Friday, July 23, 2010

பாதுகாப்பு அம்சங்களை அலட்சியப்படுத்துவதன் மூலம் மக்களின் உயிருடன் விளையாடும் ரயில்வே துறை



மேலும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டு, 60 உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது, நூற்றுக்கணக்கானோர் கடுங் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். ஆயினும், மத்திய ரயில்வே அமைச்சர், ‘இது மேலும் ஒரு சதித்திட்டம்’ என்று கதையளந்து கொண்டிருக்கிறார். ஐமுகூ-2 அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் தலைமைக்கோ, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கோ, மனித உயிர்கள் மிகவும் மலிவானதாகிவிட்டன. விபத்தில் இறந்தவர்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலையோ அனுதாபமோ கூட காட்டாமல் திமிருடன் பதிலளிப்பது மிகவும் வெட்கக் கேடானதாகும், இவ்வாறு விபத்துக்கள் நடைபெறும்போது மனச்சான்றின் உறுத்தல் சிறிதுகூட இல்லாமல், வழக்கமாகத் தெரிவிக்கப்படும் வருத்தம் கூட தெரிவிக்காமல், ‘‘இது எதிரிகளின் நாசவேலை’’ என்று கூறிக்கொண்டிருக்கிறார். ரயில்வே வாரியத்தின் தலைவரும், அமைச்சரின் கூற்றை அடியொட்டி, விபத்து தொடர்பாக, ‘நாசவேலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கில்லை’ என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஐமுகூ-2 அரசாங்கம் பொறுப்பேற்ற பின் 2009 மே மாதத்திற்கும் 2010 ஜூலை மாதத்திற்கும் இடையில் பெரிய அளவிலான ரயில் விபத்துக்கள் 16 நடைபெற்றிருக் கின்றன. 269 பேர் இவற்றில் பலியாகி இருக்கிறார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுங் காயங்கள் அடைந்திருக்கிறார்கள். சிறிய விபத்துக்கள் உட்பட அனைத்தையும் சேர்த்தோமானால், 2009 மே மாதத்திற்குப் பின் மொத்தம் 162 விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, இவற்றில் 428 பேர் இறந்திருக்கின்றனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் இவ்விபத்துக்கள் குறித்து பொறுப்புணர்ச்சியுடனோ அல்லது தார்மீக வேதனையுடனோ எவ்விதக் கவலையும் படாது, விபத்து நடைபெற்ற இடத்தில், ‘‘விபத்துக்கான காரணம் குறித்து நான் சந்தேகிக்கிறேன், என் மனதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன, எது நடந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்குப் பின்னால் இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என்று கூறியிருக்கிறார். 2010 மே 28 அன்று மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு மற்றொரு ரயிலுடன் மோதி 149 பேர் கொல்லப்பட்டபோது, அமைச்சர், ‘‘இந்த ரயில் விபத்துக்குப்பின்னே ஓர் அரசியல் சதி இருக்கிறது. இந்த நாசவேலையைச் செய்தவர்கள், பல உயிருடன் விளையாடியவர்கள் மன்னிக்கப்படக் கூடாது’’ என்று பேசினார். அதற்கு முன்னதாக, 2009 அக்டோபர் 21 அன்று கோவா எக்ஸ்பிரஸ் - மேவார் எக்ஸ்பிரஸ் மதுரா அருகில் மோதிக்கொண்டதில் 21 பேர் கொல்லப்பட்டபோது, அமைச்சர், ‘‘ரயில் சங்கிலியைப் பிடித்து இழுத்ததுதான் இதற்குக் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இது ஒரு ‘சிக்னல்’ பிரச்சனை என்கிறார்கள். இது ஒரு கிரிமினல் குற்றமாகக் கூட இருக்கலாம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தீர்மானிக்க இதனை நான் விட்டுவிடுகிறேன்’’ என்றார். புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் இறந்தபோதும், பலர் காயம் அடைந்தபோதும், மீண்டும் ஒருமுறை இவர் எவ்விதப் பொறுப்புணர்ச்சியுமின்றி, ‘‘இது நிர்வாகத்தவறால் ஏற்படவில்லை, இத்தகைய குழப்பங்களுக்கு மக்கள்தான் பொறுப்பு. இத்தகைய நிலைமைகளைக் கட்டுப்படுத்துவது கடினம்’’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
உத்தர் வங்க எக்ஸ்பிரசுடன் வனஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ரயில்வே அமைச்சர் கூறும் சந்தேகங்களை நிராகரித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், விபத்துக்கு ரயில்வே ஊழியர்களுக்கும், ரயில்வே சாதனங்களுக்கும் இடையே தொடர்பாக ஏற்படாததால் ஏற்பட்ட கோளாறே (ளலளவநஅ கயடைரசந) காரணம் என்று தெரிவித்திருக்கிறது. ரயில்வே அமைச்சரின் கூற்றினை உள்துறை அமைச்சகம் நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்பு ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளானபோது, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தபோதும், இதேபோன்று உள்துறை அமைச்சகம் அதனை நிராகரித்தது.

ஆனால் அதனைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாது, ரயில்வே அமைச்சரும், அவருடைய திரிணாமுல் காங்கிரசும் விபத்துக்களுக்குப் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிக் கட்சிகளையும் குறி வைத்து, சதித்திட்டங்கள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்தின்போதும் இவ்வாறே கூறப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தல்களில் ஆதாயம் அடைந்தது திரிணாமுல் காங்கிரஸ்தான். அப்படியானால் சந்தேகத்தின் கூர்முனை எந்தப் பக்கத்தில் இருக்க வேண்டும்? சதித் திட்டங்கள் இருப்பதாகக் கூறும் திரிணாமுல் காங்கிரசின் கூற்றுக்களிலிருந்தே, இது யார் பக்கம் திரும்பியிருக்கிறது என்பது தெளிவாகும். கொல்கத்தாவில் ஒவ்வோராண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டிடும் வருடாந்திர கூட்டத்திற்கு இரு நாள்களுக்கு முன் மீண்டும் இதுபோன்றதொரு துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்திருக்கிறது.

இப்போது நடைபெற்றுள்ள விபத்து குறித்தும், மற்ற விபத்துக்களைப்போலவே பல முக்கிய கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் விடையில்லை. இவை அனைத்தும் முன்பு பலமுறை விரிவாகக் கூறப்பட்டிருப்பதால் இப்போது மீண்டும் அவற்றைக்கூற வேண்டிய தேவை யில்லை. கடந்த ஓராண்டுகளில் நடைபெற்ற விபத்துக்கள் அனைத்துமே, பெரிய அளவில் நிர்வாக எந்திரத்தில் உள்ள கோளாறுகளை (ளலளவநஅ கயடைரசந) சுட்டிக் காட்டுகின்றன. உலகில் மிகப் பெரிதான நம்முடைய ரயில்வே துறையைத் திறம்பட இயக்கிட போதுமான அளவிற்குக் கவனம் செலுத்தப்பட வில்லை என்பதையே இவ்விபத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய ரயில்வேயில், சரக்குப் போக்குவரத்து தவிர, ஒவ்வொரு நாளும் 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. சுமார் 90 ஆயிரம் பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக இருக்கின்றன. இவற்றை நிரப்பிட ரயில்வே அமைச்சருக்கு நேரமே கிடைக்கவில்லை. இப்பணியிடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை பாதுகாப்பு அம்சங்கம் சம்பந்தப்பட்டவைகள் என்பதைக் கேள்வியுறும்போது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இப்போது ரயில்வே அமைச்சராக இருப்பவர் இதற்கு முன்பும் இதேமாதிரி அமைச்சராக இருந்த சமயத்தில், கொங்கண் ரயில்வேயில் முன்னாள் மேலாண் இயக்குநராக இருந்தவர், இரு ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுத்திடும் வகையில் தானியங்கி தடுப்பு சாதனம் (ஹஊனு - யவேi-உடிடடளைiடிn னநஎளைந) ஒன்று கண்டுபிடித்து பரிந்துரைத்தார். கொங்கண் ரயில்வேயில் மட்டம் இந்த சாதனம் இப்போது பயன்படுத்தப்பட்ட வருகிறது. ஆயினும் இதனை மற்ற ரயில்வேக்களிலும் அறிமுகப்படுத்திட வேண்டும் என்கிற ஆர்வமோ அல்லது அதற்கான நேரமோ ரயில்வே அமைச்சகத்திற்கு இல்லை.

நாட்டில் மிகவும் கேந்திரமான பங்களிப்பினைச் செய்து வரும் ரயில்வேயில் நிலைமைகள் இவ்வளவு மோசமாக இருப்பதை அனுமதித்திட முடியாது. மத்திய ரயில்வே அமைச்சர், தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை, தான் உறுதிமொழி எடுத்துக்கொண்டபடி, உண்மையான முறையில் ஆற்றவில்லை. நிர்வாக எந்திரம் செம்மையாகச் செயல்படுவது தொடர்பாக அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு என்ற போதிலும், தனிப்பட்ட முறையிலும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் பிரதமர் அவர்கள் இதனை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் உத்தரவாதப்படுத்த வேண்டியது, மேலும் ஒரு காரணத்தாலும் அவசியமாகிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரதமர் அடிக்கடி பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார். மாவோயிஸ்ட் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பலவற்றின் மூலம், மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவிட தங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவியது என்பதையும், அதனுடன் உயிரோட்டமான தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தெளிவுபட உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய முரண்பாட்டினை பிரதமர் அவர்கள் தெளிவுபடுத்திட வேண்டியதும் அவசரத் தேவையாகும்.

நாட்டின் நலன் கருதி, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இந்தியன் ரயில்வேயில் நாள்தோறும் பயணித்திடும் இரண்டு கோடி மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி, இவை தொடர்பாக ஐமுகூ-2 அரசாங்கமும், பிரதமரும் ஓர் அறிவிப்பினைச் செய்திட வேண்டியது அவசியமாகும். நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் அபாயத்தை உண்டாக்கும் முறையில் மிகவும் பொறுப்பற்றதன்மையுடன் தொடர்ந்து நடந்து கொள்பவர் குறித்து நாடு இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது, மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

(தமிழில்: ச.வீரமணி)

Monday, July 19, 2010

பிஎஸ்என்எல் ஊழியர்கள் அக்டோபர் 19 - 21 உள்ளிருப்பு வேலைநிறுத்தம்





புதுதில்லி, ஜூலை 19-

பிஎஸ்என்எல்-ஐப் பாதுகாத்திட, நாட்டைப் பாதுகாத்திட பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வரும் அக்டோபர் 19-21 தேதிகளில் மூன்று நாட்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்வார்கள் என்று புதுதில்லியில் நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிறப்பு மாநாடு பிரகடனம் செய்திருக்கிறது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் திங்கள் அன்று காலை சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் பிரகடனத்தை முன்மொழிந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைவர் வி.ஏ.என். நம்பூதிரி உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘அரசு, சென்ற வேலைநிறுத்தத்தின் போது அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தான் அளித்த வாக்குறுதியை மீறியதன் மூலம் துரோகம் செய்துவிட்டது. அது மட்டுமல்ல பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்குத் தாரை வார்த்து முழுமையாக ஒழித்துவிடவும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

பிஎஸ்என்எல் நிர்வாகம் தன்னுடைய வணிகக் கொள்கைகளைத் தீர்மானித்திடவும், இறுதிப்படுத்திடவும் முழு சுதந்திரம் அளித்திட வேண்டும். நாட்டின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு அரசுத்துறை மற்றும் அரசுத்துறையைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து மட்டுமே சேவைகளைப் பெற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனிக் கார்பரேஷனாக்கும்போது கொடுத்த உறுதிமொழியின்படி உரிமக் கட்டணங்களிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக் கட்டணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கட்டாயமாகப் பெற்றுள்ள 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசு, திருப்பித்தர வேண்டும்,
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்குத் தாரைவார்த்து, கடைசியில் நிறுவனத்தையே இல்லாதொழித்திட வகைசெய்யும் பிட்ரோடா குழுவின் பரிந்துரைகளை அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயங்கிடும் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெறும் இத் தேசிய மாநாடு வரும் அக்டோபர் 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நாடு முழுதும் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கிறது. ஒரு வேளை அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், நேரடி நடவடிக்கைகள் இறங்கிற பொறுத்தமான முடிவினை மேற்கொள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவிற்கு தேசிய மாநாடு முழு அங்கீகாரம் அளிக்கிறது.

இவ்வாறு தேசிய மாநாட்டின் பிரகடனத்தை வி.ஏ.என். நம்பூதிரி முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா மாநாட்டைத் துவக்கி வைத்தார். சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் எம்.கே. பாந்தே வாழ்த்துரை வழங்கினார்.

அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் பிரகடனத்தின் மீது விவாதம் நடத்தியபின், பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

(ச.வீரமணி)

Thursday, July 15, 2010

செப்டம்பர் 7 அகில இந்திய வேலை நிறுத்தம்




விலைவாசி உயர்வைக் கண்டித்து
செப்டம்பர் 7 அகில இந்திய வேலை நிறுத்தம்
மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய மாநில அரசு ஊழியர் அமைப்புகள் பிரகடனம்

புதுதில்லி, ஜூலை 15-

மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்தக் கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் செய்திட, புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்திருக்கிறது.

சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற் சங்கங்களும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டாவது தேசிய சிறப்பு மாநாடு, வியாழன் அன்று புதுதில்லியில் மாவலங்கார் அரங்கில் நடைபெற்றது. ஏ. கே. பத்மனாபன் (சிஐடியு) உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமைக்குழுவாக இருந்து மாநாட்டை வழிநடத்தினர். மாநாட்டில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் எம்.கே. பாந்தே, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:

‘‘அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் ஒரு நடவடிக்கையாக அனைவருக்குமான பொது விநியோக முறை மூலம் அத்தியாவசியப் பொருள்களை மான்ய விலையில் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

உலகப் பொருளதார நெருக்கடியின் விளைவாக, தொழில் முனைவோருக்கு ஊக்க நிவாரணம் அளிப்பது போன்று, வேலையிழப்புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களைக் காப்பாற்றிட, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எவ்வித விதிவிலக்குமின்றி தொழிலாளர் நலச் சட்டங்களைக் கடுமையாக அமல்பமுடுத்த வேண்டும், அதனை மீறுவோர் மீது தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் 2008 முறைசாராத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்,

லாபத்தை அள்ளித்தரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது.

என்னும் ஐந்து முக்கிய கோரிக்கைகள் மீது அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும் இணைந்து சென்ற 2009 செப்டம்பர் 14 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரம்மாண்டனமான அளவில் முதல் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 28 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம், 2009 டிசம்பர் 16 அன்று தர்ணா, 2010 மார்ச் 5 அன்று சிறைநிரப்பும் போர், ஆகியவை மிகவும் சக்தியாக நடைபெற்றன.

விலைவாசியைக் குறைக்கக் கோரியும், குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. ஆயினும் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்துள்ளன. இது தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
முதலாளிகளால் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தபோதிலும், அதைப்பற்றி அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை, தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, வேலைகளை வெளியே கொடுத்து (அவுட்சோர்சிங் முறையில்) வாங்கிக் கொள்வது அதிகரித்து வருகின்றன.

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்க்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. உதாரணமாக அரசு, கோல் இந்தியா லிட்,. பிஎஸ்என்எல், செயில், என்எல்சி, இந்துஸ்தான் காப்பர். என்எம்டிசி முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும், அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதுடன் அதன் மீதிருந்த கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டது.

எனவே, அனைத்துத் தொழிற்சங்கங்களின் 2வது தேசிய மாநாடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் வரும் 2010 செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கிறது.

நாட்டில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர்களும் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை மாபெரும் அளவில் வெற்றியாக்கிட வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது. அரசு அதன்பின்னும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியை சக்தியாக நடத்திடுவது என்றும் மாநாடு தீர்மானிக்கிறது.

இவ்வாறு மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் ஆர்.முத்துசுந்தரம், (பொதுச் செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்), சுகுமால் சென் (முன்னாள் பொதுச் செயலாளர்,
அ.இ.மா.அ.ஊ.சம்மேளனம்), ஆர்.சிங்காரவேலு. பி.எம்.குமார் உட்பட அனைத்து சிஐடியு-வின் தமிழ் மாநில கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

(ச.வீரமணி).

Saturday, July 10, 2010

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்



விலைவாசி உயர்வுக்கு எதிராக ஜூலை 5 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்றதானது, ஆட்சியில் அங்கம் வகிப்போர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப் பெரும்பான்மையான சாமானிய மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக வெடித்துள்ள கோபத்தைப் புரிந்துகொண்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடவும், சாமானியர்களின் வாழ்வில் மேம்பாட்டைக் கொணரவும் உரிய முறையில் நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, காங்கிரசும், ஆட்சியில் அங்கம் வகிக்கும் அதன் சில கூட்டணிக் கட்சிகளும் பெறுநிறுவன ஊடகங்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் காலை நக்கிப் பிழைத்திடும் கூலி எழுத்தாளர்களின் உதவியுடன் நம்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு நம்மீது சேற்றை அள்ளிவீசுவதில், திரிணாமுல் காங்கிரசும் அதன் தலைவரும் முதல் பரிசினைப் பெறுகிறார்கள். மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் வழக்கமாக நடைபெறும் சமயங்களை விட இந்தத் தடவை மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான பிரதிபலிப்பின் காரணமாக முன்னெப்போதையும் விடப் பெருமளவில் அனைத்துத் தரப்பு மக்களும், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் ஆவேசத்துடன், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதைக் கண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியானது ‘‘வகுப்புவாதக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டுவிட்டதாக’’க் குற்றஞ் சாட்டியிருக்கிறார்.

இத்தகைய குற்றச்சாட்டைக் கூறும் நபர் எப்படிப்பட்டவர்? நாட்டில் முதன்முதலாக 1998இல் மத்தியில் வாஜ்பாயின் தலைமையின் கீழ் வகுப்புவாத சக்திகளின் ஆட்சி அமைவதற்கு வழிவகுத்துத் தந்த நபரிடமிருந்துதான் இவ்வாறு குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் வகிக்கும் அதே துறையை (ரயில்வே துறையை) அப்போதும் பெற்றுக் கொண்டு வகுப்புவாத சக்திகளுக்குத் துணையாக நின்று செயல்பட்டவர். பின்னர் 2001இல் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றபோது காங்கிரசுடன் கை கோர்க்க வேண்டும் என்பதற்காக, தேசி ய ஜனநாகக் கூட்டணியைக் கைகழுவிவிட்டு வந்தவர். பின்னர் காங்கிரஸ் கூட்டணி மக்களால் நையப் புடைக்கப்பட்டபோது, உடனடியாகக் காங்கிரசைக் கைவிட்டு, தீண்டும் தேஜகூட்டணியில் சேர்ந்து கொண்டவர். அதுவும் எப்படிப்பட்ட பின்னணியில்? குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மதவெறி சக்திகளால் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட சூழ்நிலையில், அவர்களுடன் போய் சேர்ந்து கொண்டவர். இவ்வாறு மாறி மாறி சந்தர்ப்பவாத நிலை எடுத்து, பாஜக-வினருடன் மிகநெருங்கிய கூட்டாளியாக இருந்தவர்தான் மார்க்சிஸ்ட் கட்சி மீது ‘‘பாஜக-வுக்குத் துணை போவதாக’’த் துணிந்து தாக்குதல் தொடுக்கிறார்.

நாம் நேரடியாகவே விஷயத்திற்கு வருவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இதர மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து, அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. பின்னர்தான், பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அதே தேதியில் அதேபோன்ற தொரு அறைகூவல் விடுத்தன. மேலும், இடதுசாரிக் கட்சிகள் விலைவாசி உயர்வுக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக நடத்தி வந்த பிரச்சாரத்தின் உச்சகட்டமாகத்தான் இப்போது அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. பலமுறை இப்பிரச்சனை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. ஆயினும், அரசாங்கம் இதைப்பற்றிக் கவலைப்படாது சொரணையற்று இருந்ததால், இடதுசாரிக் கட்சிகள் வெகுஜனக் கிளர்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் மூலமாக அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கத் தீர்மானித்தன. 2010 மார்ச் 12 அன்று ‘நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி’ என்கிற மாபெரும் இயக்கம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 8 அன்று ‘சிறை நிரப்பும்’ போராட்டம் நாடு முழுதும் சக்தியாக நடந்தது. இதில் இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் 25 லட்சத்திற்கும் மேலானோர் கைதானார்கள். இதனைத் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஏப்ரல் 27 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இப்போதைய வேலைநிறுத்தம், நாடாளுமன்றத்தில் நாம் முன்வைத்த வாதங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே நாம் நடத்திய எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்தையும் அரசாங்கம் உதாசீனம் செய்துவிட்டு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீண்டும் உயர்த்தியதால், நடத்தப்பட்டது.

மதவெறிக்கு எதிரான போராட்டத்திலும், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிப்பதிலும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு குறித்து, நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். 2004 பொதுத் தேர்தல்களின்போது, மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 61 பேர்களில் 54 பேர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றவர்கள் என்பது நினைவுகூரப்பட வேண்டும். ஆயினும், மீண்டும் அரசு அமைக்க மதவெறி சக்திகளுக்கு இடம் அளித்திடக் கூடாது என்ற காரணத்திற்காக, இடதுசாரிக் கட்சிகள் அதே காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இடதுசாரிகள் பலமாகவுள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் இடதுசாரிகளுக்குப் பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் என்ற நிலை இருந்தபோதிலும், இவ்வாறு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியானது, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினை உயர்த்திப்பிடிப்பதில் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் முன்பு பாஜகவுடன் உறவு கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மதச்சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்காக நம்மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறது.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பல காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இவ்வாறு பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் தான், 1996இல் வாஜ்பாய் தலைமையில் 13 நாட்களே நீடித்த அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்காக ஓர் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் ஆற்றிய முக்கிய பங்களிப்பினை நினைவுகூர்வது அவசியமாகும். அப்போது காங்கிரஸ் கட்சியானது, நாட்டுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இப்போது ஏற்பட்டுள்ள ‘மதச்சார்பற்ற கூட்டணி’ ஆட்சிக் காலம் முழுதும் நீடிக்கும் என்று ஓர் உறுதிமொழியை அளித்தது. ஆயினும், அது தன் சொந்த உறுதிமொழிக்குத் துரோகம் இழைத்து, 1998இல் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திட வழிவகுத்துத் தந்தது. அவ்வாறு காங்கிரஸ் கட்சி அப்போது துரோகம் இழைக்காது இருந்திருக்குமானால், மதவெறி சக்திகள் 1998இல் ஆட்சிக் கட்டிலில் ஏறும் வாய்ப்பே வந்திருக்காது.

இத்தகைய முட்டாள்தனமான அரசியல் தில்லுமுல்லுகளையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய்வது அவசியமாகும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் விஷம்போல் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டித்தே இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடே, வேலை நிறுத்தம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றதற்குக் காரணமாகும். உண்மையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மற்ற பொருள்களின் விலைகளும் ஏற்கனவேயே உயர ஆரம்பித்துவிட்டன. மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களின் காரணமாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இதர மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து அரசு பிறப்பித்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி வெகுஜன எதிர்ப்பு இயக்கங்களுக்கு அறைகூவல் விடுத்திருக் கின்றன. மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நடைமுறையின் அடிப்படை சாரமாகும்.
நாம் சென்ற வாரம் இதே பகுதியில் தெரிவித்ததைப்போல, 1996-98இல் ஐக்கிய முன்னணி ஆட்சி செய்த சமயத்தில், பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முன்மொழிவு, கொண்டுவரப்பட்ட சமயத்தில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மீதான அனைத்து வரிகளும் ரத்த செய்யப்பட்டது. இந்த முன்மொழிவானது 2002 ஏப்ரலில் வாஜ்பாய் அரசாங்கத்தால், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்காமல், அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 21 தடவை பெட்ரோலும், 24 தடவை டீசலும் விலை உயர்த்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதனுடன் இணைந்திருந்த மதச்சார்பற்ற கட்சிகளும் இத்தகைய விலைஉயர்வுகள் மூலம் மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கூடுதல் சுமைகளை ஏற்றியதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தின. பல சமயங்களில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய எதிர்ப்பியக்கங்களில் இதர கட்சிகளுடன் காங்கிரசும் சேர்ந்து கொண்டது. 2004 பிப்ரவரி 21 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, பொதுத் தேர்தல் நெருங்குவதை அடுத்து மக்களை எதிர்நோக்க அஞ்சி, பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில், ‘‘இனிமேல் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் உயராது என்ற உறுதிமொழியை’’ அளித்தது.

இதிலிருந்து ஓர் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். யார் ஆட்சியில் இருந்தாலும், மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை யார் ஏற்றினாலும், மக்கள் நலன்களைப் பாதிக்கக்கூடிய கொள்கைகளை எவர் அமல்படுத்த முயற்சித்தாலும், அவற்றிற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமேதுமின்றி, மக்களை அணிதிரட்டிப் போராடும். நம் அரசியல் எதிரிகளின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத நிலைகளைப் போலல்லாது, மக்கள் மீதான தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் ஆட்சியிலிருப்பவர்களுக்கு அந்த சமயத்தில் ஆதரவு அளித்துக்கொண்டிருந்தாம் சரி, இல்லையாயினும் சரி, மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய தாக்குதல்களை எதிர்த்து உறுதியாகப் போராடும். மக்களின் நலன் ஒன்று மட்டும்தான் - அவர்களின் முன்னேற்றம் ஒன்று மட்டும்தான் - மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான ஐயத்திற்கிடமில்லாத சங்கல்பமாகும். மதவெறி சக்திகளினால் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீது ஏவப்படும் தாக்குதலை எந்த அளவிற்கு உறுதியோடு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து நின்றுப் போராடுகிறதோ அதே அளவிற்கு, அத்துடன் சேர்த்தே, மக்களின் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் போராடும்.

(தமிழில்: ச. வீரமணி)

Wednesday, July 7, 2010

ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தம்: மாபெரும் வெற்றி



பிரகாஷ் காரத்

ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். வேலைநிறுத்தம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையுமே - வடகிழக்கே மணிப்பூரில் தொடங்கி வடமேற்கே ஜம்மு வரையிலும், தெற்கே கேரளா தொடங்கி வடக்கே இமாசலப்பிரதேசம் வரையிலும் - பாதித்திருக்கிறது. இம்முறை அகில இந்திய வேலைநிறுத்த அறைகூவலுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்து வருவதன் காரணமாக மிகவும் நொந்துபோயுள்ள மக்கள் முழுமையான ஆதரவினை அளித்துள்ளார்கள். ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்ற எந்தவித நிவாரணமும் கிடையாது.

மக்கள் மீதான சமீபத்திய தாக்குதல் என்பது, மூன்று மாத காலத்திற்குள்ளேயே மீண்டும் இரண்டாவது தடவையாக இந்த அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியதாகும். இந்தத் தடவை, மண்ணெண்ணெய்யையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. இவை எல்லாவற்றையும்விட மிகவும் கொடுமையான அம்சம், பெட்ரோல் விலைநிர்ணயத்தின் மீது அரசு கட்டுப்பாட்டை நீக்கியிருப்பதாகும். இது பிரதானமாக தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்திடும் என்பதோடு நுகர்வோரை சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளிவிட்டுவிடும்.
பெட்ரோலியப் பொருட்ளை விலை உயர்த்தியதற்கும், அவற்றின் மீது அரசுக் கட்டுப்பாட்டை நீக்கியதற்கும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட அத்தனை வாதங்ளும் பொய்யானவை என்பது தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டன. இந்தப் பிராந்தியத்திலேயே அதிக வரி விதிப்பின் விளைவாக இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம். ஒவ்வொரு தடவை விலையை உயர்த்தும்போதும் அரசு வருவாய் பல்கிப் பெருகியிருக்கிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அபரிமிதமான லாபத்தை ஈட்டியிருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் திரும்பப் பெறுதல் ("under recovery") என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் கற்பனாவாதமே. விலை உயர்வுகள், ஏற்கனவே இரு இலக்கமாகியுள்ள பணவீக்க விகிதத்தை மேலும் அதிகப்படுத்திடும். உணவுப் பாதுகாப்பு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருந்தால் அதனை அரித்து இல்லாது ஒழித்துவிடும்.

அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, பெறுநிறுவனங்களின் ஊடகங்கள் வழக்கமான விமர்சனத்தை ஊதிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இவ்வாறு கூப்பாடு போடுவது யார்? சென்ற பட்ஜெட்டின்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களை வரிச் சலுகைகளாகப் பெற்றவர்களும், நேரடி வரிவிதிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் யாருக்கு மேலும் எண்ணற்ற ஆதாயங்களை அளிக்க இருப்பதாக அரசு சார்பில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருக்கிறதோ அத்தகைய பெறுநிறுவனங்கள்தான் இவ்வாறு கூப்பாடு போடுகின்றன. 2009-10 பட்ஜெட்டில் பெறுநிறுவனத் துறைகளுக்கு மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எண்ணற்ற விதங்களில் வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மற்றொரு தாக்குதல் இடதுசாரிகள் மீது வீசப்பட்டிருக்கிறது. இடதுசாரிகள் பாஜக-வினருடன் கைகோர்த்துக்கொண்டு விட்டார்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. கொள்கை அடிப்படையில் செயல்படுவதாக் கூறும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு என்ன வந்தது என்று பெறுநிறுவன ஊடகங்கள் கிண்டலடிக்கின்றன.

மதவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் மதவெறி அரசியலுக்கு எதிராக எவ்விதச் சமரசமுமின்றி செயல்பட்டு வருவதையும், மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பதையும் அனைவரும் அறிவார்கள். இதில் எவ்வித ஊசலாட்டத்திற்கோ சமரசத்திற்கோ இடமில்லை.
பிரதான பிரச்சனையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே மதவெறி சக்திகளுடன் இடதுசாரிகள் கைகோர்த்துக்கொண்டு விட்டனர் என்ற பூச்சாண்டி காட்டப்படுகிறது. அரசாங்கம் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை நிர்ணயிக்கும் அடிப்படையையே மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சியிலிருந்த சமயத்தில், அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கப்போவதாக அறிவித்தபோது, அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. எண்ணெய் இருப்பு பற்றாக்குறையைக் குறைத்திட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் கட்சி சுட்டிக்காட்டியது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதனை அமல்படுத்தவில்லை. ஏனெனில் அவ்வாறு அறிவிக்கையை வெளியிட்டபின் அதனால் ஆட்சியில் நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியவில்லை. ஆயினும் 2002இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்த சமயத்தில் நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப்பட்டதை அடுத்து, பெட்ரோலியப் பொருட்கள் விலை மீதான அரசின் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையாக எதிர்த்து, பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து 2004இல் கட்டுப்பாடு நீக்கம் (deregulation) கொள்கை கைவிடப்பட்டது.

இப்போதும்கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கிட முடிவெடுத்துள்ள மன்மோகன்சிங் அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடும் எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.
மத்திய அரசு தன்னுடைய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் மற்றும் சுங்கத் தீர்வைகளை உயர்த்தி அறிவித்தபோது, இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியால் 13 கட்சிகள் சந்தித்து ஏப்ரல் 27 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இது, ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின்னர் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரிய அளவிலான முதல் அகில இந்திய எதிர்ப்பு இயக்கமாகும்.

இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது இப்போது மீண்டும் தடித்தனமானமுறையில், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீண்டும் ஒருமுறை உயர்த்தி, மக்கள் மீது சொல்லொண்ணாத அளவிற்கு சுமைகளை ஏற்றி நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகள் எடுக்க மறுப்பதோடு இதுவும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இடதுசாரிக் கட்சிகள், அஇஅதிமுக, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதிக்கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், அஸாம் கண பரிசத் மற்றும் இந்திய தேசிய லோக் தளம் ஆகிய ஏழு கட்சிகளுடன் இணைந்து ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான கடும் தாக்குதலுக்கு எதிராக நடைபெறும் அகில இந்திய எதிர்ப்பியக்கத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்க எந்த வொரு எதிர்க்கட்சியாலும் இருக்க முடியாது. மற்ற எதிர்க்கட்சிகளும், பிரதானமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பந்த்துக்கு அறைகூவல் விடுத்தன.

ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து ஆர்ஜேடி மற்றும் எல்ஜேபி ஆகிய கட்சிகளும் கூட பீகாரில் ஜூலை 10 அன்றைக்கு பந்த்துக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது.
பிரம்மாண்டமான முறையில் எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்பியக்கத்தினால் மிகவும் அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சியும், அதன் பெறுநிறுவன ஊடக ஆதரவாளர்களும் ‘‘இடதுசாரிக் கட்சிகள் - பாஜக ஒற்றுமை’’ என்னும் பூதம் உருவாகிவிட்டது என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அநேகமாக மதச்சார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுமே கலந்து கொண்டன என்பதை அவை வசதியாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் மக்கள் ‘‘இடதுசாரிகள்-பாஜக ஒற்றுமை’’ என்னும் பிரச்சாரத்தால் அப்படி ஒன்றும் குழம்பிப்போய்விடவில்லை. அவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியையுமே, இவ்வாறு விலை உயர்வு மூலமாக தங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கும்போது, தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக உண்மையில் எவை எவை தங்களுக்காகப் போராடுபவை என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். மக்களின் நலன்களுக்காக இருப்பதாக அடிக்கடி பாவ்லா செய்திடும் திரிணாமுல் காங்கிரஸ், மக்கள்மீது தாக்குதல் வரும் சமயத்தில் மத்திய அரசின் ஓர் அங்கம் என்ற வகையில் மக்கள் விரோத நடடிக்கைகளுக்கு முழுமையா ஆதரவு அளித்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, இத்தகைய பிரச்சாரங்கள் அவற்றின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திட முடியாது. விலை உயர்வு மற்றும் மிகவும் கேடுபயக்கக்கூடிய அரசின் பெட்ரோலியப் பொருள்கள் விலைக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும். இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாடு ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு மற்றும் விலை உயர்வுக்கு எதிராக ஆகஸ்டில் பிரச்சாரம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரம் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான அடிப்படையை வகுத்திடும். அதேசமயத்தில், இடதுசாரிக் கட்சிகள், இதர மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளுடன் இணைந்துநின்று, வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்திலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுப் பிரச்சனையை எடுத்துக்கொள்ளும். இவை அனைத்துடனும் இக்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இயக்கத்தை எந்தத் திசைவழியில் விரிவாக்கி வளர்த்து எடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்தாலோசனைகள் செய்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, July 3, 2010

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு: அரசு கூறும் பொய்களுக்குப்பின்னே இருக்கும் உண்மை

அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் முதலான அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து, பணவீக்கம் 17 விழுக்காடு அளவிற்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், மத்திய அரசானது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி சாமானிய மக்கள் மீது கொடூரமானமுறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இது அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை மேலும் உயர்த்துவதற்கு இட்டுச் சென்று, பணவீக்கத்தின் விகிதத்தை மேலும் உயர்த்திடும். சாமானிய மக்கள் மீது சிறிதாவது அக்கறையுள்ள எந்த வொரு அரசும் இவ்வாறு விலைகளை உயர்த்தி மக்கள் விரோத நடவடிக்கையை எடுத்திடாது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் என்பதன் பொருள், மக்களை பன்னாடடு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுப் பெறு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளிவிடுவது என்பதாகும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முன் வைக்கும் காரணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகளாகும், மக்களை திசைதிருப்பும் ஏமாற்று வேலைகளாகும். நாட்டின் நலன் கருதியே பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதாக பிரதமர் விலை உயர்வை நியாயப்படுத்தி இருக்கிறார். நாட்டு மக்களில் 77 விழுக்காட்டினர் செலவு செய்வதற்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில்தான் பிரதமர் இவ்வாறு கூறுகிறார். அதுமட்டுமல்ல, இத்தகைய சீர்திருத்தங்களை இதற்கு முன்னரே செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் முந்தைய ஐமுகூ அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்து வந்ததாலும், அவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகவும்தான் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவர் கூற்று அமைந்திருக்கிறது. அப்போது இடதுசாரிக் கட்சிகள் அளித்து வந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக மண்ணெண்ணெய்யின் விலையை ஒரு காசு கூட அவர்களால் உயர்த்த முடியவில்லை. ஆனால் இன்று என்ன நிலைமை? ஐமுகூ-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் நாடகமாடிக்கொண்டு, ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை நிறைவேற்றத் துணை போய்க் கொண்டிருக்கின்றன. இதுதான் இவர்கள் மக்கள் மீது வைத்துள்ள கரிசனங்கள்! மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்போதெல்லாம் அங்கே எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், வெளியே வந்து எதிர்ப்பதுபோல் நாடகமாடுவார்கள். உண்மையில் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு இவர்களும் உடந்தையே!

காங்கிரஸ் ஏட்டின் ஆசிரியர், இவ்வாறான அரசின் கொள்கையை சோனியா காந்தி ஒருவரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால், அவரது ஒப்புதல் இல்லாமல் இத்தகைய முடிவுகளைப் பிரதமர் எடுக்க மாட்டார் என்பது சிறுபிள்ளைகளுக்குக்கூட நன்கு தெரியும். காங்கிரஸ் கட்சியும் அதன் ஒட்டுமொத்த தலைமையும் இதற்கு முழுப்பொறுப்பாகும். ‘சாமானிய மக்களுக்காக’ என்று சொல்லிக் கொண்டே ‘பெறு நிறுவனங்களுக்கான’ கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

மக்களை ஏமாற்றும் வஞ்சகம்

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் அளித்திருக்கிறார். அதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மக்கள் ஆதரவு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காக அரசுப் பணத்தில் வெளியிடப்பட்டுள்ள வஞ்சகம் மற்றும் மோசடியான விளம்பரமாகும். விலை உயர்வு குறித்து அவர்கள் பல்வேறு காரணங்களை அளித்துள்ளனர். அவை ஒவ்வொன்றையும் இப்போது நாம் ஆராய்வோம்.

முதலாவது பொய்: சர்வதேச விலைகள்

‘‘நாட்டிற்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்களில் 80 விழுக்காடு இறக்குமதிகள் மூலம் சரி செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச எண்ணெய் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குத் தகுந்தாற்போல் விலைகளின் தாக்கமும் இருப்பது இயற்கையே’’ என்று அவ் விளம்பரத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சர்வதேச விலை உயர்வுக்குத் தகுந்தாற்போல் நம் நாட்டிலும் விலை உயர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறது அரசு.
சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகள் அடிக்கடி ஏறும் இறங்கும் என்று சொல்லப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்று இப்போது ஆராய்வோம். ஐமுகூ-2 அரசாங்கம் 2009 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 70 டாலருக்கு விற்றது. (அன்றைய தினம் ஒரு டாலரின் மதிப்பு 49 ரூபாயாகும். எனவே ஒரு லிட்டர் 21 ரூபாய் 43 காசுகள் என்ற விதத்தில் இருந்தது.) இன்றைய தினம் ஒரு பேரல் 77 டாலர்களாகும். (இன்றைய தினம் ஒரு டாலரின் மதிப்பு 46 ரூபாய் 22 காசுகள். அப்படியானால் ஒரு லிட்டர் 22 ரூபாய் 13 காசுகள் ஆகும்.) ஒரு பேரல் என்பது தோராயமாக 160 லிட்டர்களாகும். எனவே, சர்வதேச கச்சா எண்ணெய் இதுவரை லிட்டருக்கு வெறும் 70 காசுகளே ஏறியிருக்கிறது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில், ஆட்சியாளர்கள் சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகள் அடிக்கடி ஏறும் இறங்கும் என்ற பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு, கடந்த நான்கு மாதங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 6.44 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4.55 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு விலையை 35 ரூபாயும் இப்போது உயர்த்தி இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச சந்தையில் எந்த விலை உயர்வும் கிடையாது. பின் ஏன் இந்தியாவில் மட்டும் விலை உயர்வு? உண்மையில், சர்வதேச விலைக்கும், அரசு இப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அரசு விளம்பரத்தில், இந்தியா பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா கச்சா எண்ணெய்யைத்தான் இறக்கமதி செய்கிறது. அது பெட்ரோலியப் பொருட்களை இறக்கமதி செய்திடவில்லை. கச்சா எண்ணெய்யானது பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருள்களாக சந்தைக்கு அனுப்பப்படுவதற்கு முன் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்தியா தன் தேவையில் சுமார் 75 - 80 விழுக்காடு அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. ஆயினும், சுத்திகரிப்பைப் பொறுத்தவரை, நம் நாட்டின் தேவைக்கு அதிகமாகவே சுத்திகரிப்பு செய்கிறோம். 2009-10ஆம் ஆண்டில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) 28 மில்லியன் டன்கள் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

இரண்டாவது பொய்: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைப் பாதுகாத்திட வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது.

பிரதமரும் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவும் இவ்வாறு கூறுகின்றனர்: ‘‘நவரத்தினாக்கள் என்றும் மகாரத்தினாக்கள் என்றும் அழைக்கப்படுகின்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை, அவை திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றுவதற்காகவும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டின் ஒட்டுமொத்த நலனின் அக்கறை கொண்டு இவ்வாறு விலைகளை உயர்த்தி இருக்கிறது.’’ இது உண்மையா? பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் இருக்கின்றனவா? பெட்ரோலிய அமைச்சகம் 2009-10 ஆண்டு அறிக்கையில் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) குறித்து என்ன கூறியிருக்கிறது என்று பார்ப்போம்.

‘‘2008-09 ஆம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு நிகர லாபம் 2950 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. பெட்ரோல், டீசல், பொது விநியோக முறையில் மண்ணெண்ணெய் விநியோகம், மான்ய விலையில் சமையல் எரிவாயு ஆகியவற்றை 2 லட்சத்து 85 ஆயிரத்து 337 கோடி ரூபாய்க்கு விற்றதில் இவ்வாறு 2950 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருக்கிறது. உலகில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களில் 18ஆவது இடத்தை ஐஓசி பிடித்துள்ளது. 2009-10ஆம் ஆண்டில், விற்பனையின் மொத்த அளவு 208289.46 கோடி ரூபாயாகும். அதில் (2009 டிசம்பர் வரைக்கும்) வரிகளைக் கழித்த பின் நிகர லாபம் 4663.78 கோடி ரூபாயாகும்.’’

2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளின்படி, (Audited Financial Results) ஐஓசி-யின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இத்துடன் 49 ஆயிரத்து 472 கோடி ரூபாய் ரிசர்வ் மற்றும் உபரி (reserve and surplus) தொகையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
2009-10இல் ஐஓசி, அரசுக்கு கலால் தீர்வையாக 26 ஆயிரத்து 050 கோடி ரூபாயும், இதர வரிகளாக 4 ஆயிரத்து 049 கோடி ரூபாயும் அளித்திருக்கிறது. மேலும் அரசுக்கு டிவிடண்ட் தொகையாக 656 கோடி ரூபாய் 2007-08இலும், 910 கோடி ரூபாய் 2008-09இலும் அளித்திருக்கிறது. வரும் 2009-10இல் மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் குறையாத விதத்தில் ‘டிவிடண்ட்’ அளிக்க இருக்கிறது.

மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (எச்பிசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பிபிசி) ஆகியவையும் 2009 ஏப்ரல் - டிசம்பர் மாதத்தில் முறையே 544 கோடி ரூபாயும் 834 கோடி ரூபாயும் லாபம் ஈட்டியுள்ளன.

உண்மையில் நம் பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு வளமாக இருக்கக்கூடிய சமயத்தில்தான் நம் பெட்ரோலியத்துறை அமைச்சர் இவை திவாலாகிக் கொண்டிருப்பதாகக் கூறுவதில் வக்கிரமான முறையில் மகிழ்ச்சிகொள்கிறார். இவ்வாறு ‘‘திவாலாகிக் கொண்டிருக்கும்’’ கம்பெனிகள்தான் ராபரேலியில் நிறுவப்படும் ராஜீவ்காந்தி பெட்ரோலியம் இன்ஸ்டிட்யூட்டிற்கு தலா 250 கோடி நன்கொளை அளிக்குமாறு அரசால் கோரப்பட்டிருக்கின்றன. என்னே விநோதம்!

மேலும் ஐஓசி-இன் ஆண்டு அறிக்கையில் ஐஓசி நிறுவனமானது இந்திய அணுசக்தி கார்பரேஷனுடன் (Nuclear Power Corporation of India)இணைந்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒன்றை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது.

உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் மீது அக்கறையுள்ள அரசாக இது இருக்குமானால் அவற்றின் லாபம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அது கருதுமானால், அவற்றிடமிருந்து அது அபரிமிதமாக வசூலித்திடும் கலால் தீர்வைகளை அது கைவிடட்டும்.
மூன்றாவது பொய்: ‘‘திரும்பப் பெறுதல்’’ (“ரனேநச சநஉடிஎநசல”) என்னும் கற்பனாவாதம்

கடந்த சில ஆண்டுகளாக, எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பாக ‘‘‘‘திரும்பப் பெறுதல்’’ (“Under recovery”) என்னும் கற்பனாவாதச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இது எந்த நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பிலும் (க்ஷயடயnஉந ளுhநநவ) இடம் பெறாது. ‘‘திரும்பப் பெறுதல்’’ என்பவை எண்ணெய் நிறுவனங்கள் அடைந்திட்ட நட்டங்கள் என்று அரசாங்கமானது தன்னுடைய பெறுநிறுவன ஊடகங்களின் வாயிலாக மக்களை வஞ்சமாக நம்பவைத்திடுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்திரா காந்தி, 1976இல் பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ போன்ற அந்நிய பெரும் எண்ணெய் நிறுவனங்களைத் தேசியமயமாக்கினார். தேசியமயமாக்குவதற்கு முன் இந் நிறுவனங்கள், நம் நாட்டு நுகர்வோரிடம் சர்வதேச விலைக்கு பெட்ரோலியப் பொருட்களை விற்று கொள்ளை லாபம் ஈட்டின. ‘இறக்குமதி விலை முறை’ (Import paritry pricing system) என்று இதற்குப் பெயரிட்டிருந்தனர். பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, தங்கள் லாபத்தை அதிகரித்திடும் வண்ணம், விலைகளை நிர்ணயித்து வந்தார்கள். இது உலகில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். 1976இல் ‘இறக்குமதி விலை முறை’ நிறுத்தப்பட்டு விட்டது. பின்னர் அரசு அதற்குப் பதிலாக ‘நிர்வாக விலை ஏற்பாடு’ (Administrative Pricing Mechanism) ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, அந்நிய நிறுவனங்களிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உள்நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோலியப் பொருட்களை உருவாக்கி மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை, அதனை சுத்திகரிப்பதற்கான செலவு ஆகியவற்றுடன் சிறிது லாபம் வைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. அவ்வாறுதான் இந்தியாவில் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

1991இலிருந்து மன்மோகன் சிங் தலைமையில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனை அடுத்து நம் நாட்டைச் சேர்நத மற்றும் அந்நிய நாடுகளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் நுழைவு அதிகரித்தது. இவர்கள் இத்தகைய ‘நிர்வாக விலை ஏற்பாட்டினை’ அரசு கைவிட வேண்டும் என்றும் மீண்டும் பழைய ‘இறக்குமதி விலை முறை’க்கே திரும்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். 2002இல் பாஜக ஆட்சிக் காலத்தின்போது ‘நிர்வாக விலை ஏற்பாடு’ கைவிடப்பட்டது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு ‘இறக்குமதி விலை முறை’ மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதன் பொருள், நம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் இனி சர்வதேச சந்தையில் உள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலைக்குச் சமமாக நிர்ணயிக்கப்படும். உண்மையில் இன்றையதினம் நாம் நம்முடைய ‘ஓஎன்ஜிசி’ மற்றும் ‘ஆயில் இந்தியா’ நிறுவனங்கள் மூலமாக மிகவும் மலிவான கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறோம். அவற்றை மிகவும் குறைந்த செலவினத்தில் சுத்திகரிப்பும் செய்கிறோம். எனவே நம்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்திச் செலவினம் மிகவும் குறைவாகும். ஆயினும் சர்வதேச சந்தை விலைக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்திட இந்நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. ‘‘திரும்பப் பெறுதல்’’ என்பது இறக்குமதி ‘சரிசமநிலை விலை’க்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். ‘‘திரும்பப் பெறுதல்’’ என்பது நட்டம் அல்ல. உள்நாட்டு விலைகளை சர்வதேச விலைகளுக்குச் சமமாகக் கணக்கிட்டால் வரக்கூடிய வருவாயைத்தான் இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது. நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் அளவிடற்கரியவிதத்தில் கொள்ளை லாபத்தை ஈட்டியுள்ளன, ஈட்டிக்கொண்டும் இருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்கையில், அவை நட்டத்தை அடைந்திருப்பதாகக் கூறுவது வடிகட்டிய வஞ்சனையாகும்.

2002க்குப் பின், ‘ரிலயன்ஸ்’ , ‘எஸ்ஸார்’ போன்ற நம்நாட்டு தனியார் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீது அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை மேலும் தளர்த்திட வேண்டும் என்று கோரி வந்தன. பாஜக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் அதற்கு திருப்தி ஏற்படவில்லை. கிரித் பாரிக் என்பவர் தலைமையில் குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மத்திய அரசு இதனை ஏற்றுக்கொண்டு, மீண்டும் ‘இறக்குமதி சரிசமநிலை விலை’ (iஅயீடிசவ யீயசவைல யீசiஉந)யை அமல்படுத்தியிருக்கிறது. இவ்வாறு நம் நாட்டு மக்கள் சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

இவ்வாறு நாம், மீண்டும் அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது இருந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ நம்மைவிட்டுப் போயிருக்கலாம். ஆயினும் அவை நிர்ணயித்த ‘இறக்குமதி சரிசமநிலை விலை’ மீண்டும் திரும்பி வந்திருக்கிறது.

நான்காவது பொய்: இந்தியாவிலும் மற்ற நாடுகளுக்கு இணையாகத்தான் விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன

அரசாங்கமானது தன் விளம்பரத்தில் நம் அண்டை நாடுகள் சிலவற்றுடன் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை ஒப்பிட்டிருக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின்மீத அவை விதித்துள்ள வரி முறையை அது குறிப்பிட்டிருக்க வேண்டும்.

உதாரணமாக, பெட்ரோல் மீது அதன் மொத்த விலையில் இலங்கை 37 விழுக்காடும், தாய்லாந்து 24 விழுக்காடும், பாகிஸ்தான் 30 விழுக்காடும் வரி விதித்திருக்கக்கூடிய நிலையில், இந்தியாவோ 51 விழுக்காடு வரி விதித்திருக்கிறது.

அதேபோன்று டீசல் மீது அதன் மொத்த விலையில் இலங்கை 20 விழுக்காடும், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் 15 விழுக்காடும் வரி விதித்திருக்கும்போது, இந்தியாவோ 30 விழுக்காடு வரி விதித்திருக்கிறது.

இவற்றிலிருந்து இந்தியா, மற்ற நாடுகளை விட அதிக அளவில் வரி விதித்திருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

பின் ஏன் இந்தியா இவ்வாறு உலக சந்தை விலைக்கு மாறிச் செல்ல வேண்டும்? நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் மிகவும் குறைந்த வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும்போது, அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, சர்வதேச சந்தை விலைக்கு அனுமதித்திருப்பதன் அவசியம் என்ன? சர்வதேச ஊதியம் எதையும் இந்திய மக்கள் பெறாத நிலையில், அத்தியாவசியப் பொருள்களை சர்வதேச விலைக்கு விற்றால், பணவீக்கத்தால் வாங்கும் சக்தியை வெகுவாக இழந்துள்ள மக்களால் அவற்றை எப்படி வாங்க முடியும்?

ஐந்தாவது பொய்: அரசாங்கம் 53 ஆயிரம் கோடி ரூபாயைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அமைச்சகத்தின் விளம்பரத்தில், ‘‘இவ்வாறு விலைகளை உயர்த்தியபின்னரும்கூட, அரசாங்கம் 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சுமையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
அமைச்சகம், அடிப்படையான கணித அறிவையே மறந்துவிட்டது. மக்கள் மீது அபரிமிதமான சுமைகளை ஏற்றியிருப்பதன் மூலம் அரசாங்கம் கொள்ளை லாபம் ஈட்டியிருக்கிறது. 2009-10ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு, நம் பொதுத்துறை நிறுவனங்கள் வரிகள், தீர்வைகள், டிவிடண்ட், போன்றவற்றின் மூலமாக 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக அளித்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் வரிகளை உயர்த்தியபின், இத்தொகை 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயைவிட அதிகமாக இருக்கும். யார், யாருக்கு மான்யம் அளிக்கிறார்கள்? பின் எங்கே இருந்து இந்த 53 ஆயிரம் கோடி ரூபாயை அரசாங்கம் கண்டுபிடித்திருக்கிறது?

பொய்களுக்குப் பின்னேயுள்ள உண்மை

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா ஒரு தேசிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விலை உயர்வுக்கான உண்மையான காரணங்களை கூறியிருப்பதற்கு நாம் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம். ‘‘சுதந்திர சந்தை முறையை அமல்படுத்துவதால் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தனியார்துறை நிறுவனங்களுக்கும் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. இது சேவைத்துறையை வளர்த்திடும், விலை யுத்தத்திற்கும் (price war) இட்டுச் செல்லும்’’ என்று தியோரா கூறியிருக்கிறார்.

விலை யுத்தத்தில் நம் பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தியோராவும், அரசாங்கமும் முதலைக் கண்ணீர் விடுகின்றனர். ஆட்சியாளர்கள் ரிலயன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள் நவீன உயர்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்திட அனுமதிக்கப்பட்ட அதே சமயத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் அவ்வாறு தங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்திட அரசு அனுமதித்திடவில்லை. மேலும் தனியார் நிறுவனங்களின் முதலாளிகள் ஆட்சியாளர்களை எந்த நேரத்திலும் போய் சந்திக்க முடியும், தங்களுக்குத் தேவையான வரிச் சலுகைகளைப் பெற முடியும். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் அவ்வாறு சென்று எவரையும் சந்தித்திட முடியாது.

ஏனெனில் இன்றைய அரசாங்கமானது மக்களுக்கான அரசாங்கம் அல்ல. மாறாக இது, பெரும் நிறுவனங்களுக்காக, பெரும் நிறுவனங்களால், பெறும் நிறுவனங்களின் அரசாங்கமாக மாறியிருக்கிறது என்பதே உண்மை. இதுவே அரசாங்கம் கூறும் பொய்களுக்குப்பின்னேயுள்ள உண்மையாகும்.’’

(சிபிஎம் மத்தியக் குழு வெளியிட்டுள்ள சிறுபிரசுரம்)
(தமிழில்: ச.வீரமணி)

Friday, July 2, 2010

பொருளாதார எதேச்சதிகாரத்தினை முறியடிப்போம்!


தலையங்கம்

உண்மையில் இது ஒரு தீய அறிகுறி யாகும். இந்திரா காந்தி தலைமையிலிருந்த காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப் பட்ட உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்ட 35ஆவது ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங்கால் தலைமை தாங்கப்படும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் மீது செங்குத்தான அளவில் விலை உயர்வினை அறிவித்திருக்கிறது. 1975 ஜூன் 25 அன்று பிரகடனம் செய்யப்பட்ட உள்நாட்டு அவசர நிலை என்பது ஓர் அரசியல் எதேச்சதிகார நடவடிக்கையாகும். இதனை இந்திய மக்கள் துணிவுடன் எதிர்த்து நின்று, 1977இல் முழு மையாக முறியடித்தார்கள். அதேபோன்று, இப்போது மக்கள் மீது ஏவப்பட்டுள்ள பொரு ளாதார எதேச்சதிகாரமும் மக்களால் துணிவு டன் எதிர்கொண்டு முறியடிக்கப்பட்டாக வேண்டும். நாட்டு மக்களின் பெரும்பான் மையினரின் வாழ்வாதாரத்தின் மீது மிகவும் கொடூரமாக அரசாங்கம் தொடுத்துள்ள தாக் குதலை முறியடித்திட, மக்களைத் திரட்டி, வெகுஜன இயக்கங்களை நடத்தி, விலை உயர்வுகளைத் திரும்பப்பெறச் செய்திடுமாறு அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளித்திட வேண்டும். ஜூலை 5 அன்று அறிவிக்கப் பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை மகத்தான வெற்றியடையச் செய்திட வேண்டும்.

மத்திய அரசாங்கம் பெட்ரோலின் விலை யை லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், மண் ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 35 ரூபாயும் உயர்த்தி இருக்கிறது. இதைவிட மிக மோசமான அம்சம் என்னவெ னில், அரசாங்கம், இவற்றின் மீதிருந்த கட்டுப் பாடுகளை முற்றிலுமாக நீக்கியிருப்பதாகும். இதன் பொருள், எதிர்காலத்தில் இவற்றின் விலைகள் மேலும் மிக மோசமாக உயரும் என்பதேயாகும்.

தற்போது சுமார் 17 விழுக்காடு அளவிற்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன. இவ்வாறு விலைவாசிகள் கட்டுப்பாடற்று உயர்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் இத்தகைய கொடூரமான தாக்குதல் வந்திருக் கிறது. ஒருசில மாதங்களுக்கு முன் இவற்றின் விலைகள் சுமார் 20 விழுக்காடு அளவிற்கு உயர்ந்து கொண்டிருந்தன. இப்போது பெட்ரோ லியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி யிருப்பதன் மூலம், போக்குவரத்துக் கட்ட ணங்களும் கடுமையாக உயர்ந்து, அதன் தொடர் விளைவாக நாட்டின் பணவீக்கத்தின் அளவையும் கடுமையாக உயர்த்திடும். பண வீக்கத்தின் அளவு இந்த ஆண்டு 5.5 விழுக் காடு அளவிற்குத்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்த்திருந்தது. ஆனால் அதைவிட இரட்டிப்பு மடங்கு பணவீக்கத் தின் விகிதம் அதிகரித்திருக்கிறது.

மத்திய அரசாங்கம், இவ்விலைவாசி உயர் வினை நியாயப்படுத்திட ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. நாட்டு மக்களின் நலன்களுக்காகவே பெட் ரோலியப் பொருட்களைப் பெரிதும் மானிய விலையில் கொடுத்து வருவதாக உரிமை கொண்டாடுகிறது. இப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்திய பின்னும் (இதன் மூலம் மக்கள் மீது 22 ஆயிரம் கோடி ரூபாய் சுமையை ஏற்றியபின்னும்), மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்காக அரசாங்கம் 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மானியம் அளித்து வருவதாகக் கூறுகிறது. எண்ணெய் நிறு வனங்கள் “திரும்பப் பெறுதலின் கீழ்” (“ரனேநச சநஉடிஎநசல”) என்பதன் அடிப்படையில் இவ் வாறு கூறிக்கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வை அரசாங்கம் இவ்வாறுதான் புத்திசா லித்தனமாக நியாயப்படுத்துகிறது. “திரும்பப் பெறுதல்” என்பது நஷ்டம் அல்ல. உள்நாட்டு விலைகளை சர்வதேச விலைகளுக்குச் சமமாகக் கணக்கிட்டால் வரக்கூடிய வருவா யைத்தான் இது பிரதிநிதித்துவப் படுத்துகி றது. உண்மையில் நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் அளவிடற்கரிய விதத்தில் கொள்ளை லாபத்தை ஈட்டியுள் ளன, ஈட்டிக்கொண்டும் இருக்கின்றன. உண் மை இவ்வாறிருக்கையில், அவை நஷ்டத் தை அடைந்திருப்பதாகக் கூறுவது வடிகட் டிய வஞ்சனையாகும்.

பெட்ரோலியப் பொருள்களின் மீதான மானியங்கள் குறித்து அரசாங்கம் பேசும்போது, பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலமாக அரசாங்கத்திற்கு அபரிமிதமான அளவில் வருவாய் வந்து கொண்டிருப்பதை, மிகவும் வசதியாக மறைத்து விடுகிறது. 2010-11இல் மட்டும் அரசாங்கத்திற்கு இவ்வரிகள் மூலமாக 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வந்திருக்கிறது. அதா வது பெட்ரோலியப் பொருட்களுக்கு இதுவரை அளித்து வந்ததாகக் கூறப்படும் மானியத் தொகையை விட கிட்டத்தட்ட இது நான்கு மடங்காகும்.

நம் நாட்டின் பொருளாதாரத்தினைத் தாங் கிப் பிடிக்கக்கூடிய அளவிற்கு போது மானஅளவிற்கு உள்நாட்டில் உற்பத்தி இல் லாததால், வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இத்தகைய இறக் குமதிகள் பொருளாதாரம் மூச்சு விடுவதற்கு மிகவும் அவசியம். அதாவது , இத்தகைய இறக்குமதிகள், பஞ்சம் ஏற்பட்டுள்ள சமயங் களில் மக்களுக்கு உணவு அளிப்பதற்காக உணவு தானியங்களை இறக்குமதி செய்வ தற்கு சமமாகும். இவ்வாறு நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும்போது, அவற்றின் மீது அரசாங்கம் வரிகள் விதிக்க முடியாது, விதிக் கக் கூடாது. அதேபோன்றுதான் நாட்டின் பொருளாதாரத்திற்கு உணவு அளித்திட எண்ணெய் இறக்குமதிகள் அவசியமாகின் றன. நிச்சயமாக, இத்தகைய இறக்குமதிக ளின் போது அரசாங்கம் அதிக அளவில் வரி கள் மற்றும் தீர்வைகளை இவற்றின் மீது சுமத்த முடியாது, சுமத்தக் கூடாது. ஆனால் மிக மோசமான விஷயம் என்னவெனில், அரசாங்கம் இவ்வாறு அதிக அளவில் வரிக ளைச் சுமத்திவிட்டு, பெட்ரோலியப் பொருட்க ளுக்கு மானியங்கள் அளித்துக்கொண்டிருப் பதாக இப்போது கூறுகிறது.

கனடாவில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது, பிரதமர் இவ்விலை உயர்வினை நியாயப்படுத்திப் பேசியிருக் கிறார். “மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு மிக அதிக அளவில் மானியம் அளித்து வந்ததால், அவற்றின் விலைகளைச் சற்றே சரிப்படுத்த வேண்டியதாக இருக்கிறது” என்று பேசியி ருக்கிறார். “சாமானிய மக்களின் நலன்க ளைப் பாதுகாத்திட, பிரதமர் ‘வரிக் கட்ட மைப்பு’ முறையில் சரிப்படுத்தும் நடவடிக் கைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமே தவிர, நாட்டின் பெரும் பகுதி மக்களைப் பாதிக் கக்கூடிய வகையில், அவர்கள் வாழ்வைச் சூறையாடக்கூடிய விதத்தில், அவற்றின் விலைகளை உயர்த்தி இருக்கக் கூடாது.

பெட்ரோலியத்துறை அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘‘ 1996இல் இடது சாரிக் கட்சிகள் ஐ.மு.கூட்டணி அரசாங்கத் தை ஆதரித்த வந்த சமயத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப் பாடுகளை நீக்க வேண்டும் என்று முதலில் முன்மொழிந்தவர்களே இடதுசாரிகள்தான் என்று கூறி, விலை உயர்வுக்கு நியாயம் கற் பிக்க முனைந்திருக்கிறார். எண்ணெய் இறக் குமதி மீதான அனைத்துவிதமான வரிகளும் விலக்கிக் கொள்ளப்படும்பட்சத்தில் இவ் வாறு விலைகள் மீதான கட்டுப்பாடுகளையும் நீக்கிடலாம் என்று இடதுசாரிகள் சொன் னதை அவர் வேண்டுமென்றே மறைத்துவிட் டார். மக்கள் மீது, பெட்ரோலியப் பொருட்க ளின் விலைகளை உயர்த்தி, அவர்கள் வாழ்க் கையையே சூறையாடும் அதே சமயத்தில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, இவ் வாறு அதீத வரிகளையும் தொடர விரும்பு கிறது.

இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை இந்த அரசு உயர்த்துவதற்கான உண்மையான காரணம் என்ன? உலகப் பொருளாதார நெருக்கடி பல நாடுகளை, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை, திவால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. இதி லிருந்து மீள வேண்டுமானால், அரசாங்கங் கள் தங்கள் செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் பொருள், நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரங் கள் மீது தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்பதாகும். ஜி-20 உச்சி மாநாட்டில், ஜெர் மனியும் பிரிட்டனும் அரசாங்கப் பற்றாக்குறை களை மிகவும் கூர்மையாகவும், விரைவாக வும் வெட்டிக் குறைத்து அறிவித்திருக்கின் றன. பல முன்னேறிய நாடுகள், தங்கள் நாடு களில் சமூகத் துறை செலவினங்களைக் கடு மையாக வெட்டிக் குறைத்துள்ளன.

இந்தியாவிலும் இதே முறையில்தான் அரசாங்கம் தன் பற்றாக்குறையைச் சரிக் கட்டுவதற்காக நாட்டு மக்களின் மீது சுமை களை ஏற்றியிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தில் அரசு, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு வுக்கு மட்டும் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில், வெறும் 3 ஆயி ரம் கோடி ரூபாய்தான் பெட்ரோலியப் பொருட் களுக்கான மானியத்திற்காக ஒதுக்கி இருந் தது. இதன் மூலம் அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்திடும் என்று அப்போதே தெளிவாகிவிட்டது.

மேலும், பெட்ரோலியப் பொருட்களின் மீதி ருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி யிருப்பதானது, அவற்றை பண்டங்கள் பரி வர்த்தனைக்குள் (உடிஅஅடினவைல நஒஉாயபேந) நுழையச் செய்வதற்கு வழிவகுத்து, அவற் றையும் ஊக வர்த்தகத்தின் பொருள்களாக மாற்றியிருக்கிறது. மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வினைப் போலவே பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும் வரும் காலங்களில் வர்த்தகச் சூதாடிகளால் இஷ்டம் போல் உயர்த்தப்படும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மூலம் முதலாளித்துவம் தன்னை நெருக்கடியிலிருந்து மீட்டுக்கொள்வதற்காக, சாமானிய மக்கள் மீது சொல்லொண்ணா சுமைகளை ஏற்றியிருக்கிறது. ‘சாமானிய மக்க ளுக்கு’ சேவகம் செய்வதற்காகவே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறோம் என்று சொல் லிவரும் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடிக் கொண்டி ருக்கிறது. இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. நடைபெறவிருக்கும் நாடு தழுவிய ஜூலை 5 வேலைநிறுத்தம் அரசுக் குத் தக்க பதிலடியைத் தந்திட வேண்டும். அதன் பின்னரும் ஆட்சியாளர்கள் பெட்ரோ லியப் பொருள்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற முன்வரவில்லை என்றால், விலையைக் குறைக்கும் வரை மக்கள் போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்படுத் தப்படும்.

தமிழில்: ச. வீரமணி