Tuesday, November 30, 2010
குறைந்தபட்ச ஊதியம் ரூ.200 வழங்கு-விவசாயத் தொழிலாளர்கள் பேரணி
புதுதில்லி, நவ. 30-
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சரி செய்யுமாறும், எந்த மாநிலத்திலும் குறைந்தபட்ச ஊதியம் 200 ரூபாய்க்குக் குறையாமல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் செவ்வாய் அன்று காலை தலைநகர் புதுதில்லியில் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2009 ஜனவரி 1 அன்று மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் 6(1)ஆவது பிரிவினை துஷ்பிரயோகமாகப் பயன்படுத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு அளித்து வந்த குறைந்தபட்ச ஊதியத்தைக் குறைத்து விட்டது. மூலச் சட்டத்தில் அந்த அந்த மாநிலங்களில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் அளிக்க வேண்டும் என்றிருந்த ஷரத்துக்கு முற்றிலும் விரோதமாக இவ்வாறு அரசு செய்துள்ளது. இதனைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதன் பின்னணியில் குறைந்தபட்ச ஊதியமாக 200 ரூபாய் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆண்டிற்கு குறைந்தது 150 நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று கோரியும், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தக் கோரியும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வேலைகளின் தன்மைகளை விரிவாக்கக் கோரியும், வனப்பகுதிகளில் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழான பணிகளை அமல்படுத்தக்கோரியும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் குழுக்களில் அனைத்து மட்டங்களிலும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயத் தொழிலாளர்களுக்கு என்று மத்திய சட்டம் கொண்டுவரக் கோரியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இம்மாபெரும் பேரணி நடைபெற்றது.
பேரணி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழு அலுவலக வளாகம் இருந்திடும் அசோகா சாலையிலிருந்து புறப்பட்டு, ஜன்பத் வழியாக நாடாளுமன்ற வீதியை அடைந்தது. அங்கு நடைபெற்ற மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ராமையா, பொதுச் செயலாளர் விஜயராகவன், மற்றும் நிர்வாகிகள் சுனீத் சோப்ரா, ஹன்னன் முல்லா, சாரங்தார் பஸ்வான், வெங்கட், கோவிந்தன் மாஸ்டர், பானுலால் சஹா, குமார் சிரால்கர் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பேரணியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. மணி வந்திருந்தார்.
பின்னர் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி.சி. ஜோசியைச் சந்தித்து மனு அளித்தனர்.
(ச. வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment