Tuesday, August 16, 2016

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 14,052 தில்லி அரசின் அறிவிப்புக்கு சிஐடியு நன்றி


குறைந்தபட்ச ஊதியம் ரூ. 14,052 
தில்லி அரசின் அறிவிப்புக்கு சிஐடியு நன்றி
புதுதில்லி, ஆக. 17-
குறைந்தபட்ச ஊதியத்தை 14,052 ரூபாயாக உயர்த்திட தில்லி மாநில அரசு முடிவு செய்திருப்பதற்கு சிஐடியு-வின் தில்லி மாநிலக் குழு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளது. 
இது தொடர்பாக சிஐடியுவின் தில்லி மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி மாநில அரசின் குறைந்தபட்ச ஊதியங்கள் ஆலோசனை வாரியம் அளித்திட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, பல்வேறு வகையினங்களுக்கும் 50 சதவீதம் வரை உயர்வு அளித்து 2016 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு தில்லி மாநில சிஐடியு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு பல்வேறு வகையினங்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தபின்பு. குறைந்தபட்ச ஊதியம், திறமையற்றவர்களுக்கு (unskilled) 14,052 ரூபாயும், பாதி திறமையுள்ளவர்களுக்கு (semi-skilled) 15,471 ரூபாயும், திறமையுள்ள (skilled) தொழிலாளர்களுக்கு 17,033 ரூபாயும் அளிக்கப்படும். 
இவ்வாறு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வர்த்தகக் கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் சாரம் எதுவும் கிடையாது. அவர்கள் கூறும் ஒரே சாக்கு என்னவெனில், வர்த்தகர்களும், தொழில்நிறுவனங்களும் தங்கள் தொழில்களை அற்ப கூலி அளித்து வரும் அண்டை மாநிலங்களுக்கு மாற்றிக் கொள்ளும்  என்பதும் இதனால் தில்லியில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதுமாகும்.  
சிஐடியுவும் அதனுடன் இணைந்துள்ள பல்வேறு சங்கங்களும். பணவீக்கத்தின் காரணமாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளதை மீட்பதற்கு உதவிடும் விதத்தில்,  குறைந்தபட்ச ஊதியம் 20 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கடந்த 4, 5 மாதங்களாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. முதல்வரின் இந்த அறிவிப்பு இவ்வாறு தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களின் விளைவேயாகும். 
இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வினை தில்லியை ஒட்டியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத்திற்கும் நீட்டித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் அங்கு வாழும் மக்களும் இதேபோன்று கடும் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனை நாடு முழுதும் விரிவுபடுத்துவதற்கும். மற்றும் இதர கோரிக்கைகளுக்காகவும் வரும் 2016 செப்டம்பர் 2 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெறுவதற்கும் உழைக்கும் மக்களைத் திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்திடும்.
 (ந.நி,)

No comments: