Wednesday, July 12, 2017

ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்கு (1): மேரி டேவிஸ்


[பெண்கள் உண்மையில் ‘புரட்சியின் மருத்துவத்தாதி’யாக இருந்தார்கள். புரட்சி பிறக்கும்போதும் இருந்தார்கள், மிகவும் முக்கியமாக பிறந்தபின் அதனை வளர்த்தெடுக்கும் ஆரம்பக் கட்டங்களிலும் இருந்தார்கள்.]
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையுமே இப்போதும் நினைவுகூர்வது உதவிகரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எனினும் 1917இல் நடைபெற்ற இரு புரட்சிகளிலும் ஓர் அம்சம் அவற்றில் பெண்களின் பங்கு குறித்ததாகும். அது இப்போது அநேகமாக முற்றிலுமாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
1917இல் இரண்டு முறை முன்னணியில் தோன்றினார்கள் என்கிற கருத்து பொதுவாக இருந்துவருகிறது. முதல் தடவை என்பது பிப்ரவரி 23 அன்று பெட்ரோகிராடில் தற்காலிக அரசாங்கம் நிறுவப்படுகையில் அதன் கட்டியக்காரர்களாக இருந்தார்கள் என்பதாகும். இரண்டாவது தடவை, அக்டோபர் 25 அன்று அரசாங்கத்தின் இயங்குமிடமாக இருந்த குளிர்கால அரண்மனையை போல்ஷ்விக்குகள் தாக்கியபோது அதனைப் பாதுகாத்திடும் விதத்தில் ஒரு பட்டாலியன் ஒன்றின் அங்கமாக இருந்து, பூர்ஷ்வா பெண்கள் ஒரு பிற்போக்குத்தனமான பங்கினை ஆற்றிய சமயத்திலாகும். இந்த இரண்டு நிகழ்வுகளும் உண்மைதான் என்றபோதிலும், இவ்வாறு இந்த இரண்டினை மட்டும் ஏனோதானோவென்று கூறுவதென்பது, புரட்சி இயக்கம் முழுவதும் பெண்கள் வகித்த பங்களிப்பினை வெளிக்கொணராது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.  உண்மையில் பெண்கள் ‘புரட்சியின் மருத்துவத் தாதி’யாக இருந்தார்கள்.  புரட்சி பிறக்கும்போதும் இருந்தார்கள், மிகவும் முக்கியமாக பிறந்தபின் அதனை வளர்த்தெடுக்கும் ஆரம்பக் கட்டங்களிலும் இருந்தார்கள் என்று ஜானே மெக்டெர்மிட் மற்றும் அன்னா ஹில்யார் எழுதிய புத்தகத்தின் தலைப்பான ‘புரட்சியின் மருத்துவத்தாதிகள்’  என்கிற புத்தகம் குறிப்பிடுகிறது. மேலும் 1919-20இல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதும் புரட்சியைப் பாதுகாப்பதில் அவர்களின் கேந்திரமான பங்களிப்பு இருந்தது. புரட்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து மிகவும் சரியாகக் கூற வேண்டுமானால், 1905இல் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை மீண்டும் ஆய்வு செய்வது மிகவும் அவசியமாகும். அப்போதே பெண்களின் சமத்துவத்திற்கான அமைப்பு (League for Women’s Equality) உருவானதிலிருந்தே பெண்களுக்கான இயக்கம் இயங்கத் தொடங்கிவிட்டது.
அந்த சமயத்தில் ஐரோப்பாவில் இதேபோன்று பெண்களுக்காக பல அமைப்புகள் செயல்பட்டதைப் போன்றே, இந்த அமைப்பும் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் குறிப்பாக பூர்ஷ்வா பெண்களின் பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்தின. எனினும், ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா செட்கின் (Clara Zetkin) பெண்கள் வர்க்கங்களின் அடிப்படையில் பிரிந்திருந்ததைப் புரிந்துகொண்டு, உழைக்கும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தார். இதனை அவர் ஸ்டட்கார்ட்டில் 1907இல் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் முன்வைத்தார். அவர் முன்வைத்த ஆவணத்தில் குறிப்பிட்டிருந்த தாவது: ‘‘வர்க்க முரண்பாடுகள் உழைக்கும் பெண்களை பூர்ஷ்வா பெண்களின் இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதை சாத்தியமற்றதாக்கி இருக்கின்றன.
இதன் பொருள், பூர்ஷ்வா பெண்கள் கோரும் கோரிக்கையான, அனைவருக்கும் வாக்குரிமை என்கிற கோரிக்கை மீதான போராட்டத்தை அவர்கள் ஏற்கவில்லை என்பதல்ல, மாறாக பல்வேறு முனைகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக, அக்கொடுமைகளைப் புரிபவர்களுக்கு எதிராக அவர்களும் எங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும்.’’இந்த செய்தி, ரஷ்யாவில் கொங்கார்டியா சமோய்லாவா அலெக்சாண்ட்ரா, கொலண்டாய் மற்றும் இதர போல்ஷ்விக் பெண்களால், 1907இல் முன்னெடுத்துச்செல்லப்பட்டது. இவர்கள் உழைக்கும் பெண்கள் பரஸ்பர உதவி மையம் என்ற ஒன்றை உருவாக்கி, உழைக்கும் பெண்கள் மத்தியில் சோசலிசக் கருத்துக்களைப் பரப்பினார்கள், தாங்கள் உழைக்கும் இடங்களில் சட்டப்பூர்வமாக இயங்கும் தொழிற்சங்கங்களில் பங்கேற்றுச் செயல்பட ஊக்குவித்தார்கள். அதேபோன்று சோசலிஸ்ட் இயக்கமும் பெண்களின் பிரச்சனைகளைத் தன் கையில் எடுக்காது முன்னேறமுடியாது என்பதையும் உத்தரவாதப்படுத்தினார்கள்.
சர்வதேச மகளிர் தினம் 1910இல் துவங்கப்பட்டது என்றபோதிலும், அது 1913வரை ரஷ்யாவில் கொண்டாடப்படவில்லை.லெனின், உழைக்கும் பெண்களின் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை விடாது ஆதரித்துவந்தார். அதேபோன்று பெண்களின் பிரச்சனைகளை முன்வைத்து ‘உழைக்கும் பெண்தொழிலாளி’ என்று பொருள்படும் ‘ரபோட்னிஸ்டா’ என்னும் புதிய இதழ் வெளியிடுவதற்குக் காரணமானவர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்த இதழ் 1914இல் முதலில் வெளிவந்தது.அந்த ஆண்டு முதல் உலகப் போர் வெடித்ததானது, தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் பெரிய அளவில் உடைப்பினை ஏற்படுத்த உதவியது. ஐரோப்பாவில் செயல்பட்ட சோசலிஸ்ட்டுகள் மத்தியில் இடதுசாரி/வலதுசாரிப் பிரிவுகள் உருவாயின. இவ்வாறான பிரிவு ரஷ்யாவில் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. அங்கே 1903இலேயே செயல்பட்டுவந்த ரஷ்யன் சமூக ஜனநாயக மற்றும் தொழிலாளர் கட்சி போல்ஷ்விக்குகள் பிரிவு என்றும், மென்ஷ்விக்குகள் பிரிவு என்றும் இரண்டாகப் பிரிந்தன.
ஆனால், போல்ஷ்விக்குகள் மிகவும் பிரபலமான யுத்த எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றிய அதே சமயத்தில், மென்ஷ்விக்குகள் மக்களை வெறுப்படையச் செய்யக்கூடிய விதத்தில் யுத்தத்தை ஆதரித்தனர். இவ்வாறு யுத்தத்திற்கு ஆதரவு/எதிர்ப்பு என்கிற பிரச்சனை மாதர் இயக்கத்திலும் எதிரொலித்து வர்க்கப்பிரிவினைகளை ஏற்படுத்தியது. பிரிட்டனில் எம்மலின் பாங்குர்ஸ்ட் தலைமையில் இயங்கிய பூர்ஷ்வா மாதர் இயக்கம் யுத்தத்தை ஆதரித்தது. போல்ஷ்விக் சகோதரிகளின் செல்வாக்கின்கீழ் இயங்கிவந்த உழைக்கும் மாதர் அமைப்பு முதல் உலகப் போருக்கு எதிராக இயங்குவது அதிகரித்துக் கொண்டிருந்தது.
தொடரும்

No comments: