
மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவரங்கள் வெளிவந்துகொண்டிருக்கக்கூடிய சூழலில், அதனை விசாரிப்பதற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டுமென்கிற கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலை எப்படித் தீர்வு செய்யப்பட்டாலும், நாடு சட்டவிரோத முதலாளித்துவத்தின் (crony capitalism) ஆழமான பகுதிக்குள் மேலும் மேலும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.
சட்டவிரோத முதலாளித்துவம் என்றால் என்ன? மூலதனம், லாபத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற அரிப்பின் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து விதிமுறைகளும் சற்றே வளைந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பும். அவ்வாறு அவை வளைந்து கொடுக்காவிட்டால் அவற்றை மீறும். ஒப்பந்தங்களை அளிப்பதில் உற்றார் உறவினர்களுக்கு உதவுவது, (உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களான பால்கோ மற்றும் மும்பை, ஜூஹூ, செண்டார் ஓட்டலை, முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்தமை, போன்று) நாட்டின் பொதுச் சொத்துக்களை இதயத்திற்கு இதமானவர்களுக்குத் தர முன் வருவது, பணத்தைப் பன்மடங்கு பெருக்குவதற்காக சட்டவிரோத வழிவகைகளைக் கண்டறிவது மற்றும் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவது முதலியன சட்டவிரோத முதலாளித்துவத்தின் ஒருசில வடிவங்களாகும். முதலாளித்துவ அரசு, முதலாளிகள் சரிசமமாக போட்டிபோட்டுக்கொண்டு இயங்குவதற்காக, ஒருசில விதிமுறைகளையும் அவற்றை செயல்படுத்தும் நிறுவன ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறது. ஆயினும், சிறிய மீன்களை பெரிய மீன்கள் தின்பதைப் போன்ற அடிப்படையிலேயே இயற்கை குணத்தைக் கொண்டுள்ள முதலாளித்துவம், இத்தகு விதிமுறைகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் வீசி எறிந்துவிடுகிறது. முதலாளித்துவம் என்பது இயல்பாகவே சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஊட்டி வளர்க்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில், உலக முதலாளித்துவம் தாமதமாக நுழைந்தபோது, (குறிப்பாக அவை உலகமயம் என்னும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தழுவிக்கொண்ட பின்பு,) இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நிறுவனங்களிலும் ஊடுருவிப் பரவின. உண்மையில் ஒட்டுமொத்த அரசாங்கமே அவ்வாறு மாறிப்போனது,
உச்ச நீதிமன்றம் பிரதமரையும் அவரது அலுவலகத்தையும் கூண்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு நடைபெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அதன் வெளிப்பாடுதான்.
சட்டவிரோத முதலாளித்துவம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த அளவிற்கு செயல்பட்டிருக்கிறது, எப்படிச் செயல் பட்டிருக்கிறது என்பதைச் சற்றே விளக்கிடலாம்.
2008 ஜனவரியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வெளியிடுவதற்கான உரிமங்களை அளிப்பதற்கு, மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகமானது, முற்றிலும் விந்தையான, எவருக்கும் விளக்கமுடியாத ஒரு விதியைக் கையாண்டது. அதாவது, ‘முதலில் வருபவருக்கு முதலில் விநியோகிப்பது’ என்ற முறையைக் கொண்டு வந்தது. அதுமட்டுல்ல, அந்த 2ஜி உரிமங்களை, 2001இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே தருவது என்றும் முடிவு செய்தது. நுகர்வோருக்கு ஸ்பெக்ட்ரம் அதிக விலையுள்ளதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் அதற்கு விளக்கம் அளித்தது. ஆனால், உரிமங்கள் அளிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மூலமாக இவற்றை உத்தரவாதம் செய்திடவில்லை. விளைவு, உரிமங்களைப் பெற்ற நபர்கள், இவற்றை மிகவும் கொள்ளை லாபத்திற்கு விற்றனர்.
ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட்-இற்கும், பம்பாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கும் இடையேயான பேரம் மிகவும் பிரம்மாண்டமான தொகைக்கு நடைபெற்றிருக்கிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனமானது 13 மாநிலங்களுக்கு (circles) உரிய உரிமங்களை வெறும் 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பின்னர், இதில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதியையும் செய்யாமலேயே, இவற்றில் 45 விழுக்காட்டினை எடிசலாட் நிறுவனத்திற்கு 900 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு) விற்றுவிட்டது. எனவே, இவ்வாறு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையின் அப்போதைய சந்தை விலையாக சுமார் 2 பில்லியன் டாலர் இருந்திருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்வான் கொடுத்த விலை வெறும் 300 மில்லியன் டாலர்களேயாகும். தற்போதைய பரிவர்த்தனை விகிதாசாரத்தின்படி, இதன் பொருள் என்னவெனில், ஸ்வான் நிறுவனம் 2008 ஜனவரியில் கொடுத்த தொகைக்கு, அதைவிட 5.9 மடங்கு அதிக மதிப்புள்ள அலைக்கற்றைகளைப் பெற்றிருக்கிறது என்பதாகும். இவ்வாறு ஸ்வான் நிறுவனம் தான் பெற்ற உரிமங்களைச் செயல்படுத்த ஒரு காசு கூட செலவழிக்காமல், கொள்ளை லாபத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அரசாங்கம் தான் பெற வேண்டிய தொகையில் ஆறில் ஒரு பங்கினை மட்டும் பெற்றது. இவ்வாறு அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகையில் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இழப்பு என்பது இதோடு நின்றுவிடவில்லை. இந்த இழப்பு கூட குறைந்த மதிப்பீடுதான். இதனை இதற்கு அடுத்து நடைபெற்றுள்ள யூனிடெக் - டெலினார்(நார்வே) பேரத்துடன் ஒப்பிட்டால் தெரிந்து கொள்ள முடியும். யூனிடெக் நிறுவனமும், ஸ்வான் நிறுவனம் போன்றே, உரிமத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு காசு கூட செலவழிக்கவில்லை.
யூனிடெக் நிறுவனம் தான் பெற்ற 23 மாநிலங்களுக்கான உரிமங்களுக்கும் வெறும் 1651 கோடி ரூபாய் உரிமக் கட்டணமாகக் கொடுத்திருந்தது. பின்னர் இது டெலினார் நிறுவனத்திற்கு தான் பெற்றதில் 60 விழுக்காட்டு பங்குகளை மட்டும் 6,120 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இவ்வாறு யூனிடெக் நிறுவனம் அரசுக்கு அளித்ததைவிட ஏழு மடங்கு அளவிலான தொகையைப் பெற்றிருக்கிறது.
இவ்வாறு, ‘முதலில் வருபவருக்கு முதலில் விநியோகிப்பது’ என்ற அடிப்படையில் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் உண்மையில் டெலிகாம் வணிகத்துடன் தொடர்புள்ளவைகள் அல்ல. இவை இதற்கு முன் அறியப்படாத அல்லது பெயரளவிலான நிழல் நிறுவனங்களாகும். இதுவும் இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மைகள் (bடியே கனைநள) குறித்து ஐயங்களை எழுப்பின.
எனவேதான் நாட்டின் நலன் கருதி, இவ்வாறு நடைபெற்றுள்ள இமாலய அளவு ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறுகிறோம். அதற்காகக் கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிறோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவானது, இக் கூட்டுக் கொள்ளையில் பங்கு கொண்டுள்ள கயவர்களை அடையாளம் காண்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத்தரவும் வேண்டும். மேலும், இவ்வாறு இமாலய அளவில் ஊழல் நடைபெற்ற முறையை நன்கு ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாதிருக்க எவ்விதத்தில் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் அது கூறிட வேண்டும். இவ்வாறு செய்வதானது, எதிர்காலத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதன் பருமனைக் குறைத்திட உதவிடும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடைபெற வேண்டும் என்று கோருவது நாட்டின் அரசியல் அறநெறியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இதில் நடைபெற்ற ஊழல் காரணமாக அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு மற்றுத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) மதிப்பிட்டிருக்கிறார். நாம் இந்த ஊழல் காரணமாக சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இப்பகுதியில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் தொகையை மீளப் பெறக்கூடிய வகையில் விசாரணைஅமைந்திட வேண்டும். அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றவர்கள் உரிய தொகையினை அரசுக்குச் செலுத்திட வேண்டும். இதற்கு, தற்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலமிட்ட தொகையினை ஓர் அளவுகோலாக (நெnஉhஅயசம) வைத்துக் கொள்ளலாம். இதனை ஏற்க மறுத்திடும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, அந்த உரிமங்களைப் புதிதாக ஏலமிட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், எவ்வித லஜ்ஜையுமின்றி, மிகவும் கேடுகெட்ட முறையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ள பொதுச் சொத்துக்களை மீளப் பெறுவதன் மூலம், பொது அறநெறியை (யீரடெiஉ அடிசயடவைல) மீள உறுதிசெய்வது மட்டுமல்ல, இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை, நாட்டு மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட மிகவும் தேவையான ஒன்றுமாகும். உதாரணமாக, உணவுப் பாதுகாப்பை எடுத்துக் கொள்வோம். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் (வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் / வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும்) உணவு தான்யங்களை கிலோ 3 ரூபாய் என்ற விலையில் அளித்திட்டால், அதன் மூலம் கூடுதலாக 84 ஆயிரத்து 399 கோடி ரூபாய் உணவு மான்யம் அளிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளையோடு ஒப்பிடும்போது இது அதில் பாதி அளவுத் தொகையேயாகும். எனவே இத்தொகையை மீளக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த மடியும். அதேபோன்று, நாட்டில் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண்டிற்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் தேசிய நிலையம் (National Institute for Educational Planning and Administration (NIEPA)) மதிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ள தொகையைவிட இது குறைவேயாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள சுகாதாரத் திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளை ஆறு மடங்கு அதிகமாகும்.
ஆட்சியாளர்கள் இப்போதும் தாங்கள் சாமானியர்களுக்காகவே ஆட்சி செய்வதாக நாடகமாடுவது தொடர்கிறது. இவர்கள் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தவர் களிடமிருந்து அவற்றை மீளக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிட நிர்ப்பந்தத்திட வேண்டும். மேலும், இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தொகையினை அரசு மீண்டும் கைப்பற்றி, அவற்றை மிகவும் தேவைப்படும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பயன்படுத்திட ஒதுக்கிட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment