Monday, September 8, 2008

புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி:சபேகார் முதல் பகத்சிங் வரை

விடுதலைப் போராட்டத்திற்குள் புரட்சியாளர்களின் வருகை 1897இல் பூனாவில் சபேகார் சகோதரர்கள் சுட்ட துப்பாக்கிக் குண்டுகளின் சப்தத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

பூனா நகரம் முழுதும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, அல்லோலக்கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. ராண்ட் என்பவன் பிளேக் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தான். அவன் மிகவும் கொடூரமான முறையில் நகர மக்களிடம் நடந்து கொண்டான். பூனாவில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கட்டாயம் வீட்டைக் காலி செய்துவிட்டு ஊரை விட்டே ஓடிச்சென்று விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான். இந்த ஆணையைப் பொறுத்தவரையில் மேலோட்டமாகப் பார்த்தால் தவறு ஒன்றும் இல்லாததுபோலத்தான் தோன்றும். ஆனால் இதனை அமல்படுத்த ராண்ட் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவனை மக்களின் கடும் வெறுப்புக்குள்ளானவனாக மாற்றியது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து துணிமணிகளோ அல்லது வேறு உடைமைகளோ எதையுமே எடுத்துக்கொள்ளாமல் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

1897 மே 4 அன்று, லோகமான்ய திலகர், தன்னுடைய கேசரி இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில், மக்கள் மீது வேண்டும் என்றே அடக்குமுறை ஏவப்பட்டிருப்பதற்கு அதிகாரிகளை மட்டுமல்ல, அரசாங்கத்தையே கடுமையாகச் சாடி இருந்தார். அவர் ராண்ட்டை, கொடுங்கோலன் என்றும், அரசாங்கம் “மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறது” என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.பின்னர் சிவாஜித் திருநாள் வந்தது. அந்த சமயத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் ஒன்றில், 1897 ஜூன் 12 அன்று, திலகர் ஆற்றிய தலைமையுரையில் கூறியதாவது:

“சிவாஜி, அஃப்சல்கானைக் கொன்றதன் மூலம் பாவம் ஏதும் செய்தாரா? இதற்கான விடையை மகாபாரதத்திலேயே காண முடியும். கிருஷ்ணபரமாத்மா, தன் சொந்த ஆசிரியரையும் உற்றார் உறவினர்களையும் கூட கொல்ல வேண்டும் என்று, கீதையில் உபதேசம் செய்திருப்பதைப் பார்க்க முடியும். செயல்களின் கனிகளை அறுவடை செய்திடும் ஆசைகள் இல்லாமல் செய்யப்படும் செயல்களை வைத்து ஒருவன் மீது எந்தத் தவறும் சுமத்தப்படக்கூடாது, சிவாஜி தன் சொந்த வயிற்றின் பசியைப் போக்கிக் கொள்வதற்காக எதையும் செய்யவில்லை. மிகவும் உயர்ந்த லட்சியத்துடன், மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் அஃப்சல்கானைக் கொன்றார். திருடர்கள் நம் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்கள், நாம் அவர்களை விரட்டியடிக்கக்கூடிய அளவிற்கு நம்மிடம் வலு இல்லை என்று வைத்துக்கொள்வோம், என்ன செய்வோம்? கொஞ்சம்கூட தயங்காமல் கதவை மூடி வெளியில் தாழிட்டுவிட்டு, அவர்களை வீட்டின் உள்ளே வைத்து உயிரோடு கொளுத்திவிடுவோம். கடவுள், வெள்ளையர்களை இந்துஸ்தான் சாம்ராச்சியத்தை ஆள வேண்டும் என்று பட்டயம் எதுவும் எழுதிக் கொடுத்திட வில்லை. சிவாஜி மகாராஜா, அவர்களைத்தான் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்க முயற்சித்தார். அதன் மூலம் மற்றவர்கள் நினைப்பதுபோல் அவர் பாவம் எதுவும் செய்திடவில்லை. நீங்கள் உங்கள் பார்வையை ஒரு கிணற்றுத் தவளையைப் போல் சுருக்கிக் கொள்ளாதீர்கள். இந்தியத் தண்டனைச் சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று கவலைப்படாமல் அதனை விட்டு வெளியே வாருங்கள். பகவத் கீதை என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள், அதில் மாமனிதர்கள் செய்துள்ள செய்கைகளைப் பரிசீலியுங்கள்.”

திலகர் பேசியபின் அடுத்த பத்து நாட்களில் - அதாவது ஜூன் 22 அன்று - சபேகார் சகோதரர்கள், ராண்ட் மற்றும் அவர்ஸ்ட் என்ற வெள்ளையர்களைக் கொன்றார்கள்.

இவ்வாறு, சபேகார் சகோதரர்களின் செய்கைகளுக்கு உடனடியாக உத்வேகம் அளித்தது, ராண்ட் கொடுங்கோலாட்சியும். திலகரின் வீராவேசமான உரையும் என்று தோன்றுகிறது. ஆனால், இதில் ஒரு பாதியே உண்மை. உண்மையில் சொல்லப்போனால், பிளேக் நோய் வருவதற்கு முன்பே, ராண்ட் அங்கு பிளேக் ஆணையராக வருவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே, சபேகார் சகோதரர்கள் தங்கள் சிந்தனைகளை வெள்ளையர்களுக்கு எதிராக வடிவமைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

பூனாவில் 1894இலேயே ஒரு சங்கத்தை அமைத்திருந்தார்கள், ‘இந்து மதத்திற்குத் தடையாக உள்ளவைகளை நீக்குவதற்கான சங்கம்’ (Society for the removal of obstacles to the Hindu Religion) என்று அழைக்கப்பட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உடல் பயிற்சியும் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. அது, ‘இந்து மதத்தைப் பாதுகாப்பதற்கான சங்கம்’ (Society for the protection of Hindu Religion) என்றும் அழைக்கப்பட்டது. இந்த சங்கத்தின் சார்பில் சிவாஜி மற்றும் கணபதித் திருநாள்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டன. இந்தத் திருவிழாக்களின்போது சபேகார் சகோதரர்கள் பாடிய ஸ்லோகங்களும், பாடல் வரிகளும் இந்து மதத்திற்கு எதிராக உள்ளவர்களுக்கு எதிராக மக்கள் வாளேந்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டன.சிவாஜி குறித்த ஸ்லோகம் பின்வருமாறு போதிக்கிறது:

“கிளிப்பிள்ளைபோல வெறுமனே சிவாஜி கதையைக் கேட்டுக் கொண்டிருந்தால் மட்டும் நாட்டிற்குச் சுதந்திரம் வந்துவிடாது. சிவாஜியைப் போன்றும் பாஜியைப் போன்றும், நல்லவர்கள் அனைவரும் துணிச்சலுடன் களத்தில் இறங்க வேண்டும். வெள்ளையர்களுக்கு எதிராக வாளையும் கேடயத்தையும் ஏந்த வேண்டும். நாட்டைக் காப்பதற்கான யுத்தத்தில் நம் உயிரைத் துச்சமென மதித்துக் குதித்திட வேண்டும். நம் மதத்தை அழித்திட்ட நம் எதிரிகளின் ரத்தம் நிலத்தில் சிந்த வேண்டும். எதிரிகளைக் கொன்ற பின்னர்தான் நாம் இறக்க வேண்டும். வெறுமனே பெண்களைப் போல் கதை கேட்டுக்கொண்டு மட்டும் இருக்கக் கூடாது.”

கணபதி ஸ்லோகம், சிவாஜி ஸ்லோகத்தைவிட இன்னும் ஒருபடி மேலேயே சென்று விடுகிறது. இந்துக்கள் பசுவையும், இந்து மதத்தையும் காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும் என்று அது அழைக்கிறது.“ஐயகோ! இவ்வாறு அடிமையாக உழல்வதை நினைத்து உங்களுக்குக் கொஞ்சமேனும் வெட்கமே கிடையாதா? இப்படி இருப்பதைக்காட்டிலும் செத்துத் தொலையுங்கள். ஐயகோ! கொலைகார பாவிகள் நம் பசுக்களையும் பசுங்கன்றுகளையும் கொன்று குவிக்கிறார்களே! அக்கொடியவர்களிடமிருந்து அவைகளைக் காப்பாற்றுங்கள். சாவதற்கு முன்பு வெள்ளையர்களைக் கொன்று விட்டு சாவுங்கள். சோம்பேறியாக இருந்து பூமிக்கு பாரமாக இருக்காதீர்கள். இது இந்துஸ்தான், இங்கே எப்படி வெள்ளையன் ஆட்சி செய்யலாம்?”

இவ்வாறு சபேகார் சகோதரர்களும் அவர்களது இயக்கத்தைச் சார்ந்தவர்களும், வலுவான மத உணர்வுகளால் உத்வேகம் கொண்டிருந்தார்கள். தங்கள் கண்ணோட்டத்தில் மிகத் தீவிரமான சனாதனவாதிகளாக இருந்தார்கள். இதன் காரணமாகவே இவர்கள் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக இருந்தார்களோ அதே அளவுக்கு முஸ்லீம்களுக்கு எதிராகவும் இருந்தார்கள்.சபேகார் சகோதரர்களின் தாய்நாட்டுப்பற்று இவ்வாறு இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர்கள் இந்து மதத்தையும் பசுக்களையும் காப்பாற்றுவதற்காக வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்கு முயன்றார்கள். அனைத்து மக்களும் ராண்டுனுடைய ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோல் நடவடிக்கைகளினால் அவன்மீது கடும் வெறுப்பு கொண்டிருந்ததாலும் ராண்டுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். சபேகார் சகோதரர்கள் நடவடிக்கைகளுக்கு வேறேதேனும் காரணிகள் காரணமாக இருந்திருக்கின்றனவா என்பதைப் பொறுத்தவரை அவர்கள் 1857இல் நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் அல்லது பிரெஞ்சுப் புரட்சி அல்லது இத்தாலி புரட்சி ஆகியவற்றின் விளைவாக உத்வேகம் அடைந்தார்கள் என்பதற்கு ஆவணங்களின் மூலம் எவ்விதச் சான்றும் நமக்குக் கிடைக்கவில்லை. இத்தகை வரையறைகள் இருந்தபோதிலும், நீதிமன்றத்தின் விசாரணையின்போதும் அதன் பின்னரும் அவர்கள் காட்டிய வீர தீரத்தையோ அல்லது அவர்களது அர்ப்பணிப்பு உணர்வையோ, எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. அம்மூன்று சகோதரர்களும் தூக்குமேடைக்கு நிமிர்ந்த தலையுடன் செம்மாந்து சென்றார்கள். இவ்வாறு நாட்டின் அடிமைத்தனம் குறித்தும் சுதந்திரம் பெறுவது தொடர்பாக மத ரீதியிலான அணுகுமுறையை மேற்கொள்வது என்பது சபேகார் சகோதரர்களோடு மட்டும் நின்று விடவில்லை. சாவர்கர் சகோதரர்களும் இதேபோன்று மத ரீதியிலேயே இருந்தார்கள்.

“வங்காளத்தைச் சேர்ந்த போராளிகளும்கூட மதத்தின் பேராலேயே மக்களை அணுகினார்கள். மக்களை எழுச்சியுறச் செய்வதற்கான ஆயுதமாக மட்டும் மதத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை. அவர்களே மிகத்தீவிரமான மதப்பற்றாளர்களாகவும் இருந்தார்கள்.”

மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் பங்கிம் சந்தர் சட்டர்ஜியால் 1902இல் அனுசிலான் சமிதி (பண்பாட்டுப் பேரவை) அமைக்கப்பட்டது.

இது செயல்பட்ட முறை குறித்து தாரினி சங்கர் சக்ரவர்த்தி எழுதியிருப்பதாவது:“அனுசிலான் சமிதியில் புரட்சிகரப்பணிகளைச் செய்வதற்காகச் சேர்ந்திட்ட உறுப்பினர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டார்கள். மதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு பிரிவாகவும், மதம் பற்றி கவலைப்படாத புரட்சிகரப்பணிக்காக மட்டுமே சேர்ந்தவர்கள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டார்கள். மதநம்பிக்கையுடன் இருந்த புரட்சியாளர்கள் மட்டுமே இந்தத் தோட்டத்தில் (மாணிக் தல்லா சகன்) வசித்தார்கள். இந்தப் பையன்கள் மட்டுமே முதல்தர புரட்சியாளர்களாகவும் கருதப்பட்டார்கள்.”5அந்தக்காலத்தில் வங்கத்திலிருந்த புரட்சியாளர்களில் பெரும்பான்மையினர் மிகக் கணிசமான அளவில் பங்கிம் சந்தர் சட்டர்ஜி மற்றும் சுவாமி விவேகானந்தரின் செல்வாக்கிற்குள் இருந்தார்கள். அனுசிலான் சமிதி உறுப்பினர்கள் மிகவும் பயபக்தியுடன் இந்து மத நூல்களிலிருந்து - குறிப்பாக கீதையிலிருந்து - மேற்கோள்களை வாசித்தார்கள்.”

“பங்கிம் சந்தர் சட்டர்ஜி மற்றும் சுவாமி விவேகானந்தரின் அறிவார்ந்த பாரம்பர்யத்தின் பின்னணியில் வங்கத்தைச் சேர்ந்த புரட்சியாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் மதச் சடங்கு சம்பிரதாயங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும், இந்து மதத்தின் புராதன பாடல்கள் மற்றும் ஸ்லோகங்களிலிருந்தும் உத்வேகம் பெற்றார்கள்.”

இவ்வாறு புரட்சி இயக்கத்தின் முதல் கட்டத்தின் போது (1897 - 1913) புரட்சியாளர்கள் பொதுவாக இந்து மதத்திலிருந்து உத்வேகம் பெற்றார்கள். இது ஒன்றும் திடீரென்று ஏற்பட்டதாகச் சொல்வதற்கில்லை. இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உண்டு. பத்தொன்பதாவது நூற்றாண்டின் எழுபதுகளில் இருந்து இந்திய இளைஞர்கள் மத்தியில் புதியதொரு சிந்தனைத் துளிர்விடத் தொடங்கியது. படித்த இளைஞர்கள் அரசியல் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினார்கள். புதிய வகையிலான தேசியவாதம் உருப்பெற்று வந்தது. இந்தப் புதிய வகையிலான தேசியவாதம் முன்பிருந்து வந்த அரசியல் சிந்தனைகளை விட கொஞ்சம் ஆழமானதாக இருந்தது. மக்களை ஒன்றுபடுத்துவதில் மதத்திற்கு ஒரு பங்கு உண்டு, அதே சமயத்தில் அதில் சில எதிர்மறை அம்சங்களும் இருந்தன. பால கங்கார திலகர், பிபின் சந்திரபால், பிரம்மா பந்தவ் உபாத்யாயா மற்றும் அரவிந்த கோஷ் போன்ற புரட்சிகர தேசியத் தலைவர்கள் அரசியலில் மதத்தைக் கலந்து கறைபடுத்திட முயன்றார்கள். அவர்களையறியாமலேயே அவர்கள் மதவாத அரசியல் என்னும் நச்சு விதையை விதைத்தார்கள். காந்தி மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் இப்பாரம்பர்யத்தை மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் அதே சமயத்தில் புரட்சியாளர்கள் இவற்றை நிராகரித்தார்கள். 1914களில் புரட்சியாளர்கள் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து புரட்சி இயக்கத்தில் இரண்டாவது கட்டம் தொடங்கியது. அரசியலில் மதத்தைக் கலந்ததானது இன்றளவும் நாட்டின் ஒற்றுமைக்கும் மக்கள் அனைவருடனும் சுமுகமாகப் பழகுவதற்கும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சபேகார் சகோதரர்களும், வங்கத்தைச் சேர்ந்த புரட்சியாளர்களும் இவ்வாறு பழமையான இந்துக் கலாச்சாரத்திலிருந்து உத்வேகம் பெற்றிருந்தபோதிலும், இவர்கள் இருவருக்கும் இடையிலும் வித்தியாசங்கள் உண்டு.1908 ஏப்ரல் 30 அன்று கிங்ஸ்போர்ட் கார் ஷெட்டில் ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் இரு பெண்கள் கொல்லப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய ஜூன் 22 கேசரி இதழில், “1897இல் நடைபெற்ற கொலைக்கும், வங்க வெடிகுண்டு அட்டூழியத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. வங்கத்தில் வெடிகுண்டு நடவடிக்கையில் இறங்கிய உறுப்பினர்களை விட, சபேகார் சகோதரர்கள் மிகத் துல்லியமாகத் தங்கள் காரியத்தை நிறைவேற்றினார்கள். வங்காளிகளின் குறிக்கோள் மற்றும் அதனை அடையும் வழிமுறைகள் இரண்டுமே மிகவும் பாராட்டப்படத் தக்கதாகும். ... 1897ஆம் ஆண்டில் புனாவைச் சேர்ந்தவர்கள் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட சமயத்தில் அரசின் அடக்குமுறையையும் கடுமையாக எதிர்கொண்டார்கள். அதன் காரணமாக ஆட்சியாளர்கள் மீது எழுந்த ஆத்திரத்தில் அவ்வாறு செய்தார்கள். அதில் அரசியல் அம்சம் அவ்வளவாக இல்லை. அன்றைய ஆட்சி நிர்வாகம் மிக மோசமாக இருந்தது. அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டு, மிரட்டப்படவில்லை என்றால், தங்கள் அதிகார முறையை மாற்ற ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தது. ஆனால், இதுபோன்றதொரு முக்கியமான கண்ணோட்டம் சபேகார் சகோதரர்களிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, பிளேக் நோயின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே இருந்தது. ஆனால், வங்க புரட்சியாளர்கள் அதைவிட சற்றே விரிந்த அளவில் தங்கள் பார்வையை விசாலாமாக்கி இருந்தார்கள். தனி வங்காளம் அமைக்கப்பட வேண்டும் என்கிற அளவிற்கு அவர்கள் சிந்தனை இருந்தது.’’9அதுமட்டுமல்ல, வங்க புரட்சியாளர்கள், மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கூட, இயக்கத்தின் இறுதி லட்சியத்தைப் பொறுத்தவரை, 1902-இலேயே அவர்கள் ஒரு முக்கியமான பிரகடனத்தை வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆண்டில்தான் வங்க புரட்சியாளர்கள் தங்களை அனுசிலான் சமிதி (பண்பாட்டுப் பேரவை) என்னும் ஒரு கட்சியாக தங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் தங்கள் சமிதியின் சார்பாக வெளியிட்ட பிரகடனம் பின்வருமாறு:‘‘.... அனுசிலான் கனவு காணும் சமூகத்தில், ஏழைகள் என்றோ கல்வியறிவற்றவர்கள் என்றோ எவரும் இருக்க மாட்டார்கள். அதேபோல் கோழைகளுக்கும் கொடுமைக்காரர்களுக்கும் இங்கு இடமில்லை. மோசமாக உடல்நலமின்றி இருப்பவர்களும் இங்கே இருக்க மாட்டார்கள். அத்தகையதோர் உன்னதமான சமூகத்தைக் கட்டுவதற்காக, அனைத்து விதமான சமத்துவமின்மையையும் நாம் அழித்து ஒழித்திட இருக்கிறோம். மனித சமுதாயம் ஏற்றத்தாழ்வாக வுள்ள ஒரு சமூகத்தில் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. செல்வாதார சமத்துவமின்மை, சமூக சமத்துவமின்னை, மதரீதியான சமத்துவமின்மை, பிராந்திய சமத்துவமின்மை என அனைத்து சமத்துவமின்மைகளையும் அழித்தொழித்து நாட்டில் வாழும் அனைவருக்கும் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும்.

இதனைக் கொண்டுவருவதென்பது ஒரு தேசிய அரசாங்கத்தின் மூலமாக மட்டுமே சாத்தியம். அனுசிலான் கனவு காணும் சமூகத்தை அடிமைத்தனமாக உள்ள ஒரு நாட்டில் நிறுவுவது முடியாது. அதற்காகத்தான், அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று அனுசிலான் அறைகூவல் விடுக்கிறது.

அனுசிலான், இந்தியாவிற்கு முழுச் சுதந்திரம் தேவை என்று விரும்புகிறது.’’

அனுசிலான் சமிதியின் இந்தப் பிரகடனம், உண்மையில் ஒரு பாய்ச்சல் வேக முன்னேற்றமேயாகும். இங்கேதான் வங்க புரட்சியாளர்கள், மராட்டியத்தைச் சேர்ந்த 1897 புனா புரட்சியாளர்களைவிட முந்திச் சென்றுள்ளார்கள். சபேகார்கள், ஆங்கிலேயர்களை வெறுத்தார்கள் என்பது உண்மை. ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தெளிவில்லாமல் இருந்தார்கள். ஆனால், வங்க புரட்சியாளர்கள் அப்படியில்லை. அதேபோன்று அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்களும் அல்ல. அவர்கள் மத நம்பிக்கையுள்ளவர்கள்தான், இந்து நூல்களிலிருந்து உத்வேகம் பெற்றவர்கள்தான். ஆயினும்கூட அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்று கூற முடியாது. இந்தக் காலகட்டத்தில் பஞ்சாபில் தோன்றிய புரட்சியாளர்கள், ஆரம்பத்திலிருந்தே வகுப்புவாத பலவீனமற்றவர்களாகவே இருந்தார்கள். சர்தார் அஜித் சிங், லால் சந்த் ஃபாலக், சுஃபி அம்பா பிரசாத், லாலா ஹர்தயாள் மற்றும் அவர்களுடைய தோழர்களும் மதச்சார்பின்மைக் கொள்கையை உயர்த்திப் பிடித்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரைக்கும் மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வாழ்த்த புரட்சியாளர்களுக்கு உத்வேகம் அளித்த மற்றொரு விஷயம், 1857 இந்திய முதல் சுதந்திரப்போரின் வரலாறாகும். இது தொடர்பாக சாவர்க்காரின் புத்தகம் லண்டனில் 1907 அல்லது 1908 ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது. அதில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும்கூட, (அந்தக் காலத்தில் இருந்த நிலைமைகளை ஆய்வு செய்யும்போது, அவ்வாறு குறைபாடுகள் இருப்பது இயற்கையே) அப்புத்தகம் மனிதகுலத்திற்கு மாபெரும் சேவை செய்திருக்கிறது. 1857 சுதந்திரப் போராட்டம் குறித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவு எழுத்தாளர்கள் எழுதியிருந்த அவதூறுகளையும். பொய்களையும் நிராகரித்தது. அது விஷயத்தை நேரடியாகப் பதிவு செய்தது. அதனால்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அந்நூலை உடனடியாகத் தடை செய்தது. ஆயினும் அந்நூல் மிகவும் ரகசியமாக கையெழுத்துப் பிரதியாகவே பல்லாயிரக்கணக்கில் எழுதப்பட்டு, சக புரட்சியாளர்கள் மத்தியிலும், ரகசியமாக சுற்றுக்கு விடப்பட்டது.”

உண்மையில், 1857 மக்கள் எழுச்சி, விடுதலைப் போராட்டத்தின்போது, அனைத்து விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகம் அளிக்கும் உந்து சக்தியாக விளங்கி வந்தது.இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகால புரட்சியாளர்களுக்கு உத்வேகம் அளித்த மற்றுமொரு உந்துசக்தி என்பது, அப்போது உலகில் நடைபெற்ற பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ரஷ்யப் புரட்சியாளர்களின் கதைகளாகும்.*** *** ***முதல் கட்ட இயக்கத்தின் பலவீனங்களும், வரையறைகளும்முதல் கட்ட இயக்கத்தில் பூனா மற்றும் வங்கத்தின் புரட்சியாளர்களின் முதல் பலவீனம் என்பது அவர்களது இந்து மதச் சார்பாகும். இது, முஸ்லீம் மக்களை இயக்கத்திற்கு வெளியே ஒதுக்கி வைத்துவிட்டது. வங்கப் புரட்சியாளர்கள் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் அல்ல. ஆனால், அவர்கள் முஸ்லீம்கள் மத்தியிலிருந்து முன்னணி ஊழியர்களைத் தேர்வு செய்திட முயற்சிகள் ஏதும் மேற் கொள்ளவில்லை. இவ்வாறு கூறுவதற்கு இங்கும் அங்கும் ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதிவிலக்குகளே விதியாக முடியாது, அல்லவா!இரண்டாவது பலவீனம் என்பது புரட்சியாளர்களுக்கு மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு இல்லாமல் இருந்ததாகும். சுதேசி இயக்கம் நடைபெற்ற ஒரு நான்கைந்து ஆண்டுகள், வங்கப் புரட்சியாளர்கள் மக்களிடம் சென்று, அவர்களைச் செயலில் இறங்கத் தூண்டினார்கள் என்றாலும், பொதுவாக புரட்சியாளர்கள் தனிநபர் செயல்பாட்டையே - அதாவது தனிநபர் பயங்கரவாதம் என்று அரசாங்கத்தின் மொழியில் கூறப்படுவதையே - மிகவும் சார்ந்திருந்தார்கள்.மக்கள் அவர்களது தன்னல மறுப்பு உணர்வினையும், அவர்களது வீரத்தையும் தைர்யத்தையும் மிகவும் போற்றினார்கள். ஆனால் அதே சமயத்தில் தங்கள் அன்றாடப் பிரச்சனைகளுடன் அவர்களது செயல்பாட்டை இணைப்பதற்கு அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக ஏகாதிபத்தியவாதிகள், புரட்சியாளர்களை நசுக்குவது என்பது மிக எளிதாக இருந்தது.மூன்றாவது குறைபாடு, புரட்சியில் பங்கேற்றவர்களின் வர்க்க குணாம்சம் குறித்ததாகும். புரட்சி இயக்கத்தில் பங்கேற்ற முன்னணி ஊழியர்களில் பெரும்பாலோர், கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். அன்றைய காலகட்டத்தில் அது முற்றிலும் இயற்கையே. இந்தக் காலகட்டத்தில்தான் இளைய சமுதாயம் அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்து முழு விடுதலை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இது தன்னை ‘‘முழுமையாக வளர்ந்த மனிதர்களாகக்’’ கருதிக் கொண்டது. இளைஞர்கள் வெகு காலம் காத்துக்கொண்டிருக்கத் தயாராயில்லை. ஆனால், வயதான தலைவர்கள் மனு கொடுப்பது, தன்னாட்சிக்காக தீர்மானம் நிறைவேற்றுவது என்ற நிலையோடு நிறுத்திக்கொண்டார்கள், அவ்வளவுதான். அதற்கு மேல் போக அவர்கள் தயாராயில்லாமல் இருந்தனர். ஆயினும், படித்த இளைஞர்கள் புதியதோர் பொன்னுலகைப் படைப்பதற்காக, ஜீவமரணப் போராட்டத்தில் துணிந்திறங்க முன்வந்தனர். நாட்டு விடுதலை, தீவிரமான ஆயுதப் போராட்டத்தின் மூலமே சாத்தியம் என்று இளைஞர்கள் நம்பினார்கள். இதற்காக அவர்கள் தங்கள் உயிரையும் இழக்கச் சித்தமாக இருந்தார்கள். மத்தியதர வர்க்கம் என்பது இயற்கையாகவே ஊசலாடும் வர்க்கமாகும். அதற்கென்று தனியே எவ்வித குணமும் கிடையாது. முதலாளித்துவ வர்க்கத்துடன் சேரும்போது, பிற்போக்காளர்களாக மாறும். தொழிலாளி வர்க்கத்துடன் இணையும்போது, புரட்சிகர சக்தியாக மாறும். ஆனால் தனியே நின்றால், தலைமை தாங்குவதற்கான வல்லமை கிடையாது. எனவே தனிப்பட்ட ரீதியாக அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அநேகமாக தனிநபர் நடவடிக்கைகளாகவே அமைந்திடும். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் நாட்டில் முதலாளித்துவ வர்க்கமோ அல்லது தொழிலாளர் வர்க்கமோ விடுதலைக்கான மக்கள் இயக்கத்தைக் கொண்டு செல்வதற்கான வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. இயற்கையாகவே, தங்கள் கனவை நனவாக்குவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருந்த மத்தியவர்க்க இளைஞர்கள், தங்கள் முன் இருந்த சவாலை. தங்கள் சொந்த வழியில் எதிர்கொண்டார்கள். தொடக்கத்தில் தனிநபர் செயல்பாடுகள் மூலமாக அவர்கள் செயல்பட்டார்கள். அவர்களுக்கிருந்த வரையறையின் காரணமாக வரலாற்று ரீதியாக அவர்களால் அந்த அளவிற்குத்தான் செல்ல முடிந்தது. ஆயினும், அடிமைத்தனத்தின் நிலைமைகளுக்கு அடிபணிந்து அவமதிப்புக்குள்ளாவதைவிட, எதிரியைத் தாக்கிவிட்டு, மரணமடைவது என்பது எப்போதும் சிறப்பானதேயாகும். எவரேனும் ஒருவர் முதல் தாக்குதலைத் தொடுத்தேயாக வேண்டும். அவ்வாறு முதல் தாக்குதலைத் தொடுப்பவர், வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் போகலாம், அநேகமாக மிகக் கொடுமையான முறையில் நசுக்கப்படலாம். ஆனாலும், தியாகங்கள் எப்போதும் வீண்போகாது.

ஒரு சிறு நீர் ஊற்றுத்தான் பேரிரைச்சலோடுப் பாய்ந்தோடும் ஆறாக மாறுகிறது. ஒரு சிறு தீப்பொறிதான் காட்டுத்தீயையே உண்டாக்குகிறது. ஒரு புரட்சியாளன், வெகுஜனங்களுடன் இணையும்போது, பழைய சமூகம் புதியதொரு சமூகமாக மாற்றப்படுகிறது. கனவு நனவாகிறது. இந்தவகையில்தான் புரட்சிகள் உருவாகின்றன. இந்தியாவிலும் புரட்சி இயக்கம் இந்த மாதிரிதான் உருவெடுத்து வந்தது.“இந்தியப் புரட்சியாளர்கள், நவீன காலகட்டத்தின் மிகப்பெரிய ஏகாதிபத்திய காலனியாதிக்க சக்தியை எதிர்த்து - கற்பனை செய்ய முடியாத அளவிற்குத் தாங்கள் எதிர் கொண்ட கஷ்டங்களை எல்லாம் துச்சமென மதித்து - சபேகார் சகோதரர்கள், குடிராம், கணய்லால், மண்டலால் திங்ரா போன்ற எண்ணற்ற புரட்சி வீரர்கள் ஆயுதம் ஏந்தியது மட்டுமல்லமல், அவர்கள் செய்திட்ட சர்வபரித் தியாகம்தான் ஆழ்துயிலில் இருந்த நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி, நாட்டு விடுதலை மற்றும் ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கான சிந்தனைகளை அளித்தது. புரட்சி இயக்கம்தான் நாட்டின் வரலாற்றில் முதன்முதலாக நாட்டிற்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என்பதையும் நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான போராட்டத்தின் குறிக்கோள் என்பது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடனான அனைத்து அரசியல் பிணைப்புகளையும் முறித்துக்கொள்வது என்பதையும் லட்சியமாக முன்னிறுத்தியது. இந்தக் குறிக்கோளுடன் அவர்கள், அந்நிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக, ஆயுதப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டினார்கள்.

‘‘அவர்கள் ஆரம்பம் முதலே நாட்டின் சுதந்திரத்திற்காக, மக்களைத் திரட்டும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினார்கள். தங்கள் கொள்கையிலிருந்து கிஞ்சிற்றும் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. ‘‘அவர்கள் புரிந்திட்ட தியாகம், மக்களின் மத்தியில் அவர்கள் மீதான மதிப்பை உயர்த்தியது. அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான வெறுப்பை அதிகப்படுத்தி, அவர்களுக்கெதிராகப் போராட வேண்டும் என்கிற உணர்வையும் மேலோங்கச் செய்தது.’’*** *** ***கதார் கட்சி அமைக்கப்பட்டதுஇந்தக் காலகட்டத்தில்தான் பல புரட்சியாளர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் குடியேறினார்கள். அவர்களின் பிரதான குறிக்கோள், இந்தியாவில் புரட்சிப் பணியை மேற்கொள்வதற்காகப்¢ பிரச்சார மேற்கொள்ளுதல், நிதி வசூலித்தல், வீரம், அறிவு, சர்வபரித் தியாகம், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய இளைஞர் பட்டாளத்தைச் சேர்த்தல் என்பவைகளாகும். அவர்கள் தங்கள் குறிக்கோளில் சற்றே வெற்றியும் பெற்றார்கள். ஆயினும், அவர்களுடைய இறுதி லட்சியத்தைப் பொறுத்தவரை - அதாவது அவர்கள் பெறவிருக்கும் சுதந்திர இந்தியாவின் தன்மை குறித்து சரியான தெளிவில்லாமலேயே இருந்தார்கள். புரட்சிக்குப்பின் அமையவிருக்கும் அரசாங்கத்தின் வடிவம் எப்படி இருக்க வேண்டும்? மற்ற நாடுகளில் உள்ள புரட்சிகர சக்திகளுடன் தங்கள் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? புதிய அமைப்பில் மதத்தின் நிலை என்ன? இவை போன்ற பல கேள்விகளுக்கு அந்தக் காலத்தில் செயல்பட்ட புரட்சியாளர்கள் தெளிவில்லாமலேயே இருந்தார்கள். இது போன்றதொரு நிலை, 1913 வரை நீடித்தது. இவற்றின் மீது ஒரு சரியான நிலைப்பாட்டை கதார் கட்சித் தலைவர்கள் எடுத்தார்கள்.இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற புரட்சியாளர்கள், பிரிட்டிஷாரின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கென்று தப்பி ஓடிக்கொண்டே இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கடைசியில் அமெரிக்காவில் தஞ்சம் புகத் தீர்மானித்தார்கள், அந்நாட்டைத் தங்கள் செயல்திட்டங்களின் தலமாக மாற்றினார்கள். தரக் நாத் தாஸ், சைலேந்திர கோஷ், சந்திரா சக்ரவர்த்தி, நந்திலால் கர், பசண்ட் குமார் ராய், சரங்க்தார் தாஸ், சுசிந்திரநாத் போஸ் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஜி.டி.குமார், லாலா ஹர்தயால் போன்றோர் பின்னர் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறியிருந்த இந்தியர்களைச் சந்தித்து, நிதி திரட்டினார்கள், செய்தித்தாள் தொடங்கினார்கள், பல்வேறு இடங்களில் ரகசிய சங்கங்களை அமைத்தார்கள்.தரக் நாத் தாஸ், ‘இந்துஸ்தானை விடுவிப்போம்’ என்ற ஒரு செய்தித்தாளைத் தொடங்கினார். அமெரிக்காவில் குடியேறியிருந்த இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் விரிவுரைகள் ஆற்றினார். சமிதி என்னும் ஒரு ரகசிய சங்கத்திற்கும் இவர் தலைமை தாங்கினார். சைலேந்திர நாத் போஸ், சரங்தார் தாஸ், ஜி.டி.குமார், லஸ்கர் மற்றும் கிரீன் என்கிற ஓர் அமெரிக்கர் இதில் மற்ற உறுப்பினர்களாவார்கள். ராம் நாத் பூரி என்பவர், 1908இல் ஓக்லாண்டில் இந்துஸ்தான் சங்கம் என்ற ஒரு சங்கத்தை அமைத்தார். இதன் சார்பில் விடுதலையின் சுற்றறிக்கை என்னும் செய்தித்தாளை வெளியிட்டார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் ஏன் வெளியேற்றப்பட வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளை இதில் அவர் பிரசுரித்தார். ஜி.டி.குமார், வான்கூவரிலிருந்து சுதேசி சேவக் என்னும் செய்தித்தாளை பிரசுரித்தார். அங்கிருந்த ரகசிய சங்கம் ஒன்றிலும் அவர் உறுப்பினராக இருந்தார். இந்த சங்கத்தில் ரகிம் மற்றும் சுந்தர் சிங் என்பவர்களும், இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். சுந்தர் சிங், ஆர்யன் என்ற பெயரில் ஒரு செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார். இப் பத்திரிகையின் மூலம் பிரிட்டிஷ் எதிர்ப்பு பிரச்சாரத்தை அவர் கொண்டுசென்றார். ரகிம் மற்றும் ஆத்மராம், வான்கூவரில் ஐக்கிய இந்தியர் குழு ஒன்றினை அமைத்தார்கள்.லாலா ஹர்தயால், அமெரிக்காவிற்கு 1911இல் வந்து சேர்ந்தார். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். சான்பிரான்சிஸ்கோவில் ‘இந்துஸ்தான் மாணவர் சங்கம்’ என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். 1913இல் அஸ்டோரியாவில் இந்துஸ்தான் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. கரீம் பக்ஸ், நவாப் கான், பல்வந்த் சிங், முன்ஷி ராம், கேசர் சிங் மற்றும் கர்த்தார் சிங் ஆகியோர் அதன் உறுப்பினர்களாவார்கள். சிகாகோவில் செயிண்ட் ஜான் என்னுமிடத்தில் தாகூர் தாஸ் மற்றும் அவரது நண்பர்கள். 1913இல் ‘அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் சங்கத்தை’ அமைத்தார்கள். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு இயங்கி வந்த அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை லாலா ஹர்தயால் உணர்ந்தார். எனவே, அதற்காக கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியப் புரட்சியாளர்களின் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்தில் ‘பசிபிக் கடற்கரையின் இந்துஸ்தானி சங்கம்’ அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. பாபா சோஹன் சிங் பாக்னா மற்றும் லாலா ஹர்தயால் ஆகியோர் முறையே தலைவராகவும் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். லாலா ஹர்தயால் தான் பார்த்துக்கொண்டிருந்த விரிவுரையாளர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சங்கத்தின் முழுநேர ஊழியரானார்.1913 மார்ச்சில், இந்த சங்கத்தின் சார்பாக சான்பிரான்சிஸ்கோவிலிருந்து ஒரு செய்தித்தாள் வெளியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பெர் கதார் என்பதாகும். (இதனை தமிழில் ‘கலகம்’, ‘கலகம் செய்’ என்றும் பொருள் கொள்ளலாம்.-மொழிபெயர்ப்பாளர்) அதன்பிறகு, இந்த சங்கத்தின் பெயரும் ‘கதார் கட்சி’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது, ஒரு நீண்ட அடி முன்னேற்றம்1913இல் கதார் கட்சி அமைக்கப்பட்டதானது, புரட்சி இயக்கத்தில் ஒரு நீண்ட அடி முன்னேற்றம் என்று சொல்லலாம். இது, அரசியலை மதத்திலிருந்து தனியே விடுவித்தது. மதச்சார்பின்மையை சுவீகரித்துக் கொண்டது. மதம் என்பது தனிப்பட்டவரின் சங்கதி என்று பிரகடனம் செய்தது. கதார் இதழ், இந்துக்களையும், முஸ்லீம்களையும் பொருளாதார விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியது. ஏனெனில் நம் அனைவரையும் மதபேதமின்றி பாதிப்பது பொருளாதாரம்தான். பிளேக் நோயினால் இரு மதத்தினருமே இறந்தார்கள். பஞ்சம் தாக்கும்போது, இரு மதத்தினருக்குமே உணவு கிடைக்காமல் மடிந்தார்கள். கூலி மறுக்கப்பட்டதன் காரணமாக பிச்சையெடுக்கும் நிலைக்கு இரு மதத்தினருமே தள்ளப்பட்டார்கள். அதேபோன்று வரம்புமீறிய அளவில் நிலவரி மற்றும் தண்ணீர் வரி செலுத்திட இரு மதத்தினருமே கட்டாயப்படுத்தப்பட்டார்கள். எனவே பிரச்சனை என்பது இந்துக்களுக்கு மட்டுமோ அல்லது முஸ்லீம்களுக்கு மட்டுமோ என்றில்லை. அதுபோல இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் என்றோ அல்லது முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்கள் என்றோ என்றும் பார்க்கக்கூடாது. பிரச்சனை என்பது, இந்தியர்கள் அனைவரையுமே அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கும் பிரிட்டிஷாருக்கு எதிராக, இந்தியாவில் உள்ள அனைவரும் மதவேறுபாடின்றி ஒன்றுபட்டு நிற்பது என்பதேயாகும். இந்து - முஸ்லீம் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இதனை உடைத்திட யாருக்கும் உரிமை கிடையாது.

கதார் கட்சி ‘‘மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்து - முஸ்லீம் - சீக்கியர் ஒற்றுமைக்காக உறுதிபட நிற்கிறது. அதேபோன்று தீண்டப்படுவோர் - தீண்டத்தகாதோர் என்ற பிரிவினையையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய ஒற்றுமை மற்றும் விடுதலைப் போராட்டத்திற்கான ஒற்றுமை என்கிற அடிப்படைக் கொள்கைகளின் கீழ் நின்று, செயல்படுகிறது.’’

இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் அன்றைய தினம் செயல்பட்டு வந்த தலைவர்களின் சிந்தனைகளோடு ஒப்பிடுகையில், கதார் கட்சித் தலைவர்கள் வெகு முன்னேற்றமான சிந்தனைகளோடு செயல்பட்டு வந்தார்கள் என்று கூறமுடியும். சோஹன் சிங் ஜோஸ் கருத்தின்படி, கதார் புரட்சியாளர்கள், அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் அரை நூற்றாண்டுக்காலம் முன்னேறிச் சென்றிருந்தார்கள்.

1914 ஜூலை 14 கதார் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. லாலா ஹர்தயால் அக்கட்டுரையை எழுதியிருந்தார். அதில், அவர், ‘‘பிரார்த்தனை செய்வதற்கான நேரம் முடிந்துவிட்டது. இப்போது வாள் எடுக்கும் நேரம் வந்திருக்கிறது. நமக்கு இப்போது புரோகிதர்களோ அல்லது முல்லாக்களோ தேவையில்லை. ...என்று எழுதியிருந்தார். 1913இல் போர்ட்லாண்டில் அவர் ஓர் விரிவுரையாற்றினார்.

அப்போது அவர், ‘‘கதார் புரட்சியாளர்கள் வரவிருக்கும் புரட்சியை எதிர்நோக்கத் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்குச் செல்ல வேண்டும், அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் பிரிட்டிஷாரை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ளதுபோல் ஒரு ஜனநாயக அரசாங்கத்தை அமைத்திட வேண்டும். அவ்வாறு அமைத்திடும் ஜனநாயக இந்தியாவில் அனைத்து இந்தியர்களும் ஜாதி, மத, வர்ண வேறுபாடின்றி சமமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படுவார்கள்.எப்போதும் தன்னை அராஜகவாதி என்று அழைத்துக்கொள்ளும் லாலா ஹர்தயால், ஒருசமயம் இவ்வாறு பிரகடனம் செய்தார்.

‘‘எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியாது. அவர்கள் ஒரே மதத்தை - முகமதியர்களாகவோ அல்லது சீக்கியர்களாகவோ அல்லது வைஷ்ணவர்களாகவோ இருந்தாலும் சரி... பணக்காரன் எப்போதும் ஏழைகளை ஆளவே முற்படுவான். ... எனவே, பொருளாதார சமத்துவமின்றி, சகோதரத்துவம் என்பது வெறும் கனவே.’’

கதார் கட்சி, இந்தியர்கள் மத்தியில் வகுப்பு நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை முக்கிய கடமையாகக் கொண்டிருந்தது. ஜூகந்தர் ஆஸ்ரமம் என்று அழைக்கப்படும் கதார் கட்சி அலுவலகத்தில், அனைத்து சாதி இந்துக்களும், தீண்டத்தகாதோர் என்று கூறப்பட்டவர்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் ஒன்றாக அமர்ந்தே உணவருந்தினார்கள். மதம், அரசியலில் கலக்கப்படும்போது, மிகக் கொடிய நஞ்சாக மாறிவிடுகிறது. அது நாட்டின் முக்கியமான அங்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடுகிறது, சகோதரர்களுக்கிடையே சண்டையை மூட்டிவிடுகிறது, மக்களின் உன்னதப் பண்புகளை இழக்கச் செய்துவிடுகிறது, விசாலமான பார்வையைச் சுருக்கி உண்மையான எதிரியை இனங்கண்டுகொள்ள முடியாமல் செய்து விடுகிறது, மக்களின் போர்க்குணத்தையே மழுங்கடிக்கச் செய்து விடுகிறது, ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிக்கெல்லாம் மிக எளிதாக இரையாகச் செய்துவிடுகிறது. எனவே, அவர்கள் அரசியலில் நஞ்சைக் கலக்காதீர்கள் என்று மிக உறுதியாகப் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் சொல்லியதைப்போல் செயலிலும் காட்டினார்கள்.

இந்திய அரசியலில் அவர்கள் எய்திட்ட முதல் மகத்தான சாதனை இதுவாகும். கதார் புரட்சியாளர்கள் புரிந்திட்ட இரண்டாவது பெரிய சாதனை என்பது அவர்களிடமிருந்த சர்வதேச கண்ணோட்டமாகும். ‘‘கதார் இயக்கம், சர்வதேச இயக்கமாகும். அதன் கிளைகள் மலேயா, ஷங்காய், இந்தோனேசியா, கிழக்கிந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், மணிலா, நியுஜிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், பிஜி, பர்மா மற்றும் பல நாடுகளில் இருந்தன. உலகின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் கதார் கட்சியின் கொள்கைகளின்பால் மாபெரும் அளவில் பற்றுக் கொண்டிருந்தனர். ... கதார் கட்சியினர் அனைத்து நாடுகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார்கள்.’’

கதார் கட்சியின் சார்பில் பல தோழர்களால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கவிதை,

‘‘ஓ, சகோதரர்களே! சீனாவிற்கு எதிரான யுத்தத்தில் சண்டையிடாதீர்கள், ... இந்திய - சீன - துருக்கி மக்கள் அனைவரும் உண்மையில் சகோதரர்கள். நம்முடைய சகோதரத்துவத்தைக் குலைத்திட எதிரி அனுமதிக்கப்படக்கூடாது’’

என்பதாகும்.

1911இல் வான்கூவரில் ஒரு சங்கம் அமைக்கப்பட்டது. அதன் குறிக்கோள் இந்துஸ்தான் நாட்டின் சார்பாக உலகின் அனைத்து நாடுகளுடனும் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவத்தை நிறுவுவதேயாகும். லாலா ஹர்தயால் தன்னுடைய பேச்சுக்களின்போது, தங்கள் கட்சி இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதற்குமே புரட்சி ஏற்படுவதற்காக அமைக்கப்பட்டது என்று பிரகடனம் செய்து வந்தார்.21கதார் புரட்சியாளர்கள், தங்களுடைய பிரச்சாரத்தில், உலகின் தொழிற்சங்கங்கள் அனைத்திற்கும் அன்பு வேண்டுகோள் விடுத்தனர். ஏகாதிபத்திய முறையை உலகிலிருந்தே தூக்கி எறிந்திட உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

*** *** ***தத்துவார்த்த நிலையும் திட்டமும்கதார் கட்சி, பிரிட்டிஷ் எதிர்ப்புக் கட்சியாக இருந்தது, அதன் குறிக்கோள் இந்தியாவை பிரிட்டிஷாரின் நுகத்தடியிலிருந்து விடுவித்து, இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அமெரிக்க பாணி குடியரசை அமைப்பதாகவும் இருந்தது. பிரிட்டிஷாரை நாட்டிலிருந்து வெளியேற்ற வெறுமனே தீர்மானங்கள், தூதுக்குழுக்கள், முறையீடுகள் செய்து பயனில்லை என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அதேபோன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மிதவாதத் தலைவர்கள் வளைந்து கொடுத்து ஆடிக்கொண்டிருப்பதையும் அவர்கள் அடியோடு வெறுத்தார்கள். தாங்கள் ஏற்படுத்த விரும்பிய குடியரசானது, அரசருக்குரிய அந்தஸ்துக்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப் பட்ட ஜனாதிபதியைக் கொண்டிருக்கும் என்றும், அவர்கள் கூறிவந்தார்கள். இந்தியாவின் விடுதலையை எய்திட, தனிநபர் செயல்பாடுகளில் அதிகமான அளவு சார்ந்திருக்கவில்லை. ராணுவத்தில் பிரச்சாரம் செய்து, ராணுவத்தினரை கலகம் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். கதார் புரட்சியாளர்கள், வர்க்க குணாம்சங்களிலும் தங்களுக்கு முந்தைய புரட்சியாளர்களிலிருந்து வேறுபட்டார்கள். அவர்களுக்கு முந்தைய புரட்சியாளர்களில் பெரும்பகுதியினர், கீழ்மட்ட நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளாக இருந்த அதேசமயத்தில், கதார் புரட்சியாளர்களில் பெரும்பகுதியினர் விவசாயிகளாக இருந்து தொழிலாளிகளாக மாறியவர்கள். எனவே இவர்கள் விவசாயிகளும் கலகம் செய்திட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள்.*** *** ***இரு பலவீனங்கள்கதார் கட்சி அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. காரணம் அந்நாட்களில் அங்குதான் கொஞ்சம் சுதந்திரக்காற்றும், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமும் இருந்தது.

இந்தியாவில் அப்போது அவ்வாறு நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கதார் கட்சித் தலைவர்கள் தங்கள் திட்டங்கள், நோக்கங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசியும், எழுதியும் வந்தார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இவர்களது செயல்பாடுகளை முழுமையாக அறிந்திருந்ததால், இவர்களது செயல்பாடுகளினால் இந்தியாவில் எழும் எந்தப்பிரச்சனையையும் முளையிலேயே கிள்ளியெறிய தயாராக இருந்தார்கள்.

கதார் கட்சி தலைவர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்த இத்தகு ரகசியமற்ற போக்கினால் கட்சி கடும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. கட்சியின் இரண்டாவது முக்கிய பலவீனம் என்பது, ஒரு ஏகாதிபத்தியவாதியிடமிருந்து விடுதலை பெறுவதற்கு மற்றொரு ஏகாதிபத்தியம் உதவிடும் என்று உளப்பூர்வமாக இவர்கள் நம்பியதாகும். அனைத்து ஏகாதிபத்தியங்களும் - அது ஜெர்மனாக இருந்தாலும் சரி அல்லது பிரிட்டிஷாக இருந்தாலும் சரி, அல்லது வேறெதுவாக இருந்தாலும் சரி, அடிப்படையில் அனைத்து ஏகாதிபத்தியத்தின் குணங்களும் ஒன்றுதான் என்பதில் கதார் கட்சியினர் தெளிவில்லாமல் இருந்தார்கள்.

முதல் உலகப் போர் 1914இல் வெடித்தபோது, கதார் கட்சியினரும் அதேபோல் மற்ற புரட்சியாளர்களும், ‘‘பிரிட்டனின் சங்கடம் நமக்கு நல்லதோர் வாய்ப்பு’’ என்றும், ‘‘எதிரியின் எதிரி நமக்கு நண்பன்’’ என்றும் முழக்கங்களை முன்வைத்தனர். இந்த நம்பிக்கையுடன் அவர்கள், ஜெர்மனியின் பேரரசரை (கெய்சர்) தொடர்புகொண்டனர். கெய்சரின் பிரதிநிதிகளுடன் அவர்கள் நடத்தியபேச்சுவார்த்தையின்போது, இந்தியாவில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் அரசமைப்பு குறித்து சில நிபந்தனைகளை விதிக்க முயற்சித்தனர். ஆனால், ஜெர்மனி கெய்சர், இதற்குப் பிடிகொடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி சமாளித்து வந்தார். யுத்தத்தில் கதார் புரட்சியாளர்களை, பிரிட்டிஷாருக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்வதற்குத்தான் அவர் ஆர்வம் காட்டினார். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பிரிட்டிஷாரிடமிருந்தும், பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும் காலனிகளைப் பறித்தெடுப்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. இவ்வாறாக, கதார் கட்சியினரிடையே, ஏகாதிபத்தியம் குறித்து சரியான புரிதல் என்பது இல்லாமல் இருந்தது. உண்மையான, முழுமையான சுதந்திரத்தைப் பெற வேண்டுமானால், அடிமை நாடுகள், ஏகாதிபத்திய முறைக்கு எதிராகவும் போராட வேண்டும் என்பது ரஷ்யாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வான 1917 அக்டோபர் புரட்சி (புதிய காலக்குறிப்பேட்டின் நவம்பர் புரட்சி)யின் போதுதான் அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

*** *** ***

மாபெரும் அக்டோபர் புரட்சியும் அதன் தாக்கமும்

அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு அக்டோபர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது. சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் நாட்டின் வயல்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள் முதலானவற்றின் சொந்தக்காரர்களாகவும் மாறினார்கள். அக்டோபர் புரட்சியானது, ரஷ்ய மக்களை முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் அடிமைத்தளையிலிருந்து மட்டும் விடுவிக்கவில்லை, அதற்கும் மேலாக ஒரு புதிய சமூகத்தை, ஒரு புதிய மனிதனையும் உருவாக்கிக் கொடுத்தது. அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை. அதுவும் தன் பார்வையை விசாலமாக்கியது. நாட்டு மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் இல்லையேல், அடையவிருக்கும் சுதந்திரத்திற்கு அர்த்தமேதும் இல்லை என்று புரட்சியாளர்கள் உணர்ந்தார்கள். அக்டோபர் புரட்சியும், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிகர எழுச்சியும் முதல் உலகப் போருக்குப் பின் இந்திய மக்கள், புரட்சிப்பாதையில் முன்னேறிக்கொண்டிருந்ததும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கிலியை ஏற்படுத்தியது. தாங்கள் மிகவும் விழிப்புடனிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்கள். தங்களுக்குப் பாதகமாக சூழ்நிலைகள் வளர்ந்து வருவதை எதிர்கொள்வதற்காக, ஏகாதிபத்தியவாதிகள் இரு முனைக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். ஒரு பக்கத்தில், நாட்டின் மிதவாதத் தலைவர்களை தாஜா செய்து அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சித்தார்கள். அதற்காகத்தான் மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள். மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் என்பது பெயரளவில் பட்டாதாரர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டும் வாக்குரிமையைக் கொடுத்து, அவர்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது போல் பாவலா காட்டுவதைத் தவிர வேறொன்றுமில்லை. மறுபக்கத்தில், ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்பவர்களை ஒடுக்கும் குழு ஒன்றை நீதியரசர் ரௌலட் தலைமையில் அமைத்து, புரட்சிகர இயக்கங்கள் குறித்து புலனாய்வு செய்து, அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்திடக் கோரியது. இக்குழுவின் பரிந்துரைகள், உண்மையில் மிகவும் அடாதவைகளாகும். இக்குழு மிகவும் சாதாரண அரசியல் நடவடிக்கைகளைக்கூட ‘அரசுக்கு எதிரானது’ என்று முத்திரை குத்தியது. இந்தச் சூழ்நிலையில்தான் காந்திஜி ரௌலட் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவலுக்கு மக்கள் காட்டிய பிரதிபலிப்பு அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சியிருந்தது.

ரௌலட் குழு பரிந்துரைத்திருந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டுமக்கள் பிரம்மாண்டமாக எழுந்து நின்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். மக்களின் இத்தகு மகத்தான எழுச்சியைக் கண்டு அரசாங்கம் மட்டுமல்ல, தலைவர்களும் கூட ஆச்சரியப்பட்டார்கள். அரசாங்கமும் தலைவர்களும் இதனை எதிர்பார்க்கவேயில்லை. பிரிட்டிஷார், மக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். இதனை அவர்கள் 1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக்கில் நிறைவேற்றினர். மக்கள் இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்த அநேகமாக அனைத்து நகரங்களின் சாலைகளிலும் அணிதிரண்டனர். அரசாங்கம் இதனை ஸ்தாபனரீதியான எதிரெழுச்சி என்று முத்திரை குத்தியது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், காந்திஜிகூட இதனையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இல்லை. ‘‘ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது தான் செய்த இமாலயத் தவறு’’ என்று அவர் பிரகடனம் செய்தார். மக்கள் தங்கள் இயக்கங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ரௌலட் சீர்திருத்தங்களுக்குப் பணிந்துபோக வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.1920 செப்டம்பரில், லாலா லஜபதிராய், ‘‘மக்கள் மிகவும் கட்டுப்பாடின்றி இருக்கிறார்கள், ஏதேனும் செய்ய வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று மிகவும் தெளிவாக எச்சரித்தார். மக்களின் கோபத்தைச் சரியான திசைவழியில் திருப்பிவிடாவிட்டால், அது பல்வேறு வடிவங்களில் வெளிப்படலாம் என்றும், அது நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல என்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் மேலும் கூறினார்.

‘‘நாம் ஒரு புரட்சிகரக் காலகட்டத்தினூடே பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை கண்டும் காணாமலிருப்பதனால் எவ்விதப் பிரயோசனமும் இல்லை’’ என்று பிரகடனம் செய்த அவர், ‘‘நாம் இயல்பாகவும், பரம்பரை பரம்பரையாகவும் புரட்சிகள் மீது விருப்பமில்லாதவர்கள்,’’23 என்று மேலும் கூறினார். காங்கிரஸ் கட்சி இவரது எச்சரிக்கையை நாக்பூர் மாநாட்டின் அமர்வில் விவாதித்தது. காந்திஜியை, ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிடக் கேட்டுக்கொண்டது. ஆயினும், ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு, மகாத்மா காந்தி வங்காளத்திற்குச் சென்று, சில புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார். தனக்கு ஓராண்டு காலம் அவகாசம் தரும்படியும், அதற்குள் சுயராஜ்யம் வாங்கித்தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறு ஓராண்டிற்குள் சுயராஜ்யத்தைத் தன்னால் வாங்கித்தர முடியவில்லை என்றால், புரட்சியாளர்கள் அவர்கள் பாதையில் செல்வதற்குத் தடையேதுமில்லை, அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என்றும் காந்திஜி கூறினார். இதனைப் புரட்சியாளர்களும் ஒப்புக் கொண்டார்கள். காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இவ்வியக்கமானது நாட்டு மக்கள் மத்தியில் மிகவிரைவாகப் பரவியது. சுயராஜ்யம் என்ற சொற்றொடர் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. காந்திஜியால் கூறப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த விவசாயிகளும் எதிர்காலம் குறித்து எவ்விதப் பயமுமின்றி இவ்வியக்கத்தில் துணிந்து குதித்தனர். அரசாங்கம் அதிர்ந்தது, தன்னிலை மறந்தது. இவ்வாறு இயக்கமானது நகரப் பகுதிகளிலிருந்து கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளிடத்திலும் செல்ல அனுமதித்தோமானால், பிரிட்டிஷ் அரசாங்கம் இங்கு நீடித்திருப்பது முடியாது என்பதை உணர்ந்தனர். தங்களிடமுள்ள அனைத்துத் துப்பாக்கிகளும், போர் விமானங்களும் இவ்வாறு கொதித்துக் கிளம்பி வரும் முப்பது கோடி மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். மக்கள் எழுச்சியைக் கண்டு, பிரிட்டிஷாரைப் போலவே காந்திஜியும் மிகவும் அதிர்ந்து போனார். அவர் சந்தோஷமாக இல்லை. இயக்கத்தைத் திரும்பப்பெறுவதற்கு ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். 1922 பிப்ரவரியில் சௌரி சௌரா நிகழ்வு அவருக்குக் கைகொடுத்தது. இந்நிகழ்ச்சியை வரவேற்பதற்குப் பதிலாக, ஆயிரமாயிரம் சௌரி சௌரா நிகழ்ச்சிகளைப் போல் கோருவதற்குப் பதிலாக, அவர், தாமாகவே வேறு யாருடனும் கலந்தாலோசிக்காமல், ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்றார், அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். இந்தப் பின்னணியில்தான், மகாத்மாவின் வேண்டுகோளுக்கிணங்க ஆயுதத்தை கீழே போட்டிருந்த புரட்சியாளர்கள், மீண்டும் அணிதிரளவும், ஆயுதம் ஏந்தவும் தீர்மானித்தார்கள்.

*** *** ***

இந்துஸ்தான் குடியரசு சங்கம் சசீந்திரநாத் சன்யால் என்பவர், இந்தியாவில் செயல்பட்டு வந்த அனைத்துப் புரட்சிக்குழுக்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1923 இறுதிவாக்கில் அவர், இந்துஸ்தான் குடியரசு சங்கம் என்னும் கட்சியை ஸ்தாபித்தார். இக்கட்சியின் சார்பாக ஓர் அமைப்புச் சட்டத்தையும் தயார் செய்தார். இதனை இவர் மஞ்சள் தாளில் அச்சடித்தார். எனவே இது மஞ்சள் தாள் என்றே பெயரிடப்பட்டிருந்தது. அவர் தயாரித்த மற்றொரு முக்கியமான ஆவணம், இந்துஸ்தான் குடியரசு சங்கத்தின் அறிக்கையாகும், இதற்குப் புரட்சியாளர் என்று பெயரிடப்பட்டிருந்தது.

இந்துஸ்தான் குடியரசு சங்கத்தின் அறிக்கை 1925 ஜனவரி 1 அன்று இரவு வட இந்தியா முழுவதும் விரிவானமுறையில் விநியோகம் செய்யப்பட்டது. மகத்தான 1917 அக்டோபர் புரட்சியின் தாக்கம், இந்த அறிக்கையிலும் காணப்பட்டது. இந்தியப் புரட்சியாளர்களின் குறிக்கோள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அது, கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:

‘‘புரட்சிக் கட்சியின் உடனடிக் குறிக்கோள் என்பது, அரசியல் அரங்கில் அது, ஸ்தாபனப்படுத்தப்பட்ட ஆயுதப் புரட்சியின் மூலமாக, இந்திய ஐக்கிய மாநிலங்களின் கூட்டாட்சிக் குடியரசு அமைப்பை நிறுவுவதாகும். ...

இந்தக் குடியரசின் அடிப்படைக் கொள்கை, அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை அளிப்பதும், மனிதனை மனிதன் சுரண்ட வழிவகுக்கும் அனைத்து முறைகளையும் அழித்தொழிப்பதுமாகும். இந்தக் குடியரசில் வாக்காளர்கள், தேவைப்பட்டால் தாங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரை மீண்டும் அழைக்கும் உரிமை பெற்றிருப்பார்கள். அவ்வாறில்லையெனில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகவே இருக்கும். ...’’

அறிக்கையில் மேலும் உறுதிபட கூறப்பட்டிருப்பதாவது: ‘‘புரட்சிக் கட்சி என்பது, தேசிய அளவிலான ஒன்று அல்ல. மாறாக அது சர்வதேச அளவிலானது. அதாவது, அதன் இறுதி லட்சியம், உலகம் முழுவதும் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதாகும். ...

இதன் குறிக்கோள்கள், நாடுகளுக்கிடையே போட்டியை ஏற்படுத்துவதாக இருக்காது, மாறாக பரஸ்பரம் ஒத்துழைப்பதன்மூலம் அனைத்து நாடுகளின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் இருக்கும். இது தொடர்பாக, அது நம் நாட்டில் மிகவும் புகழ்பெற்றிருந்து மாபெரும் ரிஷிகளின் அடிச்சுவட்டிலும் நவீன யுகத்தில் போல்ஷ்விக் ரஷ்யாவின் அடிச்சுவட்டிலும் அது நடைபோடும்....’’

அறிக்கை, வகுப்புவாதம் தொடர்பான பிரச்சனை, மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலப் பிரச்சனைகள், காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் தொடர்பாக அதன் அணுகுமுறை ஆகியவை குறித்தும் புரட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தெளிவாக்கியது. இவை அனைத்துக் குறித்தும் அறிக்கையானது, கடந்த காலங்களில் புரட்சியாளர்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து முறிவை ஏற்படுத்திக்கொண்டு, சோஷலிசம் மற்றும் சோவியத் ரஷ்யா குறித்து மட்டற்ற தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. சோவியத் ரஷ்யாவை உலகில் சோசலிசம் மலர்ந்திட்ட முதல் பூமி என்று புகழாரம் சூட்டியது. மேலும், தேசிய விடுதலை இயக்கங்களில் சர்வதேசியப் பார்வை குறித்து, மிகத் தெளிவாக இல்லையென்ற போதிலும்கூட, ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப்பின் உதயமாகும் எதிர்கால இந்தியாவில், சமூக - பொருளாதாரக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை அடைவதற்கு தொழிலாளர்கள் - விவசாயிகளை அணிதிரட்ட வேண்டியது அவசியம் என்றும் உணரப்பட்டது. இவ்வாறு மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும், முந்தைய புரட்சியாளர்கள் சென்ற பாதையை நிராகரித்து, புதிய பாதையில் இந்துஸ்தான் குடியரசு சங்கம் அடியெடுத்து வைத்தது.ஆயினும், அறிக்கையைத் தயாரித்தவர் ஒரு மார்க்சிஸ்ட் என்றோ அல்லது அவர் விஞ்ஞானபூர்வமான சோசலிசத்தின் பொருளைப் பற்றிக்கொண்டுவிட்டவர் என்றோ பொருள் அல்ல. இந்த அறிக்கையைத் தயாரித்தவர் கடவுள் மற்றும் இறைமை குறித்து வலுவான நாட்டம் கொண்டிருந்தார்.

அறிக்கையில், ‘‘ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, உண்மையை நிலைநிறுத்துவதே கட்சியின் குறிக்கோள். உலகம் மாயை இல்லை, ஆயினும் உலகில் வெல்ல முடியாத ஒரு சக்தி, அனைத்திற்கும் மேலான சக்தி ஒனறு இருக்கிறது.’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அறிக்கையைத் தயாரித்தவர், மார்க்சிசத்தில் கூறப்படுகிற பொருளாதார அம்சங்களை ஏற்றுக்கொள்கிறார். அந்தவிதத்தில் இவர் நிச்சயமாக முந்தைய ககோரி புரட்சியாளர்களைவிட முன்னேற்றமடைந்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மார்க்சியத்தின் தத்துவார்த்த அம்சங்களைப் பொறுத்தவரை, அறிக்கையைத் தயாரித்தவர், பொருள்முதல்வாதத்தை நிராகரிக்கிறார், கடவுளையும் மதத்தையும் உயர்த்திப் பிடிக்கிறார். ‘‘வரலாற்றைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆராய்வது கம்யூனிசத் தத்துவத்தில் மிக முக்கிய அம்சமாகும். வரலாற்றைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆராயும்போது, வர்க்கப் போராட்டத்தின் விதிகளும் முழுமையாக விவரிக்கப்பட்டிருக்கின்றன, ... இவை தொடர்பான விதிகளை இன்றும் கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ...’’

மற்றொரு முக்கிய அம்சத்திலும், கம்யூனிசத்தின் கொள்கையிலிருந்து அவர் வேறுபடுகிறார். அதாவது, புரட்சியில் தொழிலாளிவர்க்கத்தின் தலைமையை அவர் ஏற்கவில்லை. அவரைப்பொறுத்தவரை, மத்தியதர இளைஞர்கள் மட்டுமே புரட்சிக்குத் தலைமை தாங்கமுடியும் என்றும், தொழிலாளர்களும் விவசாயிகளும் புரட்சிப் பட்டாளத்தின் துருப்புக்களாக இருந்து புரட்சியை நடத்துவார்கள் என்றும் கூறுகிறார்.

சசீந்திரநாத் சன்யால் மற்றும் அன்றைய புரட்சியாளர்களின் தத்துவார்த்த நிலை குறித்து, சத்யேந்திர நாராயண் மஜும்தார் தன்னுடைய ‘ஒரு புரட்சித் தத்துவத்தைத் தேடி மற்றும் ஒரு புரட்சிக் கட்சியின் திட்டம்’ என்னும் நூலில் மிக நயம்பட தொகுத்தளித்திருக்கிறார். புரட்சியாளர் மற்றும் இந்துஸ்தான் குடியரசு சங்கத்தின் அமைப்புச் சட்டம் ஆகிய இரண்டையும் ஆய்வு செய்தபின், அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

‘‘மேற்கண்ட இரு ஆவணங்களும், கம்யூனிச சிந்தனைகளால் கவர்ந்திழுக்கப்பட்ட புரட்சியாளர்களின் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. ஆயினும், அவர்கள் புரட்சிகர கனவுலகிலிருந்து முழுமையாக விடுபட்டுவிட்டார்கள் என்று சொல்வதற்கில்லை.’’

பின்னர் அவர் மேற்படி ஆவணங்களில் காணப்பட்ட வலுவான அம்சங்களையும், பலவீனமான அம்சங்களையும் பட்டியலிடுகிறார். வலுவான அம்சங்களாக அவர் குறிப்பிடுவது:‘‘(1) சோசலிசம் மகத்தான வெற்றி பெற்ற முதல் நாடான போல்ஷ்விக் ரஷ்யா குறித்தும், கம்யூனிசம் குறித்தும் உறுதியான நாட்டம்.(2) தேசிய விடுதலைப் புரட்சியின் சர்வதேசியக் கண்ணோட்டம் குறித்து - மிகத் தெளிவாக இல்லாவிட்டாலும்கூட - புரிந்துகொள்ளத் தொடங்கியது. (3) சுதந்திர இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பின் முக்கிய கூறுகளை விவரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. (4) தொழிலாளர்களும் விவசாயிகளும் அணிதிரட்டப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்வதற்கு உறுதிமேற்கொள்ளப்பட்டது.(5) கட்சியின் ஜனநாயக மத்தியத்துவக் கொள்கை அறிமுகப் படுத்தப்பட்டது.’’

பலவீனமான அம்சங்களாக மஜும்தார் குறிப்பிட்டதாவது:(1) கம்யூனிசம் நோக்கி நாட்டம் இருந்தபோதிலும், கம்யூனிச சித்தாந்தத்தை ஆழ்ந்து கற்றிட உறுதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.(2) தேசிய விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்கள் - விவசாயிகளின் பங்களிப்பின் உண்மையான முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்ததாகக் கூறுவதற்கில்லை. (3) கட்சியின் அறிக்கையைத் தயாரித்தவர் மனதில் இறைமைக் கொள்கை மிக ஆழமாக ஆட்கொண்டிருந்தது. (4) தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டுவதுடன், பயங்கரவாதத்திற்கெதிரான பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும்போது, நடைமுறைச்சாத்தியமற்ற அம்சங்களை எதிர்நோக்கத் தவறியது.(5) ‘‘மக்கள் மத்தியில் முழுமையாக நிராதரவாகிவிட்டோம் என்கிற உணர்வு இருப்பதாகவும், அது சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் ஊடுருவியிருக்கிறது.’’ என்று தேசிய நிலைமைகள் குறித்து அது தவறாகக் கணித்தது. ‘‘உண்மையில் அந்த சமயத்தில் உழைக்கும் மக்கள் முன்னேறத் தொடங்கிவிட்டனர். அவர்களின் முன்னணிப்படையான, தொழிலாளி வர்க்கம், ஏற்கனவே போராட்டத்தில் இறங்கி, காவல் துறையினரின் கடுமையான அடக்குமுறைக்கெதிராக வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது.’’

அதேபோன்ற வளர்ச்சிப் போக்குகள், வங்கத்திலும் உண்டாயிற்று. அனுசிலான் மற்றும் யுகாந்தர் (புதிய சகாப்தம்) இயக்கங்களின் மூத்த தலைவர்களும் சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலம் குறித்து ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஆனால், இத்தகைய ஆர்வம் என்பது கம்யூனிசத்தைக் கருத்தூன்றிப் படித்தன் அடிப்படையிலோ அல்லது அக்டோபர் புரட்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை முறையாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையிலோ ஏற்பட்டதில்லை. அவர்கள் சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலம் மூலமாக தேவையான ஆயுதங்களையும், வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி என்பது போன்ற பலவிதமான உதவிகளையும் பெற முடியும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், சோவியத் அரசாங்கமோ அல்லது கம்யூனிஸ்ட் அகிலமோ மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஆயுதமேந்தும் நடவடிக்கைகள் மீது ஆர்வம் காட்டவில்லை என்பதைக் கண்டதும், அவர்களது ஆர்வம் வற்றிப்போனது.’’

இந்தக் காலக்கட்டத்தில், அதாவது 1920களில் பிற்பகுதியில், கம்யூனிச சிந்தனைகள் இந்தியாவில் செல்வாக்கு பெறத் தொடங்கின. அக்டோபர் புரட்சி வெற்றி மற்றும் ரஷ்யாவில் ஏகாதிபத்திய சக்திகள் தோல்வி மட்டுமல்ல, நாட்டில் நிலவிய உள்காரணிகளும் இத்தகு மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும். அவற்றில் சில பின்வருமாறு: (1) பெசாவர் மற்றும் கான்பூரில் போல்ஷ்விக் சதி வழக்குகள் (2) நாட்டின் பல பாகங்களில் நடைபெற்ற வீரஞ்செறிந்த விவசாய இயக்கங்கள் (3) நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் (4) விவசாயத் தொழிலாளர் கட்சி அமைத்தல். (5) நாடு முழுதும் பரவிக்கிடந்த பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியாக உருவாக்குவதற்கான முயற்சிகள். இத்தகைய தேசிய மற்றும் சர்வதேசிய வளர்ச்சிப்போக்குகளின் தாக்கத்தின் பின்னணியில், அனுசிலான் சமிதியிலிருந்த இளம் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் அதிலிருந்து விலகி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தனர். அவர்களுக்கு அனுசிலான் முன்னணி ஊழியர்கள் மத்தியில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவர்கள் இளம் புரட்சியாளர்கள் மத்தியில் கம்யூனிச சிந்தனைகளைக் கொண்டுசெல்வதில் பெரும் பங்கு வகித்தனர்.

*** *** ***

இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்

அன்றைய ஐக்கிய மாகாணங்களில் - அதாவது இன்றைய உத்தரப்பிரதே மாநிலத்தில் - 1925இல் காகோரி சதி வழக்கில் இணைக்கப்பட்டு, அநேகமாக அனைத்துத் தலைவர்களும் சுற்றி வளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் விளைவாக இந்துஸ்தான் குடியரசு சங்கத்திற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. சந்திரசேகர் ஆசாத் மற்றும் குந்தன்லால் குப்தா மட்டுமே கைது செய்யப்படுவதிலிருந்து தப்பி, தலைமறைவானார்கள். வெளியில் இருந்த மற்ற அனைவருமே இரண்டாம் அடுக்குத் தலைவர்களே. கட்சியை மீண்டும் கட்டும் பொறுப்பு இவர்களை வந்தடைந்தது. அந்தச் சமயத்தில், அதாவது 1926இல், ஒரு குழு லாகூரில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்தது. மற்றொரு குழு, கான்பூரில் மீண்டும் செயலில் இறங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. இயக்கம் குறித்து சரியான தத்துவார்த்த நிலைப்பாட்டை ஆய்ந்து கொண்டிருந்தாலும், அந்தச் சமயத்தில் இரு குழுக்களும் தத்துவார்த்த நிலை குறித்து மிகவும் குழம்பியே இருந்தன. ஆயினும் இரு குழுக்களுமே தங்களை வழிநடத்தக்கூடிய தலைமையை அதிர்ஷ்டவசமாகக் கண்டுகொண்டன. லாகூர் குழுவில் இருந்தவர்களிடம் - அதிலும் குறிப்பாக பகத்சிங் மற்றும் சுகதேவிடம் - ரஷ்ய அராஜகவாதி பகுனின் கொள்கைகள் செல்வாக்கு செலுத்தி வந்தது. அராஜகவாதியாக இருந்த பகத்சிங்கை, சோசலிஸ்ட்டாக மாற்றிய பெருமை இரு தோழர்களையே சாரும். அவர்கள் மறைந்த தோழர் சோஹன் சிங் ஜோஷ் மற்றும் சபில் தாஸ் ஜோஷ் ஆகியோரே ஆவர். இவர்கள் இருவரும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களாவார்கள். தோழர் சபில் தாஸ் ஜோஷ் பஞ்சாபிலிருந்து வெளிவந்த கிர்த்தி (தொழிலாளி) என்னும் மாத இதழின் ஆசிரியராவார். அவர் பகத்சிங்குடன் பல்வேறு பொருள்கள் குறித்தும் விவாதித்தார். பகத்சிங்கை, தொடர்ந்து கிர்த்தியில் எழுத ஊக்குவித்து வந்தார். லாலா சபில் தாஸ் அவர்கள், லாலா லஜபதிராய் அவர்களால் உருவாக்கப்பட்ட, தேசியக் கல்லூரி என்றும் அறியப்பெற்ற, திலக் அரசியல் பள்ளியின் முதல்வராகவும் இருந்தார். லாலா சபில் தாஸ் மாபெரும் மேதை. சோசலிசத்தின் மீது அளவிடற்கரிய பற்று வைத்திருந்தார். அவர், இளம் புரட்சியாளர்கள் என்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும், அவற்றை எப்படிப் படிக்க வேண்டும் என்று ஆலோசனைகளைக் கூறிவந்தார். பகவதி சரண் வோரா ஆரம்பத்திலேயே சோசலிசக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு விட்டார். இளம் புரட்சியாளர்கள் அவர்கள் கூறிய புத்தகங்களைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தனர். ஒருசில புத்தகங்கள் லாலா லஜபதிராயின் துவாரகாஸ் நூலகத்தில் கிடைத்து அவர்களது அறிவுப்பசியைத் தீர்த்தது. இந்நூலகத்தில், அரசாங்கத்தால் தடைசெய்யப்படாது அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிசம் மற்றும் சோவியத் ரஷ்யா குறித்தும் மற்றும் பல அரசியல் புத்தகங்களும் தொகுக்கப்பட்டிருந்தன. லாகூர் புரட்சியாளர்கள் இந்நூலகத்தில் நூலகராக இருந்த ராஜா ராம் சாஸ்திரி மூலமாக (அவர் லாகூர் புரட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து வந்தார்) நிறைய புத்தகங்களைப் படித்தார்கள். அவர்களுக்குப் புத்தகங்கள் வேறொருவர் மூலமாகவும் கிடைத்தது. அனார்கலி கடைத்தெருவில் இருந்த ராமகிருஷ்ணன் & சன்ஸ் என்ற புத்தகக் கடையிலிருந்தும் அவர்கள் புத்தகங்களைப் பெற்றார்கள். இந்நிறுவனம், தடைசெய்யப்பட்ட புத்தகங்களை இங்கிலாந்திலிருந்து கள்ளத்தனமாக இறக்குமதி செய்வதில் வல்லமை பெற்றிருந்தது. பஞ்சாப் புரட்சியாளர்கள் - அதிலும் குறிப்பாக பகத்சிங்கும் பகவதி சரணும் - இந்த வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ராஜாராம் சாஸ்திரி அவர்கள், பகத்சிங் குறித்து ஒருதடவை இக்கட்டுரையாசிரியரிடம் கூறும்போது, ‘‘பகத்சிங் மிகுந்த அறிவுப்பசி கொண்டவன்’’ என்றும் ‘‘அவனுக்குப் புத்தகங்களைக் கொடுத்து அவனது அறிவுப்பசிக்கு என்னால் தீனி போடமுடியவில்லை’’ என்றும் மிகவும் நகைச்சுவையுடனும் பெருமிதத்துடனும் கூறினார். பகத்சிங்கின் அறிவுத்தாகம் என்றைக்கும் தணிந்ததே இல்லை. அவர் புத்தகங்களைப் படிப்பார், குறிப்புகள் எடுத்துக்கொள்வார், தன் நண்பர்களுடன் படித்தது குறித்து விவாதிப்பார், தன்னுடைய நிலைப்பாட்டை அவற்றுடன் வைத்துப் பொருத்திப்பார்த்து புதிதாகத் தான்பெற்ற அறிவுக்கண் கொண்டு சுயவிமர்சன ரீதியில் சோதித்துப் பார்ப்பார். தான் அதுநாள்வரை கையாண்டுவந்த நடவடிக்கைகளில் தவறேதும் இருந்தால் திருத்திக்கொள்வார். இவ்வாறான அனைத்துக் காரணிகளும் லாகூர் புரட்சியாளர்களை வெகுவிரைவாக வளர்த்தெடுத்தது. இதன் விளைவாக, 1928 ஆரம்பத்தில் அவர்கள் அராஜகவாதம் கொள்கையை விட்டொழித்துவிட்டு, சோசலிசக் கொள்கையைத் தங்கள் கோட்பாடாகத் தழுவிக் கொண்டனர். ஆயினும், அவர்கள் மார்க்சிசத்தை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து விட்டார்கள் என்று இதற்குப் பொருள் அல்ல. கடந்த காலத்தின் மிச்சசொச்சங்கள் அப்போதும் அவர்களிடம் இருந்தன.கான்பூர் குழுவும், இதே பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆயினும் லாகூர் குழு அளவிற்கு வேகமாக முன்னேறியது என்று சொல்வதற்கில்லை. கான்பூரில் ராதா மோகன் கோகுல்ஜி, சத்யா பாக்தா மற்றும் மௌலானா ஹஸ்ரத் மோகனி முதலானோர் ஏற்கனவே தங்களை கம்யூனிஸ்ட்டுகள் என்று பிரகடனம் செய்திருந்தார்கள். இவர்களில் ராதா மோகன் கோகுல்ஜி மிகவும் குறிப்பிடத்தக்கவராவார். ராதா மோகன் கோகுல்ஜி நிறைய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார், மிகவும் ஆழ்ந்து படித்தார், மிக அற்புதமாக எழுத்தாற்றலும் பெற்றிருந்தார். 1927இலேயே ‘கம்யூனிசம் என்றால் என்ன’ என்ற நூலை மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியம் வண்ணம் எழுதியிருந்தார். கம்யூனிஸ்ட் கொள்கையின் முக்கிய அம்சங்களை அவர் இதில் விளக்கியிருந்தார். (கட்டுரையாளர் இவரது நூல்களைப் படித்துவிட்டுத்தான் கம்யூனிசம் குறித்துத் தெரிந்துகொண்டார்.) ராதா மோகன் கோகுல்ஜி ஒரு முழுமையான நாத்திகவாதி. கடவுள், மதம், மூடப் பழக்க வழக்கங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகளை அனைவரும் விரும்பிப்படிக்கும் நடையில் எழுதியிருக்கிறார். இவரது எழுத்துக்களினால் கவரப்பட்ட மாபெரும் இந்தி - உருது எழுத்தாளரான பிரேம்சந்த் அதனால்தான் இவரை ‘‘நவீன சார்வாகனன்’’ எனப் பெயரிட்டு அழைத்தார்.ஆனால், சத்யா பக்தாவினுடைய கம்யூனிசமானது ஆன்மீகவாதத்தின் கறைகளுடன் கூடியதாகும். மௌலானாவின் சிந்தனைகளோ, கம்யூனிசத்துடன் முஸ்லீம் மத போதனைகளையும் இரண்டறக் கலந்ததாகும். ஆயினும், இவ்வாறு பல்வேறு குணாம்சங்களுடன் இவர்கள் இருந்தபோதிலும், இந்த மூவரும்தான் அந்தக் காலத்தில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிசக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்காற்றியவர்கள். இவர்கள் வழியாகத்தான் கான்பூர் குழுவிலிருந்த இளம் புரட்சியாளர்கள் சோசலிசம் குறித்த ஞானஸ்நானத்தைப் பெற்றார்கள். விஜய் குமார் சின்கா மூலமாக சௌகத் உஸ்மானி அவர்களும் கான்பூர் குழுவினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ஆயினும் அவரிடமிருந்து தத்துவார்த்தரீதியான வழிகாட்டுதல் எதுவும் எங்களுக்குக் கிடைத்திடவில்லை. கான்பூர் புரட்சியாளர்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய மற்றுமொருவர் உண்டு என்றால் அது கணேஷ் சங்கர் வித்யார்த்தியாவார். அவர் எப்போதும் அரசியல் கல்விக்கும் மக்களுக்கிடையே வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வந்தார். இவை அனைத்தின் ஒட்டுமொத்த விளைவு, கான்பூர் குழுவும் சோசலிசம் குறித்து நாட்டம் கொண்டது. ஆயினும், இத்தகைய நாட்டம் என்பது உணர்ச்சிபூர்வமானதாக இருந்ததேயழிய, அறிவுபூர்வமாக இருந்ததாகச் சொல்வதற்கில்லை. இந்த சமயத்தில், கான்பூர் குழுவினர், காகோரி சதி வழக்கில் தேடப்படுபவர்கள் என்று அப்போது பிரகடனம் செய்யப்பட்டிருந்த, சந்திரசேகர ஆசாத் மற்றும் குந்தன் லாலுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு விட்டனர். இந்தப் பின்னணியில்தான், 1928இன் தொடக்கத்தில், பகத்சிங், இந்தியாவின் பல பகுதிகளிலும் செயல்பட்டுவந்த அனைத்துப் புரட்சிக் குழுக்களையும் அகில இந்திய அளவில் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் துணிந்து இறங்கினார். இதுதொடர்பாக அவர் அளித்திட்ட வரைவுத் திட்டம் பின்வருமாறு அமைந்திருந்தது. (1) நம்முடைய இறுதி லட்சியம் சோசலிசம்தான் என்று சொல்லும் தருணம் வந்துவிட்டது. (2) நம்முடைய இறுதி லட்சம் என்ன என்பதை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் நம் கட்சியின் பெயரிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். (3) நம்முடைய கோரிக்கைகள் மற்றும் மக்களின் உணர்வு மட்டத்தின் அடிப்படையில் நம் செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டும், நம்முடைய சக்தியை வீணே சிறுசிறு போலீஸ் அதிகாரிகள் மற்றும் காட்டிக்கொடுப்பவர்களைக் கொல்வதில் விரயம் செய்து கொண்டிருக்கக் கூடாது. (4) கட்சிக்கான நிதியாதாரத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் பணத்தை அபகரித்துக்கொள்ள வேண்டும், முடிந்த அளவிற்கு தனியார் வீடுகளில் கை வைப்பதைத் தவிர்த்திட வேண்டும். (5) கூட்டுத் தலைமை விதியைக் கறாராகக் கடைப்பிடித்திட வேண்டும்.மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் அவர் லாகூர் மற்றும் கான்பூர் தோழர்களுடன் விவாதித்தார். தலைமறைவாக இருந்த ஆசாத் மற்றும் குந்தன்லால் ஆகியோரிடமும் இவை குறித்து ஏற்பளிப்பைப் பெற்றுக்கொண்டார். அதன்பின் 1928 செப்டம்பர் 8, 9 தேதிகளில் டில்லியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றிற்கும் அவர் ஏற்பாடு செய்தார். ஐந்து மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டனர். நான்கு மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர். வங்கத்திலிருந்து மட்டும் கலந்து கொள்ளவில்லை.இது தொடர்பாக, எஸ்.என்.மஜும்தார் எழுதியிருந்ததாவது: ‘‘வங்கத்தின் சார்பில் இந்துஸ்தான் குடியரசு சங்கத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வங்கத்தில் உள்ள கட்சியானது தான் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக இருப்பதாகக் கூறியுள்ளது.’’

மஜும்தாரின் மேற்கண்ட கூற்று சரியானது அல்ல. ஏனெனில் கட்டுரையாளர் தானே கல்கத்தாவிற்கு 1928 ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், வரைவுத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காகவும் அவர்களை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவும் சென்றிருந்தார். வங்கத்தில் சந்திக்க வேண்டிய நபர் யார் என்பதை வாரணாசியைச் சேர்ந்த தாராபாடே என்பவர் மூலம் ஏற்பாடாகியிருந்தது. கல்கத்தாவில் நான் ஒரு நபரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். அவர் அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலையாகி வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. மிகவும் குண்டாகவும் தளர்ந்தும் வயதான தோற்றத்திலும் இருந்த அவர், எப்போதும் கடுகடுப்புடனேயே காணப்பட்டார். அவர் என்னிடம் பேசிய தோரணையிலிருந்து, அதிகார மமதையுடன் கூடிய ஒரு முரட்டுத்தனமான கர்வம் பிடித்த நபரை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டேன். அவரைச் சுற்றியிருந்த இளைஞர்கள் எல்லாம் அவரை சுசில்தா என்று அழைத்தனர். சுசில் அறைக்குள் நுழைந்தவுடனேயே உத்தரப்பிரதேசக் குழுவினரை ககோரி நடவடிக்கைக்காக, வன்மையாகக் கண்டிக்கும் தோரணையில், ‘‘எங்களுடைய அனுமதி இல்லாமல் நீங்கள் ஏன் அவ்வாறு செயல்பட்டீர்கள்? ஸ்தாபனத்தையே முழுமையாக அழித்தொழித்துவிட்டு இப்போது ஏன் இங்கு வந்து எங்கள் உதவியைக் கோருகிறீர்கள்?’’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். நான் அவரிடம் சொன்னேன், ‘‘உங்களிடம் எந்தவிதமான உதவியையும் கோரி நான் இங்கே வரவில்லை, எதிர்காலத் வரைவுத்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக டில்லியில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்’’ என்றேன். இவ்வாறு நான் கூறியபின், அந்த வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்த அம்சங்களை ஒன்றன்பின் ஒன்றாக அவருக்கு விளக்கினேன். பின்னர் அவரை டில்லி கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டேன். பின்னர் அவர் டில்லி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமானால் தான் வைக்கும் முன்நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக நீங்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றார். அவர் வைத்திட்ட நிபந்தனைகளாவன: (1) கம்யூனிசம் அல்லது சோசலிசத்தோடு எங்களுக்கு எந்தவிதமான ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. (2) கட்சியின் பெயர் மாற்றப்பட மாட்டாது. (3) அரசாங்கத்துடன் மோதல் போக்கை உருவாக்கக்கூடிய அளவிற்கு எதிர்காலத்தில் ககோரி பாணி நடவடிக்கை போன்று எதுவும் எங்கள் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது. (4) மத்தியக்குழு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வங்கத்தைப் பொறுத்தவரை என் மூலம்தான் எதுவும் நடக்க வேண்டும். (5)ஸ்தாபனப் பணிகள், ஆயுதங்கள் சேகரித்தல், நிதி திரட்டுதல் போன்ற நடவடிக்கைகளோடு நம்மைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். (6) நிதி வசூலுக்கு, அரசியல் சாரா நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இத்தகைய முன்நிபந்தனைகள் எதையும் திணிக்காது, கூட்டத்தில் பங்கேற்குமாறு நான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவரோ மிகவும் முரட்டுத்தனமாக அதனை நிராகரித்துவிட்டார். எங்கள் எதிர்கால அணுகுமுறைக்கு முற்றிலும் எதிராக அவர் முன்வைத்த நிபந்தனைகள் இருந்ததால், நான் பணிவுடன் அவற்றை ஏற்க இயலாது என்பதைத் தெரிவித்துவிட்டுத் திரும்பினேன். எனவே, டில்லி கூட்டத்தில் வங்கத்தின் பிரதிநிதிகளைத் தவிர மற்ற மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டார்கள். நான்கு மாநிலங்களிலிருந்து, மொத்தம் பத்து தோழர்கள்,(பஞ்சாப் - 2, பீகார் - 2, ராஜஸ்தான் - 1, உத்தரப்பிரதேசம் - 5) 1928 செப்டம்பர் 8 அன்று டில்லி, கோட்லா ஃபெரோஷா ரோடில் உள்ள ஒரு இல்லத்தில் கூடினார்கள். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐவரில், இருவர் கூட்டத்தில் உட்காரவில்லை. காரணம் அவர்கள் முன்வைத்த நிபந்தனைகளில் சில மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. இவ்வாறாக, விவாதங்களில் எட்டுபேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆசாத் டில்லிக்குக் கொண்டுவரப்பட வில்லை. ஆனாலும் அவர் வரைவுத் திட்டத்தில் இருந்த அனைத்து அம்சங்களுக்கும் தன் ஒப்புதலை ஏற்கனவே அளித்துவிட்டார். இரண்டு நாட்கள் நடந்த நீண்ட விவாதங்களுக்குப்பின்னர், பகத்சிங் முன்வைத்த அனைத்துத் திட்டங்களும் கூட்டத்தில் கலந்து கொண்ட எட்டு பேர்களில் ஆறு பேர் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பணிந்த்ராநாத் மற்றும் மன்மோகன் பானர்ஜி (இருவரும் பீகாரிலிருந்து வந்திருந்தவர்கள்) சோசலிசம் என்கிற கருத்தையும் அதேபோன்று கட்சியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதையும் எதிர்த்தார்கள். ஆயினும், பின்னர் பகத்சிங் 1928 டிசம்பரில் கல்கத்தா சென்றிருந்தபோது, அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த டிரைலோக்யா சக்ரவர்த்தி மற்றும் பிரஃபுல் கங்குலி ஆகியோரைச் சந்தித்தார். அப்போது அவர்கள் அவரிடம், டில்லி கூட்டத்திற்காக வங்க புரட்சியாளர்களுக்கு அழைப்பு விடுவதற்காக வந்த நபரிடம், துரதிர்ஷ்டவசமாக தவறான நபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் பகத்சிங், டில்லி கூட்ட முடிவுகளை விளக்கியிருக்கிறார். அவர்கள் இருவரும் அனைத்து அம்சங்களின் மீதான முடிவுகளுக்கும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களில் சிலர் வெடிகுண்டு தயாரிப்பது குறித்து பயிற்சி பெறுவதற்கு உதவிடுவதற்காக யதிந்ரா நாத் தாஸ் அவர்களை ஆக்ராவுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். 1928இல் இவ்வாறு நாம் சோசலிசத் தத்துவத்தை ஏட்டளவில் ஏற்றுக்கொண்டு விட்டோம். ஆனால், நடைமுறையில் கடந்த காலத்தின் மிச்ச சொச்சங்களே தொடர்ந்து ஆட்சி செய்தன. ஆயினும், எஸ்.என். மஜும்தார் கூற முயற்சிப்பதுபோல், பகத்சிங் இயக்கத்தின் நடவடிக்கைகளில் விரக்தி அடைந்ததாகவும், அதனாலேயே விரக்தியின் எல்லைக்குச் சென்று, சாண்டர்சைக் கொலை செய்தார் என்றும், பாராளுமன்றத்தில் குண்டு வீசினார் என்றும் கூறியிருப்பதானது தவறான கணிப்பாகும். எஸ்.என். மஜும்தார், கூறியிருப்பதாவது: ‘‘டிரைலோக்யா சக்ரவர்த்தி அவர்கள், கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது உருவாக்கப்பட்டதுபோல், ஐயாயிரம் இளைஞர்களைக் கொண்ட தொண்டர் படை ஒன்றை உருவாக்குங்கள் என்று பகத்சிங்கிற்கு அறிவுரை கூறினார். பகத்சிங் அவரது அறிவுரையை நிறைவேற்ற முயற்சித்தார். ஆனால் அதில் தோல்வி கண்டார். இது பகத்சிங் மனதில் விரக்தியை ஏற்படுத்தியது. ஏதேனும் பரபரப்பூட்டுகிற வகையில் ஏதேனும் அவசரம், அவசியம் செய்தாக வேண்டும் என்று நினைத்தார். அதனைத் தொடர்ந்தே பாராளுமன்றத்தில் குண்டு வீசப்பட்டது.’’இந்தக் கூற்று முழுவதுமே உண்மைக்கு முரண்பட்டதாகும். முதலாவதாக, பகத்சிங் எந்தவிதமான பெரிய அளவிலான அரசியல் நடவடிக்கை எதையும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கத்தின் மத்தியக்குழுவின் நம்பிக்கையைப் பெறாமல் எந்தக் காலத்திலும் மேற்கொண்டது கிடையாது. ஐயாயிரம் இளைஞர்களைக் கொண்ட தொண்டர் படையை அமைத்திட வேண்டும் என்று எப்போதும் விவாதம் முன்வந்ததில்லை. இரண்டாவதாக, தொண்டர்படை அமைக்க வேண்டும் என்று கோருவதே செயல்முறைக்கொவ்வா உயர் கனவு நிலை ஆகும். பணமூட்டைகளின் உதவியுடன் ஐயாயிரம் பேர் கொண்ட தொண்டர்படையை - அதுவும் ஓர் நான்கைந்து நாட்களுக்காக - ஏற்படுத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஒரு சில மாதங்களில், ரகசிய புரட்சிப் பணிகளுக்காக, அரசியல் உணர்வுடன் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட கட்டுப்பாட்டுடன் கூடிய அத்தகைய பிரம்மாண்டமானதொரு இளைஞர் படையை அமைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 1929 ஜனவரி முதல் வாரத்தில், கல்கத்தாவிலிருந்து பகத்சிங் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. யதீந்திரநாத் தாஸ் ஆக்ராவிற்கு பிப்ரவரியில் வந்தார். ஒவ்வொருவருமே வெடிகுண்டு தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஏதோ ஒரு விதத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். டில்லி பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீச வேண்டும் என்கிற முடிவானது, ஆக்ராவில், பிப்ரவரி கடைசி வாரத்தில், மீரட்டில் கைதுகள் நடைபெறுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, பகத்சிங், டிரைலோக்யா பாபுவின் அறிவுரையை மேற்கொள்ள முயற்சித்து, தோல்வி கண்டு, விரக்தியடைந்தார் என்ற பிரச்சனையே எப்போதும் எழுந்ததில்லை. இவ்வாறு பகத்சிங் தோல்வி மற்றும் விரக்தியின் வெளிப்பாடாகத்தான் பாராளுமன்றத்திற்கு குண்டு வைத்தார் என்று சொல்வதென்பது, அதன் அரசியல் சாராம்சத்தையே மூடிமறைத்து, விரக்தியின்பால் மேற்கொள்ளப்பட்ட எளிய நடவடிக்கை என்று சிறுமைப்படுத்தும் செயலாகும். இதேபோன்று மற்றொரு மோசமான கதையும் மன்மத் நாத் குப்தா என்பவரால் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. சுக்தேவ்ராஜ் என்பவரால் அவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதையை முழுமையாக நம்பி, (உண்மையில் 1928 அல்லது 1929இன் முதல் பாதி வரை இப்படிப்பட்ட ஒரு நபரே இயக்கத்திற்குள் வந்ததில்லை) கட்சி, பாராளுமன்றத்தில் வெடிகுண்டை வீசிட சுகதேவையும் பட்டுகேஷ்வர் தத்தையும் அனுப்பியதாம். ஆனால், பகத்சிங்கிற்கு எதிராக தனிப்பட்டமுறையில் பொறாமைகொண்டிருந்ததால், சுகதேவ் பகத்சிங்கையும் பட்டுகேஷ்வர் தத், சந்திரசேகர் ஆசாத் மற்றும் தோழர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்ல பகத்சிங்கைக் கட்டாயப்படுத்தினாராம். ஆனால், பகத்சிங் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம், மக்களை தூக்கத்திலிருந்து விழிக்கச்செய்திட தன்னுடைய உச்சபட்ச தியாகம் தேவைப்படுகிறது என்று வாதிட்டாராம். பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் சுகதேவும் இருந்தார் என்ற கூற்றே முதலில் தவறானது. முதல் நாள் கூட்டத்தில், இருவரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டன. பட்டுகேஷ்வர் தத் மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகிய இருவரின் பெயர்களும்தான் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு சுகதேவின் பெயர் எந்தக்கட்டத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் என்பது, அரசியல் அம்சம் மட்டும்தான். வேறெந்தவிதமான பொறாமை எண்ணமோ அல்லது போட்டி மனப்பான்மையோ கிடையாது. அதிர்ஷ்டவசமாக எங்கள் மத்தியில் அவ்வாறெல்லாம் எண்ணங்கள் தோன்றியதே இல்லை. விஜய் குமாருக்குப் பதிலாக பகத்சிங் அனுப்பப்பட்டதற்கோ அல்லது பகத்சிங், பாராளுமன்றத்தில் குண்டு வீசியதற்கோ சுகதேவ்தான் முழுப் பொறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை. பகத்சிங் இடத்தில் வேறு யார் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தாலும், அந்நடவடிக்கையின் தொடர்விளைவாக இப்போது ஈடேறியிருக்கும் அளவிற்கு அரசியல் குறிக்கோளை எய்தியிருக்க முடியாது என்று உளப்பூர்வமாக சுகதேவ் நம்பியதுதான் அதற்குக் காரணமாகும்.இத்தகைய உச்சபட்ச தியாகத்திற்கு யாரை அனுப்புவது என்பதைப் பொறுத்தவரை, புரட்சி இயக்கத்தில் பற்றாக்குறை என்பதே கிடையாது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒவ்வொரு தியாகமுமே உச்சபட்சமானதுதான். இங்கே பிரதான கேள்வி என்பது தியாகம் குறித்து அல்ல, மாறாக இயக்கத்தின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் மக்கள் மத்தியில் மிகத் தெளிவாகக் கூறப்போவது யார் என்பதுதான். உண்மையில் பகத்சிங் ஒரு விரக்தியடைந்த மற்றும் மனமுடைந்திருந்த இளைஞனாக இருந்திருந்தாரானால் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியபோதே தன் உயிரையும் மிக எளிதாக முடித்துக் கொண்டிருந்திருப்பார்.

*** *** ***

எப்படி மற்றும் ஏன் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது?பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928-1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் ஸ்தாபனரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுதும் நடைபெறுவது வழக்கமாகிவிட்டன. ஸ்தாபனரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கின. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, ஸ்தாபனரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது. அந்தக் காலத்திய இளைஞர்கள் சிந்தனையோட்டம் எப்படி இருந்தது என்பது குறித்து ஜவஹர்லால் நேரு கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்: ‘‘கம்யூனிசம் மற்றும் சோசலிச சிந்தனைகள் அறிவுஜீவிகள் மத்தியிலும், அரசு ஊழியர்கள் மத்தியிலும் வெகு வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. அதுநாள்வரை பிரிசியான் ஜனநாயகம் பற்றியும் மார்லி, கேய்த் மற்றும் மாஜினி ஆகியோரின் நூல்களைப் படித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் இளைஞிகளும் இப்போது சோசலிசம் மற்றும் கம்யூனிசம் மற்றும் ரஷ்யா குறித்து கிடைத்த புத்தகங்களை எல்லாம் மிகவும் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருந்தார்கள். மீரட் சதி வழக்கு மக்கள் மனதை புதிய சிந்தனைகளின்பால் திருப்பிட மிகப்பெரிய அளவில் உதவியது. உலக நெருக்கடியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எங்கு பார்த்தாலும் புதிய உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதைப் பார்க்க முடிந்தது. தாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்ற கேள்வியும் இதனை எதிர்த்திட வேண்டும் என்கிற உணர்வும் பொங்கியெழுந்து வந்ததை நன்கு காண முடிந்தது. மக்களின் மனவோட்டம் எந்தத் திசைவழியில் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆயினும் அது மக்கள் மத்தியில் தென்றல் போல் மிதந்து வந்ததேயழிய, அதற்கு மேல் சென்றதாகச் சொல்வதற்கில்லை.

இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று முடிவு செய்தனர். பிரிட்டிஷ் அதிகாரிகள் எந்த அளவுக்குக் கலக்கம் அடைந்திருந்தார்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் எந்தக் கோணத்தில் சென்று கொண்டிருந்ததென்பதை, ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும். புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த சர் டேவிட் பாட்ரிக் என்பவர், ‘இந்தியாவில் கம்யூனிசம்’ என்ற தன்னுடைய அறிக்கையில், (இதனை அவர் 1926இல் தயாரித்திருந்தார்.) ‘‘போல்ஷ்விக் அச்சுறுத்தல்’’ என்பது குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். ‘‘1920இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டவாது காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ஆவணத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு திட்டவட்டமான முறையில் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருப்பதை சர் செசில் கயே மிகச் சரியாகவே பார்த்திருக்கிறார். அந்த ஆவணத்தில், ‘‘காலனியாதிக்க மற்றும் அரைக் காலனியாதிக்க நாடுகளில் உள்ள தேசிய இயக்கங்கள் அடிப்படையாக மற்றும் அவற்றின் குறிக்கோள்களின்படி, புரட்சிப் போராட்டங்களே, எனவே அவை உலகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கின்றன.’’ ... கிரேட் பிரிட்டன்தான் போல்ஷ்விக் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய பிரதான சக்தி என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை. ... போல்ஷ்விக்குகள் தங்கள் இறுதி வெற்றிக்கு உலகப் புரட்சி அத்தியாவசிய நிபந்தனை என்று கருதுகிறார்கள். அத்தகைய உலகப் புரட்சிக்கு எதிராக பிரதான பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டியது பிரிட்டன்தான். போல்ஷ்விக்குகள், இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசை மிக எளிதில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ... இந்தியாவை பிரிட்டிஷாரிடமிருந்து விடுவிக்காதவரை ரஷ்யா இங்கிலாந்தின் அச்சுறுத்தல் அபாயத்திலிருந்து நிம்மதியாக இருக்கமுடியாது.’’35அப்போது இந்திய அரசாங்கத்தின் உள்துறை உறுப்பினராக இருந்த ஜே. கிரீரர் என்பவர், கம்யூனிசத்தை பின்பற்றும் கொள்கையைவிட கட்டுப்பாடான சமூகத்திற்கு அழிவினைத் தரக்கூடிய ஒன்று வேறெதுவுமில்லை என்று கணித்திருந்தார். 36கம்யூனிசத்தையும், இடதுசாரி மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கங்களையும் நசுக்குவதற்காக, அரசாங்கம் இரு சட்டமுன்வடிவுகளை டில்லி பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஒன்று, பொதுப் பாதுகாப்பு சட்டமுன்வடிவு, மற்றொன்று தொழில் தாவா சட்டமுன்வடிவு, முதல் சட்டமுன்வடிவானது, பிரிட்டிஷ் இந்திய பிரஜைகளாகவும் மற்றும் இந்திய மன்னர்களின் கீழ் இருந்த சமஸ்தானங்களின் பிரஜைகளாகவும் இல்லாதவர்களுக்கு எதிரானது. இதன் மூலம். இந்தியாவின் கவர்னர் ஜெனரல், அந்நிய கம்யூனிஸ்ட்டுகளை பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான அதிகாரம் கொடுக்கப்பட இருந்தது. இரண்டாவது சட்டமுன்வடிவு, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை வெட்டிச் சுருக்கிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இரண்டு சட்டமுன்வடிவுகளும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பத்திரிகைகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டன. ஆயினும் அனைத்து எதிர்ப்பையும் உதாசீனம் செய்துவிட்டு, அரசாங்கம் பொதுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவை, 1928 செப்டம்பர் 6 அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அது அவையால் செப்டம்பர் 24 அன்று நிராகரிக்கப்பட்டது. அரசாங்கம் அதனை மீண்டும் சற்றே திருந்திய வடிவத்தில் 1929 ஜனவரி 29 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அரசாங்கம், மேற்படி சட்டமுன்வடிவை பாராளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்திடத் தீர்மானித்திருக்கிறது என்கிற செய்தி வந்தபோது பகத்சிங் ஆக்ராவில் இருந்தார். இந்த செய்தியைக் கேட்டதும் பகத்சிங் கடும் கோபம் அடைந்தார். அரசாங்கத்தின் தடித்தனமான போக்கிற்கு எதிராக ஏதேனும் செய்தாகவேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அவர் லாகூர் சென்று, சுகதேவிடம் தன் திட்டங்கள் குறித்து விவாதித்தார். பின்னர் திரும்பி வந்து மத்தியக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரி, அதில் தன் ஆலோசனைகளை முன்வைத்தார். அவருடைய திட்டங்கள், சுருக்கமாக வருமாறு: (1) அரசாங்கத்தின் அடாவடித்தனமான போக்கிற்கு எதிராக. பாராளுமன்றத்தில் குண்டுகள் வீசி கட்சி தன் எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும். (2) இச்செயலைப் புரிவதற்காக தேர்வு செய்யப்படுபவர்கள் தப்பிக்க முயற்சிக்காது, சரணடைய வேண்டும். விசாரணைக் காலத்தில், நீதிமன்றத்தை கட்சியின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பிரச்சாரம் செய்திடும் மேடையாக மாற்ற வேண்டும். (3) இந்நடவடிக்கையில் ஈடுபட தன்னையும் மற்றொரு தோழரையும் அனுமதித்திட வேண்டும். அவருடைய முதல் இரு ஆலோசனைகளும் மத்தியக் குழுவால் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் மூன்றாவது ஆலோசனையை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. முதல் நாள் கூட்டத்தில் சுகதேவ் ஆஜராகவில்லை. அவர் மறுநாள்தான் வந்தார். இரண்டாவது நாள் அவரது வருகை, பகத்சிங்கிற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்தது. றீண்ட விவாதத்திற்குப்பின்னர், இறுதியில் மத்தியக் குழு மூன்றாவது திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தது.இரண்டாவது சட்டமுன்வடிவு (தொழில் தாவா சட்டமுன்வடிவு) 1928 செப்டம்பர் 4 அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது தேர்வுக்குழுவிற்கு (ஷிமீறீமீநீt சிஷீனீனீவீttமீமீ) அனுப்பப்பட்டு, பின்னர் சில திருத்தங்களுடன் 1929 ஏப்ரல் 2 அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 8 அன்று அவையில் 56 பேர் ஆதரிக்க, 38 பேர் எதிர்த்திட, அந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது. அவைத் தலைவர், வாக்கெடுப்பின் முடிவை அறிவிக்க எழுந்தவுடனேயே, பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் தங்களிடமிருந்த குண்டுகளை வீசியெறிந்தனர். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று வீராவேசமாக முழக்கமிட்டுக்கொண்டே, துண்டுப்பிரசுரங்களையும் தூக்கியெறிந்தனர். துண்டுப்பிரசுரத்தில், இவ்வாறு குண்டு எறிந்ததற்கான நோக்கத்தை அவர்கள் விளக்கியிருந்தனர். அன்று மாலை சிறப்புப் பதிப்பு வெளியிட்ட ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ அத்துண்டுப்பிரசுரத்தின் வாசகங்களை முழுமையாக பிரசுரித்திருந்தது. இந்தச் செயலின் காரணமாக, நம் இயக்கத்தை ‘‘பயங்கரவாத - கம்யூனிசம்’’ என்ற பெயரில் சிலர் சில காலம் வரை அழைத்துக் கொண்டிருந்தனர்.

*** *** ***

‘‘பயங்கரவாத - கம்யூனிசம்’’

லாகூர் மற்றும் கான்பூர் புரட்சிக்குழுவினர் சோசலிசத்தை நோக்கி 1926-27களில் நகரத் தொடங்கினர். செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற டில்லி கூட்டத்தில், கட்சியின் சித்தாந்தமாக சோசலிசத்தை ஏற்றுக்கொண்டு, கட்சியின் இறுதி லட்சியம் சோசலிச சமூகத்தை அமைப்புதுதான் என்று பிரகடனப்படுத்தியிருந்தாலும், நடைமுறையில் நாங்கள் பழைய பாணியிலேயே செயல்பட்டுக்கொண்டிருந்தோம். தொழிலாளர்கள் - விவசாயிகள் - இளைஞர்கள் - மத்தியதர அறிவுஜீவிகள் முதலானோரை அணி திரட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தாலும், பஞ்சாப்பில் நவஜவான் பாரத் சபா அமைத்ததைத் தவிர, அந்தத் திசைவழியில் கட்சியை கொண்டு செல்ல ஆழமான முயற்சிகள் எதுவும் செய்ததாகச் சொல்ல முடியாது. விஞ்ஞான சோசலிசத்தை - அதாவது மார்க்சிசத்தை - நாங்கள் புரிந்துகொள்வதில் குறையிருந்தது என்றே சொல்ல வேண்டும். மார்க்சிசம், சிந்தனையையும் செயலையும் தனித்தனியே பிரித்திட அனுமதிக்கவில்லை என்பதையும், தனிநபர் வீரதீரச் செயல்களுக்கு அதில் இடமில்லை என்பதையும் புரிந்துகொள்ள நாங்கள் தவறினோம். வன்முறை நடவடிக்கைகளை (இதில் கொடூரமான அரசாங்க அதிகாரிகளைக் கொல்லுதல், ஆங்காங்கே தொடர்ச்சியற்ற முறையில் ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்), தொழிலாளர்கள் - விவசாயிகள் - இளைஞர்கள் - மாணவர்கள் அமைப்புகளைக் கட்டுவதுடன் இணைக்க முடியும் என்று நம்பினோம். ஆனால், நடைமுறையில், வன்முறை மற்றும் ஆயுதமேந்திய தாக்குதல் தொடுப்பதற்கு எங்களைத் தயார் செய்துகொள்வதற்கு நாங்கள் அழுத்தம் கொடுத்து வந்தது தொடர்ந்தது. தூக்கத்திலிருக்கும் மக்களை எழுப்பவும், அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள கடும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பழிக்குப் பழி வாங்குவதற்கும் இது அவசியம் என்று நாங்கள் நினைத்தோம். 1928 டிசம்பரில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வின்போது, தோழர் சோஹன் சிங் ஜோஷ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பகத்சிங் கீழ்க்கண்டவாறு கூறினார்: ‘‘உங்கள் கட்சியின் திட்டம் மற்றும் நடவடிக்கைகளுடன் முழுமையாக உடன்படுகிறோம். ஆனால், மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்வதற்கு எதிரியின் தாக்குதலுக்கு உடனடியாகப் பதிலடித் தரப்படவேண்டியதும் அவசியம்.’’

இப்படித்தான் அப்போது எங்கள் மனவோட்டம் இருந்து வந்தது. எங்கள் அணுகுமுறையில் இருந்த இத்தகைய உள்ளார்ந்த முரண்பாட்டிற்கு நாங்கள் பல்வேறு விதங்களில் வியாக்கியானம் செய்து வந்தோம். தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டுவது என்கிற முடிவு எங்கள் நன்னோக்க ஆசையாக மட்டுமே இருந்து வந்தது. எங்கள் நடவடிக்கைகளில் அதிகமானவை பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகளாகவே இருந்தன.மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தால், வெளிநாட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக, ‘‘தேசியவாதிகளுக்கு வேண்டுகோள்’’ என்றதொரு ஆவணத்தின் மூலமாக, எங்களுடைய பிழையான புரிதலை சரிசெய்திட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது, 1924 டிசம்பர் 15 நாளிட்ட வான்கார்டு இதழின் இணைப்பாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. புரட்சியாளர்கள் குறித்து அந்த வேண்டுகோளில் கூறப்பட்டிருந்ததாவது:

‘‘ரகசிய சங்கங்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் தொடர்ச்சியற்ற பயங்கரவாத நடவடிக்கைகளால் அதிக அளவில் பயன் ஒன்றும் கிட்டாது. இவ்வாறு தீவிரமான நடவடிக்கைகளில் தங்கள் சக்தியை செலவிடுபவர்கள், அதற்கு இணையான அளவிற்கு புரட்சி குறித்தும் தவறான கருத்தோட்டம் கொண்டிருக்கிறார்கள். வன்முறை என்பது புரட்சிக்கு தனிப்பட்ட அத்தியாவசியமான அம்சம் கிடையாது. இன்றைய சமூகச் சூழலில் அரசியல் மற்றும் சமூகப் புரட்சிகள் ரத்தம் சிந்தாமல், வன்முறையற்ற முறையில் கிடைத்திடும் என்று எதிர்பார்க்க முடியாதுதான் என்றபோதிலும், அதே சமயத்தில் ரத்தம் சிந்தும் கொடூரமான மற்றும் வன்முறைச் சம்பவங்களும் புரட்சியாகாது. ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பு அல்லது அரசியல் நிறுவனம் அவற்றை உயர்த்திப்பிடிக்கும் தனிநபர்களைப் படுகொலை செய்வதன் மூலமாக எந்தக்காலத்திலும் தூக்கியெறிந்திட முடியாது. அதேபோன்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் அடுக்கடுக்காக சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதற்காக எண்ணற்ற அதிகாரிகளைக் கொல்வதனாலும் தேசிய சுதந்திரம் அடைந்துவிடலாம் என்பதும் சாத்தியம் கிடையாது. இந்த முறைகள் எதுவும் இச்சமூகக் கேட்டின் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்குப் போதுமானதல்ல. இவை இரண்டுமே அரசியல் பெரும் பிழைகள். ஆனால் அதற்காக. பயங்கரவாதிகளை ‘‘புரட்சிகரக் கிரிமினல்கள்’’ என்று விளிப்பதும் பகுத்தறிவுக்கொவ்வாத ஒன்று.

ஏனெனில் ‘அரசியலமைப்புவாதிகள்’ என்பவர்கள் பொதுவாக புரட்சியாளர்களாக இருக்கமாட்டார்கள், நெருக்கடிக்காலங்களில், புரட்சி இயக்கங்களின்மீது தாக்குதல் தொடுக்கப்படும் சமயங்களில் எதிர்ப்புரட்சியாளர் களாகவும் மாறிவிடுவார்கள்.’’

அதே கட்டுரையின் மற்றொரு பகுதியில் புரட்சி என்றால் என்ன என்பது குறித்து ஒரு சரியான வரையறையும் அளிக்கப்பட்டிருந்தது. ‘‘புரட்சி என்றால் என்ன? இந்திய தேசியவாதிகள் வட்டாரத்தில் இது குறித்து ஒரு தவறான கருத்து நிலவுகிறது. புரட்சி என்றால் பொதுவாக அது வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ரகசிய சங்கங்களுடன் இணைந்திருக்கும் என்று கருதப்படுகிறது. எனவேதான் இந்திய அரசியல் அகராதியில் ‘‘புரட்சிகரக் குற்றம்’’ என்ற சொற்றொடரும் காணப்படுகிறது. ஆயினும், புரட்சி என்பது இதைவிட விரிவான அளவில் பொருள்கொண்டது. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்கால கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, புதியதொன்றை உருவாக்கும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வே புரட்சி என்று அழைக்கப்படுகிறது. நடைமுறை சமூக அமைப்பில் வளமாக வாழ்ந்து வரும் சமூகக் காரணிகள், பொருளாதார வர்க்கங்கள் மற்றும் அரசியல் நிறுவனங்கள் அத்தகைய அமைப்பில் மாற்றம் வருவதை, தங்கள் வளமான வாழ்க்கை பறிபோவதை, அவ்வளவு எளிதாக அனுமதித்திட மாட்டார்கள். தாங்கள் முற்றாக அழித்தொழிக்கப்படும்போது மூர்க்கத்தனமாக தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருக்க மாட்டார்கள், அரசியல் மற்றும் சமூக வன்முறைகளில் வெறித்தனமாக இறங்காமல் இருக்க மாட்டார்கள். இவ்வாறு இவர்களால் ஏவப்படும் அனைத்து எதிர்ப்புக்களையும் அழித்தொழித்து வெற்றிவாகை சூடும் மாபெரும் வரலாற்று நிகழ்வே ‘‘புரட்சி’’ என்று அழைக்கப்படுகிறது.’’401925இல் இளம் கம்யூனிஸ்ட் அகிலம், வங்க புரட்சி ஸ்தாபன இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது. அது, இளம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அறிக்கை வடிவத்தில் அமைந்திருந்தது. அது, மக்கள் திரள், தொகுதி 1 - எண் 7 -இல் பிரசுரமானது. அறிக்கை, கிழக்கத்திய நாடுகளில் உள்ள புரட்சிகர இளைஞர்கள் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கிய பங்களிப்பினைச் செய்து வருகிறார்கள் என்னும் உண்மையை அங்கீகரித்தது. ‘‘மக்களின் நலன்களைப் பேணிப்பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்ளும் வீரஞ்செறிந்த பயங்கரவாதிகள்’’ என்று இளைஞர்கள் காட்டிவந்த பேராண்மையையும், பெரும் செயல்வீரத்தையும், மிகவும் போற்றிப் பாராட்டியது.

‘‘மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போராடும் ஒரு புரட்சியாளன், மக்களின் குரல்வளையை நெறித்துக் கொல்பவர்களையும் அதற்குக் காரணமாக இருப்பவர்களையும் அப்புறப்படுத்தும் தார்மீக உரிமையையும் பெற்றிருக்கிறான்’’ என்று அறிக்கை மேலும் குறிப்பிட்டிருக்கிறது.’’

துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆவணங்கள் எதுவுமே காலத்தில் எங்களுக்கு வந்து சேரவில்லை. எங்கள் சொந்த அனுபவங்கள் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தனிநபர் வீரச் செயல்களுக்கு வரையறைகள் உண்டு என்பதை உணர்ந்து கொள்ளவே எங்களுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. நாங்கள் சோசலிசத்தை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம்.ஆயினும், இவ்வாறு நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் சாதகமான அம்சங்கள் எதுவுமே நடைபெறவில்லை என்று அதற்குப் பொருள் அல்ல. பலவீனமான அம்சங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனாலும், வலுவான அம்சங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உண்டு.

எங்கள் புரிதலில் இருந்த பிரதானமான குறைபாடுகள் என்ன என்பவை குறித்து நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். அவற்றைச் சுருக்கமாக மறுபடியும் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அது நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை. நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியன்றும் அவ்வளவு எளிதல்ல. எங்களுடைய இரண்டாவது பிரதான பலவீனம், தொழிலாளர்கள - விவசாயிகளை அணிதிரட்டும் பணியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும், நடைமுறையில் அதனைச் செயல்படுத்திடுவதில் பலவீனமாக இருந்தோம். இவ்வாறாக, குறைபாடுகள் பலவீனங்கள் இருந்தபோதிலும், குறுகிய காலமே நீடித்திருந்த எங்கள் நடவடிக்கைகளை ஆய்வு செய்யும்போது, சில முக்கியமான சாதனைகளும் செய்திருக்கிறோம் என்பதைக் காண முடியும்.

1928இல் லாகூரில் வெளியிடப்பட்ட நவஜவான் பாரத் சபா அறிக்கை, 1929இல் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் நீதிமன்ற விசாரணையின்போது பகத்சிங் மற்றும் பி.கே. தத் ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கை, 1929 டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் அமர்வு நடைபெற்ற சமயத்தில் விநியோகிக்கப்பட்ட இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கத்தின் அறிக்கை, 1930 ஜனவரியில் வெளியான வெடிகுண்டின் தத்துவம் ஆகியவை இக்காலத்தில் எங்களால் வெளியிடப்பட்ட மிகச் சிறந்த ஆவணங்களாகும். இந்த ஆவணங்களின் அடிப்படையில், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்று நாங்கள் கூற முடியும். வங்கத்தில் கூட, அணிவகுப்பின் வேகம் ஒப்பீட்டளவில் மெதுவாக இருந்தது என்ற போதிலும், இயக்கத்தின் திசைவழி என்பது இதேபாணியில் இருந்தது என்றே கூறலாம். இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம், சோசலிசமே எங்கள் லட்சியம் என்று பகிரங்கமாகப் பறைசாற்றியிருந்த அதே சமயத்தில், வங்கத்தில் இருந்த அநேகமாக அனைத்துக் கட்சிகளும் குழுக்களும் அது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்பட முடியாத நிலையிலேயே இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.சோசலிசத்தை தங்கள் லட்சியமாக ஏற்றுக்கொண்ட பின்னணியில், இக்கால கட்டத்திலிருந்த புரட்சியாளர்கள், மனிதனை மனிதன் சுரண்டும், ஒரு தேசத்தை மற்றொரு தேசம் சுரண்டும் இச்சமுதாய அமைப்பை ஒழித்து, ஒரு வர்க்கமற்ற சமுதாயத்திற்காக நிற்கிறோம் என்றும், எங்கள் போராட்டம் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏகாதிபத்திய முறைக்கே எதிரானது என்றும் பிரகடனம் செய்தார்கள். இவ்வாறு புரட்சியாளர்கள் பிரகடனம் செய்ததும், இவர்கள் சோவியத் ஒன்றியத்துடன் தங்களை இரண்டறப் பிணைத்துக் கொண்டதும், புரட்சிக்குப்பின் இந்தியாவில் அமையும் அரசாங்கமானது, ஒருவிதமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அமைந்திடும் என்றும், கடவுள், மதம், இறைமை முதலானவற்றிற்குப் பிரியா விடை கொடுத்திடும் என்றும், தங்கள் கண்ணோட்டம் மதவெறிக்கு எதிரானதாகவும் மதச்சார்பின்மைமீது நம்பிக்கை கொண்டாகவும் இருந்திடும் என்றும் கூறியது இவர்கள் குறித்து அளவிடற்கரிய மதிப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய நடவடிக்கைக்குப் பின், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டு விட்டார்கள். விசாரணைக் கைதிகளாக இருந்த அவர்கள், நீதிமன்றத்தை தங்கள் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் மேடையாக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள், சோசலிச சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டுபோனார்கள், புரட்சிக் கட்சியின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் மக்கள் முன் வைத்தார்கள்.இவர்களது போர்த்தந்திரங்கள் பலித்தன என்றே எஸ்.என். மஜும்தார் எழுதுகிறார்:

‘‘தவறுகளும் பலவீனங்களும் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக தேசிய இயக்கத்திற்கும், கணிசமான அளவில் இளம் புரட்சியாளர்களை உருவாக்கியதற்கும் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கத்திற்கு உள்ள பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது.’’

ஜி.எஸ். தியோல் கூற்றின்படி, ‘‘இயக்கத்தின் நோக்கம் மற்றும் எல்லை எந்த அளவிற்குக் குறுகியதாக இருந்தபோதிலும்... இந்திய தேசிய இயக்கத்தை வேகமாக முடுக்கிவிடுவதற்கு அது ஒரு வித்தியாசமானமுறையில் உதவியிருக்கிறது. ... அவர்கள் (பகத்சிங்கையும் மற்றும் அவரது தோழர்களையும் குறிப்பிடுகிறார் - ஆசிரியர்) நடவடிக்கைகள் இந்திய தேசிய காங்கிரசை, முழுச் சுதந்திரம் என்கிற கோரிக்கையை முன்வைப்பதற்கும், 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற மாநாட்டு அமர்வில் ‘பூர்ண சுவராஜ்யம்’ என்னும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் வழிகோலியது என்று நிச்சயமாகக் கூற முடியும்.’’

தியோல் புரட்சியாளர்களின் நடவடிக்கைகளும் போராட்டங்களும், நாட்டில் மிகவும் கொதிப்பான நிலைமையை உருவாக்கி இருந்தன. அதுதான் காங்கிரஸ் கட்சியை 1930இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிட நிர்ப்பந்தித்தது. ‘‘பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் வன்முறை இயக்கத்திற்கு மாற்றாக அந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தக் கூற்று, மகாத்மா காந்தி, 1930 மார்ச் 2 அன்று வைசிராய்க்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. ‘‘அனைவரும் கவலைப்படக்கூடிய அளவிற்கு வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து விட்டன,’’ என்று காந்தி எழுதியிருந்தார். அவர் மேலும், ‘‘வன்முறை அல்லாத போராட்டம் ஒன்றை நடத்திட அவர் தீர்மானித்திருப்பதாகவும், அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வன்முறை சக்திகளை மட்டுமல்ல, வளர்ந்து வரும் வன்முறைக் கட்சிகளின் அணிதிரட்டப்பட்ட வன்முறை சக்திகளையும் எதிர்த்திடுவதற்காகவே’’44 என்று பிரகடனம் செய்திருந்தார்.

*** *** ***

விஞ்ஞானபூர்வமான சோசலிசத்தை நோக்கி ...

1929 மத்தியவாக்கில், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கத்தின் முக்கிய தோழர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அங்குதான் அவர்களுக்குப் போதுமான அளவு படிக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடைய புதிய புரிதலின் வெளிச்சத்தில், தங்கள் கடந்தகால நடவடிக்கைகளை, குறிப்பாக தங்களுடைய தனிநபர் வீரதீரச் செயல்கள் குறித்து, முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இறுதியில் அவற்றைக் கைவிடுவதென்றும், சோசலிஸ்ட் புரட்சி சிந்தனையை உயர்த்திப் பிடிப்பது என்றும் தீர்மானித்தார்கள். பார்ஸ்டல் சிறையிலிருந்த மற்ற தோழர்களுடன் நீண்ட நெடிய விவாதங்களையும், ஆழமான ஆய்வுகளையும் மேற்கொண்டபின், இங்கொன்றும் அங்கொன்றுமாக இயக்கத்தைக் காட்டிக்கொடுப்பவர்களையும் மற்றும் அதிகாரிகளையும் கொல்வதன் மூலமாக, இறுதி லட்சியம் ஈடேறாது என்ற முடிவுக்கு பகத்சிங் வந்தார். 1929 அக்டோபர் 19 அன்று, பஞ்சாப் மாணவர்கள் மாநாட்டிற்கு பகத்சிங் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அவர் அவர் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார்:

‘‘தோழர்களே, இன்று, துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப்போவதில்லை. ... தேச வரலாற்றின் சிக்கலான இக்கால கட்டத்தில் மிகப் பெரும் பொறுப்பை இளைஞர்களே சுமந்தாக வேண்டும். இளைஞர்கள், தொழில் மயமான பகுதிகளின் சேரிகளிலும், கிராமப் புறங்களின் ஓட்டைக் குடிசைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கானவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும்.’’

1931 பிப்ரவரி 2 அன்று, அவர் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளில் பகத்சிங் மக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை அதில் அவர் திரும்பத்திரும்ப வலியுறுத்தி இருந்தார். அதில் அவர், ‘‘உண்மையான புரட்சிகர ராணுவம் என்பது கிராமங்களிலும் தொழிற்சாலைகளிலும் உள்ள விவசாயிகளும் தொழிலாளர்களுமேயாவார்கள்’’, என்று குறிப்பிட்டிருந்தார். அதே வேண்டுகோளில், அவர் தான் ஒரு பயங்கரவாதி அல்ல என்பதை அழுத்தமாகவும் உறுதியாகவும் மறுத்தார். அவர் மேலும் கூறினார்:‘‘நான் ஒரு பயங்கரவாதி போல் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு பயங்கரவாதி அல்ல. நான் ஒரு புரட்சியாளன். நீண்ட திட்டத்தின் தீர்மானகரமான சிந்தனைகளைப் பெற்றிருக்கும் ஒரு புரட்சியாளன். ... எனது சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் ஒரு பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. பயங்கரவாத நடைமுறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் உறுதியுடன் ஏற்றுக் கொண்டு விட்டேன்.’’ அவர் இளம் அரசியல் ஊழியர்களுக்கு, மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் - விவசாயிகள் - படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்கள் வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.:

‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் “புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே” நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’அவர் மேலும்,‘‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு, உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். ... கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். ... விவசாயிகள் - தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும்.இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விடுகிறார்.

*** *** ***

புரட்சியின் வரையறைபுரட்சி குறித்து பகத்சிங்கின் கருத்தாக்கம் மிகத் தெளிவானது. அவர் கீழமை நீதிமன்றத்தில் புரட்சி என்ற வார்த்தைக்கு நீங்கள் எவ்வாறு பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: ‘‘ புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்து கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.தன்னுடைய கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர் மேலும் கூறியதாவது: “புரட்சி’’ என்பதன் மூலம், நிலை குலையக்கூடிய அபாயம் இல்லாததும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான ஓர் சமூக அமைப்பை, முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும் ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனித குலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் அர்த்தப்படுத்துகின்றோம்.பகத்சிங் சோசலிசம் நோக்கி தத்துவார்த்தரீதியாக மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார். 1924 - 1928 ஆண்டுகளில் அவர் பலவிதமான நூல்களை மிக ஆழமாகவும் விரிவாகவும் கற்றார். மறைந்த ராஜா ராம் சாஸ்திரியின் கூற்றுப்படி, இந்தக் கால கட்டத்தில் பகத்சிங், புத்தகங்களைப் பேரார்வத்துடன் படித்துக் கொண்டிருந்தார். அவர் விரும்பிப் படித்த தலைப்புகள், ரஷ்யப் புரட்சி, சோவியத் ஒன்றியம், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இந்தியப் புரட்சி இயக்கங்கள், அராஜகவாதமும் மார்க்சிசமும் முதலியவைகளாகும். 1928 இறுதி வாக்கில், அவரும் அவருடைய சக தோழர்களும், சோசலிசம்தான் தங்கள் இயக்கத்தின் இறுதி லட்சியம் என்றும், தங்கள் கட்சியின் பெயரை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டோம் என்றும் பிரகடனம் செய்தார்கள். இவ்வாறான இவர்களது பயணம் அவர் தூக்குமேடையை முத்தமிடும் வரை தொடர்ந்தது. ‘‘இந்தக் காலகட்டத்தில் அவர் அவ்வமயம் நாட்டில் நிலவிய அனைத்துக் கருத்துக்களையும் கூர்மையான ஆய்வின்கீழ் கொண்டுவந்தார். தன்னுடைய சொந்தக் கருத்துக்களை மட்டுமல்ல, தேசிய இயக்கம் தொடர்பானவை, உலக அளவில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த புரட்சி இயக்கங்கள், அராஜகவாதம், சோசலிசம், வன்முறை மற்றும் அஹிம்சை, புரட்சிகர பயங்கரவாதம், மதம், வகுப்புவாதம், பழைய புரட்சியாளர்கள் மற்றும் சம காலத்திய தேசியவாதிகள் ஆகிய அனைவரின் குணாம்சங்கள் குறித்தும் கூர்மையான ஆய்வினை மேற்கொண்டார்.’’

*** *** ***

கடவுளும் மதமும்

பகத்சிங், கடவுள், மதம் மற்றும் இறைமைக் கொள்கைகள் குறித்து எந்தவிதமாக சிந்தனைகளைப் பெற்றிருந்தார் என்று ஒருசில வார்த்தைகளாவது சொல்லாவிட்டால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது. ஏனெனில், அனைத்துவிதமான பிற்போக்குவாதிகளும், பழமைவாதிகளும், மதவெறியர்களும், பகத்சிங் மற்றும் சந்திரசேகர ஆசாத் ஆகியோரின் பெயர்களையும் புகழையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது அவசியமுமாகும். தன்னை ஒரு நாத்திகன் என்று பறைசாற்றிக்கொண்ட பகத்சிங், தனக்கு முன்பிருந்த புரட்சியாளர்கள் அணுகுமுறை மற்றும் கருத்துக்கள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்கு புரிந்து வைத்திருந்ததையும், அவர்கள் மதப்பற்று எந்த அளவிற்கு இருந்தது என்பதையும் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு சரியான அறிவியல்பூர்வமான புரிதல் இல்லாதன் விளைவாக, தங்களை ஆன்மீகரீதியாக நிலைநிறுத்திக்கொள்வதற்கும், தங்களுடைய சொந்த உணர்ச்சிகளுக்கெதிரான போராட்டத்திற்கும், விரக்தியை வெல்வதற்கும், சொந்த சௌகரியங்கள், குடும்பங்கள் - ஏன், வாழ்க்கையையே விட்டுக்கொடுப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்துவதற்கும் உதவக்கூடிய வகையில் பகுத்தறிவுக்கொவ்வாத நம்பிக்கைகளும் இறைமைக் கொள்கையும் அவர்களுக்குத் தேவைப்பட்டன என்று பகத்சிங் சுட்டிக்காட்டுகிறார்.ஒருவன் தன்னுடைய வாழ்வின் அனைத்து சுகபோகங்களையும் துறந்து, தன் உயிரையே எந்த நேரத்திலும் எவ்வகையான இடருக்கும் உட்படுத்துவதற்குமான ஒரு வாழ்க்கையை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ள மனமுவந்து முன்வருகிறான் என்றால், அதற்கு அவனுக்கு ஓர் ஆழமான ஆதார உந்துசக்தி தேவைப்படுகிறது. இத்தகைய உந்துசக்தியை பகத்சிங்கிற்கு முன்பு வாழ்ந்த புரட்சிகர பயங்கரவாதிகள் இறைமைக்கொள்கை மற்றும் மதங்களின் மூலமாகப் பெற்றார்கள். ஆனால், தங்களுடைய செயல்பாடுகளின் தன்மை குறித்துப் புரிந்துகொண்டவர்களுக்கு, அறிவியல் தத்துவத்தை ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை எவ்வித செயற்கையான ஆன்மீக ஊன்றுகோளுடனும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உணர்ந்துகொண்டவர்களுக்கு, பயம் என்பது கிஞ்சிற்றும் இல்லாமல் தூக்குமேடை யேறத் துணிந்தவர்களுக்கு, இத்தகைய மூடநம்பிக்கைகள் தேவைப்படவில்லை. லாகூர் உயர்நீதிமன்றத்தில் பாராளுமன்றத்தில் குண்டு எறிந்தது தொடர்பான வழக்கில் ஆஜராகும் சமயத்தில் பகத்சிங் தாக்கல் செய்த அறிக்கையில், அவர் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை மிகவும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். பகத்சிங், ‘‘விமர்சனம் மற்றும் சயசிந்தனை ஆகிய இரண்டும் புரட்சியாளர்களின் தவிர்க்க முடியாத இரு குணங்களாகும்’’ என்று கருதியதன் அடிப்படையில், ‘‘புரட்சி என்னும் வாள், சிந்தனைகள் என்னும் சாணைக்கல்லில் கூர்மைப்படுத்தப் படுகிறது’’ என்று கூறினார். மேலும் அவர், ‘‘சமூக முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் எவனும் பழைய நம்பிக்கைகள், ஒவ்வொன்றையும் விமர்சிக்க வேண்டும், அவநம்பிக்கை கொள்ள வேண்டும், உண்மை என்னும் உரைகல்லில் உரசிப்பார்த்திட வேண்டும்.’’ என்றும் கூறினார். ‘‘மேலோட்டமான உண்மை அல்லது குருட்டு உண்மை என்பதும் மிகவும் ஆபத்தானது, அது மனிதனை மந்தபுத்தியுடையவனாக்கி, பிற்போக்காளனாக மாற்றிவிடுகிறது’’ என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.‘‘கடவுளிடம் ஒருவன் தன் இயலாமைக்கு ஆறுதலடைந்து கொண்டு, ஆதரவு கோருகிறான்’’ என்று ஒப்புக்கொள்ளும் பகத்சிங், அத்தகைய நம்பிக்கை அவனது துன்பங்களை எளிதாக்குகிறது, ஏன், சந்தோஷமாகவும் வைத்துக்கொள்கிறது’’ என்று பகத்சிங் கூறுகிறார். துன்பங்களும் துயரங்களும் புயல்போல் தாக்கும்போது, ஒருவன் தன் சொந்தக்காலில் நிற்பது என்பது, சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு அல்ல, அத்தகைய சமயங்களில் செயற்கையான ஊன்றுகோல் எதுவும் தேவையில்லை என்று உறுதியாக பகத்சிங் நிராகரிக்கிறார்.‘‘என் விதியை எதிர்கொள்ள எனக்கு எவ்விதமான போதைப் பொருளும் தேவையில்லை’’ எனக் கூறும் பகத்சிங், ‘‘தன் சொந்தக்காலில் நிற்க முயற்சிக்கும் ஒருவன், யதார்த்தவாதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தன்மீது சுமத்தும் அத்துணை துன்பங்களையும், துயரங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, நேரிடையாகவே எதிர்கொள்ள வேண்டும்’’ என்கிறார்.‘‘கடவுள், மூடநம்பிக்கை மற்றும் மதம் ஆகியவற்றை நிராகரித்தல் என்பது தற்செயலான நிகழ்வு அல்ல அல்லது என்னிடம் உள்ள தன்னகங்காரமோ அல்லது ஆணவமோ அல்ல’’ என்று பகத்சிங் திட்டவட்டமாகக் கூறுகிறார். 1926இலேயே பகத்சிங் கடவுளை நிராகரித்துவிடுகிறார். அவர், ‘‘1926 இறுதிவாக்கில், பிரபஞ்சத்தில் அனைத்தையும் ஆக்கும், காக்கும், அழிக்கும் எல்லாம் வல்ல ஒரு சக்தி இருப்பதாக நம்பும் கொள்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று உளமார உணர்ந்துகொண்டுவிட்டேன்’’ என்று பகத்சிங் எழுதுகிறார்.என்றும் வாழும் பகத்சிங்1930 ஜூலை கடைசி ஞாயிறு. பகத்சிங், லாகூர் மத்திய சிறையிலிருந்து, பார்ஸ்டல் சிறையிலிருந்த எங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். இது அவருடைய வழக்கமான பழக்கமாகும். வழக்கில் பிணைக்கப்பட்டுள்ள மற்ற எதிரிகளுடன் எதிர்வழக்காடுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சொன்னால் அவ்வாறு அனுப்பி வைப்பார்கள். அரசாங்கம் அளிக்கும் அந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு பகத்சிங் எங்களைப் பார்க்க வருவார். அப்போதெல்லாம் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் குறித்து நாங்கள் விவாதிப்போம். ஒருநாள் எங்கள் உரையாடல், நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, எங்களுக்கு அளிக்கப்படவிருக்கும் தண்டனை குறித்துத் திரும்பியது. எங்களுக்குள் தமாஷ் செய்து கொள்ளும் விதத்தில் நாங்களே ஒருவர்க்கொருவர் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு கூறிக்கொண்டிருந்தோம். அப்போதும்கூட ராஜகுருவுக்கும், பகத்சிங்கிற்கும் நாங்கள் தீர்ப்பு கூறவில்லை. அவர்கள் இருவருக்கும் தூக்குதண்டனைதான் என்பது எங்களுக்குத் தெரியும்.‘‘ராஜகுருவுக்கும் எனக்கும் என்னவாயிற்று? நீங்கள் எங்களை விடுதலை செய்யப் போகிறீர்களா?’’ சிரித்துக்கொண்டே பகத்சிங் கேட்டார்.நாங்கள் யாரும் பதில் கூறவில்லை. ‘‘யதார்த்தத்தை அங்கீகரிக்க பயப்படுகிறீர்களா?’’பகத்சிங் மறுபடியும் மெதுவாகக் கேட்டார்.அமைதி. அமைதியைக் கிழித்துக்கொண்டு அவர் சிரித்தார். பின்னர் கூறினார்: ‘‘நாங்கள் இறக்கும் வரைக்கும் கழுத்தில் கயிறு தொங்கும். அதுதானே யதார்த்தம், தோழர்களே, அது எனக்குத் தெரியும். உங்களுக்கும் அது தெரியும். பின், ஏன் அதனைக் காண கண்ணை மூடிக்கொள்கிறீர்கள்?’’பகத்சிங் பின் கம்பீரமாக, மிக மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய பாணி. கேட்பவர்களை அறிவுபூர்வமாக விவரங்களைக் கூறி இணங்கச் செய்வதற்கு முயற்சிப்பதுபோல் அதனைப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். கத்துவது அவரது பழக்கமல்ல. அதுவே அவரது பலம் என்று கூட சொல்லலாம்.அவர் தன்னுடைய வழக்கமான பாணியில் தொடர்ந்தார் ‘‘நாட்டுப்பற்றுக்குக் கிடைக்கிற மிக உன்னதமான பரிசு இது. இதனைப் பெற இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய இந்த உடம்பை அழிப்பதன் மூலம் அவர்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக இருந்திடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது தவறு. அவர்கள் என்னைக் கொல்லலாம், ஆனால் அவர்களால் என் சிந்தனைகளைக் கொல்ல முடியாது. அவர்கள் இந்த உடம்பை நசுக்கலாம். ஆனால் என் உணர்வுகளை அவர்களால் நசுக்க முடியாது. என் சிந்தனைகள் பிரிட்டிஷாரை பேய் போல் வட்டமிடும். அவர்கள் இங்கேயிருந்து ஓடும் வரைக்கும் அவர்களை அது சுற்றிக்கொண்டே இருக்கும்.’’பகத்சிங், அனைவரையும் ஈர்க்கும் வகையில் மிகவும் கம்பீரமாகப் பேசிக்கொண்டிருந்தார். கொஞ்சநேரம் எங்களுக்கு முன்னே அமர்ந்திருந்த நபர் எங்கள் சக தோழர் என்பதையே நாங்கள் அனைவரும் கொஞ்ச நேரம் மறந்துவிட்டோம். அவர் தொடர்ந்தார்:‘‘ஆனால் இது படத்தின் ஒரு பக்கம் மட்டுமே. அதன் மறுபக்கம் அதே அளவுக்கு ஒளிமயமானது. பகத்சிங்கின் மரணம், நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பிரிட்டிஷாருக்கு, பகத்சிங் உயிரோடிருப்பதைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கும். நான் தூக்கிலிடப்பட்டபின், என்னுடைய புரட்சிகரச் சிந்தனைகளின் மணம் நம்முடைய அழகான இந்த நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவும். இளைஞர்களின் மனதை மயக்கி நாட்டின் விடுதலைக்காகவும், புரட்சிக்காகவும் வெறித்தனமாகச் செயல்பட வைக்கும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை சவக்குழிக்கு அனுப்புவதை விரைவுபடுத்தும். இது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். நாட்டிற்கு நான் செய்திட்ட சேவைகளுக்காகவும், என் மக்கள் மீது நான் வைத்திருந்த அளப்பரிய அன்பிற்காகவும் கிடைக்கவிருக்கும் மிக உன்னதமான அந்தப் பரிசினைப் பெறுவதற்காக - அந்தப் பொன்னான நாளுக்காக - மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.’’ஓராண்டிற்குள்ளேயே பகத்சிங்கின் தீர்க்கதரிசனம் உண்மையாயிற்று. சாவைத் துச்சமெனக் கருதிடும் மனோ தைரியம், தியாகம், நாட்டுப்பற்று, கொள்கை யுறுதி ஆகியவற்றின் அடையாளமாக பகத்சிங் பெயர் மாறியது. சோசலிச சமூகத்தை அமைத்திட வேண்டும் என்கிற அவரது கனவு, படித்த இளைஞர்களின் கற்பனையாக மாறியது. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வெல்லட்டும்) என்கிற அவரது முழக்கம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. 1930-32களில் நாடு முழுதுமான மக்கள் ஒரே மனிதனாக எழுந்து நின்றனர். குண்டாந்தடிகள் தாக்கியபோதும், குண்டுகள் நெஞ்சைத் துளைத்தபோதும், வெண்சிறைக் கொடுமைகள் ஏற்றபோதும் அவர்களது நெஞ்சுரத்தை எவராலும் குலைக்க முடியவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலும் அதேபோன்ற உணர்வு மக்கள் மத்தியில் பொங்கி வழிந்தது. போராடும் மக்கள், தங்கள் உதடுகளில் பகத்சிங் பெயரை உச்சரித்தனர். அவரது முழக்கமான ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ போராட்டப் பதாகைகளாக மாறின. போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளை பதின்பருவத்தினரும், இளைஞர்களும் மலர்ச்செண்டுகளை எதிர் கொள்வதுபோல் எதிர்கொண்டனர். நாடே பிரிட்டிஷாருக்கு எதிராக வெகுண்டெழுந்தது. பின்னர் 1945-46களில் உலகம் ஒரு புதிய இந்தியா உருவாகி வருவதைப் பார்த்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வாலிபர்கள், கடற்படையினர், விமானப் படையினர், ஏன் - காவல்துறையினர் கூட ஒன்று திரண்டு பிரிட்டிஷாருக்கு மரண அடி கொடுத்திட தயாராயினர். 1930களில் ஒருசிலரிடம் மட்டுமே காணப்பட்ட துன்பத்தை எதிர்கொள்ளும் துணிவு மற்றும் தியாகம் இப்போது மாபெரும் மக்கள்திரளின் உணர்வாக மாறியிருந்தது. நாட்டில் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பகத்சிங் சொன்னது மிகச் சரி. பகத்சிங்கின் உடலைத்தான் அவர்களால் சிதைக்க முடிந்தது. ஆனால் அவரது உணர்வுகளுக்கு சாவே கிடையாது. அது என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்...

Monday, September 1, 2008

சிங்கூர் முற்றுகை: சவாலை அரசியல்ரீதியாக சந்திப்போம்



மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நிறு வப்பட்டுள்ள டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி தலைமையில் அமைந்துள்ள கதம்பக் கூட்டணியானது தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் மூலம் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அனைத்து வளர்ச் சிப் பணிகளையும் சீர்குலைத்து வருகிறது.
இந்தப் பிராந்தியத்தின் பிரதானமான சாலையான துர்காபூர் விரைவுப்பாதையில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து முற்றிலுமாக சீர்குலைந்திடும் வகையில் தடுத்துள்ளது. வங்கத்தின் கிராமப்புறங்களிலிருந்து கொல் கத்தாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நலிவுற்ற நோயாளிகள் வரமுடியாத வகை யில் தடுக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு சுருங்கி வருவதால், போக்குவரத்து மற்றும் ரயில் தொடர்பு சாதனங்களைத் துண்டிக்கும் இழி செயல்களிலும் இறங்கி யிருக்கிறார்கள். டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்துள்ள மேற்கு வங்க தொழில்துறை அமைச்சரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான நிருபம் சென், எதிர்க்கட்சிகள் முன்வைத் துள்ள குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு முட் டாள்தனமானவை என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறார். மேலும், அவர்கள் விவ சாயிகளிடம் திருப்பித் தரவேண்டும் என்று கோரும் இடங்கள் தொடர்பாக வரைபடம் வரைந்து, அறிவுக்குப் பொருந்தாத அவர்களது கோரிக்கைகளையும் விளக்கியுள்ளார். மேற்கு வங்க அரசு, ‘‘பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள லாம்’’ என்று அவர்களை அழைத்தபோதும் அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். கலகக் காரர்கள் கோரும் சில முக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து ஆராய் வோம்.முதலாவதாக, இப்போது கலகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இடது முன்னணி ஆட்சிக்குத் தாங்கள் இதுவரை காட்டிவந்த எதிர்ப்பின் போது கூறிவந்த ஒரு குற்றச் சாட்டு, ‘‘இடதுமுன்னணி அரசாங்கத்தின் கீழ் வங்கத்தில் தொழில்மயம் சாத்தியமே இல்லை’’ என்பதாகும். கடந்த முப்பதாண்டு காலமாக அவர்கள் தொடர்ந்து பாடிவந்த பல்லவி இதுவேயாகும். இப்போது தொழில் மயத்திற்குத் துல்லியமாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் சமயத்தில் இதே கூட்டம் அதனைத் தகர்த் திட முயற்சிக்கின்றன. இவர்களின் அரசிய லின் பின்னணி என்ன என்பதைப் புரிந்து கொள்வது கடினம் ஒன்றுமல்ல. இடது முன் னணி அரசாங்கத்தின் தலைமையில் வங்கத் தில் தொழில் மயம் முன்னேற்றம் அடைந் தால், அவர்கள் இதுநாள்வரை செய்துவந்த அரசியலும் எளிதாக அடிபட்டுப் போய்விடும். எனவேதான், தங்கள் அரசியல் சுயநலத்திற் காக, வங்கம் தொழில்மயமாகாமல் தடுத் திடவேண்டிய தேவை அவைகளுக்கு ஏற்பட் டிருக்கின்றன. அதன் காரணமாகவே பெருமளவில் வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடிய, மக்களுக்கு மேலும் முன்னேற்றகர மான வாழ்க்கைத்தரத்தை அளிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றவிடாது நாச வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் வங்கத்தின் வளமைக்கு எதிரிகளாக உருமாறி உள்ளனர். இரண்டாவதாக, வங்கத்தில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளைத் துவங்கி, சட்டத்தில் கூறப்பட்ட அளவிற்கு அதிகமாக நிலங்களை வைத்திருப்போரிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியபோது, நிலப் பிரபுக்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே நின்று, நிலச்சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்த அதே சக்திகள்தான் இப்போது விவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றன, தொழில்மயத்தை எதிர்க் கின்றன. இடது முன்னணி அரசாங்கம் 1977இல் ஆட்சிக்கு வந்தபின், நாட்டில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு மிக அதிகமான அளவில் நிலமற்றவர்களுக்கு நிலத்தை விநியோகம் செய்த ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான். வங்கத்தில் மட்டும் நிலச்சீர்திருத்தத்தால் பயனடைந்தவர்கள் 29.7 லட்சம் பேர்களாவார். இது, இந்தியாவில் இவ்வாறு பயனடைந்தவர்களில் 55 சதவீதமாகும். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், 2 லட்சம் ஹெக்டேர்களுக்கும் (சுமார் ஐந்து லட்சம் ஏக்கர்களுக்கும்) அதிகமாக நிலம் - பாசனத்திற்கு இலாயக்கான நிலம், இந்தியா முழுவதும் பாசனம் அல்லாத உப யோகத்திற்காகக் கட்டாயமான முறையில் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், மேற்கு வங்கத்திலோ இது ஒருசில ஆயிரம் ஏக்கர்கள் மட்டுமே. அதுவும் சாலைப் போக்கு வரத்திற்காக எடுக்கப்பட்டவைகளே.
அதே போன்று நாட்டின் மற்ற பகுதிகள் அளித்திருப்பதைவிட, சிங்கூரில் விவசாயிகளுக்கு, மிக அதிகமான அளவிலேயே, கையகப்படுத் தப்பட்ட நிலங்களுக்காக இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை விலை யைவிட மூன்று மடங்கு தொகை வழங்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு முதன்முதலாக, நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இல்லாவிட்டாலும் நிலத்தைச் சார்ந்திருந்து ஜீவனம் நடத்தி வந்த குத்தகை விவசாயிகள் போன்றவர்களுக்கும், உரிய இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில், அதாவது 2005-2008க்கு இடையில், சிங்கூரில் கைய கப்படுத்தப்பட்ட நிலம் என்பது ஆயிரம் ஏக்கருக்கும் குறைவு. ஆனால், அதே சமயத்தில் மாநிலம் முழுவதும் நிலமற்ற விவசாயிகளுக்கு சுமார் 30 ஆயிரம் ஏக்கர்கள் நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் வேறெந்த மாநிலங்களிலும் இதுபோன்று நடந்ததில்லை. வங்கத்தில் தொழில்மய முயற்சிகளை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள், விவசாய நிலத்தைக் கட்டாயப்படுத்திக் கையகப்படுத்துகிறார்கள் என்று இடது முன்னணி மீது குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பவர்கள், இந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்துவிடுகிறார்கள்.
மேற்கு வங்கம், நிலச்சீர்திருத்தங்களில் இவ்வாறு தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்தபோதிலும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது பிரதானமாக வேகமான தொழில்மயவளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது. மாநிலத்தில் தொழில்மயமாக்குவதற்குப் பல்வேறு பிரச்சனைகள் குறுக்கிட்டா லும் அதில் மிக முக்கியமான பிரச்சனை என்பது, நிலங்கள் துண்டு துண்டாக பல்வேறு நபர்களிடம் சிதறிக் கிடப்பதாகும். முப்பதாண்டுகளுக்கு முன் நிலச்சீர்திருத்தம் தொடங்கி, நிலமற்றவர்களுக்கு நில விநியோகம் நடந்தது. இப்போது அந்த நிலம் பல்வேறு நபர்களின் பெயர்களில் துண்டு துண்டாகச் சிதறிக்கிடக்கின்றன. சிங்கூரில் 999.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதில், இழப்பீட்டுக்குத் தகுதி படைத்த உரிமையாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இவர்கள் தவிர குத்தகை விவசாயிகள் வேறு. இதன் பொருள் என்ன வெனில், ஒரு ஏக்கர் நிலத்திற்கு 13 பேருக்கும் மேல் சொந்தக்காரர்கள் என்பதாகும். ஆனால், யதார்த்தத்தில் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் அல்லது இருவர்தான் மேற்படி நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்து வருகிறார்கள். மற்ற எல்லோரும் வெளியில் வேறேதேனும் சில்லரை வேலைசெய்துதான் தங்கள் ஜீவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் வேகமான தொழில் வளர்ச்சியில்லாமல் அதன் மூலமாக வேலை வாய்ப்பை அதிகரித்திடாமல் வங்கத்திற்கு எதிர்காலமோ, வங்க மக்களுக்கு வளமையோ சாத்தியமேயில்லை என்பது இதன்மூலமாகத் தெளிவாகிறது.
இறுதியாக, வங்கத்தின் தொழில்மயத்திற்கான முயற்சிகள் வெற்றி பெற்றுவிட்டால், அதன் மூலமாக மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமாக முன்னேறிவிட்டால், இதன் மூலம் இடது முன்னணி மேலும் கெட்டிப் படுத்தப்பட்டுவிடும், தங்கள் அடித்தளம் வேகமாகக் கரைந்துவிடும் என்று எதிர்க் கட்சிகள் பயப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் கண்ணோட்டத்தின்படி, தாங்கள் ஜீவித்திருக்க வேண்டுமானால், எப்பாடுபட்டாவது தொழில்மயம் நடைபெறாது அதனைச் சீர்குலைத்திட வேண்டும் என திட்டமிடுகிறார்கள்.. இப்போது இதைத்தான் சீர்குலைவு சக்திகள் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நடவடிக்கையில் இப்போது திரிணாமுல் காங்கிரசோடு, காங்கிரஸ், பாஜக, சில முஸ்லிம் மதஅடிப்படைவாத அமைப்புக்கள், ‘மாவோயிஸ்ட்டு கள்’, எஸ்யுசிஐ, அந்நியநாடுகளிலிருந்து உதவி பெறும் சில அரசு சாரா அமைப்புக்கள், கார்ப்பரேட் ஊடகங்களில் ஒருசில பிரிவினர் - என அனைவரும் இடது முன்னணிக்கு எதிராக ஒன்றுசேர்ந்திருக்கின்றனர். இவை அனைத்தும், இன்றைய இந்தியாவில் இடதுசாரி சக்திகளைப் பலவீனப்படுத்த துடிக்கும் ஏதோ ஒரு அமைப்பின் நலன்களுக்கு ஆதர வாய்ச் செயல்படும் கருவிகளேயாகும். ஏகாதிபத்தியம், இந்தியாவை தன்னுடைய ‘‘இளைய பங்காளியாக’ மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பு, இடதுசாரிகளிடமிருந்துதான் வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வகை செய்யும் நவீன தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு இடதுசாரிகளிட மிருந்துதான் வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை இடதுசாரிகள் பாதுகாப்பதன் மூலம் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தனியார்மயம் மூலமாக விரைவில் லாபமீட்டுவது தடுக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக பரி வாரமானது, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் தடுத்திடும் பெரும் அரணாக இடதுசாரிகள்தான் இருப்பதாகக் கருதுகின்றன. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கத்தின் பிரதான வீரர்களாக இடதுசாரிகள்தான் செயல்படுகிறார்கள் என்பதை அனைத்து தீவிரவாத மற்றும் பிற்போக்கு சக்திகளும் பார்க்கின்றன. அந்நிய நாடுகளிடமிருந்து உதவி பெறும் அரசு சாரா அமைப்புகள் தங்களுக்குப் படியளப்போருக்கு ஆதரவாக நிற்கவேண்டுமென்றால், இடதுசாரிகளை எதிர்க்கவேண்டும் என்ற முறையில் செயல்படுகின்றன. இவ்வாறு இந்த சக்திகள் அனைத்தும் இடதுசாரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒன்றுபட்டிருப்பது இயல்பே.
இந்தியாவில் இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழும் மேற்கு வங்கத்தை அதனால்தான் அவைகள் குறி வைத்துத் தாக்குகின்றன. இன்றைய தினம் சிங்கூரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிப் போக்குகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் எதிராக மகா கூட்டணியால் விடுக்கப்பட்டிருக்கிற அரசியல் சவாலாகும்.
இவ்வாறு நடைபெறுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதனை நாம் அரசியல் ரீதியாக எதிர்கொண்டிருக்கிறோம். இப்போதும் அவ்வாறே எதிர்கொள்ளப்படும்.
தமிழில்: ச.வீரமணி