Showing posts with label BSNL RALLY. Show all posts
Showing posts with label BSNL RALLY. Show all posts

Monday, November 15, 2010

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அனுமதியோம் -தில்லி பேரணியில் அபிமன்யு சங்கநாதம்





புதுதில்லி, நவ. 15-
பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் அனுமதியோம் என்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் (நம்பூதிரி) பொதுச் செயலாளர் அபிமன்யு கூறினார்.
தலைநகர் தில்லியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியில் உரையாற்றுகையில் அபிமன்யு கூறியதாவது:
‘‘இந்தப் பேரணி என்பது, பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். மத்திய அரசின் தவறான கொள்கைகள், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான கொள்கைகள்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரணங்களாகும். கடந்த ஐந்தாண்டுகளாகவே அரசாங்கம், புதிய உபகரணங்களை வாங்குவதற்கான அனுமதியை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தர மறுத்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் 45 மில்லியன் லைன்கள் பெற்றிட டெண்டர் வெளியிட்டிருந்தோம். அதனை அரசாங்கம் ரத்து செய்தது. பின்னர் 93 மில்லியன் லைன்கள் பெற டெண்டர் விட்டிருந்தோம். அதனையும் அரசாங்கம் ரத்து செய்தது. இப்போது சமீபத்தில் 5.5 மில்லியன் லைன்களுக்கான டெண்டரும் விட்டிருந்தோம். இதனையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அதே சமயத்தில் தனியார் கம்பெனிகள் ஒவ்வோராண்டும் புதிதாக உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்கவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்து வருகிறது. இதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரணமாகும். இதனை நாம் அனுமதிக்க முடியாது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கிராமங்களில் சேவை செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்று வந்தது. ஒவ்வோராண்டும் ஆறாயிரம் ரூபாய், ஏழாயிரம் ரூபாய் இவ்வாறு பெற்று வந்தது. இதனைத் தரவேண்டாம் என்று தனியார் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு மூலம் அரசு கூறிவிட்டது. இத்தகைய பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான அரசின் கொள்கையை நாம் அனுமதிக்க முடியாது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆர்டர்களைப் பெற ஒரு டெண்டரை இறுதிப்படுத்தியிருந்தது. ஆனால்இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தரவில்லை. சர்வதேச எல்லையில் அப்பணிகள் நடப்பதால் அதற்கு அனுமதி தரப்படவில்லை என்று காரணம் கூறியிருந்தது. ஆனால் அதே சீன நிறுவனமானது ரெலயன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது. தனியாருக்கு என்றால் ஒரு கெரள்கை, பிஎஸ்என்எல்க்கு என்றால் வேறொரு கொள்கையா? இத்தகைய பிஎஸ்என்எல்-க்கு எதிரான அரசின் கொள்கைகளால்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வருகிறது.
அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனப் பங்குகளில் 35 விழுக்காட்டைத் தனியாருக்குத் தந்திட முடிவு செய்துள்ளது. மேலும் ஒரு லட்சம் ஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பிடவும் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே.
இதனை நாங்கள் அனுமதியோம். இதனை எதிர்த்துத்தான் வரும் டிசம்பர் 1,2,3 தேதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்தம் செய்திட வுள்ளோம்.
இவ்வாறு அபிமன்யு கூறினார்.
(ச.வீரமணி)


பிஎஸ்என்எல் ஊழியர்கள் டிசம்பர் 1 - 3 தேதிகளில்
72 மணிநேரம் வேலை நிறுத்தம்

புதுதில்லி, நவ. 15-

பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் தனியாருக்கத் தாரை வார்க்கும் விதத்தில் மத்தியஅரசு நடந்துகொண்டு வருவதைக் கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாத்திடவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் - அதிகாரிகள் வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதிகள் வரை 72 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று புதுதில்லியில் பிஎஸ்என்எல் ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற பேரணியில் அறிவிக்கப்பட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் (நம்பூதிரி), என்எப்டிஇ, எப்என்டிஓ, தொமுச உட்பட அனைத்து ஊழியர் சங்கங்களும் அதிகாரிகள் சங்கமும் இணைந்துள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் தலைநகர் தில்லியில் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணி புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, நாடாளுமன்ற வீதி நோக்கி வந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேரணி/ஆர்ப்பாட்டத்தை வரவேற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன் நம்பூதிரி உரையாற்றினார். அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் (நம்பூதிரி) சங்கத்தின் பொதுச் செயலாளர் அபிமன்யு உட்பட அனைத்து சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினார்கள். பேரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாத்திடவும் வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதிகள் வரை 72 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டது.
(ச.வீரமணி)