நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்
நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாலை மோட்டார் வாகனத் திருத்தச்
சட்டமுன்வடிவின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, டி.கே.எஸ்.
இளங்கோவன் (திமுக) பேசியதாவது: இந்தச் சட்டமுன்வடிவைக் கடுமையாக நாங்கள்
எதிர்க்கிறோம். ஏனெனில் இது மாநிலஅரசுகளின் அதிகாரங்களின் கீழ் இயங்கும் பொதுப்
போக்குவரத்துக் கழகங்களையை ஒழித்துக்கட்டிவிடும். போக்குவரத்துகளில் விமானப்
போக்குவரத்து தற்சமயம் மத்திய அரசிடம் இருக்கிறது. கடல் போக்குவரத்தும் மத்திய
அரசிடம் இருக்கிறது. ரயில்வே போக்குவரத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. சாலைப்
போக்குவரத்துமட்டும்தான் மாநில அரசுகளிடம் இருக்கிறது. இப்போது இந்தச்சட்டமுன்வடிவின்மூலம்
அதுவும் பறிக்கப்படுகிறது. மாநில அரசின் அதிகாரங்களைப் பறித்து தனியார்
நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறீர்கள். இது இந்தச் சட்டமுன்வடிவில் காணப்படும் மிகவும்
நகைக்கத்தக்க அம்சமாகும்.
இதுதான் இந்த அவையில்
நடந்துகொண்டிருக்கம் மிகப் பெரிய விபத்தாகும். மாநில அரசுகள் இதன்மூலம் முடமாக்கிட
மத்திய அரசு முன்வந்திருக்கிறது. பாஜக அரசாங்கத்தின் ஒரேயொரு நிகழ்ச்சிநிரல்,
மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றன்பின்ஒன்றாகப் பறிப்பது என்பதுதான். அந்த
அடிப்படையில் இப்போது இந்தச் சட்டமுன்வடிவையும் கொண்டுவந்திருக்கிறது. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.
நாட்டிலேயே முதன்முறையாக 1969இல்
தமிழ்நாட்டில்தான் சாலைப் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது. எங்கள் கட்சியின்
தலைவர் டாக்டர் கலைஞர் மாநிலப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது இதனை
மேற்கொண்டார். அதன்பின்னர் தமிழகத்தின் அனைத்து முனைகளும் சாலைகளால்
இணைக்கப்பட்டன., இப்போது போட்டி காரணமாக தனியார் பேருந்துகளும் அதிக அளவில் ஓடுகின்றன. இந்தச் சட்டமுன்வடிவு
நிறைவேறிவிட்டால் இப்போதுள்ள போக்குவரத்தில் பாதி குறைந்துவிடும். மக்கள் மீண்டும்
கட்டைவண்டியில் போகவேண்டிய நிலைமை ஏற்படும்.
இந்தச்சட்டமுன்வடிவின் மூலமாக மாநில
அரசுகள் வசூலிக்கும் வரி வருவாயை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி, தனியார்
நிறுவனங்களிடம் ஒப்படைத்திட மத்திய அரசு முன்வந்திருக்கிறது. இது ஏன்? என்னால்
புரிந்துகொள்ள முடியவில்லை. இது மாநிலங்களைத் தாக்கும் விபத்து மட்டுமல்ல, இந்திய
அரசமைப்புச்சட்டத்தையும் தாக்கும் ஒரு சட்டமுன்வடிவாகும். எனவே இந்தச்
சட்டமுன்வடிவானது இவர்கள் சொல்வதுபோல சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காகக்
கொண்டுவரப்படவில்லை. மாறாக, மாறாக மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காகவே
கொண்டுவரப்படுகிறது. எனவே இது அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது,
கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது.”
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன்
பேசினார்.
No comments:
Post a Comment