கலந்து கொண்டார்கள். அதனை மக்கள் இயக்கமாக நாம் மாற்றியபோது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதை நாம் பார்த்தோம். அதேபோன்று உத்தப்புரம் சுவர் இயக்கத்தை நாம் கையில் எடுத்துக்கொண்டு போராடியபோது, பிரகாஷ்காரத் அந்தத் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காக தேதி குறிப்பிட்டவுடன் அதற்கு முதல்நாளே கலைஞர் அச்சுவற்றை இடிக்க நடவடிக்கை எடுத்ததைப் பார்த்தோம். அந்தத் தீண்டாமைச் சுவர் வெகு ஆண்டுகளாக நம் பார்வைக்கே வராமல் இருந்தது. ஆனால் வந்தபின் பார்த்தால் கோவை, ஈரோடு, திருச்சி என மாநிலத்தின் பல பகுதிகளில் அதுபோன்று சுவர் இருப்பதை அறிய முடிந்தது.
இவ்வாறு உள்ளூர் பிரச்சனைகளை நாம் எடுக்கத் தவறினோமால் நம்மால் முன்னேற முடியாது. நம் கோபம் எதையும் தீர்மானிப்பதில்லை. மாறாக மக்களிடம் இருக்கும் கோபத்திற்கு நாம் உருவம் கொடுத்து போராட்டங்களை நடத்தினோமானால் வெற்றி நிச்சயம். அந்த விதத்தில் இங்கே எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய கோரிக்கை சாசனத்தை உங்கள் முன் சமர்ப்பித்திருக்கிறோம். உங்கள் விவாதங்களுக்குப்பின் இவை செழுமைப்படுத்தப்பட்டு இவற்றின் அடிப்படையில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இயக்கங்கள் நடத்தப்பட்டு, பின்னர் நாடு தழுவிய அளவில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கே. வரதராசன் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். அதனை அடுத்து தீர்மானததின் மீது மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா,தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேச பிரதிநிதிகள் எட்டு நிமிடங்களும், மற்ற மாநிலத்தினர் ஐந்து நிமிடங்களும் விவாதத்தில் பங்கேற்றனர்.
பட்டறையில் தலித்துகள்/பழங்குடியினர் நலன்களுக்காக கடந்த அறுபதாண்டுகளாக போராடிவரும் முன்னாள் மத்திய அரசின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான பி.எஸ். கிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரவீன் ஜா முதலானோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நிறைவுரையாற்றினார்.
---

Friday, December 9, 2011

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஐமுகூ-2 அரசாங்கம் தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது



கடைசியாக நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் அமைச்சரவையின் முடிவை ரத்து செய்திட ஐமுகூ-2 அரசாங்கம் இறுதியாக முடிவு செய்து இருப்பதாக, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் தெரிவித்ததை அடுத்து, குளிர்காலக் கூட்டத்தொடரில் பத்து நாட்களாக நிலவிவந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், நாடாளுமன்றத்தைக் கலக்காமல், அமைச்சரவைத் தன்னிச்சையாக எடுத்த முடிவுதான் இக்கூட்டத்தொடர் நடைபெறாது முட்டுக்கட்டை ஏற்பட்டதற்கு முழுமுதற் காரணமாகும். நாம், சென்ற வாரம் குறிப்பிட்டதைப்போல, அமைச்சரவை அவ்வாறு நிர்வாக முடிவினை எடுப்பதற்கு அதிகாரம் படைத்திருந்தபோதிலும், இத்தகைய முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது விவேகமாகும். அரசாங்கம் கடைசியாக மக்களின் கோபத்தைப் பிரதிபலித்த எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளது. மக்களின் மத்தியில் இருந்த கோபமானது, ஐமுகூ-வில் அங்கம் வகிக்கும் காங்கிரசுடனான கூட்டணிக் கட்சிகள் சிலவற்றையும் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்திடக் கட்டாயப்படுத்தியது. எப்படியிருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அதன் அனுமதியைப் பெறாது இத்தகைய முக்கிய முடிவுகளை எடுத்திடக்கூடாது என்கிற நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பு உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது.
நம் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பு என்பதும் நாட்டு மக்களின் உச்சபட்ச இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனால்தான் நம் அரசமைப்புச் சட்டம், ‘‘மக்களாகிய, நாம்’’ என்ற சொற்றொடருடன் தொடங்குகிறது. இத்தகைய இறையாண்மை, மக்களால் தங்களுடைய பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுத்து அனுப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கம் என்பவை நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் மூலமாக மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவைகளாகும். நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கக்கூடிய, நாட்டின் பொருளாதாரத்தையே குலைக்கக்கூடிய கொள்கை முடிவுகளை, நாடாளுமன்ற/சட்டமன்றங்களைக் கண்டுகொள்ளாது அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கமே தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது. இதுதான் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நெறிமுறை விதியாகும். இத்தகைய நெறிமுறைகள் எப்போது மீறப்பட்டாலும், அரசாங்கம் அவ்வாறு நெறிமுறைகளை மீறுவதை அனுமதிக்காது விழிப்புடனிருந்து தடுப்பது நாடாளுமன்றத்தின் பணியாகும்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்னும் அமைச்சரவையின் முடிவின் மீது இத்தகைய விழிப்புணர்வைத்தான் நாடாளுமன்றம் பிரயோகித்தது. அரசாங்கததின் முடிவுதான், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைந்திட முழுமுதற் காரணமாகும். அரசாங்கம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது குறித்து விவாதிக்கத் தயாராகவே இருந்தது என்றும், ஆனால் எதிர்க்கட்சிகள்தான் அதனைக் கேட்காது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை சீர்குலைத்தன என்றும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. அமைச்சரவை ஒரு முடிவை எடுத்தபின், அதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவது என்பது காலத்தை விரயம் செய்யும் நடவடிக்கையேயாகும். மக்களின் வாழ்வாதாரங் களைப் பாதிக்கக்கூடிய எந்த முடிவையும் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி எடுத்திடக்கூடாது என்று எதிர்காலத்தில் உருவாகும் அரசாங்கங்களுக்கு இது ஓர் உதாரணமாக விளங்கிடும். மேலும், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் அதற்குத் தெரிவிக்காது சிறிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளைக் கூட அரசாங்கம் எடுத்திடக் கூடாது என்பதற்கும் இது ஓர் அனுபவமாக அமைந்திடும்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஏன் எதிர்க்கிறோம் என்று இப்பகுதியில் நாம் பலமுறை எழுதியிருக்கிறோம். இப்பிரச்சனையில் தொடர் நடவடிக்கை எதையும் எடுப்பதற்கு முன் நாம் முன்வைத்த அம்சங்கள் அனைத்தையும் அரசாங்கம் பரிசீலனை செய்திட வேண்டும். இதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இப்பிரச்சனை மீது அரசாங்கம் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு இது மிகவும் அவசியமாகும்.
சென்ற ஆண்டின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க அரசாங்கம் பிடிவாதமாக மறுத்ததன் காரணமாக, அக்கூட்டத்தொடரே முழுமையாக வீணடிக்கப்பட்டது. அரசாங்கம் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்கும் முடிவை முன்னமேயே விவேகத்துடன் எடுத்திருந்திருக்குமானால், சென்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வீணடிக்கப் பட்டிருக்காது. இப்போது, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் நிறுத்தி வைத்திட முன்வந்திருப்பதன் மூலம் அடுத்து வரும் நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் நிறுத்தி வைத்திட முன்வந்திருப்பது மட்டுமல்ல, இது தொடர்பாக மேற்கொண்டு என்ன முடிவு எடுப்பதாக இருந்தாலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருடனும் (stakeholders) கலந்தாலோசனை செய்து அதன் இறுதியில் வரும் கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அத்தகைய கருத்தொற்றுமையானது நாடாளுமன்றம் மற்றும் மாநில அரசாங்கங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கலந்தாலோசனைகளுக்குப் பின் வரக்கூடியதாக இருந்திட வேண்டும் என்று வலியுறுத்தியது. அரசாங்கம், ‘இதில் சம்பந்தப்பட்டவர்கள்’ (stakeholders) என்பதன் பொருள் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசாங்கங்கள் மற்றும் சில்லரை வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகிய அனைவருமா என்பதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவேண்டிய நிலையில் இருக்கிறது.

ஆயினும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதற்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாகக் கொள்ள முடியாது. நாம் இப்பகுதியில் ஏற்கனவே வாதித்துள்ளதுபடி, நம் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களின் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய முடிவானது, ஏகாதிபத்தியத்தாலும், சர்வதேச நிதி மூலதனத்தாலும் தங்கள் கொள்ளை லாப வேட்டைக்காக கடுமையான முறையில் உந்தித்தள்ளப்படக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் பாலியில் நடைபெற்ற கூட்டத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கஅதிபர் ஒபாமாவிடம் இது தொடர்பாக உறுதி அளித்துள்ளார் என்கிற சந்தேகம் மிகவும் வலுவான முறையில் முன்வந்துள்ளது. மிகவும் ஆழமாகியுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார இரட்டிப்பு ஆழத்தில் சென்றுள்ள மந்த நிலை (double dip depression), சர்வதேச நிதி மூலதனம் தங்கள் கொள்ளை லாபத்திற்குப் புதிய பாதைகளைக் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆயினும், நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் அத்தகைய வாய்ப்பினை அந்நிய மூலதனத்திற்கு அளித்திட முடியாது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது, தற்காலிகமாக தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தபின்னரோ அல்லது சிறிது காலம் கழித்தோ, இத்தகைய நாசகரமான முடிவினை மேற்கொள்ளாமல் அரசாங்கத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டுமானால், பெருந்திரள் மக்கள் போராட்டங்களின் மூலமாக அரசாங்கத்திற்குக் கடும் நிர்ப்பந்தம் அளித்திட வேண்டும். நாடாளுமன்றத்தின் முன் அனுமதியின்றி இத்தகைய முடிவுகள் எக்காலத்திலும் அனுமதிக்கப்படக் கூடாது.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, December 6, 2011

இலக்கியா: அந்நிய நேரடி முதலீடு: ஒத்திவைப்பது என்ற பேச்சுக்கே...

இலக்கியா: அந்நிய நேரடி முதலீடு: ஒத்திவைப்பது என்ற பேச்சுக்கே...: புதுதில்லி, டிச.7- சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்னும் கொள்கையை மத்திய அரசு ‘‘தற்காலிகமாக நிறுத்தி வைத்...

அந்நிய நேரடி முதலீடு: ஒத்திவைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,பிரகாஷ் காரத் கண்டிப்பு




புதுதில்லி, டிச.7-
சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்னும் கொள்கையை மத்திய அரசு ‘‘தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்’’ என்னும் பேச்சுக்கே இடமில்லை, மாறாக அதனை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தின் சுமுகமான செயல்பாடு இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளும் நிலையைப் பொறுத்தே இருக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார்.
‘‘சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்திடுக’’ என்னும் தலைப்பில் 36 பக்கங்கள் கொண்ட ஒரு சிறுபிரசுரம் செவ்வாய் அன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதன் பிரதிகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கி, பிரகாஷ் காரத் பேசியதாவது:

‘‘மத்திய அரசாங்கம், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் தாங்கள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்னும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இது ஒரு சதிச் செயல் என்பது தெளிவு. இவ்வாறு நிறுத்தி வைப்பதென்பது குளிர்காலக் கூட்டத்தொடர் முடியும் வரைக்கும்தான். 2011 முடியப் போகிறது. 2012 என்பது மற்றோர் ஆண்டு. அதன்பின்னர், இவ்வாறு நிறுத்தி வைப்பதென்பது இல்லை.

எனவே, அரசு இம்முடிவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை. இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். குளிர்காலக் கூட்டத்தொடரை சமாளித்து விட்டு, பின்னர் இதனைக் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் நினைத்தால் அவர்கள் தவறு செய்கிறார்கள். நாங்கள் மற்ற அனைத்து சக்திகளுடனும் ஒன்றுபட்டு நின்று இதனை எதிர்த்திடுவோம்.

புதன்கிழமையன்று அனைத்து எதிர்க்கட்சி யினரையும் சந்தித்து, அரசாங்கம் தன் இறுதி முடிவைச் சொல்ல இருக்கிறது. அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இதனை முழுமையாகத் திரும்பப்பெறுகிறோம் என்கிற உறுதிமொழியை அளித்திட ஒப்புக்கொண்டால்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அப்போதுதான் நாடாளுமன்றம் சுமுகமாக இயங்கிடும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

திரிணாமுல் காங்கிரசும் இப்பிரச்சனையில் இடதுசாரிகளுடன் சேர்ந்துகொண்டிருக்கிறதே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘‘மிக்க மகிழ்ச்சி, ஆயினும் அவர்கள் தற்காலிக நிறுத்தி வைப்பு என்கிற அரசின் முடிவோடு திருப்தியடைந்துவிடக்கூடாது, முழுமையாக ரத்து செய்திட அவர்கள் கோர வேண்டும்’’ என்றார்.

நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை நிலவுவது குறித்து, ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, ‘‘அரசாங்கம் இது ஒர் அமைச்சரவை முடிவு என்றும் எனவே நாடாளுமன்றத்தின் அனுமதி இதற்குத் தேவையில்லை என்றும் அடிக்கடி கூறிவருகிறது. அரசின் இத்தகைய கடினமான நிலைப்பாடுதான் நாடாளுமன்றத்தின் இன்றைய முட்டுக்கட்டை நிலைக்குக் காரணமாகும். அரசின் இத்தகைய நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது மற்றும் வருந்தத்தக்கது’’ என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.

மேலும் அவர், ‘‘நம்முடைய அரசாங்கம், மேற்கத்திய அரசாங்கங்களின் பேச்சைக் கேட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் துடிக்கிறதேயொழிய, நம் நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை’’ என்றார்.
‘‘நாடாளுமன்ற நிலைக்குழு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஒருமனதாக எதிர்த்திருக்கிறது. ஆனால், அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. லோக்பால் சட்டமுன்வடிவு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த அறிக்கையை ஓரங்கட்டிவிட்டு தாங்கள் தயாரித்த சட்டமுன்வடிவைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணா ஹசாரே மற்றும் அவர்தம் குழுவினர் கோரியபோது அதனை அரசாங்கம் கண்டித்தது. இது நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் செயல் என்று கூறியது. ஆனால் இப்போது அரசாங்கமே, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளைத் தூக்கி எறிவதை என்னென்பது? அரசாங்கம் ஆடும் கபடநாடகத்தின் உச்சநிலை இது’’ என்று பிரகாஷ்காரத் குறிப்பிட்டார்.

Monday, December 5, 2011

பஸ் ஏற முடியாவிட்டால் என்ன? காரில் போகலாமே... -ப.முருகன்

‘நா ஒரு டிக்கெட் தான கேட்டேன். ஏன் ரெண்டு டிக்கெட் தர்றீங்க’ என்று பஸ் கண்டக்டரி டம் ஒரு பயணி கேட்டுக்கொண்டிருந்தார். ‘நா ஒரு டிக்கெட் தாங்க கொடுத்திருக்கேன்’ என்றார் கண் டக்டர். ரெண்டு டிக்கெட் இருக்கே என்றார் பயணி மீண்டும். நல்லா பிரிச்சுப் பாருங்க ரெண்டு, மூன்று ரூபா டிக்கெட், ஒரு டிக்கெட்டுக்காகத்தான் கொடுத்திருக்கேன் என்றார் கண்டக்டர்.

மதுரையில் அண்மைக்காலமாக இதுபோன்ற வாக்குவாதங்கள் பஸ்ஸில் பயணம் செய்பவர் களின் காதுகளில் விழுந்துகொண்டுதான் இருக் கின்றன. காரணம் என்ன?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நள்ளிரவில் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டது நாட்டில். அதுபோல கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அதிரடியாக அமல்படுத்தப்பட்டது தமிழ்நாட்டில்.

ஏற்கெனவே மதுரையில் தமிழகத்தின் பிற பகுதிகளைவிட கூடுதலாக பஸ் கட்டணம் வசூ லிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலாவதி யாகிப்போன - காயலான் கடைக்குப் போகவேண் டிய பல பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழக மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிதாக இறக்கப்பட்ட பேருந் துகளுக்கு சிட்டி எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ், தாழ்தள பேருந்து என புதிய புதிய பெயர்களை எழுதி கட்டணங்களை அதிகமாக வசூலித்தது மதுரை கோட்ட நிர்வாகம். அதற்கும் முன்னதாக குறைந்த கட்டணமாக ரூ.2 வசூலிக்கப்பட்டபோது எல்எஸ் எஸ் என்று புதிய கலர் பெயிண்ட் அடித்த பஸ் ஸுக்கு ரூ.2.50 வசூலித்தது வேறு கதை. ஆனால் சாதாரண கட்டணம், எல்எஸ்எஸ் கட்டணம் என எல்லா பேருந்துகளும் ஒரேமாதிரிதான் நிறுத்தங் களில் நின்று சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கும் கூட முன்னோடியாக முந்தைய அதி முக ஆட்சியில் ‘ஜெ’சர்வீஸ் என்ற பெயரில் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது. இந்நிலையில்தான் சிட்டி எக்ஸ் பிரஸ், சொகுசு, தாழ்தளம் எல்லாம் கிளம்பின, சாதா ரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தலை யில் சுமைகளைத் திணிக்க. சாதாரண 2 ரூபாய் கட்டணம் சிட்டி எக்ஸ்பிர ஸில் 3 ரூபாய் ஆனது. சொகுசு, தாழ்தளத்தில் 5 ரூபாய் ஆனது. அப்படியே கடைசிவரை டிக்கெட் ஏறுமுகமானது. டவுன் பஸ் களில் அதிகபட்சமாக இருந்த ரூ.9 - ரூ.15 ஆனது. மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பி போராடியபோது கட் டணத்தை உயர்த்தவில்லை என்று அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் கூறினர்.

முந்தைய அரசு சீரழித்த பொதுத்துறையை காப்பாற்றப் போகிறோம் என்று கூறி, சாதாரண அப்பாவி மக்களின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டது இன்றைய அதிமுக ஆட்சி.

ஒரு நோயாளி கிராமத்திலிருந்து மதுரைக்கு- பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வதென்றால் 20 ரூபாய் இருந்தால் போதும். ஆனால் இப்போது அவர் 50 ரூபாய் இல்லாமல் பஸ் ஏறமுடியாது. ஏறி னால் மீண்டும் ஊர்போய்ச் சேரமுடியாது.

ஒரு கட்டுமானத் தொழிலாளி வேலைக்காக பஸ் ஏறினால் குறைந்தது நூறு ரூபாயாவது கொண்டுவரவேண்டும். அவர் வேலைக்குச் செல் வதற்காக மேஸ்திரியோ - காண்டிராக்டரோ - பிரித்துவிடும் இடத்துக்கு அல்லது பட்டறைக்குச் செல்லவேண்டும். பின்பு வேலைத் தளத்துக்குச் செல்ல வேண்டும். பிறகு மாலையில் வேலை முடிந்ததும் முன்போலவே இரண்டு பஸ்கள் ஏற வேண்டியிருக்கும். சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவழிக்கவேண்டிய கட்டாயத்தில் - நிர்ப் பந்தத்தில் நிறுத்தப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில்தான் ஒவ்வொரு பயணியி டமும் ரெண்டு டிக்கெட் கொடுக்கும் நிலை

கண்டக்டருக்கு ஏற்படுகிறது. பழைய கட்டண டிக்கெட்டுகளை கீழே போட முடியாது என்று போக்குவரத்து நிர்வாகம் பயணிகளுக்கு ரெண்டு ரெண்டு டிக்கெட்டாகக் கொடுத்து தீர்க்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால்தான் மக் களும் கண்டக்டர்களும் இப்படிப் பேசிக் கொள் கிறார்கள்.

முன்பு மதுரை பெரியார் பேருந்து நிலையத் திலிருந்து அரசரடி செல்வ தென்றால் 5 ரூபாய் (மகபூப்பாளையத்துக்கு 3 ரூபாய்) சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்சில். இப்போது அரசரடிக்கு 7 ரூபாய் (மக பூப்பாளையத்துக்கு 5 ரூபாய்) சில காலத்துக்கு முன்பு அரசரடி ஒரு ஸ்டேஜ், அடுத்து பாத்திமா கல்லூரி அல்லது ஆலமரம் ஒரு ஸ்டேஜ் என்று இருந்தது. முந்தைய ஆட்சிக்காலத்தில் போக்கு வரத்து நிர்வாகம் அதை மாற்றித்தான் மக்கள் தலையில் சுமையை ஏற்றியது. அது இப் போதைய ஆட்சியாளர்களுக்கு மிக வசதியாகிப் போய் விட்டது.

நகரத்துக்குள்ளேயே போய் வருபவர்களுக்கு குறைந்த கட்டணம் 3 ரூபாய், முதல் ஸ்டேஜ், 2வது ஸ்டேஜ் இரண்டுக்கும் பொருந்தும். அதற்கடுத்த கட்டணம் 5 ரூபாய், 3வது, 4வது, 5வது ஸ்டேஜ் வரை செல்லும். இப்போதோ முதல் ஸ்டேஜ் உடன் குறைந்தபட்ச ஆரம்பக் கட்டணம் 5 ரூபாய் முடிந்துவிடுகிறது. 2வது, 3வது, 4வது வரை இரண் டாவது ஸ்டேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படியாக முன்பு வெளியூர் பஸ்களில் சென்று வந் தால்தான் இருபது ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். இப்போதோ டவுன் பஸ்ஸி லேயே அத்தகைய டிக்கெட்டுகளை மக்கள் வாங் கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது, ஏற்படுத்திவிட்டது இன்றைய ஆளும் கட்சி. இப்போது திருமங்கலம், வாடிப்பட்டி, சோழ வந்தான், அலங்காநல்லூர், மேலூர், திருப்புவனம், காரியாபட்டி செல்வது கூட வெளியூர் பயணம் போவதுபோல் ஆகிவிட்டது.

2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் என குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்பவர்கள் கம்பெனியோ, கடையோ பஸ்சுக்கு 10 ரூபாய் கொடுப்பதைப் பயன்படுத்துவார்கள். இப்போது கடையோ, கம்பெனியோ எவ்வளவு கொடுக்கும்; மீதிப் பணத்துக்கு என்ன செய்வார்கள்?

மதுரையில் ஒரு வங்கியில் தற்காலிக பணி யாளராக வேலை செய்தவர் தற்போது திருச்சுழியில் உள்ள கிளைக்குச் சென்று வருகிறார். அவரது சொந்த ஊரான அலங்காநல்லூரிலிருந்து பெரியார் பஸ் நிலையம் - அங்கிருந்து காரியாபட்டி - பிறகு திருச்சுழி என்று வேலைக்குச் சென்றால் இப்போது அவர் பேருந்துக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.140 செலவழிக்கவேண்டும். அவரது தினக்கூலி சம் பளமே ரூ.150 தான். இப்போது அவர் முன் உள்ள கேள்வி, வேலைக்குச் செல்வதா? வேலையை விட்டு விடுவதா? அல்லது திருச்சுழியிலேயே தங்க முடியுமா? தங்கினால் செலவு என்னாகும்? எப்படிச் சமாளிப்பது? மூன்றாண்டு காலமாகிறது. இன்னும் ஓரிரு வருடத்திலாவது பணி நிரந்தரமா கலாம். வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ள நிலையில் தற்போது இருக்கிற வேலையை விட்டுவிட முடியுமா?

சாதாரண ஏழை, எளிய மக் கள் ரயில் ஏறுவது, விமானம் ஏறுவது போன்ற வற்றை முன்பு லட்சியக் கனவாக நினைப்பார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் பஸ் ஏறுவதுகூட வாழ்க்கையின் லட்சியக் கனவாக ஆனாலும் ஆக லாம். பஸ் ஏறமுடியாத நிலையில் மக்கள் இருக் கிறார்கள் என்று யாராவது அம்மாவிடம் கூறினால் (அப்படி கூற ஆள் இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டாம்). அப்படியா, காரில் ஏறிப்போக வேண் டியது தானே என்று அவர் கூறினாலும் கூறலாம்.

Saturday, December 3, 2011

இலக்கியா: அந்நிய நேரடி முதலீடு: அமைச்சரவை முடிவைத் திரும்பப...

இலக்கியா: அந்நிய நேரடி முதலீடு: அமைச்சரவை முடிவைத் திரும்பப...: நா ம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த விடாது எதிர்க்கட்சிகள் மே...

அந்நிய நேரடி முதலீடு: அமைச்சரவை முடிவைத் திரும்பப்பெறுக



நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த விடாது எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. சென்ற தடவையும் 2ஜி அலைக்கற்றை வரிசை ஊழல் தொடர்பாக விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்கிற எதிர்க்கடசி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசின் அடாவடித்தனத்தினால் சென்ற கூட்டத் தொடர் முழுவதும் வீணடிக்கப்பட்டது. கடைசியில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்து, கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்தது. இத்தகைய விவேகம் முன்னதாகவே அரசுக்கு வந்திருக்குமானால், ஒட்டுமொத்த கூட்டத்தொடரும் வீணடிக்கப்படாது இருந்திருக்கும். மன்மோகன் சிங் அரசாங்கம் நாடாளு மன்றத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் இவ்வாறுதான் ஆணவத்துடன் அவமதித்துக் கொண்டிருக் கிறது.

நாட்டில் வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ போன்ற மாபெரும் சர்வதேச சூப்பர் மார்க்கெட் ஜாம்பவான்களை இந்தியாவில் கடை பரப்பிட அனுமதிக்கக்கூடிய வகையில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் அமைச்சரவை முடிவால் இத்தகையதொரு நிலைமையை மீண்டும் அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.
அமைச்சரவையானது நிர்வாக முடிவுகளை மேற்கொள்ள உரிமை படைத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் இவ்வாறு முடிவுகள் மேற்கொண்டு அறிவிப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இவ்வாறு அறிவித்திருப்பதானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்குமே முற்றிலும் முரணானதாகும். எனவேதான் நாடாளுமன்றவாதிகள் அரசியல் கட்சி மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இது தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னர்தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று கோரியிருப்பது அடிப்படையற்ற ஒன்றல்ல. இப்பிரச்சனையில் முடிவு எதுவும் எடுக்கப்பட்டபின்னர் அதன் மீது விவாதம் நடைபெறுவது பயனற்றதாகும்.
இப்போது ஆட்சிபுரியும் இதே காங்கிரஸ் கட்சிதான், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், கொள்கை முடிவுகளை அரசாங்கம் அறிவிப்பதைக் கடுமையாக ஆட்சேபித்திருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். 1989இல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், துணை ராணுவப் படைகளில் ஒன்றாக நேஷனல் ரைஃபிள்ஸ் என்னும் படைப்பிரிவை நிறுவிடும் முடிவை அரசாங்கம் அறிவித்த சமயத்தில், அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக உரிமைமீறல் தீர்மானத்தை (privelege motion) தற்போது உள்துறை அமைச்சராக இருப்பவர் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தீர்மானம் அனுமதிக்கப் படவில்லை என்றபோதிலும் கூட அப்போது மக்களவை சபாநாயகராக இருந்த ரபி ராய் அரசாங்கத்தின் இத்தகைய முடிவானது நேர்மை தவறியமை (breach of propriety) என்று தீர்ப்பளித்திருக்கிறார். பின்னர், 1999இல், இதே போன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயி நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததாக நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிவித்தமைக்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தோஷ் மோகன் தேவ் இதேபோன்றதொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அன்றைய மக்களவை சபாநாயகர் பாலயோகியும் இதேபோன்றதொரு தீர்ப்பினைக் கொடுத்திருக்கிறார்.

ஆயினும், இன்று காங்கிரஸ் கட்சியானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை நியதிகளை முற்றிலுமாக மீறி நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும்விட மிகவும் மோசமான விஷயம் என்னவெனில், பிரதமர் அவர்கள் இளைஞர் காங்கிரஸ் விழா ஒன்றில் பேசுகையில், அரசாங்கத்தின் இத்தகைய முடிவை நியாயப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல், இதனால் ஏற்படவிருக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டிருக்கிறார். இது, வேலைவாய்ப்பைப் பெருக்கிடுமாம், விலைவாசியைக் குறைத்திடுமாம், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திடுமாம். இவ்வாறெல்லாம் கதையளந்திருக்கிறார்.

இப்படித்தான் முன்பு மின்சார உற்பத்திக்காக என்ரான் என்னும் பன்னாட்டு நிறுவனத்தினை அனுமதிக்கும்போதும் அதனை நியாயப்படுத்தி பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டில் நலிவடைந்துள்ள எரிசக்தித் துறைக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும், எரிசக்தி பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திட இது இட்டுச்செல்லும் என்றெல்லாம் புகழப்பட்டது. இதேபோன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டபோதும் அதனை நியாயப்படுத்தி, கதை அளக்கப்பட்டது. அதாவது, விவசாயிகள் தட்டுப்பாடின்றி மின்சாரம் பெறுவார்கள் என்றும் இதனால் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும், மின்வெட்டு எதுவுமின்றி குழந்தைகள் தங்கள் பாடங்களைப் படிப்பார்கள் என்றெல்லாம் அளக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? என்ரான் மிகவும் அவமானகரமான முறையில் நாட்டிலிருந்து வெளியேறியது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நம் நாட்டின் சுயேச்சையான அயல்துறைக் கொள்கைதான் பலியாகியிருக்கிறதேயொழிய, நாட்டிற்கோ அல்லது நாட்டுமக்களுக்கோ இதுவரை எந்தவிதப் பயனையும் அது கொண்டுவரவில்லை.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று அரசுத்தரப்பில் 2004-05ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட அந்தக் கணத்திலிருந்தே அதன் மீதான எதிர்ப்பு என்பதும் தொடங்கிவிட்டது. இடதுசாரிக் கட்சிகள் மிகவும் உறுதியான முறையில் எதிர்ப்பினை அளித்து வந்த காரணத்தால், அப்போது ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு அவர்களின் ஆதரவு முக்கியமாக இருந்தமையால், இது கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது.
அரசின் முடிவை எதிர்த்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஐமுகூ-இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு (ருஞஹ-டுநகவ ஊடிடிசனiயேவiடிn ஊடிஅஅவைவநந)விற்கு 2005 அக்டோபரில் ஒரு குறிப்பு தரப்பட்டது. அதில், சில்லரை வர்த்தகம் நாட்டில் அனுமதிக்கப்பட்டால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 11 விழுக்காடு அளவிற்குப் பங்கினைச் செலுத்திடும் என்றும், 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் என்றும் கூறப்பட்டிருந்தது. 1998ஆம் ஆண்டின் நான்காவது பொருளாதாரக் கணக்கெடுப்பானது (குடிரசவா நுஉடிnடிஅiஉ ஊநளேரள 1998), நாட்டில் சில்லரை வர்த்தகம் ஒட்டுமொத்த வேளாண்மை அல்லாத நிறுவனங்களில் வர்த்தகத்தில் கிராமப் பகுதிகளில் 42.5 விழுக்காடு அளவிற்கும் நகர்ப்பகுதிகளில் 50.5 விழுக்காடு அளவிற்கும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது இப்போது கிராமப்பகுதிகளில் 38.2 விழுக்காட்டினருக்கும் நகர்ப்பகுதிகளில் 46.4 விழுக்காட்டினருக்கும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இவ்வாறு இன்றைய தினம் சில்லரை வர்த்தகத்தைத் தங்களின் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மை நிலைமையைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஜாம்பவான்களை இத்துறைக்குள் அனுமதித்தோமானால், இத்துறையை இப்போது சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, வறுமையிலும் கடும் துன்ப துயரத்திலும் தள்ளப்படுவார்கள். தற்சமயம் நாட்டில் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இல்லாமல் அவதிப்படும் 80 கோடிக்கும் மேலான மக்கள்தொகை இதனால் மேலும் கூடும்.
சூப்பர்மார்க்கெட் ஜாம்பவான்கள் நாட்டிற்குள் நுழைந்தார்களானால், விலைவாசிகள் குறையும் என்பதும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதும் கட்டுக்கதைகளாகும். உண்மையில், வால்மார்ட் வெற்றி குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் (ருளு ழடிரளந டிக சுநயீசநளநவேயவiஎநள) ஒரு குழு, 2004 பிப்ரவரியில் ஓர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதில், ‘‘வால்மார்ட்டின் வெற்றி என்பது தொழிலாளர்கள் பெறும் ஊதியங்கள் மற்றும் பயன்களை குறைப்பதற்கு நிர்ப்பந்தம் கொடுத்திருக்கிறது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மூர்க்கத்தனமாக மீறப்பட்டிருக்கின்றன, நாடு முழுதும் பல்வேறு இனத்தினரிடையே வாழ்க்கைத்தரம் வீழும் என்கிற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வணிகத்தின் வெற்றி என்பது தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் வயிற்றிலடிப்பதாக இருந்துவிடக் கூடாது. இத்தகைய குறுகிய லாபநோக்கம் கொண்ட உத்திகள் இறுதியில் நம் பொருளாதாரத்தையே அரித்து வீழ்த்திவிடும்,’’ என்று முடிவுரையாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான முடிவு என்பது நம் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சமீபத்தில் பாலியில் நடைபெற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்டதென்பது தெள்ளத் தெளிவு. மிகவும் ஆழமாகியுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார இரட்டிப்பு ஆழத்தில் சென்றுள்ள மந்த நிலை (னடிரடெந னiயீ சநஉநளளiடிn), சர்வதேச நிதி மூலதனம் தங்கள் கொள்ளை லாபத்திற்குப் புதிய பாதைகளைக் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதற்கு இந்திய சில்லரைச் சந்தை ஒரு மிகவும் இலாபகரமான தேர்வாகும். இந்த முடிவானது சர்வதேச மூலதனம், இந்தியாவின் பொருளாதாரத்தையும், இந்திய மக்களையும் நன்கு சுரண்டி, மிக அதிக அளவில் லாபம் ஈட்டுவதற்கு அனுமதித்திடும் என்பதில் ஐயமேதுமில்லை.

மேலும், இவ்வாறு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நம் நாட்டில் சரிந்து வரும் ரூபாய் மதிப்பைத் தடுத்து நிறுத்திடலாம் என்றும் அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு மாயையேயாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஈரோ ஐரோப்பிய நாடுகளின் பொது நாணயமாக நீடிக்குமா என்று ஐயப்படக்கூடிய அளவிற்கு பொருளாதார நெருக்கடி அங்கே முற்றியிருக்கிறது. ஜப்பானிலும் யென் நாணயத்தின் மதிப்பு கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நம் நாட்டில் சில்லரை வர்த்தகத்தை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விடுவது என்பது அவை தங்கள் லாபத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்குத்தானேயொழிய வேறெதற்காகவும் கிடையாது. அதை மூடி மறைக்கும் விதத்திலேயே அரசாங்கத்தின் வாதம் அமைந்திருக்கிறது.

சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருள்களின் பணவீக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் காட்டுவது என்ன? லத்தீன் அமெரிக்க நாடுகள் (மெக்சிகோ, நிகரகுவா, அர்ஜண்டினா), ஆப்பிரிக்க நாடுகள் (கென்யா, மடகாஸ்கர்), வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள், பாரம்பர்யமான சந்தைகளில் உள்ள அதே உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளைவிட அதிகமாகத்தான் இருந்திருக்கின்றன.

அதேபோன்று சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் வேலைவாய்ப்புப் பெருகும் என்பதும் வியட்நாம் அனுபவத்திருந்து பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தெருவில் வியாபாரம் செய்பவர் 18 பேருக்கு வேலை அளிக்கிறார், பாரம்பர்ய சில்லரை வியாபாரி 10 பேருக்கு வேலை அளிக்கிறார், கடை வைத்திருப்பவர் 8 பேருக்கு வேலை அளிக்கிறார், ஆனால் சூப்பர் மார்கெட்டில் 4 நபர்களை வைத்துக்கொண்டு அந்த வேலையைச் செய்து முடித்து விடுகிறார்கள். இதுதான் உலகம் முழுதும் உள்ள அனுபவமாகும்.
அடுத்து, உற்பத்தியாளர் நல்ல விலையைப் பெறுவார் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் கதைதான். இது தொடர்பாக ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரப்பட்ட குறிப்பில் ஓர் ஆய்வினைச் சுட்டிக் காட்டியிருந்தோம். கானா நாட்டைச் சேர்ந்த கோகா (cocoa) விவசாயி ஒரு தனித்துவமான மில்க் சாக்கலேட் தயாரிப்பதற்கு உற்பத்தி செய்த கோகோவை, சில்லரை வர்த்தக ஜாம்பவான்களுக்கு விற்றபோது, சாக்கலேட்டின் விலையில் 3.9 விழுக்காடு விவசாயிக்குக் கிடைத்த அதே சமயத்தில், சில்லரை வர்த்தகர் 34 விழுக்காடு லாபம் ஈட்டியிருக்கிறார். அதே போன்று வாழை உற்பத்தி செய்த விவசாயி, தான் விற்ற வாழைப்பழங்களுக்கு அவை விற்ற விலையில் 5 விழுக்காடு அளவிற்குத் தொகையைப் பெற்ற அதே சமயத்தில், வர்த்தகரோ 34 விழுக்காடு லாபம் ஈட்டியிருக்கிறார். இதேபோன்று ஜீன்ஸ் தயாரித்த தொழிலாளிக்கு 12 விழுக்காடு தொகை கிடைத்த அதே சமயத்தில் சில்லரை வர்த்தகர் அதில் 54 விழுக்காடு தொகையை அடைந்துள்ளார்.

இப்போது மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டால்தான் தங்கள் முடிவு அமல்படுத்தப்படும் என்று இப்போது வாதிடுகிறது. மாநில அரசாங்கங்கள் இம்முடிவினை அமல்படுத்துவது தொடர்பாக தங்கள் விருப்பம்போல் நடந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் மாநிலங்கள் அல்லாது மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும் அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில்தான் இவை நடைபெறும் என்று நாடு நம்பவேண்டும் என்று மன்மோகன் சிங் அரசாங்கம் விரும்புகிறதா என்று தெரியவில்லை.

இத்தகைய அம்சங்கள் அனைத்துமே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவைகளாகும். இதற்கு அரசாங்கம் இதன்மீதான தன் முடிவை ரத்து செய்துவிட்டு, ஒரு பொருள்பொதிந்த விவாதத்திற்கு அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம். இதனைத் தொடர்ந்து அரசாங்கமானது அவையின் உணர்வை உயர்த்திப்பிடித்து அதன் அடிப்படையில் ஒரு முடிவினை மேற்கொண்டிட உறுதிபூண வேண்டும்.

இவ்வாறாக, இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடர் வீணாகாமல் காப்பாற்றப்படுமா, அல்லது, இதுபோன்றதொரு நியாயமான மற்றும் பொருத்தமான கோரிக்கைக்கு செவிமடுத்திட அரசாங்கம் தன் விருப்பத்தினைத் தெரிவிக்காது வீணடிக்கப்பட விருக்கிறதா என்பது அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தே இருக்கிறது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் சட்டமுன்வடிவு உட்பட மிக முக்கியமான பல சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டிருந்தன. லோக்பால் வரைவு சட்டமுன்வடிவை ஆய்வு செய்து வந்த நாடாளுமன்ற நிலைக்குழு அதன் மீதான தன் ஆய்வுகளை முடித்து, தன் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி விட்டது என்று தெரியவருகிறது. இச்சட்டமுன்வடிவு, அரசாங்கம் உறுதி அளித்தபடியும், இரு அவைகளிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது போலவும், இக்குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுமா, இல்லையா என்பது சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை தன் முடிவைத் திரும்பப் பெறுவதைப் பொறுத்தே இருக்கிறது.

இவ்வாறு நடைபெறாவிட்டால், பின், அரசாங்கத்தின் உள்நோக்கங்கள் குறித்து மிகவும் ஆழமான முறையிலும் அதன் நேர்மையின் மீதும் ஐயங்கள் எழத் தொடங்கிவிடும. லோக்பால் சட்டமுன்வடிவில் சம்பந்தப்பட்டுள்ள சச்சரவுக்குரிய பல்வேறு பிரச்சனைகள் உட்பட விண்ணையெட்டியுள்ள விலைவாசி உயர்வு, வெளிச்சத்திற்கு வந்துள்ள உயர்மட்ட அளவிலான லஞ்ச ஊழல்கள், கறுப்புப் பணம் முதலானவை குறித்தும் மக்களுக்குப் பதில் எதுவும் அளிக்காது அரசாங்கம் சவுகரியமாகத் தப்பித்துக் கொள்ள இவ்வாறு குளிர்காலக் கூட்டத் தொடரின் சீர்குலைவு அனுமதித்துவிடும். கடந்த இருபதாண்டுகளில் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்திற்கு முன் கொண்டுவரப்படும்போதெல்லாம் இதன் வரையறைக்குள் பிரதமரைக் கொண்டுவருவதா, வேண்டாமா என்பதில் ஒத்த கருத்து ஏற்படாததால், இச்சட்டமுன்வடிவே நாடாளுமன்றத்தினை எட்டிப்பார்க்காது கிடப்பில் போடப்பட்டிருப்பதை நினைவுகூர்க. இப்போது நாடாளுமன்றம் சீர்குலைக்கப்படுவதற்கும் அரசாங்கமே முழுப்பொறுப்பாகும்.
பந்து, இவ்வாறு, இப்போது அரசின் பக்கம் இருக்கிறது. சாமானிய மக்களின் நலன் மீது அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இம்முட்டுக்கட்டையைப் போக்கிட அரசாங்கம்தான் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதற்கு அது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான தன் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்திட வேண்டும். அதன்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளுக்கிணங்க முடிவினை எடுத்திட வேண்டும்.

இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் அதே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தத்தை அளித்திட வேண்டும். டிசம்பர் 1 அன்று வர்த்தகர் சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க நடந்த கடையடைப்புப் போராட்டம் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(நவம்பர் 30, 2011)

(தமிழில்: ச.வீரமணி)

Monday, November 28, 2011

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன்."--நீதியரசர் மார்கண்டே கட்ஜு

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன். ஊடகங்கள் மீதான என் விமர்சனம் அவை சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.’’

நான் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அளித்துள்ள பேட்டிகளிலும், பல்வேறு செய்தித்தாள்களில் எழுதியுள்ள கட்டுரைகளிலும் ஊடகங்கள் குறித்த என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். ஆயினும், ஊடகவியலாளர்கள் சிலர் உட்பட நான் கூறியவற்றில் சில பிரச்சனைகள் குறித்து மேலும் தெளிவுபடுத்துமாறும் சில பிரச்சனைகள் குறித்து மேலும் விளக்கமாகக்கூறுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் கூறியவை குறித்து சிலர் கருத்துமாறுபாடு கொண்டிப்பதால், அவை தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
இன்றைய இந்தியா நம்முடைய வரலாற்றில் ஓர் இடைமாற்றக் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருக்கிறது. இடைமாற்றம் என்பது நிலப்பிரபுத்துவ வேளாண் சமூகத்திலிருந்து நவீன தொழில்மய சமூகத்தை நோக்கிய திசைவழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிகவும் வலிதரக்கூடிய வேதனைமிகுந்த கால கட்டமாகும். பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் அடியோடழிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆயினும் புதிய நவீன தொழில்மய சமூகம் இன்னமும் முழுமையாகவும் உறுதியாகவும் நிறுவப்பட வில்லை. பழைய நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் புதிய நவீன சிந்தனைகள் அதன் இடத்தில் இன்னமும் சரியாக அமர்த்தப்படவில்லை. அனைத்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்தும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியர் மேக்பெத்தில் கூறியதைப்போல், ‘‘அழகு அசிங்கமாகிறது, அசிங்கம் அழகாகிறது.’’ (‘‘Fair is foul and foul is fair’’).
ஐரோப்பிய வரலாற்றைப் படிக்கும் எவரொருவரும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை, நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து நவீன சமூகமாக மாறிய இடைமாற்றக் காலத்தில், மிகுந்த கொந்தளிப்பு, குழப்பம், யுத்தங்கள், புரட்சிகள், தாறுமாறான ஒழுங்கற்ற நிலை, சமூகத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், அறிவுஜீவிகள் மத்தியில் மிகுந்த கிளர்ச்சிநிலை முதலானவைகள் இருந்ததை உணர முடியும். இவ்வாறு ஏராளமான மாற்றங்கள் நடைபெற்ற பின்னர்தான் ஐரோப்பாவில் நவீன சமூகம் உருவானது. அதுபோன்றதொரு கொந்தளிப்பு நிலை தற்போது இந்தியாவில் இருக்கிறது. நம்முடைய நாட்டின் வரலாற்றில் அத்தகைய மிகவும் வலியும் வேதனையும் அளிக்கக்கூடிய காலகட்டத்தினூடே நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக இதுபோன்றதொரு நிலை அடுத்து 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு இருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். இந்த இடைமாற்றமானது மக்களுக்கு எவ்விதமான வலியையோ வேதனையையோ அளிக்காது உடனடியாக நடைபெற வேண்டும் என்று நாம் விரும்பினாலும் துரதிர்ஷ்டவசமாக கடந்தகால வரலாறு அப்படி இருந்ததில்லை என்பதே எதார்த்த உண்மை.
இப்படிப்பட்ட இடைமாற்றக் காலத்தில் மனிதர்களின் சிந்தனைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. எனவே இவ்வாறு மனிதர்களின் சிந்தனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகங்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சிந்தனைகள் பௌதீக சக்தியாக மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்னும் சிந்தனைகளும் மதச் சுதந்திரம் (மதச்சார்பின்மை) என்னும் சிந்தனையும் ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில், மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் வலுவான பௌதீக சக்திகளாக மாறின. இவ்வாறான இடைமாற்றக் காலத்தின்போது, ஐரோப்பாவில் ஊடகங்கள் (அப்போது ஊடகங்கள் என்றால் பத்திரிகைகள் மட்டுமே) நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவை நவீன ஐரோப்பாவாக மாற்றியதில் மாபெரும் அளவில் வரலாற்றுப் பங்களிப்பினை ஆற்றின.
என்னுடைய அபிப்பிராயமானது, இதேபோன்று முற்போக்கானதொரு பங்களிப்பினை இந்திய ஊடகங்களும் ஆற்றிட வேண்டும் என்பதேயாகும். சாதீயம், வகுப்புவாதம், மூடநம்பிக்கைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற பிற்போக்கான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் மற்றும் நடைமுறைகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலமும், நவீன, பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகள், மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதன் மூலமுமே இவற்றைச் செய்திட முடியும். ஒரு காலத்தில் நம் ஊடகங்கள் நம் வரலாற்றில் மாபெரும் பங்களிப்பினைப் புரிந்துள்ளன.
இந்திய ஊடகங்கள், அதிலும் குறிப்பாக ஒலி-ஒளி ஊடகங்கள் இத்தகைய முற்போக்கான மற்றும் சமூகத்தின் பொறுப்பான பங்களிப்பினைச் செய்யவில்லை என்று நான் விமர்சித்ததை அடுத்து, அவ்வூடகங்களில் ஒரு பிரிவினரால் மிகவும் ஆவேசமாக நான் தாக்கப்பட்டேன். நான் அரசாங்கத்தின் ஏஜண்டாகச் செயல்படுவதாக தனிப்பட்ட முறையில் கூட ஒருசில ஊடகங்கள் என்னைத் தாக்கின. ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து அக்கறையுடன் சில பிரச்சனைகள் எழுப்பப்பட்டபோது, அவை அக்கறையுடன் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஊடகங்களை விமர்சித்ததன் மூலம் அவை தங்கள் செயல்பாட்டின் தன்மைகளை மாற்றிக்கொள்ள அவை தூண்டலாம் என்றுதான் நான் கருதினேனேயொழிய, மாறாக அவற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் அதைச் செய்யவில்லை. இடைமாற்றக்காலத்தில் இந்திய ஊடகங்களுக்கு ஒரு வரலாற்று ரீதியான பங்களிப்பு இருக்கிறது. இத்தகைய வரலாற்றுக் கடமையை ஊடக நண்பர்களுக்கு நான் நினைவு படுத்த விரும்பினேன். என்னுடைய விமர்சனத்தைச் சரியான உணர்வுடன் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருசில ஊடகங்கள் எனக்கெதிராக வசைமாரி பொழியத் தொடங்கியுள்ளன. என்னை சர்வாதிகார அரக்கன் என்பதுபோலக்கூட சில குறிப்பிட்டுள்ளன.
ஊடகங்கள் என்னை அவற்றின் மீது அக்கறை கொண்ட நண்பனாகவே கருத வேண்டும். நான் அவர்களை விமர்சித்தேன். ஏனெனில், அவை தங்களுடைய பலவிதமான குறைபாடுகளைக் கைவிட்டு, இன்றைக்கும் இந்திய மக்களின் மதிப்பினைப் பெற்றுள்ள ஐரோப்பிய பத்திரிகைகள் போன்று, செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
நம் நாட்டின் மக்கள் தொதகையில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் இருக்கிறதென்றும், விலைவாசிகள் விண்ணைநோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்றும், மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதி, கல்வி வசதி கிடைத்திட வில்லை என்றும் நான் குறிப்பிட்டேன். அதேபோன்று கவுரவக் கொலைகள், வரதட்சணைச் சாவுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வெறித்தனமான மூட மத நம்பிக்கைகள் போன்ற காட்டுமிராண்டித்தனமான சமூகப் பழக்க வழக்கங்கள் இருப்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற ஆழமான பிரச்சனைகள் குறித்து எதுவும் கூறாது, இந்திய ஊடகங்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்கு வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுக்குச் செலவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். உதாரணமாக, சினிமா நடிகர்களின் வாழ்க்கை, ஃபேஷன் அணிவகுப்புகள், பாப் மியூசிக், டிஸ்கோ நடனங்கள், கிரிக்கெட் அல்லது ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் நிகழ்ச்சிகளைக் காட்டுகின்றன என்று விமர்சித்திருந்தேன்.
ஊடகங்கள் மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டவேண்டும்தான். ஆனால் அவை தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்குப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஒதுக்கிவிட்டு, வெறும் 10 விழுக்காடு அளவு மட்டும் சமூகப் பொருளதார அம்சங்களுக்கு ஒதுக்குகின்றன. மக்களின் உண்மையான சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறாது மேலே கூறியவாறு மக்களுக்குச் சம்பந்தம் இல்லாத சினிமா நடிகர்களின் வாழ்க்கை, டிஸ்கோ நடனங்கள் போன்ற விஷயங்கள் மீது மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. இவ்வாறு மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தராததற்காகவும், மூட நம்பிக்கைகளை விதைப்பதற்காகவும் தான் நான் ஊடகங்களை விமர்சித்தேன்.
எவரொருவரும் விமர்சனத்தைக்கண்டு அஞ்சக் கூடாது. அதேபோன்று அவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது சினங்கொள்ளவும் கூடாது. மக்கள் என்னை அவர்கள் விரும்பும் அளவிற்கு விமர்சிக்கலாம். நான் அதற்காகக் கிஞ்சிற்றும் சினங்கொள்ள மாட்டேன். உண்மையில் அதன் மூலம் நான் பயனடைவேன்.
உண்மையில் எப்போதும் நான் ஒரு சுதந்திரப் பற்றாளனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு ஆதாரம் வேண்டுமென்று விரும்புவோர் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நான் நீதிபதியாக இருந்த காலத்தில் அளித்திட்ட தீர்ப்புகளைக் கண்ணுற்றால் தெரிந்து கொள்ளலாம். நீதிபதிகள் என்போர் மக்களின் சுதந்திரத்தைக் காப்பவர்கள் என்றும், இதனை உயர்த்திப்பிடிக்க நீதிபதிகள் தவறுவார்களானால் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து நழுவியவராவார்கள் என்றும் பல முறை நான் என் தீர்ப்புகளில் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆயினும் சுதந்திரம் என்பது எவரொருவரும் தாங்கள் விரும்பிய எதனையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அனைத்து சுதந்திரங்களும் பொது நலன் மற்றும் பொறுப்புக்களுக்குக் குந்தகம் விளைவிக்காதவாறு தேவையான சில கட்டுப்பாடுகளையும் கொண்டவைகளாகும்.
இதன் அடிப்படையில் சுய முறைப்படுத்தல் (self regulation) குறித்து இப்போது நாம் விவாதிக்கலாம்.
தற்சமயம தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் நிகழ்ச்சிக்ளை முறைப்படுத்தக்கூடிய விதத்தில் எவ்விதமான அதிகாரக் குழுமமும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள இந்திய பிர° கவுன்சில் பத்திரிகைகள் மீது மட்டுமே ஆளுகை செலுத்த முடியும். இதிலும் பத்திரிகையாளர் எவரும் தங்கள் பத்திரிகை தர்மத்தை மீறி செயல்பட்டார் என்று மெய்ப்பிக்கப்படுவாரானால் இந்திய பிர ஸ்
கவுன்சில் அவருக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை என்பது என்ன தெரியுமா? மன்னித்தல் (admonition)அல்லது கண்டனம் (censure) என்பது மட்டுமே. இந்திய பிரஸ்
கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், இதன் அதிகாரவரம்பெல்லைக்குள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களையயும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
பிரஸ் கவுன்சிலின் கீழ் கொண்டுவரப்படுவதை தொலைக்காட்சி - வானொலி ஊடகங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. எங்களை நாங்களே சுயமாக முறைப்படுத்திக் கொள்வோம் என்று அவை கூறுகின்றன. நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட அத்தகைய உரிமைகள் கிடையாது. அவர்கள் நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு கண்டிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு. வழக்குரைஞர்களைக் கட்டுப்படுத்த இந்திய வழக்குரைஞர் சங்கம் இருக்கிறது. மருத்துவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் கீழ் வருகிறார்கள். இதேபோன்று நாட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு அமைப்பிற்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறார்கள். எலக்ட்ரானிக் ஊடகவியலாளர்கள் மட்டும் இவ்வாறு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறார்கள்.
உண்மையில் சுய முறைப்படுத்தல் என்று எதுவும் கிடையாது. அது ஒரு முரண்தொடையாகும். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். இதற்கு ஊடகங்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.
(நன்றி: தி இந்து நாளிதழ், 16.11.11.)
(தமிழில்: ச.வீரமணி)

Friday, November 25, 2011

மக்களின் அவலவாழ்வைக் காண மறுத்து கண்ணை மூடிக்கொள்ளும் ஐமுகூ அரசாங்கம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:

அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மிகவும் கடுமையான முறையில் உயர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையானது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதுமே அதனை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. இது புரிந்துகொள்ளக்கூடியதேயாகும். உணவுப் பணவீக்கம் தற்போது 12 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. காய்கறிகள் 26 விழுக்காடும், தானியங்கள் 14 விழுக்காடும், பழங்கள் 12 விழுக்காடும், முட்டை, மீன் மற்றும் இறைச்சி வகைகள் 13 விழுக்காடும், பால் 12 விழுக்காடும் உயர்ந்திருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் சென்ற இரு கூட்டத் தொடர்களின்போதும், சாமானிய மக்களை வாட்டி வதைத்திடும் இவ்விலைவாசிப் பிரச்சனையே பிரதானமான ஒன்றாக முன்னுக்கு வந்தது. இப்போதும் அது தொடர்கிறது. இக்கூட்டத் தொடர்களின்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சீர்குலைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், விலைவாசி உயர்வுக்கு எதிராக அவைத் தலைவரே தீர்மானம் கொண்டுவருவதற்கு இடதுசாரிக் கட்சிகள் ஒப்புக் கொண்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் நடைபெற்று, ‘‘பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளிலிருந்து சாமானிய மக்களைக் காப்பாற்றிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்’’ என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆயினும், சாமானியர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைத்திட வில்லை. மாறாக, நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சென்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போதும்கூட இப்பிரச்சனையே பிரதானமாக முன்னுக்கு வந்ததும் இயற்கையே. அப்போது அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து ஒரு வரைவு தீர்மானத்தை உருவாக்கி, பாஜக சார்பில் அதனை அவையில் முன்மொழிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தத் தீர்மானத்தை எதிர்த்தது. காரணம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உருப்படியான நடவடிக்கை எது குறித்தும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்ற சமயத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய உருப்படியான நடவடிக்கைகளைத் தெரிவித்து அவற்றை தீர்மானத்தில் திருத்தங்களாக கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி, இரு அவைகளிலும் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு குறித்து ஆழமான முறையில் விவாதங்கள் நடத்திட அரசாங்கம் தயாராக இல்லாமல் மிகவும் தடித்தனமான அணுகுமுறையையே அப்போது கடைப்பிடித்தது.
இப்போதும் இக்குளிர்காலக் கூட்டத் தொடரின்போதும் விலைவாசி உயர்வு தொடர்பாக அதே மாதிரியே சொரணையற்றமுறையில் நடந்து கொள்ள அரசாங்கம் முன் வந்திருக்கிறது. இதற்காக அரசாங்கம் ஒரு பதினொரு பக்க அறிக்கையை இரு அவைகளிலும் நிதியமைச்சர் மூலமாகத் தாக்கல் செய்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. ஏனெனில் எகிறும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ளப்படவேண்டிய துல்லியமான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்திடக் கூடிய வகையில் இத்தீர்மானத்தில் எதுவும் இல்லை. எனவேதான், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தக்கூடிய விதத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்திருக்கிறது. இவ்வாறு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடவும், மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைத்திடவும் சில துல்லியமான நடவடிக்கைகளை அறிவித்திட அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு, நாட்டின் பெரும்பான்மை மக்களின் அவலநிலையைப் போக்கக்கூடிய விதத்தில் அரசாங்கத்தை உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க வைத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இது, நாடாளுமன்றக்கூட்டத்தொடரை ஒரு நாள் முடக்கிட இட்டுச் சென்றது. அரசாங்கத்தின் பிடிவாதத்தைத் தகர்த்திட வேறு வழியில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாகவும், முழுமையாகவும் நடைபெற வேண்டும் என்பதில் மிகவும் உறுதிபட இருக்கிறார்கள். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டத்தொடரின்போது, ஓராண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதைக் கட்டாயமாக்கி, அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று ஒரு திருத்தமே முன்மொழிந்திருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் நன்கு செயல்பட்டு மக்களின் இறையாண்மை நிலைநிறுத்தப்பட, அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பையும் அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும் நிறைவேற்றிட இது அவசியம் என்று நாம் கருதுகிறோம். இதனால், அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிகமாகிறது. இவை அனைத்துமே நாடாளுமன்றம் போதுமான கால அளவிற்கு முறையாகச் செயல்பட்டால்தான் உத்தரவாதம் செய்திட முடியும்.
ஆயினும், இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, சாமானியர்களின் ஆழமான பிரச்சனைகளைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்திலும், நாள்தோறும் எகிறும் விலைவாசி உயர்வால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அவர்களின் துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்குளிர்காலக் கூட்டத்தொடருக்கு தன் உத்திகளை வகுத்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற்றால் அதன் மூலம் விலைவாசியைக் கட்டுப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திட்ட பரிந்துரைகளில் குறைந்தபட்சம் மூன்றை ஏற்றுக்கொள்வதற்குப் பரிசீலனை செய்திட அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியும்.
முதலாவதாக, விவசாயப் பண்டங்கள் மீதான ஊக வர்த்தகத்தை உடனடியாகத் தடை செய்தல். ஊக வர்த்தகம்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை பன்மடங்கு அதிகரித்திடக் காரணம் என்பதை இப்பகுதியில் பலமுறை நாம் விளக்கி இருக்கிறோம். விவசாயப் பண்டங்கள் மீது ஊக வர்த்தகம் அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இப்பண்டங்களின் கடும் விலை உயர்வுக்குக் காரணமாகும். எனவே இதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் நிறுத்தியாவது வைத்திட வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய மறுத்து அதன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்து கொள்ளை லாபம் ஈட்டிட ஊக வர்த்தக சூதாடிகளுக்கு வசதி செய்து தருகிறது.
இரண்டாவதாக, சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீளவும் பழைய நிலைக்கே குறைப்பது அவசியம். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்து, அது பணவீக்கத்திற்கும் இட்டுச் செல்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் ‘‘நட்டங்கள்’’ அடைந்திருப்பதால் இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு அவசியம் என்கிற வாதம் முற்றிலும் குதர்க்கமான ஒன்றாகும். எதார்த்தத்தில், நம் பெரிய எண்ணெய் நிறுவனம் எதுவும் நட்டம் எதுவும் அடைந்திடவில்லை. 2010 மார்ச் 31ஆம் நாளன்று நிறைவடைந்த நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாய்களாகும். மேலும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOC) தன்னுடைய இருப்பு வருவாய் உபரியாக 49 ஆயிரத்து 472 கோடி ரூபாய்கள் வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் - டிசம்பர் காலத்தில் பொதுத்துறையின் கீழ் இயங்கும் மற்ற இரு எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனும்கூட முறையே 544 கோடி, 834 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டியிருக்கின்றன.
மேலும், இந்த ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலமாக அரசாங்கம் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக ஈட்டியிருக்கிறது. பட்ஜெட்டில் அரசாங்கம் மான்யத்திற்கு என்று ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 40 ஆயிரம் கோடி ரூபாய்கள் மட்டுமேயாகும். இவ்வாறு அரசாங்கமானது 90 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக மக்களின் வயிற்றிலடித்து லாபம் ஈட்டியிருக்கிறது.
மூன்றாவதாக, பொது விநியோக முறை மூலமாக வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களுக்கு அரசின் மத்திய உணவுக் கிடங்குகளில் அழுகி வீணாகிக் கொண்டிருக்கும் உணவு தான்யங்களை விநியோகித்திட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இது உணவுப் பொருள்களின் விலை உயர்வை மட்டுப்படுத்திட உதவும். தற்சமயம், அரசாங்கக் கிடங்குகளில் சுமார் 600 லட்சம் டன்கள் உணவு தான்யங்கள் இருப்பில் இருக்கின்றன. இது, இருக்க வேண்டிய இருப்பின் கொள்ளளவைப்போல சுமார் இரண்டரை மடங்காகும்.ஆயினும், ஐமுகூ-2 அரசாங்கம் இதனை மக்களுக்கு விநியோகித்திட நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.
குறைந்தபட்சம் இம்மூன்று நடவடிக்கைகளையும் எடுப்பதற்குப் பதிலாக, நிதியமைச்சரின் அறிக்கையானது ‘‘பணவீக்க நிலைமை இந்தியாவில் சரியாகிக் கொண்டிருக்கிறது’’ என்று கூறிக்கொண்டிருக்கிறது. மேலும், மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டதால்தான் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்கிற ரீதியிலும் நிதியமைச்சர் விசித்திரமான விதத்தில் பேசியிருக்கிறார். இவ்வாறு இவர் பேசும் அதே சமயத்தில்தான் திட்டக் கமிஷன், கிராமப்புறங்களில் 8 விழுக்காடு அளவிற்கும், நகர்ப்புறங்களில் 3.3 விழுக்காடு அளவிற்கும் மக்கள் உணவு தான்யங்கள் மற்றும் பருப்பு வகைகளை வாங்குவது வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசாங்கமே அமைத்திட்ட ஆணையங்கள் நாட்டு மக்களில் சுமார் 80 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அதே சமயத்தில்தான் நிதியமைச்சர் இவ்வாறு சரடு விட்டுக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக, ஒன்று அரசாங்கம் மக்களின் வாழ்நிலையைப் பார்க்காது கண்ணை மூடிக்கொண்டு குருடாக இருக்க வேண்டும் அல்லது விலைவாசியை உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதை நியாயப்படுத்துவதற்காக நாட்டைத் திசை திருப்ப வேண்டும்.
எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக, அரசாங்கத்தை மேலே கூறிய மூன்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்திட அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளிக்கக்கூடிய விதத்தில் நாடாளுமன்றத்திற்குள்ளே போராட்டம் நடத்தக்கூடிய அதே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட முடிவெடுத்துள்ளது.
(தமிழில்: ச.வீரமணி)