Friday, August 19, 2016

இந்தியா, தேசத் துரோக சட்டப்பிரிவை கிழித்தெறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது



இந்தியா, தேசத் துரோக சட்டப்பிரிவை கிழித்தெறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது
பேச்சுரிமை என்பது ஜனநாயகத்தின் முத்திரைக்கல்லாகும்.  தேசத்துரோக சட்டப் பிரிவுகளுக்கு அதில் இடம் இல்லை. எனினும், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தேசத்துரோகம் சம்பந்தமான 124-அ பிரிவு இன்னமும் நீடிக்கிறது. சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்றம், தேசத்துரோகம் என்பதன் வரம்பு குறித்து வரையறுப்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவுக்கும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-அ பிரிவுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய உறவுமுறை குறித்து தெளிவுபடுத்தி இருந்தது. ஆயினும், அதனைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, அதன்பின் தொடர்ந்து வந்த மத்திய, மாநில அரசுகள் அனைத்துமே தங்கள் மனம்போனபடி தேசக்குற்றச்சாட்டுக்களை பிரயோகித்தன. கீழமை நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றம் இதுகுறித்து அளித்துள்ள தெளிவான தீர்வறிக்கைகள் குறித்து கவலைப்படாது, அரசுகள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அவற்றின் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
1962இல், கேதார் நாத் சிங் (எதிர்) பீகார் மாநில அரசு என்னும் வழக்கில், தலைமை நீதியரசர் புவனேஷ்வர் பிரசாத் சின்கா என்பவர் தலைமையிலான அரசமைப்புச்சட்ட அமர்வாயம், தேசத்துரோகம் குறித்து ஐயந்திரிபற தெளிவானதோர் வரையறையை அளித்தது. அரசாங்கத்தை வன்முறை சாதனங்கள் மூலமாக மற்றும்/அல்லது சீர்குலைவு உருவாக்கும் எண்ணத்துடன், அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்திடும் எண்ணத்துடன் வன்முறையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தையோ அல்லது நிர்வாகத்தையே விமர்சனம் செய்வது, அது என்னதான்  காரமானதாக இருந்தாலும் அல்லது தவறான தகவலாக இருந்தாலும், தேசத்துரோக வரையறைக்குள் வராது. வன்முறையைத் தூண்டுவது என்பது அதன் மூக்கிய மூலக்கூறாகும்.  இது 23 ஆண்டுகள் கழித்து, நீதியரசர்கள் ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் பைசுனாதீன் ஆகியோரால் பல்வந்த் சிங் (எதிர்) பஞ்சாப் மாநில அரசு வழக்கில் மீளவும் வலியுறுத்தி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேசத்துரோகம் என்பதை ஈர்ப்பதற்கு எதுவெல்லாம் காரணிகளாக இருக்கும் என்று மிகவும் தெளிவாக உச்சநீதிமன்றத்தினால் வரையறுத்து கூறப்பட்டுள்ள போதிலும், தேசத்துரோக வழக்குகள் தங்கள் முன் விசாரணைக்கு வரும்போது, அவற்றையெல்லாம் கீழமை நீதிமன்றங்கள் பிரயோகிக்கத் தவறிவிடுகின்றன. நீதித்துறையின் கீழ் மட்ட அளவில் உயர்நீதித்துறை அளிக்கின்ற தீர்வறிக்கைகள் குறித்து கவலைப்படுவதே கிடையாது. உயர் அளவிலான நீதித்துறைக்கும் கீழ் மட்டத்திலான நீதிமன்றங்களுக்கும் இடையில் இருக்கின்ற இந்த இடைவெளியை சரி செய்திட ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
1951இல் ஜவஹர்லால் நேரு, தேசத் துரோக சட்டப்பிரிவு மிகவும் ஆட்சேபகரமானது மற்றும் அருவருப்பானது. … எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக, அதனை ஒழித்துக்கட்டுவது நல்லது,என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் செய்யவில்லை. விரைவாக மட்டுமல்ல, பின்னர் வந்தவர்கள் தாமதமாகவும்கூட இதனைச் செய்யவில்லை. தேசத் துரோக சட்டப்பிரிவுகளைக் கிழித்தெறிய வேண்டிய தருணம் இதுவேயாகும்.
(நன்றி: தி எகனாமிக் டைம்ஸ், 2016 ஆகஸ்ட் 19 தலையங்கம்)

தமிழில்: ச. வீரமணி

No comments: