Sunday, November 7, 2010

நவம்பர் புரட்சியும் சோசலிஸ்ட் உணர்வும்--சுகுமால் சென்



1917 அக்டோபர் 17இல் நடைபெற்ற அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி, பின்னர் திருத்தப்பட்ட ரஷ்ய காலண்டரின்படி நவம்பர் 7இல் நவம்பர் புரட்சி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ரஷ்யாவின் முதல் சோசலிஸ்ட் புரட்சி, உலகையே குலுக்கிய நிகழ்வாகும். அதன் முக்கியத்துவம் இன்றைய உலகில் - அதாவது உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள இன்றைய உலகில் - பெரிய அளவில் பொருளாதார மந்தம் மற்றும் கொடூரமான முறையில் ஏகாதிபத்தியத் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய உலகில் - மேலும் மேலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியானது, செப்டம்பர் 15 அன்று தன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஏழை மக்கள் மீதும் தாங்க முடியாத அளவிற்கு அது தாக்குதல்களை ஏவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் களுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு, உலக முதலாளித்துவம் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கக்கூடிய இன்றைய சூழல் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சிக்கு மேலும் அதிக முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.

ஏகாதிபத்திய மேலாதிக்கம் மற்றும் அதன் நாசகர யுத்த நடவடிக்கைகள் இன்றைய தினம் மிகவும் கூர்மையடைந்து, உலகம் முழுவதையும் தன் மேலாதிக்கக் கருவிகளின்மூலம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் ஏற்படுத்திட்ட நவீன தாராளமயப் பொருளாதார முறை, உலகச் சந்தையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் தொழிலாளர் வர்க்கத்தையும் சாமானிய மக்களையும் ஒட்டச் சுரண்டி கொள்ளை லாபம் ஈட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தோழர் லெனின் விளக்கியதுபோல், ஜார் மன்னனின் ஆட்சியின் கீழ் ஒரு பின்தங்கிய நாடாக விளங்கிய ரஷ்யாதான், 1917இல் முதலாளித்துவ சங்கிலியின் ‘‘பலவீனமான கண்ணியை’’ உடைத்து நொறுக்கி, முதலாளித்துவ உலகில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியை நிறுவிய முதல் நாடாக வெற்றி பெற்றது. ரஷ்ய சோசலிஸ்ட் புரட்சியின் மிக முக்கியமான அம்சம், முதலாளித்துவத்தின் சுரண்டும் வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டிய முதல் உலகப் புரட்சி இதுவே என்பதாகும்.

இறுதியாக, 1991இல் பல்வேறு காரணங்களால் சோவியத் சோசலிஸ்ட் அரசு முடிவுக்கு வந்தது. சோசலிசத்தின் புரட்சிகரத் தத்துவத்தை பெரிய அளவில் திரித்ததும், விலகிச் சென்றதும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், இது குறித்து உலகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் இன்னமும் தனியே ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
சோசலிஸ்ட் உணர்வு உருவாதல்

சோவியத் சோசலிஸ்ட் புரட்சியானது, தன்னுடைய நிகழ்ச்சிநிரலில் சோசலிஸ்ட் உணர்வினைப் பிரதானமாக முன்வைத்தது. ஆனாலும், இதனை எய்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. தொடர் போராட்டம் அவசியம். உலகிலேயே மிகவும் முக்கியமான பொக்கிஷம், மனித இனமேயாகும். ஆயினும், வரலாற்றுரீதியாகப் பார்த்தோமானால், மனிதகுலத்தின் பெரும்பகுதி பகைமையுடனான சமூக வர்க்கங்களின் ஆளுகைகளின் கீழேயே, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இத்தகைய நிலைமைகள் - அதாவது தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் தனிநபர்வாதம் (heightened individualism), அதீத நுகர்வோரியம் (hyper-consumerism), தற்பெருமை (egotism), இரக்கமின்மை (apathy), பகைமையுணர்வு (alienation), பேராசை (greed), வெறுப்பு மனப்பான்மை (cynicism) ஆகிய அத்துணை குணங்களும் சோசலிசத்தைக் கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான அனுகூலமானவை என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவம் மற்றும் புரட்சிக்கு எதிரான சிந்தனையாளர்களில் பலர் இத்தகைய குணங்கள் மக்களிடம் இருப்பது இயல்பானவைகளே என்றும் இதற்கு மேல் மக்களிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது, கூடாது என்றும் வாதிடுகிறார்கள். ஆயினும் இது ஒரு நம்பிக்கையே யொழிய, அறிவியலின் அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல. இதேபோன்றுதான் ஒவ்வொருவரின் ‘‘திறமை’’ (ability) மற்றும் ‘‘புத்திசாலித்தனம்’’ (intelligence) ஆகியவையும் வெவ்வேறானவை என்றும், ஒரு சில தனிநபர்கள் வரலாற்றையோ, கலாச்சாரத்தையோ அல்லது சுற்றுச்சூழலையோ தீர்மானிப்பதில் எவ்விதப் பங்கும் ஆற்றவில்லை என்றும் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு மாறாக, தனிநபர்கள் நிலையானவர்கள், மாற்ற இயலாதவர்கள் என்கிற எண்ணத்தைப் பொய்ப்பிக்கக்கூடிய விதத்தில் அறிவியல் சான்றுகள் உண்டு. மனித இனம் மாற்றங்களுக்கு - சமூகப் பின்னணியுடன் சம்பந்தப்பட்ட மாற்றங்களுக்கு - உட்பட்டவையே. இவ்வாறு மனித குலத்தின் மகத்தான சக்தியை எவரும் அறுதியிட்டுக் கூறிட முடியாது.

இன்றைய சிக்கல் நிறைந்த மற்றும் முரண்பட்ட பின்னணியில், அதிலும் குறிப்பாக, பல வளர்முக முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நவீன தாராளமய உலகமயக் கொள்கையானது, மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் மற்றும் முதலாளித்துவம் என்னும் அடிப்படையில் வெவ்வேறான இரு உலகக் கண்ணோட்டங்களுக்கு இடையே ஒரு மூர்க்கத்தனமான போராட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த இரு கண்ணோட்டங்களுமே மக்களது சிந்தனைகளை, பழக்க வழக்கங்களை, கருத்துக்களைத் தங்கள் கண்ணோட்டங்களின்பால் ஈர்ப்பதற்கு முயல்கின்றன. உதாரணமாக, இன்றைய தினம் முக்கியமான பிரச்சனைகள் என்ன என்பது குறித்தும் அவற்றைத் தீர்த்திட சிறந்த வழி எது என்பது குறித்தும் இரு கண்ணோட்டங்களும் இரு கருத்துக்களை முன்வைக்கின்றன. ‘‘மகிழ்ச்சி’’ என்பதற்கான அளவுகோலைக் கூட இரண்டும் இரு விதங்களில் அளிக்கின்றன. வலுவான முறையில் இயங்கிடும் ஏகாதிபத்திய சக்திகள், மக்கள் மத்தியில் சுயநலத்தையும், புதிய புதிய பொருள்களின்மேல் அளவிடற்கரிய ஆசைகளையம் உருவாக்கி, வளர்த்திடக்கூடிய வகையில் பிரச்சாரத்தை செய்துவருகின்றன. இவை அளிக்கும் நிர்ப்பந்தங்களில் பல மிகவும் பசப்பலானவைகளாகும்: மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கானவைகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவை படு பிற்போக்கானவைகளாகும்.

நவீன தாராள உலகமயக் கட்டத்தில், பல்வேறுபட்ட சமூக நலன்களும், அது உற்பத்தி செய்த வர்க்க முரண்பாடுகளும், மக்கள் மத்தியில் வேலைவாதம் (Careerism, சந்தர்ப்பவாதம், ஒருமைப்பாடின்மை (lack of solidarity), மற்றும் சோசலிசத்தைக் கட்டுவதில் ஆர்வமின்மை ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கின்றன. உதாரணமாக, நகர்ப்புறங்களில் வேலைபார்க்கும் அதிக ஊதியம் வாங்கும் ஊழியர்களின் சுகபோக வாழ்க்கையானது தொழிற்சாலைகளிலும் கிராமப்புறங்களிலும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களிடமிருந்தும், குறைந்த சலுகைகளுடன் வாழ்பவர்களிடமிருந்தும், சொந்த ஊர்களில் வாழும் பெற்றோர்களிடமிருந்தும், ஓய்வூதியதாரர்களிடமிருந்தும் அவர்களைத் தனியே ஒதுக்கி வைத்து விட்டது. மூலதனம் - அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல - தன் அதிகாரத்தையும் அதன் விரிவடையும் தன்மையையும் குறைத்து மதிப்பிடுவது எவ்வாறு தவறோ அதேபோன்று, தத்துவார்த்த சிந்தனைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் போன்ற அதன் எதிர்மறை விளைவுகளையும் குறைத்து மதிப்பிடுவது மாபெரும் தவறாகும். புரட்சிகர உணர்வு மட்டம்
சோவியத் யூனியன் இப்போது இல்லை என்ற போதிலும் கூட, சோசலிசத்தைக் கட்டியமைத்திட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலானது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அது தொடரும். சோசலிசத்தைக் கட்டியமைத்து, அதனை நிலைநிறுத்துவதற்கு, உலகளாவிய அளவில் சுத்தமான காற்று மற்றும் தண்ணீர், சுத்தம், இயற்கை வளங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல் உட்பட பொதுவான நலன்களுக்காக உண்மையுடன் கவலைப்படும் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதும், உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் பெற வேண்டியது அவசியம். அதே சமயத்தில், சமூகத்தை, ஒரு முதிர்ச்சியடைந்த சோசலிஸ்ட் சமூகமாக மாற்றியமைத்திட இத்தகைய கண்ணோட்டங்களை உடைய முன்னணி ஊழியர்கள் தேவை. புரட்சிகர உணர்வும் தேவை. இது சோசலிசத்தின் கீழ் உருவாக்கப்படும். மார்க்சும், ஏங்கெல்சும் பின்னர் லெனினும் சமூக நிலைமைகளில் மாற்றம் மற்றும் மக்களிடையே சோசலிஸ்ட் கல்வி மற்றும் சோசலிஸ்ட் நடைமுறை ஆகியவற்றின் மூலம் மக்களின் மனமாற்றம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவுகள் குறித்து விளக்கி இருக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் சோசலிசத்தை எய்துவது என்பது அதிகமான அளவில் ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். புரட்சிகர உணர்வு என்பதே ஒரு குறிப்பிட்ட அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டியபின்னர்தான் ஏற்படும். ஒரு முறையான அரசியல் கட்சி அதிகாரத்தில் இருந்து, சோசலிஸ்ட் சமூகத்தைக் கட்டுவதற்கு அது வழிகாட்டினால், பின்னர் முதலாளித்துவ சமூகத்தின் நாசகரமான முரண்பாடுகளை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
உற்பத்தியில் சோசலிஸ்ட் உறவுகள் அல்லது சோசலிஸ்ட் உணர்வு இல்லாவிட்டாலும்கூட அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை விரிவாக்கிட முடியும் என்று வரலாறு மெய்ப்பித்திருக்கிறது. அமெரிக்காவில் சோசலிசம் உருவாவதற்கான பொருளியல் அடித்தளம் (material foundation) அமைந்துள்ள போதிலும், சோசலிசத் தத்துவ வளர்ச்சி என்பது அந்நாட்டில் மிகமிக அரிதாகும். சமூக வாழ்க்கைதான் உணர்வை உருவாக்குகிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், உற்பத்திக்கான சமூக உறவுகளை நடைமுறைப்படுத்த நம்மால் முடியவில்லை. சோசலிஸ்ட் உணர்வு என்பது, உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றங்களிலிருந்து சோசலிஸ்ட் உணர்வு என்பதும் தாமாகவே வரும் என்ற கருத்து தவறாகிவிட்டது. உற்பத்தியின் புதிய உறவுகள் சாத்தியக்கூறுகளை மட்டுமே உருவாக்கி இருக்கிறதேயொழிய நிச்சயமாக சோசலிஸ்ட் உணர்வு உறுதியாக உருவாகும் என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுதல் என்பது திட்டமிட்டு நடைபெறுவதாகும். அதாவது, தாங்கள் எதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நன்கு புரிந்துகொண்டுள்ள மக்களால் திட்டமிட்டு நடைபெறுவதாகும். என்ன செய்ய வேண்டும் என்னும் நூலில் லெனின், தொழிலாளர் வர்க்கம் எப்படி வர்க்க உணர்வைப் பெறுகிறது என்பதை விளக்கி இருக்கிறார்.புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து முன்னெடுத்துச் செல்வதற்கு இது அவசியம் என்று அவர் கூறுகிறார். தற்போது இருந்து வரும் சமூகப் பொருளாதார அமைப்பை, பெருவாரியான மக்களின் நலன்களுக்கானதாக, ஒவ்வொருவரும் தன் ஆற்றலை முழுமையாக உணரச் செய்யக்கூடிய விதத்தில் மாற்றியமைத்திடுவதற்கு, புரட்சிகர, அறிவியல்பூர்வமான உணர்வு அவசியம் என்று லெனின் வாதிடுகிறார். ஒருவர் சோசலிஸ்ட் உணர்வைப் பெறுவதென்பது நீண்ட கால நடைமுறையாகும். ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தை எய்தும் வரை இந்நிலையினை எய்திட முறையான கவனம் செலுத்தி வரவேண்டும். மக்கள்திரளிடம் அவர்கள் ஆற்றலை உணரச் செய்து, சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களை முன்னேற்ற வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சோசலிஸ்ட் கொள்கைகளை எய்திடத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய முன்னணி ஊழியர்களை அதிகரிப்பதிலும் சிரமங்கள் உண்டு. இவ்வாறு, சோசலிசத்தைக் கட்டுவதற்கு, பொருளாதாரத்தை வளர்ப்பது அவசியமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வழியாக சோசலித்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டே பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள், வர்க்கப் போராட்டத்தில் தத்துவத்தின் முக்கிய பங்களிப்பையும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகத்தை மாற்றும் அனைத்துக் கட்டங்களிலும் அதன் விமர்சனரீதியான முக்கியத்துவத்தையும் கிரகித்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். சோசலிஸ்ட்டாக மாற்றியமைத்தல்
ஒருவரை சோசலிஸ்ட்டாக மாற்றியமைப்பதற்கு, ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரத்தைத் தந்திருந்தால் மட்டும் போதுமானதல்ல, பெற்றிட்ட சோசலிஸ்ட் ஆதாயங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் அவற்றை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதிலும் அது அடங்கியிருக்கிறது. சோசலிஸ்ட் ஆதாயங்களை அடைவதும், மேலும் மேலும் தொடர்ந்து அந்தத் திசைவழியில் முன்னேறிச் செல்வதும் மிகவும் கடினமான, நீண்ட, நெடிய, அடிக்கடி ஆபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகும். வரலாறு இவ்வாறுதான் நமக்குக் கற்பிக்கின்றது. புதிய கொள்கைகள், சட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஆகியவை புதிய (மற்றும் பழைய) முதலாளித்துவ, திருத்தல்வாத மற்றும் பல்nறு எதிரான சக்திகளின் செல்வாக்கிற்கு தொடர்ந்து இழுக்கப்படுகின்றன. எனவே நம் முயற்சிகள் என்பவை தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஏவக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும். இதன் பொருள், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் மக்களின் பெரும்பான்மையோர் நலன்களை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கக் கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதையும், தொழிலாளர் வர்க்கம் தன் அரசியல் செயல்பாடுகளைச் செம்மையாகச் செய்திட ஆதரவையும், வழிகாட்டுதலையும் செய்வதையும் குறிக்கோளாகாக் கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர்களின் ஆட்சி அமைவது என்பது தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர வேறெந்தக் குழுவாலோ அல்லது வேறெவராலுமோ அல்ல. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை தொழிலாளர் வர்க்கம்தான் வலுவாக நடைமுறைப்படுத்திட முடியும். உண்மையில், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சமூகத்தைச் சரியானத் திசைவழியில் செலுத்திடத் தன் பங்களிப்பினைச் செய்யும்போதுதான், ஜனநாயகம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டம் உத்தரவாதப் படுத்தப்படுகிறது. சாமானிய மக்களில் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக அரசு செயல்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டுமானால் அதற்கு சமூகத்தின் ஸ்தல மட்டத்திலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியாகத் தொழிலாளர் வர்க்கம் பரந்துபட்ட அளவில் பங்கேற்பது அவசியமாகும். துல்லியமான கோரிக்கைகளின் மீது வெகுஜனப் போராட்டங்கள், குறிப்பாக அவை கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வழிநடத்தப்படும் பொழுதும், அவ்வாறு பெரும்பான்மையோர் நலன்களுக்கு உதவிடும் பொழுதும், அரசு அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, பெரும்பான்மை மக்களுக்கு நீதி கிடைத்திடச் செய்திட முடியும். தொழிலாளர் வர்க்கங்களின் நலன்களை மேம்படுத்தக்கூடிய வகையில் ஸ்தல மட்டங்களில் தொழிலாளர் ஸ்தாபனங்கள் அமைக்கப்படுதல், அதன் தலைவர்கள் மக்களோடு இருந்து, அவர்கள் உணர்வுமட்டத்தை உயர்த்திட உதவுதல், உண்மையான வெற்றிகளைக் பெற்றிட வழிகோலலாம், விரிவான அளவிலும் நீடித்து நிலைக்கக்கூடிய விதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த அது உதவிட முடியும். மக்களுடன் நெருக்கமாக இருந்து, அவர்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அவர்களது கனவுகளை நனவாக்கிட, அவர்களுடன் இணைந்து நின்று போராடிட வேண்டும். இதன் மூலம் தத்துவார்த்தப் போராட்டத்தை, தத்துவார்த்த மட்டத்தில் மட்டுமல்லாது நடைமுறை வேலைகளின் மூலமும் வென்றிட முடியும்.

தத்துவார்த்த நிலையை உயர்த்திட அனைத்து மட்டத்திலும் போராட்டம்
தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி ஊழியர்கள் நாள்தோறும் நடைபெறும் நடைமுறைப் போராட்டங்கள் மூலம்தான் கற்றுக்கொண்டு முன்னேற முடியும், தங்களுடைய சமூக உணர்வினை தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வாக வளர்த்தெடுக்க முடியும். புரட்சிகர தத்துவார்த்த வளர்ச்சி என்பது அநீதிகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. அநீதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவம் ஆகியவற்றின்மூலம் அனுபவங்களிலிருந்து கற்பது என்பதும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை அளிப்பதற்கும் கற்பது என்பதும் அவற்றின் மூலமாக நாசகர சமூகப் பதட்ட நிலைமைகளைக் குறைப்பது என்பதும், மக்களைத் தங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுவித்திடக் கூடிய வகையில் தீர்மானங்களை உருவாக்கிடும் இயக்கங்களில் பங்கேற்கச் செய்வதென்பதும் சாத்தியமாகின்றன.
புரட்சி என்பது பழையனவற்றை அழிப்பது மட்டுமல்ல, புதியனவற்றை விதைப்பதுமாகும். ‘‘புரட்சியாளன்’’ என்பவன் ‘‘விஷயங்களை அவற்றின் வேர்களிலிருந்து கிரகித்துக்கொள்பவன்’’ என்று மார்க்ஸ் கூறுகிறார். அதாவது சமூகப் புரட்சியின்போது பழையனவற்றை அழித்து அவ்விடத்தில் புதியனவற்றை விதைப்பது என்பதாகும். இந்தியாவில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களுக்கும் மார்க்சின் சித்தாந்தம் பொருந்தக்கூடியதே.

1991இல் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்தத் தடுமாற்றத்தில் சிக்கிக்கொண்டது. உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீண்டு எழவில்லை. இதன் விளைவு, சில கட்சிகள் வர்க்க சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன, வர்க்க மோதலை எதிர்க்கின்றன, ‘‘ஒளிரும் முதலாளித்துவம்’’ அல்லது ‘‘மனித முகத்துடன் கூடிய உலகமயம்’’ ஆகியவற்றின் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. உண்மையில், இத்தகைய போக்குகள் புரட்சிகர வளர்ச்சியைத் தடுக்கின்றன, இறுதியாக மூலதனத்தின் நலன்களுக்கே சேவகம் செய்கின்றன. அதுவும் உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கித் தள்ளாடித் தடுமாறிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் இவை இவ்வாறு கருதிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு, இன்றைய உலகில் நவம்பர் தினத்தின் படிப்பினையாக நாம் கொள்ள வேண்டியது என்னவெனில் சமூகப் புரட்சி குறித்த மார்க்சிய சித்தாந்தத்தைக் கிஞ்சிற்றும் தடுமாற்றமின்றி நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதும், பல்வேறு நாடுகளில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுமேயாகும். நம்முடைய வரலாற்று இலட்சியத்தை ஈடேற்ற, சோசலிஸ்ட் உணர்வைத் தொழிலாளி வர்க்கம் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வைத்திடுவோம். இன்றைய இன்றியமையாத தேவை என்பது இத்தகைய சோசலிஸ்ட் உணர்வு பெற்ற தொழிலாளர்களேயாவர்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: