Monday, November 8, 2010

இந்தியாவை வாங்க முயற்சிக்காதே-பராக் ஒபாமா வருகையை யொட்டி- இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்





புதுதில்லி, நவ.8-
இந்தியாவை வாங்க முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்காதே என்றும் கண்டன முழக்கத்துடன் தலைநகர் தில்லியில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திங்கள் அன்று தலைநகர் தில்லி வந்துள்ளார். மாலை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
அதிபர் ஒபாமா வருகையையொட்டி, அவருக்கு இடதுசாரிக் கட்சிகள் சார்பில் புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில், ஜந்தர்மந்தர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி சார்பில் அபனிராய் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லமையை நிறுவுவதின் ஒரு பகுதியாக, நாடுகளின் இறையாண்மை மற்றும் பல்வேறு நாட்டு மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடிய வகையில் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்றும் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் போர்த்தந்திரக் கூட்டணி வைத்திருக்கிறோம் என்ற பெயரில் மக்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியா கடைப்பிடித்திட வேண்டும் என்று அதனை நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும், தெரிவித்தார்கள்.
மேலும், போபால் நச்சுவாயு விபத்தில் பலியானவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், டவ் கெமிகல்ஸ் நிறுவனம் உரிய இழப்பீட்டை அளித்திடவும், தொழிற்சாலை வளாகத்தைச் சுத்தப்படுத்தித்தரவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும், அமெரிக்கா, விசாரணையை எதிர்கொள்வதற்காக வாரன் ஆண்டர்சனை அனுப்பி வைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்தியாவின் அயல்துறைக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்க மூலதனம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக வேளாண்மை, சில்லரை வர்த்தகம், கல்வி மற்றும் இதர சேவைகளைத் திறந்துவிட நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவப் பங்காளியாக மாற்ற வகை செய்யும் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு வடிவமைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இராக்கில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 50 ஆயிரம் துருப்புக்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும், இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் அரபு நிலப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறும் வரை அதற்கு அளித்திடும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக் கோரியும் வலியுறுத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே. வரதராசன், எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, மத்தியக்குழு உறுப்பினர்கள் சுனீத் சோப்ரா, நூருல் ஹூடா, தபன்சென், பாசுதேவ் ஆச்சார்யா, ஹன்னன்முல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
(ச.வீரமணி)

No comments: