மாநிலங்களைவைத்
தலைவர் என்பவர் ஒரு நடுவர்தான்.
அவர் ஏதேனும்
ஒரு பக்கத்தில் சேர்ந்துகொண்டு விளையாடுபவர் அல்ல.
குடியரசு
முன்னாள் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி பேட்டி
[என்னைக்
கேள்வி கேட்க என்ன தைரியம்? (Dare I Question?) என்கிற
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி அவர்களுடைய புத்தகத்தை வெளியிடும் சமயத்தில்
தி இந்து நாளிதழின் செய்தியாளர்கள் அமித்
பரூவா மற்றும் சந்தீப் புகான் ஆகியோர் அவருடன்
இந்தியாவின் நிறுவனங்கள் பற்றியும் அவற்றின் மாண்புகள் அரிக்கப்பட்டுவருவது குறித்தும்
மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் மேற்கொண்ட
பேட்டியின் சாராம்சங்கள் சிலவற்றை இன்றைய (16/7/18)தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அவை வருமாறு]
கேள்வி:
குடியரசுத் துணைத்தலைவராக இருந்த நீங்கள், இந்தியா என்பதை எப்படி வரையறுப்பது என்பது
குறித்து சில விமர்சிக்கத்தக்க கருத்துக்களைக் கொண்டிருந்தீர்கள். இந்தியா என்பது குறித்து
உங்களது சிந்தனை என்ன?
ஹமீத் அன்சாரி: இந்தியா என்பது அனைத்துத்தரப்பினரையும்
உள்ளடக்கிய ஒன்றாக, கடந்த எழுபது
ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. அவ்வாறு இருந்துவந்த இந்தியா என்னும் சிந்தனைதான்
என்னுடைய சிந்தனையுமாகும். நாம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பெற்றிருக்கிறோம்.
இந்த சமூகம், அரசமைப்புச்சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. மாறாக பல்லாயிரம் ஆண்டுகளாக
அது இருந்துவருகிறது. அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய மேதைகள், அவ்வாறு சமூகத்தில்
இருந்து வந்த எதார்த்த நிலைமையை அப்படியே எடுத்துக்கொண்டு, அதற்கு வடிவம் கொடுக்கும்
விதத்திலும், அதில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் ஆசை அபிலாசைகளுக்கு ஏற்பவும் ஒரு
கட்டமைப்பை உருவாக்கினார்கள்.
கேள்வி:
உங்கள் புத்தகத்தில், நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், அறிவியல் மனப்பான்மையையும்
மேம்படுத்தவேண்டிய பணிகள், மிகவும் இரக்கமற்றமுறையில் சவாலாகிக் கொண்டிருக்கிறது என்று
கூறியிருக்கிறீர்களே…?
ஹமீத் அன்சாரி:
நமக்கு முழுமையாக ஒரு புதிய சித்தாந்தம் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. நம்முடைய சித்தாந்தம்
என்ன? அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் அது இருக்கிறது. நம்முடைய பன்முகக் கலாச்சாரத்தின்
சிந்தனையையும், மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த
வேண்டிய முறையையும், மதவெறியை நிராகரிக்க வேண்டிய அவசியத்தையும் அது முன்வைக்கிறது.
அதுதான் நம்முடைய சித்தாந்தம். கடந்த எழுபது ஆண்டு காலத்தில் நம்மிடையே இருந்த எந்த
அரசியல் தலைவரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இதைத்தான் அவர்கள் கூறி வந்தார்கள்.
ஆனால், அது இப்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருந்துவந்த நம்
சமூகக்கட்டமைப்பு இன்றையதினம் அரித்து வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கேள்வி:
அடல் பிகாரி வாஜ்பாயி, நீங்கள் கூறும் நேருவின் சிந்தனையோட்டத்துடன் இருந்த பிரதமர்களின்
அணிவரிசையில்தான் அப்போது இருந்தார் என்று நீங்கள் கூறுகிறீர்களா?
ஹமீத் அன்சாரி:
இவ்வாறு ஒரு பிரதமரையோ அல்லது வேறொருவரையோ விமர்சிப்பது நேர்மையாகாது. ஆனால் நிச்சயமாக
அவர் இந்தியாவை இப்போது இருப்பவரைவிட சிறப்பாகத்தான் புரிந்து வைத்திருந்தார்.
கேள்வி:
நீங்கள் இரண்டு அரசாங்கத்தையும் பார்த்திருக்கிறீர்கள். 2014இல் ஏற்படுத்தப்பட்டுள்ள
பாஜக அரசாங்கத்தை, முன்பிருந்த வாஜ்பாயி அரசாங்கத்துடன் எப்படி ஒப்பிடுகிறீர்கள்?
ஹமீத் அன்சாரி:
அந்த அளவிற்குத் தெளிவாகத் தெரியக்கூடிய விதத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அது
அவர்களுடைய சித்தாந்தமாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை.
அல்லது அவ்வாறு உணரக்கூடிய விதத்திலும் அது இல்லை. ஆம், அவருடைய ஆட்சிக்காலத்திலும்
மோசமான விஷயங்கள் நடந்தன. ஆனால், இப்போது மிகவும் துணிச்சலுடன், மிகவும் முனைப்புடன்
வேண்டுமென்றே செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கேள்வி:
உங்கள் புத்தகத்தின் ஒரு பிரதியை குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அன்பளிப்பாகக்
கொடுத்திருக்கிறீர்கள். அவர் ஆர்எஸ்எஸ்-இன் தலைமையகத்திற்குச் சென்றதை எப்படி நீங்கள்
பார்க்கிறீர்கள்?
ஹமீத்
அன்சாரி: அது அவருக்கு வந்த அழைப்பு.
முதலாவதாக, இப்போது அவர் பொதுவாழ்வில் எவ்விதப் பொறுப்பிலும் இல்லை. அவர் இப்போது ஒரு
சுதந்திரப் பிரஜை. இரண்டாவதாக, ஒரு சுதந்திரப் பிரஜை என்ற முறையில் அவர் தன் தீர்ப்பை
மிகவும் சுதந்திரமாகக் கூற முடியும். ஓர் அழைப்பிதழை ஏற்பதும், ஏற்காததும் அவருடைய
விருப்பம். அதன்மீது நான் ஏன் விமர்சனத்தைக் கூற வேண்டும்? அது என்னுடைய வேலை அல்ல.
‘
கேள்வி:
அறிவியல் மனப்பான்மை குறித்து பல சமயங்களில் நீங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறீர்கள்.
எனினும் இப்போதெல்லாம் பொது வாழ்க்கையில் உள்ள பல பிரமுகர்கள் பகுத்தறிவுக்குப் பொருந்தாத
கருத்துக்களக் கூறுவதில் வெளிப்படையாகவே முனைந்து ஈடுவதைப் பார்க்கிறோம். இதனை மாற்ற
முடியுமா?
ஹமீத் அன்சாரி:
இது மாற்றப்பட வேண்டும். ஏனெனில், உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறியிருப்பதன் மூலம், “நாங்கள் அந்தக்காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரியைப்
பெற்றிருந்தோம்” என்றும், “நாங்கள் அந்தக் காலத்திலேயே அதிநவீன ஆகாய விமானங்களை
(aeronautical excellence)ப் பெற்றிருந்தோம்” என்றும். “ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தோம்,” என்றும்,
இதேபோன்ற அபத்தங்கள் பலவற்றைக் கூறியிருப்பதன் மூலம், உலகின் மத்தியில் நாம் நகைப்புக்குரியவர்களாக
மாறி இருக்கிறோம். நம் குழந்தைகள் அவற்றை நம்ப மாட்டார்கள். நம்மைப்பார்த்து உலகமே
சிரிக்கிறது. அந்நிய ஊடகங்கள் என்ன எழுதியிருக்கின்றன என்று படித்துப் பாருங்கள். மக்கள்
கருத்துக்களை மதிப்பிட்டுக்காட்டும் பாரமானி (barometer) அதுதான்.
கேள்வி:
மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் நீங்கள் அவையில் குறுக்கீடுகள் ஏற்படும்போது அதைத்
தடுத்திட உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஓர் அரசியல்வாதி இதைவிடச் சிறப்பாக செய்திருப்பாரா?
ஹமீத்
அன்சாரி: இப்போதுபோய் இதில் என்ன சொல்வது? (சிரிக்கிறார்). அவர்கள்தான் என்ன செய்ய
முடியும்? மக்களவைத் தலைவரோ, மாநிலங்களவைத் தலைவரோ விளையாடுபவர்கள் (players) அல்ல.
மாறாக அவர்கள் நடுவர்கள் (referees)தான். விளையாட்டுப் பந்தயத்தின் விதிகள் அடங்கிய
புத்தகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செயல்பட வேண்டியதுதான். மாறாக நீங்களும்
ஒரு விளையாடுபவராக மாற முடியாது. மூன்றாவது நடுவர் என்று ஒருவர் கிடையாது. ஓர் அரசியல்வாதி
என்ன செய்வார்? அவர் நடுவராக மாறிவிட்டாரென்றால், அரசியல்வாதியாக இருப்பதை நிறுத்திக்கொள்ள
வேண்டும். அரசியல்வாதியாகவும் விளையாடுபவராகவும் இருக்கிறாரா அல்லது நடுவராக இருக்கிறாரா
என்று அவர் தன்னைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். இரண்டு பொறுப்பிலும் அவர் இருந்திட
முடியாது.
கேள்வி:
சமீபகாலங்களில், நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டு
பல வழக்குகள் வந்திருக்கின்றன. உங்கள் முன் வந்த
அத்தகைய வழக்குகள் குறித்து உங்கள்
அணுகுமுறை என்னவாக இருந்தன?
ஹமீத் அன்சாரி: நாடாளுமன்றச் சட்டம் (நீதிபதிகள் விசாரணை சட்டம், 1968) என்ற
ஒன்று இருக்கிறது. அது இதற்கான நடைமுறையைப் பெற்றிருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி
அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் (impeachment) கொண்டுவர
வேண்டும் என்றால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைக் கொண்டுவர
வேண்டும். மாநிலங்களவை என்றால், 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் அத்தகைய தீர்மானத்திற்கான
அறிவிப்பினைக் கொடுக்க வேண்டும். இப்போது, முதலாவது விஷயம், அவ்வாறு ஒரு நம்பிக்கையில்லாத்
தீர்மானம் கொடுக்கப்படும்போது, மாநிலங்களவைத் தலைவர், தன்னுடைய செயலகத்திற்கு அதனை
சரிபார்த்திட அறிவுறுத்திட வேண்டும். அந்த 50 பெயர்களும், கையெழுத்துக்களும் உண்மையில் உறுப்பினர்களுடையதுதானா
அல்லது வேறெவரும் கையெழுத்திட்டிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அதன்பின்னர்,
நடைமுறை தொடங்குகிறது. மாநிலங்களவைத் தலைவர் வழக்கின் தகுதி குறித்து ஆராய்ந்து நீதி
வழங்கிட முடியாது. ஏனெனில், அந்தச் சட்டத்தின்படி. ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
கேள்வி:
இப்போது மீண்டும் நீங்கள் ஒரு இராஜதந்திரியாக (diplomatஆக) குல்லாயை அணிந்துகொண்டுவிட்டீர்கள்.
நாடுகளின் ஒழுங்கமைவில் இந்தியாவை எப்படி, எங்கே வைக்கிறீர்கள்?
ஹமீத்
அன்சாரி: நாம் நம்மைச்சுற்றியும் உள்ள நாடுகளுடன் எப்படி நடந்துகொள்கிறோம் என்று பாருங்கள்.
பிரதமரின் விஜயத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற இரண்டு அமைச்சர்களின் விஜயத்தை
அமெரிக்கர்கள் எப்படி நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
டோக்லாம் சமயத்தில் சீனர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள். எல்லாவற்றிற்கும்
மேலாக, நம்மைச் சுற்றியுள்ள நம் அண்டை நாட்டவர்களுடன் நம் உறவு எப்படி இருக்கிறது என்று
பாருங்கள். அண்டை நாட்டவர்களுடன் நம் உறவு அவ்வளவு நன்றாக இல்லை. ஆம், ஒவ்வொரு நாடும்,
ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஓர் உறுப்பினர்தான். ஆனால் மாலத்தீவுகள்? செசிலிஸ்? இலங்கை
கூட என்ன நிலை? நேபாளம் … அது அனைத்து வகைகளிலும்
நம்முடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய ஒன்று. பாகிஸ்தானுடன் முழுமையாக முட்டுக்கட்டை.
நீங்கள் என்ன செய்ய முடியும்? பாகிஸ்தான் என்று ஒரு நாடு நம் அண்டை நாடாக இருக்கிறது. அதனைக் கண்டுகொள்ளாமல்
இருக்க முடியாது. நீங்கள் அதனுடன் சண்டைக்குச் செல்ல வேண்டும் என்று
முடிவு எடுத்துவிட்டால், அது வேறு விஷயம். ஆனால், அவ்வாறில்லாத சமயத்தில், பிரச்சனைதரும் அண்டைநாட்டுக்காரருடன் நீங்கள் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு ஒருவர் அண்டை நாடுகளுடன் அல்லது பிற நாடுகளுடன் வெளிப்படையாக எப்படி இருக்க
வேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்று இருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment