Sunday, March 21, 2010

விலைவாசி உயர்வு: மனஉறுத்தலே இல்லாதிருக்கும் மத்திய அரசு



தலையங்கம்:

மத்திய அரசு, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருப்பது குறித்து இதுநாள்வரை மனஉறுத்தல் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு வந்ததைக்கூட, தற்போது அது அதிகாரபூர்வமாகக் கைவிட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதங்களுக்குத் தொகுப்புரை வழங்கிய சமயத்தில், நிதியமைச்சர், ‘‘மார்ச் மாதத்திற்குள்ளேயே பணவீக்கம் இரு இலக்கத்தை எட்டினால்கூட நான் ஆச்சர்யப்பட மாட்டேன்’’ என்று எவ்வித கூச்சநாச்சமுமின்றி, தெரிவித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல, அவர் மேலும் ஒருபடி மேலே சென்று, நாட்டில் இதற்கு முன்பும் பலமுறை இவ்வாறு உயர் விகிதத்தில் பணவீக்கம் இருந்ததென்றும், எனவே இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஆண்டில் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர், ‘‘விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது’’ என்று கூறியதையே நிதியமைச்சர் இவ்வாறு எதிரொலித்திருக்கிறார். தங்கள் கையறுநிலையைத் தெரியப்படுத்தியுள்ள அரசாங்கம், விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பைக் கைவிட்டதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இவ்வாறு விலைவாசி உயர்வினால் ஆளும் வர்க்கங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் வழிவகுத்துக் கொடுத்திருப்பதுதான் அதைவிடக் கொடுமையாகும். இவ்வாறு ஒளிரும் இந்தியனை மேலும் ஒளிரச் செய்வதற்கும், அவதிப்படும் இந்தியனை மேலும் மோசமான முறையில் அவதிக்குள்ளாக்குவதற்கும் ஆட்சியாளர்கள் வழிவகுத்துத் தந்திருக்கிறார்கள்.

நாம் இந்தப் பகுதியில் எங்ஙனம் அரசு, நேரடி வரிமீதான சலுகைகள் மற்றும் பல்வேறு விதமான வரிச் சலுகைகள் மூலம் கார்பரேட் நிறுவனங்களும் உயர்நிலையில் வருமானவரிக் கட்டுபவர்களுக்கும் நாட்டின் வளங்கள் மிகப் பெரிய அளவில் செல்வதற்கு,மிகவும் வெட்கங்கெட்ட முறையில் பட்ஜெட்டில் பல வழிகளை வகுத்துத் தந்திருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறோம். அதே சமயத்தில், சாமானியர்களோ மறைமுக வரிகளை அதிகரித்திருப்பதன் மூலம் மேலும் அவதிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். எரிபொருள் மற்றும் ரசாயன உரங்களின் விலை உயர்வுகள் பெரும்பகுதியாக உள்ள சாமானிய மக்களின் வறுமைநிலைமையை மேலும் மோசமானதாக்கிடும். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஒரு ஏற்றம் காணப்பட்டதற்கும் இவ்வாறு பணக்காரர்களுக்குப் பல்வேறு வாய்ப்புவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டதுதான் காரணமாகும்.

பட்ஜெட்டில் காணப்பட்ட பல அம்சங்களும் இயற்கையாகவே பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இருந்ததால், மொத்த விலைவாசிக் குறியீட்டெண் (Wholesale Price Index) கடந்த பதினாறு மாதங்களில் கடந்த பிப்ரவரியில்தான் உயர்ந்த அளவிற்கு 9.89 விழுக்காட்டு நிலையைத் தொட்டது. எரிபொருள்களின் விலை உயரவும், கலால் தீர்வைகளை உயர்த்தியதும்தான் இந்த உயர்வுக்குப் பிரதான காரணங்களாகும். மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பிரதான உணவுப் பொருள்களான பருப்பு வகைகள் மற்றும் தான்யங்களின் பணவீக்க அளவு, முந்தைய ஆண்டைவிட முறையே 11.79 மற்றும் 35.58 விழுக்காடு அதிகமாகும். சீனி விலை 55.45 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.

நாடாளுமன்றத்திலும், நாடு முழுதும் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணிகளிலும், தில்லியில் மார்ச் 12 அன்று நடைபெற்ற இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியிலும் இடதுசாரிக் கட்சிகள் பரிந்துரைத்தது போன்று, விலைவாசியைக் கட்டுப்படுத்திட, ஐமுகூ -2 அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வில்லை. மாறாக பணக்காரர்களுக்கு அதிக அளவு ஆதாயங்களை அளிக்கும் வகையில்தான் நடந்துகொண்டு வருகிறது.

இன்றியமையப்பண்டங்கள் அனைத்தின் மீதும், முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆயினும் இதனைச் செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. ஏனெனில் ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவோருக்கு இது கொள்ளை லாபத்தை அளிப்பதால், அவர்களுக்கு ஆதரவாக அரசு இதனைச் செய்ய மறுக்கிறது. ஊக வர்த்தகத்தில் விவசாயம் சார்ந்த உணவுப் பண்டங்கள் தொடர்பான ஊக வர்த்தகத்தில் மட்டும் 2009 ஏப்ரல் 1க்கும் 2010 ஜனவரி 30க்கும் இடையேயான வர்த்தகம் 102.59 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இதன் மதிப்பு என்பது சுமார் 10 லட்சத்து 13 ஆயிரத்து 379 கோடியே 97 லட்சம் ரூபாயாகும். ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எவரொருவரும் அவர்கள் விற்பனை செய்திடும் பொருள்களின் விலைகள் முன்பைவிட உயர்வாக இருந்தால்தான் விற்க வருவார்கள். அவர்கள் கொள்ளை லாபம் அடிக்க வேண்டுமானால் அவர்கள் விற்பனை செய்திடும் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்திட வேண்டும். இவ்வாறு இவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக அப்பாவி சாமானிய மக்கள் அதிக விலைகொடுத்து பொருள்களை வாங்க வேண்டியிருக்கிறது.
அடுத்து நாம் கிடங்குகளில் உள்ள உணவு தான்யங்களை விடுவித்து பொது விநியோக முறை மூலம் மக்களுக்கு அளித்திடக் கோரினோம். பொருளாதார ஆய்வறிக்கையின்படி எதிர்பார்த்த உணவு தான்ய விளைச்சல் 200 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமைதான். ஆனால் அதைவிட அதிகமாக சுமார் 474.45 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் இருக்கின்றன. இவற்றை எலிகளுக்கு இரையாக்கிடாமல், வெளியில் எடுத்து மக்களுக்குப் பொது விநியோக முறையில் பகிர்ந்து கொடுத்தால் அதன் மூலம் ஏறிவரும் விலைவாசியைக் கணிசமான அளவிற்குக் கட்டுப்படுத்த முடியும் என்றோம்.

ஆனால் நாம் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எதையும் எடுத்திட அரசு மறுத்துள்ள அதே சமயத்தில், எரிபொருள் மற்றும் ரசாயன உரத்தின் விலையையும் உயர்த்தி வெட்கங்கெட்டமுறையில் அதனை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறது. இவ்வாறு அரசு, நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பணக்காரர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, நாட்டின் பெரும்பகுதி மக்களின் தோள்களில் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.

பணவீக்கம் என்பது வருமானப் பகிர்வை உற்பத்தியாளருக்கு சாதகமாகவும், நுகர்வோருக்குப் பாதகமாகவும் மாற்றக்கூடிய அற்புதமான ஒரு பொருளாதார வழியாகும். முதலாளித்துவத்தின் கீழ் இதுதான் நடைபெறும். ஆயினும், நம்மைப் போன்ற முதலாளித்துவ நாடுகளில், பணவீக்கத்தால் பயனடைவோர் உற்பத்தியாளர்கள் அல்ல. மாறாக, உற்பத்தியாளர்களுக்கும் நுகர் வோருக்கும் இடையே இடைத்தரகர்களாகச் செயல்படுபவர்கள்தான் அதிகமான அளவில் பயனடைவார்கள். நாட்டு மக்களுக்கு உணவை அளித்திடும் உழவர்கள், கடன் சுமையைத் தாங்கு முடியாது, தொடர்ந்து தற்கொலைப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் ஏறும் விலைவாசியால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி, தத்தளிக்கும் நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடைத்தரகர்கள் மட்டும் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள்.

நாட்டில் மக்கள் இயக்கங்களை வலுப்படுத்துவதன் மூலமாக மட்டும்தான், இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளைஅமல்படுத்தும் ஐமுகூ - 2 அரசாங்கத்திற்கு அதன் கொள்கைகளை மாற்றியமைக்க நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். மார்ச் 12 அன்று இடதுசாரிக் கட்சிகளின் பிரம்மாண்டமான எதிர்ப்புப் பேரணியை அடுத்து வரும் ஏப்ரல் 8 அன்று, நாடு முழுதும் மாவட்டத் தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்திட இருக்கிறோம். இவ்வாறு வீரஞ்செறிந்த மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான், ஐமுகூ 2 அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நாசகர மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைத்திட முடியும்.

(தமிழில்:ச.வீரமணி)

No comments: