Wednesday, July 18, 2018

நாடாளுமன்றத்தையே அவுட்சோர்சிங் விடுவதற்கு கொண்டுசென்று விடாதீர்கள்



நாடாளுமன்றத்தையே அவுட்சோர்சிங் விடுவதற்கு கொண்டுசென்று விடாதீர்கள்.
(2017 ஆகஸ்ட் 10 அன்று சீத்தாராம் யெச்சூரி, மாநிலங்களவையில் ஆற்றிய உரை)
உங்கள் அருகே நிற்கும் ஊழியர்கள். நாங்கள் எங்கள் கைகளில் உள்ள தாளைக் காண்பித்தால், எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது, வந்து, எங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு, செல்வார்கள். மகளிர் இட ஒதுக்கீடு சட்டமுன்வடிவு இந்த அவையில் நிறைவேற்றப்பட்டபோது, மார்ஷல்கள் எந்த அளவிற்கு உதவினார்கள் என்பதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் இங்கே அரைவட்ட மேசையின்முன் அமர்ந்திருக்கிற ஊழியர்களுக்கும் தலைவணங்குகிறேன்.  இவர்களை நாம் நிருபர்கள் என அழைக்கிறோம். உலகின் தலைசிறந்த அதிவேக சுருக்கெழுத்தாளர்கள் என்று அவர்களை நான் மதிப்பிடுகிறேன். என்னுடைய உரை அடுத்தநாள் திருத்தத்திற்காக என்னிடம் வரும்போது, அதில் நான் பேசும்போது ஏதாவது தவறு செய்திருந்தால் அந்த தவறுதான் இருக்குமேயொழிய, நிருபர்களின் தவறு என்று அநேகமாக எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் மிகவும் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் மற்றும் மாநிலங்களவை ஊழியர்கள் அனைவருக்கும்  என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சமயத்தில் உங்களிடம் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஊழியர்கள் நியமனத்தை தனியாரிடம் தாரைவார்த்திடவும், அவுட்சோர்சிங் விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். அவ்வாறு நாடாளுமன்றத்தையே அவுட்சோர்சிங் விடுவதற்கு கொண்டுசென்று விடாதீர்கள். அவ்வாறு நடக்காது என்றே நம்புகிறேன். இந்த ஊழியர்கள்தான், இந்த அவை, பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானபோது, தங்கள் உயிரைப் பலி கொடுத்து, இந்தஅவையைக் காப்பாற்றியவர்கள்.  நாம் நன்கு செயல்பட அவர்கள் நமக்கு அனுமதி அளித்துள்ளார்கள். சில சமயங்களில் அதிகாலை 2 மணி வரைக்கும்கூட அவை நடந்திருக்கிறது. அவர்கள் நமக்கு உணவு அளித்திருக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப் பாதுகாத்திருக்கிறார்கள். ஊழியர்களின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று தயவுசெய்து உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  ஏனெனில் இவர்கள்தான் இந்த அவையின் முதுகெலும்பு. கண்ணுக்குத்தெரியாத வகையில் முதுகெலும்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே என் முதல் வேண்டுகோளாகும். நமக்கு வேலை செய்த அதிகாரிகளை நாம் நன்கு வைத்துக் கொள்ள வேண்டும்.



No comments: