குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின்
அறிவிப்பு
கேலிக்கூத்து மற்றும் ஏமாற்றும் சூழ்ச்சியாகும்
மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலம் அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்
தபன்சென் அறிக்கை
புதுதில்லி, ஆக. 31-
குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு கேலிக்கூத்து மற்றும் தொழிலாளர்களை
ஏமாற்றும் சூழ்ச்சியாகும். செப்டம்பர் 2 மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலமாக அரசின்
சூழ்ச்சியை முறியடிப்போம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் கூறினார்.
இது தொடர்பாக அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
"செவ்வாய்க்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில்
தொழிலாளர்துறை அமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர்
கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தின் சார்பில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது,
அதில் அரசாங்கம், தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும்,
எனவே 2016 செப்டம்பரி 2 வேலைநிறுத்தத்திற்குப் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களை ஏமாற்றும் கேலிக்கூத்தே தவிர வேறல்ல என்றே சிஐடியு
கருதுகிறது.
அரசாங்கம், குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது
என்று நிதி அமைச்சர் கூறியிருப்பது உண்மையல்ல. குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு
2016 ஆகஸ்ட் 30 அன்று சந்தித்தது. அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் குறைந்தபட்ச
ஊதியம் 18,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதைத்தொடர்ந்து கூட்டம் எவ்வித
முடிவும் மேற்கொள்ளாமல் முடிந்தது. இந்தநிலையில்
அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது வேலைநிறுத்தத்திற்கு முன்பு
தொழிலாளர்களை திசைதிருப்பி, குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியேயாகும்.
அரசாங்கம் நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 350 ரூபாய் (அதாவது மாதத்திற்கு
26 நாட்களுக்கு 9,100 ரூபாய்) தர தயாராயிருப்பதாகவும், இதன்மூலம் தொழிலாளர்களின் கோரிக்கையை
ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருப்பது குரூரமான ஜோக் ஆகும். தொழிற்சங்கங்கள் இதனை
கேலிக்கூத்து என்று கூறி நிராகரித்துவிட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு போனசை விடுவித்திருப்பதும் ஏதோ
அரசாங்கத்தின் கருணையால் ஒன்றுமல்ல. போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி உச்சவரம்பைக் கூடுதலாக்கி
இருப்பதை அரசாங்கம் இப்போது அமல்படுத்தி இருக்கிறது. இதனை இந்த அரசாங்கம் எப்போதோ செய்திருக்க
வேண்டும். இப்போது அதனை அரசாங்கம் விடுவித்துவிட்டு, அரசாங்கம் ஊழியர்களின் எண்ணற்ற
விஷயங்களைப் பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக வஞ்சகமான முறையில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின்
கடமை. இதனை ஏதோ சாதனை போல சித்தரித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில்தான் மத்தியப்பிரதேசம்,
ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் 2014-15ஆம்
ஆண்டிற்கான போனஸ் வழங்குதல் சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதற்கு அவை
கேரளம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கின்றன.
உண்மையில் அந்தத் தீர்ப்புகள் இந்த அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தாது. இவ்வாறு இவர்களின்
உண்மை நோக்கங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
பத்திரிகையாளர் கூட்டத்தில் அரசாங்கத்தின் திட்டப் பணிகளில் பணியாற்றும்
அங்கன்வாடி, மதிய உணவு, `ஆஷா` போன்றவற்றில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் பற்றிக்
கேட்கப்பட்டபோது, திட்டப்பணிகளில் பணியாற்றுவோர் எல்லாம் தொண்டர்கள் (volunteers) என்றும்
அவர்கள் ஊழியர்கள் (workers) அல்ல என்றும் நிதி அமைச்சர் கூறி அந்தக் கேள்வியை தள்ளுபடி
செய்துவிட்டார். ஆனால் இதே தேஜகூ ஆட்சிக்காலத்தின்போதுதான், 46ஆவது இந்தியன்
தொழிலாளர் மாநாட்டின்போது, திட்ட ஊழியர்கள் அனைவரும் ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டு,
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்கிற முந்தைய
ஐஎல்சி மாநாட்டின் பரிந்துரைகளை மீளவும் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்திட
வேண்டும்.
அமைச்சர் மேலும் திட்ட ஊழியர்கள் அனைவரும் சமூகப் பாதுகாப்புப் பயன்களின்
வருவதற்கான வழிவகைகளைக் காண ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஓராண்டுக்கு
முன்பு 2015 ஆகஸ்ட் 26-27 தேதிகளில் இதே அமைச்சர் இதேபோன்று சென்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு
முன்பாக திருவாய் மலர்ந்தருளினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இதுதொடர்பாக
இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.
எதார்த்தத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் அரசாங்கம் அறிவித்துள்ளவை
ஏமாற்றும் வேலையை தவிர வேறல்ல. இதனை ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கம் நிராகரித்திட
வேண்டும். வேலைநிறுத்தம் தொடங்க இருக்கும் இச்சமயத்தில் தொழிலாளர்களைக் குழப்புவதற்காகவே,
தவறாக திசைதிருப்புவதற்காகவே இத்தகைய விளையாட்டில் இந்த அரசாங்கம் இறங்கி இருக்கிறது.
இத்தகைய கபடத்தனமான மற்றும் வஞ்சனையான அரசாங்கத்தின் சூழ்ச்சியை தொழிலாளி வர்க்கம்
2016 செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்வதன் மூலம் முறியடித்திட
வேண்டும்."
இவ்வாறு தபன்சென் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,
(ந.நி.)
No comments:
Post a Comment