இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் அயல்துறை செயலாளர்கள் மட்டத்தில் 2010 பிப்ரவரி 25 அன்று நடந்துள்ளது. 2007இல் இந்தியா மீது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் கட்டவிழ்த்துவிட்டதை அடுத்து இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் துண்டிக்கப்பட்டன. அதன்பின் இரு நாடுகள் தரப்பிலும் பல்வேறு மட்டத்தில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கடைசியாகத் தற்போது அயல்தறை அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இதுபோன்றதொரு சந்திப்பு, வரும் 2010 மார்ச்சில் இஸ்லாமாபாத்திலும் நடைபெறும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும்வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இதுநாள்வரை இந்தியா மிகச் சரியாகவே தீர்மானித்திருந்தது. மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பான கயவர்களைக் கைது செய்வதில் பாகிஸ்தான் இன்னமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று இந்தியா, பாகிஸ்தானிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபடுவோம் என்று பகிரங்கமாகவே தெரிவித்து வரும் ஜமாத் உட் தாவா போன்ற இயக்கங்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட எவரையும் அனுமதியோம் என்று பாகிஸ்தான் அரசு உறுதிமொழிகள் அளித்துள்ள போதிலும், பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்பு இன்னமும் ஒழிக்கப்படாமல் நீடித்து வருகிறது. பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்விதப் பிரச்சனையும் இன்றி சுமுகமாக அமைந்திடும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நன்னம்பிக்கை சூழலில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் இந்தியா சரியாகவே வலியுறுத்தி வந்திருக்கிறது.
பயங்கரவாதம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் உரசல்கள் இருந்து வந்தபோதிலும், இப்போது பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடப்பதில் தயக்கம் இருந்ததை, பாகிஸ்தான் அதற்கு அதன் மேற்கு எல்லையில் தாலிபான் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதை நீர்த்துப்போக அல்லது குறைத்திட இட்டுச்செல்வதாக பலரால் வியாக்கியானம் செய்யப்பட்டது. முன்பு இந்தியத் தூதரகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல்களின் பின்னணியில் சென்ற வாரம் காபூலில் இந்தியர்கள் மிகக் கோரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வினைப் பார்க்கும்போது, இந்தியாவிற்கு எப்படி லஸ்கர்-இ-தொய்பா அல்லது இதர பயங்கரவாத அமைப்புகளோ அப்படி தாலிபான்இயக்கமும் ஒரு பயங்கரவாத அமைப்புதான். இப்போது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளானது, பாகிஸ்தானை அதன் மேற்கு முன்னணியிலிருந்து தாலிபான் இயக்கத்தால் வரும் தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் சாக்குபோக்கு சொல்வதைத் தவிர்த்திட உதவிடும்.
மத்திய அயல்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில், ‘‘இரு நாடுகளின் தரப்பிலும் மனம் திறந்த, ஆக்கபூர்வமான மற்றும் உபயோகமான முறையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது’’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவர், இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான முறையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற இந்தியா மேற்கொண்டு முயற்சிகள் அத்தனையும் கடந்த காலங்களில் பல முறை பாகிஸ்தான் மண்ணிலிருந்து வந்த பயங்கரவாத நடவடிக்கைகளால் நிலைகுலையச் செய்யப்பட்டன.
இப்பேச்சு வார்த்தைகளை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், சவுதி அரேபிய விஜயம் குறித்து அவரது அமைச்சரவையில் உள்ள அயல்துறை இளம் அமைச்சர் தெரிவித்த கருத்துக்களால் பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், மூன்றாம் தரப்பினர் தலையிடு இல்லாமல் இரு நாடுகள் மட்டுமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. இத்தகையப் புரிந்துணர்வில் விரிசல் எதுவும் இல்லை என்பதை இந்தியா உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. பிரதமரும் தன் பங்கிற்கு சவுதி அரேபியாவிலிருந்து திரும்புகையில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கையில், ‘‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை பாகிஸ்தான் மண்ணில் அனுமதித்திட வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கிட தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துங்கள்’’ என்பதைத் தவிர தான் சவுதி அரேபியாவிடமிருந்து வேறு எதனையும் கோரவில்லை என்று கூறியிருக்கிறார்.
பயங்கரவாதம் - அது எந்த வகையினதாக இருந்தாலும் - ஏற்றக்கொள்ளத்தக்கதல்ல. இதற்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகளில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் வேறெதற்காகவும் விட்டுக்கொடுக்கத்தக்கதல்ல. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளின்போது பாகிஸ்தானிடம் இந்தியா உறுதிபடத் தெரிவித்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)
1 comment:
நன்றி...........
Post a Comment