Thursday, July 26, 2018

குண்டர்கள் கொலை செய்திடும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தை முறியடிப்போம்: சீத்தாராம் யெச்சூரி



குண்டர்கள் கொலை செய்திடும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தை முறியடிப்போம்
-சீத்தாராம் யெச்சூரி
நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்ட நெடிய உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அதே ஜூன் 20 அன்றுதான் ரக்பார் என்கிற அக்பர் கான், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பசுக் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு, குண்டர்களால் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தார்.  
பாஜக அரசாங்கங்களின் ஆட்சியில் புற்றீசல்கள் போல் முளைத்துக்கொண்டிருக்கும் தனியார் ராணுவங்கள் இவ்வாறு கொலைகள் புரிவது தொடர்பாக கவலை தெரிவித்து, பிரதமர், இப்போதுவரை, உதட்டளவில்கூட எதுவும் கூறிடவில்லை. பாஜகவின் கீழ் உள்ள அரசாங்கங்கள் ‘பசுப்பாதுகாப்பு’(‘cow protection’), ‘அறநெறிப் போலீஸ்’(‘moral policing’), ‘புனிதக் காதல்’(‘love jihad’), ‘பிள்ளை பிடிப்பவர்கள்’(‘child lifters’), முதலான பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டர் குழுக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருவது  தொடர்கின்றன.  2017 ஏப்ரலுக்குப் பின்னர் ஆல்வார் மாவட்டத்தில் குண்டர்கள் கொலை செய்திடும்  கொடூரம் மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது. பெஹுலுகான் முதலாவதாகவும், அதனை அடுத்து உமர் கானும், இப்போது அக்பார் கானும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெஹுலுகானும் அக்பர் கானும் கொல்லப்படுவதற்கு இடையே குறைந்தபட்சம் 46 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  குறைந்தபட்சம் 12 மாநிலங்களில்  பிரதானமாக முஸ்லீம்களும், தலித்துகளும் இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள கடும் விமர்சனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நம்பிக்கையில்லாத்தீர்மானத்திற்குப் பதிலளிக்கையில் பிரதமர், நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே, “குண்டர்கள் கொலைசெய்வதற்கு” எதிராக புதிதாக ஓர் ஒருங்கிணைந்த சட்டத்தைக் கொண்டுவருவார் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். உச்சநீதிமன்றம் இப்பிரச்சனை தொடர்பாக, “மதச்சார்பின்மை மாண்புகளைப் பாதுகாப்பது மற்றும் கும்பல் குண்டர்களின் ஆட்சியைத் தடுத்து நிறுத்துவது ஆகியவற்றிற்கு ஏதுவாக சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்துவதை உத்தரவாதம் செய்வது அரசுகளின் கடமையாகும்,” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எவ்விதமான  அறிவிப்பும் அரசிடமிருந்து வரவில்லை. அதேபோன்று, ஜார்கண்ட் மாநிலத்தில்  மிகவும் கொடூரமானமுறையில் ஸ்வாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு எதுவுமே செய்யாது, இப்போது ஜூலை 23 அன்று மோடி அரசாங்கம் இது தொடர்பாக புதியதொரு சட்டத்தை வடிவமைப்பதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இவ்விஷயத்தை ஆறப் போடுவதற்காகவும், உச்சநீதிமன்றத்தின் கட்டளையை ஒன்றுமில்லாததாக ஆக்குவதற்காகவும்தான் அரசாங்கம் இவ்வாறு அமைச்சர்கள் குழுவை இப்போது அமைத்திருக்கிறது. 
அருவருப்பான விளக்கங்கள்
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு மத்திய  அமைச்சர், “பிரதமர் மோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கின் காரணமாக” குண்டர்கள் கொலைகள் என்னும் “ஒரு சதி” உருவாக்கப்படுவதாக மிகவும் இழிவானமுறையில் பேசியிருக்கிறார். உள்ளூர் பாஜக எம்எல்ஏ,  பசுக் கடத்தல் அல்லது பசுவை இறைச்சிக்காக வெட்டுதல் போன்ற செயல்களில் எவர் ஈடுபட்டாலும்  அவர் கொல்லப்படுவார் என்று சென்ற டிசம்பரில் எச்சரித்திருந்ததைப் பார்த்தோம். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவதாக, பொய்யாகவே கூறப்பட்டாலும், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கூறுவதுடன் இவரது கூற்றை இணைத்துப் பார்க்க வேண்டும்.  
இப்போது ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்து மிகவும் ஆட்சேபணைக்குரிய விளக்கம் வந்திருக்கிறது. அதன் முன்னணி செய்தித்தொடர்பாளரான இந்த்ரேஷ் குமார், ”மக்கள் மாட்டிறைச்சியை உண்ணவில்லை என்றால், குண்டர்கள் மூலமாகக் கொலை செய்யப்படுவது நிறுத்தப்படும்,” என்று அறிவித்திருக்கிறார். இவ்வாறெல்லாம் கூறுவதென்பது, அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்திட்ட உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறும் செயல் என்பதைத்தவிர வேறெதுவும் இல்லை. இதன்னியில், “பிள்ளை பிடிப்பவர்கள்”, “புனிதக் காதல்” என்ற பெயர்களின்கீழ் கொல்லப்படுவது குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரதமர் மவுனம் அனுசரிப்பது அவர் எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட அதிகமாகவே அர்த்தம் அளிக்கிறது. பிரதமர் மவுனம் அனுசரிக்கிறார் என்பது, இயற்கையாகவே, முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும்  இத்தகைய இழிசெயல்களுக்கு அரசாங்கம் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது என்றே அர்த்தமாகும்.
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதற்கு மிகச்சரியான உதாரணம்
இந்துத்துவா வெறியர்களில் ஒரு பிரிவு இவ்வாறு கொலைபாதக செயல்களில் ஈடுபடும் தனியார் ராணுவத்தினருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதும், அவர்களைப் போற்றிப் புகழ்வதும் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், மற்றொரு பிரிவு,  இவ்வாறு கொலைசெய்கிறவர்கள் சம்பவ சமயத்தில் மக்களால் பிடிக்கப்பட்டு,  அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டப்பட்டால்,  இத்தகைய நபர்களுடன் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்ற மறுப்பதும் தொடர்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில், இத்தகைய கிரிமினல்களுக்கு மத்திய அமைச்சர் ஒருவர்,  மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் அதே சமயத்தில், இதுபோன்ற மறுப்பு அறிக்கைகளும் வருகின்றன. ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் அமைப்புகள்  அனைத்தும் இத்தகைய கிரிமினல்களைப் பாதுகாப்பதுடன், சமயங்களில் அந்தக் கிரிமினல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதும் பார்த்துக் கொள்கின்றனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவாவில் மிகவும் பயங்கரமான முறையில் ஒரு சிறுமியைக் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கயவர்களைப் பாதுகாத்திடவும், அக்கிரிமினல்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தடுத்திடவும், உள்ளூர் பாஜக தலைவர்களும், வழக்குரைஞர்களும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். பெஹுலுகானைக் கொலை செய்தவர்கள் குறித்து மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும்கூட அவர்கள் கைது செய்யப்படாது சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஷே கூட சில இடங்களில் போற்றிப் பாராட்டப்பட்டு, மாபெரும் “ஹீரோ”வாக கும்பிடப்பட்டிருக்கிறான். எனினும், நாதுராம் கோட்ஷே, மகாத்மா காந்தியைச் சுட்டபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் இல்லை என்றுதான் ஆர்எஸ்எஸ் கூறிக்கொண்டிருக்கிறது. இதனை நாதுராம் கோட்ஷேயின் சகோதரர் கடுமையாக மறுத்துவருகிறார்.  நாதுராம் கோட்ஷேயின் சகோதரரான கோபால் கோட்ஷே, ஓர் ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில்தான் இருந்தோம். நாதுராம், தத்தரேயா, நான் மற்றும் கோவிந்த். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-இல் வளர்ந்ததுதான் அதிகம் என்று நீங்கள் கூற முடியும். அது எங்களுக்கு ஒரு குடும்பம் போன்றது.  நாதுராம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஓர் அறிவுஜீவியாக (intellectual worker) மாறியிருந்தார். அவருடைய அறிக்கையில், தான் ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு விலகிவிட்டதாகக் கூறியிருக்கிறார். காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோல்வால்கரும், ஆர்எஸ்எஸ்-உம் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொண்டதால், அவர் அவ்வாறு கூறியிருந்தார். ஆனாலும் அவர் ஆர்எஸ்எஸ்-ஐவிட்டு விலகிடவில்லை. (ஃப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994). ஒருவர் தற்சமயம் ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல பிரச்சனை.   இவ்வாறு வன்முறை தீவிரவாதத்தை மேம்படுத்தக்கூடிய, விஷத்தைக் கக்கும் தத்துவார்த்தக் கொள்கையை ஆர்எஸ்எஸ் இயக்கமும், அதன்கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளும்  தன்னகத்தே கொண்டு, அதனை ஊட்டி வளர்த்தனவா, இல்லையா  என்பதேயாகும்.
தீவிரவாதப் பயிற்சி – பரம்பரை பரம்பரையாகவே அளிக்கப்படுகிறது
ஆர்எஸ்எஸ், இந்துக்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளித்து வருவதற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. “இந்துத்துவா”  முழக்கத்தை உருவாக்கிய நபர், வி.டி. சாவர்க்கர்தான். இந்துத்துவா என்பதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்றும், இந்துக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான ஓர்  அரசியல் திட்டம்தான் என்றும் இதில் அவர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இக்குறிக்கோளை எய்துவதற்கு அவர் முன்வைத்த முழக்கம்,அனைத்து அரசியலையும் இந்துமயமாக்கு, இந்துக்களை ராணுவமயமாக்கு” (Hinduise all politics and militarise Hindudom) என்பதாகும். இதில் உத்வேகம் அடைந்த, ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் ஹெக்டேவாரின் மூளையான, டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணமானார். இவர்களுடைய சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. இத்தாலிய பாசிசம் எப்படித் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கிறது என்பதை, மிகவும் வானளாவப் புகழ்ந்து அவர் தன்னுடைய மார்ச் 20ஆம் தேதிய நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.  பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்பியபின்னர், டாக்டர் மூஞ்சே 1935இல் நாசிக்கில் மத்திய இந்து மிலிட்டரி கல்வி சொசைட்டி என்பதை நிறுவினார்.  இதுதான் 1937இல் நிறுவப்பட்ட, இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்துவருவதாகத் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருவான கோல்வால்கர், 1939இல், நாசி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும், ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப்பினையாகும்,” என்று கூறியிருக்கிறார். இதன் பின்னர் மிகவும் காலம் கடந்து, 1970இல்தான், அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப்படுத்தப்பட  வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,” என்று கூறுகிறார்.
வகுப்புவாதமும், அடிப்படைவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பவை. ஆர்எஸ்எஸ், தன்னுடைய குறிக்கோளை எய்துவதற்காக, “அடக்குமுறை மூலமாக தங்களுக்கு எதிரானவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக,” அது அளித்திடும் மிலிட்டரி பயிற்சியின்போது, வெறுப்பு, வன்முறை மற்றும் பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஏற்றவிதத்தில் நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. இது, பல சமயங்களில், வகுப்புக்கலவரங்களாக வெடிப்பதற்கு இட்டுச் செல்கின்றன.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற வகுப்புக்கலவரங்கள் தொடர்பாக ஒவ்வொரு நீதித்துறை விசாரணை அறிக்கைகளும் – 1969இல் அகமதாபாத்தில் நடைபெற்ற கலவரங்களில் ஆரம்பித்து, 1970இல் நடைபெற்ற பிவண்டி, ஜல்கான், மஹாத் கலவரங்கள் வரை, 1971 டெல்லிச்சேரி கலவரங்கள், 1979இல் நடைபெற்ற ஜாம்ஷெட்பூர் கலவரங்கள், 1982இல் நடைபெற்ற கன்னியாகுமரி கலவரங்கள் குறித்த விசாரணை அறிக்கைகளும்  மற்றும் 1992-93இல் நடைபெற்ற மும்பை கலவரங்கள் தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையும், மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2002 குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளும் – என அனைத்து அறிக்கைகளுமே ஆர்எஸ்எஸ் என்று பெயரைக் குறிப்பிட்டு, அதுதான் சிறுபான்மையினருக்கு எதிராக பதட்டத்தைக் கொளுத்திப்போட்டு, மிகப்பெரிதாக எரியச்செய்து, சிறுபான்மையினருக்கு எதிராக குண்டர்களை அழித்தொழிக்கும் செயல்களில் ஈடுபட வைத்தது என்று குறிப்பிட்டிருக்கின்றன. இந்த ஆணையங்கள் அனைத்துமே நீதித்துறையின் உயர் நிலையில் உள்ள நீதிபதிகளால் தலைமை தாங்கப்பட்டவை என்பதையும், அவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் என்பதையும், எனவே இதில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கினார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.   
வன்முறைக் கலாச்சாரம்
இந்த சமயத்தில் இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை  அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் என்ன கூறினார் என்பதை நினைவு கூர்வது அவசியம். ஏனெனில் அவரை ஆர்எஸ்எஸ்/பாஜக பேர்வழிகள் இன்றையதினம் அடிக்கடி (தவறாக) மேற்கோள் காட்டுவதைப் பார்க்கிறோம். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடைசெய்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை கூறுவதாவது: “ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் கொண்டிருக்கும் வன்முறைக் கலாச்சாரத்தின் கீழ் மேற்கொண்டுவரும்  ஆட்சேபகரமான மற்றும் தீங்கு விளைவிக்கத்தக்க நடவடிக்கைகள் பலரைக் காவு கொண்டிருக்கிறது. இதில் சமீபத்தில் மிகவும் மோசமானமுறையில் பலியாகி இருப்பது நம் காந்திஜியாகும்.” இவ்வாறு 1948 பிப்ரவரி 4 அன்று சர்தார் பட்டேல் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அன்றையதினம் அவர் குறிப்பிட்ட அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. தனியார் ராணுவத்தினரின் வன்முறைக் கலாச்சாரத்தின்கீழ் நாட்டின் சூழ்நிலை மிகவும் தரம் தாழ்ந்து சென்றுகொண்டிருக்கிறது.  அன்றையதினம் ஹிட்லரும், முசோலினியும் முறையே தங்களுடைய கருப்பு நிறச் சட்டையினர் மற்றும் பழுப்புநிறச் சட்டையினர் மூலமாக உயர்த்திப்பிடித்த பாசிஸ்ட் குண்டர்கள் படை மேற்கொண்டதைப்போன்ற கொலைபாதக செயல்களை, இன்றையதினம் ஆர்எஸ்எஸ் தன்னுடைய தனியார் ராணுவத்தினர் மூலமாக செய்து கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட்  ‘இந்து ராஷ்ட்ரத்தை’ அமைத்திட, இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அமைந்துள்ள மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசை மாற்ற வேண்டும் என்று கோருகிறது. அதற்காகத்தான் இத்தகைய வன்முறை, பயங்கரவாத மற்றும் அராஜக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.  ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக இக்குறிக்கோளை எய்திடத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு இவர்களிடமிருந்து வந்திருக்கிற ஆபத்து முறியடிக்கப்பட்டாக வேண்டும். நாளையதினம் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்கிட வேண்டுமானால்,  இவர்களின் பிடியிலிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும். இவர்களின் இழிசெயல்களைத் தடுத்து நிறுத்திட நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பற்றி நிற்கும், நாட்டிலுள்ள தேசபக்தர்கள் அனைவரின் ஒற்றுமை அவசியமாகும்.
(தமிழில்: ச. வீரமணி)


No comments: