மக்களை மதரீதியாகப் பிரித்திடும் சட்டத்திற்கு எதிராக
அஸ்ஸாம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போர்
[அஸ்ஸாம்
மாநிலத்தில், மக்களை மதரீதியாகப் பிரித்திடும் 2016ஆம் ஆண்டு குடிமக்கள்
(திருத்தச்) சட்டமுன்வடிவுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்பதால்,
ஆளும் பாஜக அஸ்ஸாம் மாநில அரசு தங்கள் சுயரூபத்தை. குடிமக்கள் தேசியப் பதிவேட்டின்
மூலமாக, மூடிமறைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஃப்ரண்ட்லைன்
ஏட்டில் சுசாந்தா தாலுக்தார் எழுதியுள்ள கட்டுரையில் சாராம்சம் வருமாறு:]
அஸ்ஸாம்
மாநிலத்தில், 1985இல் அஸ்ஸாம் உடன்பாடு கையெழுத்தானதிலிருந்தே, “சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்துவந்த வங்க தேசத்தைச் சேர்ந்த அனைவரும்”, அவர்கள் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளியேறவேண்டும்
என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. நரேந்திர மோடி அரசாங்கம், 2016ஆம்
ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள குடிமக்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு,
இதில் பிரச்சனையைக் கிளறிவிட்டுள்ளது. அதாவது இந்தச் சட்டமுன்வடிவானது, அஸ்ஸாம்
மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குள், வங்கதேசத்திலிருந்து “சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து
வந்துள்ளவர்களில்” முஸ்லீம் அல்லாதவர்கள்
மட்டும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதிபடைத்தவர்கள் என்று
முன்மொழிந்திருக்கிறது.
இந்தச்
சட்டமுன்வடிவு கொண்டுவருவதற்கான நோக்கங்களில், “1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் ஷரத்துக்களின்கீழ்,
ஆப்கானிஸ்தானம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள ஆறு சிறுபான்மை
இனத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியாவிற்கு உரிய பயண ஆவணங்கள் இன்றியோ அல்லது
அவர்களிடமிருக்கின்ற ஆவணங்கள் காலாவதியாகியிருந்தாலோ, அவர்கள் அனைவரும்
சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கருதப்படுவார்கள் என்றும், எனவே,
அவர்கள் இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பித்திடத் தகுதியற்றவர்களாகிறார்கள்
என்றும் முன்மொழிந்திருக்கிறது. இரண்டாவதாக, இந்தச் சட்டத்தின்கீழ் இந்தியாவில்
வாழ்ந்ததற்கான காலத்தை, தற்போதுள்ள 11 ஆண்டுகள் என்பதிலிருந்து 6 ஆண்டுகள் என்று
குறைத்து, அதற்குள் வந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதிபடைத்தவர்கள் என்றும்
முன்மொழிந்திருக்கிறது. மேலும், இந்தச் சட்டமுன்வடிவானது, முஸ்லீம்களையும்,
யூதர்களையும் ஒதுக்கியிருக்கிறது.
இந்தியா,
ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஓர்
அங்கமாக மதச்சார்பின்மை இருந்து வருகிறது. எனவே, மதத்தை அடிப்படையாக வைத்து
குடியுரிமையைத் தீர்மானிப்பதை ஏற்கமுடியாது என்று இச்சட்டமுன்வடிவை எதிர்ப்பவர்கள்
வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 14ஆவது பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும்
சமம் என்றும், இந்நாட்டில் மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ, இனத்தின் பெயராலோ,
அல்லது ஆண் – பெண் என்கிற பாலினத்தின் பெயராலோ அல்லது பிறப்பிடத்தின் பெயராலோ
பாகுபாடு காட்டுவதற்குத் தடை விதித்திருக்கிறது. எனவே, பாஜக அரசாங்கம்
கொண்டுவந்திருக்கிற இந்தச் சட்டமுன்வடிவானது, இவ்வாறு இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் 14ஆவது பிரிவை மீறி இருக்கிறது.
தற்போது,
ராஜேந்திர அகர்வால் தலைமையிலான கூட்டு நாடாளுமன்றக்குழு ஒன்று, நாடாளுமன்றத்திற்கு
ஓர் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்தச் சட்டமுன்வடிவை ஆய்வு செய்து
கொண்டிருக்கிறது. இந்தக்குழு, மக்களிடம் கருத்துக்களைக் கேட்பதற்காக, அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு மே 7 – 11 தேதிகளில் பயணம்
செய்தது.
இந்தச்
சட்டமுன்வடிவானது, வடகிழக்கு மாநில மக்கள் மத்தியில் கூர்மையான எதிர்ப்பினைத்
தூண்டிவிட்டிருக்கிறது. அஸ்ஸாமில், கிளர்ச்சி நடவடிக்கைகளை உசுப்பிவிட்டு,
1970களின் பிற்பகுதிகளில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கமும், முந்தைய அனைத்து
அஸ்ஸாம் கண சங்கிரம் பரிசத்தும் ஆறு ஆண்டுகாலம் நடத்திய அந்நியர் எதிர்ப்புக்
கிளர்ச்சி (anti-foreigner agitation) நடவடிக்கைகளையும், அதனைத் தொடர்ந்து கையெழுத்தான
அஸ்ஸாம் உடன்படிக்கையை (Assam Accord) யையும்
நினைவுபடுத்தி யிருக்கிறது.
இந்தப்
பிரச்சனை மீது பாஜக பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் தனிமைப் பட்டிருப்பது நன்கு
தெரிகிறது. கூட்டு நாடாளுமன்றக்குழுவானது,
இந்தச் சட்டமுன்வடிவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரி, காங்கிரஸ் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக
முன்னணி (AIUDF—All India United Democratic Front), இடதுசாரிக் கட்சிகள்
மட்டுமல்லாமல் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் உட்பட அனைத்து மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும், பல்வேறு கலாச்சார அமைப்புகளும்,
மாதர் அமைப்புகளும், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்கள்
அமைப்புகளும் வீதியிலிறங்கிப் போராடத் துவங்கியுள்ளார்கள்.
1971க்குப்பின்னர் “வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்கள்” அனைவரும், அஸ்ஸாம் உடன்படிக்கையின்படி, வெளியேற்றப்பட வேண்டும் என்று
அவர்கள் கோரிக்கொண்டிருக்கிறார்கள்.
சர்பானந்தா
சோனோவால் தலைமையிலான பாஜக கூட்டணி அரசாங்கத்தில் ஓர் அங்கமாகத் திகழும் அசாம் கண
பரிசத் கட்சியும் இந்தச் சட்டமுன்வடிவை எதிர்த்து வருகிறது. இந்தச்
சட்டமுன்வடிவானது, “அஸ்ஸாம் உடன்படிக்கைக்கு” எதிரானது என்று அது கூறுகிறது. மேலும் மதத்தின் அடிப்படையில்
குடியுரிமையைத் தீர்மானிப்பதையும் தங்கள் கட்சி எதிர்ப்பதாக அது கூறியிருக்கிறது. இந்தச்
சட்டமுன்வடிவை உந்தித்தள்ள மத்திய பாஜக அரசு முயற்சிக்குமானால், தாங்கள் கூட்டணி
அரசாங்கத்திலிருந்து வெளியேறிவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறது. எனினும் பராக்
பள்ளத்தாக்கில் மட்டும், சில அமைப்புகள் இந்தச் சட்டமுன்வடிவிற்க ஆதரவாக
நிற்கின்றன. இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டு
நாடாளுமன்றக்குழுவிடம் கோரியிருக்கின்றன.
பாஜகவிற்குள்ளும் எதிர்ப்பு
இந்தச்
சட்டமுன்வடிவை எதிர்த்து மேகாலயா மற்றும் மிசோரம் மாநில அரசுகளும் அமைச்சரவையில்
முடிவுகளை நிறைவேற்றி இருக்கின்றன.
நாகாலாந்து அமைச்சரவையும் இந்தச் சட்டமுன்வடிவு, “நாகாவின் நலன்களுக்கு எதிராகச் செல்லுமானால்,” இதனை எதிர்த்திடுவோம் என்று தீர்மானித்திருக்கிறது. மேகாலயாவிலும்,
நாகாலாந்திலும் பாஜக ஒரு கூட்டணிக் கட்சியாகும். மிசோரத்தில், தற்போது காங்கிரஸ்
ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள பாஜக இந்தச் சட்டமுன்வடிவினை
எதிர்த்திருக்கிறது. மேகாலயா, நாகாலாந்து
மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பாஜக கிளைகள் இத்தகைய நிலைப்பாட்டினை
எடுத்திருப்பதால், இந்தச் சட்டமுன்வடிவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அஸ்ஸாமில்
கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது.
இந்தச் சட்டமுன்வடிவை விலக்கிக் கொள்ள தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று
அஸ்ஸாம் சோனோவால் அமைச்சரவைக்கு
நிர்ப்பந்தம் அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு
நிர்ப்பந்தம் அதிகரித்து வருவதன் காரணமாக, சோனோவால் தலைமையிலான கூட்டணி அரசாங்கம்,
இறுதிப்படுத்தப்பட்ட தேசிய குடியுரிமைகள்
பதிவேட்டின் இறுதி வரைவு வெளியிடப்பட்டபின்னர், அதனைப் பரிசீலனை செய்தபின் தங்கள்
நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அறிவித்திருக்கிறது. அஸ்ஸாமின் பாஜக மாநிலக்
கிளையும் இதே நிலைப்பாட்டைத்தான் நிறைவேற்றியிருக்கிறது. எனினும், பாஜகவின் மூத்த
தலைவர்கள், சோனோவால் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் பலர், ஆர்எஸ்எஸ்
தலைவர்கள் மற்றும் சங் பரிவாரத்தைச் சேர்ந்த தலைவர்கள், வங்க தேசத்திலிருந்து
வந்துள்ள இந்துக்களுக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும்,
ஏனெனில் வங்கதேசத்திலிருந்து வந்துள்ள முஸ்லீம்கள் மற்றும் இதர இனத்தவர்கள் பெரிய
அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம், இறுதி வரைவை வெளியிட ஜூன் 30ஆம் தேதியை நிர்ணயித்திருந்தது. ஆனால் அங்குள்ள வெள்ள நிலைமை, சில
மாவட்டங்களில் வேலைகளைப் பாதித்திருக்கிறது.
தேசியப் பதிவேடு
1951ஆம்
ஆண்டு குடிமக்கள் தேசியப் பதிவேடு, 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்
ஷரத்துக்களுக்கு உட்பட்டும், 2003ஆம் ஆண்டு குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும்
தேசிய அடையாள அட்டை வழங்குதல்) விதிகளுக்கு உட்பட்டும் 1971 மார்ச் 24 ஆம் தேதியை
இறுதிக் கெடு நாளாக (cut-off date-ஆக) நிர்ணயித்து இறுதிப்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. 2017 டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட முதல் வரைவு, மொத்தம்
விண்ணப்பித்திருந்த 3.29 கோடி பேரில் 1.9 கோடி பேர்களைச் சேர்த்திருந்தது.
நாட்டிலேயே அஸ்ஸாம் மாநிலம் மட்டும்தான் இன்னமும் குடிமக்கள் தேசியப் பதிவேட்டைப்
பெற வேண்டிய நிலையில் உள்ள மாநிலமாகும்.
ஆர்எஸ்எஸ்,
பாஜக மற்றும் சங் பரிவாரங்கள் அனைத்தும் குடியுரிமைச் சட்டமுன்வடிவை மொழி
அடையாளத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு, அந்த
இடத்தில் மத அடையாளத்தை முன்வைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. வங்க தேசம்
உருவானபின்னர், அஸ்ஸாமுக்கு வந்தவர்கள் குறித்த எண்ணிக்கை தொடர்பாக அதிகார பூர்வப்
பதிவேடுகளும், கடிதப்போக்குவரத்தும் இருக்கின்றன.
இந்திய
ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் அளித்துள்ள கணக்கின்படி, 1961இல் முந்தைய கிழக்கு
பாகிஸ்தானிலிருந்து அஸ்ஸாமுக்கு மொத்தம் புலம் பெயர்ந்து வந்தவர்கள், 2,20,691
ஆகும். 1966 மே 31 வரை, 2,15,794 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை
மீளவும் அவர்கள் நாட்டிற்கு அனுப்புவதற்கான அறிவிப்புகள் ஊழியஞ்செய்யப்பட்டன.
அல்லது 2,15,534 பேர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவர்களில் 1,43,438 பேர்
திரும்பிச் சென்றுவிட்டார்கள். 28,999 பேர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.
அஸ்ஸாம்
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சந்திர மோகன் பாடோவாரி, பிப்ரவரியில்
சட்டமன்றத்தில், 1985இல் அஸ்ஸாம் உடன்படிக்கை கையெழுத்தான பின்னர், 90,206 அந்நியர்கள் அடையாளம்
காணப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும், 29,783 பேர் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும்,
கடந்த 33 ஆண்டுகளில் 75 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அஸ்ஸாமில்
1,25,333 சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்நியர்கள்
அல்ல என்று அந்நியர்கள் நடுவர் மன்றத்தால் பிரகடனம் செய்யப்பட்டபின்னர்தான், மேம்படுத்தப்பட்ட குடிமக்கள் தேசியப்
பதிவேட்டில் சேர்ப்பதற்காக, விண்ணப்பிப்பதற்குத் தகுதி படைத்தவர்களாவார்கள். இவ்வாறு சந்தேகத்திற்குரியவர்கள் எனக்
கருதப்படுபவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. பட்டோவாரி சட்டமன்றத்தில் இதுவரை
2,44,144 பேர் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என்று நடுவர் மன்றத்திற்கு
அனுப்பப்பட்டிருப்பதாகவும், 1,31,034 வழக்குகள் முடிக்கப்பட்டிருப்பதாகவும்
தெரிவித்தார். மொத்தத்தில் 66,986 சந்தேக வாக்காளர்கள் இந்தியப் பிரஜைகள் என்று
காணப்பட்டிருப்பதாகவும், 20,578 பேர் அந்நியர்கள் என்று பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“1971 செப்டம்பர் 30 வரை கிழக்கு
வங்கத்திலிருந்து இந்தியாவிற்குள் வந்த அகதிகள் சம்பந்தமான புள்ளிவிவரத் தகவல்” என்று தலைப்பிட்ட ஒரு சிறுபுத்தகம் அப்போதைய மத்திய தொழிலாளர்நலம்
மற்றும் புனர்வாழ்வு அமைச்சகத்தால் வெளிக்கொணரப்பட்டது. அதில், 1947க்கும் 1971
பிப்ரவரிக்கும் இடையே அஸ்ஸாமுக்குள் ஏழு லட்சம் அகதிகள் நுழைந்ததாகக்
குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அகதிகளில் இந்தியா பிளவுண்டபின்னர், முந்தைய
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து 1947 ஆகஸ்ட் 15க்கும் 1958 மார்ச் 31க்கும் இடைப்பட்ட
காலத்தில் அஸ்ஸாமுக்குப் புலம்பெயர்ந்து
வந்த 4.87 லட்சம் மக்களும் அடங்கும். அப்போது கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற
வகுப்புக்கலவரங்களின் காரணமாக சுமார் 2.14 லட்சம் அகதிகள் 1964 ஜனவரி 1க்கும் 1971
மார்ச் 24க்கும் இடையே இம்மாநிலத்திற்குள் நுழைந்தார்கள். பின்னர் கிழக்கு
பாகிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட
அட்டூழியங்கள் காரணமாக மேலும் சுமார் 2.77 லட்சம் அகதிகள் 1971 மார்ச்சுக்கும்
1971 செப்டம்பர் 30க்கும் இடையே அஸ்ஸாமுக்குள் நுழைந்தார்கள். 1971 மார்ச்சுக்கும்
செப்டம்பர் 30க்கும் இடையே, 6.04 லட்சம் அகதிகள் மேகாலாயாவிற்குள்ளும், 13.50
லட்சம் அகதிகள் திரிபுராவிற்குள்ளும் நுழைந்தார்கள்.
எனினும்,
மத்திய அரசாங்கம், தன்னுடைய அதிகாரபூர்வ கடிதப்போக்குவரத்தின் மூலமாக, 1971 மார்ச்
25க்குப்பின்னர் வந்த அகதிகளில் பெரும்பகுதியினர் திரும்பிச் சென்று விட்டார்கள்
என்று கூறுகிறது. 1972 மே 9 அன்று “7,699 அகதிகள் மட்டும்தான் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இன்னமும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று, அரசின் கூடுதல்
செயலாளராக இருந்த பி.என்.லுத்ரா அவர்கள், 1971 மே 2-5 தேதிகளில் அஸ்ஸாம் மற்றும்
மேகாலயா மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தபோது எழுதிய தன்னுடைய
சுற்றுப்பயணக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
அஸ்ஸாமில்
அந்நியர்கள் தொடர்பாக எழுந்துள்ள அனைத்து வழக்குகளும் முடிவுக்குவரும் வரையிலும்,
அனைத்து குடிமக்களுக்கும் பிரஜா உரிமை தொடர்பான ஊகங்கள் தொடரவே செய்திடும்.
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment