====ச.வீரமணி===
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களின் பட்டியலை எடுத்தோமானால் அவர்களில் பலர் மிகவும் வசதிபடைத்த நிலவுடைமையாளர்கள் குடும்பங்களிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
தோழர்கள் இ.எம்.எஸ்., எம். பசவபுன்னையா, பி.சுந்தரய்யா, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் எல்லாம் வசதியுடன் வாழ்ந்தவர்கள். இவர்கள் தங்கள் வசதியான குடும்பப் பின்னணியை உதறித்தள்ளிவிட்டு, கம்யூனிஸ்ட்டுகளாக மாறி கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்கள்.
ஆனால் மிகவும் வறிய நிலையில் பிறந்து, வளர்ந்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்த தோழர்களும் உண்டு. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க தோழர் அமீர் ஹைதர்கான் ஆவார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் தோழர் அமீர் ஹைதர்கான்.
இன்றைய பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த அமீர் ஹைதர்கானின் பெற்றோர் கல்வியறிவற்ற ஏழை விவசாயிகள். அமீர் ஹைதர்கான் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார்.
பின்னர் அவரது தாயார் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். அமீர் ஹைதர்கான், தன்னுடைய மாற்றாந் தந்தையிடம் பட்ட கொடுமைகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவைகளாகும். ஆயினும் கல்வி கற்கும் தணியாத ஆவலால் அவர்வீட்டைவிட்டு வெளியேறி பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார். பம்பாயில் தெருவோரச் சிறுவர்களுடன் அவர் வசித்தபோது, அவருக்கு கப்பலில் வேலை கிடைத்தது.அவரது வாழ்க்கை அதன்பின்னர் தலைகீழாக மாறிவிட்டது.
அமீர், தொழிலாளியாக மாறி தன் ஸ்தாபனத்திறமைகளை கப்பலிலேயே வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் சில காலம் வசித்தார். தன் கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். அமெரிக்காவில் அமெரிக்கத் தொழிலாளர் கட்சியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அந்தக் கட்சி அவரை முழுமையான மார்க்சிய, லெனினியக் கல்வி பயில்வதற்காக மாஸ்கோவிலிருந்த கீழைத் தொழிலாளர்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தது.
அங்கே கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த தோழர்கள் அவரை நுட்பமாக விசாரணை செய்துவிட்டு, கம்யூனிஸ்ட் அகிலத்திற்குள் அனுமதித்தனர். அவர் பெயரையும் சகாரோவ் என்று மாற்றினார்கள்.
தோழர் அமீர் ஹைதர்கான் ரஷ்யாவில் இருந்த சமயங்களில் கம்யூனிஸ்ட் அகிலத் தலைவர்களிடம் தாங்கள் சீனத்தில் கட்சியைக் கட்டி எழுப்புவதற்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு அதற்கு இணையாக இருக்கின்ற இந்தியாவிற்கு ஏன் உதவி செய்வதில்லை என்று சண்டை போட்டிருக்கிறார்.
அவ்வாறு சண்டை போட்டபோதுதான் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்திற்கு உதவுவது போலவே இந்தியாவிற்கும் எம்.என்.ராய் மூலமாக உதவி வந்திருக்கிறது என்பதையும், ஆனால் அந்த உதவிகள் சரியான விதத்தில் சரியான தலைவர்களிடம் இந்தியாவிற்கு வந்து சேரவில்லை என்பதையும் அவர் உணர்ந்தார். இதன் பின்னர் அவரையே சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1920இல் தாஷ்கண்டில் அமைக்கப்பட்டிருந்தது; அதில் எம்.என்.ராய், பிரோசுதின் மன்சூர், அக்பர்கான் மற்றும் சிலர் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற விவரம் அமீர் ஹைதர்கானுக்கும், அவரது சகாக்களுக்கும் கூறப்பட்டது. இந்தக் கட்சியை லெனினும் ஸ்டாலினும் அங்கீகரித்தனர்.
பின்னர் அமீர் ஹைதர்கானுக்கு அங்கே ஆயுதப்பயிற்சி மூன்று மாதங்களுக்கு அளிக்கப்பட்டது. இது அமீருக்கு புதிய உற்சாகத்தை அளித்தது. இந்திய விடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தில் இணைய விரும்பினார்.
அமீர், மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அலுவலகத்துக்குச் சென்று அங்கு இந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த லொஹானி என்பவரைச் சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். லொஹானியை எம்.என்.ராய் கொண்டு வந்திருந்தார். ஆனால் லொஹானி, அமீர் ஹைதர்கானை சந்திக்கவே இல்லை. ஏதாவது நொண்டிச்சாக்கைக் கூறி தவிர்த்துவந்தார். இதனால் அமீர்ஹைதர்கான் அவரை சந்திக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார்.
1927இல் நவம்பர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வந்திருந்தனர். இந்தியாவிலிருந்து மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடுவின் இளைய சகோதரி சுஹாசினி வந்திருந்தார்கள். சுஹாசினி பல்கலைக் கழகத்தில் மாணவராகச் சேர்க்கப்பட்டு அமீர் ஹைதர்கானுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1927 இறுதியில் அமீர் ஹைதர்கான் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.
பின்னர் அமீர் ஹைதர்கான் செஞ்சேனையின் மூத்த அதிகாரி ஒருவரின் தலைமையில் சில தொழிற்சாலைகள், அருங்காட்சியகங்கள், கிரெம்ளின், லெனின்கிராட் ஆகிய இடங்களுக்குப் பயணமாகச் சென்றனர். புரட்சிப் படைகள், புரட்சியை வழிநடத்திய ஸ்மோல்னிக் கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
குளிர்கால அரண்மனைக்கும், புரட்சியின் முதல் குண்டை வெடித்த கப்பலான அரோராவுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். புரட்சிக்கு முன் புரட்சியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த பாதாளச் சிறைகளுக்கும் அவர்கள் சென்றனர்.
பல்கலைக் கழகத்தில் அமீர் ஹைதர்கானின் கல்வி முடிந்திருந்தது. சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்கிய பிறகு எம்.என்.ராய் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவி காலியாக இருந்தது. அந்தப் பொறுப்பை தற்காலிகமாக தோழர் பெட்ரோவ்ஸ்கி பார்த்து வந்தார்.
இப்போதைய கேள்வி அமீர் ஹைதர்கான் எங்கு செல்ல வேண்டும் என்பதாகும். அமீர் ஹைதர்கான், பெட்ரோவ்ஸ்கியிடம் ‘நான் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புகிறேன்’ என்றார். மகிழ்ச்சியடைந்த பெட்ரோவ்ஸ்கி, ‘இந்தியாவில், முறையான கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. நீங்கள் அங்கு கடினமாக உழைக்க வேண்டும்.
பிரிட்டிஷ் உளவு அமைப்பிடம் வலைப் பின்னல் உள்ளது. உலகம் முழுதும் எல்லா மூலைகளிலும் அது இருக்கிறது. அவர்களது கடற்படையும் மிக வலிமையாக உள்ளது. உலகின் பெரும்பாலான துறைமுகங்களில் அவர்களது கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. நீங்கள் இந்தியாவில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று கூறி அமீர் ஹைதர்கான் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறு அந்தக் காலத்தில் சர்வ தேச அளவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்துவந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவாக அன்றைய தினம் செயல்பட்டுவந்த கோமின்டர்ன் (comintern) என்னும் ‘கம்யூனிஸ்ட் அகிலத்’தால், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி எழுப்புமாறு அனுப்பிவைக்கப்பட்ட தோழர்தான் அமீர் ஹைதர்கான்.
அவர் இந்தியா வந்தபிறகும் அவரால் அவ்வளவு எளிதாக இங்கே செயல்படமுடியவில்லை, செயல்படவிடவில்லை. அவற்றைத் தோழர்கள் விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், ‘அமீர் ஹைதர்கான் – காவியம் படைத்த கம்யூனிஸ்ட்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை படிக்க வேண்டும்.
தோழர் அமீர் ஹைதர்கானிடம் அவரது வாழ்க்கை வரலாற்றை நேரிடையாகக் கேட்டுப் பெற்ற டாக்டர் அயூப் மிர்சா என்பவர் உருதுமொழியில் எழுதிய வரலாற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த தோழர் முகமது அமீன் மிகச் சிறப்பாகச் சுருக்கி ஆங்கிலத்தில் அளித்திருந்த புத்தகமாகும்.
அதை, தோழர் கி.ரமேஷ், மிக அற்புதமாகத் தமிழாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.தோழர் அமீர்ஹைதர்கான் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு தோழரும் அவசியம் அறிந்துகொள்வது புரட்சிகரப் பணிகளில் ஈடுபடும் தோழர்களுக்கு உத்வேகத்தை அளித்திடும்.
No comments:
Post a Comment