Wednesday, January 31, 2018

“பகோடா வேலைகள்”



பிரதமர் நரேந்திரமோடி, சென்றவாரம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், வீதியில் பகோடா பொட்டலம் போட்டு விற்கிறவர்களையும் வேலையிலிருப்பவர்களாகத்தான் கருதிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், அவ்வாறு பொட்டலம் கட்டிவிற்பவன் நாளொன்றுக்கு 200 ருபாய் சம்பாதிக்கிறான் என்றால் அது எந்தக் கணக்குப் புத்தகத்திலும் வருவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.  அவர் மேலும், “உண்மை என்னவென்றால் நாட்டில் ஏராளமானவர்கள் வேலையில் இருந்துகொண்டிருக்கிறார்கள்,” என்றும் திருவாய்மலர்ந்திருக்கிறார்.
 ஆகையால், வீதிகளில் பொருள்களை விற்பவர்களை அதிகப்படுத்தியிருப்பதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெரிய அளவில் உருவாக்கி இருக்கிறோம் என்று பிரதமர் மோடியே கூறியிருப்பதை நாம் இப்போது பெற்றிருக்கிறோம்.  மக்களின் பரிதாபகரமான நிலையையே மோடி எப்படி போற்றுகிறார்? கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோடியின் ஆட்சி, வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், அர்த்தமுள்ள வகையில் புதிய வேலைகளை உருவாக்குவதிலும் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்திருப்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது.  தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைகளை உருவாக்குவோம் என்று உறுதிமொழி அளித்ததை நினைவுகூர்க.
மோடி குறிப்பிடும் வேலைவாய்ப்பின் தன்மை என்ன? ‘2015-16ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு – வேலைவாய்ப்பின்மை ஆய்வறிக்கை‘யின்படி, நாட்டிலுள்ள உழைப்பவர்களில் கிட்டத்தட்ட சரிபாதிப்பேர்  (46.6 சதவீதம்), சுய வேலைவாய்ப்பினை மேற்கொண்டிருப்பவர்கள். இவர்களில் 41 சதவீதம் ஓராண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் அளவிற்கு ஈட்டுபவர்களாவார்கள். அதாவது மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே. எனவே, அற்ப வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய இதைத்தான் இவர்கள் வேலை வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.  
முறையான வேலைவாய்ப்பு இல்லாததாலேயே, அல்லது, முறையான துறைகளில் வேலை கிடைக்காததாலேயே மக்கள் “சுய வேலைவாய்ப்புக்கு” மாறுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  நவீன தாராளமயக் கொள்கைகள், வேலைகளை உருவாக்காத ஒருவிதமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  அப்படியே வேலை கிடைத்தாலும் அது முறைசாராத் தொழில்களில் அற்ப ஊதியத்துடன் அல்லது முறையான தொழில்களில் பிரதானமாக ஒப்பந்த அடிப்படையில் அமைந்திருக்கும்.
பொருளாதார மந்தமும், ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததும் அனைத்துப் பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளைக் கொன்றுவிட்டன. கிராமப்புற வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருப்பதும் நிலைமையை மோசமாக்கி இருக்கிறது.
இத்தகைய பின்னணியில்தான், மோடி வீதியில்  பகோடா விற்பதுகூட வேலைவாய்ப்புதான் என்று படாடோபமாக அறிவித்திருக்கிறார்.  தொழிற்சாலைகளில் பணியாற்றிவந்த தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டபின்னர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் வண்டியில் வைத்து காய்கறி விற்பவர்களையும், வேலைதேடி கிராமப்புறங்களிலிருந்து நகரை நோக்கி வந்துள்ள ஏராளமானவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக இவ்வாறு “சுயவேலை”களைத் தேடிக்கொண்டிருப்பவர்களையும் இவ்வாறு கூறியிருப்பதானது கொடூரமான நகைச்சுவையாகும்.  இவர்கள் அனைவரும் தங்கள் தகுதிக்குக் குறைந்த வேலைபார்ப்பவர்கள் (underemployed). எப்படியாவது வாழ வேண்டும் என்பதற்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள். 
அரசாங்கம், சுயவேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்காக கடன்கள்  அளிப்பதற்கு முத்ரா திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் பயனடைந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்குக் கீழேதான் கடன்கள் பெற்றிருக்கிறார்கள். இத்தொகையை முதலீடாக  வைத்துக்கொண்டு எவ்விதத்திலும் வேலைவாய்ப்பை அளித்திட முடியாது.
“இந்தியாவில் உற்பத்தி செய்க” என்கிற மோடியின் முழக்கம், உற்பத்தித் துறையை (manufacturing sector) உயர்த்துவதையும், தரமான வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் அர்த்தப்படுத்தியவைகளாகும். எனினும் இந்தத் திட்டம் உருக்கொள்வதிலேயே  படுதோல்வி அடைந்து விட்டது.  உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த பல நிறுவனங்கள் சென்ற ஆண்டில் வேலைகள் கிடைக்காததால் தங்களின் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டன.
எனவே, இப்போது நாம் பிரதமரால் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, பிரதமர் நாட்டில் வேலைவாய்ப்பு சந்தையை நோக்கி நுழைந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு அதிக “பகோடா வேலைகள்” காத்திருக்கின்றன என்ற உறுதிமொழியை அளித்திருப்பதன் மூலம் நாட்டில் இளைஞர்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.
(ஜனவரி 31, 2018)
(தமிழில்: ச.வீரமணி)






Sunday, January 28, 2018

இன்றைய பத்திரிகையாளரின் முன்னாள் நீதித்துறை அனுபவங்கள் (3)




அன்பார்ந்த நண்பர்களே,
பல்வேறு வேலைபளுவின் காரணமாக சுயபுராணத்தைத் தொடர முடியவில்லை. இருப்பினும் தற்சமயம் போக்குவரத்துக் கட்டணத்திற்கு எதிராக மாணவர்களும், வாலிபர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல ஆண்டு கால இடைவெளிக்குப்பின் ஆட்சியாளர்கள் போராடுபவர்களைச் சிறையில் தள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தநிலையில் எனக்கு இதுபோன்று பொதுநலன்களுக்காகப் போராடுபவர்களைச் சிறையில் தள்ளும்போது, நீதிமன்ற நடுவர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் குறித்துக் குறிப்பிட்டால், இன்றைக்குப் போராடும் தோழர்களுக்கும், அவர்களைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சந்தித்திடும் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்களுக்கும் பயனளிக்கும் என்பதால், பதிவு செய்திட விரும்புகிறேன்.
நான் திருவையாறில் பணியில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே oust ஆகிவிட்டது. பின்னர் உடனடியாக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டேன்.  பின்னர் எனக்கு வரவேண்டியிருந்த நிலுவைத்தொகைகளை வாங்குவதற்காக திருவையாறு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, சக ஊழியர்களை என்னிடம் கும்பகோணம் சென்று மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டைப் (இப்போது தலைமை நீதித்துறைநடுவர்) பார் என்றார்கள். நான் மறுநாள் குடந்தை சென்று மாவட்ட மாஜிஸ்ட்ரேட், ஏ.ஜே.அர்னால்டைப் பார்க்கச் சென்றபோது வெளியில் காரை சுத்தம் செய்துகொண்டிருந்த சாமி ஐயா என்கிற ஓட்டுநர் (என்னை அடையாளம் கண்டு அன்றே நண்பராகவும் மாறிவிட்டார். பின்னர் அவர் நான் பணியிலிருந்த காலம் முழுவதும் என் நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார். இப்போது அவரது மகள் நீதித்துறை ஊழியராகவும், அவரது மருமகன் நீதிபதியாகவும் இருக்கிறார்கள்.) என்னை மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னைப் பார்த்தபின் “எங்கே போட்டாலும் போவாயா?“ என்று கேட்டார். நான் “எந்த ஊர் போட்டாலும் போவேன், ஐயா“ என்றேன். சரி ஆபிசுக்குப் போ, என்று என்னை அனுப்பிவிட்டார். ஆபிஸ் வந்தபின் எனக்கு அறந்தாங்கிக்கு (அப்போது அது தஞ்சை மாவட்டத்திலிருந்தது) அடிசனல் காப்பிஸ்ட்டாக உத்தரவு பிறப்பித்து கையிலேயே கொடுத்துவிட்டார்கள். அங்கே இரண்டு மாதம் பணியிலிருந்தேன். பின்னர் அங்கும்  oust ஆகிவிட்டது.
பின்னர் தஞ்சை வந்தபோது, மறுநாள் வேலைவாய்ப்பகத்திலிருந்து நேர்காணல் அட்டை வந்திருந்தது. மறுநாள் குடந்தை, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்திற்கு தஞ்சை சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆராய்வாளர் பணிக்காக நேர்காணலுக்கு வருமாறு அதில் காணப்பட்டது. மறுநாள் குடந்தை சென்று நேர்காணலைச் சந்தித்தபோது மாஜிஸ்ட்ரேட் ஆச்சர்யம் அடைந்தார். நீ எங்கே இப்படி என்று கேட்டார். அந்த அடிசனல் காப்பிஸ்ட் போஸ்ட் oust  ஆகிவிட்டது ஐயா என்றேன். “Is it?” என்று ஆச்சர்யத்துடன் சிரஸ்தாரைக் கேட்க அவர் ஆம் என்றார். பின்னர் வழக்கம்போல் எல்லோரையும் மதிப்பெண்கள் கூறச் சொன்னார். அப்போதும் நானே அதிக மதிப்பெண். எனவே எனக்கு நியமன உத்தரவைப் பிறப்பித்துவிட்டு மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டார்.
அடுத்தநாள் தஞ்சையில் வந்து சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆராய்வாளராக சேர்ந்துவிட்டடேன். இரண்டு மாதங்கள் பணி. பின்னர் அங்கிருந்து திருத்துரைப்பூண்டிக்கு மாற்றல் செய்யப்பட்டேன். இவ்வாறு 1967இல் தொடங்கிய என் நீதித்துறை ஊழியர்பயணத்தில் முதல் நான்கைந்து மாதங்களில் திருவையாறு, அறந்தாங்கி, தஞ்சாவூரை அடுத்து திருத்துரைப்பூண்டிக்கு மாற்றலானேன். இவை அனைத்தும் என் பதின்பருவ வயதிலேயே நிகழ்ந்துவிட்டன. அப்போது என் கல்வித்தகுதி என்பது எஸ்எஸ்எல்சி, தட்டச்சு ஆங்கிலம் கீழ்நிலை மற்றும் தட்டச்சு தமிழ் கீழ்நிலை என்பவைகளாகும்.
அடுத்தபகுதியில் நீதிமன்றத்தீர்ப்புகள் தொடர்பான அனுபவங்களைத் தொடர்கிறேன்.




Saturday, January 27, 2018

மோடி கூட்டத்திடமிருந்து இந்துக்களையும் இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும்--ஆர்.பி.குமார்


கோயமுத்தூர். ஜன.
வன்முறையின் மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என குஜராத்தை சோதனைக்கூடமாக பயன்படுத்தி வெற்றிபெற்ற சங்பரிவார் அமைப்புகள். இன்று அதே வன்முறை பாணியில் நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கி வருகிறது. நான் படித்த அனைத்து வேதங்களில் இருந்து புரிந்து கொண்டது மோடியின் நிறுவனங்கள் முன்வைப்பது இந்து தர்மமே அல்ல மாறாக பிராமணிய ஆதிக்கத்தையே நிலைநிறுத்த முயல்கின்றனர். இவர்களிடமிருந்து இந்துக்களையும், இந்திய தேசத்தையும் காப்பாற்ற வேண்டியது உடனடி தேவை என முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

2002
ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் நடைபெற்றது. அந்தசமயத்தில் அம்மாநிலத்தின் காவல்துறை உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஆர்.பி.ஸ்ரீகுமார். இவர் பொறுப்பில் இருந்தபோது குஜராத் மாநிலத்தில் இனக்கலவரத்தை தூண்டிவிட்ட பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பின் தலைவர்கள் அரசு அதிகாரிகளின் துணையோடு செயல்படுத்தப்பட்ட வன்முறைகள் குறித்து முழுமையான ஆதாரங்களை தொகுத்து ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலை .வீரமணி மற்றும் என்.ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. குஜராத் திரைக்கு பின்னால் என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இந்நூல்வெளியீட்டு விழா வெள்ளியன்று கோவையில் நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தி.மணி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன் வரவேற்புரையாற்றினார். இந்நூல் தற்போது வெளியிட வேண்டிய அவசியம் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் துவக்கிவைத்து உரையாற்றினார்.
எழுத்தாளர் முருகவேல் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் நூலை வெளியிட கோவை மாநகர முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், விஜயாபதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம், சப்தகிரி போர்வெல் உரிமையாளர் கே.எம்.சந்திரன், தமுஎகச மு.பரமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல் வெளியிட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பாரதிபுத்தகாலய பொதுமேலாளர் .நாகராஜன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.
அரபு தேசமாக மாற்ற நினைக்கிறார் மோடி
முன்னதாக நூலை வெளியிட்டு டி.கே.ரங்கராஜன் எம்பி பேசுகையில்,
குஜராத் கலவரம் குறித்து ராணா அயூப் எழுதிய குஜராத் கோப்புகள் முதல் நூலாக வெளிவந்தது. இதனை ராணா அயூப் எனும் பத்திரிக்கையாளர் தனது அடையாளங்களை மறைத்துக்கொண்டு தடயங்களையும் வாக்குமூலங்களையும் ரகசியமாக சேகரித்து எழுதினார் இந்நூலின் தமிழ் பதிப்பை பாரதி புத்தகலாயம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதியுள்ள இந்த புத்தகம், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு உடந்தையான அரசு அதிகாரிகளின் வாக்குமூலங்களை முழுமையாக பதிவு செய்தும், ஆதாரங்களை திரட்டியும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தநூலை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் குறிப்பாக அரசுத்துறையில் உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இந்நூலை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நூலில், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், திருக்குறள் என பல மேற்கோள்களை ஸ்ரீகுமார் முன்வைத்து எழுதியுள்ளார். இந்நூலின் வழியாக நாம் உணர்வது என்னவென்றால் எல்லா கலவரங்களும் திட்டமிட்டே நடத்தப்படுகிறது. சீக்கியர்கள் மீதான டில்லி கலவரமும் முஸ்லீம்கள் மீதான குஜராத் கலவரமும் நடத்தப்பட்டது என்பதை உணரமுடிகிறது. இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் வன்முறை நடந்தாலும் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருசிறு வன்முறைகூட நடைபெறவில்லை. அமைதி காத்தது மேற்குவங்கம். அந்நேரத்தில் முதல்வராக இருந்த தோழர் ஜோதிபாசு தூத்துக்குடியில் இருந்தார். முதல்வர் இல்லாத நிலையிலும் அரசாங்கமும் முறையாக செயல்பட்டது.. ஆனால், குஜராத்தில் முதல்வர் அங்கேயே இருந்தும் கலவரம் நடந்தது.
குஜராத் கலவரமானது மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில்116 தொகுதிகளிலும் நடந்தது.. கலவரம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்பதை நூலாசிரிய விரிவாக விளக்குகிறார்.
சாதாரணமாக, கலவரம், போர் என்றால், நகரங்களை சூறையாடுவர். ஆனால், சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக கலவரங்களில் குறிப்பிட்ட நபர்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்குவதும் அவர்களின் சொத்துகளை சூறையாடுவதும் நடைபெறுகிறது. இக்கலவரங்களுக்கு பொதுவான ஒரு கூட்டணியை பார்க்கமுடியும். அரசியல்வாதிகள், குற்றவாளிகள், அரசு அதிகாரிகள் எனும் கூட்டணியே இது. மோடி இந்தியாவை ஒரு இந்து அரபு தேசமாக மாற்ற நினைக்கிறார், பிராமணிய ஆதிக்கத்தை நிறுவ முயல்கிறார். நான் மதச்சார்பற்றவன் என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும் என்பதாகவே தற்போதைய நிலை இருக்கிறது. அமைதி பூங்காவென தமிழ்நாட்டை நம்பிக்கொண்டிருக்கிறோம். இதுவும் மாறலாம். பெரியார் பிறந்த நாடு என மேடையில் பேசி பயனில்லை. மகாத்மா காந்தி பிறந்த நாடு தானே குஜராத், அங்கேயும் கலவரம் நடத்தப்பட்டது.
நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அந்த வகையில் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய இந்நூல் மதச்சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க மேலும் வலுசேர்க்கும். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டுமென ஸ்ரீகுமார் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதனை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்  என நிறைவு செய்தார்.
நிறைவாக ஏற்புரையாற்றிய நூலின் ஆசிரியரும் முன்னாள் டிஜிபியுமான ஆர்.பி.ஸ்ரீகுமார் பேசுகையில்,
இந்துக்களையும், இந்தியாவையும் காக்க வேண்டும்
குஜராத் கலவரத்தில் இறந்த மனிதர்களுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறேன். பயப்படாமல் போராடுகிறேன். எனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் இடதுசாரிகளும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம்தான். எனது புத்தகம் எழுதி வெளியிட பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. என்னிடம் உள்ள ஆவணங்களை வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர முயன்றேன். ஒன்பது வாக்குமூலங்களை, 600 பக்க தடயங்களை சமர்ப்பித்தேன். கலவரத்தை அடக்க வந்த ராணுவமும் துணை ராணுவம் தங்களை மாநில அரசு வேலை செய்ய விடவில்லையெனவும் கலவரம் பற்றிய உண்மையான அறிக்கையினை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசிடம் அளித்திருந்தது. அந்த அறிக்கையினை குஜராத் கலவரம் குறித்து விசாரித்த நானாவதி விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பல காங்கிரஸ் தலைவர்களிடம் நேரடியாக கேட்டுக்கொண்டேன். பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த .கே. ஆண்டனியிடமும் மற்றொரு அமைச்சராக இருந்த ஷிண்டேயிடம் முறையிட்டேன். அவர்கள் செவி சாய்க்கவே இல்லை. நீதி விசாரணை அறிக்கையினை வெளியிட கேட்டுக்கொண்டேன், அதற்கும் தயாராக இல்லை. இந்த குஜராத் கலவரத்தில் மாநில முதல்வரின், அவரின் அமைச்சரவை சகாக்களின் பங்கு குறித்து விசாரிக்கவேண்டும் என்றேன். எனது அதிகாரத்தை முழுமையாக தெரிந்து கொண்டதன்காரணமாகவே இப்படுகொலைக்கு காரணமானவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற உறுதியோடு பணியாற்றினேன். அவர்கள் கோரிக்கையை புறக்கணித்தனர்.    நானாவதி விசாரணை குழு எதை பற்றியெல்லாம் விசாரிக்கலாம் என   அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எழுதிக்கொடுத்ததை அப்படியே மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது., வார்த்தைகளில் கூட மாற்றமிருக்கவில்லை. காங்கிரஸ் கட்சியானது குஜராத் கலவர வழக்கை தடம்புரளச்செய்தது.   ஆகவே தான் காங்கிரஸ் கட்சியை ஆன்மா இழந்த மதச்சார்பற்ற கட்சி என்பேன்.
குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சைது ஜாஃப்ரி கொல்லப்பட்டார். சோனியா காந்தி அகமதாபாத் வந்தபோது ஜாஃப்ரி வீட்டுக்கு செல்லவேண்டும் என நினைத்தார். அது இந்துக்களுக்கு எதிரான நிலை என தவறான சமீக்சை அளிக்குமென காங்கிரஸ் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. சோனியா காந்தியை காணச்சென்ற ஜாஃப்ரியின் மனைவியை விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே தூக்கிப்போட்டனர். இதை அவரே என்னிடம் கூறினார்.  குஜராத்தில் பெரும்பாலான மாவட்ட அதிகாரிகளும் கலவரத்திற்கு உடந்தையாக இருந்தனர். முஸ்லீம் அதிகாரிகள் கூட கொல்லப்படும் முஸ்லீம்களுக்கு உதவிசெய்யவில்லை.
இந்துத்துவா வாதிகளிடமிருந்து இந்துசமயத்தை காப்பாற்ற வேண்டும். வஹாபிகளிடமிருந்து இஸ்லாமை காப்பாற்ற வேண்டும். ஆன்மீக இழந்த இஸ்லாமும் இந்துசமயமும் வெளிநாட்டு மேலாதிக்கத்துடன் இணைந்து உண்மையான இந்து-இஸ்லாம் சமயங்களுக்கு ஆபத்தாக விளங்குகிறது. மோடி அண்டு கம்பெனி வகையார்களிடமிருந்து இந்துமக்களை காக்க வேண்டும்.  வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், திருக்குறள் அனைத்தையும் படித்துள்ளேன். வன்முறையின் மூலம் இந்துத்துவாவை கட்டியமைக்கிற இவர்கள் உண்மையான இந்துக்களே அல்ல இவர்களிடமிருந்து இம்மக்களை காப்பாற்ற வேண்டும்.
மேலும் தென்னகத்தின் தனித்தன்மையினை காக்கவேண்டும், திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக்க வேண்டும் எனும் கோரிக்கையினை வைத்து ஸ்ரீகுமார் ஏற்புரையாற்றினார்.
முடிவாக பாரதிபுத்தகாலயம் உபகுழுவின் வி.வெங்கட்ராமன் நன்றிகூறினார்.
அரங்கம் நிறைந்து வழிந்த பாரதிபுத்தகலாயத்தின் குஜராத் திரைக்கு பின்னால் நூல் வெளியீட்டு விழாவில் அரங்கத்தில் கொண்டுவந்திருந்த ஐநூறு புத்தகங்களும் உடனே விற்றுத்தீர்ந்தது. மேலும், இருநூறு புத்தகங்களுக்கான முன்தொகையை வாசகர்கள் பாரதிபுத்தகலாயத்தின் பொறுப்பாளர்களிடம் அளித்து சென்றனர். குறிப்பாக அன்னூர் ஜமாத் பள்ளிவாசலை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் நிர்வாகிகள் நூறு புத்தகங்களுக்கான தொகையை அளித்து மேடையில் நூலை பெற்றுக்கொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் துணிச்சலான காவல்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமாரின் அருகில் வரிசையாக   நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.