{இந்தியாவில்
முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய ஆளும் வர்க்கங்கள் கொள்ளை லாபம்
ஈட்டுவதற்காக, ஒரேவிதமான ஐக்கியப்படுத்தப்பட்ட சந்தையையும், மிகவும் எளிதாக்கப்பட்ட
வரி விதிப்பு முறையையும் தொடர்ந்து கோரி வருகின்றன. 1991இல் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப்
பின்பற்றத்தொடங்கிய பின்னர், இந்தக் கோரிக்கைகளுக்கான இரைச்சல் மேலும் அதிகரித்தது.
இத்தகு முயற்சிகள் முதலில் கை வைத்தது, மாநில அரசுகள் வசூலித்திடும் விற்பனை வரிகள்
மீதான உரிமைகள் மீதுதான்.}
நாடாளுமன்ற மாநிலங்களவை ஆகஸ்ட் 3
அன்று சரக்கு - சேவைகள் வரி சட்டமுன்வடிவை நிறைவேற்றிவிட்டது என்பது போல கார்ப்பரேட்
ஊடகங்கள் செய்திகளைப் பரப்பி கணிசமான அளவிற்குக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்தப் பின்னணியில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின்படி,
சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான மத்திய வரி ஒன்று மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட
முடியாது.
மத்தியத்துவப்படுத்தப்பட்ட
சரக்கு மற்றும் சேவைகள் வரிக்கு புதிதாக சட்டம் இயற்றக்கூடிய விதத்தில் அரசமைப்புச்
சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும். 3ஆம் தேதியன்று மாநிலங்களவை செய்தது என்னவெனில்,
அத்தகையதொரு அரசமைப்புச் சட்டத்திருத்தத்தைத்தான் நிறைவேற்றி இருக்கிறது.
இதன்மூலம்
மத்திய அரசு சரக்கு - சேவைகள் வரி சட்டமுன்வடிவைக் கொணர வழி வகுக்கப்பட்டிருக்கிறது.
அரசமைப்புச்சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சி ஏற்கனவே மக்களவையில் மேற்கொள்ளப்பட்டு,
அங்கே நிறைவேற்றப்பட்டு, அதன்மேல் ஒப்புதல் அளிப்பதற்காக மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
மக்களவையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் போதுமானது அல்ல என்றும், அரசமைப்புச்
சட்டத்தால் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப்
பாதுகாக்கக்கூடிய விதத்தில் அது மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் மாநிலங்களவை உணர்ந்தது.
எனவே, மாநிலங்களவை, அதன்மீது ஆய்வு செய்வதற்காக ஒரு தெரிவுக் குழுவை அமைத்தது, அக்குழு
பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தது.
தெரிவுக்குழுவில்
அங்கம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மேலும் பல திருத்தங்களை
தெரிவுக்குழுவுக்கு `மறுப்புக் குறிப்பு’ என்ற பெயரில் பரிந்துரைத்திருந்தனர். தெரிவுக்குழு
அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அரசாங்கம் பல திருத்தங்களை ஏற்றுக்கொண்டு, மக்களவையில்
நிறைவேற்றியிருந்த சட்டமுன்வடிவின்மீது அதிகாரப்பூர்வமாகவே திருத்தங்களை மாநிலங்களவையில்
முன்மொழிந்தது.
சரக்கு- சேவை வரி
இந்தியாவில்
முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய ஆளும் வர்க்கங்கள் கொள்ளை லாபம்
ஈட்டுவதற்காக, ஒரேவிதமான ஐக்கியப்படுத்தப்பட்ட சந்தையையும், மிகவும் எளிதாக்கப்பட்ட
வரி விதிப்பு முறையையும் தொடர்ந்து கோரி வருகின்றன. 1991இல் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப்
பின்பற்றத்தொடங்கிய பின்னர், இந்தக் கோரிக்கைகளுக்கான இரைச்சல் மேலும் அதிகரித்தது.
இத்தகு முயற்சிகள் முதலில் கை வைத்தது, மாநில அரசுகள் வசூலித்திடும் விற்பனை வரிகள்
மீதான உரிமைகள் மீதுதான். மதிப்புக்கூட்டு வரி (வாட்) என்று ஒரு வரியை விற்பனை வரியுடன்
திணித்தது. அதன்பின்னர், இந்திய ஆளும் வர்க்கங்கள் மதிப்புக்கூட்டு வரியை மத்தியத்துவப்படுத்தப்பட்ட
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்று தீவிரமாக இறங்கின.
இவைதான் சரக்கு மற்றும் சேவைகள் வரிக்கான (ஜிஎஸ்டி) மூலாதாரங்களாக உருவாகின.
கடந்த இருபது
ஆண்டு காலமாக இதற்காக மாநில அரசுகளுடன் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாக,
இப்பிரச்சனை மீது விவாதித்து, துல்லியமான முடிவுகளை மேற்கொள்வதற்காக, மேம்படுத்தப்பட்ட
மாநில நிதி அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவிற்கு ஆரம்பத்தில் மேற்கு வங்க
இடது முன்னணி அரசாங்கத்தின் நிதி அமைச்சர் தலைவராக இருந்தார். பின்னர், மேற்கு வங்க
மாநில சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி தோல்வியடைந்தபின், கேரள நிதி அமைச்சர் அந்தப்
பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். தற்போது, மேற்கு வங்க நிதி அமைச்சர் அந்தப் பொறுப்பில்
இருக்கிறார். இந்த மேம்படுத்தப்பட்ட குழுவாலும் சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு
ஆய்வு செய்யப்படும். பின்னர் இது நாடாளுமன்றத்தின் முன் சட்டமாக்குவதற்காகக் கொண்டுவரப்படும்.
எனினும் இது, அரசமைப்புச்சட்டத்தைத் திருத்தியபிறகே, சாத்தியமாகும் எனவேதான் அரசமைப்புச்
சட்டத் திருத்தம் இப்போது நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.ஆகஸ்ட் 3 அன்று
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு என்னவென்றால், மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்த
அரசமைப்பு திருத்தச் சட்டமுன்வடிவு மாநிலங்களவையால் கொடுக்கப்பட்ட திருத்தங்களுடன்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது இனி மீண்டும் மக்களவைக்கு ஏற்பளிப்புக்காக செல்லும்.
அதுவும்கூட,
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவருக்குச் சென்று அதன்பின்னர்
அவர் வழிகாட்டுதலுக்கிணங்க, மீளவும் பரிசீலனைக்காகவும், ஏற்பளிப்புக்காகவும் மக்களவைக்குச்
செல்லும்.மக்களவை அதை ஏற்றுக்கொண்டபின்பு, திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு மீண்டும் குடியரசுத்தலைவருக்குச்
சென்று, அவர் நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் பரிசீலனைக்காக அனுப்பி
வைப்பார். அவ்வாறு அனுப்பப்பட்ட அரசமைப்பு திருத்தச் சட்டமுன்வடிவை 50 சதவீதம் அல்லது
அதற்கும் மேலான மாநில சட்டமன்றங்கள் தங்கள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விட்டு,
மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, பின்னர் மீண்டும் குடியரசுத்தலைவருக்கு
அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் அவர் அரசமைப்புச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தினை
அறிவித்திடுவார்.
இந்த நடைமுறை
முடியும் வரைக்கும், மத்திய அரசு சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தின்
பரிசீலனைக்காக கொண்டுவர முடியாது. இந்தச் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் முன் வரும்போது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சனைகள் விவாதத்திற்கு
உட்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்படும். இந்தக் கட்டத்தில்தான் பாஜக
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் பின்பற்றப்படும் நவீன தாராளமய பொருளாதாரக்
கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முரணற்ற மற்றும் உறுதியான போராட்டம்
தீவிரமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவலைகள்
அரசமைப்புத்
திருத்தச் சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தன் ஆழ்ந்த கவலைகளை நாடாளுமன்றத்தில் தெரிவித்து, சில முக்கியமான பிரச்சனைகள் மீது
தன் எதிர்ப்பைத் தெரிவித்து, எச்சரித்துள்ளது.முதலாவது கவலை, மாநில அரசாங்கங்களைத்
தேர்ந்தெடுத்த மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக வருவாயை அதிகரித்திட மாநில அரசுகளுக்கு
உள்ள உரிமைகள் குறித்ததாகும். இது எப்படி செய்யப்பட இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகளையும், நம் அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள
கூட்டாட்சிக் கட்டமைப்பையும் உயர்த்திப்பிடித்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உறுதி பூண்டிருக்கிறது.
இரண்டாவதாக,
சரக்கு மற்றும் சேவை வரி சட்டமுன்வடிவுக்கு முன்னதாக மூன்று முக்கிய சட்டமுன்வடிவுகளை
மத்திய அரசு கொண்டுவர வேண்டியது அவசியம். அவையாவன: (1) மத்திய சரக்கு - சேவை வரி
(2) மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு சேவை வரி (3) மாநில சரக்கு சேவை வரி. இவைகளும்
சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட வேண்டும். மூன்றாவதாக, இந்த நடைமுறைகளின்போது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிகள் என்பவை, சரக்கு- சேவை வரி மக்கள் மீது
மேலும் சுமைகளை ஏற்றாத வண்ணம் பார்த்துக்கொள்வதாகும்.
மறைமுக வரி என்பதே சுமைதான்
சரக்கு சேவை
வரி என்பது ஒரு மறைமுக வரிதான். மறைமுக வரி அனைத்தும், மக்கள் ஒரு பொருளை வாங்கும்போது
அல்லது நுகரும்போது, அதற்கு வரி விதித்து அதன்மூலம் அவர்களுக்கு மேலும் சுமையை அளிப்பதுதான்.
நேரடி வரிகள் என்பது பணக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் அதே சமயத்தில், மறைமுக
வரிகள் மக்கள் மீது புதிய சுமைகளை திணிப்பதன்மூலம் அரசாங்கம் தன் வருவாய்களைப் பெருக்கிக்
கொள்வதாகும். இந்தியாவில் ஏற்கனவே நேரடி வரி படிப்படியாகக் குறைக்கப்பட்டுக் கொண்டும்,
மறைமுக வரிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுக் கொண்டும் வருகிறது.
தற்போது,
சுமார் மூன்றில் இரு பங்கு வருமானம் மத்திய அரசுக்கு மறைமுக வரிகள் மூலம் வருகிறது.மறைமுக
வரிகள் அதிகரிப்பது மற்றும் நேரடி வரிகள் குறைக்கப்படுகிறது என்பதன் பொருள் ஏழை மக்களின்
வயிற்றில் அடித்து, பணக்காரர்களைக் கொழுக்கச் செய்வது என்பதேயாகும். முறையான சரிபார்ப்பு
மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லையெனில், இந்தச் சட்டமுன்வடிவுகள் நாடாளுமன்றத்தில்
பரிசீலனைக்குக் கொண்டுவரப்படுமானால், சரக்கு சேவை வரி நாட்டில் ஏற்கனவே மக்களிடையே
இருக்கின்ற ஏற்றத் தாழ்வை மேலும் விரிவாக்கி அதிகப்படுத்திடவே இட்டுச் செல்லும்.ஒளிரும்
ஒருசில இந்தியருக்கும், வறுமையில் வாடி வதங்கிக்கொண்டிருக்கும் 90 சதவீதத்திற்கும்
மேலான மக்கள் கூட்டத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகும்.இந்த அடிப்படைப்
பிரச்சனைகளை, இதர பிரச்சனைகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்து கவனித்துக்
கொண்டிருக்கிறது. சரக்கு- சேவை வரி நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு வரும்போது உரிய முறையில்
நடவடிக்கை எடுத்திடும். அதே சமயத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்லும்
நோக்கத்துடன் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது புதிய சட்டங்கள் மூலமாக ஏவப்படும் தாக்குதல்களை
முறியடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் மக்கள்
போராட்டங்களை வலுப்படுத்திடும்.
பாஜகவின் வர்த்தகத் திட்டம்
இறுதியாக,
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், அதனை ஓரங்கட்டிவிட்டு,
மக்களவை சபாநாயகரின் உதவியுடன் சரக்கு சேவை வரி சட்டமுன்வடிவை “நிதி சட்டமுன்வடிவாக’’
கொண்டுவர, பாஜக திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. பாஜக அரசாங்கம் மக்களவையில் தனக்கு
இருக்கும் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையைத் திணிப்பதற்காக,
மாநிலங்களவையை ஓரங்கட்ட தந்திரமான வகைகளில் இறங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உறுதியுடன் எதிர்த்திடும். எனவே, பாஜக மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றும் விதத்தில்
மேற்கொள்ளும் நவீன தாராளமய சீர்திருத்தங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும்
வெளியேயும் எதிர்வரும் காலங்களில் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு மக்கள் தயாராக
இருக்க வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment