Monday, July 3, 2017

முஸ்லீம்கள் நாளும் பயந்து பயந்து வாழும் கொடிய நிலை வட இந்தியா பூராவும் வளர்ந்து கொண்டிருக்கிறது


புதுதில்லி, ஜூலை 3-
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், வட இந்தியாவின்  மாநிலங்களில் முஸ்லீம் குடும்பத்தினர் நாள்தோறும் பயந்து பயந்து வாழும்  அவலநிலை வளர்ந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக இன்றைய (திங்கள்கிழமை) தி இந்து நாளிதழின் தில்லி மெட்ரோ பக்கத்தில் ஒரு முழுப்பக்கச் செய்தி கட்டுரையை அதன் செய்தியாளர் ஹேமானி பண்டாரி என்பவர் எழுதியிருக்கிறார். அதன்  விவரங்கள் வருமாறு:
ஹரியானா மாநிலம் ஜெய்சிங்பூர் கிராமத்தில்  14 பேர் கொண்ட முஸ்லீம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த பெஹ்லு கான் என்பவர் ஏப்ரல் 1 அன்று ஆல்வார் மாவட்டத்தில்  பேரார் என்னுமிடத்தில் “பசுப்பாதுகாப்பு குண்டர்களால்” அடித்தே  கொல்லப்பட்டார். அவருக்கு மார்பிலும், வயிற்றிலும் பலமாக அடிபட்டதன் காரணமாக இறந்துவிட்டார். அவர் இறந்து தற்போது மூன்று மாதங்களாகிவிட்டன.
ஜூன் 22 அன்று தில்லி – மதுரா பாசஞ்சர் ரயில் ஒன்றில் பயணம் செய்த ஜுனைத் கான் என்ற 15 வயது பதின்பருவத்தைச் சேர்ந்த சிறுவன்  ஈத் பெருவிழாவைக் கொண்டாடுவதற்காக உடைகள்  வாங்கிக்கொண்டு திரும்பும்போது, கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான்.
பெஹ்லுகான் கொல்லப்பட்ட செய்தியையும், ஜுனைத் கான் கொல்லப்பட்ட சம்பவத்தையும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தாரும், ஊர் மக்களும் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் ஆகியவற்றின் மூலமாகவே முதலில் அறிந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் முஸ்லீம்களாக இருந்ததற்காகவே மதவெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டுள்ளார்கள்.  
பெஹ்லுகான் இல்லத்திற்கு தி இந்து செய்தியாளர் சென்றபோது, அவரது மகன்கள் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். விடாது பெய்துவரும் மழையும், எட்டு மணி நேரமாக இருந்துவரும்  மின் வெட்டும் அவர்களது வீட்டிலிருந்த துயரநிலையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருந்தன.
சம்பவம் குறித்து செய்தியாளர் விசாரித்தபோது பெஹ்லுகானின் மகன்களில் ஒருவரான இர்ஷத் (வயது 25) , “என் தந்தை மாடுகள் வைத்திருந்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டார். அவரை பசுக்களைக் கடத்துபவர் என்று கூறி கொன்றார்கள். இந்த ஏழைப் பையன் ஜுனைத் கானை ஏன் கொன்றார்கள்? அவன் என்ன பாவம் செய்தான்? என்ன நடக்கிறது?” என்று என்னிடம் கேட்டான். அவனது சகோதரர்களும் அதனை ஆமோதிப்பதைப் போல் என்னைப் பார்த்தார்கள். ‘
கிராமத்தில் ஒரு தேநீர் விடுதியில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த நிஜ்ரு கானுக்கு ஜுனைத் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாகத் தெரியும். நாட்டில் முஸ்லீம்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையை அவர்  வெளிப்படுத்தினார். பெஹ்லுவிற்கும், ஜுனைத்திற்கும் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், “இன்றையதினம் வீதியில் செல்லும் எவர் வேண்டுமானாலும் எங்களை என்ன வேண்டுமானாலும் திட்டலாம், எங்களால் எதுவும் செய்யமுடியாது. ஏனென்றால் நாங்கள் ஏழைகள், முஸ்லீம்கள்,” என்றார். அவர் மேலும், “நாங்கள் முஸ்லீம்கள் போல் தாடி வைத்திருந்து, கைலி கட்டியிருந்தாலே எங்களைப் பிடித்து அடிக்கிறார்கள். நாங்கள் எருமை மாட்டை ஓட்டிச்சென்றால்கூட, நாங்கள் பசுவைக் கடத்துகிறோம் என்று சொல்லி எங்களை அடிக்கிறார்கள்,” என்றார்.
குருகிராம் மெட்ரோ நிலையத்தின் அருகே ஆட்டோ ஓட்டுநராக  வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரும் தேநீர் விடுதியில் அமர்ந்திருந்தார். அவர் மெட்ரோ நிலையத்தின் அருகில் முஸ்லீம் குல்லாய் அணிந்திருந்த ஒருவரை இரு பையன்கள் கிண்டலடித்துக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகக் கூறினார்.
பெஹ்லுவின் வீட்டில் அவர் தாயார் அங்கூரி பேகம், பெஹ்லு கொல்லப்பட்டபின்னர், அநேகமாக பைத்தியம்பிடித்தவர் போலாகிவிட்டார். எப்போதும் படுத்தே இருக்கிறார். புகைப்படக்காரர் எழுந்து உட்காரச்சொல்லிக் கேட்டுக்கொண்டபின்னர் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருக்கிறார்.
பெஹ்லுவின் மருமகள் சப்னம், தன் மாமனாரின் அம்மா அங்கூரி பேகம் குறித்துக் கூறுகையில், “சம்பவம் நடந்தபின் சுமார் ஒருமாதம் வரைக்கும் அவர் நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு நினைவு தப்ப ஆரம்பித்துவிட்டது. சிலசமயங்களில் செருப்புகளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு வருகிறார். நள்ளிரவில் திடீரென்று விழித்துக்கொண்டு, “பெஹ்லு”. ”பெஹ்லு” என்று கத்துகிறார். தொடர்ந்து அவர் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. ஏதேனும் சாப்பிடுங்கள் என்று அவரை நாங்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் அவர் தான் கட்டியிருக்கிற ஆடைகளைக் கழட்டத் தொடங்கிவிடுகிறார்,” என்று கூறும்போது, அவர்கண்களில் இருந்து  கண்ணீர் தாரைதாரையாக வரத்தொடங்கியது.
இறந்த பெஹ்லுவின் மனைவி செபுனா (வயது 45)  துக்கம் அனுஷ்டிப்பதன் காரணமாக ஓர் அறைக்குள்ளேயே  அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். 4 மாதங்கள் 10 நாட்களுக்கு அவர் தன்  மகன்களைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாதாம். எப்போதும் குரான் வாசித்துக் கொண்டிருக்கிறார். எப்போதாவது சமைத்துக் கொள்கிறார்.
இதுகுறித்து சப்னம் கூறுகையில், “அவர் தன் மகன்களைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது. கண்களால்கூட அவர் எவரையும் பார்க்கக்கூடாது.  வீட்டை விட்டு அவர் வெளியே வரக்கூடாது. இதனால் அவர் மனதை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. என்ன செய்வது? இதுதான் எங்கள் கலாச்சாரம். நாங்கள் அதனை மதித்தாக வேண்டும்,” என்று கூறிக்கொண்டே அழுதுகொண்டிருந்த தன் மாமியாரின் கண்களைத் துடைத்துவிட்டார்.
செய்தியாளர் செபுனா இருந்த இருள்சூழ்ந்திருந்த அறைக்குள்  செபுனாவிற்கு பக்கத்தில் அமர்ந்தபோது, செபுனா கதறி அழத்தொடங்கிவிட்டார். அவரால் அதிகமாக எதுவும் பேசமுடியவில்லை. “எப்படி என்னால் அழாமல் இருக்க முடியும்? தினந்தோறும் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வார், மாலையில் திரும்பி வருவார். ஏன் அவர் கொல்லப்பட்டார்? அவர் உடம்பில் 14 காயங்கள் காணப்பட்டன,” என்று கூறும்போதே கதறத்தொடங்கிவிட்டார்.
பெஹ்லுவின் மகன்களில் ஒருவரான இர்ஷாத், தந்தை இறந்தபிறகு, குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்படுவதாகக் குறிப்பிட்டார். கால்நடை வளர்ப்புதான் தங்கள் தொழில் என்றும் கடந்த மூன்று மாதங்களாக  தாங்கள் மிகவும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதால் தங்களால் தங்கள் தொழிலைத் தொடர முடியவில்லை என்றார்.
“ஏப்ரல் 1 அன்று எங்கள் தந்தை கொல்லப்பட்டபிறகு இந்த கிராமத்திலிருந்து எவரும் கால்நடைகளை வாங்குவதற்காக செல்லவில்லை. எந்த நிமிடம் வேண்டுமானாலும் அவர்கள் எங்களைத் தாக்கலாம் என்று நினைத்துக்கொண்டே, ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.
“ரம்ஜான் மாதம் முஸ்லீம்களின் புனித மாதமாகும். இந்த சமயத்தில் முன்பெல்லாம் மின்வெட்டு இருக்காது. இப்போது பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், நாளில் 20 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் இல்லை,“  என்று இர்ஷத் கூறினார்.
“என்னுடைய தந்தையைக் கொன்றவர்களில் மிக முக்கியமான ஆறு நபர்களைப் போலீசார் இன்னமும் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தொடர்புகள் உண்டு,” என்றார்.
வழக்கு விசாரணையிலும் அநேகமாக எந்த முன்னேற்றமும் இருப்பதுபோன்று தோன்றவில்லை.
பெஹ்லு கொல்லப்படுவதற்கு முன்பு அந்தக் கிராமத்திலிருந்த முஸ்லீம் குடும்பத்தினரின் வருமானம் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தத. ஆனால் இப்போது அது ஆறாயிரம் ரூபாய்க்கும் மேல் தாண்டமாட்டேன் என்கிறது. காரணம் எவரும் வருமானத்திற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.

படக் குறிப்பு: பெஹ்லுவின் தாய், மனைவி, மருமகள் மற்றும் மகள்கள்.  

மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் ஜூனைத் கான் கொல்லப்பட்ட சம்பவம்வரை  நடைபெற்ற கொலை சம்பவங்களை தி இந்து நாளிதழ் பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

2015 செப்டம்பர்
1. முகமது அக்லக் (வயது 45): உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்னுமிடத்தில் தன் வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்றும் சாப்பிட்டார் என்றும் வதந்தியைப் பரப்பி கொல்லப்பட்டார்.
2015 அக்டோபர்
2. சாகித் ரசூல் பட் (வயது 16) : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் என்னுமிடத்தில் அவர் பயணம் செய்த டிரக்கின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மரணம்  அடைந்தார்.
2016 பிப்ரவரி
3. முஸ்லீம் காவல்துறையினர்:  மகாராஷ்ட்ரா மாநிலத்தில்  லாட்டூர் என்னுமிடத்தில் “ஜெய் பவானி” என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.
2016 மார்ச்
4. ஜார்கண்ட் மாநிலத்தில் லடேகார் என்னுமிடத்தில் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்ட கால்நடை வர்த்தகர்கள் மஜ்லூம் (35) மற்றும் இனயதுல்லா கான் (12) ஆகிய இருவரும் மரத்தில்  தொங்கினார்கள்.
2016 ஜூலை
5.  இரு முஸ்லீம் பெண்கள் மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்த போது மாட்டுக்கறி எடுத்துச்சென்றதாகக் கூறப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டனர்.
 2017 ஏப்ரல்
6. அஸ்ஸாம் மாநிலத்தில் கால்நடைகளைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கால்நடை வர்த்தகர்கள் ஹனிபா (வயது 23), ரியாசுதீன் அலி (வயது 24) கொல்லப்பட்டனர்.
7. பெஹ்லுகான் கொல்லப்பட்ட சம்பவம்.
2017 மே
8. ஜார்கண்டில் முன்னா அன்சாரி (39) என்பவர் குழந்தைகளைத் தூக்கிச் செல்பவர் என்ற வதந்தியின் பேரில் தாக்கப்பட்டார்.
9. ஜார்கண்டில் கடத்தல் குற்றச்சாட்டின்படி ஷேக் சஜ்ஜு(25), ஷேக் சிராஜ் (26), நைம் (35), ஷேக் ஹலிம் (28) ஆகியோர் கொல்லப்பட்டார்கள்.
10. மகாராஷ்ட்ராவில் மாலேகான் என்னுமிடத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி இரு இறைச்சிக் கடைக்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
2017 ஜூன்
ஜார்கண்டில் தன்பாத் என்னுமிடத்தில் இப்தார் கொண்டாடுவதற்காக மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாகக் கூறி ஐனுல் அன்சாரி (35) தாக்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பர்மாலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடைத்துறை அதிகாரிகள் கால்நடைகளை டிரக்குகளில் கொண்டுவந்தபோது தாக்கப்பட்டார்கள்.
ஜுனைத் கான்
தில்லி – மதுரா ரயிலில் ஜுனைத் கான் என்னும் 15 வயதுச் சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான்.
அலிமுதீன் அன்சாரி
ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கொல்லப்பட்டுள்ளார்.

(தமிழில்: ச. வீரமணி)

No comments: