Thursday, August 25, 2016

விளையாட்டுத்துறைக்கு முன்னுரிமை அளித்திடுக



ரியோ ஒலிம்பிக்சில் இந்திய விளையாட்டு வீரர்கள் மிகவும் மோசமாகப் பங்களிப்பினைச் செய்திருப்பது சர்வதேச ஊடகங்கள் உட்பட மிகவும் விரிவான அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.  120 கோடி மக்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில், கடைசியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்தான் பெற முடிந்ததா என்று கிண்டலடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
விளையாட்டுத்துறையில் நம்மால்  முன்னேற முடியாமல் போயிருப்பதற்குத் தனிப்பட்ட முறையில் விளையாட்டு வீரர்கள் காரணமல்ல. நாட்டில் விளையாட்டுத்துறை சம்பந்தமான உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக இருப்பதும், விளையாட்டுத்துறைக்கான பொதுச் செலவினம் மிகவும் பெயரளவிலானதாகவே இருப்பதும். விளையாட்டுவீரர்களைத் தெரிவு செய்வதிலும் அரசியல்-அதிகாரவர்க்க உறவினர்களை மட்டுமே தேர்வு செய்கிற மிக நாசகரமான நடைமுறைகள் இருப்பதும்தான் காரணங்களாகும்.
பி.வி.சிந்து, சக்சி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் போன்ற வீராங்கனைகள் ஒலிம்பிக்சில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு இவர்கள் மேலேகூறியவாறிருந்த அனைத்துத் தடைகளையும்  தங்கள் தனிப்பட்ட விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின்மூலம் விஞ்சி முன்னேறியிருப்பதே காரணமாகும்.
வில்-அம்பு வீராங்கனை தீபிகா குமாரி ரிக்ஷா இழுப்பவரின் மகளாவார். ஓட்டப்பந்தய வீராங்கனை லலிதா பாபர் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் தங்கள் குடும்ப வறுமையைக் கடந்து ஒலிம்பிக்சில் உறுதியாகக் கலந்துகொள்ளக்கூடிய அளவிற்கு அரசின் ஆதரவு அவர்களுக்கு இல்லை. இவர்கள் தங்கள் சொந்த முயற்சி மற்றும் உறுதி காரணமாகவே இந்த அளவிற்கு அவர்களால் வர முடிந்திருக்கிறது.
விளையாடுமிடங்கள், உடற்பயிற்சி மையங்கள் (ஜிம்னாசியங்கள்) மற்றும் நீச்சல் குளங்கள் போதுமான அளவிற்கு இந்தியாவில் இல்லை. மேலும் விளையாட்டுத்துறைக்கு போதுமான அளவிற்கு மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படுவதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவிப் பணம் என்பது மிகவும் அற்பம். இவற்றின் மூலமாக இவர்களால் விளையாட்டு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் எடுத்துக்கொள்ள முடியாது.
தேசிய அளவிலான கைப்பந்தாட்ட வீராங்கனை (handball player)யான, இருபது வயதே நிரம்பிய பூஜா, தற்கொலை செய்து கொண்டிருப்பது, நாட்டில் விளையாட்டுத்துறை எந்த அளவிற்கு இருள்சூழ்ந்திருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணமாகும். பூஜாவிற்கு பட்டியாலாவில் அவர் கல்லூரியில் இலவச விடுதிவசதி மறுக்கப்பட்டதே அவர் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமாகும். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் ரியோவில் தொடங்கிய சமயத்தில்தான் இந்தத் துயரார்ந்த சம்பவமும் நடந்துள்ளது.
மாநில அரசுகள் இப்போது பதக்கங்களைப் பெற்று வந்துள்ள இரு வீராங்கனைகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் மற்றும் பல பரிசுகளை அள்ளித்தந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு பரிசுகள் பெறுவதற்கு இவர்கள் பொருத்தமானவர்கள் என்று கூறும் அதே சமயத்தில், இவை மட்டும் இதில் உள்ள அடிப்படைப் பிரச்சனையைத் தீர்த்திட உதவாது. விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மிகப் பெரிய அளவில் கட்டுவதற்கான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் தீட்டிடவேண்டும்.விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் போதுமான அளவிற்கு நிதி உதவி அளித்து அவர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள ஊக்குவித்திட வேண்டும். எல்லா விளையாட்டுகளையும் ஓரங்கட்டிவிட்டு, கார்ப்பரேட்டுகளின் (ஸ்பான்சர்ஷிப்) ஆதரவுடன், கிரிக்கெட்டை மட்டும் தூக்கிப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
தற்போது நாட்டில் இயங்குவதாகக் கூறிக்கொள்ளும் அனைத்து விளையாட்டுத்துறை அமைப்புகளும் முழுமையாக பழுதுபார்க்கப்பட வேண்டும். அரசியல் தலையீட்டிலிருந்து இவை கத்தரித்து விடப்பட வேண்டும். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த விற்பன்னர்கள் சுதந்திரமாகத் தலையிடக்கூடிய விதத்தில் இவைகள் ஜனநாயகபூர்வமான அமைப்புகளாக மாற்றப்பட வேண்டும். இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் சமூகத்தின் நலன் சார்ந்தும் விளையாட்டுத்துறை கருதப்படக்கூடிய விதத்தில் ஓர் ஒருங்கிணைந்த விளையாட்டுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.  
(தமிழில்: ச. வீரமணி)

No comments: