Sunday, August 14, 2016

உழைப்பாளி மக்களின் முன் உள்ள சவால்கள்.


உழைப்பாளி மக்களின் முன் உள்ள சவால்கள்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 15 வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.  நம்மை அறிவோம், நம் அரசியலை அறிவோம் என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:
.வரலாற்று ரீதியாக தமிழ்நாட்டில் செங்கொடி சங்கத்திற்கு மகுடம் சூட்டிய சங்கங்கள் தர வரிசையில் ரயில்வே, பஞ்சாலை, அரசுப் போக்குவரத்து, மின் அரங்கம்  மற்றும் இதர தொழிற்சங்கங்களைக் குறிப்பிடலாம். பல அடக்குமுறைகள், பல போராட்டங்களைச் சந்தித்து மகுடம் சூட்டியுள்ளன, வரலாறு படைத்துள்ளன. குறிப்பாக அதில் மின் அரங்கம் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 95 லட்சத்து 63 ஆயிரத்து 899 கிராமப்புற இல்லங்களில் 86 லட்சத்து 83 ஆயிரத்து 426 இல்லங்களில் இன்று மின் இணைப்பு உள்ளது. அது 90,79 சதவீதம் ஆகும். நகர்ப்புறங்களில் 89 லட்சத்து 29 ஆயிரத்து 104 இல்லங்களில் 85 லட்சத்து 81 ஆயிரத்து 633 இல்லங்களில் மின் இணைப்பு உள்ளது, இது 96.11 சதவீதம் ஆகும். இது தமிழசு மக்களின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்தப் பணி அரசின் திட்டம் மட்டுமல்ல. நம்முடைய உழைப்பாளி மக்களின் போராட்டங்கள், அவற்றின் தியாகங்கள் இல்லாமல் இது நிறைவு பெற்றிருக்காது.
இந்தப் பணிகளில் ஈடுபட்ட. உழைப்பாளிகளைத் திரட்டி, அவர்களுக்காகப் பேரியக்கங்கள் நடத்தி, அவர்கள் வாழ்விலும் கணிசமான முன்னேற்றத்தையும், தொழிற்சங்கங்கள் ஆற்றியுள்ளன. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பணி முதன்மையானது. காடம்பாறை போராட்டம் போன்று பல போராட்டங்கள் இன்றும் மறக்க முடியாதவைகளாகும்.
மின் அரங்கம் மகத்தான தலைவர்களையும் உருவாக்கியது. அமைப்பையும் உருக்கு போன்றதாக மாற்றியது.
ஏராளமான ஆதரவு இயக்கங்கள். முறைசாரா தொழிலாளர்களைத் திரட்டியது. குறிப்பாக கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களைத் திரட்டுவதிலும் முதல் இடத்தை வகித்தது.
மின்வாரியத்தில் பணியில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், ஓய்வு பெற்றோர்க்கான அமைப்பு, குடும்பநல பாதுகாப்புத் திட்டம், புரட்சிகரமான இயக்கங்களுக்கு உதவி போன்று பல்வேறு அம்சங்களிலும் ஓர் அட்சய பாத்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம்முடைய தொடர்ச்சியான இயக்கங்கள், போராட்டங்கள் ஊழியர்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, உதாரணமாக, ஒரு மஸ்தூர் 1980இல் மாத சம்பளம் 750 ரூபாயாக இருந்தது. தற்போது அது 10 ஆயிரம் ரூபாயாக மாறி இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் பொருளாதார வாழ்வில் சுரண்டலை சமாளிக்க இந்த உயர்வு உதவியுள்ளது. ஓய்வு பெற்ற பின்பும், ஊழியர்கள் நலனில் நம்முடைய முயற்சி கணிசமாகத் தொடர்கிறது.
இந்தப் பணிகள் நம்மிடையே 2015ஆம் ஆண்டின் கணக்கின்படி, 19 ஆயிரத்து 557 நிரந்தர ஊழியர்களையும், 10 ஆயிரத்து 266 ஒப்பந்த ஊழியர்களையும் இணைப்பதற்கு உதவியுள்ளது.
மின்வாரியத்தில் இன்று ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்கள், கேட்டகிரி சங்கங்கள், சாதி வாரியான சங்கங்கள் என 16 சங்கங்கள் செயல்படுகின்றன.
ஒரு லட்சம் ஊழியர்களில் நாம் ஒரு பகுதியாகவே தொடர்கிறோம்.
மேலே குறிப்பிட்ட பல ஊதிய உயர்வு சலுகைகள் போன்றவற்றில், இதர அமைப்புகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. அது உண்மையும் கூட. இதை எப்படிப் புரிந்து கொள்வது?
நாம் நம்மை வேறுபடுத்திக் காட்டினோமா? இன்றுள்ள சமூக அமைப்பில் நம்முடைய பணி உடைமை வர்க்கத்தின் நலனுடன் இணைந்துள்ளது. இன்று உள்ள சமூக அமைப்பைப் பாதுகாக்க, நம்முடைய பணி உரம் சேர்க்கிறது. மற்ற சீர்திருத்தவாத அமைப்புகளுக்கும், செங்கொடி அமைப்புக்கும் தெளிவான வித்தியாசம் இல்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பது, அவர்களின் பொருளாதார நலனுக்காகப் போராடி கோரிக்கைகளைப் பெறுவது என்பது தொழிற்சங்கத்தின் தலையாயப் பணி.
அதைமட்டும் மீண்டும், மீண்டும் செய்யும்போது, ஒரு மகத்தான உண்மையை நினைவில் கொள்வதில்லை. இந்தக் கால கட்டத்தில் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ வளர்ச்சி, தொழில், தொழில்நுட்ப மாற்றம் இவைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற வர்க்க முரண்பாடுகள், அரசியலில் வரும் வேறுபாடுகள், இந்த முரண்பட்ட அமைப்பு தொடரும்போது, இருப்பதை எப்படிப் பாதுகாத்து முன்னேறுவது போன்ற எதையும் பற்றி நாம் கவலைப்படுவது இல்லை.
சுருக்கமாகக் கூறினால், நாம் ஒரு நடுநிலையாளராக இருந்து எல்லாவற்றையும் பார்க்கிறோம். பிளக்கனோவ் என்ற மேதை இதை தொழிற்சங்க நடுநிலைமை (Trade Union Neutrality) என்று கூறுகிறார்.
தொழிலாளி வர்க்கம் மூன்று கட்டமாக வளர்கிறது.
(1)    மந்தமான, சுரண்டப்படும் மக்களாக (passive, exploited) இருப்பதிலிருந்து,
(2)    தொழிலாளிவர்க்கம் பொருளாதார மற்றும் சமூகப் போராட்டங்களில் வளரும் ஒரு காரணியாகவும் (the proletariat as a growing factor in economic and social struggle);
(3)    தொழிலாளி வர்க்கம், ஓர் உணர்வுபெற்ற சமூக சக்தியாக, தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக, மற்றும் சுரண்டல், தேசிய அளவிலான சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்யும் பொன்னான மார்க்கத்துக்காக ஒரு முன்னணிப் போராளியாகவும் வளர்கிறது. (the working class as a conscious social force, the vanguard  contingent of the working people and an active fighter for mankind’s general emancipation from exploitation, national and social oppression).
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று கட்டங்களில் இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்திற்கு இன்னும் நாம் முன்னேறவில்லை.
முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்துப் போராடுவது, தாக்குதலுக்கு உள்ளாவது, சில சலுகைகளை வென்றெடுப்பது, ஒப்பந்தம் செய்வது, வெற்றி விழா கொண்டாடுவது என்ற நிலையில்தான் இருக்கிறோம்.
இது தவறு என்று சொல்ல வில்லை. ஆனால், இதனை எப்படி ஒரு புரட்சிகரமான இயக்கம் பார்க்க வேண்டும்?
முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்துப் போராடுவது, தாக்குதலுக்கு உள்ளாவது, சில சலுகைகளை வென்றெடுப்பது, ஒப்பந்தம் செய்வது, வெற்றி விழா கொண்டாடுவது. இவை தவறு என்று  சொல்லவில்லை.
ஆனால், இவற்றை எப்படி ஒரு புரட்சிகரமான இயக்கம் பார்க்க வேண்டும்?
முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்குமுறையின் வழிமுறைகளை உழைக்கும் மக்களின் ஒரு பகுதியை திருப்திப்படுத்துவதுடன் இணைப்பது
(“The capitalists combine methods of suppression with partial satisfaction of the working people.”)
என்கிற முறையில் செயல்படுகிறது.
அத்தியாவசியமானவற்றை தன்னகத்தே வைத்துக்கொண்டு, அத்தியாவசியம் அல்லாதவற்றை சலுகைகளாக அளிப்பது(concessions of the unessential while retaining the essential ”) என்று இந்த முதலாளித்துவ வழிமுறையை நம்முடைய ஆசான்கள் வர்ணிக்கிறார்கள்.
இன்றைய நிலை என்ன?
தொழிற்சங்க உணர்வு என்கிற அளவுக்குத்தான் இன்று உருவாக்க முடிந்திருக்கிறது. அரசியல் உணர்வை உருவாக்க முடியவில்லை. அந்த உணர்வு உள்ளதாகக் கருதும் பல தொழிற்சங்கத் தலைவர்கள், பொருளாதாரவாதத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.
ஆகவே, மீண்டும் மீண்டும் ஒரேஇடத்தை செக்கு சுற்றுவது போல சுற்றிக்கொண்டிருக்கிறோம்.
ஜனநாயக உணர்வு என்பது என்ன?
தொழிலாளிவர்க்க உணர்வு என்பது என்ன?
சோசலிச உணர்வு என்பது என்ன?
இன்றைய சூழ்நிலை.
பொதுத்துறையை உருவாக்கி, முதலாளித்துவம் வளர்ந்தது. இன்று அதை தனியார்மயம் தமதாக்கிக் கொண்டுகிறது.
மேலும் வளர்வதற்கு சரக்கு  சேவை வரி போன்று பல்வேறு வரி வகைகள்.
தொழிலாளி வர்க்கம் பிளவுபட்டு உள்ளது. சீர்திருத்தவாதத்தின் பின் நிற்கிறது. மேலும், அதை சிதைக்கத் தேவையான அனைத்தையும் செய்கிறது.
மதம்.
மதம், இருந்தது, இருக்கிறது, இன்று அது கூர்மைப்படுத்தப்படுகிறது. மோதுகிறது, வர்க்கத்தைப் பிளவுபடுத்துகிறது.
சாதி இருந்தது, இருக்கிறது, இன்று அடையாள அரசியலாக சாதிய சங்கங்களாக உழைக்கும் மக்களைக் கூறு போடுகிறது.
தலித் எதிர்ப்பு இருந்தது, இருக்கிறது. இன்று தலித்துகள் மேலும் இரண்டு விதத்தில் ஒடுக்கப்படுகிறார்கள். ஒன்று பொருளாதார ரீதியாக. மற்றொன்று சமூகஒடுக்குமுறை.
பெண் அடிமைத்தனம், ஆண் ஆதிக்கம் மேலும் கூர்மையடைகிறது.
வேத காலத்திலும் பசு இருந்தது. மகாத்மா காந்தி முதற்கொண்டு அனைவரும் அதனைப் புனிதமாகக் கருதினார்கள். ஆனால அந்தப் புனிதத்தை இன்று எதிர்ப்புரட்சியாளர்கள் கையில் எடுத்துக் கொண்டு மோதுகின்றனர்.
முதலாளித்துவம் தன் வளர்ச்சிக்கு எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது. புராணம், இதிகாசம், மொழி, இனம், மதம், சாதி என அதனுடைய தளம் விரிவடைந்துகொண்டே செல்கிறது.
இந்தச் சூழ்நிலையில் தொழிலாளி வர்க்கம் ஆற்ற வேண்டிய மகத்தான கடமை, புரிந்துகொள்ளக்கூடிய முக்கியமான அம்சம் என்ன?
இன்று நாம் நவீன தாராளமய உலகத்தில் இருக்கிறோம். விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி வேகமாக வளர்கிறது. மின்வாரியத்தில் அதிகாரிகள்,  பொறியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். ஆனால் ஊழியர்கள் இடம் காலியாகவே விடப்படுகிறது. ஊழியர்கள் இடம் காலியாக விடப்படுவதன் நோக்கமே எதிர்காலத்தில் அந்தப் பணியை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கத்தான். ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைத்த பிறகு, உற்பத்திச் செலவினம் (cost of production) கணிசமாகக் குறைந்தபிறகு, நிறுவனத்தை மின்வாரியத்தை, தனியார் ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கப்போவது இல்லை. இப்போது இந்த பளுவை அவன் தூக்கிச் சுமக்கத் தயாராக இல்லை. அதற்காகத்தான் மின் வாரியங்களைப் பிரிப்பது, ஊழியர்கள் பணித்திரளை நிரப்புவது கிடையாது.
இதே போன்ற நிலைமை மின் வாரியத்தில் மட்டுமல்ல, உலகம் முழுதும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
நவீன தாராளமயம் இந்தியாவில் வந்த பிறகு, தொடர்ச்சியாக நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை என்பது எல்லா துறையிலும் கணிசமாகக் குறைந்து. முறைசாராத் தொழிலாளர்கள், கிராமப் புறத்திலும், நகர்ப்புறத்திலும் வலுவாக வந்துள்ளார், குவிந்துள்ளார்கள்.
இதர மாநிலத்தில் இருப்பவர்களும், தங்கள் மாநிலத்தை விட்டு, இதர மாநிலங்களுக்குப் பிழைக்கப் போகிறார்கள்.
நிரந்தரத் தொழிலாளி எண்ணிக்கை என்பது இந்தியாவில் இன்றைய தினம் ஏழு சதவீதமாக சுருங்கி விட்டது. 93 சதவீதம் மக்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம், 14 மணி நேரம் உழைக்கக் கூடியவர்களாக மாறியுள்ளார்கள். அவர்களுக்கு என்ன எதிர்காலம்?
அவர்களைத் திரட்டக்கூடிய கடமையை, அவர்களைப் போராட்டக் களத்திற்குக் கொண்டுவந்து போராட வைக்க வேண்டிய கடமையை நாம்தான் செய்ய வேண்டும்.
நம்முடைய சங்கம், நம்முடைய கோரிக்கைகளுக்காக மட்டும் கவலைப்பட்ட காலம் என்பது மலையேறிவிட்டது என்பதை முற்றிலுமாக உணர வேண்டும். பரந்துபட்ட தொழிலாளர்களைத் திரட்டுவதற்கு உடனடியாக முயற்சி எடுக்கவில்லை என்று சொன்னால், இப்போது நாம் இருக்கக்கூடிய இடத்திலிருந்து மேலும் கீழே வீழ்ந்து விடுவோம்.
நாம் நம்முடைய கட்டிடத்திற்குள் அமர்ந்துகொண்டு தொழிற்சங்கம் நடத்த வேண்டிய பணி என்பது சுருங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய உறுப்பினர்கள் அவர்கள் வாழக்கூடிய இடங்களில், மக்களுடைய பிரச்சனைகளை எடுப்பதற்கு, கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்களைத் திரட்டுவதற்கு யுத்தகால அடிப்படையில் நாம் பணியாற்றவில்லை என்று சொன்னால், தொழிலாளி வர்க்கம் மேலும் பிளவுபட்டு சின்னாபின்னமாகச் சிதறி 18ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளிவிடும்.
தொழிற்சங்கங்கள் இனி கிராமப்புறங்களில்  தெருக்களில் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடக்கூடிய அமைப்பாக மாற வேண்டும்.
மாமேதை லெனின், 1917ஆம் ஆண்டிலேயே, நகர்ப்புறங்களில், தொழிற்சாலைகளில்  வேலைபார்க்கும் ஊதியம்பெறும் தொழிலாளர்கள், பல லட்சக்கணக்கில் கிராமப்புறங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுடன் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.  முதலில் கூறப்பட்டுள்ள தொழிலாளர்கள். பின்னர் கூறப்பட்டுள்ள கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு விடப்படக்கூடிய அறைகூவல் யாராலும் அலட்சியப் படுத்தப்படக்கூடாது. இவ்வாறு அறைகூவல் விடுவது மட்டும் போதாது. நகர்ப்புறத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் அனுபவம், அறிவு, வசதி வாய்ப்புகள் உண்டு. அவர்களின் சக்தியில் கொஞ்சமாவது,  கிராமப்புறத் தொழிலாளர்களை, முறைசாராத் தொழிலாளர்களை முன்னோக்கிச் செல்வதற்கு, அடிஎடுத்து வைத்திட உதவுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
(The wage-workers in the cities, in the factories, are bound by thousands and millions of ties with the wage-workers in the countryside. A call issued by the former to the latter cannot go unheeded. But issuing a call is not the only thing to be done. The urban workers have far more experience, knowledge, means and forces. Some of their forces should be directly used to help the rural workers on to their fee…”)
தமிழகத்தில் கிராமப்புறத்திலும், நகரப்புறத்திலும் உங்களிடம் மின் இணைப்பு பெற்றிருப்பவர்களிடம், அதாவது உங்களுடைய நுகர்வோரிடம். உங்களுடைய உறவை உயிரோட்டமுள்ள உறவாக மாற்றுவது எப்படி? நீங்கள் யோசிக்க வேண்டும். இவ்வாறு ஒரு பரந்துபட்ட ஆதரவை, செங்கொடி இயக்கத்தால் உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், இன்று உருவாகி இருக்கக்கூடிய வாய்ப்பை நாம் பயன்படுத்தவில்லை என்று சொன்னால், இதனை இன்றைய நவீன தாராளமயம் பயன்படுத்திக் கொள்ளும்.
இந்தியா ஒரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நாடு. பெரு முதலாளிகள், இவர்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள்.
அரசை அவர்கள் உருவாக்குகிறார்கள். மோடி அரசு அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. தொழிலாளர்நலச் சட்டங்கள், தொழிலாளர் விரோதச் சட்டங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கின்றன. சிறந்த நீதிமன்றத் தீர்ப்புகள் என்பவையும் கூட, வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால், பழைய பாதையிலிருந்து பெரிய அளவிற்கு முறிவு தேவை. கடந்து வந்த பாதையில் நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கக்கூடிய தியாகம் என்பது மகத்தானது. தடியடி, வேலைநீக்கம், தூக்குமேடை, வேலையிழப்பு போன்றவைகளை நாம் நினைவில் வைத்துக் கொண்டு, புதிய வேலைகளைத் தொடங்குவோம்.
சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்றார் வள்ளுவர். சொல்லும் அளவுக்கு செயல்படுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒரே பணியை பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கக்கூடிய நாம், மாறியுள்ள சூழ்நிலையில், புதிய பணியில் ஈடுபடுவது என்பதில் தயக்கம் ஏற்படலாம், ஒதுங்கலாமா என்ற எண்ணம் ஏற்படலாம், மனதில் சோர்வு உண்டாகலாம். இவை அனைத்தும் இருக்கும்.  அவற்றை எல்லாம் கடினமாக முயற்சிகள் மேற்கொண்டு சரிசெய்துகொண்டு புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக, வரலாற்று ரீதியான கடமையைச் செய்வதற்காக, நம்முடைய  நடவடிக்கைகளை இப்போதாவது தொடங்குவோம் என்று முடிவெடுக்க வேண்டும்.
----


No comments: