நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது ராகுல் காந்தி பேசுகையில்
மக்களவையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்
புதுதில்லி, ஜூலை 20-
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய பாஜக அரசாங்கத்திற்கு
எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது,
பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவரைப் பேசவிடாது தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால்
மக்களவை சபாநாயகர் அவையை ஒருசில நிமிடங்களுக்க ஒத்தி வைத்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் அரசுக்கு
எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது ராகுல் காந்தி பேசியதாவது:
“மத்திய பாஜக-வினரின் ஆட்சியில் நாம்
அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். 21ஆம் நூற்றாண்டின் ஆயுதமாக,
பாஜகவினரின் ஜூம்லா என்னும் தேர்தல் வாக்குறுதிகள் என்னும் அரசியல் ஆயுதம் நம் மீது
ஏவப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிலுள்ள விவசாயிகள், தலித்துகள்,
பழங்குடியினர் மற்றும் பெண்களாவார்கள். எண்ணற்ற வாக்குறுதிகள். முதலாவது வாக்குறுதி,
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்
போடுவோம் என்றார்கள். இரண்டாவது வாக்குறுதி ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை
அளிப்போம் என்றார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? வெறும் 4 லட்சம் இளைஞர்களுக்குத்தான்
இப்போது வேலை கிடைத்திருக்கிறது.
சீனா, 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கிறது. நம்
அரசாங்கமோ வெறும் 400 இளைஞர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கிறது. பகோடா விற்பதும் வேலைதான்
என்று பிரதமர் கூறுகிறார்.
கறுப்புப்
பணத்தை ஒழிக்கப்போகிறேன் என்று கூறி, இரவு எட்டு மணிக்கு ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்று அறிவித்தார். ஏழைகள்தான் ரொக்கப்பணத்துடன்
இருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லை. இன்றையதினம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில்
வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. பிரதமரின் அறிவிப்பால் கிடைத்த பலன் இதுதான்.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடிசெய்யப்படும் என்று பிரதமர் கூறுகிறார்.
ஆனால் நிதி அமைச்சரோ விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று பின்னர் கூறுகிறார்.
பெட்ரோலின் விலைகள் உலகம் முழுதும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில்
மட்டும் அது உயர்ந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, தன்னுடைய பணக்கார நண்பர்களுக்காக
பணத்தைக் களவாடிக் கொண்டிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரியை காங்கிரஸ்
கொண்டுவந்தபோது, நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, கடுமையாக
எதிர்த்தார். இப்போது அவர்களே கொண்டுவந்திருக்கிறார்கள். பிரதமரின் ஜிஎஸ்டி ஐந்து விதமான
விதங்களில் இருக்கின்றன. வருமான வரித்துறை, சிறிய வியாபாரிகளை நோக்கித்தான் அனுப்பி
வைக்கப்படுகிறது. நமது பிரதமர் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மட்டும்தான் இருக்கிறாரோயொழிய,
சிறிய வர்த்தகர்களுக்காக இல்லை.
நாட்டிலுள்ள
ஒவ்வொருவருக்கும் பிரதமருக்கும் ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயுள்ள நெருக்கத்தை
நன்கு புரிந்துவைத்திருக்கிறார்கள். ரபேல் ஒப்பந்தம் அத்தகைய நபர்களில்
ஒருவருக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நபர் அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி
ரூபாய்கள் பயன் அடைந்திருக்கிறார். இவ்வாறு நான் கூறும்போது, அவர் (பிரதமர்) புன்னகைத்துக்கொண்டிருப்பதை
பார்க்க முடிகிறது. ஆனாலும் உள்ளுக்குள் நடுக்கம் இருப்பதும் தெரிகிறது. மேலும் இப்போது
என் கண்களை அவரால் நேராகப் பார்க்க முடியாது.
பிரதமரும்,
ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் நாட்டிற்கு பொய்யுரைத்திருக்கிறார்கள். அவர்,
பிரெஞ்சு அதிபரைச் சந்தித்ததாக பிரதமர் கூறுகிறார். ஆனால் பிரெஞ்சு அதிபரோ இந்தியாவுக்கம் பிரான்சுக்கும் ஒப்பந்தம்
எதுவும் இல்லை என்று கூறுகிறார். ரபேல் ஒப்பந்தம், எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து எடுக்கப்பட்ட
பின்னர், பிரதமருக்கு மிகவும் நெருக்கமான வர்த்தகப்
பிரமுகர்களில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியில்
இதற்கான முடிவு எடுக்கப்பட்டதா என்பதை பிரதமர் இந்த அவையில் கூறிட வேண்டும். எச்ஏஎல்
நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது? 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
பாக்கி வைத்துள்ள ஒரு வர்த்தகப்பிரமுகரிடம் ஏன் அது கொடுக்கப்பட்டது?
பிரதமர் மோடி
அவர்கள் ஆட்சிக்கு வரும்போது உங்களின் சௌக்கிதாரராக (பாதுகாவலராக) இருப்பேன் என்று
கூறினார். உண்மையில் அவர் அவர் கார்ப்பரேட்டுகளின் பங்குதாரராகத்தான் (பாகிர்தாரர்-ஆகத்தான்)
இருக்கிறார்.
இவ்வாறு ராகுல்
காந்தி பாஜக ஆட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப்
பதிவு செய்துவந்ததைத்தொடர்ந்து பாஜகவினர் அவரைப்
பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டார்கள். இதனால் மக்களவை சபாநாயகர் அவையை ஒருசில நிமிடங்களுக்கு
ஒத்திவைத்தார்.
(ந.நி.)
No comments:
Post a Comment