Wednesday, August 24, 2016

பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே ஜம்மு – காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர முடியும் சீத்தாராம் யெச்சூரி பேட்டி




பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே ஜம்மு – காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர முடியும்
சீத்தாராம் யெச்சூரி பேட்டி

(ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மட்டுமே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

தி இந்து ஆகஸ்ட் 25 நாளிதழில் அந்நாளேட்டின் செய்தியாளர் விகாஷ் பதக், சீத்தாராம் யெச்சூரியிடம் காஷ்மீர் பிரச்சனை, குஜராத் தலித் எழுச்சி உட்பட பல விஷயங்கள் குறித்து பேட்டி கண்டுள்ளார். அவை வருமாறு:)

கேள்வி: காஷ்மீர் நெருக்கடி இப்போது எங்கே மையம் கொண்டிருப்பதாகத் தாங்கள் கருதுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 45 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நெருக்கடி எங்கே மையம் கொண்டிருக்கிறது என்பது அரசின் நிலைப்பாட்டை சார்ந்தே இருக்கிறது. இதனை நீங்கள் வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என்று மட்டுமே கருதினால், இது ஒரு சீரியசான நிலைமையை ஏற்படுத்தும் என்றே நான் நினைக்கிறேன். அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அறிவிப்புகள் உடனடியாகப் பிறப்பிக்கப்பட வேண்டும்.

கேள்வி: இப்பிரச்சனை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழு சந்தித்த பின்னர், பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு அல்லது இறுதி அமைதி காண்பது குறித்து முதல்முறையாக அவர் பேசி இருக்கிறார். ஆனால், எப்படி? அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இதனை நீங்கள் மேற்கொண்டிட முடியும்.

கேள்வி: மோடி இறுதி அமைதி குறித்து வாய் திறந்து இவ்வாறு கூறியதற்கு ஒரு நாளைக்கு முன்பு அருண் ஜெட்லி, கல்லெறிபவர்களுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?  

சீத்தாராம் யெச்சூரி: குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலையை, முயல்களையும் ஓடவிட்டு, வேட்டை நாய்களையும் அவிழ்த்துவிட்டுள்ள வேலையை இந்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறதா? நிதி அமைச்சர் சொல்வது என்ன? பிரதமர் கூறுவது என்ன? நாடாளுமன்றத்தில் நான் ஓர் உதாரணம் சொன்னேன். சடலங்களிடமிருந்து ரத்த வாடை வீசுவதைஅறியும்போதுதான் வல்லூறுகள் அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வரும்.  காஷ்மீர் முழுவதும்  மக்களின்  ரத்தம்  சிந்தப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வல்லூறுகள் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வருகின்றன. 
ஏன் இப்படி மக்கள் ரத்தம் சிந்தப்பட வேண்டும்? இது குறித்து முதலில் பேச வேண்டும்.

கேள்வி: குஜராத் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலித்துகள் கிளர்ச்சி அலைகள், அரசியல்ரீதியாகவும் சமூக ரீதியாகவும்,  எழுந்திருக்கிறதே, இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: உனாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். குஜராத்தில் மட்டும் இவ்வாறு நடைபெறவில்லை. தலித்துகள் ஒடுக்குமுறைக்கு எதிராக கலகம் புரிகிறார்கள் என்பதன் பிரதிபலிப்பே இது. தலித்துகள், இனி நாங்கள் இறக்கும் விலங்குகளின் தோல்களை உரிக்க மாட்டோம், கையால் மலம் அள்ள மாட்டோம். என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும் எங்களுக்கு நிலம் மறு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள். நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். உண்மையில், தலித்துகளை பொருளாதாரரீதியாக மேம்பாடு அடையச் செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.

கேள்வி: தலித்துகளை பொருளாதாரரீதியாக மேம்பாடு அடையச்செய்வது குறித்து காலங்காலமாகவே பேசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் தலித் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல், உணர்வுகள் மற்றும் பெருமிதம் கொள்ளுதல் தொடர்பாக மாற்று தலித் அரசியலும் இருக்கிறது. உங்கள் வர்க்க அணுகுமுறையை இத்தகைய அடையாள அரசியலுடன் எப்படி பொருத்துகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: இந்தியாவில் சாதிக்கு எதிராக வர்க்கம் என்ற நிலை இல்லை. மாறாக சாதி – வர்க்கம் ஒன்றின்மீது மற்றொன்று என்ற முறையில் இருக்கிறது. இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களும், சுரண்டலுக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களிலும் பெரும்பகுதியினரும் தலித்துகளாவார்கள். இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பது  இரண்டு கால்களின் மீதும் நிற்கிறது. ஒரு கால் பொருளாதார சுரண்டல் என்றால், மற்றொரு கால் சமூக ஒடுக்குமுறை. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டுமானால், இவ்விரண்டு கால்களாலும் நடந்தாக வேண்டும்.

கேள்வி: எனவே, தலித்துகளை அடித்தட்டு வர்க்கத்தினர் என்று பார்க்க வேண்டுமா அல்லது பிரத்யேகமான கலாச்சாரக் குழுவினர் என்ற பார்க்க வேண்டுமா?

சீத்தாராம் யெச்சூரி: தலித்துகளுடன் ஒரு கலாச்சார அடையாளப் பிரச்சனை இருக்கிறது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் இலக்கியம் மற்றும் கலகக் கலாச்சாரம் என்பது வரவேற்கப்பட வேண்டிய அம்சம்தான். ஆனால், சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனைக்கு அவ்வாறு அடையாளப் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியாது. பிரதானமாக இதனை அவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டு நிலையை உருவாக்குவதன் மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும். அத்துடன், அடையாளப் பிரச்சனைகளும் முக்கியமாகும். எனவே, சாதிய ஒடுக்குமுறைப் பிரச்சனைக்குத் தீர்வு அடையாளப் பிரச்சனை அல்ல. எங்களைப் பொறுத்தவரை அது ஒரு வர்க்கப் பிரச்சனை.

கேள்வி: கேரள முதல்வரின் ஆலோசகராக பொருளாதார மேதை கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து அச்சுதானந்தன் விமர்சனம் செய்திருக்கிறாரே, இது குறித்து ஏதேனும் கருத்துக்கள்?

சீத்தாராம் யெச்சூரி: இது குறித்து கேரள அரசு தீர்மானித்திடும். கேரள அரசாங்கம், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவைகளை நிறைவேற்ற உறுதிபூண்டிருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)







No comments: