Sunday, March 7, 2010

மார்ச் 12 பேரணியில் அணிதிரள்வோம்--பிரகாஷ் காரத்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் அகில இந்திய அளவில் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டத்தினை வரும் மார்ச் 12 அன்று தலைநகர் புதுதில்லியில் நடத்த அறைகூவல் விடுத்திருக்கின்றன. இக்கட்சிகள் சுமார் இருபதாண்டுகள் கழித்து இப்போது இவ்வாறு அறைகூவல் விடுத்திருக்கின்றன. தில்லியில் சமீப காலங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகு ஜன அமைப்புகள் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. ஆனால் இடதுசாரிக் கட்சிகள் நீண்ட கால இடைவெளிக்குப்பின் இப்போதுதான் அகில இந்திய அளவில் பேரணிக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.
2009 செப்டம்பரிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை நாட்டின் பல மாநிலங்களிலும் சிறப்பு மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு, நிறைவு நிகழ்ச்சியாக மார்ச் 12 அன்று தலைநகர் தில்லியில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நடவடிக்கைகள் மூலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறை மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்திடக் கூடிய வகையிலும் நாடு முழுதும் பெருவாரியான அளவில் மக்கள் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.

நான்கு முக்கிய பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக மார்ச் 12 அணிவகுப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மூன்று பிரச்சனைகள் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவைகளாகும். நான்காவது பிரச்சனை, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் ஏவப்பட்டுள்ள வன்முறைக்கு எதிரானதாகும். உணவுப் பணவீக்கத்தின் அளவு 20 விழுக்காட்டிற்கு மேல் வானத்தில் பறந்தகொண்டிருக்கக்கூடிய நிலையில், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நாள்தோறும் விண்ணை நோக்கி விலைவாசி உயர்வு எகிறிக்கொண்டிருப்பதன் விளைவாக மக்கள், அதிலும் குறிப்பாக வறிய நிலையில் உள்ளோர், வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி எந்தவிதமான நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்க மறுத்திடும் தடித்தனமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி வளர்ந்து கொண்டிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, விளைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலைகொடுத்திருப்பதுதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்றும், சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் உயந்திருப்பதுதான் காரணம் என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்திட மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்காததுதான் காரணம் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் விலைவாசி உயர்வுக்குத் தவறான முறையில் வியாக்கியானங்கள் செய்வதன் மூலமும் விலைவாசியை மேலும் உயர்த்திட இப்போது நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்த்தி இருப்பதும், யூரியா உரத்தின் விலையை 10 விழுக்காடு உயர்த்தியிருப்பதும் எந்த அளவிற்கு அரசு மக்கள் வயிற்றில் அடிக்கும் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளாகவுள்ள, அனைத்து உணவுப் பொருள்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதற்கு (Ban on Future Trading) தடை விதித்திட வேண்டும், வறுமைக்கோட்டுக்கு மேல்/வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்று பாகுபாடின்றி அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்திட வேண்டும், பதுக்கல்காரர்கள் மற்றும் கள்ளச்சந்தைக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் மார்ச்12 பேரணியின் போது வலியுறுத்தப்படும்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் அளித்தல் என்பது இப்போது மிக முக்கிய கோரிக்கையாக மாறியிருக்கிறது. நாட்டிலுள்ள பல்வேறு மாநில அரசுகளும் நிலச்சீர்திருத்தச் சட்டங்களை கைவிட்டுவிட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்துவிட்டன. நாட்டில் சுமார் 500 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பதாக மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் 73 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே பல்வேறு மாநில அரசுகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதிலும் 53 லட்சம் ஏக்கர் நிலம்தான் உண்மையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. நாட்டில் மொத்தம் விநியோகிக்கப்பட்ட நிலத்தில் மேற்கு வங்கம் மட்டும் 20 விழுக்காடு நிலத்தை விநியோகித்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடி இன மக்களும் பயன்படுத்தி வந்த நிலம், 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் அரக்கத்தனமான பிரிவுகளின் காரணமாக அவர்களிடமிருந்த பறிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லா மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்குவதென்பது இப்போது ஓர் அவசர அவசியத் தேவையாக மாறி இருக்கிறது.

அரசாங்கம் தேர்ந்தெடுத்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை வேலைவாய்ப்பை அதிகரிக்கக் கூடிய அளவில் இல்லை. அரசு அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி, நாட்டில் மொத்தம் உள்ள அமைப்புரீதியான துறைகளில் வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1991இல் 267.33 லட்சங்களாக இருந்தது, 2006இல் 269.93 லட்சங்களாக மாறியிருக்கிறது. இவ்வாறு பதினைந்து ஆண்டுகளில் வெறும் 2.6 லட்சம் பேர்களுக்குத்தான் கூடுதலாக வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மிக மோசமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மார்ச் 12 பேரணி, நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றவும், தொழிலாளர்களைக் குறைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகளில் வேலை நியமனத்திற்குத் தற்போது இருந்து வரும் தடையை நீக்கவும், வலியுறுத்தும்.

இடதுசாரி இயக்கத்தின் கோட்டையாகத் திகழும் மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக மிகவும் இழிவான முறையில் வன்முறைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அவர்களின் மாவோயிஸ்ட் கூட்டாளிகளாலும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவுவதற்கும் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும் எதிராக இடதுசாரிக் கட்சிகள் உறுதியான போராட்டத்தை நடத்துவதை குலைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்ற முறையில் இவ்வாறு தாக்கதல்களைத் தொடுத்துள்ளார்கள். மார்ச் 12 பேரணி, மேற்கு வங்கத்தில் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்திடவும் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் கோரும்.
மார்ச் 12 பேரணி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேரணியாகும். ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின் நாட்டிலுள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து இப்பேரணிக்கு அறைகூவல் விடுத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, இனி நாட்டில் இடதுசாரி அரசியலுக்கு இடமில்லை என்று எதிரிகள் கூறத் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களைக் காத்திடும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரிகளால்தான் சரியான மாற்றுக் கொள்கைகளை முன் வைத்திட முடியும் என்பதை மார்ச் 12 பேரணி மக்களுக்குக் காட்டிடும். இடதுசாரிகள் முன்வைத்திடும் கொள்கைத் திட்டத்தால் மட்டுமே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை அளித்திட முடியும், நிலமில்லா மக்களுக்கு நிலம் வழங்கிட முடியும், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலையளித்திட முடியும்.
மார்ச் 12 பேரணி முன்வைத்திடும் இந்நான்கு பிரதான கோரிக்கைகள் மீது ஓர் அனைத்திந்திய இயக்கத்திற்கு அன்றைய தினம் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திடும். 1994இல் இதேபோன்று இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பேரணியின்போது, அப்போதிருந்த நரசிம்மராவ் அரசாங்கம் கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில், அறைகூவலை ஏற்று 1994 ஆகஸ்ட் - செப்டம்பரில் நடைபெற்ற நாடு தழுவிய இயக்கத்தில் பங்கேற்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் சிறையேகினார்கள், அதுமட்டுமல்ல, 11.5 லட்சம் மக்களும் கைது செய்யப்பட்டார்கள். இப்போது மார்ச் 12 பேரணி அன்று விடுக்கப்படும் அறைகூவலும், அதே போன்று லட்சோப லட்சம் மக்களை அணிதிரட்ட இட்டுச் செல்லும் என்பது நிச்சயம்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: