


தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் உருவாவதற்கு முக்கிய காரணம் சி.சுப்பிரமணியம்
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் ப.சிதம்பரம் புகழாரம்
புதுதில்லி, நவ. 29-
தமிழ் மொழியில், கலைக் களஞ்சியம் உருவாவதற்கு முக்கிய காரணம் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் என்று மைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
மைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் நினைவு அஞ்சல் தலை, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.
பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா ஞாயிறு அன்று மாலை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
பின்னர் விழாவிற்குத் தலைமை வகித்த மைய உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் கூறியதாவது:
‘‘ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்து, பத்தாண்டுகளுக்கு முன் நம்மைவிட்டு நீங்கிய பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் அவர்கள் நூற்றாண்டு விழா இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. அவர் மறைந்து பத்தாண்டுகள் ஆகின்றன. பொது வாழ்க்கையில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டு 15, 16 ஆண்டுகள் ஆகின்றன. தீவிரமான அரசியலிலிருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் இன்றும் அவரைப்பற்றிய நினைவுகள் நம் மத்தியிலே பசுமையாக இருக்கின்றன.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்றார் வள்ளுவர். எச்சம் என்பது பிள்ளைகளையும் குறிக்கும், எச்சம் என்பது அவர்கள் செய்த நிலைத்த செயல்பாடுகளையும்குறிக்கும். அந்த வகையிலே திரு. சி.சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையிலே ஆற்றிய பணிகள் மிக மிகப் பெரிய பணிகளாகும். நாம் இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மகத்தான காரியங்கள் அவர் காலத்தில் அவருடைய முயற்சியால் அவருடைய திறமையால் அவருடைய தீர்க்கதரிசனத்தால் அவருடைய உழைப்பால் ஏற்பட்டன என்பதை இந்த நேரத்திலே நாம் நினைவுகூர வேண்டும்.
தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழிலும் அவர் ஆற்றிய அரிய செயல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக பசுமைப் புரட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் இயல்பாக ஏற்றுக் கொள்கிறோம்.
பஞ்சாப் மாநிலமும், அர்யானா மாநிலமும் தமிழ்நாடு, ஆந்திராவை விட கூடுதலாக நெல்லை உற்பத்தி செய்யும் மாநிலங்களாக மாறியிருக்கின்றன. அந்த மாநிலங்களிலே வசிக்கின்ற மக்கள் அதிகமாக உண்பது கோதுமை. ஆனால் அவர்கள் நெல்லை உற்பத்தி செய்கிறார்கள் என்றால் அதை நாம் இயல்பாக ஏற்றுக்கொள்கிறோம் என்றால், இந்தியாவிற்குத் தேவையான அரிசியும், கோதுமையும் நம் நாட்டிலே உற்பத்தி செய்ய முடியும் என்பதை இயல்பான செயல்களாக ஏற்றுக்கொள்கிறோம் என்றால் 1970களில் அவர் செய்திட்ட பசுமைப் புரட்சியே அதற்குக் காரணமாகும்.
இவ்வாறு 1970களில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் சி.எஸ். அவர்கள். என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவுகூர வேண்டும்.
சி.சுப்பிரமணியம், சிவராமன், சாமினாதன் என்ற மூன்று ‘எஸ்’-கள்தான் பசுமைப் புரட்சிக்கு முக்கியமான காரணமாகும். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பதில் நமக்கெல்லாம் பெருமை உண்டு. ஒருவர் அமைச்சர், நிர்வாகி. இன்னொருவர் நிர்வாகத் துறையிலே புகழ் பெற்றவர். மூன்றாமவர் விஞ்ஞானி. இந்த மூவரும் இணைந்து ஒரு மகத்தான புரட்சியை இந்தியாவிலே 1970களில் ஏற்படுத்தினார்கள்.
அதற்கு முன்னால் என்ன நிலைமை? கோதுமையை, நெல்லை வெளிநாடுகளிலிருந்து பணம் கொடுத்தும் பல நேரங்களில் கடனாகவும் பெற்றோம். கையிலிருந்து வாய்க்கு என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. இந்தியாவுக்கு கோதுமை கப்பலில் வந்ததால் இந்த ஆங்கிலப் பழமொழியை மாற்றி கப்பலிலிருந்து வாய்க்கு என்று கிண்டலாகச் சொல்வார்கள். அந்த அளவிற்கு பற்றாக் குறை நிலைமை இந்தியாவிலே இருந்தது. அப்படி இருந்த நிலைமையை மாற்றியவர் சி.எஸ். அவர்கள்.
இப்போது என்ன நிலைமை? விளைந்த கோதுமையை, விளைந்த நெல்லை வைப்பதற்கு கிடங்குகள் இல்லை. இவ்வாறு சரியாகப் பாதுகாக்காமல் வீணாக்குகிறீர்களே என்று உச்சநீதிமன்றம் தலையிலே குட்டுகிறது. இவ்வாறு பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் திரு. சி.எஸ். என்பதை மறந்துவிடக் கூடாது.
அதேபோன்று இன்னும் பல மகத்தான காரியங்களை திரு.சி.எஸ். செய்தார். இந்தியா முழுவதும் இன்று 13 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு சமைத்து பரிமாறப்படுகிறது. உலகத்திலேயே இந்த அளவிற்கு வேறெந்த நாட்டிலும் கிடையாது. மதிய உணவுத் திட்டத்தின் கர்த்தா காமராசர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மத்திய உணவு நம் குழந்தைகளுக்குத் தர வேண்டும் என்ற எண்ணம் பெரும் தலைவர் காமராசரிடம்தான் முதன்முதலில் வந்தது.
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தால், அதனைச் செயல்படுத்த வேண்டுமே, யார் செயல்படுத்துவது? எப்படி செயல்படுத்துவது? அதற்கான அரிசியை எப்படிக் கொள்முதல் செய்வது? எங்கே சமைப்பது? யார் சமைப்பது? எப்படி பரிமாறுவது?
இந்தப் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்று காமராசர் யோசித்தார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்றார் வள்ளுவர். அதேபோன்று இப்பணியை திரு சி.எஸ்.-இடம் காமராசர் ஒப்படைத்தார்.
மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டிலே துவங்கப்பட்டது. அவருக்குப் பெரும் துணையாக இருந்த இன்னொரு பெரியவர், திரு.என்.டி. சுந்தரவேலு அவர்கள். திரு.சி.எஸ்.-உம் திரு. என்.டி.சுந்தரவேலும் இன்னும் பல பெரியோரும் இணைந்து மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தினார்கள். மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டிலேதான் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. பிறகு சில மாநிலங்களில் பரீட்சார்த்தமாக அதனை நிறைவேற்றினார்கள். பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகுதான் இன்று நாடு முழுவதும் 13 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
திரு.சி.எஸ். ஓர் அரிய மனிதர், வழக்கறிஞர், அரசியல்வாதியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலவாதிகள் அறிஞர்களாக மாற முடியாது. அறிஞர்கள் அரசியலுக்கு வரமுடியாது. ஆனால் திரு. சி.எஸ். அவர்கள் தன் சொந்த முயற்சியால் தொடர்ந்து கற்றதால், தொடர்ந்து அறிஞர்கள் சூழ்ந்திருந்ததால், அவர் அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து மிகப்பெரிய அறிஞர் என்ற நிலைக்கு அவர் தன்னைத் தானே மாற்றிக் கொண்டார். அவருடைய அரிய சிந்தனையிலே தோன்றிய பல நிறுவனங்கள் இன்றும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.
உதாரணமாக இந்திய உணவுக் கழகம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், சிஎஸ்ஐஆர் மூலமாக பல ஆராய்ச்சி நிறுவனங்கள். இவை எல்லாம் திரு.சி.எஸ். அவர்கள் பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தபோது ஏற்பட்டவைகளாகும்.
அவர் உணவு அமைச்சர், நிதி அமைச்சர் என்ற வகையிலேதான் நமக்குத் தெரியும். தமிழ்நாட்டிலே கல்வி அமைச்சராக இருந்தார். இந்திய அரசிலே கனரகத் துறை அமைச்சராக இருந்தார், எஃகுத் துறை அமைச்சராக இருந்தார். பிறகு திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தார். கொஞ்ச காலம் ராணுவ அமைச்சராகவும் இருந்தார். அவர் தொடாத துறையே கிடையாது. எந்தத் துறையை அவர் எடுத்துக் கொண்டாலும், அதை அறிவுபூர்வமாக அணுகினார். அரசியல்வாதியினுடைய அரசியல் சாணக்கியம், அரசியல் திறமை, ஒரு துறையை நடத்துவதற்கு மிகவும் அவசியம். ஆனால் அந்தத் துறையைப் பற்றி எதுவுமே தெரியாமல் அந்தத் துறையினுடைய இலக்கணங்கள் எதுவுமே தெரியாமல் ஒரு துறையை நடத்த முடியாது. ஒவ்வொரு துறையிலும் அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அந்தத் துறையைப் பற்றி ஆழமாகப் படித்தார், ஒரு மாணவனைப் போல மிக மிக ஆழமாகப் படித்து அந்தத் துறையினுடைய அனைத்து நுணுக்கங்களையும் கற்றார். பிறகுதான் அந்தத் துறையிலே மாறுதலைக் கொண்டு வந்தார். ஆகவேதான் எந்தத் துறையை அவர் கையிலே கொடுத்தாலும், அந்தத் துறையின் பணிகளை மிகவும் திறமையாக செய்து முடித்தார் திரு சி.எஸ். அவர்கள்.
இளம் வயதிலேயே பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அன்பினைப் பெற்றவர். ஒரு புகழ் பெற்ற புகைப்படம் உண்டு. ஜவஹர்லால் நேரு அவர்கள் சிஎஸ் அவர்களின் தோளிலே கை போட்டு அவருடன் உரையாடுகிறார். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் ஏறத்தாழ 21. ஜவஹர்லால் நேரு 1889இலே பிறந்தார். சிஎஸ் 1910இலே பிறந்தார். இருவருக்கும் இடையிலே 21 வயது வித்தியாசம். 21 வயது வித்தியாசம் இருந்தபோதிலும் ஒருவர் பாரதத்தின் பிரதமர், இன்னொருவர் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர். என்றாலும் தோளிலே கை போட்டு அவருடன் பேசினார். அந்த அளவுக்கு அவர் அன்பையும் நன்மதிப்பையும் பிறந்தார். பிறகு, அன்னை இந்திரா காந்தியினுடைய உற்றத் தோழராக விளங்கினார். அவருடைய ஆலோசகராக விளங்கினார், அவருடைய அமைச்சரவையிலே முக்கிய அமைச்சராக இருந்தார்.
அரசியலிலே தீவிர ஈடுபாடு குறைந்தபிறகு, பல நிறுவனங்களை அவர் வழிநடத்தினார். அதிலே பாரதிய வித்யா பவனும் ஒன்று. பாரதிய வித்யா பவனின் உலகம் தழுவிய அனைத்து அமைப்புகளுக்கும் தலைவராக சில ஆண்டுகள் இருந்தார், துணைத் தலைவராக பல ஆண்டுகள் இருந்தார்.
இவ்வாறு புதிய புதி முயற்சிகள், புதிய புதிய எண்ணங்கள், புதிய புதிய சிந்தனைகளிலே தீவிரமாக ஆர்வம் காட்டினார். அவர் எல்லாப் பொறுப்புக்களிலிருந்தும் விலகி. சென்னைக்குத் திரும்பி வந்த பிறகு, தமிழ் வளர்ச்சிக்கு மிகப் பெரிய துணையாக இருந்தார். தமிழிலே கலைக் களஞ்சியம் உருவாவதற்கு அவர் மிக முக்கியமான காரணம் என்பது பலருக்கும் தெரியாது. ஒரு மொழியிலே முதன்முதலாக கலைக் களஞ்சியம் கொண்டுவருவது என்பது சாதாரண காரியம் அல்ல. அவினாசி லிங்கம் செட்டியார் அவர்கள் பெருமுயற்சி எடுத்தார்கள். பிறகு பேரறிஞர் பெரியசாமி தூரன் அவர்களை ஆசிரியர் குழுத் தலைவராகப் போட்டு, கலைக் களஞ்சியம் உருவாக்கும் பணி துவக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்திலே தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டது. அதற்கெல்லாம் மிகப் பெரிய துணையாக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருந்தவர் திரு.சி.எஸ். அவர்கள். தமிழிலே அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. தமிழ் வழிக் கல்வியிலே மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தமிழ்நாட்டிலே ஆட்சி மொழியாகத் தமிழ் வந்ததற்கு திரு. சி.எஸ். மிக ப்பெரிய காரணம். தமிழ்நாட்டிற்குத் தமிழ் நாடு என்று பெயர் வைத்தது அவர் காலத்திலேதான் என்பதை மறந்து விடக் கூடாது. அவரை இப்போது பலர் கொண்டாடினாலும், பல விஷயங்கள் காலம் உருண்டோடுவதிலே மறந்து போனாலும் இவற்றையெல்லாம் நினைவுபடுத்துவது என்னுடைய கடமை என்பதற்காகவே சொல்கிறேன்.
திரு. சி.எஸ். நூற்றாண்டு விழாவை எங்களால் இயன்ற அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். கோவையிலே அவருடைய திரு உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது. இந்திய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் வந்து அந்த நாணயத்தை வெளியிட்டார். பின்னர் அங்கு மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடைபெற்றது.
திரு. சி.எஸ். அவர்களுக்கு கோவையிலே விரைவிலே சிலை அமைப்பற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலே சிலை அமைக்கப்படும் பணிகள் முடிந்து சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. சி.எஸ். அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். ஒரு முறை அவர் சொன்ன ஒரு சம்பவத்தை உங்களிடையே நினைவுகூர விரும்புகிறேன்.
அவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்திலே, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடுகிறார். நீதிபதி தீர்ப்புச்சொல்கிறபோது குற்றம் சாட்டப்பட்டவரை நிரபராதி என்று கூறி அவரை விடுவித்து விடுகிறார். சி.எஸ்.-க்கு மகிழ்ச்சி. குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் மட்டும் தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டிலேயே நிற்கிறார். சி.எஸ். அவரிடம் போய் உன்னை நிரபராதி என்று சொல்லிவிட்டார்கள், உன்னை விடுவித்து விட்டார்கள் என்று சொல்கிறார். ஆனாலும் அவர் தலை நிமிரவே இல்லை. மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறார். பிறகு சி.எஸ். அவரிடம் ஏதோ சொல்கிறார். நீதிபதிக்கு ஒன்றுமே புரிய வில்லை.
“ஆச. ளுரசெயஅயni, ஐ hயஎந யஉளூரவைவநன லடிரச உடநைவே. றுhல ளை hந ளவயனேiபே in வாந யஉஉரளநன bடிஒ றiவா வாந hநயன bடிறநன னடிறn.”
“லுடிரச hடிnடிரச, ஐ hயஎந உடிnஎinஉநன லடிர வாயவ அல உடநைவே ளை innடிஉநவே. க்ஷரவ ஐ உயn’வ உடிnஎinஉந அல உடநைவே வாயவ hந ளை innடிஉநவே”
நீதிமன்றமே சிரிப்பில் மூழ்கியது.
அவர் அமைச்சராக இருந்த காலத்திலே, நான் பள்ளி மாணவனாக, கல்லூரி மாணவனாக இருந்தேன். அப்போது அரசியலைப் பற்றி ஓரளவுக்குத்தான் தெரியும்.
ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்திலே, திரு. சி.எஸ். அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் நடந்த விவாதங்கள் மிகச் சிறந்த விவாதங்களாக இருந்ததாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போதும் நாம் நாடாளுமன்றத்திலே விவாதம் நடத்துகிறோம். 11.00 மணிக்குத் தொடங்கி 11.05க்கு முடித்து விடுகிறோம். ஐந்து நிமிடங்களில் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விடுகிறோம்.
திரு. சி.எஸ். அவர்கள் மிகச் சிறந்த ஜனநாயகவாதி, மிகுந்த நேர்மையாளர், அப்பழுக்கற்ற தேச பக்தர். தமிழின் மீது தீவிர ஈடுபாடு உடையவர். கல்வி, அறிவியல், ஆராய்ச்சி - இவைதான் நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற திடமான நம்பிக்கை உள்ளவர். எனவே அறிவார்ந்த சமுதாயமாக - மnடிறடநனபயடெந ளடிஉநைவல - ஆக நாட்டை மாற்ற வேண்டும், மாற்ற முடியும் என்று எண்ணியவர்.
அரசியல்வாதிகள் - அறிஞர்கள் - விஞ்ஞானிகள் எல்லோரும் இணைந்து செயல்பட முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். பல நிறுவனங்களை நிறுவியவர். பல துறைகளைக் கண்டவர். அவருடைய நூற்றாண்டு விழா இன்று தில்லியிலே கொண்டாடப்படுவது நமக்கு எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த விழாவிலே அவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்கு இசைவு தந்த அஞ்சல் துறைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னுடைய நண்பர் திரு கபில் சிபல் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது. திடீரென்று துயர நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக, மத்திய இணை அமைச்சர் சச்சின் பைலட் அவர்கள் அஞ்சல் தலையை வெளியிட உடனடியாக இசைந்தார்கள். அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை அஞ்சல் தலையை வெளியிட்டு உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பின்னர் மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் சச்சின் பைலட் அவர்கள் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள் அஞ்சல் தலையை வெளியிட்டு, உரையாற்றினார். தொடர்ந்து கோயம்பத்தூர் பாரதி வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் சக்தி பெருமாள் நன்றி கூறினார்.
--