Wednesday, July 5, 2017

2.சோவியத் பின்னடைவுக்கு காரணம் என்ன?




சீத்தாராம் யெச்சூரி

{சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல. மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும்.}
சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.
இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.
அக்டோபர் புரட்சியின் பாரம்பரிய மாண்புகள்
அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பரியத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய நான்கு அம்சங்களை அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.
(1) தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார். மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியச் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்தார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட ரஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தை உறுதியுடன் எதிர்த்திடாமல் தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.
இன்றைய ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது. ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும். இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.
சரியற்ற மதிப்பீடுகள்
20ஆம் நூற்றாண்டில் சோசலிசம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ரஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந்நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும், இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.

No comments: