Tuesday, July 31, 2018

சாமானிய மக்களை மொழி-மத அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்படும்: முகமது சலீம்




சாமானிய மக்களை மொழி-மத அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சி
முறியடிக்கப்படும்: முகமது சலீம்

புதுதில்லி, ஆக.1-
“சாமானிய மக்களை, மொழியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், எம்.பி., கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் சமீபத்தில் வெளியாகியுள்ள குடியுரிமை தேசியப்பதிவேடு பாஜகவின் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அப்பட்டமானதோர் எடுத்துக்காட்டு என்று கூறிய முகமது சலீம், “இவ்வாறு பாஜக செய்திருப்பதன் மூலமாக, ஏற்கனவே அஸ்ஸாமுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே விரிசல் கண்டிருக்கிற ஒற்றுமையுணர்வு இதனால் மேலும் மோசமாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.
இதுதொடர்பாக மக்களவையில் எதிர்ப்பினை வெளிப்படுத்திய பின்பு, முகமது சலீம், செய்தியாளர்களிடையே மேலும் கூறியதாவது:
”இதன் விளைவுகள் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. அம்மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லைகள் மற்றும் இணைய சேவைகள் மூடப்பட்டிருக்கின்றன அல்லது உன்னிப்பாக மேற்பார்வைக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியாவின் குடியுரிமை என்பது வங்காளி, இந்து, முஸ்லீம் என்கிற அடிப்படையில் ஏற்படுத்தப்படுவதில்லை.   நம்முடைய நாட்டில் இந்திய அரசமைப்புச்சட்டத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் குடியுரிமை என்பது மொழியின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ அல்லது இனத்தின் அடிப்படையிலோ அமையக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் மட்டுமே 40 லட்சம் மக்களை வெறுப்பு அரசியல் மற்றும் பிளவுவாத அரசியல் என்ற பெயர்களில் பதிவேட்டிலிருந்து நீக்கியிருப்பது விந்தையிலும் விந்தையாகும்.
அஸ்ஸாமில் நிலைமை மிகவும் பதட்டத்துடன் காணப்படுகிறது. துணை ராணுவப் படையின் 220 கம்பெனிகள்  மற்றும் போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.  அஸ்ஸாமின் குடியுரிமை தேசியப் பதிவேட்டில் அஸ்ஸாம் மொத்தம் மக்கள் தொகையினரான 3 கோடியே 29 லட்சம் பேர்களில், 2 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 668 பேர் மட்டுமே குடிமக்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ளவர்களை பதிவேட்டிலிருந்து நீக்கியிருப்பதுடன், அவர்கள் மேன்முறையீடு செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு 40 லட்சம் மக்களை நீக்கக்கூடிய அளவிற்கு வல்லமையும் உறுதியும் மற்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் உடையதுதானா குடியுரிமைக்கான தேசியப் பதிவேடு என்பதில் எனக்கு ஐயம் இருக்கிறது. இதன்பின்னணியில் பாஜக மூளையாக இருந்து செயல்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
அஸ்ஸாம் நம் நாட்டின் ஒரு பகுதிதான். அது ஒன்றும் தனி நாடல்ல. அஸ்ஸாமில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் வசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இதர மாநிலங்களில் வசிக்கக்கூடாதா? ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இன்னொரு மாநிலத்தில் வசித்தால் அவர்கள் இந்தியப் பிரஜைகள் கிடையாதா? ‘
இப்போது பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டிருப்போரில் பலர் பல நூற்றாண்டுகளாக அங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை சட்டரீதியாகக் கையாண்டிட வேண்டும். ஆனால்,  அதற்காக இவ்வாறு அவர்களின் பெயர்களையே நீக்கக்கூடாது. இது நம் அரசமைப்புச்சட்டத்திற்கு முரணானதாகும். இவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்பிட சீர்குலைவு சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் கண்டிக்கிறோம்.
அஸ்ஸாம் முழுவதும் அதிருப்தி நிலவுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அஸ்ஸாம் மாநிலக்குழு, இதர கட்சிகளுடன் கலந்துபேசி அரசின் இம்முடிவினை முறியடித்திட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.”
இவ்வாறு முகமது சலீம் கூறினார்.    
(ந.நி.)


No comments: