Friday, August 19, 2016

கட்சி ஊழியர்கள்மீது திரிணாமுல் தாக்குதல் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு


கட்சி ஊழியர்கள்மீது திரிணாமுல் தாக்குதல்
சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஆகஸ்ட்-
சாமானிய மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தனிமைப்படுத்திட திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இரு நாட்களாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திலேயே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். இது தொடர்பாக இன்றைய (வெள்ளிக்கிழமை) தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் சீத்தாராம் யெச்சூரி மற்றும் கட்சியின் தலைவர்கள் கூறியதாக வந்திருக்கும் செய்தி பின்வருமாறு:
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இதுபோன்ற பயங்கரவாதத்தை 70களில்கூட நாங்கள் சந்தித்திடவில்லை. வங்கத்தின் கிராமப்புறங்களில் எங்கள் ஊழியர்கள்மீது தாக்குதல்கள் மிகவும் மூர்க்கமாக இருக்கின்றன.  உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கங்களைக் கட்டுவதன் மூலமாக இதனை முறியடித்திட நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். வரும் செப்டம்பர் 2 அகில இந்திய வேலைநிறுத்தம் மமதா பானர்ஜிக்கு ஒரு சவாலாக இருக்கும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியிருப்பது தொடர்பாக ஒரு செய்தியாளர் கேட்டபோது, எங்கள் கட்சியிலிருந்து ஊழியர்கள் வெளியேறியிருப்பது தொடர்பாக ஒவ்வொருவர் குறித்தும், அவர்கள் அவ்வாறு வெளியேறியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும்  தனித்தனியே ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
கட்சியில் செயலற்று இருக்கக்கூடிய கட்சி ஊழியர்களையும், திரிணாமுல் காங்கிரசுடன் கள்ளத்தனமாக உறவு கொண்டிருப்போர் குறித்தும் அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம். எங்கள் ஸ்தாபனத்தை வலுப்படுத்திட அது உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் கட்சியிலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு, அவற்றை எங்கள் ஸ்தாபனத்திலிருந்து தூக்கி எறிந்திடுவோம், என்று பெயர் கூற விரும்பாது ஒரு மூத்த தலைவர் தெரிவித்தார்.
 பெயரளவில், செயலற்று இருக்கக்கூடிய உறுப்பினர்களை இனி அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம். கட்சி சிறப்பானமுறையில் செயல்படுவதற்காக, கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்திடவும் தீர்மானித்திருக்கிறோம். புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பதற்கு கடும் விதிமுறைகளையும்  ஏற்படுத்தி இருக்கிறோம். எங்களுக்கு சிறிய கிளைகள் அல்ல, மாறாக வலுவான கிளைகளே தேவை,என்று அவர் மேலும் கூறினார்.
இரண்டு நாட்களும் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியுடன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் கலந்து கொண்டார். செப்டம்பர் 30 முதல் நடைபெறவுள்ள கட்சியின் மாநில பிளீனம் மாநாட்டின் வரைவு தீர்மானம் மாநிலக்குழுவில் விவாதிக்கப்பட்டது.  செப்டம்பரில் பிளீனத்தில் வரைவு தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மாவட்டக்குழுக்களின் கருத்தக்களையும் பெற கட்சி தீர்மானித்துள்ளது.

(ந.நி.)  

No comments: