Friday, July 7, 2017

4. அரசாணைகள் மக்கள் ஏற்கும் வகையில் அமையவில்லை..





சீத்தாராம் யெச்சூரி
 

(திரிபுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது, அவசியமான திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.)
தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுதல் காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.
‘‘முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக்கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுதல் காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது.’’
இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள், சோவியத் யூனியனில் இருந்ததைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை. இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.
சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப்பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன.
முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்குப்பின் கட்சித் தலைமையின் சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில் கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால், மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது. அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை. அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன. இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.
இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகடாவாக மாறியது. சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன. இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது, அவசியமான திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.
சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்: சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவது பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர் - விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது.
ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுதல் காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது. தொழிலாளி - விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை அடைவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள்.
உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது. ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும், சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார்.

No comments: