Monday, August 26, 2013

நாட்டுக்குத் தேவை மாற்றுக் கொள்கை

இரு ஆண்டுகளுக்கு முன்பு, தாராள மயக் கொள்கைகளுக்காக லாலி பாடும் தலைவர்கள் பொருளாதார சீர்திருத்தங்க ளைப் பின்பற்றத் தொடங்கி இருபதாண்டுகள் நிறைவான சமயத்தில், அதனை மிகவும் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, தற்போது இந்தியப் பொருளாதாரமும் மந்தமாக ஆரம் பித்துவிட்டது என்பதையும், இது 1991ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்ததைப்போன்ற மோசமான நிலைக்கே, மீளவும் இட்டுச்செல் லும் என்றும் அவர்களை நாம் எச்சரித்திருந் தோம். அவ்வாறு நாம் எச்சரித்ததற்காக, வழக் கம் போலவே, இந்திய கார்ப்பரேட்டுகளும் அவர்களுக்குத் தம்பட்டம் அடிப்பவர்களும் நம்மீது வசைமாரிபொழிந்தார்கள்.
இந்தியா வை உலக அளவில் மிகச்சிறந்த நாடாக உய் விக்க வரும் உலகமய மூலதனத்தின் ஒளி பொருந்திய கடவுள்களை நம்மால் பார்க்க முடியவில்லையாம்,’ ஜி.20 உச்சி மாநாட்டின் போது நம் பிரதமர் அவர்கள் இந்தியா மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடு என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பீற்றிக் கொண் டார். இந்தியாவில் உள்ள ஒரு சிறு பிரிவின ருக்கு மட்டுமே இது நல்லது செய்துள்ளது என்றும், மீதமுள்ள பெரும்பான்மை மக்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் அளித்திருப்ப தோடு அவர்கள் போதிய உணவு இன்றி ஊட் டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்வதையும் நாம் சுட்டிக்காட்டியபோது, அதனை அவர்கள் கண்டு கொள்ளாமல் புறந் தள்ளிவிட்டனர். விளைவு, ஒளிரும் இந்தியர் களுக்கும் அல்லல் உறும் இந்தியர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி மேலும் கொடூர மானமுறையில் விரிவடைந்து என்ன செய் யப் போகிறீர்கள்?’ என்று ஒவ்வொரு நொடி யும் நம்மைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக் கிறது.
இன்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, உண்மையில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி இருப்பது போலவே தோன்றுகிறது. அதிர்ச்சி தரத்தக்க விதத்தில் நிலைமைகள் இவ்வாறு மாறி யிருந்தபோதிலும் இத்தகைய தாராள மயக் கொள்கைகளை அன்றையதினம் அறி முகப்படுத்திய இன்றைய பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் இது தொடர்பாகக் கூறுகை யில், ‘நாம் 1991க்கு முன் உள்ள நிலைமைக்கு மாறும் பிரச்சனையே கிடையாதுஎன்றும் அந்த சமயத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி நிலையான விகிதத்தில் இருந் ததுஎன்றும், ‘இப்போது அது சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறதுஎன்றும், ‘நாம் நம் ரூபாயின் வேகமாக சரிந்துவருவதைத் தான் சரி செய்ய வேண்டும்என்றும் கூறி யிருக்கிறார்.
அவர் கூறாமல் விட்ட உண்மை என்ன வெனில், 1991 ஜூலையில் ரூபாயின் மதிப்பு இரு கட்டமாக 20 விழுக்காட்டிற்கும் மேலாக குறைக்கப்பட்டது என்பதாகும். 1988இல் ரூபாயின் மதிப்பு 13 விழுக்காடும் 1989இல் 10 விழுக்காடும், 1990இல் 8 விழுக்காடும் தேய்ந்த பின்னணியில் இது நிகழ்ந்தது. இன்று ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்து வரும் நிலைக்கும் அன்றைய நிலைக்கும் வித்தியாசம் ஏதேனும் இருக்கிறதாடாக்டர் மன்மோகன் சிங், 1991-92இல் தன்னுடைய பட்ஜெட் உரையின்போது சீர் திருத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, “இனியும் காலத்தை வீணாக்கிக் கொண்டி ருக்கக் கூடாதுஎன்று கூறி அன்றைக்கு அர சுக்கு இருந்த நிதி நெருக்கடி நிலைமை குறித்து மிகவும் அளந்து விட்டார். 1990-91இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 விழுக்காடு இருப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் அப்போது கூறினார். இன்று என்ன நிலைமை? இன்றைய தினம் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.8 விழுக்காடு அள விற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருக் கிறது.
அப்போது அவர், ‘கடன் சேவை சுமை’ (debt service burden) நடப்புக் கணக்கு ரசீதுகளில் (current account receipts) சுமார் 21 விழுக் காடு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக் கிறது என்று கூறினார். 2013-14 பட்ஜெட் ஆவணங்களின்படி, ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய இலக்கம் (comparable figure) 35.09 விழுக்காடாக இருந்தது. அந்நியச் செலா வணி இருப்பு அந்த சமயத்தில் ஆறு வார கால அளவிற்கு இறக்குமதி செய்வதற்குப் போதுமானதாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டிருந்தது. இன்று, நம்முடைய இருப்பு சற்றே நல்ல நிலையில் இருந்தது. இதன் மூலம் ஆறு மாதங்களுக்கான இறக்குமதிக்கு நிதி அளித்திட முடியும். ஆனால் பிரிக்’ (BRIC - Brazil, Russia, India, China) நாடுகளில் இந்தியா தான் குறைவாக வைத்திருந்தது.
மற்ற நாடு களில் உள்ள இருப்பு இரு ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருந்தது. அதேபோன்று 1991 இல் இருந்த பணவீக்கம் குறித்து அவர் என்ன சொன்னார்? ‘‘1990-91இல் பணவீக்கத்தின் மிகவும் கவலை தரக்கூடிய அம்சம் அத்தியா வசியப் பொருள்களின் மீது அது தீவிரமாக இருப்பதுதான்’’ என்றார். சரி, இன்று மட்டும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இவற்றையெல்லாம் சரிப்படுத்துவதற் காக டாக்டர் மன்மோகன்சிங் அப்போது என்ன செய்தார்? சர்வதேச நிதியத்திடமிருந்து அவர் கள் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கடன்கள் பெற்றார். நாட்டின் பல்வேறு துறைகளையும் அந்நிய முதலீடு களுக்குத் திறந்துவிட்டார். நேரடிய அந்நிய முதலீட்டுக்கு வழிவகுக்கும் விதத்தில் கொள் கைகளைத் தாராளமயமாக்கினார். இவை அனைத்தையும் ஓர் அபாய அறிவிப்புடன் மேற்கொண்டார். அதாவது, ‘காசு எதுவும் கொடுக்காமல் பரிகாரம் எதையும் செய்ய முடி யாது’. (There can be  no adjustment without paying a price) மக்கள் நம்முடைய பொருளாதார சுதந் திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான தியாகம் செய்யவும் நம்முடைய பொருளா தாரத்தின் மோசமான நிலையை சரிப்படுத்திக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
இதுவும் இன்றைய நிலைக்கு அப்படியே ஒத்துப்போகிற மாதிரி இல்லையா?சர்வதேச நிதியத்திடமிருந்து அதேபோன்ற நிபந்தனைகளுடன் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு (bailout package) அரசாங்கம் தயா ரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருக் கிறதா? ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்த கைய நிவாரண உதவிகளைப் பெற்றபோது அதன் ஆழமான விளைவுகள் எப்படி இருந் தன என்பதையும், நிவாரண உதவிகளைப் பெற்ற நாடுகள் தங்கள் மக்கள் மீது தாங்க முடியாத அளவிற்கு சிக்கன நடவடிக்கை களைத் திணித்ததன் காரணமாக மக்களால் அவற்றைச் சமாளிக்க முடியாது, மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் அவர் கள் இறங்கியதையும் நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு வேறு மாற்றே இல்லையா? இருக் கிறது. கடந்த மூன்றாண்டுகளில் ஆட்சியா ளர்கள் கார்ப்பரேட்டுகளுக்கும், பணக்காரர் களுக்கும் அளித்த வரிச் சலுகைகள், அவர் களது பட்ஜெட் ஆவணங்களின்படியே, ஒவ் வோராண்டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் களுக்கும் மேலாகும். இவ்வாறு அவர்கள் ஊக் கத்தொகைகளை அவர்களுக்கு அள்ளித் தந்த போதிலும்,தொழில் உற்பத்தியின் ஒட்டு மொத்த வளர்ச்சி - 1.6 விழுக்காடாகத்தான் (minus 1.6 per cent) இருந்தது.
இதற்குப் பதிலாக, அரசாங்கத்திற்கு வரவேண்டிய நியாயமான வரிகளை வசூலித்து, நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கு வதற்கு பொது முதலீடுகளுக்குப் பயன்படுத்தி இருந்தாலே, இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரித்திருக்க முடியும். அதனைத் தொடர்ந்து அவ்வாறு வேலை வாய்ப்பு அதிகரித்ததன் மூலம் மக்களின் வாங் கும் சக்தி அதிகரித்து, உள்நாட்டுத் தேவை யையும் மிகப்பெரிய அளவிற்கு விரிவாக்கி இருக்க முடியும். இது தொழில் உற்பத்தியை யும் பெருக்குவதற்கான அடிப்படையாக அமைந்து, நம் பொருளாதாரத்தை மேலும் வலுவான நிலைக்கு உயர்த்தி, மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்திருந் திருக்கும். இதுவே உண்மையான மாற்றாகும். நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்வற்றுவதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பெரிய அளவில் எவ்வித வித்தியாசமும் கிடையாது.
ஆயினும், பொருளாதார மந்தம் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், உலகப் பொருளாதார மும் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கக் கூடிய நிலையில் இந்திய கார்ப்பரேட்டுக ளுக்கு தங்கள் லாப வேட்டையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு தேவ தூதர் (messiah) தேவைப் படுகிறார். 1930களில் பொருளாதாரத்தில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, உலகப் பெரும் வர்த் தகப்புள்ளிகள், குறிப்பாக அமெரிக்க கார்ப்ப ரேட் ஜாம்பவான்கள், ஹிட்லரும் பாசிசமும் தலைதூக்குவதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது வரலாறு. அதேபோன்று இப்போதும் அவர்களுக்கு ஒரு பாசிஸ்ட் சர்வாதிகாரி தேவைப்படுகிறார்.பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாக இருக்கக்கூடிய நிலையிலும், இந்திய கார்ப் பரேட் உலகத்திற்கு, தன்னுடைய கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற அவா படிப் படியாய் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதற்கு அவர்களுக்கு ஒரு வலுவான தலைவர் தேவைப்படுகிறார். ஜனநாயகம், மனித உரி மைகள் மற்றும் சிவில் உரிமைகள் அனைத் தையும் குழிதோண்டிப் புதைத்திட்டாலும் கவலையில்லை, தங்கள் நலன்கள் பாது காக்கப்பட வேண்டும், அதற்கு வழிசெய்து தந்திட வேண்டும், அதற்குத் தேவையான நட வடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒரு தலை வர் அவர்களுக்குத் தேவைப்படுகிறார். இவ் வாறு ஒரு தலைவரைத் தருவதற்கு, உலக மயம் மற்றும் அதன் நவீன தாராளமய பொரு ளாதார சீர்திருத்தங்களுக்குத் தலைமை தாங்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும், இந் திய கார்ப்பரேட்டுகளில் ஒரு பிரிவினருக்கும் பாஜக உறுதி தந்திருப்பதுபோல் தோன்றுகிறது. பாஜக தூக்கி நிறுத்தியிருக்கும் தற்போதைய போஸ்டர் பையனின் (poster boy) கீழ் தங்கள் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று வெளிநாடு மற்றும் நம் நாட்டின் கார்ப்பரேட்டுகளும் நம் புவது போன்று தோன்றுகிறது.
இத்தகைய மாயைகளை இந்திய கார்ப்பரேட் ஊடகங்களும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான், நாட்டு மக்களில் பெரும்பான்மையோருக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் நாம் முன் வைத்துள்ள மாற்றுக் கொள்கையை காங்கிரசாலோ அல்லது பாஜக-வாலோ தர முடியாது என்று நாம் உரத்துக் கூறுகிறோம். நாட்டிற்குத் தேவை மாற்று அரசியல் தலைவர்கள்அல்ல, மாறாக மாற்று மக்கள் ஆதரவு கொள்கைகள்தான். வரவிருக்கும் காலங்களில் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகையதோர் மாற்றை நாம் கொண்டுவர முடியும்.
(தமிழில்: ச.வீரமணி)


Tuesday, August 13, 2013

காங்கிரஸ் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு நாட்டின் நலன் காவுகொடுக்கப்பட்டிருக்கிறது:மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு



புதுதில்லி, ஆக. 13-
காங்கிரஸ் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு, நாட்டின் நலன் நாட்டு மக்களின் நலன் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்களன்று தெலங்கானா மாநிலம் பிரிப்பது சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘தெலங்கானா பிரிவினை சம்பந்தமாக மிகவும் பொறுக்கவியலாத ஒருவிதமான மனவேதனையுடன் உரையாற்ற முன்வந்திருக்கிறேன். 1969ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தனித் தெலங்கானா கோரிக்கையின் காரணமாக தனிப்பட்டமுறையில் பாதிக்கப்பட்ட நபர்களில் நானும் ஒருவன். அப்போது நடைபெற்ற கலவரத்தின் காரணமாக இரண்டு ஆண்டு காலம்  என் படிப்பே அப்போது பாதிக்கப்பட்டது. 44 ஆண்டுகளுக்கு முன் என்ன நடைபெற்றதோ அதே விஷயங்கள் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியானது, மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட அந்தக் காலத்திலிருந்தே, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து அன்றிலிருந்து இன்றுவரை தட்டிக்கழிக்கும் வகையில் மழுப்பியே பேசி வந்திருக்கிறது. 1960களில் இது தொடர்பாக ஏற்பட்ட போராட்டத்தில் பங்கேற்றோர் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 300 பேர்  கொல்லப்பட்டார்கள். அப்போது நான் மாணவனாக இருந்தேன். இறுதியில் அப்போது மாநிலம் பிரிக்கப்பட மாட்டாது என்று முடிவுக்கு வந்தார்கள்.  மாறாக, ஓர் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பிற்பட்ட நிலையில் உள்ள பிராந்தியத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்கள். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 371-டி என்னும் பிரிவையே உருவாக்கினார்கள்.
1969க்குபின் ஆந்திராவின் பிற பகுதிகளில் பெரிய அளவில் கிளர்ச்சிகள் வெடித்தன. இதிலும் பலர் பலியானார்கள்.
இவ்வாறு 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1973இல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயினும். கடந்த நாற்பதாண்டுகளில் அந்தப் பகுதியின் பிரச்சனைகள் எதுவுமே தீர்க்கப்படவில்லை. அதன் காரணமாகத்தான் இன்றைய தினம் தனித் தெலங்கானா பிரிக்கப்பட்டேயாக வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
கடந்த நாற்பதாண்டுகளாக ஏன் எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை? நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் இது தொடர்பாகப் பதில் சொல்லப் போவது யார்? கடந்த நாற்பதாண்டு காலமாக, மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் பெரும்பாலான காலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. இதனை ஏன் அக்கட்சி செய்திடவில்லை? காங்கிரஸ் கட்சியால்  கொண்டுவரப்பட்ட திட்டத்தை காங்கிரஸ் கட்சியே ஏன் அமல்படுத்தவில்லை? அவ்வாறு அக்கட்சி செய்திருந்திருக்குமானால், இந்த அளவிற்கு நிலைமைகள் மோசமாக உருவாகி இருந்திருக்காது. தெலங்கானா பிராந்தியத்தின் நிலைமைகளை  நேர்மையாகக் காங்கிரஸ் கட்சி கவனித்திருந்திருக்குமேயானால், இன்றையதினம் இந்த அளவிற்கு நிலைமைகள் மோசமாக இருந்திருக்காது.
நான் ஆந்திரப்பிரதேசக் குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் நான் பிறந்தது அப்போதைய மதராஸ் (இப்போதைய சென்னை) மாநகரில். ஆனால், ஹைதராபாத்தில் குறிப்பிட்ட காலம் படித்தவன் என்பதால் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவனாகவும் ஆகிறேன். எனவே, என்னால் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு மட்டும் உரியவனாக இருக்க முடியவில்லை. நான் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்தவன். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கட்சிகளில் என்னுடைய கட்சி மட்டும்தான்  மாநிலத்தைப் பிரிப்பதில் உடன்பாடு இல்லைஎன்று வெளிப்படையாகக் கூறியுள்ள கட்சி என்று மிகவும் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். இந்தியாவில் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்திய அந்தக் கொள்கையின் அடிப்படையில் இதை நாங்கள் கூறுகிறோம்.
1947இல் நாம் சுதந்திரம் அடைந்தோம். அதன்பின்னர் பத்தாண்டுகள் கழித்து 1956இல் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு, ‘‘பாரதம் எனப்படும் இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம்’’ என்கிறது. உடன் அந்த மாநிலங்கள் எவை? எந்த மாநிலங்கள் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்  என்ற கேள்விகள்  எழுகின்றன? இதனைச் சுற்றியே அப்போது விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேர, ‘’,‘பி’,‘சி’,‘டிஎன்ற வகையில் நிர்வாகத்தைத் திறமையுடன் நடத்துவதற்கு உகந்தவிதத்தில் மாநிலங்கள் பிரிக்கப்படும் என்று இதே நாடாளுமன்றத்தில் கூறினார்.
அப்போது அவருக்கு அவரது தந்தை மோதிலால் நேரு 1928இல் காங்கிரஸ் கட்சி ஸ்தாபனம் எப்படி அமைய வேண்டும் என்று விரும்பினார் என்பது நினைவுகூரப்பட்டது. அதாவது, மோதிலால் நேரு, காங்கிரஸ் கட்சி ஸ்தாபனம் மொழிவாரி அடிப்படையில் அமைந்திடும் என்று அப்போது கூறியிருந்தார். மேலும் அவர் இந்தியா சுதந்திரம் அடையும்போது இதுவே நவீன இந்தியக் குடியரசின் அடித்தளத்திற்கான அடிப்படையாக அமைந்திடும் என்றும் கூறியிருந்தார்.  இவ்வாறு மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பது சுதந்திரப் போராட்டத்தின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகவும் அமைந்திருந்தது.
சுதந்திரம் பெற்றபின் இப்பிரச்சனை மீண்டும் முன்னுக்கு வந்தது. இதற்கான முதல் முழக்கம் ஆந்திராவில்தான் முழங்கப்பட்டது. தெலுங்கு பேசும் மக்கள்தான் முதல் முழக்கத்தை முழங்கினார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகத்திற்குப்பின்,  (இதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம்இருந்து மரணத்தைத் தழுவினார்.) இப்பிரச்சனை தேசிய முக்கியத்துவத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சம்யுக்தா மகாராஷ்ட்ரா, ஐக்கிய கேரளம் ஆகிய இயக்கங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் நாட்டின் அமைந்தன. எண்ணற்ற தியாகங்கள், மிகப்பெரிய அளவிலான இயக்கங்களை இதற்காக எங்கள் கட்சி மேற்கொண்டது.
மொழிவாரி மாநிலங்களாக இருப்பதைக் குலைத்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தீர்களானால், கடும் விளைவுகள் ஏற்படும். இதற்கு முடிவே காண முடியாது. எனவேதான் நாங்கள் காங்கிரஸ் கட்சியைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்: ‘‘தயவுசெய்து பிரச்சனையைக் குளறுபடி செய்யாதீர்கள்.’’
முன்னாள் உள்துறை அமைச்சரும், இந்நாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் 2009 டிசம்பர் 9 அன்று அவையில் தனித் தெலங்கானா குறித்து அறிக்கையை முன்வைத்தார். அதனை அவர்கள் 2013இலிருந்து அமல்படுத்துவது என்று முடிவுசெய்திருந்தார்களானா, இதுவரை இது தொடர்பாக அவர்கள்மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இப்போது அரசுத்தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘பல விஷயங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் இது தொடர்பாக அறிவித்தீர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அரசு எந்தக் குறிப்பையும் முன் வைக்கவில்லை. இப்போது மீண்டும் அறிவித்திருக்கிறீர்கள்.
ஆந்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முழுமையாக துடைத்தெறியப் பட்டுவிட்டது. இவ்வாறு முழுமையாகத் துடைத்தெறியப்படுவதிலிருந்து தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி மீண்டும் இவ்வாறு தெலங்கானா குறித்த முடிவைக் கையில் எடுத்துள்ளது. காங்கிரசின் இம்முடிவு நாடு முழுதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2009இல் அறிவித்தீர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் இதுதொடர்வாக எதுவுமே செய்திடவில்லை.  ஆந்திராவில் ஆட்சி செய்யும் காங்கிரசார் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார்கள். ஆந்திர மக்கள் முழுமையாகக் குழம்பிப் போயிருக்கிறார்கள். இதனை ஏன் நீங்கள் முன்பே செய்யவில்லை.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது இதுதான். நிலைமைகளை மிகவும் குளறுபடியுடன் அது கையாண்டுகொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய குளறுபடி காரணமாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் இரு ஆண்டுகள் படிப்பை இழந்தேன். இப்போது நம் குழந்தைகள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை இழந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அந்த அளவிற்கு அங்கே கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எப்போது முடியும் என்றே தெரியவில்லை.
நான் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இப்போதாவது இதுதொடர்பாக முறையாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசியுங்கள். இது தொடர்பாக அமைச்சரவை ஏதேனும் முடிவு செய்திருந்தால், அதனை அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முன் வையுங்கள். நாடாளுமன்றத்தின் முன் தாக்கல் செய்திடுங்கள். நாம் அதனை ஆழமாக விவாதிப்போம். இதனை எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்திடுங்கள்.
மாறாக மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். அது நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல. தெலங்கானாவைப் பிரிப்பதன்மூலம் சில இடங்கள் தமக்குக் கிடைக்கலாம் என்று காங்கிரஸ் கருதுமானால், நிச்சயமாக நீங்கள் பெறப்போவது எதுவுமில்லை, இருதலைக்கொள்ளி எறும்பாக நசுக்கப்படப்போகிறீர்கள். எனவே, நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் தயவுசெய்து மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.
முறையாக அமர்ந்திடுங்கள், அனைவருடனும் கலந்தாலோசியுங்கள், அனைவரையும் அரவணைத்துக் கொண்டு முடிவெடுங்கள்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ச.வீரமணி)

Sunday, August 11, 2013

காங்கிரசும் பாஜகவும் கை கோர்க்கின்றன


காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் பிரதான எதிர்க் கட்சியான பாஜகவின் தலைவர்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும், முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு,  ஒரு பொதுவான அணுகு முறையைப் பின்பற்றுவது தொடர்பாக பேசிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறு, பொருளாதார சீர்திருத்தங்கள் மீது ஒரு புதியசுற்று சூதாட்டம் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்துச் செல்ல தன்னால் இயலவில்லை என் பதன்காரணமாகத் தன் பொறுமையின்மையை அரசாங்கம் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக் குறை அதாவது இறக்குமதிப் பொருள்களின் மதிப்புக்கும் ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்புக்கும் இடையேயுள்ள வித்தியாசமான - வர்த்தகப் பற்றாக்குறை - மிகவும் கூர்மையாக அதிகரித்திருப்பது குறித்து விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வர்த்தகப் பற்றாக்குறை சமாளிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டது.  வளர்ச்சி விகிதம் மேல்நோக்கி செல்ல வேண்டுமானால், இதனை உடனடியாகக் குறைத்தாக வேண்டும். 2012-13ஆம் ஆண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5 விழுக் காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது 2011-12ஆம் ஆண்டில் 6.2 விழுக்காடாக இருந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2012-13ஆம் ஆண்டில் 88.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது நம் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.8 விழுக்காடாக இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 2012-13இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் இந்தப் பற்றாக் குறையைச் சமாளிப்பதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும். இப்போது, நடப்புக் கணக்குப் பற்றாக் குறை என்பது அந்நியச் செலாவணியில் அளக்கப்படுவதால்,  இது அந்நியச் செலாவணியால் மட்டுமே சமப்படுத்தப்பட வேண்டியதாகும். இதற்கு,  கணிசமான அளவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் அல்லது கணிசமான அளவிற்கு இறக்குமதியைக் குறைத்திட வேண்டும். (தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய) உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக, ஏற்றுமதியின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்பவை அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். நம் நாட்டின் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதால், அந்நிய நாடுகளில் நம் பொருள்களின் விலைகள் மிகவும் மலிவாகும் என்றபோதிலும் கூட இதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே எதார்த்தமான நிலையாகும்,  2012-13ஆம் ஆண்டின் சென்ற காலாண்டில் ஏற்றுமதி மிகவும் மோசமான முறையில் குறைந்திருந்த அதே சமயத்தில், இறக்குமதியோ குறிப்பிடத்தக்க 6 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது.
எனவே,  ஆட்சியாளர்கள், இந்த இடைவெளியை சமப்படுத்த வேண்டுமெனில் நம் நாட்டிற்குள் மிகப்பெரிய அளவிற்கு அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கவர்ச்சிகரமாக செய்துதர வேண்டுமென்று வாதிடுகிறார்கள். இதன் பொருள், அந்நிய நேரடி முதலீட்டை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி அனுமதிக்க வேண்டும் என்பதே. ஆயினும் கூட,  நிகர அந்நிய நேரடி முதலீடு 2011-12ஆம் ஆண்டில் 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2012-13ஆம் ஆண்டில் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வீழ்ந்துள்ளது. இத்தகு சூழ்நிலைமைகளில்தான், ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமானது, அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை, தற்போதுள்ள 26 விழுக்காட்டிலிந்து 49 விழுக் காடாக உயர்த்தி இருக்கிறது. அதேபோன்று, நாட்டின் பாதுகாப்பு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்றும் அதுகுறித்துக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமலும் பாதுகாப்பு உற்பத்தியிலும் 26 விழுக்காடு அளவிற்கு அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்திடத் துணிந்துள்ளது. இவ்வாறு தாங்கள் செல்லும் கொள்கைத் திசைவழியில் எளிதாகப் பயணம் செய்வதற் காக, ஆட்சியாளர்கள் தற்போது வெளிநாடு வாழ் இந்தியப் பொருளாதார வல்லுநர் ஒருவரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்திருக்கின்றனர். அந்நிய நேரடி முதலீடு, பொருளாதாரத்தில் முதலீட்டின் அளவை அதிகரித்திடும், வேலைவாய்ப்பைப் பெருக்கிடும், உயர் வளர்ச்சி விகிதத்திற்கு இட்டுச்செல்லும் என்றெல்லாம் வாதிடப் படுகிறது. இது ஒரு தவறான வாதமாகும். காப்பீட்டுத்துறை, வங்கித்துறை போன்ற பல துறைகளில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடுகளில் பெரும் பகுதி, உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுத்தப்படும் முதலீடுகள் அல்ல. எனவே, அவற்றின் காரணமாக வேலைவாய்ப்புப் பெருகும் என்பதெல்லாம் கதை. அப்படியே வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அது பெயரளவிலானதாகவே இருக்கும். மேலும், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் முதலீடுகள் உயர் வளர்ச்சி விகிதங்களை எட்ட வேண்டுமானால், அதன்மூலமாக வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டுமானால், அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட உற்பத்திப் பொருள்கள் போதுமான அளவு உள்நாட்டுத் தேவை காரணமாக உட்கிரகிக்கப்படும்போதுதான் சாத்தியமாகும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் எதார்த்த நிலையில் - அதாவது வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு இல்லாத நிலை யில், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் - மக்கள் தங்கள் உள்நாட்டுத் தேவைகளை மிகக் குறைந்த அளவில்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றனர்.
எனவே, அந்நிய நேரடி முதலீடு மிகப்பெரிய அளவிற்கு நாட்டிற்குள் கொட்டினாலும் கூட, அதனால் தாமாகவே இந்தியாவின் உற்பத்தித் துறையிலும் தொழில்துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டு விடாது. மாறாக, இன்றுள்ள உலகப் பொருளாதார மந்த நிலையில், சர்வதேச நிதி மூலதனம், நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நம் நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு புதிய வாய்ப்பு வாசல்களை அளிக்கவே உதவிடும். இந்தியாவின் வளர்ச்சியைப் புதிப்பிப்பதற்குத் தற்போதைய தேவை, மூலதனக் குறைபாடோ அல்லது வளங்களின்மையோ அல்ல. நாட்டு மக்களின் உள்நாட்டுத் தேவையை மக்களுக்கு பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வசதிகளை அளிப்பதே இன்றைய தேவையாகும். இதனைச் செய்வதற்கு பதிலாக, ஆட்சியாளர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டு களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வரிச் சலுகைகளையும் மற்றும் பல் வேறு விதமான வரியல்லாத சலுகைகளையும், வளர்ச்சிக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் வாரி வழங்குகிறார்கள். அதற்குப் பதிலாக,  நியாயமாக வரி வருவாயை ஆட்சியாளர்கள் வசூலித்து,  அவற்றை நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டுவதற்காக, பொது முதலீட்டில் செலுத்தப்பட்டிருக்குமானால், அது வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கும் அதன்மூலம் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கும் கணிசமான அளவிற்கு உதவியிருக்கும். உள்நாட்டுத் தேவை சுருங்கியிருப்பதன் காரணமாக, பெருமுதலாளிகள் தங்களின் வளங்களைஅதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஊக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் கூர்மையாக அதிகரித்திருப்பதில் இது நன்கு பிரதிபலிக்கிறது. உலகத் தங்க நுகர்வில் இந்தியா மட்டும் 27 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு தங்க உற்பத்தி இத்தேவையில் வெறும் 0.3 விழுக்காடு அளவிற்குத்தான் ஈடு செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கை ஒன்றில் இந்தியாவில் சமீப காலங்களில் தங்கத்திற்கான தேவை என்பது மொத்த தங்க நுகர்வில் 40 விழுக்காடு முதலீட்டுக்கான தேவை என்று குறிப்பிட்டிருக்கிறது. உற்பத்திக்காக முதலீடு செய்வதைவிட, தங்க நுகர்வுக்காக முதலீடு செய்வது அதிக லாபம் ஈட்டும் ஒன்றாக மூலதனம் விரும்புகிறது என்பதை இது மெய்ப்பித்திருக்கிறது. நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதிக்கு அடுத்ததாக, தங்க இறக்குமதிதான் இரண்டாவது பெரிய இறக்குமதி இனமாகும். நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் 30 விழுக்காடு தங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் தங்க இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்தார்களானால், ஊக வர்த்தகத்தில் கொள்ளை லாபமீட்டப்படுவது கட்டுக்குள் வந்திருக்கும்.
அதேபோன்று, கடந்த ஆண்டில், உலகிலேயே ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் நிலத்தின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதும் இந்தியாவில்தான் என்று ஆய்வுகள் காட்டு கின்றன. உலகில் மிகவும் செங்குத்தாக சொத்தின் விலைகள் உயர்ந்திருக்கும் நகரங் களில் தில்லி பிரதானமான நகராக இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு உயர் லாபம் ஈட்டப்பட வேண்டும் என்பதற்காக மூலதனம் ஊக வர்த்தகத்தில்தான் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறதேயொழிய, உற்பத்தி சார்ந்த எதிலும் இல்லை. இவ்வாறு நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்த போதிலும், ஐ.மு.கூட்டணி 2 அர சாங்கமானது, நவீன தாராளமய சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை மேலும் தீவிரமாகப் பின்பற்றவே முயற்சித்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய இத்தகைய இழிமுயற்சியில், இது பாஜகவையும் தன் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை என் பதை இது உறுதிப்படுத்துகிறது. ஆயினும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதாவது தங்க இறக்குமதி மூலமாகவும், எண்ணெய் இறக்குமதிகளின் கட்டணங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பதன் மூலமாகவும் ஆட்சியாளர்கள் நவீன தாராளமயச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து பின் பற்றுவதன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் நலன்,  நாட்டு மக்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)


Thursday, August 8, 2013

நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது


ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை செயல் படாது தடுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணபலத்தின் செல் வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதும், மக்களின் நியாயமான அபிலாசை களைக் கருக வைத்திருக்கிறது.
நாடாளுமன்றம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவ லனாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, நாட்டு மக்களே ஒப்புயர்வற்ற வர்கள் என்று மிகவும் கம்பீரமாகப் பறை சாற்றுகிறது. அவர்கள் தங்கள் ஒப்புயர் வற்ற நிலையினைத் தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இப்போதெல் லாம், நாடாளுமன்றம் செயல்படா நிலையே தலைப்புச் செய்திகளாக உள்ளது. அது உண்மையும் கூட. இதுவரையிலான இந்திய நாடாளுமன்ற மக்களவைகளிலேயே தற்போதைய 15ஆவது மக்களவைதான், மிகவும் குறைந்த நாட்களே இயங்கிய ஒன்று என்கிற வரலாறு’(?) படைத்துள்ளது.

மக்களவை செயலகம் தயார்செய்துள்ள புள்ளி விவரங்களின்படி, 15ஆவது மக்களவையின் 12ஆவது அமர்வுவரை 1,157 மணி நேரம்தான் அமர்ந்திருக்கிறது. 14ஆவது மக்களவையின் 1,736 மணி 55 நிமிடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக வும் பின்தங்கிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் முதலா வது மக்களவை 677 நாட்கள் அமர்ந்து, தன்னுடைய 14 அமர்வுகளில் 3,784 மணி நேரம் இயங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மேலவை என்று கூறப்படும் மாநிலங்களவையிலும் நிலை மைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றில் முதன்முறையாக, மாநிலங் களவை பட்ஜெட்டை எவ்வித விவாதமு மின்றி திருப்பி அனுப்பி இருக்கிறது.பல சட்ட முன்வடிவுகள் கிடப்பில்நாட்டில் ஜனநாயகத்தின் செயல்பாடு அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என் பதை இது மட்டும் காட்டவில்லை. ஆட்சி யாளர்கள் பல கொள்கை முடிவுகளை நாட்டின் ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தைக் கலந்தாலோசிக்கா மலேயே எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, ‘ஆதார்’ (Aadhar)அட்டை வழங்குத லாகும். ஆதார்அட்டை என்பது அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறு வதற்கு அத்தியாவசியமான ஒன்று என்று கருதப்படுகிறது. ஆதார்எண் இல்லா மல் ஒரு மாணவன் மத்திய, மாநில அரசு களிடமிருந்து எவ்வித உதவியும் பெற முடியாது. நேரடிப் பயன் மாற்றல் (Direct Benefit Transfer) என்னும் திட்டமானது ஆதார்எண்ணையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

வங்கிக் கணக்குகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆதார் திட்டத்திற்கு சட்டரீதி யாக என்ன பின்னணி இருக்கிறது? ஆதார் அமலாக்கத்திற்கான சட்டமாக தன்னிகரற்ற அடையாளஅட்டை சட்ட முன்வடிவு (UID bill - Unique Identification Bill) கருதப்படுகிறது. ஆனால், இச்சட்ட முன்வடிவின் பல ஷரத்துக்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய அறிக்கையில் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தது. அரசாங்கம் நிலைக் குழுவின் ஆட்சேபணைகள் குறித்து, கிஞ் சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில் லை. அதனை முழுமையாக அப்படியே கிடப்பில் போட்டு வைத்துவிட்டது. இச் சட்டமுன்வடிவினை எந்த வடிவத்திலும் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிட அரசாங்கம் முன் வரவே இல்லை.ஆனால், ‘ஆதார்ஏற்கனவே மக்க ளின் வாழ்க்கையில் எதார்த்தமான ஒன் றாக, ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் தன் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்க மாக மாறிவிட்டது. அரசாங்கத்தின் இத்த கைய திருட்டுத் தனமான அணுகுமுறை யை அது, மத்திய, மாநில அரசு ஊழியர் களுக்காகக் கொண்டுவந்துள்ள பங் களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme)அறிமுகப்படுத்தி யதிலும் பார்க்க முடியும். நம் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் தன்னுடைய ஊழியர்களிடமிருந்து ஓய்வூதிய நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித் துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அது தொடர்பான சட்டமுன்வடிவு இன்னமும் நாடாளுமன்றத்தில் நிலுவையிலேயே இருந்து கொண்டிருப்பதை நாம் காண் கிறோம். இத்தனை ஆண்டு காலமாக இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய் களை அரசு ஊழியர்களிடமிருந்து வசூ லித்துக் கொண்டிருப்பதற்கான சட்டப் பூர்வமான நிலை என்ன? நாட்டு மக்க ளைக் கடுமையாகப் பாதிக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளை அரசாங்கமானது நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இவை ஒருசில எடுத்துக் காட்டுகளேயாகும்.நாட்டின் அரசியலமைப்புச் சட்ட மானது, ஜனநாயக அமைப்பின் பல்வேறு அங்கங்களுக்கும் இருக்கின்ற அதிகாரங் கள் குறித்து மிகவும் தெளிவாக வரை யறை செய்து தந்திருக்கிறது. நாடாளுமன் றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது அது நாட்டின் சட்டமாக மாறுகிறது. நாட்டி லுள்ள அனைத்துப் பிரஜைகளும் அதற் குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர் களாகிறார்கள். ஆனால், இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டளை யையே ஆட்சியாளர்கள் மீறும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது2012-13ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில், அப் போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்தகால வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக, கடந்தகால வரிவிதிப்பு முறையை (retrospective taxation) அறி முகப்படுத்தினார்.

இச்சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தின் இரு அவை களும் ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால், ப.சிதம்பரம் நிதியமைச்சரானபிறகு, காட்சிகள் மிக வேகமாக மாறின. இந்தப் புதிய வரிவிதிப்பு சீர்திருத்தத்தை ஆராய் வதற்காக ஒருநபர் குழுவை அமைத்தார். வரிகள் தொடர்பான வல்லுநர், பார்த்த சாரதி சோம், அறிக்கையைப் பெற்ற ஒரு வார காலத்திற்குள்ளாகவே நாடாளுமன் றத்தின் இரு அவைகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட கடந்தகால வரி விதிப்புமுறை சட்டத்தை மூன்றாண்டு காலத்திற்கு அரசாங்கம் கிடப்பில்போடத் தீர்மானித்தது. நாட்டின் மிக ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ஒரு வல்லுநர் ரத்து செய்ய முடியுமா? நாடாளுமன்றத்தின் குழுக்கள், ஒரு சிறிய அளவிலான நாடாளுமன்றம் என்றே கருதப்படுகின்றன. இக்குழுக்களில் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிக ளின் உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது வழக்கம். நன்கு வளர்ந்த ஜனநாயக நாடு களில், நாடாளுமன்றக் குழுக்களின் முடிவுகளை நாடாளுமன்றம்தான் ரத்து செய்திட முடியும். ஆனால், இந்தியாவில் தான், நாடாளுமன்றக் குழு அளித்திட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள் வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ உரிமை பெற்றிருக்கிறது.
ஒரு சட்டமுன் வடிவில் புதிதாக ஏதேனும் ஒரு பிரிவை அரசாங்கம் இணைக்கும்பட்சத்தில், மீண்டும் அச்சட்டமுன்வடிவு, பரிசீல னைக்காக நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள்வரை இவ்வாறு பின்பற் றப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட நடைமுறைக்கு முரணாக, இந்தியக் குடி யரசின் வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை களை ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்கிறது. நாம் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், நிதித்துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு நேரடி வரிவிதிப்புச் சட்டம் (Direct Tax Code) குறித்து தன் அறிக்கை யை சமர்ப்பித்தபோது, நிதி அமைச்சக மும் உடனடியாக அந்த அறிக்கை மீது ஒரு குழுவை அமைத்ததைப் பார்த்தோம். இதுதொடர்பாக மோதல் வெடித்த போது, அமைச்சகத்தின் சார்பில் சில சமாதா னங்கள் சொல்லப்பட்ட போதும், இவ்வாறு குழு அமைக்கப்பட்டதை நியாயமான அல்லது நேர்மையான ஒன்று எனக் கருத முடியுமா? இது நாடாளுமன்றத்தின் அதி காரத்தைப் பறிக்கும், மக்களின் குரலை நெறிக்கும் செயலாகாதா?இவை அனைத்தும் நாடாளுமன்றத் தின் சட்டமியற்றும் அதிகாரங்களைக் கீழ றுத்திடுவதற்கான ஒரு திட்டத்தின் அடை யாளங்களேயன்றி வேறல்ல. அரசின் இத்த கைய இழிவான நடவடிக்கைகள் இதர பல கொள்கைப் பிரச்சனைகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. 1990களுக்கு முன்பெல்லாம், நாட்டிலுள்ள சாமானியன், தொலைக்காட்சி முன் அல்லது வானொலி முன் அமர்ந்து, பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக ஆவ லோடு காத்திருப்பார்கள். வரி விதிப்பு முறைகளில் ஏதேனும் மாற்றம் வருமா? பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? ரயில் கட்டணம் உயருமா? இதுபோன்று எண் ணற்றவை குறித்து எதிர்பார்ப்புடன் அமர்ந் திருப்பார்கள்.

ஆனால், இப்போதெல்லாம், எவரொருவரும் பட்ஜெட் குறித்து அலட் டிக்கொள்வதில்லை. சமீபகாலங்களில், நாடாளுமன்றம் மட்டுமல்ல, அரசாங்கம் கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்திடுவதில் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. அரசாங் கம் அதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. சென்ற ரயில்வே பட்ஜெட்டின்படி இனி ரயில் கட்டணங்கள் ஓர் ஒழுங்குமுறை அதிகாரக்குழுமத்தின் (regulatory authority) மூலமாக தீர்மானிக்கப்பட இருக் கின்றன. அரசாங்கம் தற்போது பொருள்கள் மற் றும் சேவைகள் வரி (Goods and Services Tax) அமல்படுத்துவதற்காக ஓர் அரசிய லமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக் கிறது. வரைவு சட்டமுன்வடிவின்படி, வரி விகிதங்களைத் தீர்மானித்திட, நாடாளு மன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடை யாது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு களுக்கான வரி விதிகத்தைத் தீர்மானிப் பதற்கான அதிகாரங்களை பொருள் மற் றும் சேவை வரிக் கவுன்சில் (GST Council) மட்டுமே பெற்றிருக்கும். இவ்வாறு வரிவிதிக்கும் நடைமுறைகளில் இனி நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றங் களுக்கோ எவ்வித வேலையும் கிடை யாது. இதன் மூலமாக பட்ஜெட் என்பது வெறுமனே காலத்தைச் செலவழிக்கும் ஒன்றாகவே மாறுகிறது. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்புச் சட் டம் வழங்கிய பொறுப்புகள் அவர்களிட மிருந்து, பறிக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் அரசின் இத் தகைய முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புகள் வந்தபின்னர், அரசாங்கம் இச்சட்டமுன் வடிவில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய் திருக்கிறது. அதாவது பொருள் மற்றும் சேவை வரிக் கவுன்சில் அதிகாரங்கள் சிபாரிசுசெய்யக்கூடியவை மட்டுமே என்று அரசு கூறியிருக்கிறது. ஆனால், உண்மையில், இதன் சிபாரிசுகள் எதிர் காலத்தில் நிதியமைச்சர்களின் கை களைக் கட்டிப்போடும் என்பதிலோ, அதன்மூலம் நாடாளுமன்றத்தின் அதி காரங்களை நீர்த்துப்போகச் செய்திடும் என்பதிலோ ஐயமில்லை. நாடாளுமன்ற அமைப்புமுறைக்கு ஏற் பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரிய அச் சுறுத்தல், இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பாக விளங்கும் இதன் பிரதிநிதி களின் வர்க்கப் பின்னணி மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும். நாடாளு மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 15ஆவது மக்களவையில் 306 நாடாளு மன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களா வார்கள். இது, 14ஆவது மக்களவையை விட நூறு விழுக்காட்டுக்கும் அதிகமான தாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப் பினரின் சராசரி சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாய்களாகும். நாட்டின் மக்கள்தொகை யில் 77 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர் கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் கீழே தான் செலவழிக்கிறார்கள் என்று கூறப் படுகிற ஒரு சமூகத்திற்கு இவர்கள்தான் பிரதிநிதிகள் என்று கூறப்படுவது கேலிக் கூத்தாக இல்லையா? மற்றொரு புள்ளி விவரம் என்ன கூறுகிறதெனில், சென்ற மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ள வர்கள் 32 விழுக்காட்டினர் என்பதாகும். 50 லட்சம் ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க் கும் இடையே சொத்து உள்ள வேட்பாளர் களின் வெற்றி வாய்ப்பு 18.5 விழுக்காடு, பத்து லட்சத்திற்கும் கீழே சொத்துள்ளவர் களின் வெற்றி வாய்ப்பு வெறும் 2.6 விழுக் காடு மட்டுமே.

இதன் மூலம், தாராளமயப் பொருளாதாரத்தின் தேர்தல் அமைப்பு முறையில் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக பணபலம் இருக்கிறது என்பது தெளிவு.ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இந்திய ஜனநாயக அமைப்புமுறை ஒரு முற் போக்கு குணாம்சத்தோடு இருந்தது. ஆனால், ஆளும் வர்க்கத்தினரால் அது தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டது. நாடாளுமன் றத்தின் பிரதிநிதித்துவ குணாம்சத்தைப் பாதுகாத்திட வேண்டும். நாடாளுமன்றம் மூலமாகத்தான் மக்களின் அபிலாசை களையும் தேவைகளையும் பூர்த்தி செய் திட முடியும். இதன்மூலம்தான் நாட்டின் சட்டங்களையும், மக்களுக்கான நீதியை யும் வழங்கிட முடியும். நாடாளுமன்றத் திற்கான அதிகாரங்களையும், பொறுப்பு களையும் மறுப்பதோ அல்லது அவற்றைப் பறிப்பதோ மக்களின் நியாயமான அபிலா சைகள் அரிக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும்.

(கட்டுரையாளர் : நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்)
நன்றி:தி இந்து நாளிதழ் ஆகஸ்ட்7
தமிழில்: ச.வீரமணி


Sunday, August 4, 2013

தெலுங்கானா தனி மாநிலம்



பல ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்ட மழுப்பல் பேச்சுகளுக்குப் பின், தற் போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தி லிருந்து தெலுங்கானா மாநிலம் தனியே அமைக்கப்படும் என்கிற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒருமனதாக நிறைவேற்றியிருப்பதனை அடுத்து வர விருக்கும் மாதங்களில் விரைவில் அமைக்கப்படவிருக்கிறது. ஆயினும், இம் முடிவினை எதார்த்தமாக்கிட மேலும் பல நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.மத்திய அமைச்சரவை தனித் தெலுங் கானா மாநிலம் அமைத்திட ஒப்புதலை அளித்தபின்னர், மத்திய அரசு புதிய மாநிலம் உருவாக்கப்படுவதற்கான தீர் மானங்களைத் தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை ஆகிய இரு அவைகளிலும் தனித்தனியே கொண்டுவந்து நிறைவேற்றிட நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும். இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குடியரசுத் தலைவர் பெற்றபின்னர் அவற்றை மத்திய அமைச்சரவைக்கு மீண்டும் அனுப்பிவைப்பார். மத்திய அமைச்சரவையானது தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து இரு கூறுகளாகப் பிரிப்பதற்கான நடைமுறை யைப் ஆழமாகப் பரிசீலிப்பதற்காக மீண்டும் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திடும்.

அமைச்சரவைக்குழு அளித்திடும் திட்டங்களைக் குடியரசுத் தலைவர் பெற்றபின்னர் அவற்றை மீண் டும் அவர் ஆந்திர மாநில சட்டமன்ற பேர வைக்கு அனுப்பி வைத்து ஒருகுறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதன் கருத் தைக் கேட்டறிவார். பின்னர் மத்திய அமைச்சரவையால் ஒரு வரைவு சட்ட முன்வடிவு தயார் செய்யப்பட்டு நிறை வேற்றப் படுவதற்காக நாடாளுமன்ற மக்க ளவைக்கும், மாநிலங்களவைக்கும் தனித் தனியே அனுப்பி வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் இது நிறைவேற்றப் பட்டபின்பு, குடியரசுத் தலைவர் புதிய மாநிலம் எந்தத் தேதியிலிருந்து உதய மாகிறது என்பதை நிர்ணயிப்பார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்திய அரசின் அரசி தழ்களில் குடியரசுத் தலைவரின் தேதி நிர்ணயிக்கப்பட்ட ஆணை பிரசுரிக்கப் பட்ட பின்னர், அத் தேதியிலிருந்து புதிய தெலுங்கானா மாநிலம் உதயமாகிடும். தெலுங்கானா தனி மாநிலம் அமைக் கும் பிரச்சனை மீது காங்கிரஸ் அரசின் மழுப்பல் என்பது ஒன்றும் புதிதல்ல. நாற்பதாண்டுகளுக்கு முன்பு (1968இ லிருந்தே) மிகப் பெரிய அளவில் வன் முறை கிளர்ச்சிகள் வெடித்து, அப்போது நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக் கிச் சூட்டில் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களையும் உடைமைகளை யும் இழந்தபின்னர், தெலுங்கானா பிராந் தியத்தின் வளர்ச்சியை உத்தரவாதப் படுத்துவதற்காகவும் அதன் பிற்பட்ட பொருளாதார நிலையை ஒழிப்பதற் காகவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. 1973ல் மத்தியில் ஆட்சிசெய்த அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தில் 32ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அது 1974இல் அமலுக்கு வந்தது.

அரசி யலமைப்புச் சட்டத்தில் 371ஆவது பிரிவில் 371-னு, ‘‘ஆந்திரப் பிரதேச மாநிலம் தொடர்பாக சிறப்பு ஷரத்துக்கள்’’ என்னும் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட் டது. அதன்படி குடியரசுத் தலைவர், ‘‘ஓர் ஆணையின்படி மாநிலத்தின் பல்வேறு பிரிவுகளிலும் உள்ள மக்கள், அரசு மற்றும் பொது வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நேர்மை யான முறையிலும் நியாயமான முறை யிலும் பெறக்கூடிய விதத்தில் வாய்ப்பு களையும் வசதிகளையும் அளித்திடு வார்.’’ கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில், தெலுங்கானா மக்களுடைய பிற்பட்ட நிலைமைகளை ஒழித்துக்கட்டுவதற்காக ஆட்சியாளர்களால் கூறப்பட்ட அனைத்து உறுதிமொழிகளும் நம்பிக்கை களும் அநேகமாக எதுவுமே நிறைவேற் றப்படாமல் அம்மக்கள் வஞ்சிக்கப்பட் டனர் என்பதே கசப்பான உண்மை யாகும். கடந்த நாற்பதாண்டுகளிலும் தெலுங்கானா மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளையும் நம்பிக்கைகளையும் நிறைவேற்றாததற்கு பிரதானமாகப் பொறுப்பேற்க வேண்டியது காங்கிரஸ் கட்சிதான். ஏனெனில் நாற்பதாண்டுகளில் நீண்ட காலம் இம்மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி ஆட்சிப் பொறுப்பி லிருந்தது இக்கட்சிதான்.ஆயினும் தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான நட வடிக்கை என்பது தற்போது இருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் 371-னு பிரிவை நீக்குவதாகும். தெலுங்கானா மாநிலம் சட்டப்பூர்வமாக அமைவதற்கு முன்னர் இதற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அது நிறைவேற்றப்பட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட்ட சமயத்தில் தெலுங்கு பேசும் மக்கள்தான் முதல் முழக்கமிட்டார்கள் என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டியது அவசிய மாகும்.

தியாகி பொட்டி ஸ்ரீராமுலு விசாலாந்திராவுக்கான இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் எதிரொலியை ஐக்கிய கேரளம் மற்றும் சம்யுக்த மகாராஷ்ட்ரம் ஆகிய இயக்கங்களிலும் காண முடிந்தது. இவற்றிற்காக நடை பெற்ற பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்களின் வலிமைதான், சுதந்திர இந்தியாவுடன் மன்னர் சமஸ்தானங்கள் இணைந்த பின்னர், நாட்டில் மறுசீர மைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு இட்டுச்சென்றன. மொழி வாரி மாநிலங்கள் என்னும் ஜனநாயகக் கொள்கை அடிப்படையில் இந்திய மாநி லங்களின் ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்காக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியுடன் நின்று போராடி வருகிறது. மத்தியிலும் பல்வேறு மாநிலங் களிலும் காங்கிரஸ் கட்சித் தலைமையில் உள்ள அரசாங்கங்கள் நிலைமைகளை முரட்டுத்தனமாய்க் கையாளுவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனி மாநில கோரிக்கைகள் தற்போது எழுந்தவண்ணம் உள்ளன. தெலுங்கானா குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிவிப்பு வந்தவுடனேயே தனி கூர்க்கா லாந்து மாநிலம் வேண்டுமென்று கோரி மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் மூன்று நாள் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. போடோலாந்து தனி மாநிலத்திற்கும் இதுபோன்று அழைப்பு விடுக்கப் பட்டிருக்கிறது. பல்வேறு அடையாளங் களின் அடிப்படையில் புதிய மாநிலங்கள் உருவாவதற்கான இத்தகைய அழைப்புகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத் தின் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் கட்ட மைப்புக்கு ஆபத்தான விளைவுகளை உருவாக்கிடும் என்பது மட்டுமல்ல மக்கள் மத்தியில் நாட்டில் பிரிவினை உணர்வுகளைக் கட்டவிழ்த்து விடுவதற் கும் இட்டுச் செல்லும்.

எனவே தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், மக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் மக்கள் ஆத்திர மூட்டலுக்கு இரையாவதற்கான தூண்டு தலிலிருந்து தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். அதே சமயத்தில் நாட்டில் அமைதியையும், இயல்பு வாழ்க்கை யையும் உத்தரவாதப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள மத்திய, மாநில அரசாங்கங் களின் கடமையுமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)