Wednesday, July 18, 2018

“குண்டர்கள் கும்பல் கொலை செய்வதற்கு” எதிராக நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை


 குண்டர்கள் கும்பல் கொலை செய்வதற்கு எதிராக
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
புதுதில்லி, ஜூலை 18-
குண்டர்கள் கும்பல் அப்பாவி தலித்துகள் மற்றும் முஸ்லீம்களைக் கொலை செய்து வருவதற்கு எதிராக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜார்கண்ட் மாநிலத்தில் பாகூர் என்னுமிடத்தில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. இத்னைச் செய்தவர்கள் பாஜகவின் யுவ மோர்ச்சா என்னும் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் என்று  அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள். பாஜக அரசாங்கங்கள் தற்போது கடைப்பிடித்துவரும் நெறிமுறைகளின் அடிப்படையில் இந்தக் கயவர்களும், அங்குள்ள பாஜக மாநில அரசாங்கத்தால் மிகவும் மென்மையாகவே நடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஸ்வாமி  அக்னிவேஷ் அவர்களுக்கு முறையான மற்றும் போதுமான மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், அவரைத் தாக்கிய குண்டர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இத்தகைய கும்பல்களின் வன்முறையை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளபோதிலும், ஸ்வாமி அக்னிவேஷ் மீதான தாக்குதல் நடந்துள்ளது. குண்டர்களின் கும்பல்கள் கொலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கள், பிரதமர் மற்றும் பாஜக மத்திய அரசாங்கத்தின் கீழ்தான் இத்தகைய குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதையும், இத்தகைய வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட தனியார் ராணுவங்கள் முழுமையாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நன்கு பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றன. இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடும் கயவர்கள், யார் என்று  நன்கு  அடையாளம் காட்டப்பட்ட பின்னரும், எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் சுதந்திரமாக செல்வதற்கு அனுமதிக்கப்படுவதானது, அவர்களுக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் அளித்துவரும் ஊக்கத்தையும், உதவியையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து, மதச்சார்பின்மை என்னும் நாட்டின் சிறப்புப்பண்பினைப் பாதுகாத்திட, கும்பல்கள் வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் கொலைகள் செய்வதைத் தடுத்திடக்கூடிய விதத்தில் சட்டம் – ஒழுங்கு பேணப்படுவதை உத்ததரவாதப்படுத்துவது அரசாங்கங்களின் கடமையாகும்என்று உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருப்பதனை நிறைவேற்றக்கூடிய விதத்தில் நாடாளுமன்றத்தின் நடப்புக்கூட்டத்தொடரிலேயே ஓர் ஒருங்கிணைந்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.
(ந.நி.)



No comments: