Wednesday, July 18, 2018

மாநிலங்களவையில் 22 மொழிகளில் உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏற்பாடு




  மாநிலங்களவையில் 22 மொழிகளில்

உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏற்பாடு
புதுதில்லி, ஜூலை-
இப்போது மாநிலங்களவையில் நாட்டின் அரசமைப்புச்சட்டத்தில் எட்டாவது அட்டவணையின்கீழ் உள்ள மொழிகளில் தமிழ் உட்பட ஒருசில மொழிகளில் மட்டும்தான் உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் பேசமுடியும். இதனை நாட்டிலுள்ள 22 மொழிகளில் பேசக்கூடிய விதத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக மாநிலங்களவையில் மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 120ஆவது பிரிவின்கீழ், அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதித்திட தலைவருக்கு அதிகாரம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். இதுநாள்வரை, 17 மொழிகளில் மட்டும்தான் மொழிமாற்று ஏற்பாடுகள் இருந்துவந்தது. இப்போது டோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சந்தாலி, சிந்தி ஆகிய மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசினால், மொழிமாற்று வல்லுநர்கள் மூலம் மொழிபெயர்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மாநிலங்களவையில் 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பேசலாம். உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் பேசி இந்த ஏற்பாட்டினை ஊக்குவித்திட வேண்டும்.
ஆயினும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையாக அல்லது முன்னெச்சரிக்கையாக ஒரு வார்த்தை. இது ஒரு புது ஏற்பாடு என்பதாலும், இப்போது அமர்த்தப்பட்டுள்ள மொழிமாற்று வல்லுநர்கள், உறுப்பினர்கள் பேசுவதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு, மொழியாக்கம் செய்வதில் சிறிது காலம் பிடிக்கலாம். எனவே, இதில் சில குறைபாடுகள் இருக்கலாம். எனவே, அவர்களுக்கு இதில் சிறந்த தேர்ச்சி கிடைக்கும்வரை, இந்த ஏற்பாட்டை உறுப்பினர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு உரிய கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. டோக்ரி, உருது மற்றும் மேற்கண்ட மொழிகளில் பேச விரும்பும் உறுப்பினர்கள் முன்னதாகவே அறிவிப்பு அளித்திட வேண்டும். ஏனெனில் இவர்கள் முழுநேர மொழிமாற்று வல்லுநர்கள் கிடையாது. சிலர் மக்களவையிலிருந்து வருவார்கள். சிலர் பகுதிநேர மொழிமாற்று வல்லுநர்கள். ஏனெனில் நாடாளுமன்றம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் கூடுகிறது என்பதால், அவர்கள் பகுதிநேர மொழிமாற்று வல்லுநர்களாக அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களை நிரந்தரமாக பயன்படுத்திக்கொண்டால், அதற்கான நிதிச்சுமைகளையும் நீங்கள் தெரிந்துகொள்ளமுடியும். 
இவ்வாறு எம்.வெங்கய்யா நாயுடு கூறினார்.
(ந.நி.)

No comments: