Thursday, July 19, 2018

ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்



ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை
மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்
புதுதில்லி, ஜூலை 19-
ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை இந்த அவை கண்டித்திட வேண்டும். அவர்கள் அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கோரினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:
இந்த அவை, ஸ்வாமி அக்னிவேஷ் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜார்கண்ட் மாநிலத்தில் பாகூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷ் பாஜகவின் யுவ மோர்ச்சா என்னும் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்களாலும், பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்களாலும், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக கறுப்புக்கொடிகள் காட்டி, முழக்கங்கள் எழுப்பி இருக்கின்றனர். அங்கிருந்து பொதுமக்கள் அவரைப் பாதுகாத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.  அவர்களின் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்தினரையும், காவல்துறையினரையும் அவர் அழைத்திருக்கிறார். ஆயினும் எவரும் அவருக்கு உதவிட முன்வரவில்லை.
இவ்வாறு ஸ்வாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டதை இந்த அவை கண்டித்திட முன்வர வேண்டும். உச்சநீதிமன்றம் இதுபோன்று குண்டர்கள், பசுப் பாதுகாப்பு என்ற பெயராலும், ஜிகாத் காதல் என்ற பெயராலும், அறநெறிக் காவல்துறை (Moral Police) என்ற பெயராலும், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதையும்,  கொலை செய்வதையும் கண்டித்திருக்கிறது. இவ்வாறு வன்முறை வெறியாட்டங்களும்,  கொலைகளும் புரிவது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.
இவற்றை இந்த அவை கண்டித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அக்னிவேஷ் அவர்களைத் தாக்கிய பாஜக யுவ மோர்ச்சா அமைப்பினர், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கோரினார்.
(ந.நி.)

No comments: