இந்த ஆண்டு, ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தின் 70ஆம் ஆண்டு துவங்குவதைக்
குறிக்கிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த எழுபதாண்டு காலமாக இந்திய மக்கள் பொருளாதார
சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுபட்டு,
ஒரு கண்ணியமிக்க வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக போராட்டங்களில் இடைவிடாது ஈடுபட்டு
வருகிறார்கள். அவர்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. 1991இல் தொடங்கிய நவீன தாராளமயக்
கொள்கை 25ஆவது ஆண்டு சமீபத்தில் நிறைவு பெற்றது.
பெரும்
வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் ஆளும் வர்க்கங்களுக்கு இது மற்றொரு
வகையிலான `சுதந்திரமாகும்.` தாராளமயத்தின் நடைமுறைகளும், நவீன தாராளமய சீர்திருத்தங்களின்
கீழ் தொடங்கப்பட்ட `சுதந்திரமான’ சகாப்தமும், நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கும்,
மக்களுக்கு அளித்துவந்த அடிப்படை சேவைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும், மக்களின்
வயிற்றில் அடித்து கொள்ளை லாபம் ஈட்டுவதற்குமான `சுதந்திரமாகவும்தா’ன் மாறின.கடந்த
25 ஆண்டு கால வலதுசாரி நவீன தாராளமய சீர்திருத்தங்கள் மக்கள் மத்தியில் சமூகப் பொருளாதார
ஏற்றத்தாழ்வை மேலும் கூர்மையானமுறையில் அதிகப்படுத்தி இருக்கிறது. இது சுதந்திரம் பெற்ற
சமயத்தில் மக்கள் மத்தியிலிருந்த அபிலாசைகளை பொடிப்பொடியாக்கிவிட்டது. நவீன தாராளமய
சித்தாந்தம் நம் சமூக வலைப்பின்னலையே அரித்து, சாதிய, வகுப்புவாத அடையாளங்களை மேலும்
அதிகப்படுத்தி விட்டது.
இது,
இந்துத்துவா சக்திகள் தலைதூக்குவதற்கும் வழிகோலியிருக்கிறது.விலைவாசி உயர்வின் காரணமாகவும்,
வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகவும் அதிகரித்துள்ள சுமைகளும், தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும்
நவீன தாராளமயக் கொள்கைகளை வெறித்தனமாகப் பின்பற்றியதன் விளைவுகளேயாகும். மதச் சிறுபான்மையினர்,
தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல்களும், சமூகத்தில் பாகுபாடுகளும் அதிகரித்துக்கொண்டிருப்பதும்
இந்துத்துவா சக்திகளின் தாக்குதல்களின் வெளிப்பாடுகளேயாகும்.
இந்தியாவின்
சுதந்திரம் என்பது இருபதாம் நூற்றாண்டில் உச்சத்தில் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு
தேசப்பற்றின் விளைபொருளாகும். ஆனால், இந்துத்துவாவாதிகள் கூறும் தேசப்பற்று என்பது
ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டதல்ல. உண்மையில் அது ஏகாதிபத்திய ஆதரவுத் தன்மை
கொண்டதாகும். ஆர்எஸ்எஸ் மற்றும் இதர மதவெறி இயக்கங்கள் தேசிய இயக்கத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளாமல்
வெளியேயே இருந்தன. அத்தகைய அவர்களின் மரபு இன்றைக்கும் பாஜக தலைமையிலான அரசாங்கத்திடம்
தொடர்வதைக் காண முடிகிறது.மோடி அரசாங்கம், அமெரிக்காவுடன் கடல் வழி மற்றும் வான்வழி
போர் நடவடிக்கைகளில் பரிவர்த்தனை செய்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இது,
அமெரிக்க ராணுவம் இந்திய இராணுவ வசதிகளையும், தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்.
நாம், சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே சமயத்தில், நாட்டு மக்களில் முக்கியமான பிரிவினர்
கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கின்றனர், அல்லது, தங்கள் உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள்திரள் கலகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தலித்துகள், பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில்
தங்கள் மீது ஏவப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கு எதிராக, கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
ஒரு
மாதத்திற்கு முன்பு, ஒடிசாவின், கந்தமால் மாவட்டத்தில், தங்கள் நிலங்களையும், வனங்களையும்
பறித்துக்கொண்டதற்கு எதிராகப் போராடி வரும் பழங்குடியினத்தவரை மாவோயிஸ்ட்டுகள் என்று
முத்திரை குத்தி, அவர்களில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட ஐந்து
பேரைச் சுட்டுக் கொன்று, பழங்குடியினருக்கு எதிராக யுத்தத்தை அரசு பிரகடனம் செய்திருக்கிறது.
இப்படியாக இந்திய நாட்டின் சுதந்திரம் நவீன தாராளமயம் மற்றும் மதவெறி சக்திகளால் மிகவும்
கொடூரமான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வலதுசாரி சக்திகளின்
தாக்குதல்களை முறியடித்திட இச் சுதந்திர நாளில் உறுதி ஏற்போம். அதன்மூலம், ஒரு சுதந்திரமான,
ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் சுரண்டலற்ற சமூகத்தினைக் கட்டி எழுப்பிடுவதற்கு, விடுதலைப்
போராட்டத்தின் நிஜமான லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு, வழிவகை காண்போம்.
தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment