Showing posts with label Sitaram Yechuri. Show all posts
Showing posts with label Sitaram Yechuri. Show all posts

Thursday, March 21, 2019

2019 பொதுத் தேர்தல்கள்: பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்கவேண்டியதன் அவசியம்




சீத்தாராம் யெச்சூரி

நாடு, 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் போர்க்களத்திற்குள் இறங்கி இருக்கிறது. ஆட்சியிலுள்ள கட்சியானது, தாங்கள் கூறிய உறுதிமொழிகளை கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றியுள்ளனவா என்று மக்களால் ஆராய்ந்துபார்க்கப்பட்டு நீதி வழங்கும் வழக்கமான ஒரு தேர்தல் இது அல்ல. பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு இழைத்த துரோகங்கள்தான் தேர்தலின்போது முன்நிற்கும். ஆனால் இது அப்படிப்பட்ட ஒரு தேர்தல் மட்டும் அல்ல.
எனினும், இந்தத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏன் அவ்வாறு நாம் கூறுகிறோம்? ஏனென்றால், இதன் முடிவில், நம் அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் எதிர்காலம் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. நாட்டின் எதிர்காலமும் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின்கீழ் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து அரசமைப்புச்சட்ட அமைப்புகள் மற்றும் அதிகாரக்குழுமங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன.
மத்திய பாஜக ஆட்சி, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் அம்சங்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்திய வாக்காளர்கள் முன் உள்ள பிரதானமான பணி, இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதை உறுதிப்படுத்துவதும், இதற்கு மாற்றாக நம் அரசமைப்புச்சட்டத்தின் குடியரசைப் பாதுகாத்திடக்கூடிய விதத்தில் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசாங்கத்தை நிறுவுவதும், அதன்பின்னர், அதனை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் முன்னேறுவதுமாகும். எனினும், இதற்கு, மோடி அரசாங்கத்தால் தற்போது பின்பற்றப்பட்டுவரும் கொள்கைத் திசைவழியை  மக்களுக்கு ஆதரவான விதத்தில் மாற்றியமைக்கக்கூடியதோர் அரசாங்கமாக மாற்றி அமைத்திட வேண்டும். இதற்கு, 17ஆவது மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் எண்ணிக்கை வலுவானவகையில் அமைந்திட வேண்டியது அவசியம்.    
கடந்த ஐந்தாண்டுகளில், பாஜகவின் ஆட்சியில், நம் அரசமைப்புச் சட்டத்தின் நான்கு அடிப்படைத் தூண்களும், அதாவது மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதாரத்தில் தன்னிறைவு, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய நான்கும், திட்டமிட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன.
மதச்சார்பற்ற ஜனநாயகம்
பாஜகவின் ஆட்சியில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. மக்கள் மத்தியில் மதவெறி மிகவும் அஞ்சத்தக்கவிதத்தில் விசிறிவிடப்பட்டது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட தனியார் ராணுவங்கள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், அறநெறிப் போலீஸ் என்ற பெயரிலும், தலித்துகள் மீதும் முஸ்லீம்கள் மீதும் குறி வைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன.  மதவெறி அடிப்படையிலான இவர்களது இத்தகைய நடவடிக்கைகள், நாடு முழுதுமே ஒரு விதமான வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும் சூழலை  உருவாக்கி இருக்கின்றன.  நம் மக்கள் மத்தியில் இதுகாறும் நிலவிவந்த சமூக நல்லிணக்க நடைமுறையையே கடுமையாக ஒழித்துக்கட்டக்கூடிய அளவிற்கு நாட்டில் இயங்கும் பல்வேறு பொதுவெளிகள் மதவெறி நஞ்சுக்கு இரையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அனைத்துக் கல்வி நிறுவனங்களும் காவிமயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நம் கல்வி அமைப்புமுறையே காவிமயத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் காவிமயத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று, நாட்டிலுள்ள அனைத்துக் கலாச்சார மையங்களும், கல்வி மையங்களும் கல்வித்தகுதியே இல்லாத அல்லது பெயரளவில் கல்வித்தகுதி பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் பேர்வழிகளால் நிரப்பப்பட்டு வருகின்றன. வளமான மதச்சார்பற்ற சமரசஞ்சார்ந்த இந்திய வரலாற்றை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்து புராணங்களில் கூறப்படும் கட்டுக்கதைகளையே வரலாறாகத் திணிப்பதற்கான முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைப்போன்றே வளமான இந்திய தத்துவவியல் பாரம்பர்யத்தையும், இந்து இறையியல் தத்துவத்திற்குள் திணிப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் வரையறுத்துள்ள ஒரு வெறிபிடித்த  சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கு வழிவகை ஏற்படுத்தும் விதத்தில் இவையனைத்தையும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவையனைத்தும் நம் இந்தியக் குடியரசின் அடிப்படைகளையே தகர்த்தெறிந்துவிடும். மதச் சிறுபான்மையினர் மற்றும் இதர சிறுபான்மையினர் மத்தியில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திடும். அவர்களின் வாழ்வாதாரங்கள் மீதும் மிகவும் நாணங்கெட்டவிதத்தில் தாக்குதல்களை அதிகரித்திடும். ஒட்டுமொத்தத்தில் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்குமே கடும் ஆபத்தினை விளைவித்திடும்.
இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகக் கருதப்பட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. பாதுகாப்பைப் பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை வெட்டிச் சுருக்குவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அந்தரங்கத்தின் மீதான அடிப்படை உரிமைகள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் மக்களின் இதர பிரிவினரும் தங்கள் கோரிக்கைகளுக்காக அணிதிரள்வதற்கான உரிமைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும்,  சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சில தாக்குதல்களாகும்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு
பொருளாதாரத்தில் தன்னிறைவு என்பதைப் பொறுத்தவரையில், மோடி அரசாங்கமானது இந்தியாவை இந்தக் குறிக்கோளை எய்துவதிலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் விலக்கிக் கொண்டு சென்றுவிட்டது. இந்த அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில், சர்வதேச மூலதனம் மற்றும் உள்நாட்டுப் பெரு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்துதரும் விதத்தில் நம் பொருளாதாரத்தின் கதவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி என்னும் இரட்டைத் தாக்குதல்கள் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் நாசத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டில் பொருளாதார மந்த நிலை உருவாகவும் இட்டுச் சென்றது. கடந்த ஐந்தாண்டுகளில், பதிவுசெய்யப்பட்டுள்ள, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி, அரசாங்கத்தின் தரப்பில் இது தொடர்பான தரவுகளின்மீது பல்வேறு தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதன்பின்னர் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் கூட, இப்போதுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது கடந்த பல ஆண்டுகளில் மிகவும் மோசமான ஒன்று என்றே காட்டியுள்ளது.  வேலையின்மை கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருந்த கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் நாசப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விவசாய நெருக்கடி மேலும் ஆழமாகத் தொடர்வதன் காரணமாக, விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.  விவசாய விளைபொருள்களுக்கு, உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என்கிற உறுதிமொழிக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதன் மூலம் விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தைப் படிப்படியாக அழித்துக்கொண்டிருப்பதன் மூலம் கிராமப்புற மக்களுக்கான வேலைகள் பறிக்கப்பட்டு, நாட்டுப்புற மக்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத நிலைமையாகும். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மந்த நிலைமையுடன், அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வுகளும், நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களை வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளியிருக்கிறது.
நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றியதும், பொருளாதாரத்தை நாசப்படுத்தியதும் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வை  அதிகரித்திடவும் இட்டுச்சென்றுள்ளன. நாட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் செல்வத்தில் 73 சதவீதம் மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருக்கின்ற செல்வந்தர்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது.
மோடியின் தன்னிறைவு
பிரதமர் மோடி தன்னிறைவு என்பதற்கு புதியதொரு விளக்கத்தினைத் தந்துகொண்டிருக்கிறார். தன்னிறைவு என்பதை அவர் தானும் தான் சார்ந்திருப்பவர்களும் என்கிற விதத்தில் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறார். (Self-reliance means self and reliance.) இவரது அரசாங்கத்தின்கீழ் இவர்கள்  ஊட்டி வளர்த்திடும் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. தங்களுக்கு வேண்டிய கூட்டுக்களவாணி முதலாளிகள் நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை வங்கிகளில் மக்கள் சேமித்துவைத்திருந்த தொகைகளையும் மிகப்பெரிய அளவில் சூறையாடிவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.  இவ்வாறு இவர்கள் வங்கிகளில் கடன்பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாத தொகை என்பது சுமார் 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. மோடிக்கு மிகவும் வேண்டிய கார்ப்பரேட்டுகள் நாட்டில் நடைபெற்றுள்ள ரபேல் ஊழல் போன்று பல ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். 
இவ்வாறு தாங்கள் உதவிடும் கூட்டுக் களவாணி முதலாளிகள் யார் என்று மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது என்பதற்காகவே, மோடி அரசாங்கம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக புதிய சட்டங்களையே இயற்றியிருக்கிறது. இதில், தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவது என்பதும் ஒன்றாகும். இச்சட்டத்தின் மூலம் வங்கிகளில் தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் யார், எந்தக் கட்சிக்கு அவர்கள் அவற்றைத் தருகிறார்கள் என்று மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ரகசியத்தைக் கொண்டுவந்திருப்பதன் மூலமாக, மோடி அரசாங்கம், தங்களுக்கு உதவிடும் கூட்டுக்களவாணிகள் யார் என்பதை மக்களிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நம்புகிறது. இருந்தாலும்கூட, நாட்டில் வெளியாகியிருக்கின்ற தேர்தல் பத்திரங்களில் 95 சதவீதம் பாஜகவிற்குத்தான் சென்றிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  இவ்வாறு மோடி அரசாங்கமானது அரசியலில் ஊழலை சட்டபூர்வமாகவே மேற்கொண்டுவருகிறது.
கூட்டாட்சித் தத்துவம்
நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் ஆணிவேர், கூட்டாட்சித் தத்துவமாகும். இது, தற்போது கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி சலுகைகளை வாரி வழங்குவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் பகைமையுடன் நடந்துகொள்வதன்மூலமாக மத்திய மாநில உறவுகள் சீர்கேடடைந்து வருவதுடன், திட்டக் கமிஷனை ஒழித்துக்கட்டியதன் மூலமாக மாநில அரசுகள் தங்கள் திட்டச் செலவினங்கள் தொடர்பான பிரச்சனைகளை எடுத்துச் சென்று அவற்றைத் தீர்ப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டன.  இப்போது மாநில அரசுகள், மத்திய அரசின் கருணையால் வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. தேசியப் பேரிடர் அல்லது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகப் பிரத்யேகமான திட்டங்கள் எதையாவது கொண்டுவந்தால் அவற்றுக்காக மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. தேசிய வளர்ச்சிக் கவுன்சில் முற்றிலுமாக செயல்படவில்லை. இதன் காரணமாக மாநில அரசுகள் தங்கள் தேவைகளைச் சொல்லி, தங்களுக்குத் தேவையான நிதியைப் பெறக்கூடியவிதத்தில் செயல்பட்டு வந்த ஓர் அமைப்பு இல்லாமல் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது.
ஜிஎஸ்டி அமைப்பு முறையானது, மாநில அரசுகளுக்கு இருந்த வருவாய் ஈட்டும் வழிமுறைகளைப் பறித்துவிட்டது.  தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் முறையானது, மாநில அரசுகள் தங்கள் வருவாயில் கணிசமான அளவிற்கு இழப்பினைச் சந்திப்பதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன்மூலம் மாநில அரசுகள் தாங்கள் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பதில் சிரமப்படுகின்றன.
ஒட்டுமொத்தத்தில், பாஜக அரசாங்கமானது, அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்திற்குக் கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, பாசிச சித்தாந்த முறையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலுக்கு மிகவும் சரியாகப் பொருந்துகிறது.
சமூக நீதி
நம் அரசமைப்புச் சட்டம், மக்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நீதி வழங்குவதை உத்தரவாதம் செய்கிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் இம்மூன்று முனைகளிலும் மக்களுக்கு பெரிய அளவில் அநீதி இழைக்கப்பட்டு வந்ததைப் பார்த்தோம். தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு,  கொல்லப்பட்டுள்ளார்கள். வன உரிமைச் சட்டத்தின்கீழ் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அதேபோன்றே சமூகநீதியை உத்தரவாதப்படுத்தும் முறையில் கொண்டுவரப்பட்டிருந்த தலித்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைச்)சட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களில் தலித்/பழங்குடியினர் நியமனம் செய்யப்படும் பட்டியல் முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கின்றன.  தங்கள் உரிமைகளைப் பாதுகாத்திட தலித்துகள் போராட முன்வரும்போது, அவர்கள் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் செயல்படும் தனியார் ராணுவங்கள் அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல்களை ஏவுகின்றன. பாஜக அரசாங்கங்கள், தலித்துகளைத் தாக்கும் கயவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதையும், தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்மீதே பொய் வழக்குகள் போடுவதையும் மேற்கொண்டு வருகின்றன.
மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்களின் மீதான தாக்குதல்களும் மிக அதிகமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல்ரீதியான தாக்குதல்களும் மிகவும்  அதிகரித்திருக்கின்றன. மிகவும் கொடூரமான கூட்டு வன்புணர்வுக் குற்றங்களும், இளம்பெண்கள் கொல்லப்படுவதும், இளஞ்சிறுமிகள் கூட கொல்லப்படுவதும் எந்த அளவிற்கு நம் சமூகம் மனிதாபிமானமற்ற ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற இழி செயல்கள் நம் சமூகத்தில் முன்னெப்போதும் நடந்ததில்லை.
அதிகரித்துவரும் போராட்டங்கள்
மோடி அரசாங்கம் மற்றும் அதனுடைய கொள்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவருவதை சமீப ஆண்டுகளில் பார்க்கிறோம். தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பெரிய அளவிலான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.  நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் போர்ப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினர், தங்கள் வாழ்வாதாரங்கள்மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காத்திடும் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்தும் போராடுவதற்காக ஒரே பதாகையின்கீழ் ஒன்றிணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகரித்துவரும் போராட்டங்களை சீர்குலைத்திட, ஒன்றுபட்டு நிற்கும் மக்களை திசைதிருப்பிட, மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிடவும் மற்றும் மக்களின் உணர்ச்சியைக் கிளப்பும்விதத்தில் பிரச்சனைகளை உருவாக்கவும் மோடி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு
கடந்த ஐந்தாண்டுகளில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் அம்மாநில மக்களை மேலும் தனிமைப்படுத்தக்கூடிய அளவிற்கு கொண்டுசென்றுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள் படிப்படியாக அதிகரித்திருக்கின்றன. 2009-க்கும் 2014-க்கும் இடையே 109 பயங்கரவாதத் தாக்குதல்களாக இருந்தது, 2014-க்கும் 2019க்கும் இடையே 626ஆக அதிகரித்திருக்கின்றன. அதேபோன்று உயிரிழந்த பாதுகாப்புப்படையினரின் எண்ணிக்கையும் 139இலிருந்து 483ஆக உயர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் கொல்லப்பட்டது 12இலிருந்து 210ஆக உயர்ந்திருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் என்பவையும் 563இலிருந்து 5596ஆக அதிகரித்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் கொள்கையின் விளைவாக காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவது என்பது 2014இல் 16 ஆக இருந்தது, 2018இல் 198ஆக உயர்ந்திருக்கிறது.   ‘காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் அனைத்துத்தரப்பு இயக்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் அதன்மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ என்று காஷ்மீர் மக்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு, மோடி அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இதன் கொள்கை கடிகாரத்தின் பெண்டுலம் போன்று இங்குமங்கும் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துல்லியத் தாக்குதல் இத்தகைய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் எனக் கூறப்பட்டது. ஆயினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 44 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டார்கள். இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானில் பாலக்கோட்டில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். எனினும் பயங்காவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவத்தினர் பலர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நின்று உறுதியுடன் குரல் கொடுக்கிறது. எனினும், மோடி அரசாங்கமும் பாஜகவும் இப்பிரச்சனையை, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தினை விளைவித்திடும் என்பதுபோல், அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  
கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் சந்தித்த எண்ணற்ற பிரச்சனைகளுக்கு மோடி அரசாங்கமும் பாஜகவும்தான் காரணம் என்று முடிவு செய்துள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மோடியும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்த அரசாங்கத்தையும், தங்கள் வாழ்வாதாரங்களை நாசப்படுத்தியுள்ள இதன்பின் நிற்கின்ற சக்திகளையும்  தூக்கி எறிந்திட மக்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.  தங்களுக்கு எதிராக மக்களிடம் கொழுந்துவிட்டெரிகின்ற கோபாவேசத்தைத் திசைதிருப்புவதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மக்கள் மத்தியில் மதவெறியையும், போர் வெறியையும் தூண்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  இத்தகைய இவர்களின் இழி முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இத்தகைய சக்திகள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிட்டால், இப்போதிருக்கும் அரசமைப்புச்சட்டம் நீடிக்குமா என்பதே சந்தேகமாகும்.
இப்போது மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுபவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாக்ஷி மகராஜ், 2019இல் நடைபெறும் தேர்தல்தான் இந்தியாவில் நடைபெறும் கடைசித் தேர்தல் என்று கூறியிருக்கிறார். இதனை பிரதமரோ அலலது பாஜகவோ மறுதலித்திடவில்லை. மக்கள் இவ்வாறு இவர்களால் விடப்பட்டுள்ள எச்சரிக்கையை சரியாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இத்தகைய இழிசக்திகளை தேர்தலில் தோற்கடித்திடவும், மக்கள் நலனைப் பிரதிபலிக்கக்கூடியதான, இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கக்கூடியதான திசைவழியில் செல்லக்கூடியதான,  சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடியதான மாற்று அரசாங்கத்தை அமைத்திடத் தங்களை ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
வரவிருக்கும் தேர்தலில் இந்தக் குறிக்கோள்களை எய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் உறுதிபூண்டுள்ளன.
(தமிழில்: ச. வீரமணி)




Friday, January 4, 2019

பிரதமர் மோடி, வெளிப்படுத்தியதைவிட மறைத்ததே அதிகம் -சீத்தாராம் யெச்சூரி பிர



தமம் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் ஒரு ஜோடிக்கப்பட்ட நேர்காணலை வெளியிட்டிருப்பதன் மூலமாக தன் பசப்பு வார்த்தைகளை அரங்கேற்றத் தொடங்கிவிட்டார். 2018ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஓர் ஒளிமிகுந்த ஆண்டாக இருந்ததாக அவர் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதே போன்று இந்தியா ஒளிர்கி
றது என்று வாஜ்பாயி தம்பட்டம் அடித்தபின் 2004இல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன என்பதை அனைவரும் அறிவோம். பிரதமர் மோடியும் இவ்வாறு ‘சுவரில் எழுதியிருந்ததைப்’ படித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த நேர்காணலில், பிரதமர் தானோ அல்லது தங்களுடைய பாஜக கட்சியோ 2014இல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்தோ மற்றும் அதில் ஒன்றைக்கூட இதுவரையிலும் ஏன் நிறைவேற்ற வில்லை என்பது குறித்தோ எதுவும் குறிப்பிடவே இல்லை. இதுதான் பின்-உண்மை (post-truth) என்கிற பிரச்சார உத்தியாகும். இதுபோன்ற பிரச்சார உத்தியின்போது, மக்கள் மத்தியில் பொய்த்தகவல்களை அவர்கள் நம்பக்கூடிய விதத்தில், மிகப்பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்படும்.
விவசாயக் கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு ஒரு தடவை விவசாயக் கடன் தள்ளுபடி என்று கோருவதை, லொல்லிபாப்” (“lollipop”) என்று மிகவும் தடித்தனமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் பிரதமர் குறிப்பிட்டார். கடன் தள்ளுபடிக்கான இந்தக் கோரிக்கை கடன் சுமைகளால் நசுங்கிக் கொண்டிருக்கின்ற விவசாயிகள், நாடு முழுதும் மிகவும் விரிவான  அளவில் போராட்டங்களை நடத்தியதன் விளைவாகவே உருவாகியிருந்தது. விவசாய நெருக்கடி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது மிகவும் அபாயகரமான முறையில் அதிகரித்திருக்கிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான மரணங்களைத் தடுப்பதற்கு, ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்வதன் மூலம், நமக்கு அன்னமிடும் உழவர்களைப் பாதுகாத்திட ஓரளவிற்கு உதவிடும். நாடு முழுதும் மிகவும் விரிவான அளவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் மற்றுமொரு முக்கியமான கோரிக்கை எழுப்பப்பட்டது. அது என்னவெனில், 2014இல் பிரதமர் அளித்திட்ட வாக்குறுதியின்படி, விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை, உற்பத்திச்செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும்  என்பதாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இதனை இவர்கள் செய்திடவில்லை. விவசாய நெருக்கடி இந்த அளவிற்கு ஆழமாகியிருப்பதற்கு, ஆட்சியாளர்கள் கிராமப்புற மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்திருப்பதே நேரடியான காரணமாகும். இது, விவசாயம் அல்லாத பிரிவுகளில் உள்ள கிராமப்புற மக்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனை அவர்களுக்குக் கிடைத்துவந்த வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதிலிருந்து நன்கு அறிய முடியும்.
பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு என்னும் சுனாமி இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக நாசப்படுத்திய ஒட்டுமொத்த அனுபவத்திற்கு எதிராக, பிரதமர் அதனை மாபெரும் வெற்றி என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் அதிசயமானவிதத்தில், இவ்வாறு பணமதிப்பிழப்பு காரணமாகத்தான் கறுப்புப்பணம் முழுவதும் வங்கி அமைப்புமுறைக்கு வந்துவிட்டது என்றும் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதைவிட மாபெரும் பொய்ப்பித்தலாட்டம் வேறெதுவும் இருக்க முடியாது. பிரதமரின் பணமதிப்பிழப்பு உத்தரவின்மூலமாக, கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுவந்த முதலைகள் எல்லாம், அவர்களின் ‘கறுப்புப்பணம்’ முழுவதையும் ‘வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு வகை செய்து தந்திருக்கிறார். இவ்வாறு, சட்டத்தை மீறி கறுப்புப்பணத்தை வைத்திருந்தவர்களை, சட்டரீதியாக வைத்துக்கொள்வதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கிறார்.
இவ்வாறு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, நம் நாட்டில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்த சாமானிய மக்களாகும். நாட்டில் விவசாயத்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் வேலையினை அளித்துவந்த முறைசாராத் தொழில்கள் அடியோடு அழிக்கப்பட்டன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கணிசமான அளவில் பங்களிப்பினைச் செய்து வந்தது முறைசாராத் தொழில்கள்தான். பணமதிப்பிழப்பு இதில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்துவிட்டது. ஏனெனில் இவர்கள் அனைவரும் ரொக்கப் பரிவர்த்தனைகளுடன்தான் தங்கள் இயல்புவாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி  அடைந்ததற்கும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே பிரதான காரணமாகும்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் நள்ளிரவு சிறப்புக் கூட்டத்தொடரை பிரதமர் நடத்தினார்.  இதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் புரட்சிகரமானதாக மாறும் என்றும், வரி வசூலிப்பதன் மூலமாக வருவாய் பெருகும் என்றும் கூறினார். வரி விதிப்பு வலை விரிவாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆனாலும் நிலைமை என்ன? மக்கள் தாக்கல் செய்திடும் அறிக்கைகள் (returns) அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் வரி வசூல் மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2019 ஏப்ரலுக்கும் டிசம்பருக்கும் இடையில், ஜிஎஸ்டி வசூல் என்பது சராசரியாக மாதத்திற்கு 96,800 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்திருக்கிறது. இது பட்ஜெட் குறியீடான மாதத்திற்கு 1,06,300 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதைவிடக் குறைவேயாகும். அடுத்த மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் சராசரியாக 1,34,900 கோடி ரூபாயாக இருந்திட வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் குறியீட்டை எட்டிட முடியும்.
பிரதமர் தன்னுடைய நேர்காணலில் ஜிஎஸ்டியையும் புகழ்ந்துதள்ளியிருக்கிறார். இது வரி வசூல் முறையை எளிதாக்கிவிட்டது என்றும், மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிவாரணம் அளித்திருக்கிறது என்றும் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமானதாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தத் தொடங்கியபின்னர், நாட்டின் நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில்பிரிவுகள் முடங்கிவிட்டன. நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பினை அளித்து வந்தவை இந்த நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகளாகும்.  கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டனர். மேலும் பிரதமர் நாட்டில் ஐநூறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர்கூறியிருக்கும் 500 பொருள்களில் 490 பொருள்களுக்கும் அதிகமானவற்றிற்கு எப்போதுமே வரி கிடையாது. எனவே இவ்வாறு இவர் பீற்றிக்கொண்டிருப்பதும் அபத்தமான ஒன்றேயாகும்.
வேலையில்லாத் திண்டாட்டம்
நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் கூறவில்லை. ஒவ்வோராண்டும் இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இந்தப் பிரதமர்தான் இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகளுக்கு இவ்வாறு பத்து கோடி  பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகள் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறாதது மட்டுமல்ல, பெரிய அளவில் ஆலைகள் மூடல், முறைசாராத் தொழில்கள் அழிக்கப்பட்டமை, நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகள் நாசம் செய்யப்பட்டமை – இவை அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மையை உருவாக்கி இருக்கின்றன. கடந்த இருபதாண்டுகளில் இப்போதிருக்கக்கூடிய அளவிற்கு வேலையின்மைக் கொடுமை முன்னெப்போதும் இருந்ததில்லை என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இவற்றின்காரணமாக வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான தொழிலாளர்நல பீரோவின் ஆண்டறிக்கைகளும் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டன. ஏனெனில் அவை நாட்டிலுள்ள மிகவும் மோசமான எதார்த்த நிலைமைகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் என்பதால் இவ்வாறு வெளியிடுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.
நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களின் எதிர்காலம், பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. இந்த இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்கால சிற்பிகள். இவர்களின் வீர்யத்தை இவ்வாறு அழித்திருப்பது என்பது நம் நாட்டின் எதிர்காலத்தையே ஆட்சியாளர்கள் நாசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே பொருளாகும்.
கூட்டுக் களவாணி முதலாளித்துவம்
பிரதமரின் நேர்காணலில், பாஜகவின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்டிருப்பது குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை.  2014க்கும் 2019க்கும் இடையே கார்ப்பரேட்டுகள் வங்கிகளிடம் வாங்கிய கடன் நான்கு மடங்காக அதிகரித்தது. கடன்களை வாங்கியபின் நாட்டைவிட்டே பறந்தோடிவிட்டார்கள். அவர்கள் தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுக்கின்றனர். அவற்றை அவர்களிடம் இருந்து திரும்பப் பெறுவோம் என்று பிரதமர் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். ஆனால், இன்றுவரையில், எவரும் நம் நாட்டிற்குத் திரும்பிடவில்லை. அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தும், அவர்கள் பெற்ற கடன்களை மீளவும் வங்கிகளில் திருப்பிச் செலுத்தவும் நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கமானது அவர்களின் கடன்களை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டு வந்திருக்கிறது. மேலும் கூடுதலாக, அவ்வாறு தாங்கள் கடன்களைப் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாது தள்ளாடிக்கொண்டிருக்கும் வங்கிகளை, ஏலம் விடுவதன் மூலமாக, அதிக அளவில் ஏலத்தொகையைக் கூறுபவர்களிடம் கொடுத்திடும் வகையில், அவர்களிடமே ஒப்படைப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. இது ‘முடிவெட்டும் கொள்கை’ (‘hair cut’ policy) என்று அழைக்கப்படுகிறது. இதனைப் பின்பற்றிட வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை அரசாங்கம் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு வங்கிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிட இருக்கும் கார்ப்பரேட்டுகள் யார்?  இதில் பிரதானமாகப் பயனடையப்போவது பிரதமரும் அவருடைய கூட்டுக்களவாணி முதலாளிகளும்தான்.
இவ்வாறு கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த வங்கிகளின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இவற்றுக்கு மறுமூலதனம் அளித்திட, பொதுப் பணம் மீண்டும் இதற்குள் புகுத்தப்படுகிறது. இவ்வாறு உட்புகுத்தப்படும் பணம் மீளவும் சூறையாடப்படும். முதலாவதாக, வங்கிகளில் கோடிக்கணக்கான இந்தியர்களால் சேமிப்பாக போடப்பட்டிருந்த பணம், கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்பட்டன. பின்னர் இதனைச் சரிசெய்கிறோம் என்ற பெயரில் இவ்வங்கிகளில் மீளவும் மக்களின் பொதுப்பணம் செலுத்தப்படுகிறது.
ரபேல் ஊழல்
மிகவும் சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தத்திற்கு வக்காலத்து வாங்கும் விதத்தில், பிரதமர், இந்த ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றமே தெளிவாக்கிவிட்டது என்றும், எனவே இதில் ஊழல் என்ற பிரச்சனைக்கே இடமில்லை என்றும் கூறியிருக்கிறார்.  இது மிகவும் சுத்தமான ஒப்பந்தம் என்றும் இதில் இடைத்தரகர்கள் எவரும் கமிஷன் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதில் யார் பணம் பெற்றது என்று இப்போது வெளியே தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் பிரதமரும், அவருடைய அரசாங்கமும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து, தேர்தல் பத்திரங்களைஅறிமுகப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பத்திரங்களை எவர் வேண்டுமானாலும் வங்கியிலிருந்து வாங்கிக்கொள்ள முடியும், பின்னர் அவர்கள் ஓர் அரசியல் கட்சிக்கு அதனை அளித்திட முடியும், அந்த அரசியல் கட்சி அதனைக் காசாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு தங்களுக்கு இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் கொடுத்தது என்று அந்த அரசியல் கட்சிகள் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு பிரதமரும், பாஜக அரசாங்கமும் அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டனர். இந்த ரபேல் ஊழலில் மிகவும் ஆதாயம் அடைந்திருப்பது பாஜக என்பது வெளிப்படையாகவே நன்கு தெரிகிறது. எப்படியெனில், தேர்தல் பத்திரங்கள் வங்கிகள் மூலமாக இதுவரை மொத்தம் 222 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 210 கோடி ரூபாய்க்கும் அதிகமான பத்திரங்களை, அதாவது மொத்த பத்திரங்களில் 94.5 சதவீதத்தை, பாஜக-தான் பெற்றிருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பது உண்மையானால், பின் ஏன் பிரதமர் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு, ஒரு கூட்டு நாடாளுமன்றக்குழு அமைத்திட மறுக்கிறார்? கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பிரதமரும், பாஜகவும் வலுவாக எதிர்ப்பதிலிருந்தே, நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் கூறமுடியாதவிதத்தில் இதன் பின் ஏதோ ஒளிந்திருக்கிறது என்பது புலனாகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆறேழு மாதங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திட, தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தார் என்று பிரதமர் இப்போது கூறியிருக்கிறார்.   முன்னாள் ஆளுநர் வெளியேறிய பின்னர், இப்போது வந்திருக்கும் ஆளுநர் பிரதமரால் பொறுக்கி எடுக்கப்பட்ட நபர் என்பது உறுதியாகியிருக்கிறது.    ரகுராம் ராஜனும் பிரதமருக்கு வேண்டியவர்தான். எனினும், இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும்  நாட்டின் நிதி அமைப்புமுறையை முறைப்படுத்தும் ஒரு நிறுவனம் என்பதையும் அழித்து ஒழித்திட அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அவரை அப்பதவியில் நீடித்திருப்பதற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
பிரதமரும், அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கின்ற மத்திய ரிசர்வ் நிதி மீது குறியாக இருக்கின்றன. அதிலிருந்து பெரும் பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரி வருவாய்கள் வீழ்ச்சியடைந்திருக்கக்கூடிய நிலையில் இது அவசியம் என்று அரசாங்கம் கருதுகிறது. ஜிஎஸ்டிக்குப் பின்னர், ஆண்டு பட்ஜெட் நிதி பற்றாக்குறை குறியீடு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஏற்கனவே அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, வங்கிகளை மீளவும் முழுமையாகச் செயல்பட வைத்திட அவற்றிற்கு மறுமூலதனம் அளித்திட வேண்டியதும் அவசியமாகும். இதற்கும் அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. இவ்விரண்டு காரணங்களுக்காகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் நிதியை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வாறு செய்யப்பட்டால் அது இந்திய ரிசர்வ் வங்கியைக் கடுமையாகப் பாதித்திடும், நம் பொருளாதாரத்தின்  அடிப்படைகள் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். நம் நாட்டின் நிதிச் சந்தைகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். எல்லாம் சேர்ந்து, நாட்டில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் புதிய  அலையை உருவாக்கிடும்.
மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுதல்
அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, பிரதமர் மிகவும் ஆபத்தான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தபின்னர்தான் கோவில் கட்டுவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதா அல்லது சட்டம் கொண்டுவருவதா என்று அரசாங்கம் பரிசீலனை செய்திடும் என்று பிரதமர் கூறுகிறார். இது, நீதிமன்றத்தை நிர்ப்பந்திக்கும் செயலாகும். ஒருவேளை நீதிமன்றம் பாதகமான தீர்ப்பினை அளித்திட்டால், அத்தீர்ப்பினை தந்திரமாக முறியடித்திடும் விதத்தில் அரசாங்கம் சட்ட பூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ளும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று பிரதமர் கூறிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பிரதமரின் கூற்றின்படி, நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருந்தாலும் அங்கே கோவில் கட்டப்படும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இதன்பொருள், தேர்தலுக்கு முன் மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதேயாகும். அப்போதுதான் அவர்களால் தங்களுடைய இந்துத்துவா மதவெறி வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்திட முடியும். இந்தவிதத்தில் அரசாங்கத்தின் முயற்சிகள் அமைந்திடும்.
குண்டர் கும்பல்கள் கொலைபாதக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக பிரதமர் அளித்துள்ள கருத்துக்கள் இதனை மேலும் உறுதி செய்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை மேலோட்டமாக அவர் கண்டித்திடும் அதே சமயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்களுக்கு எதிராக காவல்துறையினரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எதுவும் கூறாமல் மவுனம் சாதித்திருக்கிறார். இம்மாநிலங்களில் பசுப் பாதுகாப்புக் குழு என்ற பெயரிலும், அறநெறி போலீசார் என்ற பெயரிலும் குண்டர்களடங்கிய தனியார் ராணுவங்கள் பாஜக அரசாங்கத்தின் ஆதரவுடன் நன்கு கொழுத்து வளர்ந்திருக்கின்றன. இத்தகைய குண்டர் கும்பல்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமரால் கூறப்படவில்லை. அதேபோன்று சமூகத்தில் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரிக்கக்கூடிய விதத்தில் குண்டர் கும்பல்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும் ஒரு வார்த்தை கூட  அவர் உதிர்த்திடவில்லை.
அதேபோன்று பெண்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும், சிறுகுழந்தைகள் கூட கூட்டு வன்புணர்வுக் கொடுமைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும், ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. மேலும், பாஜக அரசாங்கங்களால் தலித்துகள், முஸ்லீம்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த கயவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதைக்குறித்தும் ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. அதே சமயத்தில் இவற்றால் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தால் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார்கள்.
முத்தலாக் மற்றும் சபரிமலை
நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டமுன்வடிவு, முஸ்லீம் பெண்களுக்கு அரசமைப்புச்சட்டத்தின் மூலம் சமத்துவ உரிமையை அளிப்பதற்காக இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும், இது பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி அடிப்படையிலானது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், இதே பாலின சமத்துவப் பிரச்சனை சபரிமலை கோவிலுடன் தொடர்புபடுத்தி எழுப்பப்படுகையில், இவை கடவுள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறுகிறார். உண்மையில் பெண்களுக்கு சமத்துவ உரிமை அளிப்பது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமை என்ற முறையில் உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பையே நிராகரிக்கிறார். இவ்வாறு இவர் இரட்டை நாக்கில் பேசுவது என்பது இவர்களின் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலை மீளவும் தெளிவானமுறையில் உறுதிப்படுத்துகிறது. பாஜக தற்போது கேரளாவில் ஸ்தல மட்டத்தில் மக்களிடையே அமைதியின்மையையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட வெறித்தனமான முறையில் இறங்கியிருக்கிறது.
2019 தேர்தல்கள்
வரவிருக்கும் தேர்தல்களில் நாட்டு மக்கள் நல்ல முடிவு  மேற்கொள்வார்கள் என்று ஒரு தெளிவான அறிக்கையை பிரதமர் அளித்திருக்கிறார். உண்மைதான், மக்கள் எப்போதுமே எல்லாத் தேர்தல்களிலும் தெளிவான முடிவுகளைத்தான் எடுக்கிறார்கள். நாட்டிலுள்ள மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதும், இந்த அரசாங்கம் எந்தவிதத்திலாவது தூக்கியெறியப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டதும்,  அவ்வாறான அவர்களின் விருப்பம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பதும் இப்போது தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்கள் மத்தியிலிருந்து இவ்வாறான நிர்ப்பந்தம் வந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தையும், பாஜகவையும் வரவிருக்கும் தேர்தல்களில் படுதோல்வியடையச் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கின்றன. இதற்குப் பிரதான காரணம், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்துள்ள அதிருப்தியேயாகும்.  அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் பெரும்திரளாகப் பங்கேற்றதில் இதனை நன்கு காண முடிந்தது.
வரவிருக்கும் ஜனவரி 8 – 9 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நாட்டில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை மீளவும் ஒருமுறை எடுத்துக்காட்டிடும். அதே நாட்களன்று விவசாய சங்கங்களும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கிராம அளவிலான பாரத் பந்த்நடத்திடவும் அறைகூவல் விடுத்திருப்பதும், மோடி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பிடவும், மக்கள் நலன் காத்திடும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்களை ஆட்சியில் அமர்த்திடவும் மக்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன. நாட்டு மக்களுக்குத் தேவை ஒரு தலைவர் இல்லை, மாறாக அவர்கள் விரும்புவது தங்களைப் பாதுகாத்திடும் கொள்கைகளைத்தான்.
2019 தேர்தல்கள் பிரதமருக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் மற்றும் நாட்டு மக்களுக்கும் இடையேயான போட்டியாக அமைந்திடும்.
ஷேக்ஸ்பியர் ஒருதடவை சொல்லியதைப்போல, என்னதான் அராபிய வாசனைத் திரவியங்களைப் பூசினாலும், உங்களின் கைகளில் உள்ள ரத்தக்கறையைத் துடைத்தெறிந்திட முடியாது, பிரதமர் அவர்களே.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, September 30, 2018

ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டு -சீத்தாராம் யெச்சூரி


ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டு
-சீத்தாராம் யெச்சூரி
2018 ஏப்ரலில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு, 2019 ஏப்ரல் 13 வரையிலும் ஆண்டு முழுவதும் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டை அனுசரித்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது இப்போது நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் நடந்து வருகின்றன. அதில்,  போராட்டத்தின் படிப்பினைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, காலனிய நுகத்தடியிலிந்து இந்தியாவை விடுவித்திட மக்கள் மேற்கொண்டிருந்த தீர்மானத்தைப் புரிந்துகொள்ள, இதனைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுக் கோரியிருந்தது.

1919 ஏப்ரல் 13 அன்று வைசாகி தினத்தன்று, ஜாலியன்வாலா பாக்கில் நடைபெற்ற படுகொலைகள் 20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அரசியல் குற்றங்களிலேயே மிகவும் மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் கொடூரத்தன்மை, இதன் மிகவும் மட்டரகமான காட்டுமிராண்டித்தனத்திலும், மனிதகுல நாகரிகத்தின் எவ்வகையான தன்மைக்கும் ஒத்துவராததிலும் நன்கு வெளிப்பட்டது. அதிகாரபூர்வ மதிப்பீடு, இப்படுகொலைகள் நிகழ்வில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 400க்கும் மேற்பட்டவை என்றும், காயமடைந்தோர் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம் என்றும் கூறும் அதே சமயத்தில், தேசிய இயக்கத்தால் அமைக்கப்பட்ட சுயேச்சையான பல்வேறு விசாரணை ஆணையங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், பல்லாயிரக்கணக்கானவர்கள் காயங்கள் அடைந்தனர் என்றும் காட்டக்கூடிய விதத்தில் ஆவணச்சான்றுகளை அளித்துள்ளன. ஜாலியன்வாலா பாக், ஒரு சிறிய நுழைவாயிலைத்தவிர சுற்றிலும் அனைத்துப்பகுதிகளும் மூடப்பட்ட ஒரு பூங்காவாகும். பிரிட்டிஷார் கொண்டுவந்த ரவுலட் சட்டத்தை கருப்புச் சட்டம்  என்று சித்தரித்து, பஞ்சாப் மாகாணம் முழுதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்று வந்தன. அதன் ஒருபகுதியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜாலியன்வாலாபாக் பூங்காவில் குழுமியிருந்தார்கள். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் ஜாலியன்வாலாபாக்கில் மேற்கொண்ட ஒடுக்குமுறையை, மிகவும் கொடூரமான இனப்படுகொலைகள் (massacre) என்று சொல்வதைத்தவிர வேறெந்த வார்த்தையாலும் குறிப்பிட முடியாது.
பின்னணி
வைசாகி தினத்தை பஞ்சாப் மாநிலத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் இணைந்தே கொண்டாடுவார்கள். ஒரே டம்ளரில் உள்ள தண்ணீரை அனைவரும் இணைந்தே குடிப்பார்கள். அதேபோன்று ஒரே தட்டில் உள்ள உணவை அனைவரும் இணைந்தே உண்பார்கள். இவ்வாறு மக்கள் அனைவரும் தங்கள் மத வேறுபாடுகளை ஓரங்கட்டிவைத்துவிட்டு, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன், இவ்விழாவினைக் கொண்டாடுவதை, பிரிட்டிஷாரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தங்களுடைய பிரித்தாளும் கொள்கைக்கேற்ப, எப்படியாவது இத்தகைய மக்கள் ஒற்றுமையை உடைத்தெறிய வேண்டும் என்று நயவஞ்சமானமுறையில் திட்டமிட்டார்கள். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப் போரை அடுத்து, இவர்களின் இத்தகைய கபடத்தனம் இவர்கள் மத்தியில் கூர்மையடைந்தது. 1857 முதல் சுதந்திரப் போர் சமயத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும், தங்கள் மதமாச்சர்யங்களை மறந்து, மொகலாய மாமன்னர் பகதூர் ஷா ஜஃப்பார் அவர்களை, பிரிட்டிஷாருக்கு எதிராக  சுதந்திர இந்தியாவின் இறையாண்மைமிக்க மன்னர் என்று பிரகடனம் செய்தனர். மக்கள் மத்தியில் காணப்பட்ட இத்தகைய ஒற்றுமை ஜாலியன்வாலாபாக்கிலும் நன்கு தெரிந்தது. இது பிரிட்டிஷார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
1918இல் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வருடாந்திர அமர்வு, அடுத்த அமர்வினை பஞ்சாப்பில் நடத்துவது என்று தீர்மானித்தது. பஞ்சாப்பில் மக்களை அரசியல்ரீதியாகத் திரட்டும் வேலையாகவே பிரிட்டிஷார் இதனைப் பார்த்தனர். ஏனெனில், பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு அதிக அளவு ஆட்கள் பஞ்சாப்பிலிருந்துதான் எடுக்கப்பட்டுவந்தார்கள். இது பாதிக்கப்படக்கூடும் என்று பிரிட்டிஷார் நினைத்தார்கள். எனவே இதனை வளர விடக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். எனவே, பஞ்சாப்பில் அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வு நடைபெறுவதை தடுத்திட அவர்கள் முயற்சியில் இறங்கினார்கள். பஞ்சாப்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வினை நடத்திட, அமிர்தசரஸில் முன்னணி வழக்குரைஞராக இருந்துவந்த டாக்டர் சைபுதீன் கிச்லியூ, லாகூரில் மருத்துவராக இருந்துவந்த டாக்டர் சத்பால் ஆகியோர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார்கள். இது பிரிட்டிஷாரால் ஒரு மாபெரும் சவாலாகப் பார்க்கப்பட்டது.
ஆனாலும், பஞ்சாப் மக்கள் மத்தியில் சுதந்திரத்திற்கான வேட்கை ஏற்கனவே வேர்பிடிக்கத் துவங்கி விட்டன. கதார் கட்சியின் செல்வாக்கும், 1913-14களில் புலம்பெயர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை மற்றும் கனடா சென்றிருந்த சீக்கியர்கள் உருவாக்கி இருந்த இயக்கமும், பிரிட்டிஷார்கள் கதார் இயக்கத்தினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டிருந்த மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறையும் – இவை அனைத்தும் சேர்ந்து பஞ்சாப் இளைஞர்கள் மத்தியில் சுதந்திர இயக்கத்தில் பெரும்திரளாக இணைந்திட உத்வேகத்தை ஏற்படுத்தி இருந்தன.
ரவுலட் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகள்
அதே சமயத்தில், பிரிட்டிஷ் காலனி அரசாங்கம் மிகவும் கொடூரமான ரவுலட் சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தி இருந்தது. இவை, மேன்முறையீட்டிற்கான உரிமை எதுவும் அளித்திடாமல், புரட்சிகர நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும்  எவரொருவரையும் தண்டனை அளித்திட, மூன்று நீதிபதிகளடங்கிய நீதிமன்றத்திற்கு, அதிகாரம் அளித்திருந்தன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் எவரொருவரையும்கூட சந்தேகத்தின்பேரில் அடைத்துவைப்பதற்கு இச்சட்டம் அதிகாரங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. உள்ளூர் அரசாங்கங்கள், தங்களுக்கு ஆபத்தானவர்கள் என்று எவரைக்கருதினாலும் அவரைக் கைது செய்வதற்கு இச்சட்டத்தில் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இச்சட்ட ஷரத்துக்களுக்கு எதிராக எவரொருவரும் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை.
மகாத்மா காந்தி, 1919 மார்ச் 30 அன்று, பிரிட்டிஷாரைத் தன் முடிவுகளிலிருந்து பின்வாங்கிட வலியுறுத்துவதற்காக, ஓர் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலமாக கிளர்ச்சி நடவடிக்கைக்காக அறைகூவல் விடுத்தார். அன்றையதினம் காவல்துறையினர் தில்லியில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தின்போது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கும் மேலானவர்கள் காயங்கள் அடைந்தனர். இதனைக் கண்டிக்கும் விதத்தில் இதற்கெதிராக, நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டது.
இவற்றால் எல்லாம் சற்றும் வளைந்துகொடுக்காத, பிரிட்டிஷ் அரசாங்கம், அமிர்தசரஸில் நடைபெறவிருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வினை நடக்கவிடாது கழுத்தைநெறித்திட வேண்டும் என்பதற்காக, ஏப்ரல் 10 அன்று அவற்றை முன்னின்று நடத்திய டாக்டர் சைபூதின் கிச்லியூவையும், டாக்டர் சத்பாலையும் கைது செய்தது. அவர்களைக் கண்காணா இடத்திற்கு எங்கோ எடுத்துச் சென்றது. இந்த செய்தியை மக்கள் ஆவேசமான கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் எதிர்கொண்டனர். அமிர்தசரஸில் அமைந்திருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன், தங்கள் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் பெரும்திரளாகத் திரண்டனர். அப்போது மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் அலுவலகங்களையும், அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். மக்களின் ஆவேசக் கிளர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டிருந்ததைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரிட்டிஷார் திணறினர். இதனால் முதலில் அமிர்தசரஸையும், பின்னர் ஒட்டுமொத்த பஞ்சாப்பையும் இராணுவ ஆட்சியிடம் பிரிட்டிஷார் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட ஓர் இராணுவ ஆட்சியே அமல்படுத்தப்பட்டது.
படுகொலைகள்
இந்தப் பின்னணியில்தான் நன்கு விளம்பரம் செய்யப்பட்டு, ஜாலியன்வாலா பாக்கில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்கத்துக் கிராமங்களிலிருந்து, அமிர்தசரஸுக்கு  வைசாகி கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இப்பொதுக்கூட்டத்தில் திரண்டனர். அமைதியான முறையில் கூட்டம் தொடங்கியது. திடீரென்று ஜெனரல் டயர் கூட்டத்திற்குள் புகுந்தான். பூங்காவிற்குள் குழுமியிருந்த மக்கள் வெளியேறிச் செல்ல முடியாதவாறு, பூங்காவின் சிறிய வாயிலை அடைத்தான். மக்களை நோக்கி சுடத் தொடங்கினான். பிரிட்டிஷ் துருப்புக்கள் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தன. அவர்களிடமிருந்த 1600 குண்டுகளும் தீரும்வரை அவர்கள் சுட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இதற்கெதிராக மக்களின் எதிர்ப்பு, பிரிட்டன் உட்பட உலகம் முழுதும் வெடித்தது. இதன்பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது. ஹண்டர் கமிட்டி என்பது இதன் பெயராகும். அதேசமயத்தில், படுகொலைகளுக்குப்பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் அமிர்தசரஸில் வீடுகளுக்கு வழங்கியிருந்த தண்ணீர் விநியோகம் மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அமிர்தசரஸில் குடியிருக்கும் மக்கள் எவ்விதமான உதவியும் செய்திடக்கூடாது என்கிற குரூரமான சிந்தனையுடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொண்டது. ஹண்டர் குழுவின் முன் அளித்திட்ட வாக்குமூலத்தில், ஜெனரல் டயர், கூறும்போது, தன் தலைமையில் படுகொலைகள் நடைபெற்றதற்காகக் கிஞ்சிற்றும் வருந்திட வில்லை. மாறாக, அவ்வாறு படுகொலைகள் மேற்கொண்டதை நியாயப்படுத்தியே வாக்குமூலம் அளித்தான். மக்களைக் கலைந்துசெல்லுங்கள் என்று எவ்விதமான எச்சரிக்கையும் விடுக்காமலே துப்பாக்கிக்சூடு நடத்தியதை அவன் ஒப்புக்கொண்டான். 1919 ஆகஸ்ட் 25 அன்று பொது ஊழியர் பிரிவுக்கு (General Staff Division) அவன் சமர்ப்பித்திருந்த அறிக்கை பின்வருமாறு:
நான் கூட்டத்தைப் பார்த்து, சுட்டேன். கூட்டம் கலைந்து செல்லும் வரை நான் சுட்டேன். என்னுடைய நடவடிக்கையை நான் நியாயப்படுத்திட வேண்டுமானால், இவ்வாறு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது சரிதான் என்றே நான் கருதினேன். அப்போதுதான் அது குறைந்தபட்சம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதினேன்.  என்னிடம் அந்த சமயத்தில் அதிகத் துருப்புக்கள் இருந்திருக்குமாயின் இறந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும். கூட்டத்தினரைக் கலைந்து செல்லுமாறு செய்வதுமட்டும் என் நோக்கமாக இருந்திடவில்லை. மக்கள் மத்தியில், குறிப்பாக பஞ்சாப் மாகாணம் முழுவதிலும்,  குறிப்பிட்ட அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே என் நோக்கமாகும். இதில் நான் கடுமையாக நடந்துகொண்டேன் என்ற கேள்விக்கே இடமில்லை.
பிரிகேடியர்-ஜெனரல் டயர், தன்னுடைய நோக்கம், பஞ்சாப் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும் என்றான். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கொல்லவேண்டும் என்றே நான் தீர்மானித்திருந்தேன்,என்று டயர் மேலும் கூறினான்.
மக்கள் போராட்டம் : ஒரு திருப்புமுனை
இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிரிட்டிஷார் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டபோதிலும்கூட, அவர்களால் அமிர்தசரஸில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வை தடுத்து நிறுத்திட முடியவில்லை. இந்த அமர்வு காங்கிரஸ் கமிட்டியின் குறிப்பிடத்தக்கவொரு அமர்வாக மாறியது. இந்த அமர்வில்தான், மகாத்மா காந்தி முதல் சிவில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். நாட்டு மக்களின் ஒற்றுமை மேலும் வலுவடைந்தது.
ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் தனக்கு அளிக்கப்பட்டிருந்த வீரத்திருத்தகைப்பட்டத்தை (Knighthood) திருப்பி ஒப்படைத்ததன் மூலமாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக 1919 மே 31 அன்று வைஸ்ராய்க்கு எழுதியிருந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: அப்பாவி மக்கள்மீது அநியாயமாக ஏவப்பட்டுள்ள தண்டனைகளின் கொடூரத்தன்மையானது, எந்தவொரு நாகரிக அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிற்கு மிகவும் மோசமானவைகளாகும். பஞ்சாப்பில் எங்கள் சகோதரர்கள் மீது ஏவப்பட்டுள்ள அவமானங்களும், அநியாயங்களும் அரசாங்கத்தின் கள்ள மவுனத்தின் மூலமாக, நாடு முழுதும், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம், சென்றடைந்திருக்கின்றன. இத்தகைய கொடூரமான நடவடிக்கைக்கு எதிராக உலக மக்கள் வெளிப்படுத்தியுள்ள நேர்மையான சீற்றம், எங்கள் மக்களின் இதயங்களை கொள்ளைகொண்டுவிட்டன. எனினும், ஆட்சியாளர்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ள முயற்சிப்பதோடு, இத்தகைய இழிசெயல்களைப் புரிந்தமைக்காகத் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு, சுகபோகத்தில் திளைக்கின்றனர். இத்தகு சூழ்நிலையில் என்னால், என் நாட்டு மக்களுக்காக நான் செய்யக்கூடியது, கோடிக்கணக்கான என் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து எழுப்பும் ஆவேசக்குரலை எதிரொலிக்கும் விதத்தில், நானும் அவர்களுடன் இணைந்துகொள்வதேயாகும். இவ்வாறு என் நாட்டு மக்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், இதனைக் கேலிசெய்யும் விதத்தில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவப் பட்டங்களைத் திரும்ப ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது. அவ்வாறு எனக்கு இந்த அரசாங்கம் அளித்துள்ள கௌரவப்பட்டங்களைத் திருப்பிஅனுப்பிவைக்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாபி மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான நானக் சிங் என்பவர் ஒரு நீண்ட கவிதை, வைசாகி கொலைகாரன், (Khooni Baisakhi) என்னும் தலைப்பில் எழுதினார். இக்கவிதையை வெள்ளை அரசாங்கம் தடை செய்தது. எனினும்கூட, நாடு முழுதும் இக்கவிதை விரிவானமுறையில் சென்றடைந்தது. நாட்டில் சுதந்திரத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் இது  அமைந்திருந்தது.    
உத்தம் சிங் என்பவர்  15 வயது நிரம்பிய அநாதைச் சிறுவனாக இருந்த சமயத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலைகளை நேரில் கண்டவர், 21 ஆண்டுகளுக்குப் பின்னர், 1940 மார்ச் 13 அன்று, ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைப்புரிந்திட்ட கொலைகாரன் மைக்கேல் ஓ’டயரை, லண்டனில், காக்ஸ்டன் ஹாலில் சுட்டுக் கொன்றார். அப்போது கைதுசெய்யப்படுகையில் தன் பெயரை, ராம் முகமது சிங் ஆசாத் என்று கூறினார். உத்தம்சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, 1940 ஜூன் 12 அன்று தூக்கிலிடப்பட்டார்.  அப்போது அவர் அளித்திட்ட வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
நான் இதனைச் செய்தேன். ஏனெனில் டயருக்கு எதிராக கோபம் கொண்டிருந்தேன். அதற்கு அவன் தகுதிபடைத்தவன்தான். அவன்தான் உண்மையான குற்றவாளி. அவன் எங்கள் மக்களின் வீர உணர்வுகளை நசுக்க விரும்பினான். எனவே, நான் அவனை நசுக்கினேன். கடந்த 21 ஆண்டுகளாக, அவனைப் பழிதீர்த்திட முயற்சித்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் என் வேலையை நான் செய்துவிட்டேன். சாவைக் கண்டு நான் பயப்படவில்லை. என் நாட்டுக்காக நான் இறக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் என் நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இதற்கெதிராக நான் போராடி இருக்கிறேன். இது என்னுடைய கடமை. என்நாட்டுக்காக இறப்பதைவிட மிகப்பெரிய பேறு எதுவாக இருந்திட முடியும்?
ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், பகத் சிங்கிற்கு வயது 12. அப்போது அவர் லாகூரில் மாணவராக இருந்தார். பின்னர் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு, அவர் ஜாலியன்வாலாபாக் வந்து, அங்கிருந்த ரத்தக்கறை படிந்த மண்ணை எடுத்துச் சென்றார். அது இப்போதும் பகத் சிங் நினைவு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜாலியன்வாலாபாக் படுகொலைகள், இளம் புரட்சியாளர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
ஜாலியன்வாலாபாக் படுகொலைகளின் 79ஆம் ஆண்டு தினத்தன்று தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் கூறியவற்றை நாம் மீளவும் நினைவுகூர்வோம்:ஜாலியன்வாலா பாக்கில் தங்கள் ரத்தத்தைக் கூட்டாகச் சிந்தியதன்மூலம்,   நாட்டின் விடுதலைக்காக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என்கிற செய்தியை நாட்டு மக்களுக்கு அளித்துள்ள  அனைத்து மக்களுக்கும்  வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லப்பட்ட மக்கள் மத்தியில் உண்மையான சுதந்திரத்திற்கான அபிலாசைகள் – அதாவது பசி, பஞ்சம், பட்டினியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் – இருந்ததை நாம் மறந்துவிடவில்லை. நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை அமைப்பதற்காக நடைபெறும் போராட்டத்திற்கு, ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் தொடர்ந்து உத்வேகத்தை அளித்திடும். அத்தியாகிகளின் தியாகங்கள் என்றென்றும் நமக்கு வழிகாட்டிடும் ஒளிவிளக்காக அமைந்திடும்.
     -தமிழில்: ச. வீரமணி
    

Sunday, May 13, 2018

மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது -சீத்தாராம் யெச்சூரி


மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது
-சீத்தாராம் யெச்சூரி
(லண்டனில் 2018 மே 5 அன்று மார்க்ஸ் 200:சர்வதேச மாநாட்டில் ஆற்றிய உரை)
காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக லண்டன் மாநகருக்கு உலகம் முழுதுமிருந்து மார்க்சிஸ்ட்டுகள், அறிவுஜீவிகள் வந்துகுழுமியிருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் சார்பாக, என் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள அமைப்பாளர்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இறுதி அமர்வு “மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது” என்பது குறித்து விவாதித்திட திட்டமிட்டிருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சர்வதேச அளவில் மார்க்சியத்தை எப்படிக் கொண்டுசென்று கொண்டிருக்கிறோம் என்பதைச் சுருக்கமாக விளக்கிட விரும்புகிறேன்.
மார்க்சியம் தன்னிரகரற்றது. எப்போது எனில் அதன் நிகழ்ச்சிநிரல் முழுமையாக நிறைவேற்றப்படுகையில் மட்டுமே அது அனைத்தையும் விஞ்சி நிற்கிறது என்று நம்மால் கூற முடியும்.   அதன் நிகழ்ச்சிநிரலான ஒரு வர்க்கமற்ற கம்யூனிஸ்ட் சமுதாயத்தை அமைக்கும்போதுமட்டுமே, அவ்வாறு நாம் கூற முடியும். குறிப்பாக முதலாளித்துவத்தின் கீழ், முதலாளித்துவத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற மார்க்சிய சிந்தனையின் அடிப்படையில், அதனை நோக்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
முதலாளித்துவத்திற்குப் பிந்தைய சமூகத்திலும், மார்க்சியத் தத்துவம் மற்றும் அதன் உலகக் கண்ணோட்டம் சோசலிசக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதனைத் தொடர்ந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்வதற்குமான ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக தொடர்ந்திடும்.
மார்க்சியம் ஒரு வறட்டுச்சூத்திரமல்ல, மாறாக அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, இதர அனைத்தையும்விட.  ’“துல்லியமான நிலைமைகள் குறித்த ஒரு துல்லியமான ஆய்வின்” அடிப்படையில் அமைந்துள்ளதாகும்.  மார்க்சியம், பொதுவாக வரலாற்றை ஆய்வு செய்வதற்குமான, குறிப்பாக முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்குமான ஓர் அணுகுமுறையாகும்.  மார்க்சால் அளிக்கப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில், இன்றைய சமூகநிலையைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தில் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை  அறிந்துகொள்வதற்கும், நாம் நம்முடைய சிந்தனையை தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான், மார்க்சியம்  ஒரு மூடப்பட்ட தத்துவார்த்த சிந்தனை என்ற நிலையிலிருந்து,  தொடர்ந்து செறிவூட்டப்பட்டு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்திடும். இவ்வாறு மார்க்சியம் ‘ஓர் ஆக்கபூர்வமான அறிவியலாக’ இருப்பதால்தான், மார்க்சியம் மட்டுமே மனித  சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து அம்சங்கள் குறித்தும், அதன்  விளைவுகள் குறித்தும் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிப்போக்குகளின் திசைவழிகள் குறித்தும் சரியாக அடையாளப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் அதன் வளர்ச்சிப்போக்கும் – வான் இயற்பியலிலிருந்து நானோ தொழில்நுட்பம் வரை  (from astro physics to nano technology) – தர்க்கவியல் பொருள்முதல்வாதம் எவ்வளவு மிகச்சரியானது என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்திருக்கின்றன. இவ்வாறு மார்க்சியம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும் எவ்விதமான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதனை மிகச்சரியான முறையில் எதிர்கொண்டு அதற்கு எதிராகப் போராடுவதற்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறது.
இன்றைய உலகம் – ஏகாதிபத்திய உலகமயம்
இரண்டாம் உலகப் போருக்குப்பிந்தைய காலகட்டத்தில், உலக முதலாளித்துவம் அமைதியான முறையில், பனிப்போர் காலத்தில், வளர்ச்சி அடைந்து, தன் மூலதனக் குவியலை அதீத உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.  மேலும் 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுக் காலத்தில்,  சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் தகர்ந்து அவை மீளவும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மாறிய பின்னர், இது மேலும் அதிகரித்தது. இவ்வாறு அதீதமான குவியல் சர்வதேச நிதி மூலதனத்தின் ஒருமுகப்படுத்துதலையும் உருவாக்கத்தையும் மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
ஏகாதிபத்தியத்தின் கட்டத்திற்குள்ளேயே, இன்றைய உலகமயத்தின் நடப்பு நிலையானது, மூலதனக் குவியலை சர்வதேச நிதிமூலதனத்தால் மேலும் உயர்நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம், மூலதனத்தின் தொழில்துறை மற்றும்  அனைத்து வடிவங்களையும் தன் வலைக்குள் சிக்க வைத்துக் கொண்டு,  தன் கொள்ளை லாப வேட்கையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து சர்வதேச நிதி மூலதனம் இப்போது தன் மூலதனக் குவியலையும் கொள்ளை லாப வேட்கையையும் உச்சத்திற்குக் கொண்டுசெல்வதற்காக, மக்கள் மீது புதிய தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
சர்வதேச நிதிமூலதனத்தின் கட்டளைகளுக்கிணங்க கொள்ளை லாப வேட்கைக்காக, உலகத்தை மாற்றியமைத்து, நவீன தாராளமயத்தை வரையறுத்திருக்கிறது. இதற்காக அது, முதலில், நாடுகளுக்கு அப்பால் மூலதனமும், பொருள்களும் இயங்குவதற்கு இருந்துவரும் தடைகளை நீக்குவதற்கான கொள்கைகளை இயக்குகிறது. வர்த்தக தாராளமயம், நாடுகளில் உற்பத்தி செய்துவந்த உள்நாட்டுத் தொழில் உற்பத்தியாளர்களை வேலையில்லாமல் செய்து, உள்நாட்டுத் தொழில் உற்பத்தியை குறிப்பாக வளர்முக நாடுகளில் அதிக அளவில் ஆபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.  மேலும்  உற்பத்தி மற்றும் வணிக நடைமுறைகள் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும்கூட, அந்நாடுகளையும் தாண்டி பிற நாடுகளுக்கும் செல்லும் விதத்தில்  மாற்றி அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக,  வர்த்தக தாராளமயம் நடைபெற்றிருக்கிறது. மேலும், மூலதனத்தின் தாராளமய நடவடிக்கைகள் பன்னாட்டு நிறுவனங்களை அனைத்து நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி சொத்துக்களையும் (இந்தியாவில் பொதுத் துறையில் உள்ள சொத்துக்களைப் போன்று) வாங்குவதற்கும் அனுமதித்திருக்கிறது. 
மூலதனக் குவியலை ஒருமுகப்படுத்திட மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் சர்வதேச நிதிமூலதனம் எடுத்திருக்கிறது. நிதிச்செலவினத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் அரசாங்க செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகளைத் திணித்திருக்கிறது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் மக்களின் தேவைகளின் சராசரி அளவு (aggregate demand) குறைந்திருக்கிறது. வளர்முக நாடுகளில் விவசாயிகளுக்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. உலக அளவில் சமூக சேவைத்துறைகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் மேற்கொண்டுவந்ததை ஒழித்துக்கட்டி இருக்கிறது. இதற்கு முன் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லாம் தனியாரிடம் தாரைவார்ப்பது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன்காரணமாக இவர்களின் கொள்ளை லாப வேட்கைக்கான வாய்ப்புவாசல்கள் மிகப் பெரிய அளவிற்குத் திறந்துவிடப் பட்டிருக்கின்றன. அறிவுச் சொத்துரிமைகள் மற்றும் ஏகபோகக் கட்டுப்பாட்டில் இருந்த இதர வடிவங்களும்  உற்பத்தி மீதான கட்டுப்பாடு மூலமாக அதீத லாபத்தை ஈட்டித்தரத் தொடங்கின. இவ்வாறு, தற்போதைய ஏகாதிபத்தியத்தின் புதியதொரு அம்சம் இதற்முன் இல்லாத அளவிற்கு சர்வதேச நிதி மூலதனத்தின் கொள்ளை லாப வேட்கைக்கு புதிய வாய்ப்புவாசல்களை வலுக்கட்டாயமாகத் திறந்துவிட்டிருக்கின்றன.
இவ்வாறாக முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதுமே, மூலதனக் குவியல் என்பது இரு வழிகளில் இடம் பெற்றிருக்கிறது. ஒன்று, மூலதன விரிவாக்கத்தின் காரணமாக, அதாவது அதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடுவதன் வாயிலாக,  இயல்பாகவே ஏற்படும் வளர்ச்சி. மற்றொன்று, வலுக்கட்டாயமாகவும் நிர்ப்பந்தம் மூலமாகவும் சூறையாடுதல் வாயிலாக ஏற்படுத்திக்கொள்வது.      இத்தன்மையைத் தான் மார்க்ஸ் மூலதனத்தின் துவக்க மூலதனக் குவிப்பு (primitive accumulation of capital) என்று வரையறுக்கிறார்.
துவக்க மூலதனக்குவிப்பு என்பது அடிக்கடி தவறானமுறையில் வியாக்கியானம் செய்யப்படுகிறது. அதாவது நவீனத்திற்கு எதிரான சொல்லாக ஈவிரக்கமற்றதன்மை உடையதாக, ஈவிரக்கமற்ற தன்மை (எதிர்) நவீனத்துவம் (primitive vs. modern) என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது. மார்க்சுக்கும், எனவே மார்க்சிஸ்ட்டுகளுக்கும் துவக்க மூலதனக்குவிப்பு என்பது ஒரு பகுப்பாய்வு வகையினமாகும். அது மூலதனத்தின் இயல்பான இயங்குவியலுடன் தொடர்ந்து இருந்துவருவதாகும். கடந்த காலங்களில் துவக்க மூலதனக் குவிப்பின் செயல்முறைகள்  நேரடிக் காலனிமயமாக்கல் உட்பட பல்வேறு வடிவங்களில் நடந்திருக்கின்றன. துவக்க மூலதனக்குவிப்பின் மூர்க்கத்தனம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்,  வர்க்க சக்திகளின் சர்வதேசத் தொடர்பினை நேரடியாகச் சார்ந்தே இருந்து வருகிறது. அது முதலாளித்துவத்தின் கொடூரத்தன்மையை அனுமதிக்கிறது அல்லது  தடுக்கிறது. இன்றைய ஏகாதிபத்திய கால கட்டத்தில், துவக்க மூலதனக்குவிப்பின் கொடூரத்தன்மையின் செயல்முறைகள் உக்கிரமடைந்து,  உலக மக்கள் தொகையில் வளர்முக நாடுகளில் உள்ள மக்கள் மீது மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதீத லாப வேட்கைக்கான இத்தகைய முதலாளித்துவத்தின்  கொள்ளையடிக்கும் குணம் உலக அளவிலும், ஒவ்வொரு நாட்டிலும் மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மையைக் கூர்மையான முறையில் விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், உலகத்தில் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் ஏழை மக்களில் பெரும்பகுதியினரை மிகப்பெரிய அளவிற்கு வறுமைக்குழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. பொருளாதார அமைப்பின் நடப்பு நெருக்கடியின் ஒவ்வொரு கட்டத்திலும், முதலாளித்துவம் அதனை மீட்க மேற்கொண்டிடும் ஒவ்வொரு முயற்சியும், மேலும் ஆழமான நெருக்கடியின் புதிய கட்டத்தை நோக்கி இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில், அதுதான் முதலாளித்துவ வளர்ச்சிக்கான  சட்டவிதிகளின் இயற்கையான குணமாகும்.
நவீன தாராளமயத்தின் நெருக்கடி – வலதுசாரி அரசியல் பெயர்வு
தற்போது, உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட பின்னர் கடந்த பத்தாண்டுகளில், நவீன தாராளமயமும் தற்போது நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இப்போது உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்களுக்கு, இது தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவில் ரீகனும், கிரேட் பிரிட்டனில் தாட்சரும் வருவதற்கு முன்பே அந்நாடுகளிலிருந்த பொருளாதார நிலைமைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சியில் பெருமளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் கொழிக்கவும், மீதமுள்ள பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடக்கூடிய நிலைமையை உருவாக்கவும் இட்டுச்சென்றன.  இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர்,  முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் ஆற்றல் மிகு வளர்ச்சியைக் கண்டது. இது முதலாளித்துவத்தின் பொற்காலம் (Golden Age) என்று வர்ணிக்கப்படுகிறது. அமெரிக்காவில், 1948 – 1972 கால கட்டத்தில், அமெரிக்க மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவினருமே தங்களின் வாழ்க்கைத்தரத்தில் உயர்வு ஏற்பட்டதை உணர்ந்தனர். எனினும், 1972க்கும் 2013க்கும் இடையே,  மேல்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த அதே சமயத்தில், அடித்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் தங்கள் உண்மையான வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்தனர். நடுத்தர மக்களில் ஆண் தொழிலாளர்களின் உண்மையான வருமானம் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட குறைவாகவே இருந்தது.  அடித்தட்டு மக்களில் 90 சதவீதத்தினரின் வருமானம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித உயர்வும் இல்லாமல் தேக்க நிலையில் நீடித்து வருகிறது. சராசரியாக, உயர்வருமானப் பொருளாதார நிலையிலிருந்த குடும்பங்களில் 65 முதல் 70 சதவீதத்தினர்  2005க்கும் 2014க்கும் இடையே தங்களுடைய உண்மையான வருமானங்களில் தேக்க நிலை அல்லது வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அனுபவரீதியாக உணர்ந்தனர். 2000 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி (Gallup Poll), அமெரிக்கர்களில் 33 சதவீதத்தினர் தங்களைத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். 2015ஆம் வாக்கில் இது 48 சதவீதமாக, அதாவது மக்கள் தொகையில் பாதி அளவாக உயர்ந்தது. உலக மக்கள் தொகையில் பெரும்பான்மைப் பிரிவினரின் வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வின் மிக மோசமாகவுள்ள ஏற்றத்தாழ்வு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிருப்தியை உருவாக்கி, இதனைப் போக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் தீர்வு தேவை என்கிற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.
