நன்றி,
நீதியரசர் மார்கண்டே கட்ஜூ அவர்களே
கேரள
முதல்வர் கடிதம்
"கேரளத்தைப் பாராட்டி உங்கள் முகநூல் பக்கத்தில்
பதிவு செய்திருப்பதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி," என்று கேரள முதல்வர் பினராயி
விஜயன், ஓய்வுபெற்ற நீதியரசர் மார்கண்டே கட்ஜூவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள முதல்வரின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள அக்கடிதத்தில்
கூறப்பட்டிருப்பதாவது:
"உங்களுடைய முகநூல் பக்கத்தில் கேரளம் குறித்து
கனிவான வார்த்தைகளில் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. கேரளத்தைச் சேர்ந்தவன்
என்ற முறையிலும், கேரள முதல்வர் என்ற முறையிலும் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
தாங்கள் தங்கள் பதிவில் தெரிவித்துள்ளபடி கேரளம் பல்வேறு
தேசங்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை ஏற்றுக்கொண்டு, அரவணைக்கிற ஒரு ஜனநாயக
மாண்பினை எப்போதும் ஊட்டி வளர்த்து வந்திருக்கிறது.
கேரளத்தில்
தலித்துகள் எந்தக்காலத்திலும் பாகுபாடு காட்டப்பட்டதில்லை என்று தங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
அது வரலாற்று ரீதியாக துல்லியமானது அல்ல என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கேரளத்தில் தீண்டாமைக் கடைப்பிடிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சாதியக் கொடுமைகள்
மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்கள் காரணமாகத்தான்
இன்றைய கேரளம் உருவாகி இருக்கிறது. எனவே, கேரளத்தின் வரலாறு என்பது போராட்டங்களின்
வரலாறுமாகும்.
புன்னப்புர-வயலார், கய்யூர், கரிவெள்ளூர், மொராழா, ஓஞ்சியம்
முதலான பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும்
நடைபெற்ற போராட்டங்களின் நினைவுகளால் சிலிர்க்காத மலையாளிகள் அநேகமாக மிகவும் குறைவாகும்.
ஸ்ரீ நாராயணகுரு, அய்யன் காளி, சகோதரன் அய்யப்பன் மற்றும்
இடது முற்போக்கு சக்திகள் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக உருவாக்கிய சமூக உணர்வுகளை
குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. குருவாயூரில் நடைபெற்ற சத்தியாக்கிரகம், வைக்கத்தில்
நடைபெற்ற சத்தியாக்கிரகம், பாலியம் போராட்டம் ஆகியவை கடவுளைக் கும்பிடுவதற்கான சுதந்திரத்தைப்
பெற்றுத் தந்தவைகளாகும். இவை, கேரளாவின் வரலாற்றில்
விளிம்புநிலை மனிதர்களுக்கான இயக்கங்களில் ஒளிவீசும் அத்தியாயங்களாகும்.
மேலும் இந்தப் போராட்டங்கள் அனைத்தும் கேரள சமூகத்தில்
மக்களுக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அளித்தவைகளாகும். சமூகத்தினை உயர்த்திட கல்வி அவசியம் என்பதை உணர்ந்த
சமூக சீர்திருத்தவாதிகளும், கிறித்துவ மிஷனரிகளும் அதுநாள்வரை கல்வி மறுக்கப்பட்டு
வந்த சமூகத்தினருக்குக் கல்வியை அளிக்க முன்வந்தனர். கண்டாலாவின் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
மேற்கொண்டபோது அவர்கள் முன் வைத்த முழக்கம் என்ன தெரியுமா? "எங்கள் குழந்தைகளைக்
கல்வி கற்க அனுமதிக்காவிட்டால், நாங்கள் எவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்ய மாட்டோம்,"
என்பதாகும். அதேபோன்று சன்னார் பெண்கள் தங்கள் மார்புகளை மூடிக்கொள்வதற்கான உரிமையைப்
பெற்றதும், கேரள முற்போக்கு சக்திகளின் போராட்டங்களின் விளைவேயாகும்.
இவ்வாறு சமூக சீர்திருத்த மற்றும் தேசிய இயக்கங்களாலும்,
விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களாலும் மற்றும் இடது முற்போக்கு சக்திகளின் போராட்டங்களாலும் பதப்படுத்தப்பட்டிருந்த கேரளத்தில், இஎம்எஸ் தலைமையில்
அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம், நிர்வாக சீர்திருத்தங்கள், கல்விக்கான சட்டமுன்வடிவு,
ஜனநாயகத்தை விரிவுபடுத்துதல், சமூகத் துறையில் பொது நிறுவனங்களின் தலையீடு ஆகியவற்றின்
மூலமாக ஒரு புதிய கேரளத்தை உருவாக்குவதற்கான பாதையை வகுத்துத்தந்தது.
இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு
நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயகத்தை விரிவுபடுத்துதல் மூலமாக நிலப்பிரபுத்துவதற்கு
மரண அடி கொடுத்ததன் காரணமாகவே கேரளம் இந்த அளவிற்கு தனித்து விளங்குகிறது என்று தெரிவித்துக்
கொள்ள விரும்புகிறேன்.
நிறைவாக, உண்மையான இந்தியர்கள் யார் என்கிற கேள்வி குறித்து
ஒருசிலவார்த்தைகள். ஒரே விதமான இந்தியன் என்று கூறுவதற்கில்லை. அதிலும்
குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் வட கிழக்கு இந்திய பிரச்சனைகள் முன்னுக்கு வந்திருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் அவ்வாறு கூறிட முடியாது. சுதந்திரம் பெற்ற 70ஆம் ஆண்டை நோக்கி அடி எடுத்து வைக்கக்கூடிய இன்றைய நிலையில் அனைத்து விதமான வித்தியாசமான புரிதல்களையும் அங்கீகரித்திட வேண்டியது நம் கடமையாகும். இந்தியாவில் வாழும் தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைத்துத் தரப்பினரின் உரிமைகளையும் பாதுகாப்பதன் மூலமாகத்தான் அவர்கள் அனைவருமே இது நம் நாடு என்ற உணர்வினை இயல்பாகப் பெறுவார்கள். இதனை கேரளத்தில் நாங்கள் ஏற்கனவே எய்திவிட்டோம். எனினும் இது இந்தியா முழுவதும் எய்தப்படும்போதுதான், நம் அரசமைப்புச் சட்ட மேதைகளால் அளிக்கப்பட்டுள்ள உண்மையான இந்தியாவை கட்டி எழுப்பிட முடியும். இதனை விரைவில் எய்திடுவோம் என்று நான் நம்புகிறேன்.

தங்கள் கனிவான வார்த்தைகளுக்காக நான் மீண்டும் ஒருமுறை
தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் அக்கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment