Sunday, May 25, 2014

தேர்தல் சீர்திருத்தம் காலத்தின் தேவை


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

பாஜக தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக் கப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் அவரை நாட்டின் 16ஆவது பிரதமராக நியமித்திருக்கிறார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்தல் என்பது எப்போதுமே அமைய விருக்கும் அரசாங்கமானது மக்களுக்குச் சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக்கூடிய விதத்தில் கொள்கைகளையும், திட்டங் களையும் அறிவித்திடும் என்ற எதிர்பார்ப்பு களுடனேயே அமைந்திடும்.
இது தொடர் பாக, நாம் மேலும் சிறிது காலத்திற்குக் காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டபின்புதான், அரசாங்கம் அமைந்து, அதுதான் பின்பற்றவிருக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமாக தன்னுடைய முன்னுரிமைகளை அறிவித்திட முடியும். அதன்பின்னர்தான் நாம் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து உண்மையில் செயல் பட முடியும்.இப்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் திற்காக நிதி உதவி அளித்தவர்கள், புதிய அரசாங்கம் அமையும்போது அதனைத் திரும்பப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கு வார்கள். அதற்காக, அவர்கள் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்கும் அரசாங்கத்திடம் சிலகொள்கைகளை `டிக்டேட்செய்வார்கள். அவ் வாறு அவர்கள் தாங்கள் பிரச்சாரத்தின்போது முதலீடு செய்த பணத்தை மீண்டும் எடுத் திடுவதற்காக, அரசாங்கத்திற்கு `டிக்டேட்செய்யும் கொள்கைகள் காரணமாக மக்களின் சுமைகள் மேலும் அதிகரித்திடும் என்பதில் ஐயமில்லை. எனவே இவர்களின் தலையீடு மக்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பொய்யாக்கிடும்.
மேலும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஆபத்து ஏற்படலாம் என்று ஆழமான முறையில் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன. மக்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்திருக்கும் அதேசமயத்தில் அதன் நாடாளுமன்ற உறுப் பினர்களில் ஒருவர் கூட முஸ்லிம் சிறு பான்மை மதத்தை சேர்ந்தவர் இல்லை என்றஉண்மையும் தெளிவானமுறையில் அமைந் திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே நாம் பெற்றிட்ட நம்முடைய நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அதன்சாதனைகளை, என்னதான் அவை மிகக்குறைவாகவும், வரையறுக்கப்பட்ட நிலையிலும் இருந்தபோதிலும்கூட, அவற்றைப்பாதுகாத்திடவும் அவற்றை மேலும் வலுப்படுத்திடவும் நம்முடைய உறுதியை இரட்டிப் பாக்கிக் கொள்ள சபதமேற்றிடுவோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இத்தகையதொரு உறுதியை நாம் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத் தின்போது மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைத்தோம். நாட்டு மக்கள்மீது தற்போது ஏற்றப்பட்டுள்ள சுமைகளிலிருந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கக் கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைத் திசை வழியை முன்வைத்து நாம் பிரச்சாரம்மேற்கொண்டோம்.
அவ்வாறு நாம் முன்வைத்த மாற்றுக் கொள்கைத் திசைவழி யானது, நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகவும் கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் இப்போது நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தொடரும். நம் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை மேலும் முன்னேற்றிடவும், மெருகேற்றிடவும் தேவைப்படும் சில முக்கிய அம்சங்கள் ஆராயப்பட வேண்டும் என்பதை இத்தேர்தல்களின் அனுபவம் ஏற்படுத்தி இருக்கிறது.
முதலாவதாக, சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இப்போதுதான், முதன் முறையாக, ஒரு கட்சி நாடாளுமன்ற மக்கள வையில் மிகவும் குறைவான அளவில் வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தபோதிலும், அதிக அளவிலான இடங்களைப் பெற்று ஆட்சியை அமைக்கவிருக்கிறது. இத்தேர்தல்களில் வெறும் 31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள அதே சமயத்தில் 282 இடங்களை அது வென்றிருக்கிறது. இதற்கு முன் 1967இல் காங் கிரஸ் கட்சி 40.8 சதவீத வாக்குகளைப் பெற்று,283 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத் திருந்தது. ஜனநாயகம் என்பது `பெரும்பான்மையின் ஆட்சிஎன்றுதான் பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளில், வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்களிக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவர்களாகிறார்கள். ஆனால், நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இந்தியாவில் தனிப்பட்டமுறையில் எந்தவொரு கட்சி யும் இதுவரை 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு களைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது இல்லை.
தங்களுக்கு எதிராக 69 சதவீதத்தினர் வாக்களித்திருந்தும்கூட பாஜக மிகவும் வசதியான முறையில் பெரும்பான்மையைப் பெற்று வென்றிருக்கிறது. என்னே விந்தை!இத்தகைய குறைபாடுகள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் அதிகம் வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர் களே வென்றதாகக் கருதப்படுவார் என்கிற தற்போதைய தேர்தல் அமைப்புமுறையின் விளைவாக ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள பல முதிர்ச்சிபெற்ற ஜனநாயக நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்பைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெறும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு கட்சிக்கும் தீர்மானிக்கப்படுகின்றன. அங் கெல்லாம் மக்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆராய்ந்துதாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குத் தான் வாக்களிக்கிறார்களே தவிர, தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சியின் சார்பில் முன்னுரிமை வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் நடத்திடும் அதிகாரக் குழுமத்திடம் தேர்தலுக்கு முன்பே தந்திட வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகள் சதவீத அடிப் படையில் அக்கட்சிகள் அளித்திருக்கும் பட்டியல்களிலிருந்து நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அர சாங்கம் அமைக்கவுள்ள கட்சி, தேர்தலில் வாக்களித்தவர்களில் 50 சதவீதத்திற்கும்அதிகமான அளவில் வாக்கு களைப் பெற் றிருக்க வேண்டும். இதுதான் அந்நாடுகளில் உள்ள தேர்தல் அமைப்புமுறையாகும். நாட்டின் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று தற்போது நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை சதவீத அடிப்படையில் கணித்து, விகிதாச்சார அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் பெறும்நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கையை வெளியிட்டிருக்கிறது. அவ் வாறு அது கணக்கிட்டுள்ள விகிதத்தில் பார்த்தோமானல், பாஜகவிற்கு 282 இடங்கள் கிடைக்காது, மாறாக 169 இடங்கள் மட்டுமே கிடைக்கும். காங்கிரசுக்கு 44க்குப் பதில் 105 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களுக்குப் பதில் 18 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0 இடத்திற்குப் பதில் 23 இடங்களும், அஇஅதிமுக வுக்கு 37 இடங்களுக்குப் பதில் 13 இடங் களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 34இடங்களுக்குப் பதில் 21 இடங்களும் மட்டுமே கிடைத்திருக்கும். (தி இந்து, மே 20, 2014).இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கு, ஒட்டுமொத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்புமுறை என்பது சிறந்ததொரு தீர்வாக அமையும் என்று சொல்வதற்கில்லை,
மாறாக,உலகில் வேறெந்த நாட்டுடனும் பொருத்திப் பார்க்க முடியாத அளவில், மிகப்பெரிய அளவில் சமூக-கலாச்சார-மத-மொழி வேற்றுமைகள் நிறைந்துள்ள நமது நாட்டில் மிகவும்சிறுபான்மையாகவுள்ள தங்கள் பிராந்தியத் தைச் சேர்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று விரும் புவது இயற்கையேயாகும். எனவே, இத்தகைய நிலைமைகளின்கீழ், பாதி அளவிற்குக் கட்சியின் வேட்பாளர் முன்னுரிமைப் பட்டியலுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவமும், மீதிபாதி தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களும் நிற்கக்கூடிய தேர்தல் அமைப்புமுறை மிகச்சிறந்ததொரு அமைப்பாக இருந்திடும். உதாரண மாக, தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இரு தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குரிமைகளை அளித்து, ஒரு வாக்கை அவர் தனிப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கும், மற்றொரு வாக்கை, தான் விரும்பும் கட்சிக்கும் (அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அடிப்படையில்) அளித்திட வகை செய்திட வேண் டும்.
தனிப்பட்ட நபர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குகளைப் பெற்றிருப்பின், அவர்களில் எவர் அதிகமான வாக்கு களைப் பெற்றிருக்கிறாரோ அவர் வென்றதாக அறிவிக்கப்படும் அதே சமயத்தில், அரசியல் கட்சியின் வேட்பாளரைப் பொறுத்தவரை தேசிய அளவில் அக்கட்சி பெறும் வாக்குகளின் சதவீத அடிப்படையில் தேர்ந்தெடுத்திட வேண்டும். இந்த எண்ணிக்கை, அக்கட்சியால் முன்னரே அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமைப் பட்டியலில் உள்ள வேட்பாளர்களிலிருந்து நிரப்பப்பட வேண்டும்.கூடுதலாக, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஒரு கட்சி பெறும் குறைந்தபட்ச வாக்குசதவீதமும் நிர்ணயிக்கப்படலாம். உதாரணமாக 2 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். இதற்குக் குறைவான சதவீத அளவிற்கு வாக்குகளைப் பெறும் கட் சிக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளு மன்றத்தில் இடமிருக்காது. ஆனால் அதேசமயத்தில் தனிப்பட்ட முறையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக் கப்பட்ட வேட்பாளர் இடம் பெறலாம். இத்தகைய முறையானது கூட்டணி அமைத்துத்தான் ஆகவேண்டும் என்கிற பிரச்சனைக்கும், இதன்காரணமாக நாடாளு மன்றத்தில் மிகச்சிறிய அளவில் விகிதாச்சாரம் உள்ள கட்சிகள்கூட மிரட்டும் (பிளாக்மெயில்) ஆபத்துக்களுக்கும் தீர்வு கண்டிட முடியும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட் டில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளு டனும் கலந்து பேசி ஒரு கருத்தொற்றுமை ஏற்படுவதன் அடிப்படையில் இத்தகைய பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் அமைப்புமுறையைக் கொண்டுவர வேண்டும் என்றே கூறி வருகிறது.இப்போது நடைபெற்ற தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணபலம் பயன்படுத்தப்பட்டதைப் பார்த் தோம். அதேபோன்று இந்தத் தடவை மோடிக் கான பிரச்சாரத்திற்காக குறைந்தபட்ச மதிப் பீட்டின்படியே 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவானது. கூடுத லாக, வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக பல் வேறு தவறான வகைகளில் பணம் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒரு வாக்கிற்கு ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாக்காளர்களுக்கு நேரடி யாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. தேர்தல் ஆணையமும் நாட்டின் பலபகுதிகளில் பணம், மது பாட்டில்கள் மற் றும் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறுவிதமான நன்கொடைப் பொருள்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பறிமுதல் செய்திருக்கிறது.
இவ்வாறு பணபலம் பயன்படுத்தப் பட்டிருப்பது தேர்தல் முடிவுகளிலும் பிரதி பலித்திருக்கிறது.ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 16ஆவது மக்களவைக்கு வெற்றி பெற் றுள்ள 541 வேட்பாளர்களில் 442 பேர் கோடீஸ்வரர்களா வார்கள். 15ஆவது மக்களவையில் 300 பேர் கோடீஸ்வரர்கள். இப்போது அதைவிட அதிகம். இந்த 442 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்தின் மதிப்பு (அவர்கள் அளித்துள்ள உறுதிவாக்குமூலத்தின் அடிப்படையிலேயே) 6500 கோடி ரூபாய்களாகும். இத்தகைய கோடீஸ்வரர்களில் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்கள் 237 பேர், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர்களாவர்.பண பலத்தை இவ்வாறு பயன்படுத்துவது மக்களின் ஜனநாயகத் தேர்வை சிதைத்திடும். போட்டியிடும் வேட்பாளர் சிறந்த கொள்கை மற்றும் திட்டங்களைக் கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் ஆராய்வது இல்லாமல் போய்,பணம் அதிகமாகக் கொடுத்தது யார் என்றஅடிப்படையில் வாக்களிக்க மக்கள் ஈர்க் கப்படுகிறார்கள்.
நாட்டின் ஜனநாயகத்தை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்திட இவ்வாறு பணம் தரும் முறை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். இதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் அரசியல் கட்சிகள் செய்திடும் செலவினங்களுக்கு தற்போது எவ்வித முறைப்படுத்தலும் அல்லது வரம்பும் இல்லாத நிலை கடுமையான முறையில் மாற்றப்பட வேண்டும். இன்றையதினம், வேட் பாளர்கள் செலவு செய்யும் தொகைக்குத்தான் வரம்பு இருக்கிறதேயொழிய, கட்சியின் செலவினங்களுக்கு எவ்வித வரம்பும் கிடையாது. அரசியல் கட்சிகளின் செலவினங்களுக்கும் வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கோரி வந்திருக்கிறது. இவ்வாறு தேர்தல் விதிகளில் குறைபாடுகள் இருப்பதன் காரணமாகத்தான், தங்கள் தலைவர்கள் நாடு முழுதும் குறுக்கும் நெடுக்குமாக தனியார் ஜெட் விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் பயணம் செய்ய பல அரசியல் கட்சிகளால் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடிந்தது. பண பலம் உள்ள கட்சிகளுடன் சிறிய கட்சிகள் குறிப்பாக குறைந்த வசதிகளுடன் கூடிய சுயேச்சைகள் போட்டிபோட முடியாது ஓரங்கட்டப்படும் நிலை உருவாகி உள்ளது.
இத்தகு நிலை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பினைக் குறைக்கக்கூடிய விதத்தில் மக்கள் தேர்வு செய்யும் வாய்ப்புகளை சிதைக்கிறது.சில அரசியல் கட்சிகளுக்கு கார்ப் பரேட்டுகள் எவ்வித வரம்புமின்றி நிதி யினை வாரி வழங்கி இருக்கின்றனர். இதனைசரிசெய்ய வேண்டும் எனில், கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். மாறாக, கார்ப்பரேட்டுகள் நம் ஜனநாயகத்தை வலுப் படுத்துவதற்கு நிதி அளித்திட வேண்டும். இத்தகைய நிதி தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளிடம்தான் தரப்பட வேண்டும். அவை, தேர்தலை சிறப்பாக நடத்திட பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பல மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் இதுதான் தற்போதைய நடைமுறையாகும்.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஓர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய தருணம் இது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசீலனைகளில் நாம் மேலே கூறிய அனைத்து அம்சங்களும் அலசி ஆராயப்பட வேண்டும். நம்முடைய ஜனநாயக நடைமுறைகளை மிகப்பெரிய அளவில் சிதைத்துள்ள நிலைமைகளைச் சரிசெய்திட இவை முற்றிலும் அவசியமாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் ஆழமான வகையில் முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும். தேர்தல்களுக்குப்பின் உள்ள நிலை மைகள், நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் புதிய சவால்களை உரு வாக்கியுள்ளன. எதிர்காலத்தில், மதவெறியைக் கூர்மைப்படுத்தக்கூடிய அனைத்துவிதமான முயற்சிகளிலிருந்தும் நம் நாட்டின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாது காத்து, வலுப்படுத்தக்கூடிய விதத்தில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களின் வாழ்க் கைத்தரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய விதத்தில் அவர்கள் மீது ஏவப்படக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராகவும் போராட்டங் களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி யிருக்கும். நாம் நடத்தவிருக்கும் இத்தகைய போராட்டங்களின் வலுதான் நம் நாட்டின், நாட்டு மக்களின் எதிர்கால வடிவத்தைத் தீர்மானித்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, May 17, 2014

16ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து



-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

16ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இறுதியாகத் தேர்தல் ஆணையம் தன் அறிக்கையை தாக்கல் செய்தபின்னர் மற்றும் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் தங்கள் ஆய்வினையும் மதிப்பீடுகளையும் முடிவு செய்தபின்பும் ஓர் ஆழமான ஆய்வினை வழங்குவதற்காக நாமும் காத்திருப்போம்.  தேர்தல் முடிவுகள் குறித்து பூர்வாங்கமான ஆய்வினை மேற்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மே 18 அன்று கூடுகிறது.  அதனைத் தொடர்ந்து மத்தியக்குழு ஜூன் 7, 8 தேதிகளில் கூடுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட மாநிலக்குழுக்களும் தங்கள் மாநிலம் குறித்த பூர்வாங்க ஆய்வுகளை அளித்திடும். ஆயினும், இப்போதுள்ள நிலையில்  இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனுதாப அலை வீசியதை அடுத்து அன்றைக்கு 542 மக்களவை இடங்களில் 405 இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் முப்பது ஆண்டுகளுக்குப்பின்னர் முதன்முறையாக பாஜக மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக முன்னேறியிருக்கிறது. பாஜக தன்னுடன் பயணம் செய்த தேஜகூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையினைப் பெற்றிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே, நாளும் தங்கள் மீது ஏவப்படும் தாக்குதல்களிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசாங்கம் முன்வராதா என்று மக்கள் ஏங்கத் துவங்கியிருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம், அதிலும் குறிப்பாக கடைசி ஈராண்டு காலத்தில், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர்வாலும், பொருளாதார மந்தத்தாலும் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், நாட்டின் செல்வாதாரங்களையும் மிகப்பெரிய ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்தனர். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியை பாஜக தங்கள் தேர்தல் வெற்றிக்கு மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பண பலத்துடனும், ஊடகங்களின் மூலமாகவும் தனக்குச் சாதகமாக மிகவும் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மிகவும் வெற்றிகரமான முறையில் சித்தரித்ததுடன், இந்துத்வா நிகழ்ச்சி நிரலையும் `வளர்ச்சி மற்றும் `நல்லதோர் அரசாங்கம் ஆகியவற்றிற்கான உறுதிமொழிகளையும் மிகவும் புத்திசாலித்தனமாக இணைத்து தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது. முதலாவதாக, 2002இல் குஜராத்தில் முஸ்லீம்கள் மீது இனப்படுகொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே, நரேந்திர மோடி, இந்துத்துவா மதவெறியை முன்னெடுத்துச் செல்வதற்கு, சரியானதொரு நபராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரவாரத்தால் முன்னிறுத்தப்பட்டு வந்தார். எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் எதிர்காலத்தின் பிரதமராக அவரை முன்னிறுத்துவதே போதுமானது என்றும், வேறு எவ்விதமான பிரச்சாரமும் தேவையில்லை என்றும் கருதின. பாஜகவின் பிரச்சாரத்தின் வலுவான அடிநாதமாக இது தொடர்ந்தது.
இரண்டாவதாக, பெரும்பான்மையைப் பெறுவதற்கு இந்துத்துவாவை முன்னிறுத்தினால் மட்டும்  போதாது என்கிற கடந்த கால அனுபவம் அவர்களை எச்சரித்தது.  எனவேதான் இம்முறை, நரேந்திர மோடி பிரதமரானால் மட்டுமே, இந்தியா முழுமையும் குஜராத் போல வளர்ச்சியடையும் என்று பாஜக சரடு விட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.   குஜராத், பாலும் தேனும் ஆறாக ஊடும் எல் டோராடோ (El dorado) போன்ற மாநிலமாக சித்தரிக்கப்பட்டது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ராம லக்ஷ்மிமோடி புராணத்தை உருவாக்குதல் என்னும் தன்னுடைய செய்திக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யிருப்பதைப்போல, பாஜகவின் பிரச்சார மேலாளர்கள்அயோத்தியையும், ராமரையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகவும் புத்திசாலித்தனத்துடன் குஜராத்தையும் அதன் தற்போதைய கடவுளான மோடியையும் சுற்றி இந்தியர்களைத் திரட்டியிருக்கிறார்கள்.    நாட்டு மக்களின் மனதில் குஜராத், பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாகவும், இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கமாகவும், அங்கே உள்ள அனைவரும் வேலை பார்ப்பது போலவும், அனைவருக்கும் எப்போதும் மின்சாரம் உண்டு என்பது போலவும், விவசாயிகள் பேரானந்தத்துடன் வாழ்வது போலவும், அங்கேயுள்ள நெடுஞ்சாலைகள் உலகிலேயே சிறந்தவை போலவும், ஊழல் நோய் அண்டாத மாநிலம் போலவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில், காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற பிரச்சாரம் முற்றிலுமாக வலுவிழந்த நிலையில் அமைந்திருந்தது. இவ்வாறு மோடி குறித்து எழுப்பப்பட்ட அண்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகைள உடைத்தெறியக்கூடிய விதத்தில் வலுவான முறையில் அமையாதிருந்தது.  குஜராத் வளர்ச்சி மாடல் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை அது அடுக்க முயன்ற போதிலும், காங்கிரசின் கடந்த கால நடவடிக்கைகளால் வெறுப்படைந்திருந்த  மக்கள் அது கூறுவதை நம்பத் தயாராக இல்லை.  ஐமுகூ அரசாங்கம் மக்கள் மீது வறுமையையும் பொருளாதாரச் சுமைகளையும் திணிக்கும் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோதே, காங்கிரசின் தோல்வி தொடங்கிவிட்டது. மேலும், காங்கிரஸ் தலைமை, தன் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்கு அளித்த அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை - கல்விபெறும் உரிமை, தகவல் பெறும் உரிமை, பழங்குடியினருக்கு வன நிலங்கள் மற்றும் வன உற்பத்தியில் அளித்த உரிமை, கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமை, முதலானவற்றைக் கூட - (இவற்றில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதிலும்கூட)  மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், இவ்வாறு எடுத்துச் சொல்வதன் மூலம் தன் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டவும்கூட தவறிவிட்டது.
மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுமே, இடதுசாரிகளின் செல்வாக்கின்கீழ் ஐமுகூ-1 அரசாங்கம் இருந்தபோது தொடங்கப் பட்டவைகளாகும். இவை ஐமுகூ-2 அரசாங்கத்தின் காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இவற்றை அமல் படுத்தியதன் மூலம் இடதுசாரிகளுக்கு ஒரு கவுரவத்தை கொடுத்த காங்கிரஸ் விரும்பாதிருந்த போதிலும், தனக்காகவாவது இவற்றை அக்கட்சி பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். இவ்வாறு அக்கட்சி கூற முன்வராததிலிருந்தே இவற்றை அது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் மேற்கொண்டது என்பது மீளவும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்நடவடிக்கைகளின் மீது அதற்கிருந்த நேர்மை யின்மைதான் இதற்குக் காரணமாகும். இத்துடன் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அது பின்பற்றியதிலிருந்த வெறியுடன் மெகா ஊழல்களும் இணைந்ததும்தான் பாஜக பிரச்சாரத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலைக்கு அதனைத் தள்ளிவிட்டது.
ஆயினும், இத்தேர்தல்கள், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான பரிசீலனை மேற்கொள்வதற்காக  சில முக்கிய பிரச்சனைகளையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.  தேர்தலில் பண பலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்துள்ளது. பாஜக பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓட அனுமதிக்கப்பட்டது.  மறுபக்கத்தில், இவ்வாறு பணம், வாக்காளர்களுக்குக் கவர்ச்சியூட்டக்கூடிய விதத்தில் பல்வேறு இழிவழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் தரும் பழக்கத்தைப் பல கட்சிகளும் நடைமுறைப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணம் பறிமுதல் செய்துள்ளது. பணம் மட்டுமல்ல, மது மற்றும் பல்வேறுவிதமான கவர்ச்சிப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளது. கூடுதலாக, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால்  உயிருடன் இருக்க முடியாது என்பது போன்ற பயங்கரவாத மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களும் நடைபெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து மிக விரிவான அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடியாக வாக்களித்தல் (rigging) மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலம், இடதுசாரிக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கை  உண்மையாக பிரதிபலிக்க முடியாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.  தேர்தல் ஆணையத்திற்கு எண்ணற்ற முறையீடுகள் அளிக்கப்பட்டபோதிலும், இவற்றைச் சரிசெய்திட அதனால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகும். 
கடும் விலைவாசி உயர்வாலும், மெகா ஊழல்களாலும் மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகள் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முடியவில்லை.  இடதுசாரிகள் தங்கள் நிலையை திரிபுராவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன், நிலைநிறுத்திக்கொண்டுள்ள அதே சமயத்தில், கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள அதே சமயத்தில், இத்தேர்தல் முடிவுகள் பலவீனங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரிப்படுத்துவதற்கான தேவையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறது. முறையான தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமாக இத்தகு சிதைவுகளை ஆழமான முறையில் சரிசெய்ய வேண்டியது நாட்டின்முன் எழுந்துள்ள அவசர மற்றும் அவசியத் தேவையாகும். எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி அளித்தல், அரசியல் கட்சிகள் செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவருதல் (தற்சமயம் வேட்பாளர்களுக்கு மட்டுமே அத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன) போன்ற பிரச்சனைகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒளிவுமறைவின்றி அறிவித்திருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய ஜனநாயக நடைமுறைக்கு நிதி அளித்திடலாம் என்றும், ஆயினும் அத்தகைய நிதி தேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஓர்  அமைப்பிற்கோ அல்லது அரசால் அமைக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கோதான் செல்ல வேண்டும் என்றும்அந்த அமைப்பு தேர்தலை நடத்திட செலவு செய்திட வேண்டும் என்றும் கூறுகிறோம்.
மேற்கத்திய நாடுகள் பலவற்றின் நடைமுறை இதுதான். முக்கியமாக, நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதி விகிதாசார பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வாதிட்டுக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் பாஜக பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றிக்குப்பின்பும் கூட, அது பெற்றுள்ள வாக்கு சதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் மிகவும் குறைவுதான். இதன் பொருள், நாட்டு மக்களில் பாஜகவிற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிகம் என்பதேயாகும். போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வென்றவராகக் கருதப்படுவார் என்கிற தற்போது நம்முடைய தேர்தல் நடைமுறையில் உள்ள முரண்பாடு அல்லது குறைபாடு இது. பக்குவப்பட்ட பல ஜனநாயக நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். ஒரு பகுதி விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்புமுறை கொண்டுவரப்பட்டால் தற்போது மிகவும் பூதாகரமான முறையில் அதிகரித்து, மக்களின் ஜனநாயகக் கருத்தை சிதைக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் பணபலம் மற்றும் புஜபலத்தின் செல்வாக்கைக் குறைத்திட கணிசமான அளவிற்கு உதவிடும்.  இரு மக்களவைத் தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் கொடுத்து, ஒரு வாக்கை குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை அதன் கொள்கை மற்றுத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் கட்சிக்கும் அளித்திடலாம். அதேபோன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முன்னுரிமைப் பட்டியலை முன்னதாகவே அளித்திடும். தேசிய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் சதவீதத்தின் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிக்கும் அது முன்னதாகவே அளித்துள்ள முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இடங்களை நிரப்பிடும். இத்தகைய பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும்  ஆழமாகப் பரிசீலனை செய்வதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது.   மேலும், இப்போது நடைபெற்ற தேர்தல்கள் தற்போதுள்ள சட்டங்களில் உள்ள பல ஓட்டைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பல தொகுதிகளில் தேர்தல் வேலைகள் தொடங்கிய பின்னர் நரேந்திர மோடி தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததை நாடு பார்த்தது.   பல தொகுதிகளில் தேர்தலின் முதல் கட்டம் நடைபெறத் துவங்கிய பின்னே, பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.  வாரணாசியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், நரேந்திர மோடி குஜராத்திலிருந்து வீடியோ பேச்சு ஒன்றை வெளியிடுகிறார். அது தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு இப்போதுள்ள சட்டங்களில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன. பாஜக வெற்றி தொடர்பாக அக்கட்சியால் அவிழ்த்து விடப்பட்ட சரடுகள் அனைத்தும் விரைவில் சரடுகள்தான் என்பது மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகிவிடும். எதிர்காலத்தில் ஏகப்பட்ட சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாஜகவிற்கு இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி உதவி செய்தவர்கள் அவ்வாறு செலவு செய்ததை எவ்வளவு விரைவாகத் திரும்ப எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்ப எடுப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள். இதன் பொருள் மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும் என்பதாகும். மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். பாஜகவின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்துத்வா பிரச்சாரம் நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கே வேட்டு வைக்கக்கூடியவைகளாகும். இவை இரண்டையும் எப்படி வலுவாக எதிர்கொள்ளப்போகிறோம் என்பதைப் பொறுத்தே நாட்டின் நாட்டு மக்களின் எதிர்காலம் அமையவிருக்கிறது.
ஒரு பக்கத்தில், சமூக நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை பாதுகாக்கக்கூடிய விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடவும், மறுபக்கத்தில் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் நம் நாட்டிற்குத் தேவையான மாற்று மக்கள் ஆதரவு கொள்கைத் திசைவழிக்கான போராட்டத்தை நடத்திடவும்  இவ்வாறு இவ்விரண்டு திசைகளிலும் வெகுஜன போராட்டங்களை வலுப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டிருக்கிறது.
இத்தேர்தல்களுக்குப்பின்னர், இடதுசாரிகள் வலுவாகவுள்ள இடங்களில் நம்மீது ஏவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடும் அதே சமயத்தில்இவ்விரு திசைவழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச்செல்லவும்  நாமனைவரும் சபதம் ஏற்போம்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, May 11, 2014

நிவாரணம் கோரி மக்கள் அலைதான் வீசுகிறது


-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
பதினாறாவது மக்களவைக்காக நடைபெற்ற தேர்தல்களில் மொத்தம் உள்ள ஒன்பது கட்டங்களில்  எட்டு கட்டங்கள்  நிறைவடைந்துள்ளன. இன்னும் ஒரே ஒரு கட்டம்தான் மீதம் உள்ளது என்ற போதிலும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் தீர்மானகரமான கட்டமாக இது அமைந்திருக்கிறது. பொதுவாகத் தேர்தல்கள், மிகப்பெரிய அளவில் வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் உருக் குலைக்கப்பட வில்லை என்றபோதிலும், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளும் இருந்தன. கடைசியாக நடைபெற்றக் கட்டத்தின்போது, மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்டமாக நடைபெற்றத் தேர்தலில், மாநிலத்தின் ஆளும் கட்சி வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாகவும், மிகப்பெரிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன. தேர்தல் ஆணைய எந்திரத்தால் தன்னுடைய வீடியோ கண்காணிப்பு மூலமாக, அத்தகைய வாக்குச்சாவடிகள் கைப்பற்றலை முழுமையாக மேலாண்மை செய்ய முடியவில்லை. உண்மையில் பல முக்கியமான வாக்குச்சாவடிகளில் அத்தகைய ஏற்பாடுகளே இல்லை. மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் அத்தகைய வாக்குச்சாவடிகளில் நிலைநிறுத்தப்பட வில்லை. தனிப்பட்டவர்கள் சிலர் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் எப்படியெல்லாம் வாக்காளர்களை மிரட்டி அவர்களுக்குப்பதிலாகத் தாங்கள் வாக்களித்தார்கள் என்பதைப் பதிவு செய்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கிறார்கள்.  மேற்கு வங்கத்தில் மே 7 அன்று கடைசியாக நடைபெற்ற தேர்தல்களிலும் மீண்டும் மிகப்பெரிய அளவில் ஆளும் கட்சியினர் சட்டவிரோதமானமுறையில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆளும் கட்சியினர் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்ட வாக்குச்சாவடிகளில் அவற்றைச் சரிசெய்யக்கூடிய விதத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு மனுச் செய்திருக்கிறோம்.   இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆயினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவின் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அடுத்து நான்காவதாக கட்டத்தில் நடைபெறக்கூடிய தேர்தலின்போதும் இதேபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவும், ஜனநாயகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிடவும் திரிணாமுல் காங்கிரசுக்கு மிகவும் தெளிவான முறையில் தைர்யத்தைக் கொடுத்திருக்கிறது.  வீடியோ கேமராக்கள் வலுக்கட்டாயமாக மூடி வைக்கப்பட்டிருப்பது, அல்லது வேண்டும் என்றே வேறுபக்கம் திருப்பி வைக்கப்பட்டிருப்பது போன்ற புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 17இல் தேர்தல்கள் நடக்க இருக்கும்  கடைசி மற்றும் தீர்மானகரமான கட்ட வாக்களிக்கும் நாளன்றும் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளில் மீண்டும் ஈடுபடும் என்பது நிச்சயம். இவ்வாறு ஜனநாயகத்தையும், ஜனநாயக தேர்தல் நடைமுறையையும்  மிகப்பெரிய அளவில் சிதைப்பது அனுமதிக்கப்படக்கூடாது. காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளைப்போலவே புஜபலம் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் முறையான பரிசீலனைக்கு உட்படுத்தி. உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு விஷயங்கள் முறையாக பரிசீலிக்கப்பட வேண்டிய அதேசமயத்தில், ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி அலை சுனாமியாக மாறி நாட்டையே சூறையாடியிருப்பதுபோல் தோன்றுகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஓராண்டு காலமாகவே அவரை எதிர்காலப் பிரதமர் என்று தூக்கி நிறுத்திய விளம்பரத் தட்டிகள், நடைமுறையில் மோடி எதிர்ப்பு காரணியாகவே (ANTI-INCUMBENCY FACTOR) செயல்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. நாடு முழுதும் இருந்து வந்துள்ள கள ஆய்வுகள் அழுத்தமான முறையில் பாஜக வெற்றி பெறும் என்று  ஊடகங்கள் ஊதித்தள்ளியுள்ள கருத்துக்கணிப்புக்கும் எதார்த்தத்திற்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பதை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தினை மிகவும் பரிதவிக்க வைத்த விஷயம் என்னவெனில், அது மிகவும் கனவு கண்டு கொண்டிருந்த இந்தி பேசும் மாநிலங்களில்கூட அதற்கு எந்த வரவேற்பும் இல்லாதிருந்ததுதான். மோடி குறித்து பிரச்சாரம் இருந்தபோதிலும், உள்ளூர் பிரச்சனைகள்தான் பிரதானமான பாத்திரம் வகித்தது, என்பதே தலைப்புச் செய்தியாக அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. பீகாரில், லாலு மீண்டும் பாஜகவின் ரதத்தை நிறுத்தியது ஒரு புறத்திலும், மறுபுறத்தில் நிதிஷ், வளர்ச்சியின் பயன்களை அறுவடை செய்திருப்பதும் செய்திகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில், மக்கள் சாதிய ரீதியாக ஏற்கனவே முலாயம்மைச் சுற்றிலும், மாயாவதியைச் சுற்றிலும் அணிதிரண்டு விட்டார்கள் என்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் உள்ளூர் காரணிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்திடுவதற்காக, நாம் எதிர்பார்த்ததைப் போலவே மதவெறித் தீயை விசிறிவிட்டுப் பார்த்தது.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக எஜமானர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த பேர்வழி ஆரம்பத்தில் மதவெறிப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்துவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சமாஜ்வாதிக் கட்சித் தலைவரின் தொகுதியான அசம்கார் பயங்கரவாதிகளின் தளமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகளை அள்ளி விசிக்கொண்டிருக்கிறார். மிகவும் மட்டரகமான முறையில் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அனைத்துவிதமான வகுப்புவாத வாக்கு வங்கிக் கொள்கைகளிலும் அது இறங்கி இருக்கிறது. மே 5 அன்று, பைசாபாத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் (இத்தொகுதியில்தான் அயோத்தி இருக்கிறது) நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்டத்தின் மேடையின் பின்னணியில் ராமர் படம் வைக்கப்பட்டிருந்தது. தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்ற உறுதிமொழி மீளவும் எழுப்பப்பட்டு அதன் மூலம் மதவெறித் தீயை கூர்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் மே 4 அன்று வங்கத்தில் அசன்சால் தொகுதியில் பேசுகையில் மோடி, தான் பிரதமரான பின்னர் வங்கதேச வாசிகள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்ப தயாராகிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.  இந்துக்கள் வரவேற்கப்படக்கூடிய அதே சமயத்தில் தங்கள் இலக்கு முஸ்லீம்கள்தான் என்பதை அவர் மிகவும் தெளிவாக்கி இருக்கிறார். இதுஉண்மையான அனைத்து இந்திய வங்க முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறுப்பை உமிழும் வேலை என்பது மிகவும் தெளிவான ஒன்றாகும்.  இவ்வாறு மோடி வங்க முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கியதைத் தொடர்ந்துதான் அஸ்ஸாமில் போடோ லாந்து தீவிரவாதிகள் இதுவரை 31 பேரைக் கொல்வதற்கும் பலரைக் காயமடையச் செய்வதற்கும் காரணமாக அமைந்தன என்று ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.  வங்க தேசத்திலிருந்து வரும் செய்திகளும் மிகவும் கவலை அளிப்பவையாக உள்ளன. அங்குள்ள மதச்சார்பற்ற சக்திகள் மோடியின் பேச்சை வன்மையாக விமர்சித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், மத அடிப்படைவாத சக்திகள் இந்துக்களை குறிவைக்கத் தொடங்கி இருக்கின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்து வகுப்புவாதமும் முஸ்லீம் அடிப்படைவாதமும் தாங்கள் ஜீவித்திருப்பதற்காக  ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கும் என்று நாம் கூறிவருவதை இந்த செய்தி மீண்டும் ஒருமுறை மெய்ப் பித்திருக்கிறது. உண்மையில், இதுநாள்வரை நம்மால் போற்றிப்பாதுகாத்து வரப்பெற்ற அடிப்படை மனித உரிமைகள், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தால் அதன் தேர்தல் ஆதாயத்திற்காக பலிபீடத்தின்முன் வைக்கப் பட்டிருக்கின்றன.  இதேதொனியில், ஐபிஎல் கிரிக்கெட் சீசன் போது நடைபெறும் சூதாட்டம் (MATCH FIXING) போல, புதுவிதமான சூதாட்டம் இப்போது பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே வங்கத்தில் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. வகுப்புவாத உணர்வை வளர்த்து மக்களிடையே வேற்றுமையை விரிவுபடுத்து வதன் மூலம் தங்கள் தங்கள் வாக்கு வங்கிகளை ஒருமுகப்படுத்துவதற்கான போராட்டமாக இது நடந்துகொண்டிருக்கிறது.  மோடிக்கும் மமதாவிற்கும் இடையே நடைபெறும் சொற்போரைக் கூர்ந்து கவனித்தோமானால்பாஜக தன்னுடைய வெறித்தனமான இந்துத்துவா ஆதரவுத்தளத்தை ஒருமுகப்படுத்த முயற்சிக்கும் அதே சமயத்தில்தற்சமயம் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து வரும் சிறுபான்மையினர், திரிணாமுல் காங்கிரசுடன் விரக்தியுற்று இடது முன்னணிக்கு ஆதரவாகத் திரும்பிவிடக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தக்கூடியவிதத்தில் இருப்பதையும் காண முடியும். பாஜக, தேர்தல் முடிந்தபின், மத்தியில் ஆட்சியை அமைக்க வேண்டுமானால், மேலும் பல கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை நன்கு உணர்ந்துள்ளதால், பாஜக அரசாங்கத்திற்கு திரிணாமுல் ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் வங்கத்திற்கான சலுகைகள் குறித்து பாஜக தலைவர் பேசுவதையும் கேட்க முடிகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் இரட்டை வேடம் என்பது இதுதான்.
திரிணாமுல் காங்கிரஸ் கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் ஒட்டி உறவாடியது என்கிற உண்மையுடன், அதன் தலைவி இரு கட்சிகளின் கீழான ஆட்சிகளிலும் ரயில்வே அமைச்சராக இருந்தார் என்பது மட்டுமல்லஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் மிகவும் நெருக்கமான முறையில் ஒட்டுறவை வைத்திருந்தார் என்பதும் உண்மையாகும். 2003இல்குஜராத் மாநிலத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து, அதன் நெருப்பு நன்கு கனிந்துகொண்டிருந்த சமயத்திலேயே, திரிணாமுல் காங்கிரசின் தலைவி ஆர்எஸ்எஸ் விழா ஒன்றில் பங்கேற்றதும், அந்த விழாவில் அவர், வங்கத்தின் துர்கை என்று போற்றிப் புகழப்பட்டதும், நடந்தது. இதற்கு, பிரதிபலனாக, திரிணாமுல் காங்கிரசின் தலைவி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை, உண்மையான தேசப்பற்றாளர்கள்  என்று கூறி வானளாவப் போற்றிப் புகழ்ந்தார். அத்தோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை, அதற்கும் ஒருபடி மேலே சென்று, நீங்கள் (ஆர்எஸ்எஸ்) நாட்டை நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், என்றும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் (ஆர்எஸ்எஸ்-உடன்) நாங்களும் இருக்கிறோம், (தி டெலிகிராப், செப்டம்பர் 15, 2003) என்றும் பேசினார். இப்போது, இவ்வாறுஇவர்களிருவரும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதுபோல் சூதாட்டம் (அயவஉ கஒபே) மேற்கொண்டிருப்பது வாக்கு வங்கி அரசியலின் மிகவும் மட்டரகமான வடிவமாகும். இவை அனைத்துக்கும் மத்தியில், மக்களை மிகவும் பாதித்துள்ள அடிப்படைப் பிரச்சனையை இவர்கள் பார்க்கவே மறுக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான நிவாரணம் குறித்து பேசவே மறுக்கிறார்கள். பணவீக்கம், வேலையின்மை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் துன்பதுயரங்கள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் மக்களுக்குத் தேவை. இத்தகைய நிவாரணம் மாற்றுக் கொள்கைகளால் மட்டுமே அளிக்கப்பட முடியும். அதாவது தற்போதைய பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றால் நியாயப்படுத்தப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளால் மட்டுமே அளிக்கப்பட முடியும். உண்மையில், இந்தத் தேர்தலில் எங்காவது அலை வீசியது என்றால், அது இவ்வாறு நிவாரணம் கோரி எழுந்த மக்களின் அலைதான். மக்கள் அலையின் வெற்றி, தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. மக்கள், வெளி நிர்ப்பந்தம் எதற்கும் அல்லது கவர்ச்சி எதற்கும் உட்படுத்தப்படாது, வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, வரும் மே 12 அன்று நடைபெறும் கடைசிக் கட்டத் தேர்தலை உத்தரவாதமாக நடத்திட தேர்தல் ஆணையம் உறுதியுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)    

Friday, May 9, 2014

வகுப்புவாத அரசியலை முறியடிப்போம்



பிரகாஷ் காரத்

மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல் வரும் மே 12உடன் முடிவடையக் கூடிய நிலையில் இவற்றுக்காக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் சில சங்கடமான சங்கதிகளையும் முன்கொணர்ந்திருக்கிறது. முதலாவதாக, பாஜக/ஆர்எஸ்எஸ் கட்ட விழ்த்துவிட்ட மதவெறிப் பிரச்சாரம், குறிப் பாக உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் இவைமேற்கொண்ட பிரச்சாரம், மதவெறி வெப்பத்தை உச்சத்திற்குக் கொண்டு சென் றுள்ளது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வெடிகுண்டு விபத்துக்கள் சம்பந்தமாக இந்துத்துவா தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்டதாக விசாரிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவரான இந்த்ரேஷ் குமார், சமீபத்தில் ஒரு நேர்காணலில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட் பாளர்களுக்காக ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது இவர்கள் வெளிப்படை யாகவே சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் நல்ல அரசாங்கம் ஆகியவை குறித்துத்தான் நரேந்திர மோடியின் தேர்தல் மேடை அமைந் திருப்பதாக கார்ப்பரேட் ஊடகங்கள் என்னதான் பூசி மெழுகினாலும், மோடி பேசும் போது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான கண்ணோட்டத்துடன்தான் பிரச்சனைகள் குறித்துப் பேசிக் கொண் டிருந்தார். பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் மோடி, ஐ.மு.கூ. அரசாங்கத்தின் இளஞ் சிவப்பு புரட்சி’’ குறித்து பேசினார். நாட்டில் ஐ.மு.கூ. ஆட்சியின்போது மேற் கொள்ளப்பட்ட எருமை இறைச்சி ஏற்றுமதி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்லப் பிராணியான பசுவைக் கொன்று அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதுபோல், சித்தரிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொள்கையில் தன்னுடைய அர சியல் வெற்றியைத் சிவபெருமானும் ஸ்ரீராமனும் தூக்கிப்பிடித்திட வேண்டும் என்றுகடவுள்களிடம் வேண்டிக் கொண்டிருக் கின்றார். மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமி லும் உரையாற்றுகையில் மோடி, வங்க தேசத்திலிருந்து வந்தவர்களை தாக்கிப் பேசினார். அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, வங்க தேசத்திற்குத் திரும்ப தயாராகிக் கொள்ள வேண்டும் என்றும் மிரட்டினார்.

வங்க முஸ்லிம்கள்

வங்க மொழி பேசும் முஸ்லிம்களை ஊடுருவியர்கள்’’ என்று சித்தரித்த இத்தகைய பிரச்சாரத்தின் விளைவுகள் ஏற்கனவே அஸ்ஸாமில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. போடோ தீவிரவாதிகளின் தாக்குதலில் 31 பேர் படுகொலை செய் யப்பட்டார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் பெண்களும் குழந்தைகளுமாவர். அனைவருமே வங்கமொழி பேசும் முஸ் லிம்கள். போடோ எல்லை மாவட்டப் பகுதியில் ஏப்ரல் 24ல் தேர்தல் நடந்த சமயத்தில்தான் இது நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில்தான் இன சுத்திகரிப்பு என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அந்த சமயத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம், வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்கிற தன்னுடைய வெறிபிடித்த மதவெறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது.
இவ்வாறு நடைபெற்ற கொலைகளுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போது, அக்கிளர்ச்சிகளுக்கு எதிராக விசுவ இந்து பரிசத்தும், பஜ்ரங் தளமும் 2012 ஆகஸ்ட்டில் மாநிலத்தில் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இப்போது மீண்டும் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக போடோ தீவிரவாதிகள் தாக்குதல் கொடுக்கக் காரணமாய் அமைந்தது.நாட்டில் தற்போது நிலவும் மத நல் லிணக்கத்திற்கும் மக்களின் ஒற்றுமைக்கும் மத்தியில் பாஜக தலைமையிலான பரிவாரம் அதிகாரத்திற்கு வருமானால் என்ன நடக் கும் என்பதற்கு அஸ்ஸாம் கொலைகள் ஒரு பயங்கரமான அச்சுறுத்தலாக அமைந் துள்ளது.

பாசிஸ்ட் தாக்குதல்

மற்றொரு முக்கியமான நிகழ்ச்சிப்போக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிக் கட்சிகளையும் நசுக்குவதற்காக மேற்குவங்கத்தில் தேர்தல்களில் மோசடிவேலைகளில் இறங்கியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாசிஸ்ட் முயற்சி களாகும். ஏப்ரல் 30 அன்று மூன்றாம் கட்டத்தேர்தலில் அம்மாநிலத்தில் நடைபெற்ற ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கானத் தேர்தலிலும் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப் பட்டமை, வாக்காளர்களுக்கு எதிரான மிரட்டல் மற்றும் வன்முறை நிகழ்வுகள் மிகவும் விரிவான அளவில் நடைபெற்றதைப் பார்த்தோம். 1300க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மிகவும் அராஜகமான முறையில், அனைவருக்கும் நன்கு தெரியும்படியே தேர்தல் அதிகாரிகளை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் வாக்குகளைப் போட்டுள்ளனர்.

வங்கத்திலிருந்து வெளி வரும் தொலைக்காட்சி ஊடகங்களும் செய்திஊடகங்களும் இவர்களின் அராஜக நடவடிக்கைகளில் பலவற்றைப் படம் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வாக் காளர்கள் திரிணாமுல் குண்டர்களின் ரவுடித்தனத்தை எதிர்த்துநின்று முறியடித்தபின் தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளார்கள். இவ்வாறு தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில் வாக்களித்தமைக்காக இவர்களில் பலர் தாக்குதல் களுக்கு உள்ளாகியுள்ளனர்.தங்களுடைய ஆதிக்கத்தை மேற்கு வங்கத்தில் எப்படியும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறி திரிணாமுல் காங்கிரசுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் இத்தகைய இழிவு நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபடும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால் மிகவும் அதிர்ச்சி தந்த விஷயம் என்னவெனில் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட அதிகாரிகளில் பலரே இத்தகு கொடு மைகளுக்கு உடந்தையாக இருந்ததேயாகும். தேர்தல் ஆணையத்தால் அமர்த்தப்பட்ட சிறப்புப் பார்வையாளர் இவ்வாறு ஊடகங் கள் தாக்கல் செய்த சாட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தல் நியாய மாக நடந்ததாகவும், தாக்கல் செய்த முறை யீடுகளுக்கு அடிப்படை எதுவுமில்லை என்றும் கூறியிருக்கிறார். கணிசமான அளவில் வாக்குச்சாவடிகளில் மோசடி நடைபெற்றிருந்தும் அவற்றில் தலையிட்டு, அவற் றைச் சரிசெய்திட இயலாத நிலையில் தேர்தல் ஆணையம் இருப்பது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும், வருந் தத்தக்கதாகவும் உள்ளது. இவ்வாறான தேர்தல் ஆணையத்தின் செயலானது, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்கு மிகவும் ஆணிவேராக இருக்கக்கூடிய தேர்தல் ஆணை யத்தின் மீதான நம்பகத்தன்மையையும், நேர்மையையுமே பாதிக்கும்.

மேற்குவங்க மக்கள் தங்களின் உரிமைகளை நிலைநிறுத்தி, திரிணா முல் காங்கிரஸ் குண்டர்களின் அச்சுறுத்தல் களுக்கும், குண்டாயிசத்திற்கும் அடுத்து நடக்கும் இரு கட்டத் தேர்தல்களின்போதும் (மேற்கு வங்கத்தில் அதிகமான இடங்களில் கடைசி இரு கட்டங்களில்தான் தேர்தல் கள் நடக்கின்றன) தக்க பதிலடி கொடுப் பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் மக்களுடன் இணைந்து நின்று ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திட உறுதியாகப் போராடும். இத்தேர்தலின் மூலம் இடது முன்னணி மீண்டும் வலுவடைந்தால், அது திரிணாமுல் காங்கிரசின் ரவுடித்தனமான ஆட்சியால் நாளுக்கு நாள் அதிகமான அளவில் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் மக்கள் அதிலிருந்து விடுபடக்கூடிய அளவில் மீண்டும் தங்கள் வெகுஜனப் போராட்டங்களை நடத்துவார்கள் என்பது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு மிக நன்கு தெரியும்.

எனவேதான், அவை இடது முன்னணியை நசுக்கிட வேண்டுமெனத் துடிக்கின்றன. தற்சமயம், பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் ஒருவர்மீது ஒருவர் பொதுக்கூட்ட மேடைகளில் வார்த்தைகளால் ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் ஆதரவுத் தளத்திற்கு முட்டுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வகுப்புவாதத் தலைவர்களை ஊட்டி வளர்த்து மேற்குவங்க மண்ணில் வகுப்புவாத அரசியலை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. பாஜக, மதவெறி போட்டி அரசியலின் மறுபக்கமாகத் திகழ்கிறது.

அது, மம்தா பானர்ஜியையும், திரிணாமுல் காங்கிரசையும் சிறுபான்மை இனத்தினருக்குத் துதி பாடுவதாக முத்திரை குத்துகிறது. இவ்வாறு விமர்சனம் செய்யும் அதே சமயத்தில் மம்தா பானர்ஜியிடம் இச்சகம் பேசவும் அது தயங்கவில்லை. நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் அணுகுமுறையும் பேச்சுக்களும் இதை நன்கு புலப்படுத்திடும். பாஜகவின் முன்னால் கூட்டணி சகாவான திரிணாமுல் காங்கிரசுக்கு அது தெரிவித்திடும் செய்தி இதுதான்: தேர்தலுக்குப்பின் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்.’’ மக்கள் தங்கள் இரு கைகளிலும் ரசகுல்லாவை வைத்துக்கொள்ள முடியும் என்று நரேந்திர மோடி பேசியிருப்பதன் பொருள் இதுதான்.

இவ்வாறு, நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதி ரான போராட்டம் என்பதும், மேற்கு வங்கத்தில் இடது முன்னணியும் ஜனநாயக சக்திகளும் மேற்கொண்டுள்ள போராட்ட மும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை களாகும். தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிப்பதும், மேற்கு வங்கத்தில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கம்யூனிச விரோத பிற்போக்கு சக்தியான திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடிப்பதும் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகும்.
-தமிழில்: ச.வீரமணி