நவீன தாராளமயத்தின் நெருக்கடி புதிய முரண்பாடுகளை உருவாக்கி, ஏகாதிபத்திய நாடுகளிடையே நட்புமுறிவுகளையும் மோதல்களையும் உருவாக்கி இருக்கிறது.    ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரேட் பிரிட்டன் வெளியேறியது  (Brexit) இதைத்தான் காட்டுகிறது. புதிய அரசியல் சக்திகள் உருவாவதும், பதட்ட நிலைமைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாகிவிட்டன.
நடப்புக் காலத்தில் உலகின் பல பகுதிகளில் அரசியலில் ஒரு வலதுசாரிப் பெயர்வு  ஏற்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணமாக ஏகாதிபத்தியம்  உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய உலக அளவிலான பிளவுவாத நிகழ்ச்சிநிரலுடன் நவீன தாராளமயக் கொள்கையை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. தன் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் ஒருமுகப்படுத்திக்  கொள்வதற்காகவும் மேற்காசியாவில் உள்ள எண்ணெய் வளங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் இராணுவத் தலையீடுகளில் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக நிறவெறி, இனவெறி, பிராந்திய வெறி,  அயல்நாட்டினர் மீதான வெறி, மதவெறி, சாதி வெறி மற்றும் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிச வெறிப் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.  அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, பிரிட்டனில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டமை, பிரான்சில் அதிதீவிர வலதுசாரி தேசிய முன்னணியின் மாரின் லீ பென் (Marine Le Pen) தேர்தலில் ஆதாயங்கள்  அடைந்தது, ஜெர்மனியில்  டச்சுலாண்டுக்கான மாற்று என்னும் இயக்கம் முன்னேறிக் கொண்டிருப்பது, ஆஸ்திரியாவில் அதீதீவிர  சுதந்திரக் கட்சி (Freedom Party)யுடன் சேர்ந்துகொண்டு வலதுசாரி அரசாங்கம்  அமைந்தது, ஐரோப்பிய யூனியனில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருப்பது முதலானவை இவ்வாறு உலக அளவில் அரசியலில் வலதுசாரிப் பெயர்வு ஏற்பட்டிருப்பதன் பிரதிபலிப்பாகும். இத்தகைய போக்கு, இந்திய அரசியலிலும் பிரதிபலித்திருப்பதைக் காண முடியும்.
உலகப் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டித் தலைமை தாங்குவது யார் என்பதில் வலதுசாரிகளுக்கும் மற்றும் இடதுசாரி,  முற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான அரசியல் போராட்டத்தில் வலதுசாரிகளே பல நாடுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  பல நாடுகளில் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவாகாததே இதற்குக் காரணமாகும். மக்களின் அதிருப்தியை இந்த வலதுசாரி சக்திகள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளன.  ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதே பொருளாதாரக் கொள்கைகளை இவர்கள் மேலும் மூர்க்கத்தனமாக பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு துன்பதுயரங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இதன்காரணமாக ஆட்சிக்குப் புதிதாக வந்தவர்கள்மீதும்  அதிருப்தி அதிகரித்துள்ளது. வரவிருக்கும் நாட்களில், உலகில் பல  நாடுகளின் அரசியல் திசைவழி மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பது தொடர்பாக,  இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையேயான போட்டியில், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதிலேயே அடங்கி இருக்கிறது. 1929-30களில் மாபெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஏற்பட்ட சமயத்தில் உலக ஏகபோக மூலதனத்தின் ஆதரவுடன்  பாசிசம் தலைதூக்கியது. மக்கள் மத்தியில் நிலவிய அதிருப்தி உணர்வை பாசிசம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் அதேபோன்றே தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி உணர்வு, அதிதீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிஸ்ட் சக்திகள் தலைதூக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடியின் இன்றைய நிலைமைகளில், சோசலிசத் தத்துவம் மட்டுமே மனிதகுலத்தை அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் விடுவித்திட முடியும். உலகப் பொருளாதார மந்தம்  ஏற்பட்ட 2008இலிருந்தே, உலக முதலாளித்துவம்  ஒரு நெருக்கடியிலிருந்து மீண்டு மற்றொரு நெருக்கடிக்குள் வீழ்ந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் ஓர் ஆழமான நெருக்கடிக்குள்ளாகும் விதத்தில் அதனை மாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் மீதான முதலாளித்துவ சுரண்டல் உக்கிரமடைவதன் காரணமாக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரச் சுமைகளை  ஏற்க வேண்டியிருப்பதும் அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இவற்றின் விளைவாக உலக மக்களிடையே பெரும்பாலான மக்களுக்கும், இதர விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கும் இடையேயான பொருளாதார சமத்துவமின்மை  மிகவும் கூர்மையாக விரிவடைந்துகொண்டிருக்கிறது.  முதலாளித்துவத்தின் கொள்ளை லாப வெறி முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. முதலாளித்துவத்திற்குள் இருந்துகொண்டு மேற்கொள்ளப்படுகிற எவ்விதமான சீர்திருத்தத்தாலும் மனிதகுலத்தை அதன் சுரண்டலின் பிடிகளிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசத்திற்கான அரசியல் மாற்று ஒன்றினால் மட்டுமே அதனை எய்திட முடியும். சோசலிசத்திற்கான அரசியல் மாற்றால் மூலதன ஆட்சியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை அதன் சுரண்டலிலிருந்து முற்றிலுமாக விடுவித்து மனிலகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்தை உருவாக்கும் விதத்தில் நாம் உக்கிரப்படுத்த வேண்டியதிருக்கிறது.
முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி எவ்வளவுதான் உக்கிரமானதாக இருந்த போதிலும், அது எப்போதுமே  தானாக நிலைகுலைந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடும் விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, முதலாளித்துவம் மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன்மூலம் சீரானமுறையில் ஜீவித்துக்கொண்டிருக்கும். எனவே, சோசலிஸ்ட்  அரசியல் மாற்று வலுப்படுத்தப்பட்டு வளர வேண்டியது அவசியமாகும். தற்போது முதலாளித்துவத்தின் கொள்ளைக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள மக்கள் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்றாலும், இவை இன்றையநிலையில் தற்காப்பு நிலையில் (defensive)தான் இருந்து வருகின்றன. தற்காப்பு நிலை என்று ஏன் சொல்கிறேன் என்றால், மக்கள் தாங்கள் தங்கள் போராட்டங்கள் மூலமாகப் பெற்றிருந்த ஜனநாயக உரிமைகளையும், வாழ்வாதார நிலைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன. இது மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக வர்க்கரீதியான தாக்குதல் தொடுக்கக்கூடிய அளவிற்கு இத்தகையப் போராட்டங்கள் அதிகரித்திட வேண்டும்.   
எனவே, மூலதனம், தூக்கி எறியப்படுவது என்பது, தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படக்கூடிய சமூகத்தின்  வர்க்கப்படை வலுப்படுத்தப்படுவதையே தீர்மானகரமான முறையில் சார்ந்திருக்கிறது.  மக்கள் போராட்டங்கள், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக அரசியல் தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் வர்க்கப் போராட்டமாக  உக்கிரமடைந்திட வேண்டும்.  இத்தகைய தொழிலாளி வர்க்கப்படையைக் கட்டுவதும், அதனை வலுவானதாக மாற்றுவதும் ‘அகக் காரணி’ (‘subjective factor’) யாகும். அகக் காரணியை வலுப்படுத்த வேண்டியது இன்றியமையாததும் முக்கியமானதுமாகும். புறக்காரணி (objective factor), நெருக்கடியின் துல்லியமான நிலைமை, புரட்சிகர முன்னேற்றத்திற்கானதாக எவ்வளவுதான் உகந்ததாக இருந்தாலும்,  ‘அகக் காரணி’யை வலுப்படுத்தாமல், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனை ஒரு புரட்சிகரமான தாக்குதலாக மாற்றிவிட முடியாது.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் துல்லியமான நிலைமைகளுக்கு ஏற்ப துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், தொழிலாளி வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறுவிதமான இடைக்கால முழக்கங்கள், நடவடிக்கைகள் மற்றும் உத்திகள் உருவாக்கப்பட்டு, வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திட வேண்டும், ‘அகக் காரணி’யை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் உண்மையான நிலைமைகளின் சவால்களை எதிர்கொண்டிட வேண்டும். இவ்வாறு,  ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளி வர்க்கம் தங்கள் நாடுகளில் புரட்சிகரமான மாறுதலுக்கான செயல்முறையில் முன்னேறிட வேண்டும். மக்கள் மத்தியில் அரசியல் சக்திகளின் சேர்மானம் இடதுசாரிகள் பக்கம் திரும்ப வேண்டும். இது, நவீன தாராளமயத்திற்கு எதிராக மாற்றுக் கொள்கையின் அடிப்படையில்  தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் மட்டுமே, நடந்திடும்.
மார்க்சியம் மட்டுமே இன்றைய தினம் ‘அகக் காரணி’யை வலுப்படுத்துவதற்கான தத்துவார்த்த அடித்தளங்களை அமைத்துத்தருகிறது.  அதன்மூலம் வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, முதலாளித்துவம் தூக்கி எறியப்படும்வரை, இன்றைய உண்மையான உலகத்தை மாற்றுவதற்கு, மனிதனை மனிதன், நாடுகளை நாடு சுரண்டுவதிலிருந்து  முற்றுப்புள்ளி வைத்திடுவதற்கு, மார்க்சிசம் தான் வீர்யம் மிக்க ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)