Sunday, July 8, 2018

நாடு முழுதும் “பிள்ளை பிடிப்பவர்கள்” என்று சொல்லி அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணம், வாட்சப் அல்ல, மதவெறியர்கள்தான் அதனைச் செய்கிறார்கள்::பிரபிர் புர்கயஸ்தா




பிள்ளை பிடிப்பவர்கள்என்று சொல்லி, வதந்தியைப் பரப்பி நாடு முழுதும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது இப்போது அதிகரித்திருக்கிறது. நாள்தோறும் நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் இவ்வாறு கொடூர நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நடைபெறுவதற்கு, வாட்சப்பில் வரும் வதந்திகள் காரணமல்ல. வாட்சப் வதந்திகள்தான் காரணம் என்று மத்திய அரசாங்கம் நம்மை நம்ப வைப்பதற்கு முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது. முகநூல் மற்றும் வாட்சப் சமூக வலைத்தளங்களை நடத்திடுவோரிடம் இத்தகைய வதந்திகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக அவர்கள் செவிமடுப்பார்கள், தடுத்தும் விடுவார்கள். ஆனால் அரசாங்கத்தின் நோக்கம்  அதுவல்ல. தாங்கள் அளித்திடும் செய்திகளைத் தவிர வேறு எந்தவிதமான செய்திகளும் மக்களிடம் செல்லக்கூடாது என்பதுதான் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் நோக்கமாகும். அதற்கு முகநூல், டிவிட்டர் மற்றும் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் எதிரானவைகளாக இருக்கின்றன. எனவே அவற்றின் மீது அவதூறை அள்ளிவீசி அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. இதன் அடிப்படையிலேயே அவற்றின் மீது தணிக்கைமுறையைக் கொண்டுவரவும் நடவடிக்கைகள் எடுத்திட பரிசீலனைகள் செய்துகொண்டிருக்கிறது.
உண்மையில் மக்களிடம் இருந்து மோடி அரசாங்கம் எதனை மறைத்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுதும் அப்பாவி மக்களை பிள்ளைபிடிப்பவர்கள் என்று வதந்தியைப் பரப்புகிறவர்கள், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மதவெறியர்களாவர். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் நன்கு திட்டமிட்டு கலவரங்களை உருவாக்கி,  மதச் சிறுபான்மையினரைத்  தாக்குவதோடு, பகுத்தறிவாளர்களுக்கு எதிராகவும் வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். பசுவைக் கொல்கிறார்கள் என்று வதந்தியைப் பரப்பி, அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். இவர்களின் இத்தகைய இழிசெயல்களுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசாங்கங்களும், அவர்களுடைய போலீஸ் எந்திரமும் உடந்தையாக இருந்து வருகின்றன. சில இடங்களில் பசுவை இறைச்சிக்காக வெட்டுபவர்களுக்கும், அவர்களைக் கொல்பவர்களுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்கின்றபோதிலும், பல இடங்களில் இந்துத்துவா வெறியர்களால் தாக்குதல்களுக்கு ஆளாகித் தப்பிப்பிழைத்திருப்பவர்கள் மீதும், கொலைசெய்தவர்களின் குடும்பத்தார் மீதும் மட்டுமே வழக்கு தொடுக்கிறார்கள். அவர்களைத் தாக்குபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து சுதந்திரமாக உலவ விட்டுவிடுகிறார்கள். இன்றைக்கும்கூட, அக்லாக்கின் குடும்பத்தாருக்கு எதிராக தடைசெய்யப்பட்ட  மாட்டுக்கறியை வைத்திருந்தார்கள் என்று கூறி வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக சாட்சியங்களையும் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு பாஜக அரசாங்கங்களே மதச்சிறுபான்மையினருக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தை, இந்துத்துவா வெறியர்களுடன் இணைந்துநின்று கள்ளத்தனமாகச் செய்துகொண்டிருப்பதன் காரணமாக, இவ்வாறு கொலைபாதக செயல்களில் ஈடுபடும் குண்டர்கள், தாங்கள் எவ்விதமான அயோக்கியத்தனங்களைச் செய்தாலும், தங்களுக்கு அரசும் காவல்துறையும் உறுதுணையாக நிற்கும் என்ற தைர்யத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு, அடிப்படை வாட்சப்பில் வரும் வதந்திகள் அல்ல, மாறாக, இந்துத்துவா வெறியர்களுக்கும், பாஜக ஆட்சியாளர்களுக்கும் இடையேயுள்ள கள்ளத்தனமான பிணைப்பே காரணமாகும்.
வதந்திகள் ஒன்றும் புதிதல்ல. எப்போதுமே இதுபோன்ற வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இதற்குமுன்பெல்லாம் இதுபோன்ற வதந்திகள் சமூகத்தில் பெரிய அளவிற்கு அதிர்வலையை ஏற்படுத்தியதில்லை. அதுபோன்று வதந்திகள் வெளிவரும்போது, அவை குறித்து விசாரித்து சரிசெய்யப்பட்டுவிடும். வதந்திகள் வரும்போது சிலர் அவற்றை எளிதாக நம்பிவிடுவார்கள். பலர் அவற்றை அப்படியே முழுதாக நம்பிவிடமாட்டார்கள்.
வதந்திகள் எப்போது ஆபத்தானவைகளாக மாறுகின்றன? ஏற்கனவே சமூகம் வெறுப்புப் பிரச்சாரத்தாலும், பதற்ற நிலைமைகளாலும் பிளவுண்டு இருக்கும்போதுதான் அவை ஆபத்தானவைகளாக மாறுகின்றன. இத்தகைய நிலைமைகளில்தான் வதந்திகள் செழித்தோங்குகின்றன, அவற்றின்மூலம் மிகவும் எளிதாக கலவரங்களையும் உருவாக்கிட முடிகின்றன. இன்றையதினம் அப்பாவி முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக கொலைகள் மற்றும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்றால் அதற்கு பாஜக அரசாங்கங்கள் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்திட மிகவும் துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான் காரணமாகும். இத்தகைய வெறுப்புப் பிரச்சார சூழல் நிலவும் நிலையில், வதந்திகள் மிக எளிதாகப் பற்றிக்கொண்டு, வன்முறை வெறியாட்டங்களுக்கு இட்டுச் செல்கின்றன.
இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படும்போது, சமூக வலைத்தளங்களுக்கு அதில் பங்கில்லை என்று சொல்லமுடியுமா? சமூக வலைத்தளங்கள், வாட்சப், இணையதளங்கள் ஆகியவற்றுக்கிடையில் எவை எவை உண்மைகளைச் சொல்கின்றன, எவை எவை போலியானவை என்று பாகுபடுத்திப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும். முகநூல் மற்றும் ட்விட்டர் போன்றவை பொதுவானவைகளாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், குழுக்களாகச் செயல்படுபவை தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரண்டையும் கையாளும் சட்டங்கள் வெவ்வேறானவைகளாகும்.
முகநூல் மற்றும் ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கும் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இருப்பதுபோன்ற சட்டரீதியான பொறுப்புகள் உண்டு. இவர்கள் பக்கத்தில் இவர்கள் வெளியிடும் கட்டுரை அல்லது செய்திகள் நாட்டிலுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு உட்பட்டவைகளேயாகும்.
முகநூல் அல்லது ட்விட்டரில் வரும் சங்கதிகளை நாம் மறுபிரசுரம் செய்யும்போது, நமக்கு சட்டரீதியாக பொறுப்பு என்ன? தற்போதுள்ள சட்டக் கருத்து என்னவெனில், அதிலுள்ள கருத்துக்களை நாம் மறுபிரசுரம் செய்தால், அது எவரையேனும் தாக்கக்கூடிய ஒன்றாக இருக்குமானால், அவர் நம்மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திட முடியும் என்பதேயாகும்.
ஆனால் இதற்கும் வாட்சப்பிற்கும் வித்தியாசம் உண்டு. வாட்சப் மேடை ஒரு பொது மேடை அல்ல. அதனைத் தனியார் மேடையாகத்தான் கருதிட வேண்டும். அதில் வரும் செய்தி, தனிப்பட்ட ஒருவருக்கு எழுதிய கடிதம் போன்றதுதான். எனவே குழுக்கள் மூலம் அனுப்பப்படும் செய்திகள், குழுக்கள் பரிமாற்றம் போன்றவையே. உதாரணமாக இதேபோன்று கூகூள் அல்லது யாஹூ மின் அஞ்சல் குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய குழுக்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுமானால், நிச்சயமாக அவற்றிற்கு எதிராக, நாட்டிலுள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுத்திட முடியும். எனவே அவை நாட்டிலுள்ள சட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். ஆனால் இவற்றுக்காகப் புதிதாக சட்டங்கள் எதுவும் தேவையில்லை. நாட்டிலுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் நடப்பிலுள்ள சட்டங்களே போதுமானவைகளாகும். புதிய தொழில்நுட்பம் எதுவும்,  அது தொலைபேசியாக இருந்தாலும் சரி அல்லது இணையதளமாக இருந்தாலும் சரி, நம் சட்டங்களின் அடிப்படை நோக்கத்தை மாற்றிடவில்லை.
சுருக்கமாகச் சொல்வதென்றால், வாட்சப் குழு ஏதேனும் வன்முறையைத் தூண்டும் விதத்தில், கலவரங்களை உருவாக்கும் விதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்றால், அது குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட  வேண்டியது அவசியம். அவற்றில் உண்மை இருக்கும் பட்சத்தில், அதனை வெளியிட்ட நபர் அல்லது நபர்கள் மீது கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இப்போது திடீரென்று ஏன் நாட்டில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களுடன் வாட்சப் இணைத்துப் பேசப்படுகிறது? பாஜக ஆளும் மாநிலங்களில், வகுப்புக் கலவரங்களிலும், வன்முறை வெறியாட்டங்களிலும் ஈடுபடும் குண்டர்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். தலித்துகள் தாக்கப்பட்டால், தாக்கியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் காவல்துறையினர் எடுப்பதில்லை.  அரசு எந்திரம் வன்முறையாளர்களின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கீழ் இது மிகவும் மோசமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கலவரங்களில் ஈடுபட்ட கிரிமினல்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன.   எனவே  நாட்டில் பிரச்சனைகள் இருக்கிறது என்றால் அதற்குப் புதிய தொழில்நுட்பங்கள் காரணமல்ல. மாறாக, சட்டம் ஒழுங்கைப் பேணவேண்டியவர்கள் அவ்வாறு பேணுவதற்குப் பதிலாக,  வன்முறையாளர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்படுவதுதான் காரணமாகும்.
தற்போதுள்ள சட்டங்களின்படி புலனாய்வை மேற்கொள்வதற்கு வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்று வாதிடுவதெல்லாம், முற்றிலும் பாசாங்குத்தனமான, மோசடியான ஒன்றாகும். புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக செய்திகள் மக்களிடம் வேகமாகச் சென்றடைகின்றன் என்பது உண்மைதான். அதேபோன்று உண்மைகளைக் கண்டறிவது என்பதையும் புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக மிகவும் விரைவாகச் செய்திட முடியும். இப்போது கிரிமினல் வழக்குகள் பலவற்றில் வீடியோ சாட்சியம் உண்மையை வெளிக்கொணர வெகுவாகப்பயன்படுத்தப்படுகின்றன.
மாபெரும் வன்முறைக் கும்பல், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும்போது, புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக, போலீசாரால் எதுவுமே செய்யமுடியவில்லை என்று ஒருவர் வாதிடுவதை ஏற்கலாமா? ஏன் அவ்வாறு வன்முறையாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கையைக் கட்டிக்கொண்டு போலீசார் இருந்திட வேண்டும்? வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் விரிவாக வலம்வந்தபோதும்கூட, அவ்வாறு வெறியாட்டங்களில் ஈடுபட்டக் கயவர்கள் கைதுசெய்யப்படாது சுதந்திரமாகச் சுற்றித்திரிவதற்கான காரணத்தை பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளக்க முடியுமா? அரிதிலும் அரிதாக ஒருசிலர்தான் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பல சமயங்களில்  இவ்வாறு வன்முறையாளர்களால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தாரின் மீதும்தான் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவே, இது ஏன்?
நாடு முழுதும் மதச்சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டு,  அவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு பாஜக ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுதான் மிக முக்கிய காரணங்களாகும். இதேபோன்று பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும்  மதவெறியர்களின் மறைமுக சூழ்ச்சியே காரணமாகும். எனவே, நம் நாட்டில் சட்டங்கள் மோசமானவை அல்ல. மாறாக, சட்டத்தை நிறைவேற்ற வேண்டியவர்களும், அவர்களுக்குக் கீழ் வேலை செய்திடும் காவல்துறையினரும் மோசமாக இருப்பதே காரணங்களாகும்.
(தமிழில்: ச. வீரமணி)

1 comment:

Avargal Unmaigal said...

இதனை நான் எனது வலைத்தளத்தில் மறுபதிவு செய்ய விரும்ம்புகிறேன் அனுமதி கிடைக்குமா?