காஷ்மீர் கடந்த ஆறு வாரங்களாக மிகவும் குழப்பமான நிலையில் இருந்து வருகிறது. ஹிஸ்புல்
இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி மரணத்திலிருந்து, மக்கள் பெரும் திரளாக வீதிகளில்
இறங்கி கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின்
துப்பாக்கிக் குண்டுகளுக்கு 58 பேர் இறந்திருக்கிறார்கள், நூற்றுக்கணக்கானோர் காயம்
அடைந்திருக்கிறார்கள். கடைசியாகக் கொல்லப்பட்டவர், ஆகஸ்ட் 15 அன்று ஸ்ரீநகரில்
16 வயதுள்ள முகமது யாசிர் ஷேக் என்பவராவார். இவர் போலீசாரால் பட்டமாலு பகுதியில் கொல்லப்பட்டார்.
பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வரும் பெல்லட் குண்டுகள் பலரைக் கண்பார்வையற்றவர்களாக்கி
இருக்கிறது, பலரை ஊனப்படுத்தி இருக்கிறது. ஆயினும், நிலைமைகளைத் தணிப்பதற்கு, மத்திய
அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, காஷ்மீர் நோக்கி மேலும் மேலும்
துருப்புக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
மனிதாபிமானமற்றது
நாடாளுமன்றத்தின்
இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, அரசாங்கம்
ஆகஸ்ட் 12 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்
கூட்டியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மேற்கொண்ட நிலைப்பாடு மிகவும் பிற்போக்குத்தனமானதாகும்.
அவர் மத்தியப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 9 அன்று பேசியபோதுகூட அடல் பிகாரி வாஜ்பாயி கடைப்பிடித்த
இன்சானியட் (மனிதாபிமானம்). காஷ்மீரியட் (காஷ்மீர் மக்களின் பல்வேறுவிதமான மாண்புகள்),
ஜமூரியட் (ஜனநாயகம்) பின்பற்றப்படும் என்று கூறினார். அதனைக் கூட இக்கூட்டத்தில் அவர்
கூறவில்லை. மாறாக. பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் "காஷ்மீர் பள்ளத்தாக்கில்
இன்றைய சூழ்நிலைமையில், பாதுகாப்புப் படையினர் தங்களை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதற்காகப் பாராட்டு"வதாக
வேறு கூறினார். மனிதாபிமானமற்ற முறையில்
நூற்றுக்கணக்கான இளைஞர்களையும், இளைஞிகளையும் கொன்று, ஊனப்படுத்தி, குருடாக்கிய
சூழ்நிலையைப் பார்த்தபின்னர் மோடி இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர், அங்கே
"தற்போதைய அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணம் பாகிஸ்தான்" என்றும் பிரகடனம்
செய்திருக்கிறார். இதன்மூலம் அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில், மக்கள் மத்தியில் தன்னெழுச்சியாக
எழுந்துள்ள கோபத்தையும் அமைதியின்மையையும் அவர் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் அவர், "வன்முறை, பயங்கரவாதம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள்
இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" என்றும் எச்சரித்திருக்கிறார்.
இந்தக்கூட்டத்தில்
ஜம்மு-காஷ்மீரில் வாழும் அனைத்துப் பகுதி மக்கள் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகள்
நடத்துவதற்கு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்
கட்சித் தலைவர்கள் முன்வைத்த முன்மொழிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இக்கூட்டத்திற்குப்பின்
நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பிரிவினைவாதிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இதற்கு நேரடியாக எதுவும் கூறாது, “நிலைமைகளுக்குத் தக்கபடி அரசாங்கம் தீர்மானித்திடும்” என்று தெரிவித்திருக்கிறார்.
வேறுபடுத்திப் பார்க்கும் எண்ணம் இல்லை
அரசாங்கமும்,
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒரு சண்டைக்காரன் மனோநிலையிலேயே நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா பாகிஸ்தானுடன்,
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்த
விரும்புகிறது என்றும் ஜம்மு - காஷ்மீர் மீதான விவாதங்கள் பற்றி கேள்வியே எழவில்லை
என்றும் தெரிவித்திருக்கிறார்.
பிரதமரும்
தன்னுடைய சுதந்திர தின உரையின்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நிலைமைபற்றியோ அங்கு
மக்கள் படும் துன்ப துயரங்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மாறாக அவர்,
பலுசிஸ்தான், கில்ஜித் பால்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர்
ஆகிய பகுதிகளில் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதாகவும், அங்குள்ள மக்கள்
தனக்கு நன்றி தெரிவித்து செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் பேசினார். பாகிஸ்தான்,
பலுசிஸ்தானத்திலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் மேற்கொண்டுள்ள அட்டூழியங்களுக்குப்
பதில் கூற வேண்டும் என்று கூறி, இதே பல்லவியை அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பாடினார்.
இவ்வாறு
மோடி அரசாங்கமானது காஷ்மீரில் உள்ள அமைதியின்மையை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத்தான்
பார்க்கும் என்று சமிக்ஞையை அளித்திருக்கிறது.
அங்கேயுள்ள பெரும் திரளான மக்களுக்கும், பாகிஸ்தான ஆதரவு தீவிரவாதிகளுக்கும்
இடையே பாகுபடுத்திப்பார்க்கும் தன்மை அதனிடம்
இல்லை. காஷ்மீர் பிரச்சனையும் பிரச்சனைகளில் ஒன்றாக விவாதிக்கப்பட வேண்டும் என்று சில
ஆண்டுகளுக்கு முன் இந்திய - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின்போது ஏற்படுத்தப்பட்ட ஆய்வெல்லையிலிருந்து
அது பின்வாங்கிக்கொண்டது.
வெறித்தனமும் விசித்திரமும்
மோடி அரசாங்கம்
காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் தீர்த்து வைப்பதற்குப் பதிலாகவும்,
அவர்கள் இவ்வாறு தனிமைப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாகவும்,
இதனை இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்சனையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின்
உள்நாட்டுப் பிரச்சனையான பலுசிஸ்தான் பிரச்சனையை எழுப்பி இருப்பதன் மூலம், பிரதமர்
நரேந்திர மோடி பாகிஸ்தானுடன் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று வேண்டும் என்றே சமிக்ஞையை
அனுப்பி இருக்கிறார். காஷ்மீர் மீதான பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்குப் போட்டியாக, பலுசிஸ்தானில்
மனித உரிமைகள் மீறல் பிரச்சனையை, இந்தியப் பிரதமர் ஒருவர் முதன்முறையாக இவ்வாறு கையில்
எடுத்திருக்கிறார். அதிதீவிர தேசியவெறிபிடித்த நபர்கள் இத்தகைய வெறித்தனமான நிலைப்பாட்டை
வரவேற்றிருக்கிறார்கள்.
பலுசிஸ்தான்
மீதான மோடியின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான செய்தித்தொடர்பாளரும் சரியென்று ஏற்றுக் கொண்டிருப்பதும்
மிகவும் விசித்திரமாக இருக்கிறது. காங்கிரஸ்
கட்சியும் காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டகமான சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
1948இல் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தபோது காஷ்மீரத்து மக்களுக்கு இந்தியா அளித்த உறுதிமொழிகளை
நிறைவேற்றி அவர்களை கவுரவித்திட வேண்டும் என்று மிகவும் விவேகமான முறையில் காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார். ஜம்மு
- காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் சமயத்தில் அவர்களுக்கு சுயாட்சி உரிமைகள் அளிக்கப்படும்
என்று உறுதிமொழிகள் கூறப்பட்டிருந்தன. அவ்வாறு அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள்
நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறிய கூற்றை, அவருடைய சொந்தக் கருத்து
என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் கட்சியையே ஒதுக்கி
வைத்துள்ளார்.
பகடைக்காய்கள் அல்ல
காஷ்மீர்
தொடர்பாக மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும்.
இந்தியாவிற்கும் பேரழிவினை உருவாக்கக் கூடியதாகும். மோடி அரசாங்கத்தின் இத்தகைய பெரும்பான்மை
கண்ணோட்டம் மற்றும் நாட்டை தேசப் பாதுகாப்பு நாடாக மாற்றும் நிலைப்பாடுகளைத் தீர்மானகரமான
முறையில் எதிர்த்திட வேண்டும். காஷ்மீர் மக்கள் மீது ஏவப்பட்டுள்ள ஒடுக்குமுறை மற்றும்
பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்
என்று நாட்டிலுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் கோர வேண்டும். இத்துடன் மாநிலத்தில்
இயங்கும் அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிடவும் உடனடியான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் காஷ்மீரத்து மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திடக்
கூடாது. தேசிய வெறி நிலைப்பாட்டை மேற்கொள்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், சென்ற ஆண்டு இரு நாடுகளுக்கும்
இடையே தீர்மானித்தபடி, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை மீளவும் தொடங்கிட வேண்டும்.
(தமிழில்:
ச. வீரமணி)
No comments:
Post a Comment