Showing posts with label T.K.R.. Show all posts
Showing posts with label T.K.R.. Show all posts

Thursday, July 19, 2018

ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்



ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை
மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்
புதுதில்லி, ஜூலை 19-
ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை இந்த அவை கண்டித்திட வேண்டும். அவர்கள் அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கோரினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:
இந்த அவை, ஸ்வாமி அக்னிவேஷ் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜார்கண்ட் மாநிலத்தில் பாகூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷ் பாஜகவின் யுவ மோர்ச்சா என்னும் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்களாலும், பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்களாலும், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக கறுப்புக்கொடிகள் காட்டி, முழக்கங்கள் எழுப்பி இருக்கின்றனர். அங்கிருந்து பொதுமக்கள் அவரைப் பாதுகாத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.  அவர்களின் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்தினரையும், காவல்துறையினரையும் அவர் அழைத்திருக்கிறார். ஆயினும் எவரும் அவருக்கு உதவிட முன்வரவில்லை.
இவ்வாறு ஸ்வாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டதை இந்த அவை கண்டித்திட முன்வர வேண்டும். உச்சநீதிமன்றம் இதுபோன்று குண்டர்கள், பசுப் பாதுகாப்பு என்ற பெயராலும், ஜிகாத் காதல் என்ற பெயராலும், அறநெறிக் காவல்துறை (Moral Police) என்ற பெயராலும், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதையும்,  கொலை செய்வதையும் கண்டித்திருக்கிறது. இவ்வாறு வன்முறை வெறியாட்டங்களும்,  கொலைகளும் புரிவது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.
இவற்றை இந்த அவை கண்டித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அக்னிவேஷ் அவர்களைத் தாக்கிய பாஜக யுவ மோர்ச்சா அமைப்பினர், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கோரினார்.
(ந.நி.)

Wednesday, March 29, 2017

விவசாயக் கடன்களை ரத்து செய்யுங்கள்! தமிழக விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி ஆவேசம்



விவசாயக் கடன்களை ரத்து செய்யுங்கள்!
தமிழக விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி ஆவேசம்
புதுதில்லி, மார்ச் 29-
நமக்கெல்லாம் உணவு அளித்திடும் விவசாயிகளின் நிலைமை மிகவும் துயரமாக இருக்கிறது. கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்களை ரத்து செய்திடும் இந்த அரசு அதில் ஒரு சிறு பகுதி அளவேஉள்ள விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்திட வேண்டும். அதன்மூலம் விவசாயிகள் வாழ வழிவகுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்றுகாலை மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில், தலைநகர் தில்லியில் கடந்த பதினைந்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

தில்லியில் ஜந்தர்மந்தரில் போராட்டத் தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளை நான் சந்தித்தேன். துரதிர்ஷ்டவசமாக நமது நாடு விவசாயிகளின் தற் கொலைகள் தொடர்ந்து நடைபெறும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. இப்போது அவர்களைச் சென்று பார்த்தபோது நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதுஎன்பதைக் காண முடிந்தது. அவர்கள் தங்களுடன் உயிருள்ள எலிகளைப் பிடித்து வைத்திருந்தார்கள். கேட்டபோது, “இதுதான் இப்போது எங்களுக்கு உணவுஎன்கிறார்கள். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. நமக்கு உணவு அளித்த உழவர்களின் நிலை இன்றைய தினம் எலிகளைச் சாப்பிடக்கூடிய அளவிற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. “எங்களுக்கு வாழ்வதற்கு வேறு வழியேதெரியவில்லைஎன்கிறார்கள்.

நான் இந்த அரசாங்கத்தைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் வங்கிகளில் பணக்கார கார்ப்பரேட்டுகள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வராக்கடன்கள் என்ற பெயரில் மாற்றி அவற்றைத் தள்ளுபடி செய்கிறீர்கள். ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழை விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறீர்கள். இது ஏற்க முடியாத ஒன்றாகும். பணக்கார பெருமுதலாளிகளுக்கு ரத்து செய்திடக்கூடிய தொகையுடன் ஒப் பிட்டால் விவசாயிகளின் கடன் தொகை என்பது மிகவும் சிறிய அளவேயாகும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திடுங்கள். அதன்மூலம் இந்திய விவசாயத்தையும், இந்திய விவசாயிகளையும் காப்பாற்றுங்கள். இல்லையேல், நம் நாட்டிற்கு எதிர்காலமே கிடையாது.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

டி.கே.ரங்கராஜன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இப்பிரச் சனை மீது பேசியதாவது:தமிழ்நாட்டு விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனை 140 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இப்போது தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில குருத்வாராக்கள் அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. தில்லி மக்கள் தமிழக விவசாயிகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உள்துறையும், காவல்துறையினரும் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து காலிசெய்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனைச் செய்யாதீர்கள் என்று உள்துறை அமைச்சகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானதொரு போராட்டமாகும். தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று இங்கே வந்திருக்கிறார்கள். ஏன் காவல் துறை தலையிடுகிறது? அந்தப் பகுதி போராட்டங்கள் நடத்துவதற்கு என்று நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பகுதியாகும். அங்கே அவர்கள் போராடுவதை உள்துறை அமைச்சகம் தடுக்கக் கூடாது. அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமானவை. பிபிசி அவற்றை ஒளிபரப்பியது. உலகில் லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தார்கள்

தமிழ்நாட்டில் குடிதண்ணீர் இல்லை, கால்நடைகளுக்குத் தீவனங்கள் இல்லை, இந்த நிலைமை தொடரக் கூடாது. நானும் சீத்தாராம் யெச்சூரியும் நிதிஅமைச்சரை சந்தித்தோம். விவசாயிகளின் பிரதிநிதிகளும் அவரை சந்தித் தார்கள். ஆனாலும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சனையில் ஏதாவது செய்திட வேண்டும். இல்லையேல் மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் போராடும். மத்திய அரசு, தமிழகத்திற்கு உதவவேண்டும். அவர்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்திடுங்கள். குடிதண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுங்கள். இவற்றைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிட வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மேலும் மோசமாகிடும்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.

இப்பிரச்சனையில் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், (திமுக) து.ராஜா (சிபிஐ) ஆகியோரும் பேசினர்.
(.நி)